Wednesday, August 5, 2009

இது பின்நவீனத்துமல்ல-2 (மொழி அறிவும் ஆதிக்க மனோபாவமும்)

வட்டாரமொழி எனப்படுவது ஒரு வட்டாரத்தில் அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தில் வாழும் சமூகம் பேசிப் பழகிய தனித்தன்மை கொண்ட மொழியாகும். இது அவர்களின் வட்டார வாழ்வின் நுட்பங்களையும் கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் தொடர்பு ஊடகமாக கட்டமைக்கப்பட்டு வழக்கத்தில் இருந்த மொழியெனவும் சொல்லலாம்.

ஒரு சமூகம் பேசி வாழ்ந்த மொழியை, மேன்மக்கள் அல்லது நகர்புறத்தில் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்ந்த நடுத்தர/மேல்தட்டு மக்கள் அதைக் கொச்சை மொழியென்று தூற்றுவது, வட்டார மொழி எதிர்க்கொள்ளும் முதல் சிக்கல். சீ.முத்துசாமி எழுதிய மண் புழுக்கள் நாவல் முழுக்க முழுக்க அந்தத் தோட்டப்புற மக்களின் வட்டார மொழியிலேயே எழுதப்பட்டவை. மேலும் அவர்களின் வாழ்வையும் வலியையும் அடக்குமுறையின் அதிகாரத்தில் சிதைந்துபோன அவர்களின் மனதையும் அவர்களின் மொழியின் வழியாகவே சொல்வது வட்டார வாழ்வைப் பதிவு செய்வதற்கான சரியான கள உணர்வை ஏற்படுத்தும். ஆனால் அந்தத் தோட்டப்புற சமூகத்தின் மொழியைக் கொச்சையெனவும் அசிங்கம் எனவும் பல எதிர்வினைகள் எழுந்தன.

//தமிழில் இரண்டு வகைத்தான் உண்டு, ஒன்று பேச்சுமொழி, மற்றொன்று செந்தமிழ்// இதை ஒட்டுமொத்த தமிழ் மொழியின் வகைகள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது. தமிழை எழுத்து மரபு கொண்ட மொழியாகவும் பேச்சு மரபு மொழியாகவும் சொல்வதுதான் சரியான கூற்றாகும். ஆனால் அந்த மரபுகள் யாவும் இன்று மீறப்பட்டுவிட்டன. (சான்றுகள் கட்டுரையின் இறுதியில்)

செந்தமிழிலேயே பேசி வாழ்ந்த சமூகம் அரச சபையில் அல்லது சங்க காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் சமக்காலத்து குடும்ப சூழலிலும் சமூகத்திலும் இரண்டு வகையான பேச்சு மொழி (தமிழ் மொழி) வழக்கத்தில் உள்ளன. ஒன்று பிறமொழி கலவையுடன் பேசுவது எழுதுவது, மற்றொன்று வட்டார மொழியில் பேசுவது எழுதுவது. இதனையும் தவிர்த்து செந்தமிழிலும் படைப்புகள் கற்றவர்களால் எழுதப்படுகிறது.

மேலும் எழுத்து வகையில் எடுத்துக்கொண்டாலும் செந்தமிழில் எழுதுவது, வட்டார மொழியிலேயே எழுதுவது மேலும் துறை சார்ந்த சொல்லாடல்களைப் புகுத்தி நவீன மாற்றத்துடன் எழுதுவது. எடுத்துக்காட்டாக கணினி சார்ந்த எழுத்துக்களில் பெரும்பாலும் புதிய சொற்பிரயோகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இது தமிழ் மொழியிலும் அறிவியலிலும் ஆற்றலுள்ள ஆளுமைகளால் அங்கீகரிக்கப்பட்ட புகுத்தப்பட்ட சொல்வகைகளாகும். (எடுத்துக்காட்டாக: சுஜாதா). சுஜாதாதான் கணினி என்கிற சொல்லைக் கண்டறிந்து தமிழுக்குக் கொண்டு வந்தவர். இதை ஒரு மாற்றம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். மரபில் அந்தக் கருவிகளுக்குத் தமிழில் சொல் இல்லை காரணம் அக்காலக்கட்டத்தில் அப்பொருள்கள்/நவீன கருவிகள் கண்டறியப்படவில்லை. ஆகையால் கால வளர்ச்சிக்கேற்ப சில பொருள்களுக்குத் தமிழில் சொல்லை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிறமொழியுடன் பேசுவது குற்றம் என்ற போதிலும் நடைமுறையில் அது சாத்தியப்படுவதற்காக காரணம் இன்றைய அன்றாட சூழலில் பிற இனத்தவருடன் பேசிப் பழகி, பகிர்ந்து வாழக்கூடிய ஒரு வட்டாரச் சூழல் இருப்பதால் இந்தப் பிறமொழி சேர்க்கை ஏற்படுகிறது. மேலும் மலேசிய தமிழ் சமூகமாக மட்டும் வாழவில்லை, பன்முகக் கலாச்சார வெளியில் ஒன்றாக வாழக்கூடிய நிலையில் இருப்பதால், பிற இனத்தவரின் மொழி தாக்கம் நமது அன்றாட உரையாடல்களிலும் வருகிறது.

