Sunday, January 3, 2010

மலேசியா – மூன்று நிகழ்வுகள்

1. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் (மலேசியா)

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தேசிய அளவில் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் மலேசிய கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நடனம் பாடல்கள் போன்றவற்றையும் அரங்கேற்றின. பரதநாட்டியம், சீன நாகா நடனம், மலாய் நடனம் என்று கலை மேடை படைப்புகள் மிகவும் பிரமாண்டமாக படைக்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டை வரவேற்போம்.

2. கடந்தாண்டு பள்ளியின் பரிசளிப்பு விழா

பள்ளியின் வருடாந்திர நிகழ்வான பரிசளிப்பு விழா இந்தாண்டு கூடுதலான அங்கங்களுடன் நடைப்பெற்றது. மாணவர்கள் மாறு வேடப் போட்டியில் பங்கெடுத்தது இவ்வருடம் எல்லோரையும் (தோட்டப்புறத்தைச் சார்ந்த அதன் பின்னனியைக் கொண்டவர்கள்) வியப்படைய வைத்தது. இந்த மாறுவேடப் போட்டியில் பெற்றோர்களும் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தேன்.
4 மாணவர்கள், விவேகானந்தர், திருவள்ளுவர், வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் மேலும் மீராபாய் என்ற 4 விதமான மாறுவேடங்களை அணிந்து குறிப்பிட்ட அந்த அறிஞர்களின் ஆளுமைகளை விளக்கும் சொற்கள் அல்லது வாசகங்களையும் சொன்னார்கள். அங்குள்ள பெற்றோர்கள் அந்த மாறுவேடம் எந்த அறிஞரைக் குறிக்கிறது எனக் கண்டறிந்து ஒரு தாளில் எழுதி அறிவிப்பாளரிடம் கொடுக்க வேண்டும். சரியாக அனுமானித்து முதலில் வந்து கொடுப்பவருக்கே பரிசு என்று தீர்மானிக்கப்படது. எல்லோரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நகர்ப்புரப் பள்ளிகளில் இந்தப் போட்டி வழக்கமானதாக இருந்தாலும், எங்கள் தோட்டப்புறப் பள்ளியில் நிகழும் முதல் நிகழ்வாகும் என்பதால் எல்லோருக்கும் உற்சாகம் வலுவடைந்தது.
3. 2010 ஆம் ஆண்டின் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்

எங்கள் பள்ளியில் இந்தாண்டு 11 மாணவர்கள் ஒன்றாம் ஆண்டில் பதிந்துள்ளனர். கடந்த வருடத்தைக் காட்டிலும் இவ்வாண்டு குறைவான பதிவே நடைப்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்திலிருந்து குடிப்பெயர்ந்து போனவர்கள் தற்பொழுது 5 வகையாக குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் குடும்பங்களிலிருந்துதான் இன்றளவும் மாணவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று பள்ளியின் முதல் நாள் என்பதால் ஆச்சரியமாக ஆர்.டி.எம் தொலைக்காட்சி நிறுவனம் எங்களின் மாணவர்களையும் பள்ளியின் தொடக்க நாள் நடவடிக்கைகளையும் பதிவு செய்து செய்தியில் காட்ட வந்திருந்தனர். ஒருசில மாணவர்கள் 11மணிவரை அழுது கொண்டேதான் இருந்தார்கள். வீட்டின் பிடிமானத்திலுருந்து புற உலகத்தின் வாசலில் வந்து நிற்கும் குழந்தைத்தனத்தின் முதல் பதற்றம். சிறுக சிறுக புற சக்திகள் அவற்றை விழுங்கி, எதார்த்தங்களை உற்பத்திக்கும். இதுதான் ஒன்றாம் ஆண்டின் மாணவர்களின் அகமாற்றங்கள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி

Friday, January 1, 2010

மணல் என்கிற விரக்தி அல்லது வெயிலின் பிம்பம்

மணலில் அப்படி என்ன செய்ய முடியும்? ஓடுவதற்குக் கூடுதலான முயற்சியும் சாமர்த்தியமும் வேண்டும், நடப்பதற்கு கொஞ்சம் நேரமும் பொறுமையும் வேண்டும், அமர்ந்து கொள்வதற்கு கொஞ்சம் இறந்தகாலத்தின் நினைவுகள் வேண்டும்.வெளிப்படையான நமது உடல் ரீதியிலான பலவீனங்களை மறைத்துக் கொள்வதற்கு, எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட சாகசங்களில் ஈடுபடவும் சிலர் மணலுக்கு வருவதுண்டு.


மணலின் நிலப்பரப்பில் கண்டடையும் எல்லாம் தோல்விகளும் ஒரு கவிதை போல கடந்துவிடும் அல்லது வாசிக்கப்படும் பின்பு கலையாகிவிடும். மனுஷ்ய புத்திரனின் மணலைப் பற்றிய ஒரு பிரபலமான கவிதை உண்டு. வாழ்வின் தருணங்களை அதில் நிகழும் அன்பின் புறக்கணிப்புகளை மணலைப் போல கற்பித்து மணலில் அவர் வரைந்திருக்கும் கவிதை பாராட்டுதலுக்குரியவை.

இங்கே எனக்குக் கிடைத்த சில புகைப்படங்களைத் தருகிறேன். இவர்கள் மணலில் செய்திருக்கும் சாகசம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. சமாதானம் அமைதி, வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்கள் என தொடங்கி அதன் பதிவுகள் உலக அரசியலின் குறியீடுகளையும் தீண்டுகிறது.


மணலை ஒரு விரக்தியென ஏதோ ஒரு கவிஞர் எழுதி வாசித்ததாக நினைவுண்டு. மணலை எதிர்க்கொள்ள கொஞ்சம் கூடுதலான சாமர்த்தியமும் சக்தியும் வேண்டுமென்பதால், அதை விரக்தியாக்கிவிட்டார்கள். சிலர் மணலை வெயிலின் கைகள் எனவும் சொல்வார்கள். அடிப்பாதங்களை எரிக்கும் நெருப்பு குழம்பின் துகள்கள் என எனது அறிவியல் ஆசிரியர் ஒருமுறை சொன்னதுண்டு.

இங்கே மணலை இவர்கள் ஒரு ஓவியமாக்கி இருக்கிறார்கள்.



மணலைப் பற்றிய ஒரு கவிதை

அத்துனை உரையாடல்களும்
முடிவடைகின்றன
காதல் மட்டும் தொடர்கிறது.
அன்பின் படிமத்தில்
வெயிலின் நிழல்
ஊர்கிறது ஒரு பெருங்காவியமென.

கே.பாலமுருகன்
மலேசியா

Tuesday, December 29, 2009

அவதார் – பழங்குடி மூதாதையர்களின் சொற்களும் அரசியலின் பிரமாண்டமும் (சினிமா)

“நிசத்தை நோக்கிய புனைவு ஆனால் லௌதிக யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவை இந்த அவதார்” -ஜேம்ஸ் கேமருன்

அவதார் சினிமா ஜனரஞ்சகமான முறையில் தொழில்நுட்பத்தின் அத்துனை பிரமாண்டங்களையும் பிரயோகித்து எடுக்கப்பட்ட காத்திரமான அரசியல் விமர்சனங்களுடன் அதிகார சக்திகளுக்கு எதிரான சினிமா என அடையாளப்படுத்த முடிகிறது. படத்தில் இடம்பெறும் அறிவியல் அணுமானங்களும் பிரயோகங்களும் வியக்க வைப்பதோடு அறிவியல் யுகத்தின் மாற்று பரிணாமங்களையும் பரிந்துரைக்கிறது. 11க்கும் மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளை வென்ற டைட்டாணிக் சினிமாவின் இயக்குனர் ஜேம்ஸ் கேமருன் அவர்களின் இயக்கத்தில் அமெரிக்காவின் அறிவியல் புனைவு திரைப்படமாக வெளிந்திருக்கும் இப்படம் 1994 தொடங்கியே 114 பக்கங்களுக்கு திரைக்கதை எழுதப்பட்டு கற்பனை செய்யப்பட்டவையாகும்.

கற்பனை ஆளுமை தமிழ் சினிமாவில் வரண்டு வரும் காலக்கட்டத்தில், இந்துத்துவ சொல்லாடலை முன்வைத்து “அவதார்” என்கிற பெயருடன் மாற்று உலகத்தின் பிரமாண்டங்களை அதிசயத்தக்கும் வகையில் கற்பனையின் உச்சங்களுடன் படைத்திருப்பது ஜேம்ஸ் கேமருன் அவர்களின் 10 வருடத்திற்கும் மேலான ஆய்வின் வெற்றியைக் காட்டுகிறது. எந்தத் திரைப்படமாக இருந்தாலும் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், பிராந்திய அரசியல் என்கிற ரீதியில் ஆய்வுச் செய்யப்பட்டு முழு தகவல்களையும் சேகரித்து எடுக்கப்படுபவையாக இருக்க வேண்டும்.

2154 ஆம் வருடத்தில் பண்டோரா எனும் நிலவு போல இருக்கும் கிரகத்தில் ஒரு மாபெரும் மரத்தில் வசிக்கும் நாவிஸ் எனும் பழங்குடியினரை அங்கிருந்து துரட்டியடித்து அந்த நிலத்தைக் கைப்பற்றுவதற்காக அறிவியல் தொழில்நுட்பங்களுடனும் இராணுவ படையுடனும் அங்கு நுழையும் மனித படைக்கும் அந்தப் பழங்குடிவாசிகளுக்கும் இடையே ஏற்படும் போராட்டம்தான் கதையின் மையம். அதிகார சக்திகள் தனது அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி எளிய மக்களின்/ பழங்குடி மக்களின் நிலத்தையும் உரிமையையும் பறிக்கும் செயலைக் கண்டிக்கும்/விமர்சிக்கும் வகையில் மாய யதார்த்த புனைவுடன் இப்படத்தின் கதை கையாளப்பட்டிருக்கிறது.

