Thursday, August 13, 2009

சில அமானுட குரல்களும் என் வீட்டிற்கு வராத பிள்ளை பேயும்


சிறுவயதிலிருந்தே நமக்கு அதிகமான பேய் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. பேய் கதைகளைக் கேட்பதிலும் பேய்கள் பற்றி உரையாடுவதையும் ஒரு விருப்பமான சுவார்ஷ்யமான விஷயமாக ஒவ்வொரு வயதினரும் அதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள், பேசி பிரமித்தும் கொள்கிறார்கள்.

இரவில் அறையில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கும் போதோ, அல்லது இருள் சூழ்ந்த இடத்தில் அமர்ந்திருக்கும்போதோ எப்படியாவது அமானுட விஷயங்கள் தொடர்பாக நாம் பேசுவதற்குத் தயாராகியிருப்போம். யார் அதைத் தொடங்கியிருப்பார்கள் என்று அவ்வளவு நுட்பமாக அறிந்திருக்க சிரமமாக இருக்கும். ஏதாவது ஒர் உரையாடலிலிருந்து ஏதாவது ஒரு சொல்லிலிருந்து “பேய்” பற்றிய கதை தொடங்கியிருக்கும். (எல்லோருக்கும் இது நிகழும் என்று சொல்லவில்லை-சிலருக்கு)

அதைப் பேசுவதற்கு அல்லது நமது உரையாடலில் பேய் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் ஏதும் அறியாமல் நாம் தாராளமாகப் பேசுவதற்குத் துவங்கியிருப்போம். தொழிற்சாலையில் இரவு வேலை செய்துகொண்டிருக்கும் போது யாரும் அசைக்காமல் சுயமாக நகர்ந்து விழுந்த பொருள் பற்றிய பதிவிலிருந்து, காலி வீட்டின் சன்னலில் எட்டிப் பார்த்த வெள்ளை உருவம் வரை பேய்களைப் பற்றிய அல்லது அமானுட அசைவுகள் பற்றிய கதை வளர்ந்து நீண்டு நம்முடன் நெருக்கமாகியிருக்கும். உடலின் வெப்பம் இலேசாகக் கூடி, இதயத் துடிப்பு அதிகரித்திருக்கும் சமயத்தில், அருகில் உள்ள நண்பன் இப்படி சொல்லலாம் :

“பேய் இப்பெ நம்ப பக்கத்துலே இருந்தா, நம்பளோட கை ரோமம்லாம் மேல தூக்கிக்கிட்டு நிக்கும். . பாரு” என்று சொல்லும்போது, உங்கள் கையின் ரோமத்தை நீங்கள் பரிசோதிக்க நேர்ந்தால், அது எழுந்து மேலே தூக்கிக் கொண்டு நிற்பது போல பிரமை ஏற்படலாம் அல்லது நிஜமாகவும் அது நிகழலாம்.

பல நேரங்களில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களில் சிலருக்கு இது நிகழ்ந்துள்ளது. சிறு வயது பிள்ளைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை எல்லோரின் உரையாடல்களிலும் பேய் பற்றிய பகிர்வு இருப்பதற்கான காரணம் நம்மைச் சுற்றி ஏதோ ஓர் அமானுட அசைவுகள் அல்லது உலகம் இருப்பதாக நமக்குள் ஏற்பட்டிருக்கும் மத போதனை, கடவுள் நம்பிக்கை, தலைமுறை வழிக்காட்டல், முன் அனுபவங்கள் உருவாக்கிய பிம்பங்கள் என்று பல கோணங்களில் போய்க்கொண்டே இருக்கும்.

