Friday, September 4, 2009

சரியாக இசை கேட்பது பற்றியான உயிர்மை விவாதங்களை முன் வைத்து ( இசை ஒழுங்குகளின் உச்சமும் பாமரர்களும்)

கடந்த உயிர்மை 3 இதழ்களிலும் இசை கேட்பதன் இலச்சணங்கள் குறித்து அதன் தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதைக் வாசித்தேன். ஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகள் பலவிதமான அனுபங்களையும் இசை குறித்த மரபறிவை கடந்த அணுகுமுறைகளையும் கற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம். ஷாஜியின் முழு தொகுப்பையும் தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கு மலேசியாவில் அது கிடைப்பதற்கான சாத்தியங்களை இன்னமும் கண்டறியவில்லை. முழு தொகுப்பையும் வாசிக்கும்போது ஒட்டுமொத்தமான இசையைப் பற்றிய விரிவான பார்வையும் பயிற்சியும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

மே உயிர்மை இதழில் பிரசுரமான சாருவின் ‘யுவன் சந்திரசேகருக்கான பதில்” கட்டுரையில் மிகவும் கவர்ந்த இசையைப் பற்றியான பல்வேறு புதிய தகவல்களையும் அதன் இணையத்தள இணைப்புகளையும் கொடுத்திருந்தார். இசையைப் பற்றி ஆரம்ப அறிவுள்ள பலருக்கு மேற்கத்திய, தமிழ்நாட்டைக் கடந்த, பூளோக வரையறைகளைக் கடந்த இசைகளை அறிமுகப்படுத்தும் என்பதிலிருந்து இசையின் பாமர இரசனை குறியீடுகளை உடைத்தெறியும் என்றே கருதுகிறேன்.

கடந்த 6 வருடமாக ரஹ்மான் இசைகளைக் கேட்டு வருகிறேன். அவர் பயன்படுத்தும் இசை கருவிகள், அதன் பயன்பாடுகள், எந்த இடத்தில் எந்த இசைக் கருவியை எவ்வளவு நேரம் பாவிக்கிறார் மேலும் அவரின் இசை குழுவில் உள்ளவர்களின் ஆளுமைகளை எப்படி ரஹ்மான் முக்கியத்துவப்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார் என்று மட்டுமே கவனித்துள்ளேன். அதுவும் அரைகுறையாகத்தான். எடுத்துக்காட்டாக ரஹ்மான் இசையில் வெளிவந்த இந்திய தேசியப் பாடலான “ஜனகனமன” பாடல் ஆகும். பல பன்மொழி இசைகலைஞர்களையும் இசை கருவிகளின் ஆளுமைகளையும் ரஹ்மான் இணைத்துள்ளார். பாலைவன பிரதேசத்தின் பின்னனியில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்களையும் இசை கலைஞர்களையும் ஒன்றாக இணைத்து, ரஹ்மான் கடற்கரை பாறையின் மீது நின்றுகொண்டு பியானோ வாசிக்கும்பொது ஒரு நிமிடம் அழுது கரைந்து அந்த இசையில் சரணடைந்துவிடுகிறேன்.

பிரபல பாடகர்களான லதா மங்கேசஷ்கர், பட்டமல், பிம்ஷேன் ஜோஷி, டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, ஜக்ஜித் சிங், உஷ்தாட் ரஷ்சிட் கான், சுருதி சடோலிக்கார், உஷ்தாட் குலாம், சுதா ரகுநாதன், பாலசுப்ரமணியம், ஹரிஹரன், ஆஷா போஷ்லே, கவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னிகிருஷ்ணன், நித்யா மேலும் இசை ஆளுமைகளான புல்லாங்குழல் ( ஹரி பிரசாத்) , சரோட் ( உஷ்தாட் அம்ஜாட், அமான் அலி, அயான் அலி) , கடம் ( விக்கு விநாயக்ராம், உமா சங்கர்) , வீனை (விஷ்வ மோஹன் பாட்), சித்ரவீனை ( ரவிகிரன்), சித்தார்( பண்டிட் கார்த்தி குமார், நிலாட்ரி குமார், வைலின் (குமரேஷ், கணேஷ்) என்று பல இசை கலைஞர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவாக தேசிய பாடலைக் கேட்கும்போது ஆரம்ப இசை இரசனையாளர்களின் உடல் சிலிர்த்து வைக்கும். இசையைப் பற்றி ஆழமான நுட்பமான விரிவான அனுபவமும் பயிற்சியும் இல்லாதவர்களுக்கு இப்படி உடல் சிலிர்த்து இரசிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியபோவதில்லை.

சாரு குறிப்பிட்டது போல இசை கேட்கும் இலச்சணங்கள் குறித்து பொதுவில் எல்லோர் மேலும் வீசுவது, அல்லது பூளோக வரையறை தாண்டாத இசை பைத்தியங்கள் மீது வீசுவதோ எந்த அளவிற்கு ஏற்புடைமை என்று பார்க்க வேண்டியிருக்கிறது. துறை சார்ந்த சொல்லாடல்களைப் பயன்படுத்தி சாரு அவர்கள் பல இசை மேதைகளைப் பற்றியும், அந்த இசை நுட்பங்களைப் பற்றியும் எந்த மாதிரியான இசைகளைக் கேட்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். அது அவரின் இசை குறித்தான தேடலையும், அக்கறையையும் காட்டுகிறது. இருக்கட்டும். வாசிக்க தெரிந்த இசை ரசிகர்கள் அவரின் அக்கறைகேற்றவாறு மொராக்கோவையோ, அசிங்கத்தின் தொட்டிலையோ, ராய் இசையையோ கேட்டறிந்து உணரலாம், இதுவரை கேட்டு வந்த அடித்தட்டு “சுரண்டலின் மன்னன்” தேவாவின் இசையை ஒப்பிட்டு காரி உமிழலாம். ஆனால் பாமரர்கள் என்று பல மேதாவிகளால் வகைப்படுத்தப்படும் படிப்பறிவு இல்லாத மக்களிடம் எப்படி இசை குறித்த உங்களின் ஆளுமைத்தனங்களைப் புகுத்த போகிறீர்கள்? எனக்கு தெரிந்த இங்குள்ள(மலேசியாவில்) ஒரு ஊரில் முன்பொரு காலகட்டத்தில் இளையராஜாவைத் தாண்டாத ஒரு மக்கள் கூட்டம் இருந்தது. அதைப் பற்றி ஒரு சிறுகதையே எழுதலாம்.

அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பத்து டுவா என்று சொல்வார்கள். 9 வயதுவரை நானும் அங்குத்தான் இருந்தேன். மலாய்க்காரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. தமிழர்கள் ஒரு 30 குடும்பங்கள் அங்கு வசித்தனர். எல்லோர் வீட்டிலும் காலையில் இளையராஜாவின் ஏதாவது ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் அப்பொழுது வானொலி இல்லாததால் ஓசியிலேயே இளையராஜாவின் பாடலை (எந்தவித இசை குறித்தான அறிவும் இல்லாதவனாக) கேட்பேன். நாங்கள் காலையில் பள்ளிக்குக் கிளம்ப துவங்கும் அதிகாலை பொழுதிலே ஏதோ ஒரு வீட்டில், “சென்பகமே சென்பகமே” பாடல் சத்தமாக ஒலிக்கத் துவங்கும். மிகவும் குறுகிய பூளோக வரையறையைக் கடக்காத மக்களின் இரசனை இலையராஜாவின் இசையாகவே இருந்தது.

8 மணிநேர தொழுற்சாலை வேலை முடிந்து, ஒரு இயந்திரத்திற்கு நிகராக நேர்த்தியான இயக்கங்களுடன், சலிப்பூட்டும் கருவிகளுடன் இருந்துவிட்டு வீடு திரும்பும் அவர்களின் உலகை (எந்தவித இசை நுட்பமும், பயிற்சியும் அற்றவர்களான) மகிழ்ச்சிப்படுத்தியது, நிம்மதியை ஏற்படுத்தியது, களைப்பை மறக்கடித்தது தமிழ்நாட்டு கலாச்சார இசைவெளியைக் கடக்காத இளையராஜாவின் இசைத்தான். இது வரலாற்றுக் குற்றம் என்றும், முட்டாள் மக்களின் அறிவின்மை என்றும் பாமரத்தன இசை அனுபவம் என்றும் சில கிறுகெடுத்த ஆளுமைகள் வகைப்படுத்தலாம். தவறில்லை. தொழிலாளர்களால் ஆன (பெரும்பான்மை மலாய்க்காரர்களோடு அடிமைத்தனமான சமரசங்களுக்கும் ஆளாகி) இந்த நிலப்பரப்பில் வாழ்ந்திருந்தால், அவர்களின் வாழ்வை அந்த வாழ்வில் அவர்கள் கேட்டுப் பழகிய ஒரு இசையை அந்த இசை கேட்கும் இலச்சணங்களை என்னனென்று சொல்ல வேண்டும் என்று புரிந்திருக்கும்.

இன்று அந்தக் குடியிருப்பு மக்கள் புலம்பெயர்ந்து நகரத்தில் சிதைந்துவிட்டார்கள். ஆளுக்கொரு திசைகளில் வாழ்வு மாற்றம் ஏற்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தற்செயலாக அவர்களின் யாரேனும் ஒருவர் வீட்டிற்குப் போனாலும், இன்னமும் இளையராஜா பாடலை அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் மடத்தனமா? அல்லது பெரிய பெரிய இசைக்கருவிகளில் பாடல் கேட்காத அவர்களின் இழப்புகளா?குற்றமா? நீங்கள் சொல்லும் இசை பயிற்சிகள் ஒரு பொது புத்தியென நிறுவுவது இன்னமும் தனது இசைக் கலாச்சாரத்தில் ஊறிப் போன, அதிலிருந்து அவர்களை மீட்க முடியாத சாத்தியங்களுடன் அதுனூடே வாழ்ந்து ஒன்றாகிவிட்ட ஒரு சமூகத்த்தினரையோ அல்லது ஒரு வகையினரையோ புறகணிப்பதாகக் கருதப்பட வாய்ப்புண்டு.

சாரு சொல்வதைப் போல பன்மொழி, கலாச்சார இசைகளைக் கேட்டு இரசிக்கும் அல்லது பழகும் ஆற்றலும் வாய்ப்பும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குச் சாத்தியப்படும். ஆனால் அதே வேளையில் இந்த வாய்ப்பு கிட்டாமலே இசைக் கேட்பதை வாழ்வின் ஒரு அனுபனமாகவே கருதி இன்றும் அதிலிருந்து வெளிவராத சிலரை “இசை பயிற்சியில்லாத முட்டாள்கள்” என்று சொன்னால், அவர்களை(அப்படிச் சொல்பவர்களை) எதைக் - - - - - - - - - - - - - - - - - - - - - - - சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் ஒரு சிலர் இசை கேட்பதை ஒரு பொழுது போக்காக பாவிக்கிறார்கள். வாழ்வின் ஒரு தருணமாக, அதிசயமாக இசை கேட்பதை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த இசைக் கேட்கும் வாழ்வனுபத்தில்கூட, “பயிற்சி” , வழிமுறை” என்று சொல்லி அவர்களை பயமுறுத்துவது போலவே தோன்றுகிறது. மனிதன் இன்னமும் சுதந்திரமாகச் செய்யக்கூடியவையாக அவனவனின் பொழுது போக்குகளைத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் பயிற்சி, ஒழுங்கு, என்று சொல்லி வைத்தால் எல்லாவற்றிலும் தேர்ச்சிப் பெற்ற தேர்ச்சிப் பெறாத என்கிற அளவுகோல்கள் வந்து சிலரை முட்டாளாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இசையைப் பற்றி தெரிந்து கொள்வதும் இசையைப் பற்றி உரையாடுவதும் என்றுமே தவறென சொல்ல முடியாது. இசையை வெறும் நுகர்வு பொருளாகப் பார்க்கும் மனிதர்களும் நியாயமானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இசை பல்வேறு மனிதர்களால் பலவகையில் புரிந்து கொண்டும் அனுபவிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அந்த நிதர்சனத்தில் தற்போதையை “இசை ஒழுங்குகளை” கொண்டு அவர்களை இசைபாமரர்கள் இசை ஆளுமைகள் என்று வகைப்படுத்துவதுதான் அறியாமை என்று நினைக்கிறேன்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Thursday, September 3, 2009

90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்

அண்மையில் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கும்/ வாசித்துவிட்ட சில குறிப்பிடத்தக்க நாவல்கள் இவை. அநேகமாக மறுவாசிப்பின்றி கவனிக்கப்படாமல் போய்விட்ட நாவல்களாக இவை இருக்கலாம். மீட்டுணர்தல் – மறுவாசிப்பு புதிய களங்களை உற்பத்திக்கும்.