அந்தப் பழங்குடிவாசிகளுடன் பழகி அவர்களின் இருப்பையும் வாழ்வையும் புரிந்துகொண்டு அவர்களைக் கையாள்வதற்காக அவர்களைப் போலவே உருவம் கொண்ட (டி.என்.ஏ கலப்பின் மூலம்) தயாரிக்கப்பட்டு, இராணுவ வீரர்களின் மூளையின் செயல்பாடுகளை அந்த உடலுக்குள் செலுத்தி இயங்க வைக்கிறார்கள். நிச உடல் இங்கிருக்க மூளையின் செயல்பாடுகள் மற்றும் சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் இடம் மாற்றப்பட்டு, பழங்குடியைப் போல உருவம் கொண்ட நகலுக்குள் செலுத்தப்பட்டு, அந்தப் போலி பழங்குடிகளைப் பரிசோதனை முயற்சிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

படத்தின் கதாநாயகன் கால் ஊனமுடையவன். அவனுடைய மூளை அவனது புதிய உடலான பழங்குடி உடலுக்கு மாற்றப்படும்போது, தனது கால்கள் வேகமாக இயங்குவதன் அதிசயத்தையும் அனுபவத்தையும் கண்டு வியந்து தூரமாக ஓடி தனது புதிய சக்தியைக் கொண்டாடுகிறான். பிறகு காட்டில் சிக்கிக் கொள்ளும் அவன் அங்குள்ள வித்தியாசமான மிருகங்களால் தாக்கப்படும்போது இன்னொரு நிசமான நாவிஸ் பழங்குடியைச் சேர்ந்த பெண் ஒருத்தியால் காப்பாற்றப்பட்டு, அவர்களின் ஒருவனாக மாறும்வரை பல சோதனைகளைக் கடந்து வருகிறான். இறுதியில் அந்தப் பழங்குடியின் நிலத்தைப் பறிக்கும் அதிகார சக்திகளுக்கு எதிராக இயங்குவதன் மூலம், அவர்களில் ஒருவனாக தன்னை அங்கீகரித்துக் கொள்கிறான். இதைக் கண்டறியும் இராணுவ படைத்தளபதி அவனை மீண்டும் தன்னுடைய நிச உடலுக்குக் கொண்டு வந்துவிடுகிறான். அதையும் முறியடித்துக் கொண்டு அவன் மீண்டும் பழங்குடியின் உடலுக்குள் நுழைந்து அவர்களின் உரிமைக்காக அவர்களின் நிலப்பரப்புக்காக போராடி நாவிஸ் பழங்குடியின் தளபதியாக இயங்கி, இறுதியில் நாவிஸ் பழங்குடியாகவே நிலைப்பதன் மூலம் அவனது உயிர் புதிய அவதாரத்தை அடைகிறது. இதுவே கதையின் மிக எளிமையான சுருக்கம்.

நாவிஸ் பழங்குடியின் புனித மரத்தைப் பற்றிய தகவல் மிக அழகாக உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒட்டுமொத்த பழங்குடியின் இயக்கமும் இருப்பும் அந்த மரத்தின் தேவியான ஈவா என்பவளாலே தீர்மானிக்கபடுவதாகும், ஈவாவின் கண்களின் வழியாக இந்தக் காட்டையும் இந்த இயற்கையையும் காண வேண்டும் தரிசிக்க வேண்டும், அப்பொழுதே உயிர்களின் மகத்துவத்தை அடைய முடியும் என்றும் கற்பிக்கப்படுகிறது. மேலும் அந்தப் பழங்குடியின் தலை முடியின் சடையை அந்தப் புனித மரத்தின் தொங்கும் வேர்களின் நுனியில் இணைப்பதன் மூலமே ஈவாளுடன் நாம் நமது வேண்டுதலை முன்வைக்க முடியும். புனித மரத்தின் ஒவ்வொரு வேர்களிலும் அந்தப் பழங்குடி மக்களின் மூதாதையர்களின் சொற்கள் குரல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குரல்கள் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.

பழங்குடியின் காட்டை அழிக்க வரும் மனித படைகளைத் தகர்ப்பதற்காக ஈவாளின் ஆசியுடன் இயற்கையையும் இயற்க்கையின் வழி பெறப்பட்ட சக்தியையும் பயன்படுத்தி அவர்களைத் தோற்கடிப்பது மிகப் பிரமாண்டமான அரசியலை முன்வைத்து காட்டப்படும் புனைவாகவே பார்க்க முடிகிறது. தொழில்நுட்பத்திற்கும் மனித வேட்டைக்கும் இயற்க்கைக்கும் மத்தியில் நிகழும் இந்தப் போரின் அதிசயமே அவதார். இயற்கையின் மீது செலுத்தப்படும் அத்துமீறல்களையும் மனித அதிகாரத்தின் விரிவாக்க ஆக்கிரமிப்புகளையும் மிகவும் சாமர்த்தியமாக விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் புனைவை ஜேம்ஸ் கேமருன் துணிச்சலான சினிமா என்கிற வகையில் தந்திருப்பது அமெரிக்கா திரைஉலகத்தின் கமர்சியல் கட்டுமானத்தைக் கட்டவிழ்ப்பதாக அமைந்திருக்கிறது.

அந்தப் பழங்குடி பெண் ஒரு கட்டத்தில் சொல்லும் ஒரு வரி இன்னமும் மனதை நம் யதார்த்தங்களுக்கு வெளியே வைத்து நெளிய விடுகிறது.

