Thursday, January 21, 2010

மௌனம் குறும்படம்: மரணம் என்கிற மௌனத்தின் அடர்த்தி (Silent behind the death or the silent of death)


திரைக்கதை/இயக்கம்: மதன் குனதேவா
ஒளிப்பதிவு : சண்முகநாதன்
கருத்தாக்கம் : ரஞ்சித்

பிக்ஷெல் நிறுவனம் வழங்கியிருக்கும் “மௌனம்” குறும்படத்தை அண்மையில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மதன் குணதேவா அவர்களால் இந்தியாவில் எடுக்கப்பட்ட இக்குறும்படம் சுமார் 10 நிமிடங்கள்வரை நீளக்கூடியது. தற்போதையை சூழலில் குறும்படங்களுக்கான கருப்பொருள் பெரும்பாலும் வாழ்வின் பெருந்துயரத்தின் மீது படரக்கூடிய அடர்த்திகளைத் தகர்க்கும் வகையிலும் அல்லது அதன் யதார்த்தங்களை முன்வைக்கும் வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

மௌனம் குறும்படம் மரணத்தைப் பற்றி மிக நீளமான ஒரு படிமத்தில் வைத்து காட்டப்படுகிறது. பிண அறையும், பிணங்களும், அந்தப் பிண அறையின் பாதுகாவலரின் பொழுதுகளும் என, வார்த்தைகளற்ற, வசனங்களற்ற காட்சிப்பதிவுகளைக் கடக்கும்போது ஓர் அடர்த்தியான மௌனம் நம்மைப் பற்றிக் கொள்வதை உணர முடிகிறது.

10 நிமிட குறும்படத்தில், பிண அறையில் வெண்துணியால் சுற்றப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும் பிணங்களின் அசையாத காட்சிகளே அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது, மரணம் என்கிற பெருந்துயரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் யதார்த்தங்களைக் கடக்க இயலாமல் தேங்கிப் போன மௌனத்தின் உக்கிரத்தை எந்த வசன விவரிப்புகளுமின்றி கடந்து செல்ல முற்பட்டிருப்பதை அவதானிக்க வாய்ப்புண்டு. ஒரு மரணத்தைச் சுற்றி வீசப்படும் ஓலக் குரல்களும், ஆழ்ந்த பரிதாபங்களும், அழுக்குரல்களும், வசைப்பாடல்களும், துக்க வசனங்களும் என எல்லாமும் கரைந்துவிட்டப் பிறகு, பிணத்தின் அருகே இன்னமும் படுத்திருக்கும் மரணத்தின் மீது மீதமாய் அர்த்தமற்று தேங்கிக் கிடப்பது வெறும் மௌனம் மட்டுமே, அந்த மௌனம் பிண அறையின் சுவர்களிலும் பிண அறையின் பாதுகாவலர் மீதும் ஒழுகிக் கொண்டேயிருப்பதை கலைத்தன்மையுடன் மிக அமைதியாக காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டதலுக்குரிய முயற்சியாகும்.

செத்த மனிதர்களின் உடலை எந்த உணர்வுமின்றி வெறித்திடும் பிண அறை பாதுகாவலரின் முகப்பாவனை, மரணம் என்ற யதார்த்தம் கொடுத்திருக்கும் முதிர்ச்சியின் குறியீடு அல்லது மரணத்தை ஒட்டிய சலிப்பு என்றும் சொல்லக்கூடும். கடைசியாக வந்திருக்கும் ஒரு பிணத்தைத் துணியில் கட்டும்பொழுது அவரைச் சுற்றியும் அந்தப் பிணத்தைச் சுற்றியும் உருவாகி பெருகி வரும் ஒரு மௌனத்தை அடையாளங்காண முடிகிறது.

சில குறும்படங்கள் வசனங்களைத் தொலைப்பதிலும் வெற்றிப் பெறக்கூடும், அதன் கலையம்சம் அவ்வளவு அடர்த்திற்குரியவை. பிண அறையை இவர்கள் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களில் ஒன்று, ஒரு மரணம் ஆகக் கடைசியாக சந்திக்கும் மனித இரைச்சல்களுக்கு அப்பால் அடையக்கூடிய மௌனம் பொது புத்திக்கு முரணான துயரத்தைக் கொண்டவையாகும் என அவர்களின் தர்க்க விவாதங்களுக்கு எட்டியிருக்கக்கூடும். அதைக் கையாளும் வகையில் பிணங்களின் அறையின் உக்கிர மௌனத்தினூடாக நுழைந்து அந்த அர்த்தமற்று பிணங்களின் நெடுக வளர்ந்து அடரும் துயரத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குறைந்த ஒளியும் திடிரென அப்பிக் கொள்ளும் இருளும் என எல்லாவற்றையும் உதறியும், மரணத்தின் மீது மீதமாக ஒட்டிக் கொள்ளும் ஒரு மௌனத்தைப் பற்றிய கதை இது. வாழ்த்துகள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன்- வரலாறு என்கிற புனைவின் மீதான கலை

1

சேர – சோழர் – பாண்டிய அரசுகளின் ஆக்கிரமிப்புகளும், ஆட்சி விரிவாக்கங்களும், வரலாறும், வீழ்ச்சியும் சங்க இலக்கிய பாடல்களிலும், கல்வெட்டுகளிலும், புவியியாளர்களின் குறிப்புகளிலிருந்தும், அகழ்வாராய்ச்சி நூல்களிலிருந்தும் மேலும் சில ஆவணங்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தாலும், கி.பி 1246க்குப் பிறகு ஆக இறுதியான சோழ மன்னன் என்று நம்பப்படும் மூன்றாம் இராஜராஜ சோழனின் மகன் மூன்றாம் இராஜேந்திர சோழனின் ஆட்சியின்போது பாண்டிய அரசின் படையெடுப்பால், வீழ்ச்சியடைந்த பிறகு சோழ பேரரசின் வலிமை வீழ்ச்சியடைந்துவிடுகிறது. அத்துடன் சோழர்கள் பற்றிய வரலாறு முடிவடைகிறது. அதற்குப் பிறகான சோழர்களின் வம்சமும் வரலாறும் ஆவணங்களில் இடம்பெறவில்லை. அந்தச் சோழர்களைப் பற்றிய அடுத்தக்கட்ட வரலாற்றின் பதிவின்மையின் மீது படரும் ஒரு அபார புனைவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் செல்வராகவனின் கற்பனை.

குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் என்கிற கற்பனை சோழர்களின் வீழ்ச்சியை நோக்கி விரிந்துள்ளது. கதையை மேலும் விவரிக்கத் தொடங்கினால், சோழர்களைப் பற்றிய நிச வரலாறும் செல்வராகவ்னின் சோழர்களைப் பற்றிய கற்பனை புள்ளியும் சந்திக்கும் நுட்பங்கள் பற்றியும் விரிவாக எழுத நேரலாம். செல்வராகவன் தனது முழுநேரத்தையும் முழு ஆளுமையையும் செலவு செய்து எடுக்கப்பட்ட பெரும் முயற்சியை விமர்சனம் என்கிற பெயரில் கிண்டலடிக்கவோ அல்லது அதன் வரலாறை ஆய்வு என்கிற பெயரில் கேலி செய்யவோ இடமில்லை என்னிடம். படத்தில் தேவையற்ற இடங்களில் பாடல்கள் வருவதும் வசனங்கள் இடம்பெறுவதும் என்கிற சிறு சிறு பலவீனங்களைக் கடந்து, சோழர் மன்னர்களின் வரலாற்றை நோக்கிய அவரின் கற்பனையாற்றலுக்கு பாராட்டைத் தெரிவிப்போம்.

ஆயிரத்தில் ஒருவன் முதலில் தமிழ் இரசிகர்களுக்குத் தரக்கூடிய பெரும் ஆச்சரியம், படத்தில் பயன்படுத்தியிருக்கும் கிராபிக் கிடையாது, (அதை இராமநாராயணன் படங்களிலே அரைகுறையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்), பண்டைய சோழ நாட்டு வட்டாரத் தமிழ் என படத்தின் இடைவேளைக்குப் பிறகு வரும் மொழிப்பயன்பாடுதான். திரையரங்கிலிருந்து வெளியே வந்தவர்கள் திரைக்கதையின் தடுமாற்றங்களினால் ஒரு சராசரி புரியாமைக்குள் சிக்கிக் கிடந்ததைப் பற்றிப் பேசியதைவிட, படத்தில் சோழப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் பேசிய தமிழின் பயன்பாட்டைத்தான் மிகுந்த வியப்போடு “என்னாத்தான் பேசனானுங்க, ஒன்னும் புரியல” எனப் பிதற்றிக் கொண்டிருந்தனர்.

