சுங்கைப்பட்டாணியிலுள்ள புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஏறக்குறைய 8 கிலோ மீட்டர் தூரமும் 800 மீட்டர் உயரமும் கொண்ட மலையை ஏறுவதற்கான தருணத்தை அளித்த எழுத்தாளர் புண்ணியவானுக்கு 6 அடியில் ஒரு மாலையைச் சமர்பித்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு உடல் குறித்த பிரக்ஞையும் உடலின் வலிமையையும் புறசக்தியை எதிர்க்கொள்ளும் உடல் ஆற்றலின் வெளிப்பாட்டையும் அறிந்துகொள்ளும் வகையிலான மலை ஏறும் பயணம் அமைந்திருந்தது. நான் இளைஞன் ஆகையால் உடல் சார்ந்த வலிமையை விட்டுக் கொடுத்தல் ஆகாது என்பதற்காக மலை அடிவாரத்திலேயே புண்ணியவானிடம், நடந்து மெதுவாக வாருங்கள், நான் ஓடியே மேலே உச்சியை அடைந்துவிடுவேன் எனக் கூறிவிட்டு ஓடத் துவங்கினேன்.
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும்போது கல்லூரியைப் பிரதிநிதித்து வட்டாரப் போட்டிகளுக்கும், மாவட்ட, மாநில அளவிலான தேசிய ஓட்டப்பந்தய போட்டிகளுக்கும் சென்றிருந்தேன். கல்லூரியில் நடுத்தர விரைவு ஓட்டத்திலும், தூர ஓட்டத்திலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்ததோடு, சிறந்த ஓட்ட வீரராகவும் அப்பொழுது தேர்வுப்பெற்றிருந்தேன். ஆனால் அப்பொழுது எழுத்திலும் வாசிப்புலும் நடுத்தர தீவிரம்கூட அடையாத காலக்கட்டம். 5000 மீட்டர் தூர ஓட்டத்தில் இரண்டாவது இடத்தை வென்ற அடுத்த 1மணிநேரத்திலேயே 4 x 400 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் நாலாவது ஓட்டக்காரராக ஓடி அந்த வருடம் சபா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் எங்கள் கல்லூரியின் குழு முதல் இடத்தைத் தட்டிச் சென்றது. இப்படிப் பல வெற்றிகள், பல இடங்கள் பல அனுவபங்கள்.(இவையாவும் சுய தம்பட்டத்திற்காக இல்லை, வேறொரு பகிர்தலை முன்வைத்து)
கல்லூரி படிப்பை முடித்த பிறகு இப்பொழுது வேலை உலகம் மிகவும் வன்மத்துடன் என்னிடமிருந்து உடல் சார்ந்த பயிற்சிகளையும் அதன் பொழுதுகளையும் பிடுங்கிக் கொண்டது. 3 வருடத்திற்குப் பிறகு (அவ்வப்போது காற்பந்து விளையாடுவது மட்டும் உண்டு) இன்று ஓடத் துவங்கினேன். 50 மீட்டர்வரை ஓடியப் பிறகு தொடைகள் இரண்டும் கணத்தன. அதற்கு மேல் முன்னகர்வதற்கு வலிமையின்றி மூச்சுத் திணற சடாரென்று நின்றுவிட்டேன். பாதை மேலும் ஒரு நெடுந்தூரத்தை வைத்திருந்தது. தொடர் பயிற்சியின்மையும் உடல் ஆரோக்கியம் குறித்த அக்கறையின்மையும் நம்மை எங்கோ ஓர் இடத்தில் வலிமையற்ற வரையறைகளுடன் நிறுத்திவிடுகிறது. எங்கே போனது அந்த மிதக்கும் கால்கள்? இப்பொழுது மிக வலுவடன் தரையைத் தழுவி அழுத்தமாக நின்றுக்கொண்டிருக்கின்றன.
