வழக்கமாக மிஷ்கின் படம் என்றாலே அதன் ஒளிப்பதிவும் மனிதர்களின் பாத்திரப்படைப்பும் கொஞ்சம் பேய்த்தனமாக மிரட்டலாகத்தான் இருக்கும். அவர் கேமராவைக் கையாளும் விதமே ஒரு சராசரி திரைப்படங்களின் பார்வையாளனைப் பயங்கரமாகத் தொந்தரவு செய்துவிடும்; அவன் பொறுமையைச் சோதித்துவிடும். அப்படிப்பட்ட மிஷ்கின் ஒரு பேய் படத்தை எடுத்திருக்கிறார் என்றால் மிரட்டலுக்கா பஞ்சம்?
மிஷ்கின் படம் எப்பொழுதும் எனக்கு மிகவும் விருப்பம். அவர் தழுவல் கதைகளைக் கையாண்டாலும் தமிழ் சினிமா சூழலில் அவருக்கென்று ஒரு சினிமா மொழி உண்டு. அது தமிழுக்கு மிகவும் அழுத்தமானவை. இதுவரை மிகவும் மோசமாக/இழிவாகக்/ ஒரு பிரதானத்தன்மையற்று காட்டப்பட்ட விளிம்புநிலை மனிதர்களே மிஷ்கின் படத்தில் கவனத்திற்குரிய பாத்திரங்களாக வருவார்கள். மிஷ்கின் பொருளாதார ரீதியில் பல படங்களால் தோல்வி அடைந்தாலும் அவர் ஒரு சிறந்த கதைச்சொல்லி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனாலும், மிஷ்கினின் திரைப்பட அரசியலும் விமர்சனத்திற்குரியதுதான். அதை அப்படியே போற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
பிசாசு: ஒரு நல்ல பேயின் கதை என்றும், கதாநாயகனின் வீட்டில் தங்கியிருக்கும் பேயின் கதை என்றும் பல பொறுப்பற்ற வலைத்தல விமர்சகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சினிமா விமர்சனம் என்பது ஒரு வாடிக்கையான விசயமாக ஆகிவிட்டது. போகிற போக்கில் கதையின் தொடக்கம் முதல் இறுதிகட்டம் வரையிலான காட்சிகளை வாந்தியெடுத்துவிட்டு, அதை விமர்சனம் என்கிறார்கள்.
படைப்பின் ஊடாக வாழ்வைப் பார்க்கும் மகத்தான ஒரு பார்வைத்தான் விமர்சனம். நமக்கு முன் வழங்கப்பட்ட ஒரு படிமத்தை உடைக்கத் தெரிந்தவனே விமர்சகன். ஒன்றை அப்பட்டமாகப் புரிந்துகொள்வது விமர்சனநிலை அல்ல. அதையும் தாண்ட தெரிந்தவனே விமர்சகன். இல்லையென்றால் விமர்சிக்கக்கூடாது. மிஷ்கின் நிறைய திருப்பமிக்க காட்சிகளைப் படத்தில் கொடுத்திருக்கிறார். அதனை பார்வையாளனே நேரில் கண்டு உணர வேண்டும்.
எந்தப் படம் பார்த்தாலும், எந்தக் கதை படித்தாலும் ஏன் பலருக்கு எவ்விதமான தத்துவப் பார்வையோ உளவியல் பார்வையோ, வாழ்வியல் பார்வையோ எழுவதில்லை? பொதுவாக எல்லோரும் அக்கலைப் படைப்பின் மூலம் சமூகத்திற்கான ஒரு கருத்தைத் தேடுகிறார்கள். பிறகு அதனுடன் ஒத்துப் போகிறார்கள். அவ்வளவுத்தான் என சமாதானம் கொள்கிறார்கள். அவர்களின் தேடல், ருசி அக்கட்டத்தைத் தாண்டி நகர்வதில்லை. படைப்பாளன் பற்றி கவலைக்கொள்ள வேண்டாம். மிஷ்கின் அவர்களால் இவ்வளவுத்தான் தர முடியும் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், படைப்பு அப்படியல்ல. ஒவ்வொருமுறையும் அதனை நாம் நுகரும்போது நமக்கு அது விந்தையான ஒரு திறப்பைக் கொடுக்கக்கூடும். யாரும் பார்த்திராத ஒரு நுட்பமான இடத்தைக் காட்டக்கூடும். இது நுகர்வோனுக்கும் படைப்பிற்குமான சந்திப்பு. அதை ஏன் நாம் சீக்கிரத்திலேயே முடித்துக்கொள்ள வேண்டும்? வெகு எளிமையாகச் சமாதானம் அடைந்துகொள்ள வேண்டும்?