சங்க இலக்கியம் படித்தவர்களுக்கு, அந்தத் தமிழ் புரிந்து கொள்வதற்கு அவ்வளவு கடினம் எனச் சொல்ல முடியாது. அதற்காக அவர்களின் தமிழைப் புரிந்து கொள்வதற்கு ஏற்கனவே சங்க இலக்கிய தமிழ் பயிற்சி கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் சொல்வதற்கில்லை. (புரியாதவர்களுக்கு படம் ஒரு கோளாறு கிடையாது, தமிழில் கல்வி சார்ந்த அளவில்கூட வாசிப்பற்றுப் போன ஒரு சமூகத்தின் பின்னடைவே காரணம்)

படத்தின் துவக்கத்தில், “சோழ மன்னர்களின் வரலாறு வெறும் கற்பனையே” எனக் காட்டிவிடுவதன் மூலம், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்னனியில் கையாளப்பட்டிருக்கும் வரலாறு குறித்தும் அதன் கட்டமைப்பு குறித்தும் ஆழமாகக் கிளறி ஆய்வு செய்யவோ விமர்சனம் செய்யவோ அவசியம் இல்லாமல் போய்விடக்கூடும். விமர்சன ஆளுமைகளின் பிடியிலிருந்து படம் நழுவி கற்பனை / மேஜிக் படம் என்கிற வரையறைக்குள் விழவும் வாய்ப்புண்டு. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

2

படத்தின் கற்பனையின் தொடக்கம் தொடர்ந்து பார்வையாளனைக் கடைசிவரை இழுத்துக் கொண்டு போகும் வலிமையை படத்தின் இடைவேளைக்குப் பின்னர் சில காட்சிகளுக்குப் பிறகு இழந்துவிடுவதாக தோன்றுகிறது. பெரும் முயற்சியில் பல ஆய்வுகளை உட்படுத்தி, வரலாற்றின் பெரும் மர்மங்களைக் காட்சிப்படுத்த முயன்ற பயணத்தில், இறுதிவரை வலிமையுடன் தொரட இயலாத தடுமாற்றம் படத்தின் இறுதி காட்சிகளில் வெளிப்படுகிறது.

படத்தின் கதாநாயகனான கார்த்திக்தான் ஆயிரத்தில் ஒருவன் என மதிப்பிட வாய்ப்பளிக்கப்படும் வழக்கமான புரிதல்களுக்கு அப்பால், அந்த ஆயிரத்தில் ஒருவன் யாரென்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. சோழ நாட்டு வம்சாவழியினரின் கடைசி வாரிசைக் காப்பாற்ற வருவது கார்த்திக் என்பதால் அந்தக் கதாப்பாத்திரம்தான் ஆயிரத்தில் ஒருவனா அல்லது சோழ மக்களின் இறுதி வாரிசாக உயிர் தப்பிக்கும் அந்தச் சோழ நாட்டு மக்களின் கடைசி மன்னனின் மகன் தான் ஆயிரத்தில் ஒருவனா?

படத்தின் சில காட்சிகள் அப்பட்டமாக மேலைநாட்டு சினிமாவைப் போல நகலெடுத்திருப்பதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக Gladiotor படத்தில் வருவது போல பெரும் அரங்கத்தில் அடிமைகள் மோதிக் கொன்று சாகும் காட்சிகள் போலவே இங்கேயும் வேறு விதமான சாகசங்களோடு, அடிமைகளுக்குப் பதிலாக பைத்தியங்களை வைத்து சண்டையிட்டு வெல்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி படத்தின் கதாநாயகனின் வாழ்க்கை பின்னனியும், அவன்தான் சோழ மக்களின் கடைசி வாரிசைக் காப்பாற்ற வருபவன் என்பது பற்றியும் விரிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஓர் அற்புதம் போல எங்கோ ஓர் மூலையில் அவையனைத்தும் நிகழ்கின்றன. அப்பொழுதெல்லாம் படத்திலிருந்தும் படம் விவரிக்கும் அபாரமான கற்பனையிலிருந்தும் நாம் துண்டிக்கப்படுகிறோம்.

கார்த்திக் கதைப்பாத்திரத்தைப் படத்தின் இடைவேளைக்குப் பிறகு வசனங்கள் பிடுங்கப்பட்டு, திடீர் அதிசய குறியீடாகக் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். படத்தின் ஓட்டத்திலிருந்து கார்த்திக் கதைப்பாத்திரம் நீக்கப்படும் கட்டத்தில் ரீமா சென்னின் கதைப்பாத்திரம் புதிய அடையாளத்துடன் உக்கிரமாக வளர்கிறது.

பின்குறிப்பு: படத்தின் அதீதமான வரலாற்றின் மீதான புனைவைக் கொஞ்சம் நீக்கிவிட்டு அணுகினால், பாண்டிய வம்சத்தின் குலத்தெய்வத்தை மீட்கப் புறப்படும் நவீன குழுவில்(ரீமா சென், அழகம் பெருமாள்) உள்ள அனைவரும் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருக்கக்கூடியவர்கள். தலைமுறை தலைமுறையாக சோழர்களை வீழ்த்துவதையும் அவர்கள் திருடிச் சென்ற தங்களின் குலத்தெய்வத்தை மீட்க வேண்டும் என்கிற இலட்சியம் மிகவும் வெறித்தனமாகப் புகட்டப்பட்டிருப்பது, வரலாறின் ஒரு பக்கம் மிகப்பெரிய வன்முறையாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.( குகைக்குள் வாழும் சோழ மன்னனை மயக்குவதற்கு ரீமா சென் தன் உடல் அரசியலைப் பயன்படுத்துவதும்கூட). மேலும் பாணடிய அரசின் மீதங்கள் தமிழகத்தில் உயர் பதவியில் இருந்துகொண்டு, தற்போதைய அரசாங்கத்தின் பதவிகளைப் பயன்படுத்தி தங்களின் குலப்பெருமையை மீட்பது போன்று காட்டியிருப்பதும், சோழர்கள் குகைக்குள் காட்டுமிராண்டிகள் போல மாமிசம் தின்று வாழும் நிலையில் இருப்பது போன்று காட்டி, பாண்டியர்களின் வம்சாவழிகள் உயர்மட்டத்தில் அரசாங்க பதவிகளில் இருப்பது போல காட்டி ஒப்பீடு செய்யப்பட்டிருப்பதும், பாண்டிய தலைமுறையின் நவீன படைகளோடு சோழர்களின் இறுதி படைகள்( காட்டுமிராண்டிகள் போல வாழும்) தோற்றுப் போவதும் தற்கொலை செய்து கொள்வதும், மீண்டும் சோழர்களின் பயணம் தொடர்வதும் என, பல கோணங்களில், சோழர்களை நோக்கிய புனைவில் ஏன் செல்வராகவன் வன்முறையைக் கையாண்டுள்ளார் என்றும் கேட்கத் தோன்றுகிறது. இது எனது விமர்சனம் மட்டுமே. சிலர் இதிலிருந்து முரண்படலாம்.

செல்வராகவனின் இந்த முயற்சியை, அலாவுடினின் கையில் கிடைத்த அற்புத விளக்குப் போல அவர் இந்தப் படத்தைக் கையாண்டிருப்பதையும் வரவேற்போம். நமது வரலாறு என்கிற மிகப்பெரிய புனைவின் அதிசயத்தை இப்படியாயினும் கையாளவும் கற்பனை செய்யவும் ஒரு கலைஞன் தேவைப்படுகிறான், ஒரு சில குறைபாடுகள் இருப்பினும்.

கூடுதல் அமசம்: படத்தில் வரும் சோழர்களின் வரலாறையும் வாழ்வையும் காட்டும் சுவர் சித்திரங்கள், அதன் தொன்மையான தோற்றமும் பிரமிக்க வைக்கிறது. பழங்குடி மக்களாக வரும் இரு வகையினரும், மிக இயல்பாக அபாரமான ஒப்பனைகளுடன் காட்டப்பட்டிருப்பது, கலை ஆளுமைகளின் வெளிப்பாடு. வரலாறு என்றாலே சோம்பல் தட்டுவதாக உணரும் மாணவர்கள் போல இன்றும் அது குறித்து ஆர்வம் எட்டாதவர்கள் அதிகம் இருக்கும் காலக்கட்டத்தில் இம்மாதிரியான முயற்சியை அதுவும் தமிழில் நிகழ்த்தியிருப்பது, புதிய முயற்சியாகும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                   மலேசியா

Friday, January 15, 2010

தி.எச்.ஆர் ராகாவின்(THR) தமிழ் மொழி அலைவரிசைக்கு நேர்மையற்ற ஒரு போலித்தனமான கடிதம் (வியாபாரக் குரலும் ஏமாறுதலின் கலையும்)


மொழிப்பற்றுடைய அன்பிற்கினிய தி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களுக்கும் அலைவரிசையின் தலைமைத்துவத்திற்கும், ஒரு கவிதையுடன் இக்கடிதத்தைத் தொடங்கும் இந்தத் துரோகியை மன்னித்தருளும்.