எடுத்துக்காட்டாக : “சின்னாங்க சொல்லாத” – senang
“ஏய் ஜாலான் காசு எங்களா?” jalan
“அப்பே. . அம்மோய்” சீன மொழி இன்னும் நிறைய.

பிறமொழி பயன்பாடு தமிழில் குற்றம் என்றால், அதை நிராகரிக்கும் வகையிலும் சில சான்றுகள் உண்டு.

யூ.பி.எஸ்.ஆர் 2008 (தமிழ் மொழி – படைப்பிலக்கியம் கேள்வி பிரிவு சி)
கருத்துணர்ப்பகுதியின் சிறுகதையிலிருந்து : 11ஆவது வரியில் :
“நிமலன் என் கலர் பென்சிலைத் திருடிட்டான் சார்”
14ஆவது வரியில்
“தாத்தா ஜாகா வேல செய்யறாரு”

யூ.பி.எஸ்.ஆர் 2007 (தமிழ் மொழி – படைப்பிலக்கியம் கேள்வி பிரிவு சி)
கருத்துணர்ப்பகுதியின் சிறுகதையிலிருந்து : 33ஆவது வரியில்

“காலையில் ஆபிசுக்கு வந்ததும் சொல்லி விடலாம் என்று நினைத்தேன்”
(ஒவ்வொரு வருடத்தின் கேள்விகளிலும் சிறுகதைகளில் நடைமுறை பேச்சு மொழியிலுள்ள வட்டாரத்தன்மையையும் பிறமொழி பயன்பாட்டையும் இணைத்துள்ளார்கள்)

இதுவும்கூட யதார்த்தவாத வாழ்க்கையையும் உரையாடல்களையும் மாணவர்களுக்குக் காட்ட வேண்டும் என்கிற தேர்வுதான். அப்படித் தூயத்தமிழ் சமூகத்தைத்தான் காட்ட வேண்டும் தூயத்தமிழ் உரையாடலைத்தான் இணைக்க வேண்டும் என்று இருந்திருந்தால் அது இன்றைய வாழ்வோடு தொடர்பில்லாத துண்டிக்கப்பட்ட கனவு பிரதேசத்தின் கற்பனைத்தனமாக ஆகிவிடும் என்பதைத் தவிர்ப்பதற்காகத்தான் அறிஞர்கள் அல்லது கல்வியாளர்கள் யூ.பி.எஸ்.ஆர் சோதனைகளில் அதுவும் படைப்பிலக்கியத்தில் இதைச் சாத்தியமாக அங்கீகரித்துக் கொண்டு வந்துள்ளார்கள். இதற்கு முரண்படுபவர்கள் முதலில் அவர்களிடம் கேள்வியெழுப்பி வாதம் செய்துவிட்டு வரவும்.

//நான் முரண்படுவதாகக் கூறப்பட்ட பகுதியிலிருந்து://

நான் முரண்படவில்லை, செந்தமிழ் புலவர்கள்தான் முரண்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அதாவது அவர்களின் கூற்றுபடி :

//தமிழில் இரண்டு வகைத்தான் உண்டு, ஒன்று பேச்சுமொழி, மற்றொன்று செந்தமிழ்//


அப்படியென்றால் பேச்சு மொழியை அவர்கள் அங்கீகரித்து அதுவும் தமிழே என்று சொல்லும்போது யார் பேசிய எந்த மக்கள் பேசிய பேச்சு மொழி என்கிற விளக்கம் இல்லை. சமக்காலத்து பேச்சு மொழி என்றால் அதில் பிறமொழி சேர்க்கையும் வட்டாரத்தன்மையும் கலந்திருக்கிறது. அப்படி இவர்கள் பேச்சு மொழியை அங்கீகரித்தால் சமக்காலத்து பேச்சு மொழியில் பிறமொழி பயன்பாட்டையும் மேலும் வட்டாரத்தன்மையுடைய பேச்சு மொழியையும் ஏற்றுக் கொள்வதாக அர்த்தப்படும். அப்படி இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள், துறை சார்ந்த மாற்றங்கள், தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்கள், உலகமயமாதல் ஏற்படுத்திய மாற்றங்கள் நமது மொழிக்குள்ளும் சிற்சில மாற்றங்களையும் வடிவத்தையும் கொண்டு வந்துள்ளதை ஏற்க மறுப்பது இவர்களின் முரண்பாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது.