1.மஞ்சள் வெளி
எழுதியவர்: சி.ஆர்.ரவீந்திரன்

தமிழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, குறிப்பாக இனக்குழு என்று அறியத்தகும் சமூகத்தை, அதன் பழக்க வழக்கங்களை சித்தரிக்கும் முறையில் சில பதிவுகளுடன் “மஞ்சள் வெளி” குறவர் சமூகத்தின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். பாப்பாத்தி என்கிற கதாபாத்திரத்தின் வழியே மார்க்சியமும் ஒரு வகையில் இந்தக் குடும்பத்தில் ஒரு நீருற்றுப் போல குடும்பத்தின் அகப்பண்போடு முரண் இன்றிக் கலக்கிறது.

எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் : கொங்கு நாட்டுத் தமிழில் விளைந்த செங்கரும்புப் படைப்பாளி. எனினும் பிற சமூகங்களைப் பற்றிய நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

2.வெயில் மழை
எழுதியவர்: சி.ஆர்.ரவீந்திரன்

மலைப் பிஞ்செனக் கல்லுடைக்கும், மலையைப் பிளக்கும், சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கையைத் தனக்கே உரிய பாசாங்கற்ற நடையில் கனமாக இந்நாவலில் படைத்துள்ளார்.
3.தொலைந்து போனவர்கள்
எழுதியவர்: சா.கந்தசாமி

எளிய நடை, கூடிய மட்டிலும் குறைவாக எழுதும் இயல்பு. தான் வியக்காமல் பாத்திரங்களைப் படைக்கும் திறமை. மனோபாவங்களாலான மனிதர்களைப் புலப்படுத்தும் கதை. பால்ய காலத்திலிருந்து பிற்காலத்திற்கு நீண்ட பாதையில் ஓரிடத்தில் இணையும் நினைவுகளின் நுட்பத்தைக் கதை விரிவாக்குகிறது. தொலைந்தவர்களின் இருப்பு பலமாக கனக்கிறது கதாபாத்திரிங்களில்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

சிறுகதை: தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்

கொஞ்சம்கூட பிசிறில்லாத பளிங்கு கற்கள் வெறித்துக் கிடக்க, நவீன கழிவறை மிக நேர்த்தியான ஒழுங்குடன் கண்ணாடி தரை படர பெரிய சவாலாக இருந்தது. மெதுவாக பாலித்தின் கதவைத் தள்ள வேண்டும். ஒரே மையத்தில் போய் குவிந்து கொள்கின்ற கதவு. மீண்டும் இழுத்தால் பழைய நிலைக்கே வந்து கழிவறையை மூடிக் கொள்ளும். இதை இழுத்து உள்ளே நுழையவே சிரமமாக இருந்துவிடுகிறது. சடசடவென ஒரு சத்தம் வேறு. உள்ளே நுழைந்து கதவை உள்தாழ்ப்பாள் போடுவதற்குள் வயிற்றிலிருந்து கழிவு கீழே ஒழுகிவிடும் போல. கொக்கி போல ஒன்று, அதை வலது பக்கமாக நகர்த்தி கொக்கியின் வாயை மற்றுமொரு இரும்பில் சொருக வேண்டும். பல சமயங்களில் கொக்கி அந்த இரும்பில் சிக்கிக் கொள்ளாமல் பாதியிலேயே நின்றுவிடும் அதைக் கவனிக்கத் தவறும் கணங்களில் கதவை மூடாமலேயே வேட்டியைக் கழற்றி கழிவு தொட்டியில் ஏறி அமர்ந்து கொள்வேன். அப்படியொரு அலட்சியமாக இருந்துவிட்ட பொழுதில்தான் வீட்டிலுள்ளவர்களுக்குப் பல மாதங்களாக நான் அனுபவித்த மலப் போராட்டத்தைப் பற்றித் தெரிய வந்தது.

“ஐயோ. . அம்மா! தாத்தாவே பாரு. . கசம் கசம்!”



“ஏண்டா கத்தறே! என்னாச்சி?. . அட ஆண்டவா!”

பேரன் கதவைத் தள்ளியதும், அரைகுறையாக இரும்பைப் பற்றியிருந்த கொக்கி டமாரென்று விலகி, வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது என் மல சமாதியை. தரையிலிருந்து 2 அடி உயரத்திற்கு எழுந்து வாய் பிளந்து நின்றிருந்த கழிவுத் தொட்டியில் ஏறி மேலும் உயரமாக அமர்ந்து கொண்டு இருந்த என் கோலத்தைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.

“என்ன மாமா? இப்படி உக்காந்துருக்கீங்க? அட ஆண்டவா!”

அவ்வளவு விரைவாக உயரமான கழிவுத் தொட்டியிலிருந்து இறங்கிவிட முடியாது. பக்கத்திலிருக்கும் நீர்த் தொட்டியின் விளிம்பைப் பிடித்துக் கொண்டுதான் ஒவ்வொரு காலாக தரையில் இறக்கி நிமிர வேண்டும். மருமகளும் பேரனும் பார்த்துக் கொண்டிருக்க அவிழ்ந்த வேட்டியுடன் தடுமாறிக் கொண்டிருந்த என் உலகம் அன்றுதான் வெடித்து சின்னாம்பின்னமாக மலம் போல ஒழுகிப் போனது.

“ஒன்னுமில்ல. . நீங்க போங்க! ஐயோ. .”

வாயிலிருந்து வார்த்தைகள் நீர்ப் போல சலசலவென ஒடிந்து விழுந்தன. வேட்டியை மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு கதவைப் படாரென்று அடைத்து மூடினேன். தரையில் நீர் கொத்து அங்குமிங்குமாகத் தேங்கியிருந்தன. கால் தொடையில் ஏதோ பிசுபிசுவென ஒட்டிக் கொண்டிருந்தது. குனிந்து கீழே பார்த்தேன். மல நீர் கால் முட்டிவரை வந்து ஒழுகிக் கொண்டிருந்தது. அசௌகரிகம். அதன் மொத்த சுயரூபத்தையும் இந்தக் கழிவறையில் தினமும் சந்தித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் சாப்பிட்டப் பிறகு தினக் கடமையாக இந்தக் கழிவறைக்குள் நுழைய வேண்டும் என்று ஏற்படும் அட்டவனை சுழற்சி அச்சுறுத்தலாக இருக்கின்றது.

மருமகள் வெளியில்தான் நின்று கொண்டிருந்தாள். என் மூத்த மகனுடன் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதும் நன்றாகவே கேட்டது.

“என்னாங்க! கதவெ சாத்தாமே உள்ளே போய்க்கிட்டு இருக்காரு. யாராவது வந்தா என்னா ஆவும்? மானமே போய்டும் போல இவரே வச்சிக்கிட்டு. எப்படி உக்காந்திருந்தாருனு பாத்திங்கனா மயக்கமே போட்டு விழுந்துருவீங்க”

“இப்பெ யேன் இத பெருசா பேசிக்கிட்டு இருக்கெ? எப்படி உக்காந்தாரு?”

“தொட்டி மேல அதை வச்சுத்தானே உக்காரனும். இவரு அதுக்கும் மேல ஏறி கால வச்சி உக்காந்து போறாரு. . பல தடவெ நான் டொய்லேட் கழுவும் போது பாத்திருக்கேன், அந்தத் தொட்டி இடுக்குலலாம் பீ இருக்கும். . அப்பயே சந்தேகமா இருந்துச்சிங்க”

“சரி விடு! சொல்லிக்கலாம்”

மனம் படபடவென துடித்துக் கொண்டிருந்தது. கழிவறைக்குள்ளே அபாரமாக எரிந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். குளியலறையில் எங்கோ ஏதோ ஓர் இடத்திலிருந்து நீர் ஒழுகும் சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. வெளியே சென்றால் இவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டும். அந்தத் திராணி அற்றுப் போயிருந்தது. உடல் முழுக்க அறுவறுப்பான ஒரு பிம்பம் நெடித்து வளர்ந்து பேயோசையாக எனக்குள் சரிந்து கொள்வது போல திக்பிரமை.

“ப்பா! ப்ப்பா! வெளிய வாங்க”

வேட்டியைச் சரி செய்துவிட்டு, செயற்கையாக ஏதோ முனகிக் கொண்டே கதவை மெல்ல அதன் இரும்பு தாழ்ப்பாளிலிருந்து விலக்கினேன். எதிரில் மகன் என்னை மேலேயும் கீழேயும் பார்த்துக் கொண்டிருந்தான். வேட்டியின் நனைந்திருந்த பகுதியை உற்றுப் பார்த்துவிட்டு நெருங்கினான்.

“யேன் ப்பா. . எப்படி உக்காந்து நீங்க டொய்லேட் போறிங்க? இது மேல கால் வச்சா உக்காருவாங்க? என்னா இது? நல்லா தாராளமா இப்படி இது மேல உக்காந்துகிட்டு போலாமே? இப்படித்தான் போய்கிட்டு இருக்கிங்களா?”

“அட போடா! எப்படி வசதி வருதோ அப்படித்தான் போவ முடியும். .”

அங்கிருந்து மெல்ல அகன்றேன். மகனின் ஆத்திரமான குரல் பின் தொடர்ந்தது. அதைச் சட்டை செய்து கொள்ளாதது போல பயத்தை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.

“ப்பா.. நீங்க உங்க இஸ்த்ததுக்குச் செய்யாதீங்க. புரியுதா? அது அந்த மாதிரி உக்காந்து போற தொட்டித்தான். அதுலே போய் கால் வச்சி ஏறி உக்கார முடியாது. வீணா போயிறும். நீங்க உயரமா உக்காந்துக்கிட்டு போறதுனாலே பீ கீழலாம் வந்து விழுந்துருது. யேன் இப்படிப் பண்றீங்க?”
அவனுடைய சொற்கள் எங்கோ தூரத் தேசத்து பாலைவனத்தில் நீருக்காக அலைந்து கொண்டிருப்பது போன்ற விரக்தியில் உதிர்ந்து கரைந்தன. அதன் கரைதலில் அக்கறை இல்லாதவன் போல் முனகல் தீராத பாவனையுடன் கண்களை இறுக மூடிக் கொண்டு உறங்க முயன்றேன். பறி போய்விட்ட தன்மானத்தைச் சரிக்கட்டிக் கொள்ள இதுதான் சரியான முயற்சியாக இருக்கக்கூடும். இங்கு வந்ததிலிருந்து எல்லாமே செயற்கையான வாழ்வுதான். மலம் கழிப்பது முதல் எல்லாக் கடமைகளும் ஒழுங்குத் தவறாமல் பிறர் விருப்பப்படிதான் நடக்க வேண்டும். நான் எனக்காக வாழ்ந்து பல நாட்களாகிவிட்டிருக்கும் போல. யாரோ எப்பொழுதும் என் முதுகில் சாட்டையால் அடித்து வழிநடத்துவது போல உணரப்படுகிறது. எனக்குள் இவ்வளவு காலம் இயங்கிக் கொண்டிருந்த உந்து சக்தி வலுவிழந்து ஏதோ ஒரு பொழுதில் இந்தக் கழிவறை போராட்டத்தில்தான் காணாமல் போயிருக்கக்கூடும்.

“அபார வெளிச்சம்! கண்ணுலாம் கூசுது! ஏறி இந்தப் பீ தொட்டியில உக்காரனும், காலுலாம் நோவுது! தொட்டியோட விளிம்புல காலெ வச்சி உக்காந்து முக்கனும். ஒரு பக்கம் கால் நழுவிட்டா தொட்டியோட வாயில டமார்னு விழுந்து பிட்டம் ரெண்டா உடைஞ்சிருமோனு பயம், இன்னொரு பக்கம் பின்னாலேருந்து பீ கீழே உழுந்துருமோனு பயம், கண்களெ கூசும் வெளிச்சம் தலைக்கு மேல விரிஞ்சி கிடக்க அப்பத்தான் தொடை சுளிர்னு வலிக்கும். கீழே எறங்கி காலெ நல்ல உதறிட்டு மீண்டும் மேல ஏறி உக்காந்து உயிரோட போராடனும்!”