“எவ்வளவு முயன்றும்
தவிர்க்க இயலாமல்
கேட்டுத் தொலைகிறேன்
அவசர பயணத்தின்போதும்
கோபம் தலைக்கேறிய சமயங்களிலும்
சில சமயங்களில் வழியில்லாமலும்
இந்த அலைவரிசையை.
பலமுறை வற்புறுத்தி
உறுதிப்படுத்திக் கொள்கிறேன்
இந்த அலைவரிசை தமிழுக்காகவும்
தமிழ் இனத்திற்காகவும் அறிவுடைய சமூகத்தை
வளர்த்தெடுக்கவும் என.
ஆனால் உதிர்ந்த இலைகளின் சாட்சியங்களாக
விரக்தியோடு தேங்கிக் கிடக்கிறது
எனது கனவுலகத்தின் வசந்தகாலம்
எல்லாமும் பொய்யென
கரைந்துவிடுகிறது.
தொலைத்தூர மாயையென
ஒரு சிலரின் குரல்கள்
ஒலிக்கத் துவங்குகின்றன
“enjoylaaaa”

ஒவ்வொருநாளும் காலையில் விழித்ததும் உங்களின் அலைவரிசையின் குரலில்தான் கழிக்கிறேன், மன்னிக்கவும். . . . முழிக்கிறேன், தங்களின் குரல்களுக்கு நான் அடிமையின் அடிமை, மிகுந்த பக்தி நிறைந்தவன் என்றெல்லாம் ஒப்புவிக்க எனக்கும் ஆசைத்தான். அடுத்த திரேத்தா யுகத்தில்(இராமாயணம் நிகழ்ந்த காலக்கட்டம் என்பார்கள், கலியுகம் தீர்ந்ததும் பூமி தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும், உலக வளர்ச்சி மீண்டும் தொடங்கும் என்பது வேத வழக்கமாகும்) இந்த அலைவரிசை மீண்டும் தொடங்குமென்றால், அப்பொழுது கண்டிப்பாக தங்களின் அலைவரிசையின் அற்புதமான அறிவுத்திறமிக்க குரல்களுக்கு நிச்சயம் ஓர் அடிமையாகப் பிறப்பேன். அது என்னுடைய 20 ஆவது அவதாரமாகவும் இருக்கக்கூடும்.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன் இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

அவ்வப்போது மிகவும் எதார்த்தத்தின் மோதல்கள் போல தற்செயலாக தங்களின் தமிழ் அலைவரிசையைக் கேட்டுவிடுவதுண்டு. அந்தச் சொற்ப நிமிடங்களில் அல்லது நான் கேட்கும் நிமிடங்களில்லெல்லாம் தங்களின் அறிவிப்பாளர்கள் மிகவும் ஆரோக்கியமான மொழியில் தரமான தமிழில் உரையாடுவதைக் கண்டு “ நானும் ஒரு தமிழாசிரியனா?” என வெட்கப்பட்டதுண்டு. இருந்தால் தி.எச்.ஆர் ராகாவின் தூயத்தமிழில் உரையாடும் மொழி ஆற்றல்மிக்கவனாக இருந்து தொலைய வேண்டும் இல்லையென்றால் மதம் மாறி வேறு மொழியைப் பேசித் தொலைய வேண்டும் என்கிற ஆவேசம்வரை எனக்கு எழுந்துள்ளது.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

திருக்குறளுக்கும் தன்முனைப்பு கவிதைகளுக்கும், ஏன் திருமந்திரத்திற்கும் நிகரான தங்களின் அறிவிப்பாளர்களின் எழுச்சிமிக்க குரலும் வாசகங்களும் என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்திவிடும் அபாயமும் எனக்குள் நிகழ்ந்துள்ளதை ஒப்புக் கொள்கிறேன். குறிப்பாக “எஞ்சாய்லா. .” என்கிற தமிழ் அலைவரிசையின் தமிழ் வார்த்தையைத் தாரக மந்திரம் போல தமிழ்ச் சமூகத்திற்காக ஒலிக்கப்படும் இனிமையான சொல் போல அனைவரும் பருகி இன்பம் அடைந்து, வாழ்வின் அடையாளங்களைக் கண்டடையும் அதிசயத்தைப் பார்க்கும்போது, வீதி முழுக்க, வீடு முழுக்க “எஞ்சாய்லா. . எஞ்சாய்லா. . “ என இந்தத் தமிழ் சமூகத்தின் ஒட்டு மொத்த எழுச்சிக் குரலாக ஒலிக்க வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனம் எழுந்து என்னை இம்சிக்கின்றது.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

இத்துடன் எனக்குள் ஏற்படும் இம்சை தீர்ந்துவிட்டாலும் பரவாயில்லை, அவ்வப்போது ஆண் அறிவிப்பாளர் ஒருவர் அரவாணியின் குரலில் அவர்களைக் கேலி செய்வது போல ஒலிப்பது பெருமைப்படுவதற்குரிய ஒரு விசயமாகும். தரமிக்க நமது தமிழ் சினிமாவைப் பற்றியும் அதில் நடித்து நமது நாகரிகத்தைப் புதுப்பிக்கும் நடிகர்களைப் பற்றியும் கேட்கப்படும் கேள்விக்கு யாராவது பிழையாகப் பதில் சொல்லிவிட்டால், உடனே ஒலிக்கிறது அந்த ஆண் அறிவிப்பாளரின் குரல் இப்படி, “ஆஆஆ பிழையா போச்சே. .”.. பெண் குரலைப் போல நகல் ஒலியை ஒலிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தின் பெயரில் அது அரவாணிகளைக் கேலி செய்யும் ஒரு குரலாக மாறிவிடும் நுட்பம் அறிந்திறாத அந்த ஆண் அறிவிப்பாளரின் அறிவாற்றலுக்கு முன் நான் மண்டியிட்டு அழ வேண்டி வந்துவிடுமோ என்கிற அச்சம் மண் புழுப் போல நெளிகிறது.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என 100 தேங்காய்கள் உடைத்தும் வேண்டுதல்கள் போலியாகிவிடுகின்றனவே. அடுத்ததாக நகைச்சுவை என எண்ணி மீண்டும் மீண்டும் பெண் குரலிலேயே அந்த ஆண் அறிவிப்பாளர் முயன்று வருவது, ஒட்டு மொத்த பெண் இனத்தையே நகைச்சுவைக்குரியவர்கள் என்கிற புரிதலாலா அல்லது பெண் குரலை ஓர் ஆண் நகலெடுத்தால் அது நகைச்சுவையாகிவிடும் என்கிற அடையாளக் கோளாறினாலா என்கிற பட்டிமன்றத்தைத் துவக்கி வைக்கும் அளவிற்கு தமிழ் தாகங்களை உற்பத்தி செய்து வரும் தி.எச்.ஆர் என்கிற தமிழ் அலைவரிசைக்கு எனது வணக்கங்கள் எவ்வளவு கொட்டித் தீர்த்தாலும் அடங்காது.

“இது எப்படி இருக்கு?” எனும் பிரமாண்டமான எவ்வித போலித்தனமும் நடிப்பும் இல்லாத பயன்மிக்க அதிர்ச்சி மதிப்பீடுகளை அள்ளி வீசும் தி.எச்.ஆர் ராகாவின் தமிழ் அலைவரிசையின் நிகழ்வு மிகவும் பிடித்தமானவை. ஒவ்வொரு நாளும் பல பக்தர்கள் இந்த நிகழ்வைத் தவம் கிடந்து கேட்கிறார்கள் என்பதை அறியும்போது, அந்த வாய்ப்பை அவ்வப்போது இழந்துவிடும் நான் ஒரு மிகப்பெரிய குற்ற உணர்ச்சிக்கு உட்பட்டவன் ஆகிறேன்.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

தி.எச்.ஆர் ராகா தமிழ் அலைவரிசையின் அறிவிப்பாளர்களான இருவர் என்ன செய்வார்களென்றால்: நண்பர்களின் மூலமாகவோ அல்லது உறவினர்களின் மூலமாகவோ குறிப்பிட்ட ஒரு நபரின் தொலைப்பேசி எண்ணைக் கண்டறிந்து அவருக்குத் தற்செயலாகத் தொடர்புக் கொண்டு வேறு ஒரு நபரைப் போல பேசி, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது அல்லது முட்டாள்களாக்குவது என்ற வடிவமைப்பில், கேட்டுக் கொண்டிருக்கும் அத்துனை இரசிகர்களையும் முட்டாளாக்கிவிடும் (சத்தியமாக இராதிகாவின் மெகாத் தொடர்கள் செய்யும் அதே அதீமேதாவித்தனம்தான்) ஆற்றல்மிக்க ஒரு நிகழ்வு அது. கண்டிப்பாக காலையில் அவசரமாகக் குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு வேலை இடத்திற்குப் பரப்பரக்கும் சமூகத்தின் எல்லாத்தரப்பினருக்கும் மிக ஏற்புடைய அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஓர் அற்புதமான நிகழ்வு. ஏமாளியாக தலையைச் சொறிந்து கொண்டிருக்கும் அந்த நபருக்குக் காலையிலேயே இவர்கள் உச்சரிக்கும் மந்திரம், “இது எப்படி இருக்கு?”.


அம்புலிமாமா அவர்கள் தனது பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“இது எப்படி இருக்கு நிகழ்வு பற்றி என்ன நினைக்கிறீங்க?”