பின்நவீனத்துவம்: மொழி சார்ந்த பின்நவீனத்துவ புரிதல்: மொழி என்பது மனிதர் தன் இருப்பை நிலைப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே அமைந்து வந்திருக்கிறது. பெயரற்ற ஒரு பொருளை எதிர் கொள்வது என்பது மனித இருப்பை அச்சுறுத்துவதாகவும் ஒருவகையில் அவரது இருப்பைக் குலைக்கக்கூடியதுமாகவே அமையும். அதனால் மனிதர் எதிர்க்கொண்ட ஒவ்வொரு பொருளுக்கும் பெயரிடுதல் என்பது அப்பொருளைத் தன்னுடைய இருத்தலின் சூழலுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வினையாகவே அமைந்திருக்கிறது. எனவே இந்நிலையில் மொழி என்பதன் மூலமாக மனிதர் தனது சூழலின் மீதான முதல் வினையைத் தொடங்குகின்றார்கள். மொழி என்பது அறிவாகவும், அறிவு என்பது பொருளின் மீதான ஆதிக்கமாகவும் செயல்படுகிறது.

இன்றைய சமூகம் எதிர்க்கொள்ளும் பின்நவீனத்துவம்: சமக்காலத்து வளர்ச்சியில் நமது சந்தைக்குள் நுழையும் ஒவ்வொரு பொருளையும் எதிர்க்கொள்ள வேண்டி, பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், நமது மொழி அறிவின் மூலம் அதை ஆக்கிரமிக்க ஒரு பெயரைக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, Pen drive, Hard disk. . இது நடப்பில் நாம் சந்தித்து வரும் பின்நவீனத்துவம். இன்று கணினி என்ற சொல்லை ஏற்றுக் கொண்டு நம் தாய்மொழியின் ஊடாக இந்தப் பொருளை ஆக்கிரமித்துக் கொண்டும் பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். இந்தப் பின்நவீனத்துவத்தை நாம் எங்கிருந்து கற்றுக் கொண்டோம். (நவீன படைப்பாளி மட்டுமல்ல, எல்லோரும் இந்தத் தொழில்நுட்ப வசதிகளை ஆக்கிரமித்து வருகிறோம்)

இதற்குப் பதில், பின்நவீனத்துவ கோட்பாடுகள்/மொழியியலும் ஆக்கிரமிப்பு சக்தியும்: இரு இனக்குழுக்கள் ஒன்றையொன்று எதிர்ப்படும்பொழுது அவற்றுக்கிடையிலான சமச்சீரற்ற தொழில்நுட்ப அறிவால் ஒரு ஆதிக்க மோதலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இந்த இடத்தில் எந்த இனக்குழு, தனது தொழில்நுட்ப அறிவால் மேலோங்கியிருக்கிறதோ அந்த இனக்குழு மற்றோரு இனக்குழுவை மேலாதிக்கம் கொள்ளும் ஒரு செயலை சாதித்து விடுகிறது. இதைத்தான் இந்தச் சூழலைத்தான் தொழில்நுட்பங்களை எதிர்க்கொள்ளும்போது மேலாதிக்க மோதல்கள் ஏற்பட்டு, அதைச் சரிக்கட்ட மொழியும் மொழி உருவாக்கமும் பயன்படுத்தப்படுகிறது.

எந்தப் பின்நவீனத்துவத்தையும் கற்றுக் கொள்ளாமலே ஒரு பின்நவீனத்துவ வாழ்வையும் அதன் மொழி ஆதிக்க சவால்களையும் இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, இது பின்நவீனத்துவம் என்பதா அல்லது நிதர்சனம் என்பதா? ஆகையால் தொழில்நுட்ப புரட்சி நம் கலாச்சாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை எழுதுபவன் ஒரு பின்நவீனத்துவாதியாகத்தான் தன்னை உணர்ந்து எழுத வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
-தொடரும்-

ஆக்கம்:கே.பாலமுருகன்

இது பின்நவீனத்துமல்ல-பாகம் 1
http://bala-balamurugan.blogspot.com/2009/07/1_28.html

மூலங்கள்/குறிப்புகள்:
1. நான் ஒரு பின்நவீனத்துவ நாடோடியல்ல (யமுனா இராஜேந்திரன்)
2. மொழியியலும் பின்நவீனத்துவமும் (கார்பல் சொல்ட்-பிரசில்- மலாய்மொழியில் பேராசிரியர் சோபியா முகமட்)