“இந்த உடல், உயிர் இயற்கையிலிருந்து பெறப்பட்ட சக்தி, மரணம் என்பது அதைத் திரும்பி இயற்கையிடமே ஒப்படைக்கும் ஒரு சடங்கு”

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, December 24, 2009

சிறுகதை சிறப்பிதழாக : அநங்கம் மலேசிய இலக்கிய இதழ் (டிசம்பர் 2009)

சிறுகதைகள் :

1. யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள் - ஜெயந்தி சங்கர்
2. கோலா பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர் வரை -
முனிஸ்வரன் குமார்
3. சில இறுதி பக்கங்கள் - ஏ.தேவராஜன்
4. 6 - மாதங்கி (சிங்கப்பூர்)
5. பெண்மையை மறுதலித்தல் - சிதனா
6. ஏந்தல் - மஹாத்மன்
7. குறுக்கெழுத்து - ராஜம் ரஞ்சனி
8. தூண்டில் - எம்.ரிஷான் செரிப்
9. நாளை 9 மணிக்கு இறந்துவிடுவேன் - கஸ்தூரி சுப்ரமணியம்
10.நுகத்தடி - கமலாதேவி சிங்கப்பூர்
11.மனுசன் - சித்ரா ரமேஸ்
12.மிதக்கும் கனவுகள் - கோ.புண்ணியவான்
13.ஒரு அதிகாலையும் மணியம் பேருந்து கடன்காரர்களும் - 
      கே.பாலமுருகன்

கவிதைகள்:

பா.அ.சிவம்
ந.பச்சைபாலன்
இளைய அப்துல்லாஹ்
தினேசுவரி

பத்தி

சை.பீர்முகமது
அ.விக்னேசுவரன்
ஏ.தேவராஜன்

ஆசிரியர்:                   கே.பாலமுருகன்
துணை ஆசிரியர்: ஏ.தேவராஜன்
ஆசிரியர் குழு:       ப.மணிஜெகதீசன்
                                        கோ.புண்ணியவான்

Tuesday, December 22, 2009

மீள முடியாத பால்ய சித்திரங்களும் கார்ட்டூன்களின் மீதான வன்முறையும்

மின்னஞ்சலில் நகைச்சுவை சித்திரங்கள் வந்திருந்தன. குழந்தைகளின் விருப்பமான கார்ட்டூன்களின் கதாநாயகர்கள் 50 வருடத்திற்குப் பிறகு எப்படி இருப்பார்கள் என்கிற கற்பனையை மையமாகக் கொண்டு வரையப்பட்ட சித்திரங்கள் அவை. சூப்பர்மேன், பைடர்மேன், பார்பி டோல் போன்ற குழந்தைகளின் கதாநாயகர்கள் வயதான தோற்றத்துடன், தளர்வின் பிம்பமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தபோது ஒட்டுமொத்த பால்யத்தின் அதிசயங்களையே கேலி செய்வது போன்ற முயற்சிக்குரிய சித்திரங்களாகத் தெரிந்தன.

குழந்தைகள் தனது பால்யத்தைக் கடந்துவிடுகிறார்கள் ஆனால் குழந்தை பருவம் அப்படியே ஒரு விளையாட்டு மைதானம் போல அடுத்து வரும் குழந்தைகளின் இரைச்சல்களுக்காகவும் காலடி சப்தங்களுக்காகவும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது. இதுதான் பால்யம் என்கிற மாபெரும் கனவின் தரிசனம். எல்லோரும் சென்றடையக்கூடிய ஒரு பாதையின் சந்திப்பு, கடந்துவிட்டாலும் அவை ஒரு நினைவாக நமக்குள் பதிந்துவிடுகின்றன.

எனது குழந்தை பருவம் டோம் அண்ட் ஜெர்ரியின் துரட்டிப் பிடிக்கும், எவ்வளவு துரட்டியும் பிடிப்படாமல் தப்பிக்கும் ஜெர்ரியின் தப்பிதல் சாகசத்திற்கு நிகரானது. சிறு சிறு முயற்சிகளுக்குப் பிறகே மறந்துபோன எனது பால்ய நினைவுகளை மீட்டுக் கொண்டு வர முடிகிறது. டோம்மை போல அதிவேகமாக கடந்த காலத்தைத் துரட்டி பிடித்து சௌகரியமான புரிதலுக்குக் கொண்டு வரும்போது குழந்தையில் எனது கார்ட்டூன் கதாநாயர்கர்களும் உடன் வந்துவிடுவதுண்டு. அப்பொழுது நான் பார்த்த டோம்மிற்கும் ஜெர்ரிக்கும் வயதாகியதே கிடையாது. இன்னமும் அவர்கள் துரட்டிக் கொண்டும் ஓடிக் கொண்டும் தப்பித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.

“இந்த டோம் எப்பத்தான் ஜெர்ரியைப் பிடிச்சி சாப்டபோது?”
“இவ்ள கஸ்டப்பட்டும் அந்த ஜெர்ரியத்தான் சாப்டனுமா டோம்?”

சொற்கள் பால்யத்தின் மீதான படிமத்தில் அணை உடைந்து கட்டுக்குள் சிக்காத நீரைப் போல பாய்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் பால்யத்தின் சொற்கள் ஒழுங்கிற்கு எதிரானதாக தனக்கான சுவார்சயங்களை உற்பத்தி செய்துகொண்டே கடக்கின்றன. கார்ட்டூன்களை மிக கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் சொற்களை அவர்களின் அவதானிப்புகளை நீங்கள் பார்த்ததுண்டா? அவை நமக்கு ஒவ்வாத ஒரு வடிவத்தில் நகரக்கூடியவை. பெரியவர்களின் முதிர்ச்சி எப்பொழுதும் அந்தக் கற்பனைகளுக்கும் சொற்களுக்கும் விரோதமானதாகவே இருந்து வருகின்றன.

“அப்பா. . சூப்பர்மேன் இப்பெ வானத்துலதானே இருப்பாரு?”

கார்ட்டூன் கதாநாயகர்களின் ஸ்டிக்கர் படங்களைச் சேகரிப்பது, அவர்களின் சித்திரங்களைச் சுவரில் அரையும்குறையுமாக வரைந்து வைப்பது, கார்ட்டூன் மனிதர்களின் படம் வரைந்த தலையனை முதல் சட்டைவரை அணிந்து கொள்வது என குழந்தைகளின் உலகம் கார்ட்டூன்களானவை. அவை மீள முடியாத ஒரு பால்யத்தின் சொல் போல மிகவும் சக்தி வாய்ந்தவை. பெரியவர்களுக்கு மிக அற்பமாகத் தோன்றும் கனவுகளின் இலைகளால் பிண்ணப்பட்டவை அவர்களின் உலகம்.

மின்னஞ்சலில் வந்த இந்தக் கார்ட்டூன்களுக்கு வயதானால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை பெரியவர்களின் முதிர்ச்சிக்குரிய கேலியாக குழந்தைகளின் உலகத்தை அடியில் கீறிவிடுவது போல, அவர்களின் கனவுகளின் சிறகுகளை அபக்கறிப்பது போல மிகக் கொடுமையானதாகப் படுகிறது.

சூப்பர்மேன் தளர்ந்துவிட்டான் என்பதும், அல்லது பைடர்மேன் இறந்துவிட்டான் என்பதும் குழந்தைகளின் உலகம் தனது சுவார்சயங்களை இழந்துவிட்டதற்கான தொடக்கமாகும். அதே போல பால்யத்தைக் கடந்துவிட்ட பெரியவர்களுக்கும், கார்ட்டூன்களின் சித்திரங்கள் மீது செலுத்தப்பட்ட இம்மாதிரியான கிண்டலகளும் கேலிகளும் அவர்களின் குழந்தை பருவத்தின் நினைவுகளைச் சிதைப்பதற்கு நிகரான வன்முறையாகவே அவதானிக்க தோன்றும்.

எனது பழைய வீட்டில் என் அறை சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் கார்ட்டூன் ஸ்டிக்கர்களுக்கு வயதாகிவிடுவதில்லை. இன்னமும் அவைகள் எனது சுவரில் மிதந்து கொண்டிருக்கின்றன பால்யத்தின் மீள முடியாத கனவுகளாக.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                   மலேசியா

Friday, December 18, 2009

நீரின் மீதான துர்மரணம்

எப்பொழுதுமே மிதந்துகொண்டிருக்கின்றன
மரணத்தின் கைகள்
தனது விரல்களின் இடுக்குகளில்
மரணித்த மனிதர்களின்
முந்தைய அனுபவங்களுடன்.

இனி மீள முடியாத
ஆழத்தினுள் புதைந்துவிட்ட
மரணித்தவர்களின் புகைப்படங்கள்
ஒவ்வொன்றாக வேர்களின் பிடியிலிருந்து
தவறி வருகின்றன.


யாருமற்ற
மனித நடமாட்டங்களை நிராகரித்துவிட்ட
நீர்ப்பரப்பின் தனிமையிலிருந்து
நீராவிப்போல கணமிழந்து
வெளியேறுகின்றன
இறந்தவர்களின் கடைசி சில சொற்கள்.

மரணம்
தனது முகங்களைக்
கழற்றி எறிந்துவிட்டு
மௌனத்தின் உடலென
நெளிந்துக்கொண்டிருக்கின்றன
நிர்வாணமாக நிரந்திரமாக
சூன்யமாக.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Monday, December 14, 2009

கல்விமான் கு. நாராயணசாமியின் உரை- தமிழ் மொழி கவன ஈர்ப்புக் கூட்டம்

கடந்த சனிக்கிழமை தோட்ட மாளிகையில் நடந்த எசு.பி.எம் தமிழ் மொழி கவன ஈர்ப்புக் கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அதை வருகின்ற புதன்கிழமை அன்று கல்வி அமைச்சிக்குக் கொடுப்பதாக முடிவும் எடுக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டது போல பல சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் முக்கியமான பிரமுகர்களும் சமூக பிரதிநிதிகளாக இந்தப் பேரணியில் தங்களின் துணிச்சலான கருத்துகளை வெளிப்படுத்தினர். கல்விமான் கு. நாராயணசாமி அவர்களின் பார்வையில் இந்தப் பிரச்சனை எப்படி அணுகப்பட்டது என்று அவரது உரையின் சாரத்திலிருந்து பார்ப்போம்.