புண்ணியவான் தொடர்ந்து சில மாதங்களாக மலை ஏறும் பயிற்சியில் இருப்பதால், அவரால் என்னைக் கடந்து மேலும் உயர முடிந்தது. 60 வயதைப் பின் தொடர மறுக்கும் பலவீனத்துடன் திடீரென பெய்த அடர் மழையில் காட்டுப் பாதை நீளும் மெல்லிய இருளுக்குள் நடக்கத் துவங்கினேன். வயதைவிட அல்லது வயது கொடுக்கும் போதையைவிட, பயிற்சி கொடுக்கும் ஆற்றல் மகத்துவமானவை. நமது மதமும் ஆன்மீகமும், ஆன்மா- அறிவு என அதன் இயங்குத்தலத்தைக் காட்டி உடலை ஒரு வெற்றுப் பொருளாக மறுக்கும் பெரும் முயற்சிகளையே செய்து வருகின்றன. “நாம் ஒரு ஆன்மா” என்கிற போதனையே இந்த உடல் மாயை என்கிற கற்பிதத்தை வலுவாக உற்பத்தி செய்வதோடு உடல் என்கிற அரசியலை மறுத்து, அதற்கு எதிரான கருத்தாக்கங்களையே உருவாக்குகின்றன.
“தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் உடல் மீதான அக்கறை இல்லாதவர்களாகவும் உடலை ஆரோக்கியமாக்கும் பயிற்சிகளில் ஈடுபடாதவர்களாகவும், இருக்கிறார்கள்” என எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்த வரி ஞாபகத்திற்கு வந்தது. தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பான்யானவர்கள் நோய் வந்து தமது மரணத்தை எட்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள். எப்பொழுது அவர்கள் உடலைப் பற்றிய கவனத்தை நழுவவிடுகிறார்கள்? மனம் என்கிற ஆழத்தின் பதிவுகளைக் கலையாக்கும் துல்லியமான பயிற்சிக் கொண்டவர்கள், எப்படி இந்த உடலைப் பராமரிக்கும் அக்கறையில்லாமல் உணவில் சரியான தேர்வின்றி, உடலைச் சிதைக்கும் வன்முறைக்கு ஆளாகியிருப்பார்கள்?
மலைக்குக் கீழே அடர் பனி வளர்ந்து கொண்டே இருந்தன. பள்ளமான நிலப்பரப்பு, ஆகையால் மழையின் நீரோட்டம் கொஞ்சம் வேகமாகவே இருந்தது. கால்கள் ஒவ்வொன்றும் என்னை மீண்டும் மீண்டும் தோல்விக்குட்படுத்த முயன்றது. பல இடங்களில் அமர்ந்தும் போராடியும் கடக்க வேண்டியதாகப் போயிற்று. முதுகு தண்டின் இறுக்கங்களின் தளர்வினால் ஏற்படும் வலியையும் பாதைக் கொடுக்கும் சவால்களையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது என்பது பல நாட்களுக்குப் பிறகு திரும்பவும் கிடைக்கும் பயிற்சியைப் போல இருந்தது. சீனர்களின் டத்தோ கோவில் வந்ததும் அதன் சமநிலத்தில் அமர்ந்துவிட்டேன். கோவிலின் உள்ளே சீனக் கிழவன் ஒருவர் எந்த அசைவும் அற்று நிதானித்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு திடீரென்று கோவிலிலிருந்து வெளியேறி வேகமாக ஓடத் துவங்கினார். பார்வைக்கு எட்டும்வரை தொடர்ந்து வேகம் குறையாமல் ஓடிக் கொண்டிருந்தவருக்கு எப்படியும் 70 வயது இருக்கும். முதுமையைக் கடக்கும் முதிர்ச்சி, மனதிலிருந்து தொடங்கி பிறகு உடலுக்குத் தாவ வேண்டும். அதுவே நம்மை திடமானதாக உருவாக்கும்.