“அது அற்ப ஏமாளித்தனம். காலையிலேயே ஒருத்தன போன் பண்ணி ஏமாத்துறதெ ஒரு தமிழ் சார்ந்த அலைவரிசையே செய்துன்னா, தமிழ் சமூகத்திற்கே கேடுத்தான். . எந்த மொழியா இருந்தா என்னா? தப்பு தப்புத்தான். இதுலே பேசறாங்களே இவுங்களோட குரலே கேட்டா என்னா நமக்கு தெரியாதா? அதான் அன்னாடம் கேட்டுத் தொலையுறமே. . இவுங்களுக்கெல்லாம் பல குரல்லே பேசற ஆற்றலும் வல்லமையும் இருந்தாலும் ஏதோ நம்பலாம், ஆனா ஒவ்வொருத்தருக்கும் குரலோட தனி அடையாளம் இருக்கு, அதையும் அன்னாடம் கேட்கறோம், சீக்கிரமே பரிச்சயம் ஆயிடும், அப்பறம் என்னா “இது எப்படி இருக்கு? அது நொப்படி இருக்குனு” ஆளையே ஏமாத்துறாங்க?”



“சும்மா ஒரு ஜாலிக்குத்தானே”

“அது வேலை வெட்டி இல்லாதவங்க பண்ற வேலை, மக்களெ மகிழ்ச்சிப்படுத்த அதுவும் அங்கீகாரமும் பொருளாதார பலமும் இருக்கற அலைவரிசைக்கு வேற வழியா இல்லெ. எல்லாத்தையும் குறை சொல்லலிங்க, இதே அலைவரிசை ஏழ்மையான குடும்பங்களுக்காக நிகழ்ச்சி நடத்தி எவ்வளவோ உதவி பண்ணிருக்கு. அதை மறுக்கல. ஆனா அதுக்காக இவுங்க செய்யற மத்த தவறுகளையும் பலவீனங்களையும் கேள்வியே கேட்கக்கூடாதுன்னா, நாங்கலாம் என்னா அடிமையா?”

அம்புலிமாமா அவர்கள் கோபத்தில் அவசரமாக எழுந்து கழிவறைக்குச் சென்றுவிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களையும் கருத்துகளையும் ஏற்படுத்தும் அந்த நிகழ்வின் வருகைக்காக எனது ஆதரவு கொடியை உயர்த்துகிறேன். “இது எப்படி இருக்கு?” ஓங்குக, வாழ்க, வளர்க.
(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

அடுத்ததாகவும் சில விமர்சனங்கள் எனக்கும் வழி விட்டுவிடு என முந்துகின்றன.
அந்த அலைவரிசையில் ஒரு தமிழ் சினிமாவின் பாடல் ஒலிக்கிறது. இதென்னாய்யா, அலைவரிசைன்னா அதுவும் தமிழ் அலைவரிசைன்னா தமிழ் பாடல் ஒலிக்கத்தானே செய்யும். பாடலையும் ஒலிப்பரப்புவதற்க்குத்தானே வானொலி நிலையங்கள்? ஆமாம், உண்மைத்தான். ஆனால் அந்தப் பாடல் முடிவடைந்ததும் தவறாமல் ஒரு விளம்பரக் குரலும் ஒலிக்கும். “இந்தப் பாடலை உங்கள் கைத்தொலைப்பேசிக்கு டவுன்லோட் செய்ய வேண்டுமா, உடனே நம்பரை அழுத்தி இந்த எண்ணுக்குக் குறுந்தகவல் அனுப்பிவிடுங்கள்” என. ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஏற்படும் இரசிகர்களின் திருப்தியும் அமைதியும் உடனே களையும்படி மிகத் திவீரமாக தனது விளம்பர குரலை ஒலிப்பரப்பும் அலைவரிசையை உற்சாகத்துடன் பாராட்டுகிறேன். வாழ்க நின் தமிழ் சேவை. மன்னிக்கவும் பல வியாபார நிறுவனத்திற்கு நின் வழங்கும் விளம்பர சேவை.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

நள்ளிரவில் எதார்த்தமாக திறந்தாலும் சரி, மதியத்தில் தெரிந்தே திறந்தாலும் சரி இந்தத் தமிழ் அலைவரிசையில் கண்டிப்பாக யாரோ ஒருவரின் வியாபாரக் குரல் தனது வியாபாரத்தைப் பற்றியும் அதன் இயங்குத்தலத்தைப் பற்றியும் மிக விமர்சியாக பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். அவ்வப்போது இடைவேளையாக விளம்பரம் போல மக்களை மகிழ்ச்சிப்படுத்த அல்லது விடுதலையளிக்கும் வகையில் பாடல்கள் ஒலிப்பரப்பாகும். ஒருமுறை பயண நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் வசதிகளையும் வாய்ப்புகளையும் தெரிவித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன், அது சிறிது நேர விளம்பரம் என எண்ணி பாடலுக்காகக் காத்திருந்தேன். அரைமணி நேரம் கடந்தும் அவரே பேசிக் கொண்டிருந்தார், திடீரென அதிர்க்குள்ளாக்கும் வகையில் ஒரு பாடலைப் போட்டார்கள். சமாதனமாகக் கேட்டேன். பாடல் முடிந்ததும் அறிவிப்பாளர் பேசுவார் என நினைத்தேன், அடேங்கப்பா. . மீண்டும் அதே வியாபாரக் குரல். அதிர்ந்து போனேன், அலைவரிசையின் குரலில் மெய் மறந்து போனேன்.

தங்களின் அலைவரிசையும் அறிவிப்பாளர்களும் வலுவான முறையில் தரமான தமிழ் உச்சரிப்புகளுடன் (தங்களின் தமிழ் பயன்பாட்டைக் கண்டு எப்பொழுதும் வியக்கும் ஒரு சராசரி இரசிகனின் வேண்டுகோள்), தமிழ் சமூகத்தை உயர்த்தியும் அவர்களின் சிந்தனைகளை வளர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகளோடு, யாரையும் ஏமாளிகளாக மாற்றாத விவேகத்துடனும் இப்பொழுது போலவே எப்பொழுதும் இயங்கும் என பெரும் எதிர்ப்பாப்புகளுடன் இருக்கிறேன்.




மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

இறுதியாக மீண்டும் ஒரு கவிதையோடு முடித்துக் கொள்கிறேன் என்கிற குற்ற உணர்ச்சி அதிகமடைகிறது.

“ஒரு மண்புழுவைத்
தேடுவதற்கு நிகரான
மும்முரத்துடன் கிளறி கிளறி
தேடிக் கொண்டிருக்கிறேன் தமிழையும்
நால்லாளுமைமிக்க வரிகளையும்
பாடலையும்
கிடைக்கவில்லை என்கிறபோது
தூரத்திலிருந்து ஒலிக்கிறது
எனது மங்கிப் போன வானொலி
“எஞ்சாய்லா. . . இது எப்படி இருக்கு?"

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி



Thursday, January 14, 2010

கவிதையை இறுக்கமாக்குவதன் மூலம் வாசகனுக்கான இடைவெளி நிரம்புகிறது-வா.மணிகண்டன்

பொங்கல் தினத்தன்று ஏதாவது கவிதை எழுதி பிரசுரிக்கும் விழாக்கால கவிஞர்களின்(விழாக்காலங்களில் மட்டும் கவிஞராகிவிடும்) நினைவாக அவர்களை வாழ்த்தும் வகையில் எனது பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்றாவது யாரையும் திட்டாமல் எழுதத்தான் ஆசை).

வாசகர்கள்/எழுத்தாளர்கள்/அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.


2008ஆம் ஆண்டில் கவிஞர் வா.மணிகண்டன் அவர்கள் வேலைத் தொடர்பாக சில வாரங்கள் மலேசிய பினாங்கு தீவில் தங்கியிருந்தார். அங்கு வந்ததும் வேறு சில நண்பர்கள் மூலம் என்னைத் தொடர்புக் கொண்டிருந்தார் அல்லது யாரோ கொடுத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் மின்னஞ்சலில் தொடர்புக் கொண்டு அலைப்பேசியின் எண்களைப் பகிர்ந்து கொண்டோம்.( எது சரி என நினைவில் இல்லை)

அவரை நேரில் சென்று சந்தித்தப்போது ஒரு சில மணி நேரங்கள் அவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. இளம் படைப்பாளி மேலும் கவிதையில் மாற்று சிந்தனையுடைய எழுத்தாளரும்கூட. சில மனிதர்களுடனான சந்திப்பு நம் வாழ்வில் சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என்பார்கள். என் வயதை ஒத்திருந்த வா.மணிகண்டனின் இலக்கிய பார்வை முதலில் எனக்கு வியப்பை அளித்திருந்தது. அவருடைய வாசிப்பனுவங்களைப் பகிர்ந்து கொண்டபோது இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் உடன்பட்டோம்.

ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அவருடன் நான் நிகழ்த்திய உரையாடலை எங்குமே பதிவு செய்து வைக்கவில்லை. மேலும் வருடங்கள் கடந்துவிட்டதால் அவர் முன்வைத்த கருத்துகளும் தொலைந்துவிட்டன என விட்டுவிட்டேன். இன்று எதார்த்தமாக கணினியில் உள்ள பழைய கோப்புகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, "வா.மணிகண்டன்" எனப் பெயரிட்ட கோப்பைத் திறந்தபோது அவர் கூறிய சில கருத்துகளைச் சுருக்கமாகப் பதிவு செய்து அப்படியே வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. அதை எந்த மாற்றமும் செய்ய்யாமல் இப்பொழுது வெளியீடுகிறேன்.

வா.மணிகண்டனின் (ஒரு வருடத்திற்கு முன்பான)இந்தக் கருத்துகளும் விமர்சனங்களும் இப்பொழுது மாற்றங்கள் கண்டிருக்கலாம் அல்லது மேலும் வலுவடைந்திருக்கக்கூடும்.

வா.மணிகண்டன்:

இப்பொழுது நாம் நிறைவேற்றக்கூடிய இலக்கிய முயற்சிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது படைப்புலகிற்கு வலு சேர்க்கும்.

Statements வகையைச் சேர்ந்த கவிதைகள் நாளை வெறும் வரலாராக மட்டுமே களைந்து போகக்கூடும்.

மாய யதார்த்த படிமங்களை MTV VTV போன்ற தொலைகாட்சி அலைவரிசைகளே நிகழ்த்திவிடுவதால் அவற்றை நான் எழுத்தில் சிரமப்பட்டு படைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

கவிதையை இறுக்கமாக்குவதன் மூலம் வாசகனுக்கான இடைவெளி நிரம்புகிறது.

15 வருடங்களுக்குப் பிறகும் அந்தக் கவிதை வாசிக்கப்பட்டுக் கவனம் பெறவேண்டும். அப்படி நிகழ்ந்தால் அதுவும் கவிதைக்குக் கிடைத்த வெற்றிதான்.

படைப்பாளனின் அகத்தை மீறிய கவிதைகள் உருவாவதில்லை. புறத்தைப் பேசினாலும் அது அவனுடைய அகத்திலிருந்து வெளிவருவதுதான்.

வானம்பாடி கவிஞர்கள் கவிதைகளை உணர்ச்சி ரீதியாக தமிழ் மனம் இறுக மாற்று அடையாளத்தில் பேணி காத்து வந்தார்கள்.

இலக்கிய வளர்ச்சியுடன் எப்பொழுதும் தம்மைப் புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். 30 வருடம் கடந்த சாதனைகளை வெளியுலக பரிச்சியமே இல்லாமல் இப்பொழுது நிகழ்த்திவிட்டு கிணற்றுத் தவளையாகக் கதறக்கூடாது.

வாசகன் என் படைப்புகளை நிராகரிக்கட்டும் நீதிபதிகல்ல.அதிகார இருக்கையில் அமர்ந்து கொண்டு என் படைப்புகளைப் புறகணிக்கவும் நீக்கவும் அவர்களுக்கு எந்தவிதத்தில் உரிமை இருக்கிறது.

சிற்றிதழ்கள் சமரசங்களுக்கு அப்பால்பட்டு இயங்க வேண்டும். தனது நோக்கத்தை இழந்துவிடக்கூடாது.

ஒரு நாவல் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை அல்லது அனுபவத்தை ஒரு கவிதையிலும் நிகழ்த்தலாம்.

இரண்டு தள வேறுபாடுகளை ஒரே கவிதையில் சொல்ல முயற்சிக்கும்போது கவனமாக இயக்க வேண்டும்.

நம் இலக்கிய பரப்பில் பலர் எதிர்வினைகளை சந்திக்க தயாராக இருப்பதில்லை.

நடுநிலைமையோடு படைப்பை அணுகவதுதான் சரியான விமர்சனப் பார்வை.

சலிக்காமல் தொடர்ந்து இயங்குவதன் மூலமே இலக்கிய சூழலில் தமது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்- கவனம் பெற முடியும்.

கோட்பாடுகளை முன்வைத்து கவிதைகளைப் படைக்கக்கூடாது.

எழுத்தில் சமரசம் செய்யவில்லையென்றாலும் ஓர் எழுத்தாளன் தமது சொந்த வாழ்க்கையில் சிலசமயங்களில் சமசரங்களுக்கு உட்பட்டாக வேண்டும்.இதுதான் யதார்த்தம்.

குறிப்பு: வா.மணிகண்டன் கூறிய இக்கருத்துகள் 2008 மார்ச் மாதத்தில் அவருடன் ஏற்பட்ட உரையாடலிலிருந்து பெறப்பட்டவை. மாற்றுக் கருத்துகள் உள்ளவர்கள் தங்களின் விமர்சனங்களைப் பதிக்கலாம். நண்பர் வா.மணிகண்டன் அவர்களே இயன்றால் தொடர்புக் கொள்ளவும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Wednesday, January 6, 2010

சமூகத்தை நோக்கிய புதிய மதிப்பீடுகளுடன் – அநங்கம் இதழ் 06


அநங்கம் சிறுகதை சிறப்பிதழ் (6 ஆவது இதழ்) குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அச்சிற்குச் சென்ற இடத்தில் பக்கங்கள் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் சிக்கல் நேர்ந்துவிட்டது. ஆகையால் மீள் வடிவமைப்பு செய்து மீண்டும் பிரசுரிக்க நேரிட்டது. மேலும் பக்க அளவைக் குறைப்பதற்காக சிறுகதை சிறப்பிதழுக்கு வந்திருந்த சில கதைகளை அடுத்த இதழுக்காகத் தவிர்க்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

அடுத்த அநங்கம் இதழ் மார்ச் 2010-இல் பிரசுரம் ஆகும். மேலும் அநங்கம் இணைய இதழாகவும் மாதந்தோறும் மலரவிருப்பதால், இனி பிரசுரம் குறித்து பிரச்சனை இருக்காது. ஆகையால் படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை அநங்கம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ( ananggam@hotmail.com)

ஓவியம்: ஓவியர் சந்துரு

அநங்கம் சிறுகதை சிறப்பிதழ்:

1. கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளும் –கோ.புண்ணியவான்

அந்தக்கேள்வியைச் மிகச்சாதாரணமாக அவன் எடுத்துக்கொண்டது எனக்கு வியப்பை ஊட்டியது. அவனுடைய வியாதியை அவன் புரிந்து ஏற்றுக்கொண்டான் என்பதே பெரிய விஷயமாக எனக்குப்பட்டது. என் கேள்விக்கு எதிராக அவன் தன் பலவீனத்தையோ, தாழ்வு மனப்பான்மையையோ காட்டாதது எனக்குக் கொஞ்சம் ஆறுதலை உண்டு பண்ணியது. அதற்கு அவன் கொடுத்த பதிலிலிருந்து , நான் காட்டிய கரிசனத்தை அவன் உள்ளுணர்ந்து கொண்டான் என்பதே எனக்கு உவப்பாகவும் இருந்தது.

2. கோல பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர்
வரை - முனிஸ்வரன்குமார்

வயசாவுதுப்பா ஒங்களுக்குன்னு சொல்லி இந்த பய என்னிய இந்த சண்டாள எடத்துக்குக் கூட்டியாந்துபுட்டான். எனக்கு அறவே புடிக்கல இந்த டவுன் பொழப்புன்னு சொன்னாலும் கேக்க மாட்றான். இங்க வந்து தள்ளிட்டான்.
ஐயோ, மணியாவுது! இன்னும் பச்ச லைட்டு வந்த பாட்டக்காணம். இந்த ட்ராபிக் எழவக் கண்டுபிச்சவன் எவன்னு . . .

3. பெண்மையை மறுதலித்தல்- சிதனா

“பத்மாவ சுருக்கி பேட்னு ஆக்கிக்கிச்சி! இது சின்னப் பிள்ளையா இருந்தப்பவே அப்பா அம்மா ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்களாம்! யாரோ சொந்தக்காரங்க எடுத்து வளர்த்திருக்காங்க! வளர, வளர, அந்த சொந்தக்கார ஆளுல இருந்து மத்த ஆம்பளைங்களும் இந்தப் பொண்ண வேற மாதிரி ‘டிரிட்’ பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்! அதுக்குப் பெறகுதான் இந்தப் பொண்ணு, ஆம்பள. . .

4. குறுக்கெழுத்து- க.ராஜம்

முந்தைய பொழுதுகளில் முயன்ற குறுக்கெழுத்தில் ஏதாவதொரு விடையைக் கண்டுபிடிக்க இயலாமல் போனால் அத்தேடல் மறுநாள் வேலையின் பொழுது அவளின் எண்ணத்தில் கறுப்பு வெள்ளை கட்டங்களைப் போட்டிருக்கும். வேலையில் முழ்கியிருந்தவாறே மனதில் உண்டாகியிருக்கும் கட்டங்களுக்கு அவளின் மூளை விடைகளைப் . . .

5. தூண்டில் – எம்.ரிஷான் செரிப்

சட்டைகளைக் கழற்றி கரைக்கு எறிந்துவிட்டு, நீண்ட நேரமாக அந்த நாற்றம் பிடித்த அழுக்கு நீருக்குள் நீந்தி நீந்தி மீன்களைக் கைகளால் பிடிக்கமுயற்சித்தோம். அவை எங்களுக்குப் போக்குக் காட்டி ஏமாற்றிக் கொண்டே இருந்தன. மீண்டும் நித்திதான் இன்னுமொரு யோசனையைச் சொன்னான். தண்ணீரையெல்லாம் கரைக்கு இரைத்து வற்றச் செய்தால் நீர் மட்டம் குறைந்து இலகுவாக மீன்களைப் பிடிக்கலாம் எனச் சொல்லியபடியே . . .

6. அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே - மணியம் பேருந்துகளும் – கே.பாலமுருகன்

அப்பே பேருந்தில் ஏறும் நண்பர்கள் என்னைவிட 15 நிமிடத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க வேண்டும். அது வழக்கமாக நிகழும் ஒரு கட்டாயம். சரியாக 6.15க்கு கம்பத்தின் மேட்டுப் பாதையில் அப்பே பேருந்து வந்து நிற்கும். அதிகாலை இரைச்சலை ஏற்படுத்துவதற்காகவே ஒரு மிகப்பெரிய சீன மாணவர்களின் கூட்டம் அங்கு இருக்கிறது. 8.00 மணிக்கு. .

7. நாளை காலை 9க்கு இறந்துவிடுவேன்- சு.கஸ்தூரி

விரிவுரை நேரத்தில் தமயந்தியின் உடல் மட்டுமே அங்கிருந்தது. தான் நாளை 9am க்கு மணிக்கு இறந்துவிட போகிறாள் என்பதை முழுதாக நம்பிவிட்ட நிலையில் இருந்தாள். மரணம் இவ்வளவு விரைவில் வந்துவிடும் என்று சற்றும் எதிர்பாராதவாளாய் முடங்கிப் போயிருந்தாள். ஆமாம். . .

8. யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்- ஜெயந்தி சங்கர்

நாங்கள் இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் சந்தித்துக் கொண்டோம். பென்ச்சூ உயர்நிலை மூன்று மற்றும் நான்கை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு யீஷுன் தொடக்கக் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தாள். வெவ்வேறு பாடங்கள் எடுத்திருந்ததால் அவள் வேறு வகுப்பிலும் நான் வேறு வகுப்பிலுமிருந்தோம்.

9. 6- மாதங்கி

இயந்திரம் இருப்பதாலோ என்னவோ, ஒவ்வொருவரும், ஜிம் செல்லும் உடை, நடைபயிற்சி உடை, வீட்டு உடை அலுவலக உடை, போததற்கு இரவு உடை என்று அவரவர் தேவைக்கேற்ப அணியும் ஒவ்வொருவரின் துணிகளும் மலைபோல் குவிகின்றன. கொனையில் உள்ள வீடு என்பதால், காலாக்கம்புகள் சமையலறையில் மட்டுமன்றி வாயிலில் உள்ளதால், உலர்த்த இடமிருக்கிறது.


பத்திகள்:

1. பிதுக்கித் தள்ளப்பட்ட மாணவனும் அவனது கதை நுழைவும்- ஏ.தேவராஜன்

இடைநிலைப்பள்ளி வாழ்க்கை முடிந்து ஒரு பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்பு ‘ஏ’ வாங்கிய மாணவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரமே தெரியாத அளவுக்குக் காணாமல் போக , பையப் பைய தங்களுக்கான இலக்கிய அடையாளத்தை நிறுவுவார்கள் பிதுக்கி வெளியில் தள்ளப்பட்ட மாணவர்கள். பின் கூறப்பட்ட

2. துறைமுகம் நாவல் விமர்சனம்- அ.விக்னேஸ்வரன்

மதம் எனும் போர்வையால் மனிதனுள் ஏற்படும் பிம்பங்கள் பல. வித விதமான புரிதல்கள். இதன் பிரள்வுகளே மூட நம்பிக்கைகள் என அறியப்படுகிறது. படிப்பறிவு இல்லாத, மதம் எனும் புரிதலில் பயமும், தெளிவற்ற சிந்தனையும். .

3. புத்திமதிகளை மட்டும் உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம்
என்பது? – கே.பாலமுருகன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் அடையாளங்கண்டு அவர்களுக்குப் போதனைகளை உற்பதிக்கும் ஆற்றலை இலக்கியம் எனக் கொண்டாடும் சிந்தனை மாறி, குற்றங்களின் அடிவேருக்குச் சென்று அதனை புதிய மதிப்பீடுகளுடன் விவாதிக்கும் ஆற்றலே தரமான இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் ந.பச்சைபாலன், தினேசுவரி, இளைய அப்துல்லாஹ், பா.அ.சிவம் கவிதைகள்

இதழாசிரியர்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி

Sunday, January 3, 2010

மலேசியா – மூன்று நிகழ்வுகள்

1. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் (மலேசியா)

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தேசிய அளவில் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் மலேசிய கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நடனம் பாடல்கள் போன்றவற்றையும் அரங்கேற்றின. பரதநாட்டியம், சீன நாகா நடனம், மலாய் நடனம் என்று கலை மேடை படைப்புகள் மிகவும் பிரமாண்டமாக படைக்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டை வரவேற்போம்.

2. கடந்தாண்டு பள்ளியின் பரிசளிப்பு விழா

பள்ளியின் வருடாந்திர நிகழ்வான பரிசளிப்பு விழா இந்தாண்டு கூடுதலான அங்கங்களுடன் நடைப்பெற்றது. மாணவர்கள் மாறு வேடப் போட்டியில் பங்கெடுத்தது இவ்வருடம் எல்லோரையும் (தோட்டப்புறத்தைச் சார்ந்த அதன் பின்னனியைக் கொண்டவர்கள்) வியப்படைய வைத்தது. இந்த மாறுவேடப் போட்டியில் பெற்றோர்களும் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தேன்.
4 மாணவர்கள், விவேகானந்தர், திருவள்ளுவர், வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் மேலும் மீராபாய் என்ற 4 விதமான மாறுவேடங்களை அணிந்து குறிப்பிட்ட அந்த அறிஞர்களின் ஆளுமைகளை விளக்கும் சொற்கள் அல்லது வாசகங்களையும் சொன்னார்கள். அங்குள்ள பெற்றோர்கள் அந்த மாறுவேடம் எந்த அறிஞரைக் குறிக்கிறது எனக் கண்டறிந்து ஒரு தாளில் எழுதி அறிவிப்பாளரிடம் கொடுக்க வேண்டும். சரியாக அனுமானித்து முதலில் வந்து கொடுப்பவருக்கே பரிசு என்று தீர்மானிக்கப்படது. எல்லோரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நகர்ப்புரப் பள்ளிகளில் இந்தப் போட்டி வழக்கமானதாக இருந்தாலும், எங்கள் தோட்டப்புறப் பள்ளியில் நிகழும் முதல் நிகழ்வாகும் என்பதால் எல்லோருக்கும் உற்சாகம் வலுவடைந்தது.
3. 2010 ஆம் ஆண்டின் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்

எங்கள் பள்ளியில் இந்தாண்டு 11 மாணவர்கள் ஒன்றாம் ஆண்டில் பதிந்துள்ளனர். கடந்த வருடத்தைக் காட்டிலும் இவ்வாண்டு குறைவான பதிவே நடைப்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்திலிருந்து குடிப்பெயர்ந்து போனவர்கள் தற்பொழுது 5 வகையாக குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் குடும்பங்களிலிருந்துதான் இன்றளவும் மாணவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று பள்ளியின் முதல் நாள் என்பதால் ஆச்சரியமாக ஆர்.டி.எம் தொலைக்காட்சி நிறுவனம் எங்களின் மாணவர்களையும் பள்ளியின் தொடக்க நாள் நடவடிக்கைகளையும் பதிவு செய்து செய்தியில் காட்ட வந்திருந்தனர். ஒருசில மாணவர்கள் 11மணிவரை அழுது கொண்டேதான் இருந்தார்கள். வீட்டின் பிடிமானத்திலுருந்து புற உலகத்தின் வாசலில் வந்து நிற்கும் குழந்தைத்தனத்தின் முதல் பதற்றம். சிறுக சிறுக புற சக்திகள் அவற்றை விழுங்கி, எதார்த்தங்களை உற்பத்திக்கும். இதுதான் ஒன்றாம் ஆண்டின் மாணவர்களின் அகமாற்றங்கள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி

Friday, January 1, 2010

மணல் என்கிற விரக்தி அல்லது வெயிலின் பிம்பம்

மணலில் அப்படி என்ன செய்ய முடியும்? ஓடுவதற்குக் கூடுதலான முயற்சியும் சாமர்த்தியமும் வேண்டும், நடப்பதற்கு கொஞ்சம் நேரமும் பொறுமையும் வேண்டும், அமர்ந்து கொள்வதற்கு கொஞ்சம் இறந்தகாலத்தின் நினைவுகள் வேண்டும்.வெளிப்படையான நமது உடல் ரீதியிலான பலவீனங்களை மறைத்துக் கொள்வதற்கு, எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட சாகசங்களில் ஈடுபடவும் சிலர் மணலுக்கு வருவதுண்டு.


மணலின் நிலப்பரப்பில் கண்டடையும் எல்லாம் தோல்விகளும் ஒரு கவிதை போல கடந்துவிடும் அல்லது வாசிக்கப்படும் பின்பு கலையாகிவிடும். மனுஷ்ய புத்திரனின் மணலைப் பற்றிய ஒரு பிரபலமான கவிதை உண்டு. வாழ்வின் தருணங்களை அதில் நிகழும் அன்பின் புறக்கணிப்புகளை மணலைப் போல கற்பித்து மணலில் அவர் வரைந்திருக்கும் கவிதை பாராட்டுதலுக்குரியவை.