தோட்டத்தில் இருந்த காலம்வரை எல்லாமும் சரியாகத்தான் நிகழ்ந்தன. நில அடுக்குகளில் நிமிடத்திற்கு ஒரு மாற்றம் ஏற்படுவது போல வாழ்க்கை அடுக்குகள் அவ்வப்போது தன்னை மாற்றியமைத்துக் கொள்கின்றன. அப்பா தங்கவேலு இரப்பர் காட்டில் வேலை செய்தவர். ஏணி கோட்டில் வேலை செய்யும்போது ஏணியிலிருந்து சரிந்து விழுந்து இறந்து போனார். அப்பாவின் அந்தத் துர் மரணத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் கூடவே அந்த அதிர்ச்சியும் கிளர்ந்துவிடும். வலியில் துடிதுடித்து மரணம் தொடும் தொலைவில் இருந்தபோது அவருக்கே தெரியாமல் அவர் மலம் கழித்திருக்கிறார். பிணத்தை அள்ளும்போது அப்பாவின் சிலுவாரில் மலம் ஒழுகியிருந்ததைப் பார்த்தேன்

“அட கடவுளே! கொண்டு போய்ட்டியே! ப்பா! ப்பா!”

அந்த மலத்தைப் பார்த்தவுடன்தான் உள்ளுக்குள் உறைந்திருந்த அதிர்ச்சியும் சோகமும் கிளர்ந்து வெளியேறின.

“எப்ப மனுசன் உடம்புலேந்து அவனுக்கே தெரியாம மலம் வெளிவருதோ அப்பவே அவன் பாதி பொணமா ஆயிட்டானு அர்த்தம்”

என் அப்பா தங்கவேலு அடிக்கடி யாரிடமாவது இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். தோட்டத்தில் அப்பாவுக்கென்று ஒரு மலக்கூடம் இருந்தது. எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே அந்த மலக்கூடத்தைப் பயன்படுத்த முடியும்.

தங்கவேலுவின் 10-எண் மலக்கூடத்தைப் பற்றிய கதை

பிரிட்டிஸ்காரர்கள் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட மலக்கூடங்கள்தான் என் வீட்டு லயத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வரிசைப்பிடித்து நின்று கொண்டிருப்பது. நாள் முழுக்க யாரையாவது அந்த மலக்கூடங்களில் பார்த்துவிடலாம். தகரக் கதவைத் திறந்தபடியும் மூடியபடியும், கையில் தகர வாளியுடன் அந்தச் சின்ன மேட்டில் ஏறியபடியும் இறங்கியபடியும் யாரையாவது அடிக்கடி அங்கே பார்க்கலாம். காலையில் எல்லோரும் பிரட்டுக்குப் போகும் முன்னே முதலில் மலக்கூடத்திற்குப் போய்விட்டு வருவார்கள். காலையில் 6மணிக்கு மரப்பத்திகளுக்குச் செல்பவர்கள் 5 மணிக்கே எழுந்து மலக்கூடத்திற்குப் போய்விட்டு வருவதுதான் வழக்கம். 6 மணியாகிவிட்டால் மலக்கூடங்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் சோம்பல் உற்சாகம் என்று கொஞ்ச நேரத்தில் மலக்கூடத்தின் முன் சலசலப்பு தொடங்கிவிடும். மலக்கூடத்திலிருந்துதான் காலை பொழுது விடியும். அங்கிருந்துதான் அன்றைய நாள் தொடங்கும் என்றுகூட சொல்லலாம்.
அப்பா தங்கவேலு காலையில் 4.45 போல எழுந்து அரிக்கன் விளக்கை எரியவிடுவார். அதைத் தூக்கிக் கொண்டு மெல்ல எழுந்து முன் கதவைத் திறக்கும்போது தோட்டமே அகால இருளில் உறங்கிக் கொண்டிருக்கும். இரவு பூச்சிகளின் சத்தமும் ஓய்ந்திருக்காது. பால் வாளியை எடுத்து சிறிது நேரத்திற்கு உருட்டிக் கொண்டிருப்பார். அதில் வைக்க வேண்டிய பொருட்களையெல்லாம் எடுத்து நேர்த்தியாக அடுக்கி வைத்துவிட்டு முன் வாசலில் போடப்பட்டிருக்கும் வாங்கில் அரிக்கன் விளக்கை வைத்துவிட்டு அமர்ந்து கொள்வார்.

“அவளுக்கென்ன உறங்கிவிட்டாள். . அகப்பட்டவன் நான் அல்லவா”

“பகவானே மௌனமேனோ. . இது யாவும் உன் லீலைதானோ?”

ஏதாவது பழைய பாடலைப் பாடிக் கொண்டு சுருட்டு புகைத்துக் கொண்டிருப்பார். இருளின் மௌனமான நகர்தலில் அப்பாவின் சுருட்டுப் புகை ஆவியைப் போல படர்ந்து மறையும். உள்ளே உள்ள பாயில் படுத்துக் கொண்டே அப்பாவின் காலை நேரத்து அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் என்னுடைய காலை பொழுதின் மிகப் பெரிய கடமையாக இருந்தது. பிறகு அரிக்கன் விளக்கின் நிழலில் அப்பா எழுந்து நிற்பது தெரியும். விளக்கைத் தூக்கிக் கொண்டு அவருடயை உருவம் மெல்ல காணாமல் போகிறது என்றால் அப்பா மலக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அந்த வரிசையில் மொத்தம் 10 மலக்கூடங்கள் இருந்தன. அதில் அப்பாவுக்கென்று ஒரு மலக்கூடம் இருந்தது. 10 ஆம் எண் மலக்கூடம் அப்பாவிற்குச் சொந்தமாகி 2 வருடம் இருக்கலாம். அப்பா தோட்டத்தில் முக்கியமான ஆள் என்பதாலும் வெள்ளைக்காரர்கள் மத்தியில் அவருக்குக் கொஞ்சம் செல்வாக்கும் இருந்தபடியால் ஒரு மலக்கூடம் அவருக்கு இலவசமாகச் சொத்துடமையாக்கப்பட்டிருந்தது. அப்பாவும் நானும் அம்மாவும் அக்காளும்தான் அந்த மலக்கூடத்தைப் பயன்படுத்துவோம். பட்டணத்திலிருந்து பெரியப்பா, மாமா இப்படி யாராவது வந்தால் அப்பா அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பே மலக்கூடத்தைக் கழுவி சுத்தம் செய்துவிடுவார்.

ஆரம்பத்தில் யாராவது திருட்டுத்தனமாக அப்பாவின் மலக்கூடத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பா பத்திக்குச் சென்றவுடன் மேட்டு லயத்தில் இருக்கும் ஆட்கள் 10 ஆம் எண் மலக்கூடத்தில் நுழைந்து பயன்படுத்திவிட்டுப் போய்விடுவதுண்டு. அப்பா திரும்பி வரும்போது மலக்கூடத்தின் கதவு வாய் பிளந்து திறந்து கிடக்கும். யாராவது வந்து பயன்படுத்தியிருந்தால், அப்பா அதைக் கண்டுபிடித்துவிடுவார். சுத்தமாகக் கழுவிவிடாமல் அவசரத்தில் அப்படியே போட்டுவிட்டுப் போயிருப்பார்கள். குழிக்கு மேலாக மலம் நிறைந்து கிடக்கும். எல்லோருக்கும் கேட்கும்படியாகவே கத்திக் கொண்டே அப்பா அதைச் சுத்தப்படுத்தத் தொடங்கிவிடுவார்.

“எந்த நாசமா போற ஜென்மம்னு தெரில, பேண்டுட்டு கழுவாமே போயிருக்கு! என்னா ஜென்மங்களோ? நாத்தம் கொடலெ புடுங்குது. . கம்பிய சுத்தி வச்சி சாத்திட்டுப் போனாலும் பேத்துக்கிட்டு வந்து பீயெ போட்டுட்டுப் போறானுங்க”

அப்பா மலக்கூடத்தின் கதவிற்குப் பக்கத்திலுள்ள சட்டத்தில் அடிக்கப்பட்ட ஆணியில் கம்பியைச் சுற்றி இறுகக் கட்டியிருப்பார். தகரக் கதவில் ஓட்டையிட்டு அதில் கம்பியைச் சொருகி கட்டுவதற்கு இலகுவாகச் செய்தும், அப்பாவால் அந்த மலக்கூடத்தைத் தனி சொத்தாகப் பாதுகாத்து வைத்திருக்க முடியவில்லை. இப்படித்தான் தினமும் காவலாளியைப் போல காலையில் விடிவதற்கு முன்பே எழுந்து வீட்டிலிருந்தவாறே அதிகாலை இருளில் மலக்கூடங்களுக்கு அமைதியில் ஊர்ந்து வரும் ஆட்களின் நடமாட்டங்களைக் கவனித்துக் கொண்டேயிருப்பார். யாராவது 10 ஆம் எண் மலக்கூடம் பக்கமாகச் சென்றாலோ அல்லது அதன் கதவை அசைத்துப் பார்க்க முயன்றாலோ அப்பா இங்கிருந்து கொண்டே கத்துவார்.

“டே! நுழைய பாக்கறானுங்கடா. . தொலைஞான் கைய வச்சானா”

பிறகு 10 நிமிடத்திற்கு மலக்கூடத்தின் அருகிலேயே நின்று கொண்டு வருபவர் போவோரை எச்சரிக்கையுணர்வுடன் பார்த்துக் கொண்டே காவலிருப்பார். அப்பாவிற்கு இது ஒரு தனிசுபாவமாகவே மாறியிருந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்பவர்கள் யாராகினும் அப்பாவிற்கு அவர்களின் நடத்தையில் சந்தேகமும் அதிருப்தியும் தொற்றிக் கொள்ளும். ஏற இறங்க அவர்களைப் பார்த்துவிட்டு கையில் வைத்திருக்கும் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்து முகத்தை அடையாளம் காண்பார்.

“யாரு, துரைசாமி பையனா? காலைலே வயித்த கலக்கிருச்சி போல? பாத்து. அங்குட்டு உள்ள கொட்டாயெ பாய்ச்சிக்க”

“வாடா அம்மா கண்ணு பேரனா? எப்பவும் இந்த நேரத்துக்குத் தூங்கிட்டுக் கெடப்ப? இப்ப என்னா புது பழக்கம்? ஆங்ங்ங். . அங்குட்டு போ. . சுத்தமா வச்சிக்கங்கடா. .”

அங்குள்ள 10 மலக்கூடங்களுக்கும் தான் மட்டும்தான் கங்காணியாக இருக்க முடியும் என்கிற பாவனையும் எண்ணமும் அப்பாவிற்குள் வந்துவிட்டிருந்தது. அரிக்கன் விளக்குடன் குட்டி வெளிச்சத்தைப் பரப்பி அந்த அதிகாலை இருளிலும் கங்காணித்தனம் காட்டிக் கொண்டு அவ்வப்போது 10 ஆம் எண் மலக்கூடத்தின் கதவைத் திறந்து உள்ளேயும் பார்த்துக் கொள்வார். அம்மாவிற்கு எப்பொழுதும் அப்பாவின் இந்தப் பழக்கம் குறித்து அதிருப்திதான். சில சமயங்களில் அம்மாவும் அப்பாவுடன் பெரட்டுக்குச் செல்வதற்காகக் கிளம்பி வீட்டின் முன்னாலேயே காத்துக் கொண்டிருப்பார். அப்பா மலக்கூடத்தைச் சரிபார்த்துவிட்டு வருவதற்குள் அம்மாவிற்கு கோபம் உச்சந்தலையில் ஏறியிருக்கும்.



“யேங்க! உங்களெ என்னா அல்லூர் கூட்டியாவா போட்டுருக்காங்க? அங்குட்டே ஒரு கொட்டாயெ கட்டி படுத்துக்குங்க! எப்ப பாத்தாலும் அந்தச் சாமான் கொட்டாய்லே கிடக்குறீங்க. என்ன ஜென்மமோ?”