கு. நாராயணசாமி

எசு.பி.எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் மேற்கொண்டு இரு பாடங்களும் மதிப்பீட்டுக் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படாது என்கிற கல்வி அமைச்சின் அறிவிப்பு குறித்து பேசுகையில், அடிப்படையில் கல்வி பிரச்சனை என்று எடுத்துக் கொண்டாலே அது மாணவர்களின் பிரச்சனையாக அணுகப்பட வேண்டும். மொழி, இனம் குறித்த பிரச்சனைகள் மாணவர்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதை எல்லாம் தரப்பினரும் உணர வேண்டும். இப்பிரச்சனையை உணர்வுப்பூர்வமாக அணுகும் அதேவேளையில் அறிவுப்பூர்வமானதாகவும் விவாதிக்கப்பட வேண்டும்.

கல்வி என்பது எப்பொழுதும் மாற்றத்திற்கு உட்பட்டவை. எல்லாம் காலங்களிலும் கல்வி பல்வேறு மாறுதல்களை அடைந்தபடியேதான் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் கல்வியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் எப்பொழுதும் மாணவர்களை எவ்வகையிலுமே பாதித்துவிடக்கூடாது. கல்வி மாற்றங்கள் மாணவர்களின் ஆற்றலைப் பெருக்க வேண்டுமே தவிர அவர்களைக் நெருக்கடியான சூழலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாக்கக்கூடாது. இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பது போலவும் மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் வழிகளை அடைப்பது போலவும் வரையறுக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

சமூகத்தின் பிரச்சனை மாணவர்களின் பிரச்சனைகளாக மதிப்பீடப்படுவதன் மூலம் இப்பொழுது எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசாங்கம் முறையாகப் பதிலளிக்க வேண்டும். எதிர்காலத்தில் தங்களின் பிடித்த துறைகளை மாணவர்கள் தேந்தெடுக்கும்போது, அவர்களின் புள்ளிகளுக்குத் தகுந்தாற்போல பாடங்களையும் புள்ளிகளையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மாணவர்களுக்குக் கொடுங்கள் எனக் கூறிக் கொண்டு விடைப்பெற்றார் கல்விமான் கு. நாராயனசாமி.

-தொடரும்-

கே.பாலமுருகன்
மலேசியா

Sunday, December 13, 2009

தமிழ் மொழி & தமிழ் இலக்கியம் மீட்புக் குழு நடத்திய கவன ஈர்ப்புக் கூட்டம் - 1 (தாய்மொழியைத் தற்காப்போம் என்கிற எழுச்சிக் குரல்)

இன்று 12.12.2009 (சனிக்கிழமை) தோட்ட மாளிகையில் திட்டமிட்டப்படி எசு.பி.எம் தமிழ் மொழி & தமிழ் இலக்கியம் மீட்புக் குழு தலைமையில் பேரணி மிகச் சிறப்பாக எந்தத் தடையும் சலசலப்புமின்றி நடந்தேறியது. பேரணியில் பல இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துகளையும் சிந்தனைகளையும் தமிழ் மொழியை மீட்டெடுக்கும் எதிர்க்குரலாகப் பதிவுச் செய்தார்கள்.

1500க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு பேரணியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கையெழுத்துமிட்டனர். மீட்புக் குழுவின் தலைவரான திருவேங்கடம் அவர்களின் தலைமை உரையில் இந்திய சமூகத்தைப் பிரதிநதித்து வந்திருக்கும் சமூக ஆர்வளர்களையும் தமிழ் உனர்வாளர்களையும் வரவேற்றுப் பேசினார். மேலும் கல்வி அமைச்சு எசு.பி.எம் தேர்வில் 10 பாடம் என்கிற வரையறையைக் கொடுத்தமைக்கு அவர்கள் தெரிவித்த காரணத்தை விளக்கமாகப் பொதுமக்களுக்குத் தெரிவித்தார்.

1. ஜே.பி.எஸ் அரசாங்க கடனுதவி அமலாக்க முறைமையில் சிக்கல் ஏற்படுவதால்,(ஒரு மாணவர் 15 பாடங்கள் எடுத்து சிறப்புத் தேர்ச்சி - மற்றோரு மாணவர் 12 பாடங்கள் எடுத்து சிறப்புத் தேர்ச்சி என்பது) பொதுவாக 10 பாடம் என்கிற வரையறை சிறப்பாக இருக்கும் எனவும்

2.அதிகமான பாடங்கள் எடுப்பதால் மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது (முக்கியமான பாடங்களில் கவனம் செலுத்த இயலவில்லை)

மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்தத் திட்டத்தினால் தமிழ் கல்விக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் மொழி 10 பாடங்களுக்குள் இருந்தால் அங்கீகாரம் உண்டு அப்படி 10 பாடங்களுக்கு வெளியில் இருந்தால் அங்கீகாரம் இல்லை, இதென்ன கூத்து? வெறெங்கிலும் இப்படியொரு நிலைத்தன்மை இல்லாத சூழல் எந்த மொழிக்கும் ஏற்பட்டதில்லை என வருத்தத்துடன் கூறிக் கொண்டார். (சினிமா பாடல் ஒன்றில் வருவது போல, 10க்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு, அங்கீகாரம் உண்டா இல்லையா சொல்றேன் என்பது போல இருப்பதாகச் சொன்னார்)

மேலும் திருவேங்கடம் அவர்கள், ஒரு மதிநுட்பம் வாய்ந்த அமைச்சரவையில் இத்தகையதொரு குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது எனவும் கேள்வி எழுப்பினார். கலைத்துறை மாணவர்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஏ எடுத்திருக்கும் வேளையில் எந்தப் பாடத்தை 10க்குள் நுழைக்கப் போகிறார்கள், எதைத் தூக்கி வெளியே வீசப் போகிறார்கள்? ஏன் ஒரு சிறுபான்மை இனத்தவரின் மொழிக்கு இப்படிப்பட்ட இக்கட்டான நிலை? என கேள்வியுடன் தனது கருத்துகளையும் மீட்புக் குழுவின் நோக்கங்களையும் விளக்கினார்.

மேலும் பேரணியில் தமது கருத்துகளைத் தெரிவித்தவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:

1. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் : திரு.பெ.இராஜேந்திரன்

2. கல்விமான் கு. நாராயணசாமி

3. கோலாலம்பூர் தமிழர் சங்கத்தின் தலைவர் திரு.காரைக்கிழார்

4. மலேசிய தமிழ் அறவாரியத்தின் உதவி தலைவர்: திரு.பொன் ரங்கன்

5. மலேசிய இந்து சங்கம் சார்பாக திரு.பால தர்மலிங்கம்

6. சிவநெற கழகத்தின் தலைவர் திரு ஆறு. நாகப்பனார்

7. மலேசிய இந்திய இளைஞர் கழகத்தின் தலைவர் : திரு ராஜ ரத்னம்

போன்றவர்கள் பேசிய உரைகள் அடுத்த பதிவில் இடம்பெறும்.

-தொடரும்-

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, December 11, 2009

தமிழாசிரியர் சங்கமும் தலைமை ஆசிரியர் மன்றமும் எங்கே தங்களின் குரல்?

இந்திய இளைஞர் மேம்பாட்டுப் பேரவையின் தலைவரும் வாசகருமான தமிழ்வாணன் அவர்கள் எசு.பி.எம் தமிழ் மொழி பாட விவகாரத்தில் தமிழ் மொழிக்கான அங்கீகாரம் பெறும் போராட்டக் களத்தில் இன்னமும் வெளியே எட்டிப் பார்க்காத தமிழாசிரியர் சங்கங்களையும் தலைமை ஆசிரியர்கள் மன்றங்களையும் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்வி எனக்கும் எழுந்தது. தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தையும் உரிமையையும் பெறும் வகையில் இந்திய சமூகமே தமது தாய்மொழியைப் பாதுகாக்கும் பொருட்டு பலவகையான தற்காப்பு கருத்துகளையும் எதிர்க்குரலையும் பதித்தவாறே இருக்கையில், தமிழ் மொழியுடன் நெருக்கமான தொடர்புடைய தமிழாசிரியர் சங்கமும் தலைமை ஆசிரியர் மன்றமும் இன்னமும் கூட மௌனமாக இருப்பது பெருத்த அவமானத்தை ஏற்படுத்துகிறது.

என்ன நடந்தால் என்ன? சம்பளம் பெறப்போவது உறுதி என்கிற அலட்சியமா? அல்லது போராட நேர்ந்தால் பதவியும் வாய்ப்புகளும் பறிப்போய்விடும் என்கிற அச்சமா?

சிறுபான்மையின் உரிமைகள் ஒவ்வொருமுறையும் புறக்கணிக்கப்படும்போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுக்காதவர்கள் சமூகத்தின் து. . .கள் எனத்தான் அழைக்க வேண்டும். கொடியைத் தூக்கிக் கொண்டு சட்ட விரோத பேரணியின் ஈடுப்படச் சொல்லவில்லை. சாலை மறியலில் ஈடுப்பட சொல்லவில்லை. குறைந்த அளவில் தமிழ்வாணன் குறிப்பிட்டிருப்பது போல தங்களின் தற்காப்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான தரமான கருத்துகளையும் அனுமானங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே. இதுதான் சமூகத்தின் ஆதங்கம்.

ஒரு மொழிக்கு அரசியல் பின்னடைவுகள் வருகிறதென்றால் அதை உடனே களைய தொடர்புடையவர்கள் பெரும் அரசியல் சக்திகளாக கூட்டமைந்து தமது கருத்துகளை நாகரிகமான முறையில் எடுத்து முன்வைத்தால், அதைத் தடுப்பதில் முன்னேற்றம் காணலாம். செய்வார்களா? அல்லது இதுவும் வழக்கம் போலான அடித்தட்டு மொழி உணர்வாளர்களின் போராட்டமாக முடிவடைந்துவிடுமா?

செய்திப்படம்: மக்கள் ஓசை (11.12.2009)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, December 10, 2009

தேர்வு பாடங்களா கட்டாய பாடங்களா? எதை எடுப்பது? எதை விடுவது?

அரசியல் விழுமியங்களின் விளிம்பு மதிப்பீடுகளாக தற்போதைய சிறுபான்மை இனத்தின் தாய்மொழி தற்காப்பு உணர்வு மேலோங்கி அதிகார மையங்களை நோக்கி புதிய அனுமானங்களையும் கருத்துகளையும் பதிவு செய்தவாறே இருக்கின்றன.