இங்கே எனக்குக் கிடைத்த சில புகைப்படங்களைத் தருகிறேன். இவர்கள் மணலில் செய்திருக்கும் சாகசம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. சமாதானம் அமைதி, வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்கள் என தொடங்கி அதன் பதிவுகள் உலக அரசியலின் குறியீடுகளையும் தீண்டுகிறது.


மணலை ஒரு விரக்தியென ஏதோ ஒரு கவிஞர் எழுதி வாசித்ததாக நினைவுண்டு. மணலை எதிர்க்கொள்ள கொஞ்சம் கூடுதலான சாமர்த்தியமும் சக்தியும் வேண்டுமென்பதால், அதை விரக்தியாக்கிவிட்டார்கள். சிலர் மணலை வெயிலின் கைகள் எனவும் சொல்வார்கள். அடிப்பாதங்களை எரிக்கும் நெருப்பு குழம்பின் துகள்கள் என எனது அறிவியல் ஆசிரியர் ஒருமுறை சொன்னதுண்டு.

இங்கே மணலை இவர்கள் ஒரு ஓவியமாக்கி இருக்கிறார்கள்.



மணலைப் பற்றிய ஒரு கவிதை

அத்துனை உரையாடல்களும்
முடிவடைகின்றன
காதல் மட்டும் தொடர்கிறது.
அன்பின் படிமத்தில்
வெயிலின் நிழல்
ஊர்கிறது ஒரு பெருங்காவியமென.

கே.பாலமுருகன்
மலேசியா

Tuesday, December 29, 2009

அவதார் – பழங்குடி மூதாதையர்களின் சொற்களும் அரசியலின் பிரமாண்டமும் (சினிமா)

“நிசத்தை நோக்கிய புனைவு ஆனால் லௌதிக யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவை இந்த அவதார்” -ஜேம்ஸ் கேமருன்

அவதார் சினிமா ஜனரஞ்சகமான முறையில் தொழில்நுட்பத்தின் அத்துனை பிரமாண்டங்களையும் பிரயோகித்து எடுக்கப்பட்ட காத்திரமான அரசியல் விமர்சனங்களுடன் அதிகார சக்திகளுக்கு எதிரான சினிமா என அடையாளப்படுத்த முடிகிறது. படத்தில் இடம்பெறும் அறிவியல் அணுமானங்களும் பிரயோகங்களும் வியக்க வைப்பதோடு அறிவியல் யுகத்தின் மாற்று பரிணாமங்களையும் பரிந்துரைக்கிறது. 11க்கும் மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளை வென்ற டைட்டாணிக் சினிமாவின் இயக்குனர் ஜேம்ஸ் கேமருன் அவர்களின் இயக்கத்தில் அமெரிக்காவின் அறிவியல் புனைவு திரைப்படமாக வெளிந்திருக்கும் இப்படம் 1994 தொடங்கியே 114 பக்கங்களுக்கு திரைக்கதை எழுதப்பட்டு கற்பனை செய்யப்பட்டவையாகும்.

கற்பனை ஆளுமை தமிழ் சினிமாவில் வரண்டு வரும் காலக்கட்டத்தில், இந்துத்துவ சொல்லாடலை முன்வைத்து “அவதார்” என்கிற பெயருடன் மாற்று உலகத்தின் பிரமாண்டங்களை அதிசயத்தக்கும் வகையில் கற்பனையின் உச்சங்களுடன் படைத்திருப்பது ஜேம்ஸ் கேமருன் அவர்களின் 10 வருடத்திற்கும் மேலான ஆய்வின் வெற்றியைக் காட்டுகிறது. எந்தத் திரைப்படமாக இருந்தாலும் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், பிராந்திய அரசியல் என்கிற ரீதியில் ஆய்வுச் செய்யப்பட்டு முழு தகவல்களையும் சேகரித்து எடுக்கப்படுபவையாக இருக்க வேண்டும்.

2154 ஆம் வருடத்தில் பண்டோரா எனும் நிலவு போல இருக்கும் கிரகத்தில் ஒரு மாபெரும் மரத்தில் வசிக்கும் நாவிஸ் எனும் பழங்குடியினரை அங்கிருந்து துரட்டியடித்து அந்த நிலத்தைக் கைப்பற்றுவதற்காக அறிவியல் தொழில்நுட்பங்களுடனும் இராணுவ படையுடனும் அங்கு நுழையும் மனித படைக்கும் அந்தப் பழங்குடிவாசிகளுக்கும் இடையே ஏற்படும் போராட்டம்தான் கதையின் மையம். அதிகார சக்திகள் தனது அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி எளிய மக்களின்/ பழங்குடி மக்களின் நிலத்தையும் உரிமையையும் பறிக்கும் செயலைக் கண்டிக்கும்/விமர்சிக்கும் வகையில் மாய யதார்த்த புனைவுடன் இப்படத்தின் கதை கையாளப்பட்டிருக்கிறது.

அந்தப் பழங்குடிவாசிகளுடன் பழகி அவர்களின் இருப்பையும் வாழ்வையும் புரிந்துகொண்டு அவர்களைக் கையாள்வதற்காக அவர்களைப் போலவே உருவம் கொண்ட (டி.என்.ஏ கலப்பின் மூலம்) தயாரிக்கப்பட்டு, இராணுவ வீரர்களின் மூளையின் செயல்பாடுகளை அந்த உடலுக்குள் செலுத்தி இயங்க வைக்கிறார்கள். நிச உடல் இங்கிருக்க மூளையின் செயல்பாடுகள் மற்றும் சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் இடம் மாற்றப்பட்டு, பழங்குடியைப் போல உருவம் கொண்ட நகலுக்குள் செலுத்தப்பட்டு, அந்தப் போலி பழங்குடிகளைப் பரிசோதனை முயற்சிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

படத்தின் கதாநாயகன் கால் ஊனமுடையவன். அவனுடைய மூளை அவனது புதிய உடலான பழங்குடி உடலுக்கு மாற்றப்படும்போது, தனது கால்கள் வேகமாக இயங்குவதன் அதிசயத்தையும் அனுபவத்தையும் கண்டு வியந்து தூரமாக ஓடி தனது புதிய சக்தியைக் கொண்டாடுகிறான். பிறகு காட்டில் சிக்கிக் கொள்ளும் அவன் அங்குள்ள வித்தியாசமான மிருகங்களால் தாக்கப்படும்போது இன்னொரு நிசமான நாவிஸ் பழங்குடியைச் சேர்ந்த பெண் ஒருத்தியால் காப்பாற்றப்பட்டு, அவர்களின் ஒருவனாக மாறும்வரை பல சோதனைகளைக் கடந்து வருகிறான். இறுதியில் அந்தப் பழங்குடியின் நிலத்தைப் பறிக்கும் அதிகார சக்திகளுக்கு எதிராக இயங்குவதன் மூலம், அவர்களில் ஒருவனாக தன்னை அங்கீகரித்துக் கொள்கிறான். இதைக் கண்டறியும் இராணுவ படைத்தளபதி அவனை மீண்டும் தன்னுடைய நிச உடலுக்குக் கொண்டு வந்துவிடுகிறான். அதையும் முறியடித்துக் கொண்டு அவன் மீண்டும் பழங்குடியின் உடலுக்குள் நுழைந்து அவர்களின் உரிமைக்காக அவர்களின் நிலப்பரப்புக்காக போராடி நாவிஸ் பழங்குடியின் தளபதியாக இயங்கி, இறுதியில் நாவிஸ் பழங்குடியாகவே நிலைப்பதன் மூலம் அவனது உயிர் புதிய அவதாரத்தை அடைகிறது. இதுவே கதையின் மிக எளிமையான சுருக்கம்.

நாவிஸ் பழங்குடியின் புனித மரத்தைப் பற்றிய தகவல் மிக அழகாக உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒட்டுமொத்த பழங்குடியின் இயக்கமும் இருப்பும் அந்த மரத்தின் தேவியான ஈவா என்பவளாலே தீர்மானிக்கபடுவதாகும், ஈவாவின் கண்களின் வழியாக இந்தக் காட்டையும் இந்த இயற்கையையும் காண வேண்டும் தரிசிக்க வேண்டும், அப்பொழுதே உயிர்களின் மகத்துவத்தை அடைய முடியும் என்றும் கற்பிக்கப்படுகிறது. மேலும் அந்தப் பழங்குடியின் தலை முடியின் சடையை அந்தப் புனித மரத்தின் தொங்கும் வேர்களின் நுனியில் இணைப்பதன் மூலமே ஈவாளுடன் நாம் நமது வேண்டுதலை முன்வைக்க முடியும். புனித மரத்தின் ஒவ்வொரு வேர்களிலும் அந்தப் பழங்குடி மக்களின் மூதாதையர்களின் சொற்கள் குரல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குரல்கள் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.