“நம்பளோட அசிங்கம்லாம் அங்கத்தான் இருக்கு! அசிங்கத்தெ தாங்கறெ கடவுள் தெரியுமா? வீடு மாதிரி பாத்துக்கனும். என்னா பேசறே? கொஞ்சம் உட்டுட்டா நாசமா ஆக்கிருவானுங்க”

“என்னமோ பண்ணுங்க! உலகத்துலே இல்லாத கொட்டாய்தான்”

அப்பா எந்தச் சலனமுமின்றி மல்லாந்து பார்த்து நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பார். அவரின் உலகம் அப்பொழுதுதான் விழிக்கத் துவங்கும். தனது உயிரை 10 ஆம் எண் மலக்கூடத்தில் ஒளித்து வைத்துவிட்டு மரத்திற்குக் கிளம்பத் தயாராவார். அதற்குப் பிறகு அம்மா அப்பாவைத் திட்டும் போதெல்லாம் அல்லுர் கூட்டி அல்லூர் கூட்டி என்று சாடித்தான் பேசுவார். அல்லூர் கூட்டி என்றால் எங்கள் தோட்டத்தில் மலக்கூடங்களைச் சுத்தம் செய்வதற்கே உள்ள பணியாள். அந்த அல்லூர் கூட்டி இரு தினங்களுக்கு ஒரு முறை மலக்கூடங்களைச் சுத்தம் செய்ய வந்துவிடுவார். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான நேரம் இங்குதான் இருப்பார். அப்பா கண்களில் அவர் சிக்கிவிட்டால் அல்லூர் கூட்டிக்குப் பாதி உயிர் போய்விடும்.

“அதெ நல்லா அள்ளு! இங்க கொஞ்சம் அழுத்திக் கூட்டு! குழி நெறைஞ்சிருச்சி பாரு! எவன் பேண்டு வச்சதோ! அங்க பாரு. தகரத்துலே ஒட்டிருக்குப் பாரு! நல்லா கூட்டு”

அல்லூர் கூட்டியின் பொழுது அன்று முழுவதும் விடியாமல் இருந்துவிடும். அப்பாவின் அதட்டலில் மலக்கூடங்கள் அனைத்தும் கால்கள் இருந்திருந்தால் எழுந்து ஓடியே போயிருக்கும். அப்பாவும் அல்லூர் கூட்டியுடன் சேர்ந்து கொண்டு மலக்கூடங்களில் புகுந்து சுத்தப்படுத்தத் தொடங்கிடுவார். வீட்டிலிருந்து வாளிகளையும் எடுத்துக் கொண்டு போய்விடுவதால் அம்மா ஒருபக்கம் கத்திக் கொண்டிருப்பார். வாளியில் நீரை அள்ளி ஒவ்வொரு கூடமாக ஊற்றிக் கொண்டே வர அல்லூர்கூட்டி குனிந்து நிமிர்ந்து குழிகளின் ஓரம் தேய்த்துச் சுத்தப்படுத்திக் கொண்டே வருவார். தோட்டத்திலுள்ளவர்கள் அப்பாவை இரண்டாவது அல்லூர் கூட்டி என்றே பெயர் வைத்துக் கூப்பிடத் தொடங்கிய காலக்கட்டத்தில்தான் எனக்குப் பெருத்த அவமானம் ஏற்படத் துவங்கியிருந்தது.

வங்காளி ரொட்டிக்காரர் முதல் சீன அப்பே வரை எல்லோரும் அல்லூர் கூட்டி மகன் அல்லூர் கூட்டி மகன் என என்னையும் சேர்த்துக் கூப்பிடத் தொடங்கினார்.


நானும் 10ஆம் எண் மலக்கூடத்தின் காவலாளியாக மாறிய காலம்

முதன் முதலாக நான் 10 ஆம் எண் மலக்கூடத்தின் காவலாளியாக மாற்றப்பட்ட தினம் அப்பா பெரட்டுக்குப் போகாத ஒரு தினத்தில்தான். காய்ச்சலால் பாயிலேயே சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். சரியாகக் காலை மணி 6 இருக்கும், என்னைத் தட்டியெழுப்பினார்.

“டே! அங்குட்டு நின்னு கொட்டாயே பாத்துக்கடா. எவனாது கம்பிய நெம்பி கதவ தெறக்கறானுங்களானு. நைசா உள்ள புகுந்துருவானுங்க ஆள் இல்லனா. இங்குட்டே நின்னு பாத்துக்க”

வெளியில் வந்து நின்றேன். தோட்டத்திலிருந்த மரங்களிலிருந்து அப்பொழுதுதான் சிறு அசைவு ஏற்படத் துவங்கியிருந்தது. மெல்ல சோம்பலை அகற்றி வாங்கில் அமர்ந்து கொண்டே மலக்கூடங்களைப் பார்த்தேன். ஒரு சில கதவுகள் திறந்தபடியும் மற்றும் சில மூடியபடியும் அகால இருளில் அப்பாவைப் போலவே மௌனமாக சைகை காட்டி பேசுவது போலவே தோன்றியது.

தூரத்திலிருந்து பார்க்க மலக்கூடத்திலிருந்து யாரோ வெளியேறுவதும் உள்ளே நுழைவதுமாக ஒரு பிரமை தட்டியது. கண்களை விரித்து பார்க்கையில் அங்கு யாரும் இல்லை. மணிகுஞ்சி அண்ணனுடைய பேரன்தான் ஏதோ ஒரு பாடலை முனகிக் கொண்டே 8 ஆம் எண் மலக்கூடத்தில் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார். அவருடைய பாடல் வரிகள் கதவுக்கு அடியிலிருந்து மெல்லிய ஓசையாக மாறி வெளிவந்து கொண்டிருந்தன. அந்த அண்ணன் பழைய பாடலைப் பாடுவதில் கெட்டிக்காரர். ரம்மியமான இசையை அவர் வாயிலேயே எழுப்பிக் கொண்டு காலைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். வானம் விடிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் படர ஆரம்பித்தது. அப்பா உள்ளேயிருந்து கொண்டு மீண்டும் முனகினார்.

“டே. . அப்படியே அங்குட்டு போய் பக்கத்துலே நில்லுடா. . சுத்தம் முக்கியம்டா. எவனாவது உள்ள புகுந்துருவானுங்க. போ”

அப்பாவின் குணத்தை நினைத்தால் விசித்திரமாகவும் அதே சமயம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது. காலை பனி முதுகில் பளார் என்று அறைய, மெல்ல நடந்து மலக்கூடம் பக்கமாக சென்றேன். பனி இன்னமும் உலாவிக் கொண்டுதான் இருந்தது. மலக்கூடங்களின் கதவுகளில் பனி ஊர்ந்து ஒழுகிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு மலக்கூடத்திற்கு நடுவிலும் பலகை தடுப்பு இருந்தது. எழுந்து நின்று பார்த்தால் பக்கத்து கொட்டாயின் தடுப்பும், ஆள் அமர்ந்திருந்தால் அவரின் தலையும் நன்றாகத் தெரியும். ஏதாவது பேசிக் கொண்டும் பலகை தடுப்பைத் தட்டி ஓசையை எழுப்பிக் கொண்டும், வெளியிலிருந்தபோது பேசாமல் விடப்பட்ட விஷயங்களும் என்று உரையாடல்கள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தோட்டம் விடிந்ததும் மலக்கூடங்கள் பேசத் தொடங்கிவிடும்.

தோட்டத்திற்குள் நிலவும் பிரச்சனைகள், ஒழுக்கம் தவறவிட்ட மனிதர்களின் இரகசியங்கள், தோட்டத்துப் பள்ளிக்குப் புதியதாக வந்திருக்கும் ஆசிரியர்களைப் பற்றி, பால் கொட்டாயில் நடக்கும் வாய்ச் சண்டைகள் என்று மலக்கூடங்களில் அமர்ந்திருப்பவர்களின் வாயிலிருந்து இவையாவும் சொற்களாக மாறி கதவுக்கடியிலும் பலகை தடுப்பு சுவர்களிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆள் அரவமற்ற பொழுதுகளில் அந்தப் பக்கமாகப் போகும்போது யாரோ பேசிக் கொண்டிருப்பது போலவே தோன்றும்.

ஒவ்வொரு மலக்கூடமும் பாடுவதைப் பற்றியும் பேசிக் கொண்டே இருக்கலாம். பிழையான இராகத்திலிருந்து தொடங்கும் பாடல்கள் முதல் கேளியான பாடல், பாதியிலே நிறுத்தப்பட்ட பாடல், காதல் பாடல், சிவாஜி படத்தின் பாடல்கள் என்று மாறுபட்ட தொனியில் முக்கிக் கொண்டு குரலைத் தளர்த்தியபடி யாராவது பாடிக் கொண்டே இருப்பார்கள். வானொலியில் ஒழுங்கில்லாமல் இடறி விழும் நிலையங்களின் குரல்களைப் போல காலையிலேயே மலக்கூடத்தில் பல நிலையங்கள் உற்சாகமாக இயங்கத் தொடங்கியிருக்கும். அப்பாவும் ஏதாவது பாடலைப் பாடிக் கொண்டேதான் உள்ளே இருப்பார். 10 நிமிடத்திற்கு மேலாகப் பாடல் உச்சம்வரை போய்க் கொண்டிருக்கும். எங்காவது பாடலின் வரி பாதியிலேயே நிற்கும்போது அப்பா தன் கடமையை முடித்துவிட்டார் என்று அர்த்தமாகும்.

“டெ! ஒழுங்கா ஜாகா பாத்துக்க கொட்டாயெ! புரியுதா?”

அன்று முதல் என்னையும் அறியாமல் 10 எண் மலக்கூடத்தின் மீது சொந்தம் கொண்டாட ஆரம்பித்துவிட்டேன். வீட்டிற்கு வெளியில் வந்ததும் பார்வையையும் கவனத்தையும் 10 ஆம் எண் கதவின் மீது குவித்து ஆள் நடமாட்டத்தைக் கண்கானிப்பேன். இது வழக்கமாக மாறத் துவங்கிய காலம், நானும் அப்பாவைப் போல அல்லூர்கூட்டியைப் போல ஆகியிருந்தேன்.

மதியத்தில் மலக்கூடங்களில் நடக்கும் அதிசயங்கள்

மதியம் 12 மணிக்கு மேற்பட்டு மலக்கூடங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். மலக்கூடத்திற்கு மேலேயுள்ள திறப்பு வெயிலைச் சுளிரென உள்ளே இறக்கிக் கொண்டிருக்கும். வெயில் உள்ளே புகுந்து அனலாக எறிந்து கொண்டிருப்பதால் அந்தச் சமயங்களில் அதிசயமாக யாராவது வந்துவிட்டுப் போவார்கள்.அவ்வளவுதான்.

காற்று மெல்லிய வேகத்தில் கிளம்பி வேகத்தை அதிகரிக்கும்போது 4ஆம் எண் கொட்டாயின் கதவு சொந்தமாகத் திறந்து கொண்டு பக்கத்திலிருக்கும் சுவருடன் டமாரென்று மோதிக் கொள்ளும். இது எப்பொழுதும் நடக்கும். மதியத்தில் அந்தப் பக்கமாக வீசும் காற்று நான்காம் எண் கதவை எதற்காகவோ பயன்படுத்திக் கொள்கிறது. தூரத்திலிருந்தாலும் இந்தக் கதவின் ஓசை மதியத்தை ஞாபகப்படுத்திவிடும்.

“எவனோ அங்க இருக்கான்! ஒளிஞ்சிகிட்டு என்னவோ வேலைப் பண்றானுங்க”

“எவன்னு தெரியலே! யேன் அடிக்கடி சரியா 12மணிக்கு மேல அந்தக் கதவு சொந்தமா சாத்திகிறதும் திறந்துகறதும்?”

“அது காத்தா இருக்கும், இருந்தும் அது யேன் சரியா அந்த நேரத்துக்கு மட்டும் தினமும் இப்படி நடக்குது? என்னமோ இருக்கு”

தோட்டத்தில் அந்தச் சம்பவத்தைப் பற்றிய அனுமானங்கள் பரவத் துவங்கியிருந்தன. எல்லோரும் அதைப் பற்றியே பேசிக் கொள்ளத் துவங்கினர். அதன் பிறகுதான் மதியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலக்கூடங்கள் மனிதர்களை இழக்க நேரிட்டது. வீட்டின் முன்பக்க கால்வாயின் ஓரம் மிகவும் கதகதப்பாக இருக்கும். அங்கிருந்து பார்த்தால் மலக்கூடம் மிக அருகாமையில் தெரியும். மதியத்தில் அங்கு அமர்ந்து கொண்டு மலக்கூடத்தின் கதவுகளையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

அதே ஆண்டில்தான் சிவராமன் அண்ணன் 6ஆம் எண் மலக்கூடத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அந்தச் சம்பவம்தான் எல்லோரையும் தோட்டத்திலிருந்த மலக்கூடங்களின் மீது பீதியைக் கிளப்பிவிட்டது. எப்படி அவர் இறந்து போனார் என்ற எவ்வித தடயமும் இல்லாமல் நிகழ்ந்த அந்த மரணத்தின் இரகசியம் அந்த 6ஆம் எண் மலக்கூடத்திற்கு மட்டுமே தெரியும். பலகை தடுப்பில் தலை சாய்த்து கால்கள் இரண்டும் சம்மனமிட்டப்படி சிலையாகக் கிடந்தார். நகரத்திற்கு எடுத்துக் கொண்டு போய் என்னமோ ஆராய்ச்சியெல்லாம் நடத்தியும் மரணத்திற்கான காரணங்கள் எது என்றே யாருக்கும் தெரியவில்லை, அறிவிக்கப்படவும் இல்லை.

“6ஆம் நம்பர் கொட்டாய்லே, யாரோ முக்கிக்கிட்டு இருக்கற சத்தம் கேக்குது. ரொம்ப நேரமா அந்த சத்தம் இருக்கு. ஆனா உள்ள ஆளு இல்லடா.”

“சரியா போச்சி! சிவராமன்தான் உள்ள இருக்காண்டா. . இங்கத்தானே செத்துப் போனான். . உள்ள அவன்தான்”

“5 ஆம் நம்பர் கொட்டாய்லெ உக்காந்துகிட்டு இருக்கும்போது பக்கத்துலே சிவராமனோட குரலே கேட்டன்டா. . ஏதோ பாட்டுப் பாடறே குரலு! அவன் குரல்தான். . வந்ததும் உள்ளயெ போச்சி போ!”

அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் ஆள் அரவம் முற்றிலுமாக மதிய நேரத்தில் அறுந்து போய்க் கொண்டிருந்தது. காலையில் உற்சாகத்துடன் மலக்கூடத்திற்கு ஓடும் ஆட்கள் மதியத்தில் அந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்கமாட்டார்கள்.

அப்பாவின் மலக்கூடம்

“மாமா! மாமா! ஏஞ்சிருங்க. . பண்றதையும் பண்ணிட்டு. . தூக்கம் வேற. . வயசாய்ட்டா இப்படித்தான் போல”

கண் இமை கனமாக இருந்தது. யாரோ அருகில் நின்று என்னையே உற்றுக் கவனிப்பது போல இருந்தது. அவர்களின் சுவாசம் என் காதுகளில் கேட்கிறது. அவர்கள் பாடுகிறார்கள். எங்கோ தொலைவில் யாரோ கதவைத் திறக்கும் ஓசையும் கேட்கிறது. அனேகமாக அது தகரக் கதவாகத்தான் இருக்க முடியும்.

“டெ! நல்லா பாத்துக்கடா! எவனாவது உள்ள நுழைய போறான்”
“அப்பா! அப்பா!”

கண்களை மெல்ல திறந்தேன்.மகன் கணேசன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். குளிரூட்டி மென்மையான சத்தத்துடன் வரவேற்பறையில் இறங்கிக் கொண்டிருந்தது.

“உங்களுக்கு யேன் எங்கள மாதிரி உக்காந்து போக முடியலெ தொட்டியில? இந்த மாதிரி பண்ணிங்கனா, அது உடைஞ்சிறும்! எல்லாரும் அது மேலத்தான் உக்காந்து போவாங்க. நீங்க அதுக்கும் மேல கால வச்சி. .. யேன் அசிங்கம் பண்றீங்க? உங்களுக்கு நான் பிளாஸ்ட்டிக் தொட்டி தனியா கடையில விக்குது, அதெ வாங்கித் தர்றேன். . அதுல போயி பழகுங்க!”

வெளியே இருளத் துவங்கியிருந்தது. மகனும் மருமகளும் எங்கோ கிளம்பி வெளியே போய்விட்டிருந்தனர். வயிறு சத்தம் போட்டது. அவசரமாக அவிழ்த்து விட வேண்டும். கழிப்பறையைப் பார்த்தாலே அந்த உயரமான கழிவுத் தொட்டி எழுந்து நின்று முகத்திற்கு நேராகக் கையைக் குவித்து குத்துக் காட்டுவது போலவே தென்படுகிறது. கதவைத் திறந்து வெளியே வந்தேன். வீட்டிற்கு வெளியே இருள் முனகிக் கொண்டிருந்த சத்தத்தில் யாரோ பேசுவதும் மென்மையாகக் கேட்டது.

“நம்பளோட அசிங்கத்தே காக்கற கடவுள் மாதிரிடா அது! சுத்தமா வச்சிக்கனும்.. சுத்தமா இருந்தாதான் வசதியா போக முடியும்!”

“மனசனுக்கு எப்ப அவனுக்கே தெரியாம மலம் வெளிவருதோ அப்பயே அவன் பாதி செத்துட்டாண்டா”

அப்பா மீண்டும் மீண்டும் இதையேதான் உச்சரித்துக் கொண்டிருப்பார். அழ வேண்டும் என்று தோன்றியது. உள்ளுக்குள் இருந்த இறுக்கம் அதிகமாகி அப்படியே கீழே அமர்ந்து கொண்டேன். வேட்டியிலிருந்து மலம் ஒழுகியிருந்தது. அப்பா அவருடைய 10 ஆம் எண் மலக்கூடத்தைத் தூக்கிக் கொண்டு கனவு தேசத்தினூடாக ஓடி வந்து கொண்டிருந்தார். வாழ்வு எங்கோ மீதமிருக்கிறது.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
thanks uyireluttu magazine

மீண்டும் சந்திப்போம்

என்னுடைய சிறுகதை, கவிதைகள் என் “கதைகளும் கால்களும்/கவிதைகளும்”

http://balamurugankathaigal.blogspot.com/

எனும் வலைப்பூவில் தொடர்ந்து வாசிக்கலாம். நன்றி அன்பார்ந்த நண்பர்களே.
சந்திப்போம்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Tuesday, September 1, 2009

சரியாக காலை 08.05க்கு பள்ளியின் எதிர்புறத்தில் தாக்கப்பட்டேன் (உண்மை சம்பவம்)

காலையில் பள்ளிக்குச் சென்றதும், 8.00மணி போல ஓர் ஆசிரியரும், தோட்டக்காரரும் என்னை யாரோ இருவர் தேடி வந்திருப்பதாகக் கூறினர். வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன். ஒருவர் மோட்டாரில் அமர்ந்திருக்க மற்றொருவன் அருகில் பின்புறமாக திரும்பி நின்றுகொண்டிருந்தான்.

பள்ளியில் பணியில் இருக்கும் ஆசிரியரைச் சந்திக்க சில சட்டத்திட்டங்கள் உண்டு. தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும், பதிவு புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும். இதை ஏதும் செய்யாமல் ஏன் மறைவாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகத்துடன் நெருங்கிச் சென்றேன். இது என் மிகப் பெரிய தவறு. அப்படி சென்றிருக்கக்கூடாது.

திரும்பி நின்றவன் தலையில் கவசம் அணிந்திருந்தான், ஆனால் முகம் தெளிவாக தெரிந்தது. என்னைப் பார்த்ததும் தோளில் கையைப் போட்டு, “உங்களிடம் தனியாக பேசனும் அப்படி வாங்க” என்றான். “நீங்க முறைபடித்தான் சந்திக்கனும்” என்று சொல்லி முடிப்பதற்குள் “புளோக்ல பாத்து எழுது / புளோக்ல எழுதாதெ” என்றவாறு தலையின் இடதுபுறம் ஓங்கி ஒரு குத்துவிட்டான். சுதாரிப்பதற்குள், பள்ளியின் தோட்டக்காரர் சத்தம் போட்டு, பிற ஆசிரியர்கள் வெளியே ஓடி வருவதற்குள் மோட்டாரில் தப்பி ஓடிவிட்டான். எதிர்ப்பாராத விதத்தில் நடந்ததால் அந்த மோட்டாரைத் துரட்டிப் பிடிக்க வேண்டும், அல்லது அடியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிற எந்த பிரக்ஞையும் ஏற்படவில்லை. (மோட்டாருக்கு எண்கள் இல்லை) என்னை அவன் அடித்தத்தைப் பள்ளியில் இருவர் நேரடியாகப் பார்த்தனர்.

அவனைப் பார்த்ததும் அவன் யாரென்று தெரிந்துவிட்டது. அவனது கண்களும், அவனது உயரமும், முகமும், ஏற்கனவே எனக்குப் பரிச்சியமானது. மூன்றுமுறை பார்த்திருக்கிறேன். ஆதலால் உடனடியாக அடையாளம்காண்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.

பள்ளியின் வளாகத்தில் பள்ளி நேரத்தில் நடந்ததால், மேலிடம்வரை தகவல் சென்று அதிகாரிகள் வந்துவிட்டனர். என் செய்வேன் என்று அடி வாங்கிய அதிர்ச்சியில் அமர்ந்திருந்தேன். பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள், காவல் நிலையத்திற்கு. . சம்பவத்தைப் பற்றியும் உன்னை அடித்தது யாரென்பதைத் தெரியுமா என்றார்கள். தெரியும், என்னை அடித்துவிட்டுப் போனவனின் பெயர் எனக்கு தெரிந்திருந்ததால், அதையும் குறிப்பிட்டேன். அவன் ஏன் உன்னை அடித்தான் என்ற கேள்விக்கு, சந்தேகத்தின் பெயரில் உருவான காரணத்தையும் மேலும் சில விஷயங்களையும் சொல்லிவிட்டேன். புளோக்கில் எழுதிய எதிர்வினையைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இதைச் சொல்லிவிட்டதால் அடுத்து யார் வருவாரோ?

தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் தெரியாமல், அமர்ந்திருந்தேன். தலையில் அடிபட்டதால் வீங்கியிருந்தது. அநேகமாக நரம்பு பாதிப்பு ஏதாவது இருக்க வேண்டுமா என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுவரை யாரும் இப்படி என்னை அடித்ததில்லை, யாரிடம் வம்புக்கும் நின்றதில்லை. மருத்துவமனையில் இரண்டு மணி நேர சோதனை நடந்தது. தலையை எக்ஸ் ரேய் எடுத்தார்கள். நாளைத்தான் தெரியும். வலி அளவுக்கு அதிகமாக இம்சிக்கிறது.
இனி புளோக்கில் என்ன எழுத போகிறேன்?


1.வடை சுடுவது எப்படி
2.ஆவிகள் உலகம்
3 காதல் கவிதைகள்
4. அன்பைப் பற்றி ஓஷோ என்ன சொல்கிறார்
5. ஏதாவது ஒரு சிறுகதை

இப்படியாக என்னை நான் சுருக்கிக் கொள்ளலாமோ? என்ற கேள்வியும் எழுந்தது. யார் வம்புக்கும் இனி போக வேண்டாம் என்பது போல. வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் சொன்னதும் அவர் பதறி அழுதபோது, இந்த எழுத்துலகை விட்டே போய்விடலாம் என்பது போல் ஆகிவிட்டது. நமது அன்பிற்க்குரியர்வளுக்காக. பிறகு கோழை என்ற வசைக்கும் ஆளாக வேண்டி வருமே. .

அடுத்து போலிஸ் விவகாரம் எங்கு போய் முடியும் என்பதும் தெரியவில்லை. பள்ளி வளாகத்தில் நடந்ததால் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய சூழல். தலைமை ஆசிரியர் கடைசிவரை உடனிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். 3 மணிவரை பசியுடன் அலைந்துகொண்டிருந்தேன். போலிஸில் புகார் கொடுக்கும்போது “இதை நீதிமன்றம் வரை கொண்டு போகிறாயா?” என்று கேட்டார்கள். “ஐயா சாமி வேண்டாம். . “ என்று சொல்லிவிட்டேன். சந்தேகத்தின் பெயரில் பதிவு செய்கிறேன். எனக்கு பாதுகாப்பு வேண்டும். . அவ்வளவே.

குறைந்தபட்சம் என்னை அடிக்க வந்தவன், ஏன் இப்படியெல்லாம் புளோக்கில் எழுதுகிறாய் என்று கேட்டிருக்கலாம், அல்லது பேசியிருக்கலாம். நான் என்ன அப்படியொரு தெர்ரர்ரா?

கே.பாலமுருகன்

Tuesday, August 25, 2009

இரு படங்கள் பற்றி : 1.ஊடக மொழியுடன் ஷங்கர் படத்தின் ஒரு நகலாக கந்தசாமி 2.மனச்சிதைவின் இன்னொரு இருண்ட பரிணாமம் “orphan”

மேற்குறிபட்ட இரு படங்களையும் ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் பார்க்க நேர்ந்தது. இரு படங்களும் தனித்தனி அதிர்வுகளை ஏற்படுத்தின. கந்தசாமி படம் முடிவடைந்தபோது ஷங்கரின் ஊடக செல்வாக்குடன் விளிம்புநிலை மனிதர்களின் குரலாக அவர்களின் கதாநாயகனாக வலம் வரும் மூன்றாம்தர புரட்சி கமார்ஷியல் படம் போன்ற தாக்கத்தை ஒரு நகலாக வெளிப்படுத்தியிருப்பதை உணர முடிந்தது.



மீண்டும் மீண்டும் கதாநாயக பிம்பத்தின் சாகசங்களையும் அட்டுழியத்தையும் கொண்டு வியாபாரம் செய்யும் சந்தையின் அடுத்த இறக்குமதியாக சிரேயாவின் தாராள காம சேட்டைகளையும் தாராள உடை குறைப்பையும் சேர்த்து திரைஅரங்குகளில் ஒரு மசாலா புத்திமதி படம்தான் தரப்பட்டுள்ளது. ஏழைகளின் நாயகனாக ஏற்கனவே சிவாஜியில் ஷங்கர் சொன்ன அதே கருப்பு பணத்தை மீட்கும் பாணியில் மெக்சிக்கோ வரை நீண்டு கந்தசாமியின் மண்டைக்கு எட்டாத வெறுப்பேற்றும் திடீர் சாகசங்களைக் கட்டமைத்து அதை ஊடகத்தின் வாயிலாக ஊடகத்தைத் துணையாகக் கொண்டு வெளிப்படுத்தியிருப்பது பலமுறை அரங்கேறி சலித்துவிட்ட பாங்கு.

குறிப்பு: அஸ்ட்ரோவில் அண்மையில் விக்ரமுடன் காந்தீபன் நடத்திய நேர்காணலில் விக்ரம் இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

“கந்தசாமி படத்தில் வரும் பாடல்களெல்லாம் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது, “போடா போடி. . மியாவ் மியாவ். . .” இதெல்லாம் பார்த்தீங்கனா சின்ன பிள்ளைங்கத்தான் இப்படி விரும்புவாங்க பேசுவாங்க” என்று கந்தசாமி நேரடி ஒளிப்பரப்பில் வெட்கமில்லாமல் சொல்ல அதை ஆமோதிக்கும் வகையில் காந்தீபனும் (மலேசிய கதாநாயகர்) தலை ஆட்டினாராம் வெட்கமில்லாமல். அதற்குப் பல மாற்றுக் கருத்துகளும் வந்ததென்று சொன்னார். இனி விக்ரம் படங்களின் பாடல்களை (சிரேயாவுடன் போடும் துண்டாட்டம்) எல்லாவற்றையும் “குழந்தைகளுக்கான பாடல்” என்று வெளியீட நேர்ந்தாலும் ஆச்சிரியமில்லை.

2. orphan (அனாதை)

அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஆங்கில படம். குளிர் பிரதேசம் ஒன்றின் பின்னனியில் ஒரு குடும்ப பெண்ணின் தோல்வியடைந்த தனது மூன்றாவது பிரசவத்தின் ஒரு கொடூரமான துர்கனவிலிருந்து தொடங்குகிறது படம். அவளது மூன்றாவது குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடுவதால், அந்த மரணமும் வலியும் பெரும் பாதிப்பாக அவளின் நாட்களைப் பின் தொடர்கிறது. ஏற்கனவே ஒரு பையனும் காது கேளாத ஒரு பெண் குழந்தையும் இருக்க, மூன்றாவதாக ஒரு பெண் சிறுமியைத் அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கிறார்கள்.

தத்தெடுக்கப்படும் அந்தப் பெண் சிறுமியைச் சுற்றித்தான் கதை சொல்லப்படுகிறது. அந்தச் சிறுமியின் சிதைந்த உலகத்தை வேறொரு பரிணாமத்தில் காட்டும்போது அதை ஏற்றுக் கொள்ள மனம் தடுமாறுகிறது. நீங்களே அதன் கதையையும் சம்பவங்களையும் அவளுக்குள் ஏற்படும் மனச்சிதைவின் பின்னனியையும் தெரிந்துகொள்ளும்போது அது தனி அனுபவமாக அமையும்.

முழுக்க ஒரு குடும்பத்தில் நிகழும் கதையாக, அந்த அனாதை சிறுமியின் அகத்தின் அடுக்குகளை உளவியல் இரகசியங்களுடனும் முடிச்சுகளுடனும் மர்மமாகக் காட்சியப்படுத்தியிருப்பது ஒரு தரமான கமர்ஷியல் + உளவியல் படத்திற்க்குரிய தேர்ச்சியும் கலையும் வெளிப்படுகிறது.

குறிப்பு: இந்தப் படத்தின் பல காட்சிகளை எதிர்க்கொள்ள மனத்திடம் ரொம்பவும் அவசியம் என்றே கருதுகிறேன். சில காட்சிகள் அதிர்வை ஏற்படுத்தக்கூடும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படம் என்றே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

(எ.காட்டாக: தனது கையைச் சொந்தமாக அவளே முறித்துக் கொள்வதும், எலும்பு உடைந்து சதைக்குள்ளிருந்து விரைப்பதும் மிக அருகாமையில் காட்டியிருப்பது மனதைப் பதற்றத்திற்க்குள்ளாக்க வாய்ப்புண்டு)

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, August 24, 2009

இம்மாத அநங்கத்தில் (புறக்கணிக்கப்பட்ட/மறக்கப்பட்ட கலைகளின் இதழாக)

சண்முகசிவா பக்கம்

மொழி பிரதானமாக ஒரு தொடர் பாடல் சாதனம் என்ற வகையில் மொழிமரபு நவீன தொடர் பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்குமே தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்ப்பாடல் திறனை இழந்துவிடக்கூடாது. . .
விமர்சன நூல்களில், உரையாடல்களில், கருதரங்குகளில், நவீனத்துவம் என்ற சொல்லே மிகுதியாக பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது, இருந்தும் வருகிறது .. . மேலும். . .

நமது கலாச்சார ஆவணங்கள் கொண்டாடப்படவில்லை

நிச்சயமாக. பூஜாங் பள்ளத்தாக்கின் ஆவணங்கள் அங்குள்ள மக்களால் தோற்றுவிக்கப்பட்ட கலாச்சாரம் கிடையாது. அதனால்தான் வெகு சீக்கிரத்திலேயே நிராகரிக்கப்பட்டது. மக்களால் தோற்றுவிக்கப்பட்ட கலாச்சாரமாக இருந்திருந்தால், அது அழிந்து போகவோ நிராகரிக்கப்படவோ மறைக்கப்படவோ வாய்ப்பில்லை. பிற்காலத்தில் பூஜாங் பள்ளத்தாக்கில் குடிபெயர்ந்த இனத்தால் சண்டி ஆவணங்கள் நிராகரிப்பட்டுள்ளது. இதெல்லாம் கபீர் வழிபாடுகள் என அடையாளப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.. . . . மேலும் விரிவான கலந்துரையாடல்

மலேசிய தமிழ் இலக்கிய போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்-கே.பாலமுருகன்

சிறிதளவும் இலக்கிய நாட்டம் இல்லாதவர்களும் இலக்கிய ஆளுமை இல்லாதவர்களும் நடத்தும் இலக்கிய போட்டிகள் கூழிக்கு மாறடிக்கும் தன்மையைப் பெற்று அரசியல் குப்பைகளால் நிரம்பி வழியும் சகதியாகவே மாறிவிடும் என்பதில் சந்தேகமிருக்க வாய்ப்பில்லை. அது அந்த இயக்கத்தின் ஒரு செயல்பாடாகவோ அல்லது அவ்வாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவோ நடந்து முடிந்துவிடுகிறது.இதன் விளைவு குறித்தும் நோக்கம் குறித்தும் எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் தான் சார்ந்திருக்கும் இயக்கம் / பல்கலைக்கழகம் செயல்திட்டத்தின் முழுமையைப் பெறுவதற்குத் தொண்றாட்டும் கடமைக்குப் பங்காற்றும் சந்தா கட்டி தனது உறுப்பியத்தைப் புதுபித்துக் கொள்வது போல இலக்கிய போட்டி நடத்தி தனது பெயரைப் புகழைச் செயல்பாடுகளின் மீதுள்ள பிடிப்பை. . . .

ஏ.தேவராஜன் தலையங்கம்

திருவிழாவின் இரத ஊர்வலத்திற்குப் பின் நடந்தேறும் கச்சேரிகளில் நாடகமும் இடம்பெற்றிருந்தது. ஓரளவு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அன்றைய தமிழாசிரியர்களிடம் நூல்களைப் பெற்று அவற்றிலுள்ளவற்றை நாடக வசனமாகத் தீட்டி அவற்றிற்கு உயிரூட்ட உள்ளூர் இளைஞர்களைப் பயிற்றுவித்துள்ளனர் அன்றைய கலைஞர்கள்.

பூர்வ குடி தோழர் சொன்னது- அ.விக்னேஷ்வரன்

காட்டில் இருந்த பூர்வக் குடி மக்களால் ஏன் அவர்களை எதிர்க முடியவில்லை? அவர்கள் இனத்தால் சிறுத்திருந்தார்களா? பலத்தால் வலுவிழந்து இருந்தார்களா? கொள்ளையர்களின் ஆயுதங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லையா? யார் இந்த கொள்ளையர் கூட்டம்?. . . மேலும்

கடைசி மணியின் அவலச் சத்தம்-கோ.புண்ணியவான்

எனக்கு முன்பே என் மனைவி சில அடிப்படை தமிழ்ப் பயிற்சிப் புத்தகங்களை அவளிடம்கொடுத்து பயிற்சி செய்வித்து வந்திருக்கிறாள். இந்தக்கதைப் புத்தகங்களைப் பார்த்தவள் சிவ பூஜைக்குள் கரடி நுழைந்துவிட்டதாய் திடுக்கிட்டு இதனை அபகரித்து “பரீட்சையில அவள் நல்ல மார்க்கு வாங்கணும், மொத இதெல்லாம் செய்து முடிக்கட்டும் பின்னால கதையப்படிக்கலாம்,” . . . .

பாட்டியின் இரகசிய சமையல் குறிப்புகள்-யோகி

“என் அம்முச்சி பட்டமிளகாயைக் காயவைத்து அம்மியில் அரைத்துக் கறிவைப்பார். அந்த மாதிரி குழம்புவகைகளை சாப்பிட என் பிள்ளைகளுக்கு கொடுத்து வைக்கல” என்பார் என் பாட்டி. குலதெய்வத்திற்குப் படையல் சமைக்கும் போது மூக்கையும் வாயையும் துணியால் கட்டி வாசனையை. . .

பாதுகாக்காத படைப்பு – சேர்த்து வைக்காத சொத்து-சிதனா

அப்பாவுக்கும் இரயில்வேயில் வேலை. குடியிருந்த ஜாலான் டிறவர்ஸில் வீட்டிற்கருகிலேயே இரயில்வே டிஸ்பன்சரி. பின்பக்க கதவைத் திறந்து கொண்டு, காலில் சிலிப்பரை மாட்டினால், மிஞ்சி போனால் மூன்று, அதிகமாக போனால் ஐந்து நிமிடத்தில் டிஸ்பன்சரி வாசலில் நிற்கலாம்.

“வாடா மல வத்துமல
வாடா போவோம் பத்துமல
பத்துமல மாதா பெரிய சக்தி- . . . .

சிறுகதை: புறா- க.ராஜம் ரஞ்சனி

புறாக்கள் தங்கள் விஜயத்தின் போது எச்சத்தைத் தவறி விட்டுச் செல்வது அவர்களைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. வீட்டின் முற்றம் புறாக்களால் அசுத்தமாவதை அவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை. அந்தத் தருணங்களில் புறாக்கள் மீது நிறைய கோப வெடிகள் வெடித்து சிதறும்.

சிறுகதை : யார் அந்த சண்முகம்?- முனிஸ்வரன்

“செண்பகம், யார் இந்த சண்முகம்? கண்டவனோட சாமானெல்லாம் உன் பையில வச்சிருக்கயே? உனக்கும் இந்த சண்முகம்ன்றவனுக்கும் என்ன சம்மந்தம்?” என்று இறுக்கமான முகத்தைக் காட்டிக் கேட்டேன். . . .

மேலும் 8 கவிதைகள். . .

for detail and subcription of ananggam:
contact : bala_barathi@hotmail.com / ananggam@hotmail.com

Thursday, August 20, 2009

அநங்கம் மலேசிய இதழ் (ஆகஸ்ட்)


ஆகஸ்ட் அநங்கம் இதழில்


1.பாட்டியின் இரகசிய சமையல் குறிப்புகள் : யோகி

2. பூர்வ குடி தோழர் சொன்னார் - அ.விக்னேஷ்வரன்

3. கடைசி மணியின் அவலச் சத்தம் - கோ.புண்ணியவான்

4. மலேசிய தமிழ் இலக்கிய போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்- கே.பாலமுருகன்

5. சேர்த்து வைக்காத சொத்து - சிதனா
6.முரசு வளர்த்த இலக்கியம் - இராம.கண்னபிரான்
7. தலையங்கம் - தேவராஜன்
8. கோ.முனியாண்டி, சை.பீர்முகமது, பாண்டித்துரை , பா.அ.சிவம், தினேசுவரி, ரமேஷ்.டே கவிதைகள் மேலும். .
9. புறா: க.ராஜம் ரஞ்சனி சிறுகதை
10.இவர்களுடன் சில நிமிடங்கள் : சிங்கப்பூர் எழுத்தாளர்கள் (மாதங்கி - சித்ரா ரமேஷ்)
11. ஆதிகாலச் சீனப் பெண் கவிகளின் கவிதைகள் - ஜெயந்தி சங்கர்

12. முதல் அமர்விற்கும் இரண்டாம் அமர்விற்கும் இடைப்பட்ட தருணம்- மீராவாணி
13. சிறுகதை : யார் அந்த சண்முகம்?-முனிஸ்வரன்

13. ஆலயங்கள் ஆகம விதிகள் படி கட்டப்படுகின்றன - சிறப்பு கேள்வி பதில்
(சுவாமி பிரமானாந்த)
மேலும் பல. .
விரைவில். .
கே.பாலமுருகன்
இதழாசிரியர்

Thursday, August 13, 2009

சில அமானுட குரல்களும் என் வீட்டிற்கு வராத பிள்ளை பேயும்


சிறுவயதிலிருந்தே நமக்கு அதிகமான பேய் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. பேய் கதைகளைக் கேட்பதிலும் பேய்கள் பற்றி உரையாடுவதையும் ஒரு விருப்பமான சுவார்ஷ்யமான விஷயமாக ஒவ்வொரு வயதினரும் அதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள், பேசி பிரமித்தும் கொள்கிறார்கள்.

இரவில் அறையில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கும் போதோ, அல்லது இருள் சூழ்ந்த இடத்தில் அமர்ந்திருக்கும்போதோ எப்படியாவது அமானுட விஷயங்கள் தொடர்பாக நாம் பேசுவதற்குத் தயாராகியிருப்போம். யார் அதைத் தொடங்கியிருப்பார்கள் என்று அவ்வளவு நுட்பமாக அறிந்திருக்க சிரமமாக இருக்கும். ஏதாவது ஒர் உரையாடலிலிருந்து ஏதாவது ஒரு சொல்லிலிருந்து “பேய்” பற்றிய கதை தொடங்கியிருக்கும். (எல்லோருக்கும் இது நிகழும் என்று சொல்லவில்லை-சிலருக்கு)

அதைப் பேசுவதற்கு அல்லது நமது உரையாடலில் பேய் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் ஏதும் அறியாமல் நாம் தாராளமாகப் பேசுவதற்குத் துவங்கியிருப்போம். தொழிற்சாலையில் இரவு வேலை செய்துகொண்டிருக்கும் போது யாரும் அசைக்காமல் சுயமாக நகர்ந்து விழுந்த பொருள் பற்றிய பதிவிலிருந்து, காலி வீட்டின் சன்னலில் எட்டிப் பார்த்த வெள்ளை உருவம் வரை பேய்களைப் பற்றிய அல்லது அமானுட அசைவுகள் பற்றிய கதை வளர்ந்து நீண்டு நம்முடன் நெருக்கமாகியிருக்கும். உடலின் வெப்பம் இலேசாகக் கூடி, இதயத் துடிப்பு அதிகரித்திருக்கும் சமயத்தில், அருகில் உள்ள நண்பன் இப்படி சொல்லலாம் :

“பேய் இப்பெ நம்ப பக்கத்துலே இருந்தா, நம்பளோட கை ரோமம்லாம் மேல தூக்கிக்கிட்டு நிக்கும். . பாரு” என்று சொல்லும்போது, உங்கள் கையின் ரோமத்தை நீங்கள் பரிசோதிக்க நேர்ந்தால், அது எழுந்து மேலே தூக்கிக் கொண்டு நிற்பது போல பிரமை ஏற்படலாம் அல்லது நிஜமாகவும் அது நிகழலாம்.

பல நேரங்களில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களில் சிலருக்கு இது நிகழ்ந்துள்ளது. சிறு வயது பிள்ளைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை எல்லோரின் உரையாடல்களிலும் பேய் பற்றிய பகிர்வு இருப்பதற்கான காரணம் நம்மைச் சுற்றி ஏதோ ஓர் அமானுட அசைவுகள் அல்லது உலகம் இருப்பதாக நமக்குள் ஏற்பட்டிருக்கும் மத போதனை, கடவுள் நம்பிக்கை, தலைமுறை வழிக்காட்டல், முன் அனுபவங்கள் உருவாக்கிய பிம்பங்கள் என்று பல கோணங்களில் போய்க்கொண்டே இருக்கும்.

பேய் பற்றிய பயம் இருப்பதாலே நமக்குக் கடவுள் நம்பிக்கை ஆழமாக இருக்கவும்/ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அல்லது அத்தகையதொரு அனுபவத்தைக் கடந்து வந்திருக்கலாம். 1993களில் “பிள்ளை பேய்” என்று ஒரு பேய் வீடு வீடாக உலாவுவதாக வதந்திகள் பரவின. அப்பொழுது எனக்கு 8 வயதுதான். பத்து டுவா கம்பத்தில் மலாய்க்கார குடியிருப்பு பகுதியில் ஒரு பலகை வீட்டில் வசித்து வந்தோம். அருகில் அம்பாங் பாய் என்கிற பெரிய குளமும் இருந்தது. அப்பொழுது பள்ளிக்கூடத்தில் இதைப் பற்றி பெரிய மாணவர்கள் பரவலாகப் பேசிக் கொண்டும் அதைப் பற்றி புத்தகங்களில் எழுதிக் கொடுத்தும் “பிள்ளை பேய் உன் வீட்டுக்கு வரும்” என்கிற பீதியை உருவாக்கியிருந்தார்கள்.

“பிள்ளை பேய்” என்பது தனது குழந்தையைப் பறிக்கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் என்றும் அந்தப் பேய் வீடு வீடாக சென்று கதவைத் தட்டி மூன்று கோரிக்கைகளைக் கேட்கும் என்றும் மூன்றாவது கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் அது உங்களைச் சாப்பிட்டுவிடும் என்றும் சொல்லியிருந்தார்கள்.

கோரிக்கை 1: “என் பிள்ளை அழுவுது, பால் கொடுங்க”
கோரிக்கை 2: “என் பிள்ளைக்குப் பசி சாப்பாடு கொடுங்க”
கோரிக்கை 3: “என் பிள்ளைக்கு உங்க இரத்தம் வேண்டுமாம்”

இதைக் கேட்டதும் எனக்குப் பயம் உடல் முழுவதும் பரவி ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமானுட ஒலிகளை எழுப்பி விளையாடி கொள்ள முயற்சித்தும் எனக்கு ஏற்பட்ட இரகசியமான பயம் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

மூன்றாவது முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதும், அந்தப் பேயின் கையிலிருக்கும் குழந்தையின் உருவம் நமக்குத் தெரிய ஆரம்பிக்குமாம், அப்பொழுது அந்தக் குழந்தைக்குத் தலை இல்லாததையும் அந்த இடத்தில்(முண்டத்தில்) புழுக்கள் மேய்ந்து கொண்டிருப்பதையும் பார்க்க நேரிடுமாம். அடுத்த கணம் இரத்தம் கக்கி சாக வேண்டும்.

அப்பொழுது பரவலாகப் பேசப்பட்ட கதை இதுதான். எல்லாம் மாணவர்களும் “பிள்ளை பேய்” பற்றியே பேசி அதிக்காரப்பூர்வமாக அந்தப் பேயை அங்கீகரித்து அதன் வருகை உண்மையென்று நம்ப வைத்திருந்தார்கள்.

அன்று வீட்டிற்குச் சென்றதும், வீடு முழுவதும் அபாயக்கரமான தோற்றத்தை எழுப்பிய வண்ணமே காட்சியளித்தது. இன்று கண்டிப்பாக அந்தப் பிள்ளை பேய் என் வீட்டிற்கு வரும் என்று நம்பிவிட்டேன். நான்தான் கதவைத் திறக்கவும் போகிறேன், அந்தப் பேய் என்னிடம் அந்த மூன்று கோரிக்கைகளைக் கேட்கும் என்றும் நம்பியிருந்தேன்.

முதலில் பல மாதம் உள்ளே நுழையாத சாமி மேடைக்குள் நுழைந்து கீழே விழுந்து சாமியை வேண்டிக் கொண்டேன். “சாமி என்னைக் காப்பாத்து, பிள்ளைப் பேய் என் வீட்டுக்கு வரக்கூடாது” என்று நெற்றியில் பட்டையடித்துக் கொண்டு அன்று சாமி பக்தனாக ஆகியிருந்தேன்.

அதுவரை கடவுள் பற்றிய பிரக்ஞை எனக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது கடவுள் தப்பு செய்தால் தண்டிக்கக்கூடிய ஒரு ஆளாகவோ அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒன்றாகவோ நினைத்திருந்தேன். சாமி மேடையில் அம்மா வாங்கி வைத்திருந்த “சரஸ்வதி, லட்சுமி, விநாயகர்” ஸ்ட்டிக்கர்களை எடுத்து முன் கதவில் வரிசையாக ஒட்டி வைத்தேன். கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்ததும் அந்தப் பிள்ளை பேய் கதவைத் தட்டாது என்று உறுதியாக நம்பினேன். இவர்கள் அந்தப் பேயை உள்ளே வரவிடாமல் தடுக்கக்கூடிய சக்தி படைத்தவர்கள் என்று எண்ணி, அவர்களை அங்கே ஒட்டிவிட்டு, அம்மாவிடம் உதை வாங்கியபோது அவர்களி மீது மெல்ல சந்தேகமும் எழுந்தது.

இரவில் வெகுநேரம் உறங்காமல் காத்திருந்தேன். அன்றைய இரவு மிகவும் தெளிவான ஒரு விழிப்பை உருவாக்கியிருந்தது. சிறிது அலட்சியம் ஏற்பட்டாலும் உறங்கிவிடுவேன் என்பதால் கண்களை அகலமாகத் திறந்துகொண்டு ஏதாவது அமானுட குரல்கள் கேட்கிறதா என்று வெளியின் அசைவுகளைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் உள்ள காட்டின் முணுமுணுப்பும் பூச்சிகளின் சத்தமும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. காலையில் அம்மா என்னை எழுப்பும்போது முதலில் எழுந்ததும் வெளிக்கதவைத்தான் பார்த்தேன். நிம்மதியாக இருந்தது.

நம்மைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பிடிமானம் அவசியமாகத் தேவைப்படும் போதெல்லாம், கண்களுக்குத் தெரியாத கடவுள் என்கிற இருப்பு நம்மைச் சுற்றி நம்பிக்கை என்கிற பிடியை உருவாக்கி வைத்துள்ளது. கால் இடறும் போதெல்லாம் அதில் தொற்றிக் கொள்ள வசதியும் உரிமையும் மதம் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. கடவுளையும் மதத்தையும் துறந்தவர்கள் கடவுள் இல்லாத அந்தக் காலியான இடத்தை எதைக் கொண்டு நிரப்புகிறார்கள் என்பது மிக அவசியமானது. நம்முடைய தொன்ம வாழ்வில் கடவுள் என்கிற இருப்பு மிக பலமாக வலுவாக நம் மனித அமைப்பைப் பிடித்துக் கொண்டுள்ளது. அந்த இருப்பு ஏற்படுத்தும் வெறுமையில் வேறு எதுவும் இல்லாமல் இருக்க நேர்ந்தால் துவண்டு வீழும்போது மனதளவில் நாம் சிதறிப் போகவும் வாய்ப்புண்டு.

சிலர் பிரபஞ்சத்தைக் கடவுளாகப் பார்க்கிறார்கள், சிலர் சக மனிதனின் அன்பைக் கடவுளாகப் பார்க்கிறார்கள், கடவுள் என்கிற இருப்பு, அடையாளம் பல பரிமாணங்களில் தொடர்ந்து நம்மைப் பின் தொடர்கின்றன. இன்றும் பிள்ளைப் பேய் பற்றிய நினைவு வரும்போதெல்லாம், நான் கடவுள் நம்பிக்கையை எப்பொழுது இழந்தேன் என்றும் கடவுள் இல்லாத இடத்தில் எதையெல்லாம் கொண்டு நிரப்பி அந்த இல்லாமையைச் சரி செய்து கொண்டிருக்கிறேன் என்றும் கேள்விகளும் ஞாபகங்களும் தோன்றிய வண்ணமே இருக்கின்றன. இதை எழுப்பிக் கொண்டிருப்பதும் எனக்குள் தொலைந்துபோன சில அமானுட குரலாகவும் இருக்கக்கூடும்.

சில நினைவுகளுக்காக
கே.பாலமுருகன்

Monday, August 10, 2009

நீங்களும் உங்கள் வீடும் ஆபத்தில் உள்ளீர்கள்

சிறு பகிர்வு மட்டுமே. அறிவுரையென்று எடுத்துக் கொள்ள வேண்டாம். ADT என்ற முழுநேர கண்கானிப்பு பாதுகாப்பு திட்டத்தினை வீடு வீடாகச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த சில சீன இளைஞர்களைப் பார்க்க நேர்ந்தது. கையில் ஒரு கோப்பையும் சில விவரங்கள் அடங்கிய அட்டைகளையும் வைத்துக் கொண்டு, “உங்கள் வீடும் நீங்களும் ஆபத்தில் உள்ளீர்கள்” உடனே இந்தப் பாதுகாப்பு வளையத்தை உங்கள் வீட்டில் பொருத்துங்கள். இதுவே தற்காலத்து ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று ஏதேதோ வசனங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

அவர் எடுத்துக்காட்டாக சொன்ன சில விஷயங்கள் இங்கே:


1. உங்கள் வீட்டில் அலாரம் உள்ளதா?
-இல்லையென்றால், அலாராம் இல்லாத வீட்டைத்தான் கொள்ளையர்கள் கண்டறிந்து உள்ளே நுழைகிறார்கள்
-இருக்கிறது என்றால் அந்த அலாராத்தை உடனே செயலிழக்கச் செய்துவிட்டு / செயலிழக்கச் செய்யச் சொல்லி வற்புறுத்தி உள்ளே நுழைகிறார்கள்

2. சாதரண அலாரம் என்னச் செய்யும்? (லோ லோ என்று கத்தும்/ புலம்பும் - இது வேறு அலாரங்கள்-பிறகு பார்த்துக் கொள்ளலாம்)

- சத்தமாக ஒலிக்குமே தவிர அதைப் பொருட்படுத்தாதவர்களின் காதுகளில் ஒலிக்கப் போவதில்லை அல்லது உங்கள் வீடு ஆபத்தில் உள்ளதைக் காவல் துறைக்குச் சொல்ல யாராவது நல்லுள்ளங்கள் முன்வந்தால் ஒழிய, உங்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியாது.

- அல்லது அந்த அலாரம் 20-30 வினாடிகள் கழித்தே ஒழிக்கத் துவங்கும், அதற்குள் அதனை அடைத்துவிட கொள்ளையர்கள் திடீர் நடவடிக்கைகளில் இறங்கலாம்

3. ADT அலாரம் என்னச் செய்யும்?

- எல்லாம் வசதிகளும் சேவைகளையும் உள்ளடக்கிய கருவித் தரப்படும். அந்தக் கருவியிலேயே கொள்ளையர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாலோ அல்லது முன்வாசல் கதவை அறுக்க முயன்றாலோ, சன்னலை உடைக்க முயன்றாலோ, அதன் அதிர்வுகள் உடனே “கொள்ளை நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியை அங்கீகரித்து” சத்தம் எழுப்பத் துவங்கிவிடும். ஒரு நிமிடத்திற்குள்ளேயே இந்தத் தகவல் மையக் கண்கானிப்பு நிறுவனத்திற்குச் சென்றவுடன், அருகிலுள்ள ரோந்து காவல் துறையினரிடம் இது குறித்து உடனே அவசர தகவலும் முகவரியும் அனுப்பப்படும்.

- அல்லது இந்தக் கருவியைக் கண்ட கொள்ளையர்கள் அதை உடனே செயலிழக்க வறுபுறுத்தும்போது, அந்தக் கருவியை அடைப்பதற்கான இரண்டு கடவுசொல் கொடுக்கப்பட்டிருக்கும், அதில் இரண்டாவது கடவுசொல்லின் இரகசிய எண்களை அழுத்தும்போது, அந்தக் கருவி செயலிழந்துவிடும் ஆனால் நீங்கள் ஆபத்தில் இருப்பதற்கான தகவல் உடனே கண்கானிப்பு மையத்திற்குச் சென்றுவிடும். (இதுதான் இந்த அலாரக் கருவியின் வித்தியாசம் என்று அந்த இளைஞர் கூறினார்).

- ஆகையால் உங்களைக் கொள்ளையடிக்கும் வந்திருக்கும் நபர்கள் அலாரம் அடைந்துவிட்டதாக எண்ணி எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வரும்போது காவலாளிகள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துவிடுவார்களாம்.

சரி இப்பொழுது சில காமெடிகளைப் பார்ப்போம்:

அந்த அதிநவீன பாதுகாப்பு கருவியை அறிமுகப்படுத்தி பேசியவர் சொன்னதிலிருந்து

1. தகவல் உடனே (சிங்கப்பூரில் இயங்கிக் கொண்டிருக்கும் மைய நிறுவனம்) அவர்களைச் சென்றடைந்ததும், அவர்கள் மலேசிய ரோந்து காவல் துறையினரிடம் தகவல் சொல்லிவிடுவார்காளாம், அவர்களும் உடனே விரைந்துவிடுவார்களாம். இது எவ்வளவு உறுதி என்று கேட்டேன், காரணம் அன்மையில் ஓர் இடத்தில் கொள்ளை நடப்பதாக அறிவித்து 4 மணி நேரம் கழித்தே “பாதுகாப்பு வழங்க” வேண்டியவர்கள் அங்கே சென்றுள்ளார்கள்.

2. அதற்கு அந்த இளைஞர் கூறியது: “இல்லை, எங்கள் நிறுவனம் அவர்களுக்கு 30% பணம் தருகிறது, அதாவது இந்தப் பாதுகாப்பு சேவையை வீட்டில் பயன்படுத்துபவர்களுக்கு, அவர்கள் விஷேச பாதுகாப்பும் கண்கானிப்பும் வழங்குவார்கள். -அப்படியென்றால் 30% பணத்திற்காக மட்டுமே உடனே ஓடி வந்து சேவை செய்வார்களாம் அந்தப் “பாதுகாப்பு சேவை” பணியாளர்கள்.- பணம் இல்லாதவர்களின் வீட்டில் கொலை நடந்தாலும் தாமதித்து வந்து பிணங்களை அள்ளிச் செல்ல முனைவார்கள் போல.

3. உள்ளே நுழைந்துவிட்ட கொள்ளையர்கள், (அவர்கள் உள்ளே நுழைந்த தகவல் உடனேயே கண்கானிப்பு மையத்திற்குச் சென்றுவிட்டது) வெளியே வரும்போது அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையிட்ட உடைமைகள் மீட்கப்படும் என்று சொன்னார். – உடைமைகளாக இருந்தால் மீட்கலாம், போனது உயிராக இருந்தால்?

4. எனக்குத் தெரிந்த ஒரு விரிவுரையாளர் இப்படித்தான் வீட்டில் இருக்கும்போது திடீரென்று உள்ளே நுழைந்தவர்கள், உடனே தரையில் படுத்திருந்த அவரின் 3 வயது குழந்தையின் கழுத்தில் பாராங்கை வைத்தபோது, அவரால் தன்னிடமிருந்த பணங்களைக் கொடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லையாம்.

எப்படிக் கொள்ளையர்கள் சாமர்த்தியமாக இயங்குகிறார்கள்?

1. தொடர்ந்து உங்களின் நடவடிக்கைகளைக் கண்கானிக்கிறார்கள்.
- (நீங்கள் வெளியே செல்லும் நேரம், வீட்டில் எத்தனை பேர் உள்ளீர்கள், எத்தனை
மணிக்கு வீடு திரும்புகிறீர்கள்)
-சமயம் பார்த்து, எல்லாம் தகவல்களும் சேமிக்கப்பட்டு, வீட்டில் நுழைவதற்கான
சாத்தியங்களை உறுதிப்படுத்திவிட்டு, கொள்ளைக்குத் தயாராகுகிறார்கள்.

2. வீட்டிற்கு வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் குப்பை நெகிழியை
வீசுவதற்கு வெளியே வரும்போது, உங்களை வழிப்பறி செய்யவும் வாய்ப்புண்டு.
(முகத்தில் ஓங்கி குத்திவிட்டு சங்கிலியை அபக்கறித்துப் போன சம்பவங்கள் உண்டு)
3. வேலை முடிந்து வீடு திரும்பும்போது, காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைய
முனையும் தருணத்தில் கொள்ளையர்கள் சடாரென்று உங்களுடன் உள்ளே
நுழையக்கூடும்.

5. வீட்டு முன் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் உங்கள் காரின் பின்பக்கம்
ஒளிந்துகொண்டு நீங்கள் வீட்டின் முன் கதவைத் திறக்கும்வரைக் காத்திருந்து
உங்கள் கழுத்தில் பாராங் வைக்கப்படலாம்.

6. பொருட்கள் விற்பனைக்கு வருபவரின் தோற்றத்தில், உங்களுக்குத் தெரிந்த நபரைப் போல உரிமையுடன் “அக்கா, அக்கா” என்ற அழைப்புடன், கோவில் திருவிழா வசூலுக்காக வந்திருப்பது போன்ற அறிமுகத்துடன், இப்படிப் பல வேடங்களில் உங்கள் வீட்டின் முன் வந்து நிற்பவர்களுக்கு உடனே கதவைத் திறந்துவிடக்கூடாது.

7. வழக்கமாக வீட்டிற்கு நடந்து செல்பவராக நீங்கள் இருந்தால், சந்தேகம்படும்படி ஏதாவது ஒரு கார் உங்களைப் பின் தொடரலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். (மோட்டார் சைக்கிளோட்டிகள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை, நடந்து செல்பவர்களின் கழுத்திலுள்ள சங்கிலியை அறுத்துவிட்டோ அல்லது அவரைத் தரதரவென்று இழுத்து சேதப்படுத்தி அவரைக் கொள்ளையடிக்கக்கூடிய நபர்கள் மோட்டாரிலும் உலவுகிறார்கள்.

8. இப்படி உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிர்பந்தமும் அபாயமும் உருவாகியுள்ளன. அதற்காக மனிதர்களிடமிருந்து விலகி வாழ வேண்டும் என்று முடிவெடுத்து விட வேண்டாம். நல்ல மனிதர்களும் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அடையாளங்காணல் என்பதில் நாம் தீவிரமாக இருக்க வேண்டும்.

குறிப்பு: கொடூரமான கொள்ளை சம்பவங்கள் நடந்த வீட்டில் அந்த வீட்டு மனிதர்களின் மனம் உளவியல் ரீதியில் வீழ்ச்சியடைந்து சோர்வுற்றிருக்கும். முக்கியமாக அந்த வீட்டில் அந்தக் கொடூரமான கொள்ளையர்களை எதிர்நோக்கிய குழந்தைகள்/சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு பெரியவர்கள் உறுதியாக இருப்பதும் அவசியம். அன்மையில் ஒரு சீனர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டின் சிறுமி ஒருத்தி அடிக்கடி இரவில் எழுந்து அலறுகிறாள், அழுது அடம் பிடிப்பதாகக் கேள்வியுற்றேன்.

நட்புடன்
கே.பாலமுருகன்