பேய் பற்றிய பயம் இருப்பதாலே நமக்குக் கடவுள் நம்பிக்கை ஆழமாக இருக்கவும்/ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அல்லது அத்தகையதொரு அனுபவத்தைக் கடந்து வந்திருக்கலாம். 1993களில் “பிள்ளை பேய்” என்று ஒரு பேய் வீடு வீடாக உலாவுவதாக வதந்திகள் பரவின. அப்பொழுது எனக்கு 8 வயதுதான். பத்து டுவா கம்பத்தில் மலாய்க்கார குடியிருப்பு பகுதியில் ஒரு பலகை வீட்டில் வசித்து வந்தோம். அருகில் அம்பாங் பாய் என்கிற பெரிய குளமும் இருந்தது. அப்பொழுது பள்ளிக்கூடத்தில் இதைப் பற்றி பெரிய மாணவர்கள் பரவலாகப் பேசிக் கொண்டும் அதைப் பற்றி புத்தகங்களில் எழுதிக் கொடுத்தும் “பிள்ளை பேய் உன் வீட்டுக்கு வரும்” என்கிற பீதியை உருவாக்கியிருந்தார்கள்.

“பிள்ளை பேய்” என்பது தனது குழந்தையைப் பறிக்கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் என்றும் அந்தப் பேய் வீடு வீடாக சென்று கதவைத் தட்டி மூன்று கோரிக்கைகளைக் கேட்கும் என்றும் மூன்றாவது கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் அது உங்களைச் சாப்பிட்டுவிடும் என்றும் சொல்லியிருந்தார்கள்.

கோரிக்கை 1: “என் பிள்ளை அழுவுது, பால் கொடுங்க”
கோரிக்கை 2: “என் பிள்ளைக்குப் பசி சாப்பாடு கொடுங்க”
கோரிக்கை 3: “என் பிள்ளைக்கு உங்க இரத்தம் வேண்டுமாம்”

இதைக் கேட்டதும் எனக்குப் பயம் உடல் முழுவதும் பரவி ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமானுட ஒலிகளை எழுப்பி விளையாடி கொள்ள முயற்சித்தும் எனக்கு ஏற்பட்ட இரகசியமான பயம் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

மூன்றாவது முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதும், அந்தப் பேயின் கையிலிருக்கும் குழந்தையின் உருவம் நமக்குத் தெரிய ஆரம்பிக்குமாம், அப்பொழுது அந்தக் குழந்தைக்குத் தலை இல்லாததையும் அந்த இடத்தில்(முண்டத்தில்) புழுக்கள் மேய்ந்து கொண்டிருப்பதையும் பார்க்க நேரிடுமாம். அடுத்த கணம் இரத்தம் கக்கி சாக வேண்டும்.

அப்பொழுது பரவலாகப் பேசப்பட்ட கதை இதுதான். எல்லாம் மாணவர்களும் “பிள்ளை பேய்” பற்றியே பேசி அதிக்காரப்பூர்வமாக அந்தப் பேயை அங்கீகரித்து அதன் வருகை உண்மையென்று நம்ப வைத்திருந்தார்கள்.

அன்று வீட்டிற்குச் சென்றதும், வீடு முழுவதும் அபாயக்கரமான தோற்றத்தை எழுப்பிய வண்ணமே காட்சியளித்தது. இன்று கண்டிப்பாக அந்தப் பிள்ளை பேய் என் வீட்டிற்கு வரும் என்று நம்பிவிட்டேன். நான்தான் கதவைத் திறக்கவும் போகிறேன், அந்தப் பேய் என்னிடம் அந்த மூன்று கோரிக்கைகளைக் கேட்கும் என்றும் நம்பியிருந்தேன்.

முதலில் பல மாதம் உள்ளே நுழையாத சாமி மேடைக்குள் நுழைந்து கீழே விழுந்து சாமியை வேண்டிக் கொண்டேன். “சாமி என்னைக் காப்பாத்து, பிள்ளைப் பேய் என் வீட்டுக்கு வரக்கூடாது” என்று நெற்றியில் பட்டையடித்துக் கொண்டு அன்று சாமி பக்தனாக ஆகியிருந்தேன்.

அதுவரை கடவுள் பற்றிய பிரக்ஞை எனக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது கடவுள் தப்பு செய்தால் தண்டிக்கக்கூடிய ஒரு ஆளாகவோ அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒன்றாகவோ நினைத்திருந்தேன். சாமி மேடையில் அம்மா வாங்கி வைத்திருந்த “சரஸ்வதி, லட்சுமி, விநாயகர்” ஸ்ட்டிக்கர்களை எடுத்து முன் கதவில் வரிசையாக ஒட்டி வைத்தேன். கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்ததும் அந்தப் பிள்ளை பேய் கதவைத் தட்டாது என்று உறுதியாக நம்பினேன். இவர்கள் அந்தப் பேயை உள்ளே வரவிடாமல் தடுக்கக்கூடிய சக்தி படைத்தவர்கள் என்று எண்ணி, அவர்களை அங்கே ஒட்டிவிட்டு, அம்மாவிடம் உதை வாங்கியபோது அவர்களி மீது மெல்ல சந்தேகமும் எழுந்தது.

இரவில் வெகுநேரம் உறங்காமல் காத்திருந்தேன். அன்றைய இரவு மிகவும் தெளிவான ஒரு விழிப்பை உருவாக்கியிருந்தது. சிறிது அலட்சியம் ஏற்பட்டாலும் உறங்கிவிடுவேன் என்பதால் கண்களை அகலமாகத் திறந்துகொண்டு ஏதாவது அமானுட குரல்கள் கேட்கிறதா என்று வெளியின் அசைவுகளைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் உள்ள காட்டின் முணுமுணுப்பும் பூச்சிகளின் சத்தமும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. காலையில் அம்மா என்னை எழுப்பும்போது முதலில் எழுந்ததும் வெளிக்கதவைத்தான் பார்த்தேன். நிம்மதியாக இருந்தது.

நம்மைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பிடிமானம் அவசியமாகத் தேவைப்படும் போதெல்லாம், கண்களுக்குத் தெரியாத கடவுள் என்கிற இருப்பு நம்மைச் சுற்றி நம்பிக்கை என்கிற பிடியை உருவாக்கி வைத்துள்ளது. கால் இடறும் போதெல்லாம் அதில் தொற்றிக் கொள்ள வசதியும் உரிமையும் மதம் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. கடவுளையும் மதத்தையும் துறந்தவர்கள் கடவுள் இல்லாத அந்தக் காலியான இடத்தை எதைக் கொண்டு நிரப்புகிறார்கள் என்பது மிக அவசியமானது. நம்முடைய தொன்ம வாழ்வில் கடவுள் என்கிற இருப்பு மிக பலமாக வலுவாக நம் மனித அமைப்பைப் பிடித்துக் கொண்டுள்ளது. அந்த இருப்பு ஏற்படுத்தும் வெறுமையில் வேறு எதுவும் இல்லாமல் இருக்க நேர்ந்தால் துவண்டு வீழும்போது மனதளவில் நாம் சிதறிப் போகவும் வாய்ப்புண்டு.

சிலர் பிரபஞ்சத்தைக் கடவுளாகப் பார்க்கிறார்கள், சிலர் சக மனிதனின் அன்பைக் கடவுளாகப் பார்க்கிறார்கள், கடவுள் என்கிற இருப்பு, அடையாளம் பல பரிமாணங்களில் தொடர்ந்து நம்மைப் பின் தொடர்கின்றன. இன்றும் பிள்ளைப் பேய் பற்றிய நினைவு வரும்போதெல்லாம், நான் கடவுள் நம்பிக்கையை எப்பொழுது இழந்தேன் என்றும் கடவுள் இல்லாத இடத்தில் எதையெல்லாம் கொண்டு நிரப்பி அந்த இல்லாமையைச் சரி செய்து கொண்டிருக்கிறேன் என்றும் கேள்விகளும் ஞாபகங்களும் தோன்றிய வண்ணமே இருக்கின்றன. இதை எழுப்பிக் கொண்டிருப்பதும் எனக்குள் தொலைந்துபோன சில அமானுட குரலாகவும் இருக்கக்கூடும்.

சில நினைவுகளுக்காக
கே.பாலமுருகன்