பேராற்றல், பேராளுமை எனப் பேசக்கூடியவர்கள் 5 நிமிடம் நடக்கும் பழக்கம்கூட இல்லாத சோம்பேறிகளாக இருப்பது மனம் குறித்து அவர்களுக்கிருக்கும் ஆர்வம் ஏன் உடல் என்கிற இருப்பை மறுக்கிறது எனத் தெரியவில்லை. மேற்குலகம் எப்பொழுதும் நடைமுறையையும் இருத்தலியலையும் விவாதிக்கக்கூடியவை, ஆனால் கிழக்கு நாடுகள் குறிப்பாக இந்தியா மரணத்திற்கு அப்பால் விரியும் கற்பனைவாதங்களை முன்னிறுத்தி முற்பிறவி கடன் என்றும் கர்மவினை என்றும் விவாதிக்கக்கூடியவை. அதன் தொடர்ச்சியிலிருந்து வந்தவர்கள் என்பதால் நம்மில் பலருக்கும் உடல் என்பது சிதைவுக்குட்படுத்தக்கூடிய பொருளாகவும் உடல் என்கிற இருத்தலை உடல் மீதான கவனத்தை உடைக்க வேண்டும் என கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
எத்தனையோ புனைவின் எல்லைகளை, படைப்பின் உச்சத்தை அடையக்கூடிய பல எழுத்தாளர்கள் உடல் ரீதியில் வலுவற்று உடல் ஆரோக்கியங்களை அலட்சியப்படுத்தும் வகையில் தன்னைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். பிரேம் ரமேஸ், எஸ்.ரா போன்றவர்களின் விவாதங்களின் மூலம் தெரிந்துகொள்ளப்பட்டாலும் அனுபவத்தில் கண்டவர்களும் பலர். மழையின் வேகம் அதிகரித்தபோது ஓர் இடத்தில் அமர்ந்துவிட்டேன். சிறிது நேரத்திற்குப் பிறகு 40 பயது நிரம்பிய ஒரு மலாய்க்கார பெண்மனி மலை உச்சியிலிருந்து கீழே நோக்கி மிகச் சாதரணமாக ஏதும் நடக்காதது போல நடந்து கொண்டிருந்தாள். தரையில் சோர்வுத்தட்டிய தோற்றத்துடன் அமர்ந்திருந்த என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தார். அதற்கு என்ன அர்த்தமாக இருக்கும்? எனது இயலாமையின் மீது அவர் காட்டிய கேலியா? அல்லது தனது உடல் சார்ந்த உறுதியை வெளிப்படுத்தும் நோக்கமா? திடீரென்று கிடைத்த ஊக்கச் சக்தியைப் போல, உடல் சோர்விலிருந்து மீண்டிருந்தது. வேகமாக நடக்கத் துவங்கினேன். அந்தப் பெண்மணியின் புன்னைகைக்கு என்ன அர்த்தம் என்கிற குழப்பத்திலேயே மலையின் உச்சியை அடைந்தவிட்டிருந்தேன். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. சொத சொதவென உடலிலிருந்து மழையின் மீதங்கள் வலிந்து கொண்டிருந்தன.
அவ்வப்போது இப்படிச் சில சவால்களை உடலுக்கும் அளிக்க வேண்டும். நமது உடலின் இருப்பையும் ஆரோக்கியத்தையும் கட்டமைக்கும் ஆற்றல் நம்மிடமே உள்ளது. அதிகாரத்தின் கையில் ஒப்படைத்து, சிதைக்கப்படும் உடல்கள், ஆணாதிக்கத்தின் கட்டுப்படுத்தும் வலிமைக்கு பலியாகும் பெண்ணுடல், ஒவ்வொரு சமூகத்திலும் நாட்டிலும் உடல் என்பது வன்முறை, ஆதிக்கம் செலுத்தக்கூடிய குறியீடாகப் பாவிக்கப்படும் சூழலில் உடல் அரசியலை நன்கு தெரிந்துகொண்டு அதன் ஆரோக்கியத்தை வளர்க்கும் முழு உரிமையும் தனியொரு மனிதனுக்கு வழங்கப்பட வேண்டும். மலையிலிருந்து இறங்கும்போது கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பொதுவில் காட்ட முடியாத அல்லது சமூகத்தால் சிறுப்பிள்ளைத்தனங்கள் என கற்பிக்கப்பட்ட, “வெட்ட வெளியில் மழையில் நனைவது” போன்ற தருணங்களை மிகவும் சுதந்திரமாகக் கொண்டாட முடிந்தது.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா