Saturday, June 25, 2011

சீன சினிமா - Not One Less - 'தீர்ந்துபோகாத வெண்கட்டிகள்'

வெயிலொழுகும் நகரம்
தூரத்துப் பயணிகள்
ஆட்களைக் கொன்று தீர்க்கும் பரப்பரப்பு
சீனாவின் மிக விசாலமான வாழ்வு.
நகரத்தின் வாழ்வைப் பற்றி எப்பொழுதும் பிரக்ஞையில்லாமல் அல்லது அரை பிரக்ஞையுடன் வெளிப்படுத்தும் திரைப்படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒரு சில படங்களின் இயக்குனர்கள் தனது நேர்காணலில் படத்தைப் பற்றி சொல்லுபோது ஓர் இடத்தில்கூட அப்படம் காட்டிய நகர வாழ்வு குறித்தான தகவல்கள்/பகிர்வுகள் இடம் பெற்றிருக்காது. எடுத்துக்காட்டாக அண்மையில் தமிழில் வெளிவந்து அதன் கதாநாயகன் மலேசியாவிற்கு வந்து பேட்டியெல்லாம் கொடுத்து அசத்திய, ‘வா குவாட்டர் கட்டிங்” படத்தைச் சொல்லலாம். அதிகாலையில் ஒரு நகரத்தின் இருண்ட பகுதிகள் எப்படியெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறது என்பதை மிக அழகாகக் காட்டியிருந்தார்கள். ஆனால் அதைப் பற்றிய விவாதமோ அடையாளப்படுத்துதலோ, விமர்சனமோ திரைப்படத்துறை சார்ந்தவர்களிடமிருந்தும் வரவில்லை பிற முக்கியமான விமர்சகர்களிமிருந்தும் வெளிப்படவில்லை. மலேசியாவுக்கு வந்து பேட்டியளித்த நடிகர் சிவாவுக்கும் தெரியவில்லை.

Friday, June 17, 2011

திரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)

விளிம்புநிலை விசுவாசிகள்

பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள் வாழக்கூடிய இடம். கிராமத்தின் வாசலில் கிணறு போன்ற இடத்தில் மணி ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்துவிட்டால் அந்த மணி ஒலிக்கப்படுகிறது. இந்த மணியும் மணி சத்தமும் அக்கிராமத்திலுள்ள மக்களின் குலத்தொழிலைக் காப்பாற்றுவதற்கான ஒரு குறியீடாகவே கருதுகிறேன். அந்தக் கிராமத்தின் குலத்தொழிலே திருட்டுத்தான். அதைச் செய்யாவிட்டால் சாமி குற்றம் ஆகிவிடும் என நம்புகிறார்கள். ஆகையால் காவல்துறையின் வருகையை அறிவிப்பதற்குரிய ஒலியை அந்த மணி எழுப்புகிறது.

வழக்கமான பாலா படங்களில் ஆழப்புதைந்திருக்கும் குரூரங்கள் பரவலாக இல்லாமல் போனாலும், படம் முழுக்க மேட்டுக்குடிகளுக்கு அடித்தட்டு மக்களின் வேடங்களைப் போட்டிருப்பது ஆங்காங்கே அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக ஆர்யா விஷாலின் அப்பா ஷிரிகாந்த், அம்பிகா போன்றவர்கள். அம்பிகாவின்(விஷால்- அரவாணியின் அம்மா) குரல் கதைக்குள்ளிருந்து ஒலிக்காமல் கதைக்கு வெளியே சென்று அந்நியத்தன்மையை உண்டாக்கி படத்திற்குப் பலவீனத்தைச் சேர்க்கிறது.

Tuesday, June 14, 2011

மௌனம் இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரை: ஆளுமையை அடையாளம் காண்பதிலும் தேக்கநிலையே.


கடந்த சனிக்கிழமை (11.06.2011) 3 மணி அளவில் மலாக்காவிலுள்ள கல்லூரி ஒன்றில் மௌனம் சிற்றிதழ் வெளியீடும் கலந்துரையாடலும் நடைப்பெற்றன. நான், பா.அ.சிவம், பச்சைபாலன் மஹாத்மன் அவர்களும் கோலாலம்பூரிலிருந்து காரில் சென்றிருந்தோம். எதிர்பார்த்திருந்தபடி 35 பேர் மண்டபத்தில் கூடியிருந்தனர். மௌனத்தில் வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் அறிமுகமான நாணல், ரிவேகா போன்றவர்கள் இருந்தனர். பச்சைபாலன் நிகழ்ச்சியை வழிநடத்த பெரியவர் தோ.கா.நாராயணசாமி வரவேற்புரை வழங்கினார். அங்குக் கூடியிருந்தவர்கள் அனைவரையும் மேலோட்டமாக அறிமுகம் செய்து வைத்தார்.

நான் ஆற்றிய உரையின் சுருக்கம்:

மலேசியாவின் இன்றைய கவிதை குறித்த பிரக்ஞை எப்படி இருக்கிறது என்பதை விவாதிப்பதன் மூலம் அல்லது முன்வைப்பதன் மூலமே மலேசியாவில் எழுதப்படும் நவீன கவிதைகள் பற்றி பேச முடியும் என நினைக்கிறேன். ஒரு கவிதை குறித்த சமூகத்தின் ஒட்டுமொத்தமான புரிதல் அல்லது பல்வேறான புரிதலை அறிந்துகொண்டு அதனை விமர்சனப்பூர்வமாக ஆழமாக விவாதிக்காதவரை அவற்றை அடைவது சிரமம். அதற்கான முயற்சியாகவே எனது இந்த உரையைக் கருதுகிறேன்.