பழங்குடியின் காட்டை அழிக்க வரும் மனித படைகளைத் தகர்ப்பதற்காக ஈவாளின் ஆசியுடன் இயற்கையையும் இயற்க்கையின் வழி பெறப்பட்ட சக்தியையும் பயன்படுத்தி அவர்களைத் தோற்கடிப்பது மிகப் பிரமாண்டமான அரசியலை முன்வைத்து காட்டப்படும் புனைவாகவே பார்க்க முடிகிறது. தொழில்நுட்பத்திற்கும் மனித வேட்டைக்கும் இயற்க்கைக்கும் மத்தியில் நிகழும் இந்தப் போரின் அதிசயமே அவதார். இயற்கையின் மீது செலுத்தப்படும் அத்துமீறல்களையும் மனித அதிகாரத்தின் விரிவாக்க ஆக்கிரமிப்புகளையும் மிகவும் சாமர்த்தியமாக விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் புனைவை ஜேம்ஸ் கேமருன் துணிச்சலான சினிமா என்கிற வகையில் தந்திருப்பது அமெரிக்கா திரைஉலகத்தின் கமர்சியல் கட்டுமானத்தைக் கட்டவிழ்ப்பதாக அமைந்திருக்கிறது.

அந்தப் பழங்குடி பெண் ஒரு கட்டத்தில் சொல்லும் ஒரு வரி இன்னமும் மனதை நம் யதார்த்தங்களுக்கு வெளியே வைத்து நெளிய விடுகிறது.

“இந்த உடல், உயிர் இயற்கையிலிருந்து பெறப்பட்ட சக்தி, மரணம் என்பது அதைத் திரும்பி இயற்கையிடமே ஒப்படைக்கும் ஒரு சடங்கு”

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, December 24, 2009

சிறுகதை சிறப்பிதழாக : அநங்கம் மலேசிய இலக்கிய இதழ் (டிசம்பர் 2009)

சிறுகதைகள் :

1. யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள் - ஜெயந்தி சங்கர்
2. கோலா பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர் வரை -
முனிஸ்வரன் குமார்
3. சில இறுதி பக்கங்கள் - ஏ.தேவராஜன்
4. 6 - மாதங்கி (சிங்கப்பூர்)
5. பெண்மையை மறுதலித்தல் - சிதனா
6. ஏந்தல் - மஹாத்மன்
7. குறுக்கெழுத்து - ராஜம் ரஞ்சனி
8. தூண்டில் - எம்.ரிஷான் செரிப்
9. நாளை 9 மணிக்கு இறந்துவிடுவேன் - கஸ்தூரி சுப்ரமணியம்
10.நுகத்தடி - கமலாதேவி சிங்கப்பூர்
11.மனுசன் - சித்ரா ரமேஸ்
12.மிதக்கும் கனவுகள் - கோ.புண்ணியவான்
13.ஒரு அதிகாலையும் மணியம் பேருந்து கடன்காரர்களும் - 
      கே.பாலமுருகன்

கவிதைகள்:

பா.அ.சிவம்
ந.பச்சைபாலன்
இளைய அப்துல்லாஹ்
தினேசுவரி

பத்தி

சை.பீர்முகமது
அ.விக்னேசுவரன்
ஏ.தேவராஜன்

ஆசிரியர்:                   கே.பாலமுருகன்
துணை ஆசிரியர்: ஏ.தேவராஜன்
ஆசிரியர் குழு:       ப.மணிஜெகதீசன்
                                        கோ.புண்ணியவான்

Tuesday, December 22, 2009

மீள முடியாத பால்ய சித்திரங்களும் கார்ட்டூன்களின் மீதான வன்முறையும்

மின்னஞ்சலில் நகைச்சுவை சித்திரங்கள் வந்திருந்தன. குழந்தைகளின் விருப்பமான கார்ட்டூன்களின் கதாநாயகர்கள் 50 வருடத்திற்குப் பிறகு எப்படி இருப்பார்கள் என்கிற கற்பனையை மையமாகக் கொண்டு வரையப்பட்ட சித்திரங்கள் அவை. சூப்பர்மேன், பைடர்மேன், பார்பி டோல் போன்ற குழந்தைகளின் கதாநாயகர்கள் வயதான தோற்றத்துடன், தளர்வின் பிம்பமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தபோது ஒட்டுமொத்த பால்யத்தின் அதிசயங்களையே கேலி செய்வது போன்ற முயற்சிக்குரிய சித்திரங்களாகத் தெரிந்தன.

குழந்தைகள் தனது பால்யத்தைக் கடந்துவிடுகிறார்கள் ஆனால் குழந்தை பருவம் அப்படியே ஒரு விளையாட்டு மைதானம் போல அடுத்து வரும் குழந்தைகளின் இரைச்சல்களுக்காகவும் காலடி சப்தங்களுக்காகவும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது. இதுதான் பால்யம் என்கிற மாபெரும் கனவின் தரிசனம். எல்லோரும் சென்றடையக்கூடிய ஒரு பாதையின் சந்திப்பு, கடந்துவிட்டாலும் அவை ஒரு நினைவாக நமக்குள் பதிந்துவிடுகின்றன.

எனது குழந்தை பருவம் டோம் அண்ட் ஜெர்ரியின் துரட்டிப் பிடிக்கும், எவ்வளவு துரட்டியும் பிடிப்படாமல் தப்பிக்கும் ஜெர்ரியின் தப்பிதல் சாகசத்திற்கு நிகரானது. சிறு சிறு முயற்சிகளுக்குப் பிறகே மறந்துபோன எனது பால்ய நினைவுகளை மீட்டுக் கொண்டு வர முடிகிறது. டோம்மை போல அதிவேகமாக கடந்த காலத்தைத் துரட்டி பிடித்து சௌகரியமான புரிதலுக்குக் கொண்டு வரும்போது குழந்தையில் எனது கார்ட்டூன் கதாநாயர்கர்களும் உடன் வந்துவிடுவதுண்டு. அப்பொழுது நான் பார்த்த டோம்மிற்கும் ஜெர்ரிக்கும் வயதாகியதே கிடையாது. இன்னமும் அவர்கள் துரட்டிக் கொண்டும் ஓடிக் கொண்டும் தப்பித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.

“இந்த டோம் எப்பத்தான் ஜெர்ரியைப் பிடிச்சி சாப்டபோது?”
“இவ்ள கஸ்டப்பட்டும் அந்த ஜெர்ரியத்தான் சாப்டனுமா டோம்?”

சொற்கள் பால்யத்தின் மீதான படிமத்தில் அணை உடைந்து கட்டுக்குள் சிக்காத நீரைப் போல பாய்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் பால்யத்தின் சொற்கள் ஒழுங்கிற்கு எதிரானதாக தனக்கான சுவார்சயங்களை உற்பத்தி செய்துகொண்டே கடக்கின்றன. கார்ட்டூன்களை மிக கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் சொற்களை அவர்களின் அவதானிப்புகளை நீங்கள் பார்த்ததுண்டா? அவை நமக்கு ஒவ்வாத ஒரு வடிவத்தில் நகரக்கூடியவை. பெரியவர்களின் முதிர்ச்சி எப்பொழுதும் அந்தக் கற்பனைகளுக்கும் சொற்களுக்கும் விரோதமானதாகவே இருந்து வருகின்றன.

“அப்பா. . சூப்பர்மேன் இப்பெ வானத்துலதானே இருப்பாரு?”

கார்ட்டூன் கதாநாயகர்களின் ஸ்டிக்கர் படங்களைச் சேகரிப்பது, அவர்களின் சித்திரங்களைச் சுவரில் அரையும்குறையுமாக வரைந்து வைப்பது, கார்ட்டூன் மனிதர்களின் படம் வரைந்த தலையனை முதல் சட்டைவரை அணிந்து கொள்வது என குழந்தைகளின் உலகம் கார்ட்டூன்களானவை. அவை மீள முடியாத ஒரு பால்யத்தின் சொல் போல மிகவும் சக்தி வாய்ந்தவை. பெரியவர்களுக்கு மிக அற்பமாகத் தோன்றும் கனவுகளின் இலைகளால் பிண்ணப்பட்டவை அவர்களின் உலகம்.

மின்னஞ்சலில் வந்த இந்தக் கார்ட்டூன்களுக்கு வயதானால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை பெரியவர்களின் முதிர்ச்சிக்குரிய கேலியாக குழந்தைகளின் உலகத்தை அடியில் கீறிவிடுவது போல, அவர்களின் கனவுகளின் சிறகுகளை அபக்கறிப்பது போல மிகக் கொடுமையானதாகப் படுகிறது.

சூப்பர்மேன் தளர்ந்துவிட்டான் என்பதும், அல்லது பைடர்மேன் இறந்துவிட்டான் என்பதும் குழந்தைகளின் உலகம் தனது சுவார்சயங்களை இழந்துவிட்டதற்கான தொடக்கமாகும். அதே போல பால்யத்தைக் கடந்துவிட்ட பெரியவர்களுக்கும், கார்ட்டூன்களின் சித்திரங்கள் மீது செலுத்தப்பட்ட இம்மாதிரியான கிண்டலகளும் கேலிகளும் அவர்களின் குழந்தை பருவத்தின் நினைவுகளைச் சிதைப்பதற்கு நிகரான வன்முறையாகவே அவதானிக்க தோன்றும்.

எனது பழைய வீட்டில் என் அறை சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் கார்ட்டூன் ஸ்டிக்கர்களுக்கு வயதாகிவிடுவதில்லை. இன்னமும் அவைகள் எனது சுவரில் மிதந்து கொண்டிருக்கின்றன பால்யத்தின் மீள முடியாத கனவுகளாக.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                   மலேசியா