எசு.பி.எம் தேர்வில் எந்தப் பாடத்தை எடுப்பது எந்தப் பாடத்தை விடுவது என்கிற உச்சமான மன உளைச்சல் இனி எதிர்காலங்களில் உருவாகும் வகையில் புதிய தீர்மானங்கள் தனது எல்லையை விரித்துள்ளன. எதை எடுப்பது எதை விடுவது என்ற கேள்வியே தமிழ் மொழியை(இந்தியர்களின் தாய்மொழி) விழுங்குவதற்கு ஆயிரம் நாக்குகள் என காத்துருப்பது போன்ற தொனியைக் கொண்டுருக்கிறது.

இனி புதிய விவரங்கள்:

அறிவியல் பிரிவுக்கான கட்டாயப் பாடங்கள்:

1. தேசிய மொழி
2. ஆங்கிலம்
3.கணிதம்
4.வரலாறு
5. நன்னெறிக் கல்வி (மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு)
6.பௌதிகம்-அல்லது
7.ரசாயணம்
8.உயிரியல்-அல்லது

தேர்வுப் பாடங்கள்

1. அறிவியல்- தொழில்நுட்பப் பாடத்திற்கான ஆங்கிலம்
2. கூடுதல் கணிதம்
3. கணக்கியல்
4. பொருளாதாரம்
5.வாணிபம்
6. தமிழ் மொழி
7. தமிழ் மொழி இலக்கியம்
8. பூகோளம்

கலைப் பிரிவுக்கான கட்டாயப் பாடங்கள்

1. தேசிய மொழி
2. ஆங்கிலம்
3. கணிதம்
4. வரலாறு
5. பொது அறிவியல்
6. நன்னெறிக் கல்வி (மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு)

தேர்வுப் பாடங்கள்

1. அறிவியல்- தொழில்நுட்பப் பாடத்திற்கான ஆங்கிலம்
2. கூடுதல் கணிதம்
3. கணக்கியல்
4. பொருளாதாரம்
5. வாணிபம்
6. தமிழ் மொழி
7. தமிழ் மொழி இலக்கியம்
8. பூகோளம்
9.கலைத்துறை

அமைச்சரவையின் புதிய தீர்மானமான எசு.பி.எம் மாணவர்கள் 12 பாடங்கள் வரை எடுக்கலாம் ஆனால் மொத்த புள்ளி கணக்கெடுப்பில் 10 பாடங்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படும் மேலும் கூடுதலான் இரு பாடங்கள் எதிலுமே சேர்த்துக் கொள்ளப்படாது. இவற்றில் பெரிய சிக்கல் என்னவென்றால் மாணவர்கள் எதை அந்த இரு கூடுதல் பாடங்களாக எடுத்து விரையம் செய்யப் போகிறார்கள் என்பதுதான். இந்தத் தேர்வு ரீதியிலும் பள்ளியின் நிர்வாகத்தின் தலையீடும் அடங்கியிருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

ஒரு சில பள்ளிகள் தேர்வு பாடங்களான சிலவற்றை மாணவர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற விதியை வைத்திருப்பது ஆரோக்கியமற்ற விடயமாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக கலைப் பிரிவு மாணவர்கள் கட்டாயப் பாடமாக 6 பாடங்கள் எடுக்க வேண்டும், இப்பொழுது கூடுதலாக அவர்கள் 4 பாடங்கள் எடுக்கலாம். அந்த 4 தேர்வுப் பாடங்களில் பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் பொருளாதாரம், வாணிபம், பூகோளம், கலைத்துறை போன்றவற்றைக் கட்டாயம் எடுக்க வேண்டும் என்கிற விதியை வைத்திருப்பதால், மாணவர்கள் அதையும் எடுத்தாக வேண்டும். ஆக மொத்தம் தமிழும் தமிழ் இலக்கியமும் இல்லாமல் 10 பாடங்கள் ஆகிவிட்டன. இனி அந்தத் தமிழ் பாடமும் தமிழ் இலக்கியமும் இரு கூடுதல் பாடங்களின் வரிசையில் வந்துவிட்டால், அது அலட்சியத்திற்க்குரிய பாடமாக எந்த மதிப்பீடும் இல்லாமல் தேங்கி நின்றுவிடும். நமது தாய்மொழிக்கு இந்த நிலைமை வர வேண்டுமா?

எசு.பி.எம் தமிழ் மொழி இலக்கியப் பாட மீட்பு குழு நடத்தும் :

கவன ஈர்ப்புக் கூட்டம்
நாள்: 12.12.2009 (சனிக்கிழமை)
இடம்: தோட்ட மாளிகை
நேரம்: காலை மணி 10

இன்றைய தினத்தில் இந்திய மக்கள் ஒன்றாக இனைந்து அரசாங்க சார்பற்ற இயக்கங்களுடன் இந்த மாற்றங்கள் குறித்தும் எதிர்க்கால அரசியல் விளைவுகள் குறித்தும் மீண்டும் தமிழுக்கு வலு சேர்க்கும் தீர்மானங்கள் குறித்தும் ஒரு மிகப் பெரிய கலந்துரையாடலை நடத்தவுள்ளது. தமிழ் ஆர்வளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிக்கவும்.

நன்றி: மக்கள் ஓசை நாளிதழ்(10.12.2009)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா