Saturday, February 27, 2010

இசையின் விரல்கள் - பண்டிதர் ரவி சங்கர்

பாரத ரத்னா பண்டிதர் ரவி சங்கர் (Ravi Shankar) (பிறப்பு-ஏப்ரல் 7,1920), உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இவருக்கு 1999ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.










கிழக்கு- மேற்கு நாடுகளில் இந்திய இசையின் மரபான ஆளுமையாகப் போற்றப்படுபவர் பண்டிதர் ரவி சங்கர்.

தனது  "Shankar Family & Friends" and "Festival of India" எனப்படும் ஆல்பங்களின் மூலம் தனது இசை மகத்துவத்தை உலகம் முழுவதும் அதீதமாகத் தெரியப்படுத்தினார்.

60களின் இடைக்காலக்கட்டத்தில் "Monterey Pop Festival, Concert for Bangla Desh, and The Woodstock Festival" எனப்படும் இசை நிகழ்வுகளின் மூலம் மறக்க முடியாத இளைஞர்களின் எழுச்சியை மையமாகக் கொண்டு தனது குரலை எழுப்பியவர்.

உலகலாவிய நிலையில் அவர் பெற்ற விருதுகள்:
the Bharat Ratna, the Padma Vibhushan, Desikottam,Padma Bhushan of 1967, the Music Council UNESCO award 1975, the Magsaysay Award from Manila, two Grammy's, the Fukuoka grand Prize from Japan, the Polar Music Prize of 1998, the Crystal award from Davos, with the title 'Global Ambassador' to name some.


"உணர்வுகளை தனிதனியான
உன்னதமாக அறுக்கும்
இசைக் கோர்வையென
எழும்பும்
அதிசயத்தின் வரிகள். . .

நதியின் சலசலப்பை
இசைக் கம்பிகளில்
வழியவிடும் நுட்பமும்
பறவைகள் போடும் தாளம் போலவும்
இயற்கைக்கும் உயிருக்கும் மத்தியிலான
சித்தாரின் துடிப்புகள். . .



உமது மீட்டுதல்
முடிவுறும் தருணங்களில்
சித்தார் கம்பிகளோடு
எமது இசை இரசனையும்
அடர்த்தியாகி எனக்குள்
நிரம்புகிறது. . .

இடைவிடாமல் உமது
இசை ஒலியில்
எத்துனை மனங்கள்
சேர்ந்து ஒலிக்கக்கூடும்?

 மாபெரும் ஒரு காவியத்தின்
மிக நீண்ட வரலாற்றின்
ஒலியை எழுப்பும்
உமது கரங்கள்
கடவுள் என்கிற வலிமையால்
புனையப்பட்டதாகவும்
இருக்கலாம். .

ஒரு வேண்டுதலையும்
வழிப்பாட்டையும்
சுமந்து தீர்கின்றன
மானுட நதியில். .

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Tuesday, February 23, 2010

ரேனிகுண்டா- சினிமா விமர்சனம்- துயரப் பெரும்பாதையில் மரணத்தைப் பின்தொடரும் இளம்குற்றவாளியின் குரல்

சுப்ரமண்யத்திற்குப் பிறகு மீண்டுமொரு துரோகத்தின் காவியம், இழப்புகளின் சோகப்பாடல், தோற்றுப்போன நேர்மையற்ற சமூகத்தின் முன் ஏற்படும் இளம் குற்றவாளிகளின் மரணங்கள். நம்மால் பலம் கொண்டு எக்கியும் அடைய முடியாத ஒரு பெருஞ்சுவரிலிருந்து வழியும் பாவத்திற்குரிய குறியீடுகளின் பரிதவிப்புக் குரல்கள். இந்தக் குரலைக் கேட்கும் நீங்கள் நிச்சயம் சேரப்போகும் இறுதிக்கட்டம் குற்றம் என்கிற வெளிக்குள் பதியப்பட்டிருக்கும் அவர்களின் சிதைந்த வாழ்வின் அடையாளங்களைத்தான்.

ரேனிகுண்டா தெருவில் இருளின் மஞ்சள் விளக்குகள் திட்டு திட்டாக எரிந்து பரவ, ஜானி ஓடிக் கொண்டிருக்கிறான். காவல்துறையினர் துரத்த மழையிலிருந்து தன்னை அகற்றி ஓடிக் கொண்டிருக்க, கீழே விழும் அவன் மீது மீண்டும் மழைத் தூரலைப் போடுகிறது. அங்கிருந்து ஜானி என்கிற இளைஞன் பேசத் துவங்குகிறான். இந்த முதல் காட்சி பதிவுகளுக்கே ஒளிப்பதிவாளர் சக்தியைக் கண்டிப்பாக தமிழ் இரசிகர்கள் பாராட்டியாக வேண்டும். அத்துனை அற்புதமான பரபரப்பு என்கிற எல்லையை இலாவகமாக மீறும் வசீகரம் ஏற்படுகிறது.

“மழை. . இந்த மழைக்கும் எனக்கும் ஒரு உறவு இருக்கு.
நான் பிறந்ததுகூட ஒரு மழை நாள்லன்னு என் அம்மா சொல்லிருக்காங்க.. என் வாழ்க்கைல நடக்கற நல்லது கெட்டது எல்லாத்துலையும் இந்த மழை இருக்கும்.
இன்னிக்கு பேயறெ இந்த மழை நல்லதா கெட்டாதான்னு எனக்குத் தெரியலை. கண்டிப்பா நல்லதாதான் இருக்கும். ஏன்னா எனக்காக அங்க ஒரு பொண்ணு காத்திருக்கா. இந்தச் சின்ன வயசுலெ எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்கனும்? எவ்வளவு சாவு, எவ்வளவு இரத்தம். . எவ்வளவு அடி. . நான் என்ன செஞ்சேன்?”

இளம் குற்றவாளிகளின் உலகை அவர்களின் வாழ்வின் கொடூரங்களையும் வாழ்வியல் பரப்பையும் ஒரு வெறுமையான வர்ணங்களைக் கொண்டு ரேனிகுண்டாவில் பூசப்பட்டிருப்பது, கதையின் களத்தில் வெகுஜன இரசிகர்கள் வெறுனமே கடக்க முடியாத ஒரு பெருஞ்சுவராக எழும்பி நிற்கிறது. கதைச் சொல்லியான குற்றத்தின் அடிவேரிலிருந்து எழும் ஜானியின் குரல் படம் முழுக்க இளம் குற்றவாளிகளுடன் அவர்களின் தெருக்களில் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.

“ஜெயில். . இந்த 19 வயசுலெ பார்க்கக்கூடாத இடம், பழகக்கூடாத மனிதர்கள். .இன்னிக்குத் தேதி 15, காற்பந்து போட்டிலெ ஜெயித்ததுக்காக என் பேரை காலேஜ்ல அறிவிப்பு செஞ்சிகிட்டு இருந்தாலும் இருப்பாங்க... ஆனா என் வாழ்க்கை என்னெ இங்க கொண்டு வந்து சேர்த்திருச்சி”

ஜானியின் குரல், காட்சிகளுடன் அவனின் இறந்த காலத்தின் நிலப்பரப்பிற்குக் கொண்டு வருகிறது. மதுரையில் இருக்கும் ஒரு ரௌளடி அவனின் அப்பாவையும் அம்மாவையும் நடுசாலையில் காரில் மோதி சாகடிக்கப்படுவதைக் கண்டு துடிக்கிறான். அப்பா என்கிற இருப்பு அவனது வாழ்வில் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. தன் அப்பாவின் கொடூரமான ஒரு கொலையை நேரில் பார்ப்பதிலிருந்து அவனது வாழ்வும் அகமும் சிதையத் துவங்குகிறது. அப்பொழுது மழையும் பெய்கிறது.

சிறை என்கிற குற்றத்தின் வலிகளை மேலும் உக்கிரமாக்கும் கொடூரமான தண்டனை களத்திற்கு பக்குவப்படாத வயதில் வந்து சேர்கிறான். அங்கு அவனுக்கு அறிமுகம் ஆகும் இளம் குற்றவாளிகளான நால்வர் படத்தில் மிக முக்கியமான அசல்கள். இவர்கள் யாவரும் கதாநாயகர்கள் கிடையாது. தோற்றத்திலும் உடல்மொழியிலும் படைப்பாற்றலிலும் ஒரு இளம் குற்றவாளிகளாகவே இயல்பாகவே வந்து போகிறார்கள். இந்தச்சமூகமும் சக மனிதர்களும் அவர்களுக்குக் கொடுக்காத அன்பையும் ஆதரவையும் அடைய இயலாத விரக்தியின் சாயல் அவர்களின் முகங்களில் ஒட்டிக் கிடக்கிறது. கொஞ்சமும் நேர்மையற்ற அவர்களின் வாழ்வின் பின்புலம் அவர்களின் அசைவுகளிலும் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் உள்ளார்ந்து ஒளிந்து கிடக்கின்றன.

பெயர்: டப்பா அல்லது பிரேம்குமார்
வயது : 19
குற்றம்: 4 கொலைகள் மற்றும் வழிப்பறி

பெயர்: மாரி
வயது: 20
குற்றம்: 3 கொலை மற்றும் 3 கொலை முயற்சி

பெயர்: பாண்டுரங்கன்
வயது: 24
குற்றம்: 8 கொலை மற்றும் பல வழக்குகள்

பெயர்: மைக்கேல்
வயது: 21
குற்றம்: 4 கொலை மற்றும் 2 ஆள் கடத்தல்

அந்த நால்வரும் அறிமுகம் ஆகும் காட்சிகளில் திரையில் உருவாகும் எழுத்துகள் இப்படித்தான் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குற்றம் அவர்களின் மூன்றாவது கையைப் போல எப்பொழுதும் எந்தவித முரண்பாட்டையும் வெளிப்படுத்தாமல் இயல்பான ஓர் உறுப்பாக பதிந்து கிடக்கிறது. சிறையில் அவர்களின் அரவனைப்பில் ஜானியும் 5 ஆம் நண்பனாக அவர்களுடன் இணைந்து சிறையிலிருந்து தப்பித்து, நண்பர்களின் துணையுடனும் உந்துதலுடன் அவனது அம்மாவையும் அப்பாவையும் கொன்ற ரௌளடியைக் கொள்வதற்குத் திட்டமிடுகின்றான்.

படத்தில் இந்தக் கொலைத்திட்டம் மிக ஆபத்தானது. உங்களை(பார்வையாளர்களை) உளவியல் ரீதியில் பாதிக்கக்கூடிய வலிமை அந்தக் காட்சிக்கு உண்டு. உங்கள் மன அடுக்குகளில் எங்கோ சிறு புள்ளியாகப் பதுங்கிக் கிடக்கும் வன்முறை உணர்வு திடீர் உக்கிரத்தை அடையக்கூடிய வகையில் நடைப்பெறும் அந்தக் கொலை, பக்குவம் பெறாத பார்வையாளர்களுக்கு ஒருவித சலசலப்பை ஏற்படுத்தக்கூடும். நம்மையறியாமல் பெருகத் துவங்கியிருக்கும் நமது வன்முறை உணர்வால் அந்த ஐந்து இளைஞர்களுடன் இணைந்து அந்தக் கொடியவனை நாமும் கொலை செய்து கொண்டிருப்போம். ஜானியின் கத்தி பிடித்திருக்கும் கை, நமதுடையதாக மாறி, அது அந்தக் கெட்டவனின் மார்பைத் துளைக்க வேண்டும் என்கிற அவசரத்தை ஜானியின் மீது பாய்ச்சுவதற்கு முன்னகர்ந்து வந்திருப்போம். கொலை முடிந்தவுடன் நம் மனம் நிம்மதியடையும். ஜானியின் அம்மா அப்பா மரணம் நமக்குள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய சலனம் நம்மை ஒரு கொலை முயற்சிக்குக் கொண்டு வந்திருக்கும். அந்த ஐவருடன் இணைந்து அந்தக் கொலையை நாமும் செய்திருப்போம். அதை உணராத நம் மனம் அந்தக் கொலைக்கான நியாயங்களை அவதானிக்கத் துவங்கியிருக்கும். இப்படியொரு கொலை சம்பவத்தைத் துணிவான உளவியல் சாத்தியபாடுகளையும் புரிதலையும் விளைவையும் முன்வைத்து எடுக்கப்பட்டு, பார்வையாளனைச் சலனப்படுத்திய விதத்தை எந்த வகையில் சேர்ப்பது என மனம் பதற்றம் அடைகிறது.

அந்தக் கொலைக்குப் பிறகு அங்கிருந்து மும்பைக்குச் சென்று பெரிய கொலையாளியாக வேண்டும் என்கிற கற்பனைகளுடன் புறப்படுகிறார்கள். இடையில் இரயிலிருந்து இறங்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் ஆந்திராவிற்குள் நுழைகிறார்கள். அங்கே பழைய சிறை நண்பன் ஒருவனைச் சந்தித்து ரேனிகுண்டாவிற்கு வருவதோடு படம் மேலும் பரப்பரப்பின் எல்லையை அடைகிறது. ரேனிகுண்டாவின் தெரு அங்குள்ள ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்வியலையும் வாழ்க்கைமுறையையும் பிரதிபலிப்பதாகவே அமைக்கப்பட்டிருப்பது படத்தில் ஏற்படும் மேலுமொரு தற்செயலான அபூர்வம்.

ஜானியின் நகர்வில் தொற்றியிருக்கும் நீண்ட வெறுமையின் ஒரு பகுதியில் புதிய மலர்ச்சியாக, ரேனிகுண்டா தெரு மக்களின் துணிகளைத் துவைத்து உலர்த்தும் பெண் வருகிறாள். இவர்களின் முதல் சந்திப்பு ஒரு மழை நாளில் நிகழ்கிறது. சுப்ரமண்யத்திற்குப் பிறகு மீண்டும் ஓர் அழகான காதலை ரேனிகுண்டா தெருவில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் காதலில் சொற்கள் இல்லை, வெறும் மௌளனம் மட்டுமே அவர்களின் மழைநாட்களை நிரப்புகிறது. இருவரின் காதலும் எந்தவிதமான அதீத பகிர்வும் இல்லாமல் மிக அடர்த்தியான ஓர் உறவாக மாறுவதுதான் ஏதோ அதிசயம் போல ரேனிகுண்டா தெருவில் நிகழ்கிறது. அவ்வப்போது ஏற்படும் இருவருக்கிடையிலான சந்திப்பில் அவர்களுக்கு மத்தியில் பகிர்ந்துகொள்ளப்படும் அன்பும் சொற்களற்ற பாவனையும் பார்வையாளனுக்குள் நெருக்கமாகுகிறது.

மாற்று சினிமா என்று அடையாளப்படுத்தப்பட்டு எடுக்கப்படும் தமிழ் சினிமாவில், பெரும்பாலும் உடல் ஊனமற்ற கதைப்பாத்திரத்தை கதைக்குள் நுழைப்பது வழக்கமாகப் பின்பற்றப்படுவது கவனிக்கத்தக்கது. ரேனிகுண்டா படத்தில் வரும் டப்பா கதைப்பாத்திரத்திற்கு இரு கால்களும் ஊனமானவை. கோணலான வடிவமைப்பில் அவன் நடக்கும்போது அவனது இயலாமையைக் காட்டும். இது அந்தக் கதைப்பாத்திரத்தின் மூலம் பரிதாபத்தைச் சேகரிக்கும் முயற்சியாகவும் ஒரு தேர்ந்த பார்வையாளனால் நிர்ணயம் செய்ய இயலும் என நினைக்கிறேன். ஆனால் கதையோட்டத்தில் அவனையே ஆங்காங்கே ஒரு நகைச்சுவையாளனாகவும் கொலை உணர்வு ஏற்படும் போது வெறிப்பிடித்தவனாகவும் காட்டியிருப்பது, அந்தக் கதைப்பாத்திரத்தின் மீது குவிக்கப்படும் பார்வையாளர்களின் கவனம் கதையின் மையப்புள்ளிக்கு மிக அவசியமானதாகக் கருதப்பட்டிருக்கலாம். டப்பா என்கிற அந்த இளைஞனுக்கும் அதே தெருவில் வசிக்கும் மணிமேகலைக்கும் இடையே படத்தின் சிறு பாகமாகத் துளிர்க்கும் காதலும் வலி நிரம்பியதாகப் பேசப்பட்டிருக்கிறது.

“2 ஆம் வகுப்பு படிக்கும்போது சரோஜா டீச்சர் மகளைக் காதலிச்சேன், அது பேய்லியராச்சி. அதுக்கப்பறம் இப்பெத்தான் தெரியுமா திரும்பவும் வந்திருக்கு” எனும் டப்பா சொல்லும்போது அவனது வாழ்வு தொலைக்கப்பட்ட ஒரு பொருள் போல, மீண்டும் எங்கோ திடீரென்று ஒரு காதல் மூலம் தட்டுப்படுவதாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படி டப்பா என்கிற கதைப்பாத்திரம் ஒரு முழுமைப் பெறாத வடிவமாக கதையின் முன் கொண்டு வந்து நிறுத்தும்போது, பல இளைஞர்களின் வாழ்வு நேர்மையற்ற இந்தச் சமூகத்தின் மூலம் எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை குறியீட்டின் புரிதலின் மூலம் உணரக்கூடும். இந்தச் சமூகத்தின் அலட்சியமும், புறக்கணிப்பும் சேர்ந்த மீதங்களான பாத்திரத்திலிருந்து வழியக்கூடிய ஒரு கொடூரமான குறியீடுதான் டப்பா என்கிற கதைப்பாத்திரம்.

படத்தின் கடைசி காட்சியில் ரேனிகுண்டா தெருவில் வைத்து அந்த 5 இளம் குற்றவாளிகளும் கொடூரமான முறையில் கொல்லப்படுவதுதான் இந்தச் சமூகம் குற்றவாளிகளின் மீது காட்டும் எதிர் வன்முறையின் உச்சத்தைக் காட்டுகிறது. பெரும் புள்ளி ஒருவன் இன்னொரு முக்கிய நபரைக் கொலை செய்யச் சொல்லி அந்த இளைஞர்களை ஏவிவிடுகிறான். இதுதான் கடைசி கொலை முயற்சி எனவும் அதன் பிறகு ஜானியைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மும்பாய்க்குச் சென்று அங்கே அடைக்கலம் ஆகலாம் என்கிற கற்பனையுடன் இந்தக் கொலைக்கு ஒத்துக் கொள்கிறார்கள். வாய்ப் பேச முடியாத அந்த ரேனிகுண்டா தெருவில் சந்திக்கும் அந்தப் பெண்ணுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ஜானி அன்று தீர்மாகிக்கிறான். அவள் ரேனிகுண்டாவிலிருந்து 3 இரயில் நிலையம் தள்ளி இன்னொரு நிலையத்தில் காத்திருக்கும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆனால் அந்த நால்வரும் கொலை முயற்சியில் தோல்வியடைய பாண்டுரங்கனையும் மாரியையும் மிகவும் பரிதாபமாக அங்கேயே அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். மீதம் இருக்கும் மூவரில் இருவர் ஏற்கனவே அவர்களைக் கொலை வெறியுடன் தேடி வரும் காவல் அதிகாரியால் ரேனிகுண்டா தெருவில் வைத்து சாகடிக்கப்படுகிறார்கள். அதில் நம்மால் பார்த்துச் சகிக்க முடியாத அளவில் சாகடிக்கப்படுவது டப்பா என்கிற ப்ரேம்குமார்தான். நீண்ட சுவர் கொண்ட ஒரு காலி இடத்தில் சிக்கிக் கொண்டு அந்தச் சுவரை ஏறுவதற்கு அவன் செய்யும் போராட்டமும், வெளியே அந்தக் காவல் அதிகாரி கையில் துப்பாக்கியுடன் தயாராகிக் கொண்டிருப்பதை ஓடி வந்து பார்த்துவிட்டு மீண்டும் சுவரை ஏற முயற்சிப்பதும், என உயிர் வாழ்வதற்காக டப்பா செய்யும் முயற்சிகளுக்கு முன் குற்றவாளிகள் மீதான காரணமற்ற நமது வெறுப்பு உடைந்து சிதறக்கூடும். டப்பா தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எந்த விதத்திலும் உதவாத அந்த உயரமான சுவர்தான் இந்தச் சமூகமும் அவனுக்குக் கிடைத்த வாழ்க்கையும். அவனது வாழ்வின் முன் அவன் ஓர் இயலாமையைக் கண்டடைகிறான். இறுதியில் அங்கேயே சுடப்பட்டு மரணமும் அடைகிறான். குற்றவாளிகளுக்கு சட்டமும் அதிகாரமும் கொடுப்பது வெறும் தண்டனையை மட்டும்தான் என்பதைக் காட்சிப்படுத்தி உணர வைக்கும் இந்த உத்தி மிக அபாரமானது.

மூன்றாவது இரயில் நிலையத்தில் தனக்காகக் காத்திருக்கும் அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காகக் கடைசியான ஒரு நம்பிக்கையுடன் ஜானி தப்பி ஓடி இரயிலையும் அடைகிறான். கழிவறையில் ஒளிந்து கொண்டு தனது உயிரையாவது காப்பாற்றிக் கொண்டோம் என்கிற ஆறுதலில் அங்கிருந்து வெளியேறி இரயிலின் கதவிலிருந்து தலையை வெளியே நீட்டி நம்முடன் மீண்டும் ஒரு கதைச் சொல்லியாகப் பேசத் துவங்குகிறான். அவனது வார்த்தைகளில் ஒரு நம்பிக்கையும் காதலின் மீதான பிடிப்பும் வெளிப்படுகிறது. மறு கணத்தில் பின்னாலிருந்து அதே காவல் அதிகாரியால் சுடப்பட்டு இரண்டாவது நிலையத்தின் பிளாட்பாரத்தை நோக்கி விழும்போது மீண்டும் அவனது குரல் ஒலிக்கிறது.

“எல்லாம் முடுஞ்சி போச்சி. . நான் என்னா தப்பு செஞ்சேன். . நடுரோட்டுல எங்க அம்மா அப்பாவெ ஒருத்தன் அடிச்சி கொன்னப்பெ அதைச் சுத்தி நிண்டு வேடிக்கைப் பாத்த ஜனங்க மேல கோபப்பட்டு கத்தியெ எடுத்துட்டுப் போய் நிண்டனெ அது தப்பா? ஜெயில்லெ என்னெ கொடூரமா அடிச்சப்பெ ஆதரவு கொடுத்த இந்தப் பசங்கக்கூட சேர்ந்தென அது தப்பா? யார் தப்பு எது தப்புன்னே தெரியாமெ இங்க நடக்குது என்னோட மரணம். என் மரணத்தைவிடக் கொடுமை, நான் வருவேன்னு அங்க காத்திருக்கற அந்தப் பொண்ணு. பாவம். . எங்கப் போகும். . என்ன பண்ணும். . எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? யாராவது அந்தப் பொண்ணெ பாத்தா சொல்லிடுங்க, நான் வரமாட்டேன்னு, என்னெ இவுங்க கொன்னுட்டாங்கன்னு.” என்கிற கடைசி வரியுடன் ஜானி இறக்க, அந்தப் பெண்ணின் காத்திருப்பைக் காட்டியபடி படம் நிறைவடையும் போது பார்வையாளன் என்கிற முறையில் அந்த மரணத்திற்கான குற்றவுணர்ச்சியும் பரிதாபமும் நமது உடலில் நெளிந்து கொண்டிருக்கும். இது உறுதி.

ஜானி நம்மை நோக்கி சொல்லும் அந்த வரியில் படத்தின் ஒட்டு மொத்த பயணத்துடன் நாம் இணைந்து அவர்களுடன் ஒரு குற்றவாளிகளாக நின்றுகொண்டிருப்போம். இதென்ன இப்படியொரு படம்? எந்தப் போலித்தனமும் அற்ற அந்த ஜானியின் குரலில் நாம் வெறும் பரிதாபத்தையும் கேள்விகளையும் மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. அதையும் மீறி அந்தக் குரலின் கொடூரம், பரிதவிப்பு, வாழத்துடிக்கும் எதிர்பார்ப்பு, இழப்புகளின் புலம்பல் என உங்களைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்து எறிந்திருக்கும். ரேனிகுண்டா தெருவிலிருந்து நீங்க முடியாமல் தோல்வியுற்று எங்காவது விழுந்து கிடக்கும் உங்களைத் தேடிப் பாருங்கள். அது ஜானியின் முகமாகவோ, பாண்டுரங்கனின் முகமாகவோ, மாரியின் முகமாகவோ, டப்பாவின் முகமாகவோ அல்லது மைக்கலின் முகமாகவோ இருக்கக்கூடும்.

குறிப்பு: படத்தின் இயக்குனர் பண்ணிர் செல்வம் அவர்கள் ஒருவேளை மனச் சிதைவுக்கு உட்பட்ட ஒருவராக இருக்க வாய்ப்புண்டு. காரணம் படத்தைப் பார்ப்பவனையும் படத்தில் ஒரு கதாபாத்திரமாக இணைக்க வைக்கும் காட்சிகளில் துல்லியமான உளவியல் விளைவுகளை உக்கிரமான சிதைவுகளாகக் உபயோகித்திருப்பதைக் காணும்போது சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு தமிழ் திரைப்படம் இத்துனை ஆழமாகச் சென்று குற்றங்களின் வேரைப் பிடித்துக் கொண்டு சிறுக சிறுக ஒரு படிமமாக மாறக்கூடுமா என்பதில் தமிழ் சூழலில் அதிசயமே. வாழ்த்துக்கள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Friday, February 19, 2010

சிறுகதை: ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுபடும் ஆற்றல்

“என்ன வரையப் போறேனு தெரியுமா?”

“தெரியலையே. இன்னும் வரையவே இல்லெ, அதுக்குள்ள எப்படித் தெரியும்?”

“இதோ என்னா ஒரு குச்சி மனுசன் நடந்துகிட்டு இருக்கான், என்னா கண்ணு உங்களுக்கு?”

ஒரே ஒரு சிறு கோடு. இன்னும் கைகள்கூட முளைக்கவில்லை. ஆனால் அந்தக் கோடு அதன் நேர்கோட்டிலிருந்து தற்செயலான ஒரு நேர்த்தியின்மையைக் கொண்டிருந்தததால், அது நடக்கத் துவங்கியிருக்கலாம்.

“இப்பவாச்சம் என்னானு தெரியுதா?”

“இல்லையே!”

“இதுக்கூடத் தெரியலே?”

பவித்திரா ஓவியம் தீட்டத் துவங்கினாள். அவளுக்கு ஓவியப் பயிற்சி கிடையாது. வர்ணங்கள் விரல்களிலிருந்து உதிரக்கூடியவை எனும் நம்பிக்கை அவளிடமிருந்திருக்கக்கூடும். முதலில் ஒரு வர்ணம், பிறகு அதன் மீது மாற்று வர்ணம். பிறகு அதனருகில் முந்தைய வர்ணத்திற்கு சிறிதும் ஒவ்வாத மற்றொரு வர்ணம். பென்சிலைச் சட்டென்று கையில் எடுத்தவள் தாளின் நான்கு முனையிலிருந்தும் வெறுமனே கிறுக்கத் துவங்கினாள். அது பரவிக் கிடந்த ஒழுங்கற்ற வர்ணங்களின் மையத்தை அடைந்தது.

“இதுதான் புள்ளி” என்றாள்.

கூர்ந்து கவனித்தேன். அங்கொரு மையம் உருவாகியிருந்தது. ஒன்றுக்கு ஒன்று சிதறியிருந்த முரண்பாட்டு வர்ணங்களுக்குக்கூட ஒரு மையம் ஒரு மாயையைப் போல இருப்பதை ஒழுங்குகளின் நகலில் பயிற்சிப்பெற்ற ஜடக் கண்கள் அறியவில்லை. மீண்டும் இரு வர்ணங்களை எடுத்து அவசர அவசரமாகத் தாளின் மேற்பரப்பில் தூவினாள். அது ஏற்கனவே அங்கிருந்த வர்ணக் கலவையில் தெறித்து மேலும் ஒழுங்கற்று சிதைந்தது.

“இது என்னானு தெரியுமா?”

“பாபுஜி அங்கிள் தலை மாதிரி இருக்கு, இதெல்லாம் ஓவியமா?”

“உங்களுக்கு எதுமே தெரியமாட்டுது. இப்பெல்லாம் இப்படித்தான் வரையறாங்க”

அவள் ஏதோ மந்திரத்தைச் செய்து முன்பிருந்த மையத்தை ஓவியத்திலிருந்து தொலைத்துவிட்டிருந்தாள். எவ்வளவோ முயன்று தேடினேன். கலவைக்கு பிடிப்புக் கொடுத்திருந்த மையம் அகன்று மீண்டும் அது ஒரு கலவையாகியிருந்தது.

“இங்கிருந்த புள்ளி எங்க பிள்ளெ? அது கொஞ்சம் நல்லாருந்துச்சே”

“நீங்க பாக்கலயா? அது இப்பத்தான் பறந்து போனுச்சி”

“ஆங்ங்ங் பறக்கும். . உங்க ஊருல பறக்கும்”

“பாப்பாத்தில்லாம் கலர் கலரா பறக்குது, ஏன் இங்க உள்ள ஒரு கலரு பாப்பாத்தியா ஆயிருக்காதா? உங்களுக்கு ஒன்னுமே தெரியில. இப்படி ஓவியத்துலேந்து பறந்து பறந்துதான் பாப்பாத்தியே வந்துச்சாம்”

“உங்க ஊருல சொன்னாங்களா?”

மீண்டும் வெள்ளை வர்ணத்தை எடுத்து ஆங்காங்கே பூசினாள். திட்டு திட்டாக ஓவியத்தில் ஒரு ஒளி உருவாகியிருந்தது. பிரமிப்பும் ஆச்சரியமும் அவளது ஒழுங்கற்ற முயற்சிகளை நோக்கி படர்ந்தன.

“இப்பெ எப்படி இருக்கு? கொக்குங்க வந்துருச்சி”

“இது கொக்கா?”

“ஆமாம், இது எலிஸ் அண்ட் வண்டர்லைன்ல வரும் கொக்கு, நீங்க கார்ட்டூன் பார்த்துருக்க மாட்டிங்க”

அவள் பயன்படுத்தும் பிரஸ் வாய் பிளந்து கசங்கியிருந்தது. அதைக் கொண்டு அவள் உருவாக்கும் ஒரு ஒழுங்கற்ற ஓவியம் மேலும் வலுவடைந்திருந்தது. ஓவியம் எப்பொழுது முழுமைப்பெறும், அது முடிவுறும்போது, அவளது ஓவியம் என்னவாக இருக்கும் என்கிற பதற்றம் பரவியிருந்தது. ஒருவேளை அது வெறும் அர்த்தங்களற்ற கலவையாகத் தேங்கிவிட்டால், இனி அந்தச் சிறுமி ஓவியம் வரைய முயற்சிப்பாளா என்கிற சந்தேகமும் தோன்றியது. அவளின் அடுத்தக்கட்ட முயற்சிகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்குவதன் மூலம் அவளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த நினைத்தேன்.

“என்னா பாக்கறீங்க? அடுத்து என்ன வரையப் போறேனா? இப்பெ ஒரு மானம் இங்கெ முளைக்கப் போது, தெரியுமா?”

“மானம் இல்லெ வானம். யேன் வானம்?”

“இங்கப் பாத்திங்களா மழை பேஞ்சிருக்கு, அப்ப மானம் இருக்கனுமெ”

அவளுக்கருகில் இருந்த பிரசை நிற்க வைப்பதற்காக அவள் பயன்படுத்திய குவளையிலிருந்து தண்ணீர் தாளின் ஒரு முனையில் ஒழுகியிருந்தது. நீல வர்ணத்தின் குப்பியிலிருந்து வர்ணத்தை அள்ளிய பவித்திரா அதை ஓவியத்தின் மேல்பரப்பில் அகலமாக உதறினாள். குட்டி குட்டி வானங்கள் அங்குத் தோன்றியிருக்கக்கூடும். இதற்கு மேல் பொறுமையில்லாதவனாக அங்கிருந்து எழுந்துவிட்டேன்.

“எங்க ஓடறீங்க? பயமா இருக்கா?”

முன்கதவைத் திறந்துவிட்டு வெளிச்சம் உள்நுழைவதற்குள் வேகமாக வெளியேறினேன். எனக்கான வெளி எப்பொழுது வேண்டுமானாலும் சிதையும் அபாயம் அந்தச் சிறுமியின் கைவசம் இருந்ததை உணரும் ஒரு மையத்தை அடைய எவ்வளவோ சிரமப்பட வாய்த்திருந்தது. அநேகமாக பவித்திராவின் நீர்க்குவளையிருந்து மேலும் ஒரு புயல் காற்றோ அல்லது இலையுதிர் காலமோ வழியக்கூடும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா



Monday, February 15, 2010

கவிதை: திரும்பவும் ஒரு பறவை

சுவர்களில் படிந்திருந்த
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் சில அவசரங்களுடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்த
நிர்பந்தத்தில்




நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்புகிறது

மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்
தவறவிட்ட
சிறகுகளையும் உறவுகளையும்
எடுத்துச் செல்ல
நகரத்திற்குள் வந்திருக்கும் பறவை
கொத்திக் கொத்தித் தின்றது
பரபரப்பையும் சாமான்யனின் அவசரத்தையும்

(2010- மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசும் எம்.ஏ இளஞ்செல்வன் கோப்பையையும் வென்ற கவிதை)

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, February 12, 2010

மரணத்தைக் கலையாக்கும் சொற்களும் விடுப்பட இயலாத அன்பின் முகமும்

“இளவேணில் மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார்
வரவேற்போமே. . “

2004-இல் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மாணவராக நுழைந்தபோது “இளவேணில்” என்கிற எனது சீனியரின் அறிமுகம் கிடைத்தது. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் அவருடன் நான் பேசிய வார்த்தைகளை ஒரே சிறு பத்தியில் எழுதிவிடலாம். அவசியமில்லாத தருணங்களின் இறுக்கம் பெரும்பாலானவர்களிடமிருந்து என்னை விலக்கியிருந்தது.

இளவேணில் இயல்பான பண்புடையவர். அவரிடம் கூடுதலான எந்தவொரு மிகைப் பண்பையும் பார்க்க முடியாது. அவருடைய நண்பரிகளிடமிருந்து பெற்றத் தகவல்கள் ஏராளம். கூடுதல் புள்ளிகள் பெறுவதற்காக விரிவுரையாளர்களிடம் நாடகம் நடத்தும் எந்த முயற்சியும் அற்ற மிகவும் இயல்பான மிதமான குணமுடையவர் இளவேணில். அவரைப் பற்றி திடீரென நான் எழுத நினைத்தது ஒருவேளை 13.06.2008-இல் அவருக்கு ஏற்பட்ட மரணம் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அவரது மாமாவான கவிஞர் ஸ்ரீரஜினி(சுங்கைப்பட்டாணி) அவர்களுடனான உரையாடல் ஒரு காரணமாக வந்துவிடவும் வாய்ப்புண்டு.

இருதயத்தில் ஏற்பட்ட துளை, வெகு சீக்கிரத்திலேயே அவரது சுவாசத்தை அதன் வழியே பறித்துக் கொண்டது. திருமணத்திற்குப் பிறகு தனது 4 மாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டே விடைப்பெற்றவரின் மரணம் எத்துனைத் துயரமானவை? தனது அடையாளத்திலிருந்து விழப்போகும் தனது நகல் அடையாளத்தையும் சேர்த்தே விழுங்கித் தின்றது மரணம். இனி மரணத்தை எதிர்க்கொள்ள எத்தனை விதமான முதிர்ச்சி வியாக்கியானங்களைத் தந்தாலும், மரணம் கடவுளைப் போன்று பிடிக் கொடுக்காமல் ஒரு மூட நம்பிக்கையாகவோ அல்லது அதிசயத்தின் குறியீடாகவோ அல்லது துயரத்தின் பெரும்வெளியாகவோ வெறும் மிரட்டலாகவே தூரமாகின்றது.

கவிஞர் ஸ்ரீரஜினி இளவேணில் மரணத்திற்குப் பிறகு அவரின் பிரிவையொட்டி ஒரு கவிதை எழுதியதாகக் கூறினார். மரணத்தைக் கலையாக்கும் ஒரு பெருந்தோல்வியாக இது இருந்தாலும், மரணத்தை எதிர்க்கொள்ள முடியாமை என்கிற மனிதனின் யதார்த்தங்களின் சாட்சியங்கள்தான் இது போன்ற படைப்புகள். மரணத்திற்கு முன் நிர்கதியாகிவிட்ட பிறகு நமது அன்பிற்குரியவர்களை ஒப்படைத்துபிட்ட பிறகு அவரது மரணத்தை அவரது பிரிவைக் கலையாக்குவது எதார்த்தமான ஒரு இயலாமை. இந்த இயலாமை எல்லாரினாலும் சந்தித்துவிட முடியும். ஆனால் கவிஞர் ஸ்ரீரஜினி அதையும் கடந்து தனது வரிகளுக்குள் மீண்டும் ஓர் அன்பைத் தேடும் மீண்டும் ஓர் உயிரைத் தேடும் பரிதவிப்புகளை எதிர்பார்ப்புகளை, எப்பொழுதும் இந்தப் பிரிவு என்கிற துயரத்தை உடைக்க நினைக்கும் உரையாடலைப் புகுத்தியிருக்கிறார்.

அந்தக் கவிதை வரிகளை வாசிக்கும்போது இளவேணில் என்கிற முன்பு இருந்த இப்பொழுது இல்லாமல் போன ஒரு பிம்பத்தை, எந்த வியாக்கியானங்கள் சொல்லியும் கடக்க முடியாத ஓர் இயலாமையைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. நமக்கு நெருக்கமானவர்களின் இருப்பு மிகவும் வலிமையானது என்பதை அவருடைய இல்லாமையை எதிர்க்கொள்ளும்போது நமக்கு ஏற்படும் பதற்றத்திலிருந்தும் தவிப்புகளிருந்தும் புரிந்துகொள்ள முடியும்.

கவிஞர் ஸ்ரீரஜினி அவர்கள் தனது கவிதையில் அதன் வரிகளை இப்படி முடித்துள்ளார்.

“ மீண்டுமொரு
பிறவி கொள்ளும்
வரம் வேண்டி. . “

ஒரு உயிரை, நம்முடன் வாழ்ந்த ஒரு பிம்பத்தை எப்படியும் மறுக்க மறக்க முடியாத ஒரு தோல்வியின் வெளிப்பாடுதான் அந்த வரிகள். எப்படியாயினும் மரணத்தை வென்றுவிட துடிக்கிறது அந்த வரிகள். மறுப்பிறவி என்கிற ஒரு குறியீட்டைக் கொண்டு இளவேணிலுக்கு ஏற்பட்ட மரணத்தைச் சரிக்கட்ட நினைக்கும் அந்தக் கவிஞனின் வரிகள், மறுப்பிறவியின் சாத்தியங்கள்/நம்பகத்தன்மைகள் பற்றி விவாதிக்காமல், அந்த வரிகளிலிருந்து கழன்று விழும் ஒரு துயரத்தைப் பற்றியே மீட்டுணருகிறது.

சமீபத்தில் இளவேணில் அவர்களின் பெரியம்மா மகளுக்கு ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும், அந்தக் குழந்தை அசல் இளவேணிலைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறியதும், மரணத்திற்கு முன் எப்பொழுதும் சமரசம் செய்ய இயலாத மனிதனின் அன்பைக் கண்டு பிரமிப்பு ஏற்பட்டது. இனி அந்தக் குடும்பத்தில் மீண்டும் இளவேணில் மீண்டுமொருமுறை தொடக்கத்திலிருந்து வளரப் போகிறார். யார் மறுத்தாலும் இனி அவள்தான் இளவேணில் என்கிற நம்பிக்கை அவர்களை இளவேணிலின் காணாமல் போன பிம்பத்தை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

கவிஞர் ஸ்ரீரஜினி அவர்களின் கவிதை வரிக்ளிலிருந்து எது உயிர் பெற்றிருக்கிறது என அந்த வரிகளைப் பின் தொடர்கிறேன்.

“எங்களின் செல்லக்கிளிகளில்
ஒன்றை தேடிக்கிடைக்காத
மரணக்காட்டில்
தொலைத்துவிட்டோம்”

அவரின் இந்த வரிகள் தனக்குள் இருக்கும் இயலாமைகளையும் ஒவ்வொரு மனிதனும் எதிர்க்கொள்ளும் மரணம் என்கிற கடக்க முடியாத தோல்வியையும் விழுங்கிக் கொண்டு அதற்கு எதிரான ஒரு முரண்பாட்டை கடைசி வரியில் படைக்கிறது,

“மீண்டுமொரு
பிறவி கொள்ளும்
வரம் வேண்டி. .”

இன்று இந்த முரண் நிசமாகியுள்ளதாக இந்த ஸ்ரீரஜினி என்கிற மௌனி நம்பிக்கையுடன் இருக்கிறார். மரணத்தைக் கலையாக்கும் ஒரு தோல்வி எத்துனைப் பெரிய அன்பைத் தேடி தனது வேர்களை சொற்களாக்கி விரிகிறது என்பதை அவரது அந்த மிக எளிமையான வரிக்ளில் கண்டேன்.

"இளவேணில் மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார்,
வரவேற்போமே. ."-கே.பாலமுருகன்

அன்புடன்
கே.பாலமுருகன்
மலேசியா

Tuesday, February 9, 2010

அதிகாரத்தின் குரல்-5- மீளாத சாபமும் ஒரு மேடை இலக்கிய குறிப்புகளும்- உரையாடலிலிருந்து

(அடர்ந்த வனம்- ஒரு தீ பந்தம் எரிந்து கொண்டிருக்கிறது)

வழிப்போக்கன்: உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். வெகு சமீபத்தில் உங்களின் இந்தக் கோமாளியின் முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

கோமாளிபதி: அப்படியா? கட்டாயமாக என்னை மேடைகளில் பார்த்திருக்கக்கூடும். என்னிடம் ஒரு மேடைக் குறிப்புகள்/ மேடையில் நான் பேசுவதற்கென்றே ஒரு உரை குறிப்பு உண்டு. அதையும் பார்த்ததுண்டா?

வழிப்போக்கன்: ஆமாம். பலருக்குத் தெரியும். வெளியில் இது பற்றி பேசிவிட்டு, இடைவேளையாகக் காரி உமிழ்ந்து தள்ளுகிறார்களாம்.

கோமாளிபதி: அப்படியா? மிக்க மகிழ்ச்சி. பெருமையாக உள்ளது. என் பெருமையில் உங்களுக்குப் பரிச்சயமான ஏதாவது எருமையை மேய விடமுடியுமா?

வழிபோக்கன்: மன்னிக்கவும். உங்களது 10 வருடத்திற்கும் மேலான அந்த மேடை குறிப்புக்கு முன் எருமைகளுக்கும் கொஞ்சம் கௌரவம் உண்டு. ஆதலால். . அது இயலாது.

கோமாளிபதி: அப்படியா! மிக்க மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவன். என்னுடைய அந்தப் பாரம்பரிய உரை குறிப்பு எங்கோ தொலைந்துவிட்டதால், பெரும் பதற்றத்திற்க்குள்ளாகியுள்ளேன். எனது இருப்பு அர்த்தமற்றுப் போய்விடும் என்கிற அச்சத்தில் வனத்திற்கு ஓடி வந்துவிட்டேன்.

வழிப்போக்கன்: உங்களது இலக்கிய மேடை குறிப்புகள் காணவில்லையா? ஐயகோ! வருடந்தோறும் இலக்கிய விமர்சனம் என்கிற பெயரில் நீங்கள் முன்வைக்கும் குப்பைகளை இனி பொதுமக்களும் சில அப்பாவி எழுத்தாளர்களும் கேட்க முடியாதா? இது எத்துனைப் பெரிய விடுதலை தெரியுமா?

கோமாளிபதி: விடுதலையா? இது பெரிய இழப்பு. காலம் காலமாக அதை நம்பித்தான் எனது சிறுகதை விமர்சனங்களைக் கொடுத்து வருகிறேன். சதி செய்து யாரோ எனது மேடை இலக்கிய குறிப்புகளைத் திருடிவிட்டார்கள். அதைத் திருடியவர்களின் கைகள் நெருப்பில் பொசுங்க வேண்டும்.

வழிப்போக்கன்: நிதானமாக இருங்கள். நீங்கள் மெத்த படித்தவர். பட்டம் பெற்றவர். நீங்கள் அறியாததா? உங்களின் மேடை பசப்பலில் உங்களின் மேதாவித்தனத்தின் உச்சம் வெளிப்படும் தருணத்தில் உங்கள் கைகளில் வலுவாகச் சிக்கிக் கிடக்கும் அந்த 10 வருடத்திற்கும் மேலான இலக்கிய குறிப்புகளை நீங்கள் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டிருப்பீர்களே, ஞாபகம் இருக்கிறதா? உங்கள் வன்முறையான பிடியிலிருந்து அந்த ஒப்பீட்டு இலக்கிய குறிப்புகள் எப்படித் திருடப்பட்டிருக்கும்?

கோமாளிபதி: தம்பி. அதிகம் பேசாதே. நீ என்போல அதிகம் படிக்காதவன். படித்தவனுக்கு எங்கும் எப்பொழுதும் எதையும் பேசவும் சொல்லவும் உரிமையும் தகுதியும் இருக்கின்றன. நீயும் உன்னைப் போல குறைவாகப் படித்தவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு அருகில் பம்மிக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் உனக்கு விதிக்கப்பட்டது. அதை மீறுவதற்காக இலக்கியம், விமர்சனம் என்று எனதுரிமையைப் பறிக்காதே. நாட்டின் சிறுகதை போக்குகள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி எனக்குத்தான் தெரியும். கைவிடப்பட்ட பெற்றோர்கள், வியாபாரத்தில் தோல்வியடைந்த வியாபாரியின் முன்னேற்றம், காதலில் முன்னேறத் துடிக்கும் கல்லூரி மாணவர்கள், சோதனையில் விரக்தியடைந்த இளைஞனின் வாழ்க்கை முன்னேற்றம் என இப்படியான தளங்களில் சிறுகதை எழுதப்பட வேண்டும். அவ்வப்போது வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த வேறு இனத்தைச் சேர்ந்த கதைப்பாத்திரங்களும் கதையில் கட்டாயம் வரவேண்டும். அதுதான் சிறுகதை. நான் சொல்வது போலத்தான் படைப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பரிசு கிடைக்கும்.

வழிப்போக்கன்: இதை எங்குச் சொன்னீர்கள்?
கோமாளிபதி: இதை ஒரு பரிசளிப்பு விழா மேடையில் அடுத்த வருடம் கதை எழுதவிருக்கும் பலருக்காகச் சொன்னேன்.

வழிப்போக்கன்: இதைச் சொல்லும் நீங்கள்தான் அடுத்த வருடமும் அந்தப் போட்டிக்கான நீதிபதி என்று எல்லோருக்கும் தெரியுமா?

கோமாளிபதி: ஏன் தெரியாது? அடப்பாவி மானுடா? அது எழுதி வைக்கப்பட்ட மிகச் சிறந்த வரலாறு. பலர் கேலி செய்தாலும் விடமாட்டேன் என்கிற பிடிமானத்துடன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். யார் தடுத்தாலும் விடமாட்டேன்.

வழிப்போக்கன்: அப்படியென்றால் அடுத்த வருடம் கதை எழுதுபவர்கள் உனது கோமாளித்தனமான மேடை பேச்சுக்காகவே எழுதுவார்கள் என்பது உறுதி. ஒட்டு மொத்த சமூகத்தையே ஒரு போட்டியின் மூலம் நீ நடத்தும் சர்வதிகாரத்தின் மூலம் கோமாளிகளாகப் படைக்கவிருக்கிறாய், அல்லவா?

கோமாளிபதி: ஏன் இத்தகையதொரு குற்றச்சாட்டு? அப்படியேதும் தெரியவில்லையே. என் எதிர்ப்பார்ப்பை மட்டுமே வெளிப்படுத்தினேன். இந்த நாட்டின் இலக்கியத்தைத் தீர்மானிக்கும் சக்தி எனது கல்வியறிவிற்கும் திறனாய்வு கல்விக்கும் உண்டு.

வழிப்போக்கன்: நல்லது. உனது எதிர்ப்பார்ப்பிற்கும் நீ நினைப்பது போலும் இங்குள்ள எழுத்தாளர்களையும் இலக்கியத்தையும் வடிவமைக்க முனைகிறாய்! உன் முதுகு தண்டைச் சொரிந்து கொள்ள கருவியாக போட்டிக்கான பரிசுகளை முன்னிறுத்தி படைப்பாளனின் சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறாயா?

கோமாளிபதி: பிடிக்கவில்லையென்றால் அவர்களெல்லாம் ஏன் எழுத வேண்டும்? எனக்கு வேண்டியது என் திறனாய்வை வேதமாகப் பருகி தொலையும் ஒரு கூட்டம் மட்டுமே. எதிர்க்க நினைப்பவன் வேறெங்கிலும் எழுதிக் கொள்ளட்டும். முதல் பரிசு வேண்டுமென்றால் என்னைத் திருப்திப்படுத்தும் வகையில் எனக்கு சலனத்தை ஏற்படுத்தும் வகையில் படைத்து அனுப்பு. இல்லையென்றால் வெறுமனே இரு.

வழிப்போக்கன்: நீ பிரயோகிக்கும் ஆயுதம் மிகவும் ஆபாசமாக இருப்பதை நீ உணராதிருப்பது உனது மறுக்கும் ஆற்றலைக் காட்டுகிறது. இந்தச் சமூகம் உனது திறனாய்வுகளுக்கு முன் மண்டியிட்டுக் கிடக்க, உன் பெயருக்குப் பின் வரக்கூடிய அந்தப் பட்டங்கள்தான் காரணமா?

கோமாளிபதி: அடப்பாவமே! உனக்குத் தெரியாது. நான் சொன்னதைப் போலவே என்னைத் திருப்திப்படுத்தும் வகையில் கதை எழுதி அனுப்ப தயாராக இருக்கும் பல அடிமைகள் எனக்குண்டு. அவர்களுக்கு வேண்டியது படைப்பு என்கிற தரத்தைக் கடந்த புகழ், எனக்கு வேண்டியது என் எதிர்ப்பார்ப்பின் வெற்றி. என் திறனாய்வுக்கு ஒரு தீனி. அவ்வளவே.

வழிப்போக்கன்: தன் சுதந்திரத்திற்கு எழுத நினைக்கும் எழுத்தாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கோமாளிபதி: அவர்கள் முட்டாள்கள். நமக்கு வேண்டியது எங்களைப் போல சில நகல்கள். நிசமல்ல. நகல்களின் பெருக்கம் அலாதியான ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது. புதுமை நவீனம் என எவனாது பேசிக் கொண்டு உள்ளே வந்தால் கொதித்து எழுந்திடுவோம்.

வழிப்போக்கன்: இந்த அடர்ந்த வனத்தில் இப்பொழுது என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?

கோமாளிபதி: எனது மேடை குறிப்புகளை இரவும் பகலும் தேடிக் கொண்டிருக்கிறேன். காணாமல் போன ஒரு வரலாறின் சோகம் இது. இந்த நாட்டில் பல வருட காலமாக ஒரே மாதிரி விமர்சிக்கும்/ திறனாய்வு செய்யும் ஒரு தகுதியான ஆள் வேறு யார் இருக்க் முடியும்?

வழிப்போக்கன்: போட்டிகளுக்கு நீதிபதிகள் யாரென்று தெரியக்கூடாது என்பதுதானே விதி? அதெப்படி இந்தப் போட்டிக்கு மட்டும் உங்களைத் தவிர வேறு யாரும் தலைமையில் இருக்கமாட்டார்கள் என உறுதியாக மக்களுக்குத் தெரிகிறது?

கோமாளிபதி: அன்றாடம் பத்திரிக்கையில் அறிக்கை விடுகிறேனே. எல்லோரும் என்னை நம்புகிறார்கள். என்னைவிட்டால் வேறு தகுதியான ஆள் யாரும் இல்லை என்று அந்தக் கடவுளுக்கே தெரியும்போது உனக்கெப்படி தெரியாமல் போனது? மூடனே!

வழிப்போக்கன்: கடைசியாக மக்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்து?

கோமாளிபதி: யாராவது எனது மேடை விமர்சனக் குறிப்புகளைத் தெரிந்தோ தெரியாமலோ எடுத்திருந்தால் தயவு செய்து திரும்பவும் என் இடத்திலேயே வைத்துவிடுங்கள். உங்களை நான் காட்டிக் கொடுக்கமாட்டேன். என்னை நம்புங்கள். அந்தக் குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் நானும் என் நாட்டின் இலக்கியமும் தோல்வியடைந்துவிடும். ஆகையால் நம்புங்கள் நான்தான் இந்த நாட்டு இலக்கியத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன்.
(முல்லேசியா எனப்படும் பூமித்திய ரேகையிலிருந்து 14000 கிலோ மீட்டர் உள்ளே,  பூமிக்கடியில் 25000 கிலோ மீட்டர் ஆழத்தில் நடந்த உரையாடல்)

(அதிகாரத்தின் குரல் ஓங்கி ஒலித்தது அடர்ந்த வனத்தில்)

ஆக்கம்: கே.பாலமுருகன்
                   மலேசியா

Monday, February 8, 2010

சொல்வனம்- சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்- (எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உரையாடல்)

17-12-09

இலக்கிய சூழலில் அதிகாரங்களையும் ஆக்கிரமிப்புகளையும் விவாதிக்க ஏற்ற களமாக உரையாடலே மிகச் சிறந்த வடிவம் என்கிற நம்பிக்கையில் சிங்கப்பூரில் வெறும் வாய்மொழி சாடல்களாகவும் விமர்சனமாகவும் நிலவி வந்த அடையாள அரசியலின் பரிசீலனையின் முதல் கட்டமாக, சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களுடன் எதார்த்தமாக நிகழ்த்தப்பட்ட உரையாடலின் சிறு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதை இங்கேயே இப்படிவிட்டுவிடுவது, அல்லது எங்களின் உரையாடல் முடிவடைந்த புள்ளி தீர்வாகவோ பரிந்துரையாகவோ அடையாளப்படுத்த இயலாமல் தொடர்ந்து அடையாள அரசியலின் அடுத்தகட்ட உரையாடலாக முன்னகர்த்திக் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்துள்ளேன்.

படைப்பாளியின் புற அடையாளங்களை வரையறுத்து, அவற்றின் மூலம் அடையாள அரசியலை முன்னெடுக்கும் புதிய மதிப்பீடுகள், படைப்பாளர்களின் மீதான அதிகார கட்டமைப்பாகப் பிரயோகிக்கப்படுவது பலவீனமான இலக்கிய பார்வை என்பது என் கருத்து.

உரையாடல்

கே. பாலமுருகன்: தாங்கள் சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறிகிறேன். சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றைப் பற்றி இதுவரை எத்துணை விமர்சனங்கள் அல்லது கட்டுரை எழுதியுள்ளீர்கள்? சிங்கப்பூருக்கு குடி பெயர்ந்து வரும் தமிழக எழுத்தாளர்கள் சிங்கப்பூர் இலக்கியம் குறித்து அக்கறை காட்டுவதில்லை எனவும், மேலும் அதன் வரலாறையும் வளர்ச்சியும் பற்றிய அவாதானிப்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் நான் கருதுகிறேன்.

மேலும் படிக்க...»

சொல்வனம்
மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.
சொல்வனம் 05-02-2010 இதழ்‏

Tuesday, February 2, 2010

மலேசிய தீவிர இலக்கிய இதழின் தற்காலிக இணைய இதழ்

அநங்கம் தற்காலிக இணைய இதழ்
டிசம்பர் இதழுக்கான சில படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை அநங்கம் முவரிக்கு அனுப்பி வைக்கவும்.
ananggam@hotmail.com

அநங்கம் அகப்பக்கம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் தயாராகிவிடும். ஆகையால் அதுவரையில் படைப்பாளர்கள் வாசகர்கள் இந்தத் தற்காலிக இணைய இதழில் அநங்கம் இதழ் படைப்புகளைக் காணலாம்.

கே.பாலமுருகன்
இதழாசிரியர், மலேசியா

விவாதங்களின் தொடர்ச்சி- தமிழ் மொழி விவகாரம் குறித்து

நேற்று 10மணியளவில் டிவி மூன்றில் இடம்பெற்ற கல்வி அமைச்சருடனான "கேள்வி பதில்" தொலைக்காட்சி நிகழ்வில், தற்பொழுது நாட்டில் பரப்பரப்பாக இருக்கும் தமிழ் மொழி எசு.பி.எம் தொடர்பான எந்த ஒரு விசயமும் பேசப்படாததும் விவாதிக்கப்படாததும் பலருக்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி சார்ந்த எல்லாம் சமூகத்தின் பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்திருந்தேன். ஆனால். . ?

இந்தத் தமிழ் மொழி விவகாரம் குறித்து பலர் பலமாதிரியான கருத்தாக்கங்களையும் அணுகுமுறைகளும் கொண்டிருப்பதால், நேற்று இது குறித்து விவாதிக்கப்பட்டிருந்தால் விளக்கமளிக்கப்பட்டிருந்தால் பொது மக்களுக்கு இந்தப் பிரச்சனை குறித்து புரிந்து கொண்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

கடந்த என் பதிவில் இடம்பெற்றிருந்த கல்வி அதிகாரியும் நண்பருமான அவரது  கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை வாசகரும் நண்பருமான திரு.தமிழ்வாணன் அவர்கள் தெரிவித்துள்ளார். பின்வருமாறு:

//அரசாங்கம் 12 பாடங்கள் எடுக்கலாம் என்று அறிவித்து//

தமிழ்வாணன்: 12 பாடங்கள் எடுக்கலாம். ச‌ரி. 12 பாடங்க‌ளுக்கும் ச‌ம‌மான‌ முழு அங்கீகார‌ம் உள்ள‌தா? இத‌ற்கு முன் த‌மிழ் மொழிக்கும் இல‌க்கிய‌த்திற்கும் இருந்த‌ அங்கீகார‌ம் ஏன் த‌ற்போது ப‌றிக்க‌ப் ப‌ட்ட‌து?

//இந்தப் பிரச்சனை குறித்து தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லாததால் //

தமிழ்வானன்: யாருக்கு தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லை? க‌ல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடங்க‌ள் என்ற‌ முடிவை எடுத்த‌ போது இந்திய‌ அல்ல‌து சிறும்பான்மை இன‌த்தைச் சேர்ந்த‌ க‌ல்வி அதிகாரிக‌ளிட‌ம் அல்ல‌து அமைச்ச‌ர்க‌ளிட‌ம் க‌ருத்துக்க‌ளை கேட்டு அறிந்த‌தா? குறைந்த‌ ப‌ட்ச‌ம் விள‌க்க‌ம் கொடுத்து அனும‌தி பெற்ற‌தா? யாரின் க‌ருத்தை அல்ல‌து அனும‌தியை பெற்றார்க‌ள்? ஒரு நாட்டின் முக்கிய‌மான‌ க‌ல்விக் கொள்கைக‌ளில் செய‌ல்பாடுக‌ளில் மாற்ற‌ங்க‌ளை கொண்டு வ‌ரும் போது முழுமையான‌ ஆய்வு வேண்டாமா?

// இந்தப் போராட்டம் மேலும் வலுவடைந்து பொது மக்கள் மத்தியில் வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும் //

தமிழ்வாணன்: ஆமாம் வேறொரு விளைவு ஏற்ப‌ட்ட‌து. க‌ட‌ந்த‌ ஆண்டு இறுதியில் இவ்வாண்டு ஆர‌ம்ப‌த்தில் இடை நிலைப் ப‌ள்ளி த‌மிழ் ,இல‌க்கிய‌ தேர்வு பாட‌ங்க‌ளில் பிர‌ச்ச‌னை நில‌விய‌ போதும் இவ்வாண்டு ஆர‌ம்ப‌த்தில் ப‌ல‌ பெற்றோர்க‌ள் அதிக‌மான‌ மாண‌வ‌ர்க‌ளை த‌மிழ்ப் ப‌ள்ளிக்கு அனுப்பி ஆட்சியாள‌ர்க‌ளுக்கு தெளிவான‌ செய்தியை அனுப்பியுள்ள‌ன‌ர்.

// இதுநாள் வரையிலும் கல்வி அமைச்சு தமிழ் இலக்கியப் பாடத்தை அங்கீகரிக்கவில்லைத்தான்//

தமிழ்வாணன்: ம‌ன்னிக்க‌வும் த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்.இதுநாள் வரை( க‌ட‌ந்த‌ ஆண்டு வ‌ரை) தமிழ் இலக்கியப் பாட சிற‌ப்பு தேர்ச்சி (இப்பாட‌ங்க‌ளுக்கான‌ க‌ல்வி அமைச்சின் முழு அங்கிகார‌ம்)உள்ளூர் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ நுழைவிற்கும், க‌ல்விக் க‌ட‌னுத‌விக்கும்,அர‌சாங்க‌ தொழிலுக்கும் ம‌ற்றும் த‌னியார் துறைக்கு தேர்வுக்கும் உத‌வியாயிருந்துள்ள‌து. த‌ற்பொழுதுதான் இப்பாட‌ங்க‌ள் ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ பாட‌ங்க‌ளாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் சில‌ க‌ல்வித் துறைக்கும், சில‌ தொழில் தேர்வுக்கும் ம‌ட்டுமே ப‌யன்ப‌ட‌ அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும் என‌ தெரிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.

//300 என்ற எண்ணிக்கையை 4000 வரை உயர்த்தியது பெரும் வெற்றி எனவும் அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே மொழி உணர்வு அதிகரிக்கவும் போராடியவர்கள் கல்வி இலாகாவையும் கல்வித் துறையையும் சார்ந்தவர்கள்தான் எனத் தெரிவித்தார்//

தமிழ்வாணன்: உண்மை.இவ‌ர்க‌ள் போற்றுத‌லுக்கு உரிய‌வ‌ர்க‌ள்.த‌மிழ்ச் ச‌மூக‌ம் இவ‌ர்க‌ளை என்றும் ந‌ன்றியோடு நினைவு கொள்ளும்.சில‌ அர‌சு சார்ப‌ற்ற‌ இய‌க்க‌ங்க‌ளும் 90ஆம் ஆண்டுக‌ளில் இம்முய‌ற்சியில் இந்திய‌ க‌ல்வி அதிகாரிக‌ளோடு கைகோர்த்து செய‌ல்ப‌ட்ட‌து வ‌ர‌லாற்றில் பொன் எழுத்துக்க‌ளால் பொறிக்க‌ வேண்டும்.

//மேலும் டத்தோ சாமிவேலு அவர்களும் இலக்கியப் பாடம் எடுத்த மாணவர்களுக்கு அந்தக் காலக்கட்டத்தில் இலக்கிய நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி செய்துள்ளார் என உண்மையையும் கூறினார். ஆனால் இதுநாள்வரையில் இது குறித்து எங்கும் விளம்பரம் செய்யப்படவில்லை எனவும் கூறினார்.//

தமிழ்வாணன்: ஒரு அமைச்ச‌ர்‍‍ ந‌ன்ன‌றிவும் ஒழுக்க‌மும் க‌ற்றுத் த‌ரும் இல‌க்கிய‌ப் பாட‌த்தினை த‌குந்த‌ ஆசிரிய‌ர்க‌ள் கொண்டு ப‌ள்ளி நேர‌த்திலேயே அல்ல‌து மிகுதி நேர‌ பாட‌மாக‌ ப‌யிற்றுவிக்க‌ உரிமை கோராம‌ல், குறைந்த‌ ப‌ட்ச‌ம் ச‌லுகை என்ற‌ அடிப்ப‌டையில் அர‌சாங்க‌ மான்ய‌த்தில் மொழிக்கும் இல‌க்கிய‌த்திற்கும் பாட‌ புத்த‌க‌ங்க‌ளை உருவாக்க‌ முய‌ற்சிக்கவும் இல்லை.
தேர்வுக்கான‌ நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி(பிச்சை) செய்துள்ளார். இவ‌ரது இந்த‌ த‌மிழ்ச் சேவையை கொடை வ‌ள்ள‌ல் த‌ன‌த்தை விள‌ம்ப‌ர‌ம் செய்யாத‌து த‌மிழ் ச‌மூக‌ம் அவ‌ருக்கிழைத்த‌ துரோக‌மாக‌வே க‌ருத‌ வேண்டும்.

//அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டமாக மாறியிருப்பதால் இது குறித்து சில பெற்றோர்களிடம் கேட்டப்போது அவர்கள் இவ்வளவு பிரச்சனை என்பதால் என் பையன் தமிழே எடுக்க வேண்டாம் என்கிற எதிர்க் கருத்தைக் கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார்.//

தமிழ்வாணன்: உண்ணாவிர‌த‌ போராட்ட‌ம் க‌ல்வி அமைச்சின் முடிவுக‌ளையும் அம‌லாக்க‌த்தையும் எதிர்த்து ந‌ட‌த்த‌ப் பெறுகிற‌து என்ப‌து யாவ‌ரும் அறிந்த‌து. இதில் த‌மிழ்ப் ப‌ற்றுள்ள‌ எந்த‌ பெற்றோர்க‌ளுக்கும் மாண‌வ‌ர்களுக்கும் எவ்வித‌ பாதிப்பையும் கொண்டு வ‌ராது என்ப‌து பாம‌ர‌ரும் அறிந்த‌தே.மேலும் அர‌சாங்க‌ முடிவென்றால் அத‌னை விம‌ர்சிக்க‌,அதிருப்தியை தெரிவிக்க‌ கூடாது என்று பொருள்ள‌ல்ல‌.

//மக்களுக்குச் சரியான முறையான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படாமலே போராட்டங்கள் வலுவடையும்போது அது குறித்து அவர்களுக்குப் பதற்றமும் குழப்பங்களும் எழுவது இயல்பு//

தமிழ்வாணன்: அதிகார‌மும் அர‌சு ய‌ந்திர‌ங்க‌ளின் உத‌வியும் உள்ள‌ ஆட்சியாள‌ர்க‌ளின் முடிவுக்கெதிராக‌ க‌ருத்துக்க‌ளை பொது ம‌க்க‌ளிட‌ம் தெரிய‌வைப்ப‌து, சில‌ விச‌ய‌ங‌க‌ளின் உள் நோக்க‌த்தினை புரிய‌ வைப்ப‌து அல்ல‌து தெளிய‌ வைப்ப‌து இல‌குவான‌ காரிய‌மில்லை.தாய் மொழி,த‌மிழ்ப் ப‌ற்றுள்ள‌ சில‌ நாளித‌ழ்க‌ள் ,சில‌ வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ள் மூல‌ம் ப‌ல‌ த‌டைக‌ளை மீறி எங்க‌ள‌து போராட்ட குறிக்கோளை செய‌ல்பாடுக‌ளின் விள‌க்க‌ங்க‌ளை தெரிவித்து வ‌ருகின்றோம்.சில‌ ப‌திவாள‌ர்க‌ள் ச‌ற்று முய‌ற்சி எடுத்து பொது ம‌க்க‌ள் அறிந்து கொள்வ‌து விவேக‌மான‌ செய‌லாக‌ க‌ருத‌ப்ப‌டும்.

மேலும், க‌ல்வி அமைச்சின் இக்கொள்கையான‌து எவ்வாறு அறிவிய‌ல் க‌லைத்துறை மாண‌வ‌ர்க‌ளை பாதிக்கின்ற‌து என்ற‌ தெளிவான‌ விள‌க்க‌ங்க‌ளோடும், திரு கே பால‌முருக‌னின் கேள்விக‌ளுக்கும் விடைக‌ளையும் விரைவில் கருத்துக்களாக‌ வெளியிடுவேன்.மேற்சொன்ன‌வையாவும் என் சுய‌ க‌ருத்துக்க‌ளே, இக்க‌ருத்துக்க‌ளுக்கு நான் ம‌ட்டுமே பொறுப்பு. த‌மிழ்வாண‌ன்.

நன்றி: வாசகர் தமிழ்வாணன்
சிலாங்கூர், கிள்ளான்