Thursday, July 29, 2010

சிறுகதை: வெள்ளைக்குடையும் இரண்டாவது மழை நாளும்


இரண்டாவது மழை நாளின் ஒரு மதியத்தில்

அன்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான சீனர்கள் மேட்டுப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டிருந்தனர். அப்பாவையும் அம்மாவையும் வீட்டின் மேற்கூரைக்கு அடியிலுள்ள சுயமாகக் கட்டி வைத்த வாங்கின் மீது அமர வைத்திருந்தோம். வீட்டை அப்படியே விட்டுச் செல்ல யாருக்கும் மனமில்லை. அக்கா பையனும் நானும் சாமி அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த நீரை அள்ளி வெளியே வீச வேண்டியிருந்தது. எத்துனை முயன்றாலும் தண்ணீர் சிறு சிறு ஓட்டைகளின் வழி உடைந்து உள்ளே வருவது உறுதியென தெரிந்தும் கைகள் ஓயாமல் இயங்கிக் கொண்டுதானிருந்தது.

“டெ. ஜோனி அடிச்சிக்கிட்டுப் போவப் போது. . கட்டி வச்சிருந்தான்”

அப்பாவால் உயரத்தில் அமர்ந்திருக்க முடியவில்லை. கால்களில் புண், மேலும் நீரிழிவு நோய் இருப்பதால் அவரைத் தண்ணீரில் இறங்க அனுமதிக்க இயலவில்லை. வெறுமனே வீட்டின் தரையில் தண்ணீர் பாய்ந்து ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி, அவ்வப்போது எதையாவது ஞாபகப்படுத்தி எச்சரித்துக் கொண்டே இருந்தார்.

வீட்டில் அரை இருள் கவ்வியிருந்தது. வெளியில் பெய்து கொண்டிருந்த மழையின் அடர்த்தி கம்பம் முழுவதும் ஒரு வரட்சியையும் அமைதியையும் பரப்பிவிட்டிருந்தது. முன் வாசல் கதவின் மேற்பரப்பை முட்டிக் கொண்டிருந்த நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த செங்கல்களை முட்டுக் கொடுத்திருந்தேன். அதை அடிக்கடி சரிப்பார்த்து கொள்ளவில்லையென்றால் நீர் ஓட்டம் சட்டென கதவைத் தள்ளிக் கொண்டு குப்பைகளையும் பூரான் பாம்புகளையும் சேர்த்து கட்டி இழுத்துக் கொண்டு உள்ளே வந்துவிடும்.

வீட்டிற்கு வெளியிலுள்ள சாலையில் யாரும் இல்லை. வெறும் தண்ணீர் மட்டும் சலசலத்துக் ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் யாரோ வெள்ளை குடையைப் பிடித்துக் கொண்டு வருவது தெரிந்தது. மழையின் அடர்ந்த தூரலில் அந்த உருவம் கண்களுக்குச் சரியாகச் சிக்கவில்லை. கண்ணாடியை இறக்கி கூர்ந்து கவனித்தேன். மழைப் பெய்து எங்கள் கம்பத்தில் வெள்ளம் ஏறிவிட்டால் அருகாமையிலுள்ள
குடியிருப்பிலிருந்து அப்பாவிற்குத் தெரிந்த நண்பர்கள் உதவிக்கு வருவதுண்டு. ஒருவேளை கர்ணாவின் அம்மாவாக இருக்கக்கூடும் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறுக சிறுக அந்த உருவம் ஒரு வெள்ளைக் குடையாகவே பெருத்துவிட்டது போல இருந்தது. அருகில் வந்ததும் அது அனுராதாவின் தம்பி சாமியைப் போன்ற உருவம் எனத் தெரிந்துகொள்ள முடிந்தது.

அடர்ந்த மழை நாள் ஓர் ஆபத்திற்குரிய பொழுதாக இருக்கக்கூடும். சட்டென கண்ணாடியை அடைத்துவிட்டு மூச்சிரைக்க அம்மாவும் அப்பாவும் அமர்ந்திருக்கும் வாங்கிற்குக் கீழாகப் போய் நின்று கொண்டேன். உடல் முழுவதும் நடுக்கம் கூடியிருந்தது. பிறர் அதைக் குளிரால் ஏற்பட்டதென நினைக்கக்கூடும். வெளியில் நின்று கொண்டிருப்பது அனுராதாவக்கூட இருக்கலாம். அவளும் அவளுடைய தம்பி சாமியும் பார்க்க ஒரே மாதிரித்தான் இருப்பார்கள். வெறுமைக்கு அடியில் கால்கள் சிக்கியிருந்தன.



குறும்பகுதி 1

அனுராதா குடும்பம் அன்றுதான் கம்பத்திற்குப் புதியதாக வந்திருந்தார்கள். எங்கள் வீட்டிலிருந்து 4 வீடு தள்ளி ஒரு சீனக் கிழவனுடைய வீட்டிற்குப் புதியவர்கள் வரப்போகிறார்கள் என அம்மா சொல்லிக் கேட்டிருந்தேன். சிவப்பு ஆமைக் காரில் அவர்கள் வந்து சேர்ந்த நேரம் கம்பத்தில் அடர்ந்த மழைப் பெய்து கொண்டிருந்தது.

“இதுங்க வரும்போதே மழ பேயுது. எங்க உருப்படறது”

பக்கத்து வீட்டு அம்மாளு அக்கா அம்மாவிடம் கூறியதைக் கேட்க முடிந்தது. நான் ஆர்வத்துடன் அவர்களின் கார் நகர்ந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் காரில் இரு பிள்ளைகள் இருப்பதைப் பார்க்க நேர்ந்த மறுகணத்திலிருந்து கம்பத்தில் புதிய சிறுவர்கள் வந்துவிட்டார்கள் என உள்ளுக்குள் குதுகலமாக இருந்தது.

“டேய். அதுங்ககூடல்லாம் போய் பேசி வெளாண்டுகிட்டு இருக்காதெ. என்னா?”

அந்த அம்மாளு அக்கா கண்களை அகலமாக விரித்து மிரட்டினார். நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா ஏதோ முனகிவிட்டு உள்ளே போய்விட்டார். 4 வீடு தள்ளி குடிவந்திருக்கும் அனுராதாவின் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர்தான். அவளுடைய அப்பா, அம்மா, அனுராதா, அவளது தம்பி சாமிநாதன். சாமிநாதனுக்கும் எனக்கு ஒரே வயது. அவனுக்கு அப்பொழுதே உடும்பு பிடிப்பதில் திறமை இருந்திருக்கிறது.

அன்று மாலை இலேசான மழைத்தூரல். சாமிநாதன் அவன் அக்காவுடன் எங்கள் வீடுவரை வந்திருந்தான். வெளியில் அவர்கள் ஒரு வெள்ளைக் குடையுடன் நின்றிருப்பதைக் கண்டதும் எனக்கு ஆர்வம் மிகுந்தது. கதைவைத் திறப்பதற்குள் அம்மாளு அக்காவின் தம்பி கணபதி அவர்களுடன் பேசத் தொடங்கியிருந்தான். அநேகமாக அவனுக்கும் அனுராதாவிற்கு ஒத்த வயதாக இருக்கலாம் போல. இருவரும் ஒரே உயரத்தில் இருந்தனர்.

“தோ. . இவந்தான் இந்த வீட்டுப் பையன். குமாரு.”

என்னைக் காட்டி கணபதி அண்ணன் அவர்களிடம் அறிமுகப்படுத்தினான். எனக்கு வெட்கமாக இருந்தாலும் அதைச் சமாளித்துக் கொண்டு சிரித்து வைத்தேன். இருவரும் மழையில் பாதி உடை நனைந்தவாறு அந்தச் சிறு குடைக்குள் நெருக்கமாக நின்றிருந்தார்கள். அனுராதா அணிந்திருந்த கருப்புப் பாவாடையின் விளிம்பிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மழையில் இலேசாக நனைந்திருந்த அவளின் கூந்தல் தலையோடு ஒட்டியிருந்தது.

“வந்திருச்சிங்களா? ஐயோ! வீட்டுப் பக்கமே சேக்கக்கூடாது”

அம்மாளு அக்கா கத்திக் கொண்டே வெளியே ஓடி வந்தார்.


குறும்பகுதி 2

அனுராதாவின் வீட்டில் அந்த மரணம் நிகழ்ந்திருக்கக்கூடாது. அவளுடைய அப்பாவை அறையிலுள்ள சட்டத்திலிருந்து இறக்கினார்கள். கழுத்தில் நெறித்துக் கொண்டிருந்த புடவையும் விழிப் பிதுங்கிய அனுராதாவின் அப்பாவின் உடலும் மிரட்டலாக இருந்தது.

“பாய் எதாச்சாம் இருக்கா?”

கீழே விரிக்க அனுராதாவின் வீட்டில் பாய் இல்லை. சாமிநாதன் அறைக்குள் சென்று அம்மாவின் இன்னொரு புடவையைக் கொண்டு வந்து நீட்டினான். அவன் கண்களைக் கூர்ந்து கவனித்தேன். அவன் அழமால் எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். எனக்கு வியப்பாக இருந்தது. எனக்குத் தெரிந்து பலர் சொல்லியிருக்கிறார்கள், அப்பா அல்லது அம்மா இறந்துவிட்டால் பிள்ளைகள் அழுவார்கள் என. சாமிநாதன் மட்டும் எப்படிச் சிரித்துக் கொண்டிருக்கிறான்?

அனுராதா வீட்டிற்குள் யாரும் நுழையவில்லை. எல்லாரும் வெளியில்தான் நின்றிருந்தார்கள். அவளுடைய அம்மா சுவரின் மூலையில் அமர்ந்துகொண்டு யாருக்கும் கேட்காதபடிக்கு சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தார். அவள் வீட்டில் கவ்வியிருந்த அரை இருளில் எல்லாமும் பயங்கரமாகத் தெரிந்தது.

“செத்தவங்க வீட்டுலெ ஆவி இருக்கும். . வா போலாம்” என அம்மா என்னைப் பிடித்து இழுத்தார். அடை மழைப்பிடித்த போது எல்லாரும் அவரவர் வீட்டிற்கு ஓடினர். அனுராதாவின் மாமாவும் சித்தாப்பாக்களும் சேர்ந்து அங்கு ஏதோ செய்து கொண்டிருந்தனர். வெள்ளைக்குடையைப் பிடித்துக் கொண்டு சாமிநாதன் வெளியில் நின்றிருந்தான்.


இரண்டாவது மழை நாளின் ஒரு மதியத்தில்

மழை இன்னமும் நிற்கவில்லை. வெள்ளத்தின் அளவு இலேசாகக் கூடியிருந்ததில் எனக்குள் பயம் அதிகரித்தது. வெளியில் அந்த வெள்ளைக்குடை மிதப்பது போல தெரிந்தது. கண்ணாடியைத் திறந்து பார்வையிடவும் தைரியமில்லை. அக்கா பையன் வந்து கேட்டான்.

“மாமா தாத்தாவையும் பாட்டியையும் கூட்டிட்டுப் போயிரலாமா? இது நிக்காது போல”

வேண்டாம் என மறுத்துவிட்டேன். மழை நின்றுவிட்ட பிறகு வெள்ளம் தனிந்துவிடும் என நம்பினேன். ஒவ்வொருமுறையும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. அப்பா அசதியில் உறங்கிவிட்டிருந்தார். அம்மா அவரின் தோளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். வாசலில் தெரிந்த வெள்ளைக்குடை எனக்கு மட்டும் தெரியக்கூடிய மாயையாக இருக்கக்கூடுமோ? அங்குப் பார்ப்பதைத் தவிர்த்துவிடவே நினைத்தேன். காட்சிகள் சுருங்க வெறும் வெள்ளைக்குடையும் மழைத் துளிகளும் கண்களில் தூரத் துவங்கின.

“டே! ஜோனியெ பாத்தியா?”

அப்பா திடீரென எழுந்ததும் முதலில் ஜோனியைப் பற்றித்தான் கேட்டார். ஜோனி எங்கள் வீட்டு நாய். 13 வருடத்திற்கும் மேலாக வீட்டில் வளர்கிறது. பலமுறை பக்கத்து கம்பத்தில் இருக்கும் மலாய்க்கார சிறுவர்கள் ஜோனியைக் கொல்ல நினைத்தும், அவர்களின் முயற்சிகளை முறியடித்து தப்பி வந்துவிடும் ஆற்றலுடையது ஜோனி. சாமிநாதனுக்கு எங்கள் வீட்டு ஜோனியை ரொம்ப பிடிக்கும். பலநாள் ஜோனியைத் தொட்டுப் பார்ப்பதற்காக முயன்றிருக்கிறான். ஆனால் அம்மாவும் அம்மாளு அக்காவும் அவனை உள்ளேயே விடுவதில்லை. எதாவது சொல்லி அவனை விரட்டி விடுவார்கள்.

கதவைத் திறந்து வெளியே செல்ல வாய்ப்பில்லை. வேறு எப்படி ஜோனியை அங்கிருந்து தூக்கிக் கொண்டு வரமுடியும் எனவும் தெரியவில்லை. எங்கேயோ தூரத்தில் ஜோனி குரைத்துக் கொண்டிருப்பது போல கேட்டது. அது பிரமையாகக்கூட இருக்கலாம்.

“டேய்! ஜோனி கொரைக்கரெ மாதிரி இல்லெ?”

அப்பாவிற்கும் அதே பிரமையாக இருக்கக்கூடும். புலம்பலுக்கு நடுவே கூரையில் தெரியும் சிறு ஓட்டையில் வெளியே பார்த்தார்.

குறும்பகுதி 3

அனுராதா குடும்பம் வந்த பிறகு பெய்த கனத்த மழை அது. ஒரு வாரம் இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. மழையின் மூன்றாவது நாளில் வழக்கம் போல வெள்ளம் ஏற்பட்டது. சாமிநாதனுக்கு இது அதிர்ச்சியாக இருக்கக்கூடும். அவன் அம்மா அவனைத் தலையில் வைத்துத் தூக்கிக் கொண்டு வெளியே வருவதைப் பார்த்தேன். அவன் அழுது கொண்டிருந்தான். அன்றுதான் சாமிநாதன் அழுவதைப் பார்த்தேன்.

அம்மாளு அக்கா அந்த வெள்ள நிலையிலும் அவர்களைப் பார்த்து ஏதோ கூறிவிட்டு காரி துப்பினார். எனக்கு அப்பொழுதும் அவர்களின் இருப்பு பற்றி கவலையாக இருந்தது. சாமிநாதன் அழுதுகொண்டே எங்கள் வீட்டைக் கடந்து சென்றான். அவன் முகத்தில் ஏக்கம் தெரிந்தது. அன்றென்னவோ மழை கடுமையாகத்தான் இருந்தது. அனுராதாவை அழைத்துக் கொண்டு வர அவரின் அம்மா மீண்டும் மேட்டுப் பகுதியிலிருந்து கீழே இறங்கினார். சாமிநாதன் மேட்டில் பலருக்கு மத்தியில் தனியாக நின்று கொண்டிருப்பான் போல.

அனுராதாவின் அம்மாவின் கால்கள் சதக் சதக் என தண்ணீருக்குள் மூழ்குவதும் மீண்டும் எழுவதுமாக இருந்தது. அம்மாளு அக்கா வீட்டை நெருங்கியதும் அந்த அம்மா சட்டென நின்றார். பலம் கொண்டு கால்களை உயர்த்தி முன்வாசல் கதவை ஓங்கி ஓர் உதைவிட்டார்.

“கழிச்சில போவ. உன் வாயில புழு பூத்து சாவெ” எனக் கூறிவிட்டு வேகமாக நடந்தார்.






குறும்பகுதி 4

அம்மாளு அக்கா இங்குக் கம்பத்திற்கு வந்து 6 ஆண்டுகள் இருக்கும். அன்றாடம் இரவில் அவருக்கும் அவளின் கணவனுக்கும் சண்டை நிகழ்வது அந்தச் சீனக் கம்பத்தில் அங்குமிங்குமாக குடியிருக்கும் எல்லாம் இந்தியர்களுக்கும் பெருத்த அவமானமாக இருக்கும். வீடு புகுந்து இருவரையும் அடித்து நொருக்க வேண்டும் எனக்கூட மேட்டு வீட்டு பாபுஜி அங்கள் சொல்லியிருக்கிறார். இருவரும் பேசிக் கொள்ளும் கெட்ட வார்த்தைகள் சுளிர் சுளிரென காதுகளைக் கிழித்துக் கொண்டு குருகி உள்நுழைந்து இம்சைப்படுத்தும்.

“உங்கம்மாளே. . . கட்டையிலெ போறவனெ”
“ஆமாம் நான் வச்சிருக்கென், நீ பாத்தியா?”

அநேகமாக அவர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்திருந்தால் அவர்களின் காதுகளில் இரத்தம் வடிவது உறுதி. அம்மாளு அக்கா வெளியே எங்காவது நடக்க நேரிட்டால் எல்லோரும் அவளுக்கும் அவளுடைய கணவனுக்கும் நடந்த சண்டையைப் பற்றி கேட்டுக் கொள்வார்கள். அது நாளுக்கு நாள் அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆகையால் எல்லோர் மீதும் வெறுப்புக் கொள்வதற்கு அவளிடம் ஏதாவது அர்த்தமற்ற காரணங்கள் இருக்கவே செய்கின்றன. வீதியில் நடக்கும் போதெல்லாம் அவமதித்துப் பேசி திட்டுவதற்கும் வசைப்பாடுவதற்கும் கிடைத்தவர்கள் அனுராதாவின் குடும்பத்தார்தான்.

மேல் வீட்டு மணியம் அண்ணனுக்கும் அம்மாளு அக்காவிற்கும்தான் அடிக்கடி வாக்குவாதம் முற்றிவிடும். இருவரும் தன் சுய வாழ்க்கையின் பலவீனங்களைப் பேசி அவமானப்படுத்திக் கொள்வார்கள். மேல் வீட்டு மணியம் அண்ணன் அன்று கொஞ்சம் கடுமையாகவே பேசிவிட்டிருந்தார். நானும் அம்மாவும் தவுக்கே கடையில் மேகி மீ வாங்குவதற்காகக் குடையைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தோம். கணத்த மழைக்கு நடுவே மேல் வீட்டு மணியன் அண்ணன் அம்மாளு அக்காவின் பின்கொண்டையைப் பிடித்து சாலையில் தரதரவென்று இழுத்து வந்து சாக்கடையில் தள்ளிவிட்டார்.

“டெ.. . செத்துருவடா நீ. அந்த அனுராதா அம்மாவுக்கு புருசன் இல்லன்னு போய் படுத்துக்கிட்டியாம்? உண்மையெ சொன்னா பொத்துக்கிட்டு வருதாடா நாயெ.” அம்மாளு அக்கா சாக்கடையிலிருந்து எழுந்து நின்றாள். அவளுடைய கால்கள் வழுவை இழந்திருந்தன.

“நீ வந்து எட்டிப் பாத்ததானெ? வாயெ மூடு. சும்மா கதை அளக்காதெ. உனக்கு என்ன வந்துச்சி?” மணியம் அண்ணன் கையில் இப்பொழுது ஒரு கட்டையை வைத்திருந்தான்.

“பறைச்சிகூட உறவு வச்சிக்கிட்டு எவன் வீட்டுல நீ தைரியமா கை நனைப்பெ?”

கம்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அம்மாளு அக்கா சொன்னதைக் கேட்டார்கள். அம்மாளு அக்கா தளர்ந்திருந்த தன் கைலியைத் தூக்கிக் கட்டியவாறு வேகமாக நடந்தார்.

மறுநாள் அனுராதாவின் வீட்டில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்திருந்தன. சாமிநாதனின் வாயில் நுரை தள்ளியிருந்ததைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. சின்ன பிள்ளைகள் செத்துக் கிடப்பதைச் சின்ன பிள்ளைகள் பார்க்கக்கூடாது என அம்மா என்னை அனுராதா வீட்டுப் பக்கமே வரவிடவில்லை.

இரண்டாவது மழை நாளின் ஒரு மதியத்தில்

அது நடந்து முடிந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. பக்கத்து வீட்டு அம்மாளு அக்காவின் கணவன் ஓடிப் போனப் பிறகு அம்மாளு அக்காவும் எங்கோ ஜோகூர்பாருவிற்குச் சென்றுவிட்டிருந்தார். அதன் பிறகு அவரைப் பற்றி தகவல் ஏதும் வருவதில்லை.

“டெ. . ஜோனிய பாருடா. . அது கத்தற மாதிரி இருக்கு”

அப்பாவிற்கு இனியும் சமாதானம் தேவைப்படாது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஜோனியைத் தூக்கிக் கொண்டு வந்து அப்பாவிடம் காட்டினால் மட்டுமே அவருடைய தவிப்பு அடங்கும். வெளியில் தெரியும் அந்த வெள்ளைக்குடையைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டாம் என முன்கதவை மெல்ல திறந்து வெளியேறினேன். அம்மாளு அக்காவின் வீட்டில் இருளின் அடர்த்தி வீட்டை முழுமையாகப் போர்த்தியிருந்தது. வெளியிலிருந்து அடித்துக் கொண்டு வந்த குப்பைகள் மூட்டைகள் எல்லாம் அவளின் வீட்டிற்குள் நுழைந்து அடைத்துக் கொண்டன.

ஜோனியை அடைத்து வைத்திருந்த கூண்டு சற்று மேலே தூக்கி வைத்து கட்டப்பட்டிருப்பதால் கொஞ்சம் எக்கினால் மட்டுமே ஜோனியை அங்கிருந்து காப்பாற்ற முடியும். வீட்டின் பின்புறத்திலுள்ள அந்த அறைக்கு வந்தேன். பாதிக்கு மேல் இருளுக்குள் காணாமல் போயிருந்தது. மேலே கட்டப்பட்டிருந்த கூண்டிற்குள்ளிருந்து சத்தம் குறைந்திருந்தது. கதவைத் தாராளமாகத் திறந்துவிட்ட பிறகு உள்ளே நுழைந்தேன். மெல்லிய வெளிச்சத்தில் கூண்டிற்கு அருகே அனுராதாவின் அம்மாவும் அப்பாவும் வாயில் நுரையுடன் சாமிநாதனும் நின்றிருந்தார்கள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
http://bala-bamalurugan.blogspot.com/

Thursday, July 22, 2010

ஒரு வகுப்பறையை உருவாக்குதல்

வகுப்பறையை உருவாக்குதல் என்பது சுவருக்குச் சாயம் அடித்தல், நாற்காலி மேசைகளை அடுக்கி வைத்தல், வர்ணப் படங்களைச் சுவரில் தொங்க விடுதல் என்பதுடன் முடிந்து விடக்கூடியதா? அத்தகைய புறத்தை உருவாக்கும் செயலுக்கும் அப்பாற்பட்டு அந்த வகுப்பில் படிக்கக்கூடிய சுப்புவிற்கும் குப்புவிற்கும் என்ன செய்யப் போகிறோம் என்பதன் கேள்வியிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது வகுப்பறை எனும் உலகம்.

சுவரை அலங்கரித்தலும், சாயம் பூசுதலும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருக்குமாயின் அங்கு உருவாகி வருவது கட்டாயம் வகுப்பறை கிடையாது, அது அந்த ஆசிரியருக்குக் கிடைக்கப் போகும் புள்ளிக்கான அறை மட்டுமே எனக் கருதுகிறேன். பலமுறை முயற்சித்தும் சில சமயங்களில் வகுப்பை அலங்கரிப்பதிலும் அழகுப்படுத்துவதிலும் தீவிரமான பங்களிப்பைக் கொடுக்க முடிவதில்லை. அடுக்கி வைக்கும் புத்தகங்களும் தொங்கவிடப்படும் படங்களும் சுவரிலிருந்து கோணலாகச் சாய்ந்து கொண்டு கேலியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கல்வி அமைச்சு சந்திப்புக் கூட்டத்தில் மலாய்ப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிப்புரியும் ஒருவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. சர்மிளா சாந்தி எனும் அவர் பட்டவெர்த் தாமான் செனாங்கான் எனும் தேசிய பள்ளியில் கடந்த 3 வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். தமிழ் சார்ந்த வகுப்பறையை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் ஆற்றலையும் உணர நேர்ந்தபோது ஓர் ஆசிரியரின் ஆக்கச் சிந்தனையை அதுவும் மலாய்ப்பள்ளியில் அதை அவர் உபயோகிக்கும் விதத்தையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுள் அத்தகைய சிந்தனை உடையவர்கள் பலர் இருப்பதும் உண்மையே. ஆனால் இந்த ஆசிரியை மலாய் மாணவர்களுக்கும் சேர்த்துதான் அந்தத் தமிழ் வகுப்பறையைச் சுயமாகத் தன் சொந்த செலவில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார். இனப்பேதமின்றி மொழியின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நல்ல தரமான கற்றல் சூழலை உருவாக்கிக் காட்டியிருக்கும் இவரைப் போன்ற ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அந்த வகுப்பைச் சிறுக சிறுக முறையாக வடிவமைத்து கட்டமைத்துள்ளார்.

2000க்கும் மேற்பட்ட பணச் செலவில் குமாரி சர்மிளா உருவாக்கியிருப்பது வெறும் வகுப்பறை மட்டும் அல்ல என்பதை உணர முடிந்தது. அதில் மாணவர்கள் கலகலப்புடனும் புதியதாக முளைத்த தெம்புடனும்
கற்றல் கற்பித்தலில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். குப்பனையும் சுப்பனையும்கூட ஆர்வமாகப் படிக்க வைக்கும் சூழலை உருவாக்கி வெற்றி பெறுவதுதான் வகுப்பறையை உருவாக்கும் உன்னதமான செயலின் வெளிப்பாடாகும்.

நாங்கள் சரஸ்வதி (சுங்கைப்பட்டாணி) தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும்போது புதியதாகக் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். புதிய வகுப்பறை, தரையிலிருந்து கசிந்து வெளிப்பட்ட காரையின் வாசம் மிகுதியாக நுகரப்பட்டது. சுவர் முழுவதும் வெறுமை மட்டுமே அப்பியிருந்தது. ஆகையால் நாள் முழுவதும் எந்த ஆர்வமுமின்றி நத்தை போல நகர்ந்தது மணித்துளிகள் என்றே சொல்லலாம். ஆனால் எங்களின் தமிழ் ஆசிரியை திருமதி.சந்திரிக்கா முதன் முதலில் சுவரில் திருக்குறளும் அதன் பொருளும் அடங்கிய எழுத்து அட்டையை ஒட்டினார். அதுவும் அட்டையின் ஓரத்தில் திருவள்ளுவரின் படமும் இருந்தது.

சுவர் முழுவதும் அன்று வர்ணம் தீட்டப்பட்டது போல அழகாகக் காட்சியளித்தது. நான் வெறுமையில் பார்த்துப் பழகிய அந்தச் சுவருக்குள் முதலில் வந்தவர் திருவள்ளுவர்தான். “யாரும் சுவரைக் கிறுக்கக்கூடாது” என்கிற அறிவுரைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டும் மாணவர்கள் எதையாவது கிறுக்கிப் பார்ப்பதில் பரவசம் கொண்டார்கள். வெறுமையையும் காலியான சுவரையும் மாணவர்கள் எப்பொழுதும்
வெறுப்பார்கள் என்பதும் நிதர்சனம்.சர்மிளாவின் தமிழ் வகுப்பறையில் மாணவர்கள் கிறுக்குவதற்கு இடமில்லாத அளவிற்கு அவர்களின் மனதையும் அறிவையும் செம்மைப்படுத்தும் வகையில் பல பயிற்றுத்துணைப்பொருள்களைச் சுயமாகச் செய்து அங்கே வைத்திருக்கிறார்.

சுவரில் தொங்கவிடப்படும் படங்களும் பயிற்றுத்துணைப் பொருள்களும் வெறும் அழகை நிரப்புவதாக இல்லாமல் ஏங்கித் தவிக்கும் மாணவர்களின் கல்வி தேவையையும் அறிவு தேவையையும் வளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்களின் உலகத்தில் நீட்டப்படும் அல்லது ஆடவைக்கப்படும் பொம்மலாட்டம் போல பாவை கூத்து போல வகுப்பறையின் சூழல் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருக்க வேண்டும். வகுப்பறை என்பது மாணவர்கள் வீடு திரும்பும்போது தங்களின் தோளில் மாட்டிக் கொண்டு வீடுவரை எடுத்துச் செல்லும் விளையாட்டு பொம்மை போல ஆகிவிட்டிருக்க வேண்டும். அவன் தன்னுடனே வைத்துக் கொண்டு உறங்கும் பொம்மை போல பல அழகான வடிவமைப்புடன் மிக நெருக்கமான உணர்வுடன் வகுப்பறையை உருவாக்க முடியும் என்பது ஒரு தன்னம்பிக்கையாகும். அவர்கள்  சர்மிளா போல விதைக்கப்பட வேண்டும்.


ஆக்கம்: கே.பாலமுருகன்
                 சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, July 9, 2010

மலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே எனக்குள் ஒரு கேள்விக்குறியாக மட்டுமே இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு சிலருடனான சந்திப்பிற்கும் கலந்துரையாடலுக்கும் பிறகு மலேசியாவில் இதுநாள் வரையில் முறையான சிறுவர் இலக்கியம் படைக்கப்படவில்லை. என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முதலில், மலேசியக் கல்வி பாடத்திட்ட அமைப்பில் படைப்பிலக்கியத்தை ஒரு கூறாக இணைக்கவே இங்குப் பலத்தரப்பட்ட எதிர்ப்பு இருக்கிறது. படைப்பிலக்கியம் அனாவசியமான ஒன்றாகக் கருதப்பட்டு நிராகரிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுருக்கிறது. தேர்வை முதண்மையானதாக முன்னிறுத்தும் பொது குறிக்கோளைச் சிதைக்கும் அம்சமாகப் படைப்பிலக்கியத்தைக் கருதும் ஒரு கூட்டம் எப்பொழுதும் சிறுவர் இலக்கிய வெளி உருவாக்கத்திற்குத் தடையாக இருந்து வந்திருக்கின்றனர். ஆகையால்தான் இங்கு இலக்கியம் என்பது பெரியவர்களுக்குரிய மொழியில் பெரியவர்களின் உலகத்தைப் பற்றியதாக இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியத்தைச் சீரமைக்கவும் முறைப்படுத்தவும் கையாள வேண்டியதுதான் இலக்கணம் என்பதையும் இலக்கியம் என்பது மட்டுமே ஒரு மொழியின் ஆன்மா என்பதையும் புரிந்துகொள்ள யாரும் முன்வருவதில்லை. மேலும் மரபார்ந்து வழக்கத்தில் இருக்கக்கூடிய இலக்கியத்திற்குரிய அர்த்தமும் பொருளும்தான் பல நல்ல தரமான புதிய சிந்தனைகளும் புதிய இலக்கிய வடிவமும் தமிழுக்குள் வருவதற்குச் சிக்கலாக அமைந்துவிடுகிறது.(இந்தக் கருத்தை முக்கியமான ஒரு கல்வி பின்புலம் சார்ந்த அதிகாரி தெரிவித்தது). இதை முற்றிலும் நான் ஆமோதிக்கின்றேன். எப்பொழுதும் தமிழுக்குள் கொண்டு வரப்படும் புதிய சிந்தனைகளும் கோட்பாடுகளும், ஏற்கனவே தமிழில் உள்ள மரபார்ந்த அர்த்தங்களுக்கு எதிராகப் புரிந்துகொள்ளப்படுவதால், குறைந்தபட்சம் அதை விவாதத்திற்கு முன்மொழியும் சந்தர்ப்பங்களைக்கூட இழக்க நேரிடுகிறது.

ஆகையால்தான், கல்வி அமைச்சு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் படைப்பிலக்கியத்தைக் கொண்டு வந்தபோது நாடளவில் அதற்கு எதிர்ப்பு உருவாகியது. சிறுவர்களின் உலகம் கதையால் ஆனவை, பல கதைச் சொல்லிகளைக் கடந்து உருவானதுதான அவர்களின் பால்யக்கால மனங்கள் மற்றும் அவர்களின் உலகத்தில் கதைகளுக்குத் தனித்த இடங்கள் உண்டு எனும் புரிதலுக்கு முற்றிலும் மாறுப்பட்ட எதிர்வினைத்தான் படைப்பிலக்கியத்தைத் தமிழுக்குள் கொண்டு வரக்கூடாது என்று ஒட்டு மொத்தமாக ஏற்பட்ட குரல் எனக் கருதுகிறேன். கதைகளைச் சிறுவர்களின் உலகத்திலிருந்து நிராகரிப்பது மிகப் பெரிய வன்முறையென கருதுகிறேன். அவர்களின் இயல்பான மனங்களைச் சிதைத்து வெறும் சமூக ஒழுக்க பிண்டங்களாகப் பிரதியெடுக்கும் ஒருமுயற்சிதான் கதைகளையும், பாடல்களையும் அவர்களிடமிருந்து பறிக்கும் செயல்.

மாணவர்களின் உளவியல் தத்துவங்களை நன்கு உணரக்கூடியவர்கள் மொழி, மரபு என்கிற கணமான மதிப்பீடுகளைக் கொண்டு சிறுவர்களைக் கட்டமைக்கிறோம் என்கிற பெயரில் அவர்களின் உலகத்தை வடிவமைக்க முயல மாட்டார்கள். மொழியின் மகத்துவத்தை உணர்த்தும் அல்லது பாடமாக நடத்துவதில் இருக்கின்ற தீவிரமும் நடவடிக்கைகளும் கதைகளால் ஆன அவர்களின் மனதை மீண்டும் கதைகளால் வளர்த்தெடுக்க முன்வருவதில் காட்டுவதில்லை. இதுவே சிறுவர்களின் மன அமைப்பிற்கு எதிரான வன்முறையாகக் கருதுகிறேன். பெரும்பாலான ஆசிரியர்கள் அவர்களுக்குப் பாடம் நடத்தவே முன்வருகிறார்கள். பாடம் முடிந்ததும் அன்று கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் வெறும் மனனமாகப் பதிக்கப்படுகின்றது. இதுவும்கூட தேர்வை முன்வைத்து உருவான ஒரு செயல்பாடுதான்.

மேலும் தற்பொழுது மட்டுமல்ல பலகாலங்களாக நடப்பில் உள்ள சிறுவர் இலக்கியம் குறித்து மதிப்பீடுகையில் இங்கு சிறுவர் இலக்கியமே இதுவரை படைக்கப்படவில்லை என்பதை உணர முடிகிறது. சிறுவர் இலக்கியம் என்பதற்குச் சிக்கலான புரிதலைக் கொண்டிருக்கும் பலர் சிறுவர்களைக் கதைப்பாத்திரங்களாகக் கொண்டிருக்கும் பெரியவர்கள் வாசிக்கக்கூடிய பிரதிகளைத்தான் கதைகளைத்தான் படைத்திருக்கிறார்கள். சிறுவர்களின் உளவியலுக்கும் மனம் செயல்படும் விதத்திற்கும் எதிரான, சற்றும் பொருந்தாத கதைகளைத்தான் சிறுவர்களுக்குக் கொடுத்து வருகிறோம்.

பெரும்பாலான சிறுவர் கதைகளில் இரண்டு விதமான கூறுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று, அந்தக் கதையில் வரக்கூடிய சிறுவன் மிகச் சிறந்த ஒழுக்கச் சீலனாகவும் வெறும் நல்லதை மட்டுமே செய்யக்கூடிய உயர்த்தர நல்லவனாகவும் காட்டப்பட்டிருப்பான். அவனைச் சுற்றி எல்லாமும் மிகச் சிறந்ததாகவும் கொஞ்சம்கூட சிறுவர்களுக்கே உரிய எவ்வித குறிப்புகளும் சேட்டைகளும் விளையாட்டுத்தனங்களும் இன்றி, புனிதமான படைப்பாக முன்வைக்கப்பட்டிருப்பான். இவ்விதமான கதையைப் படிக்கும் மாணவர்களுக்கு நெறித்தவறாத நன்னெறிப் பண்புகளை மட்டும் முன்வைக்கும் இடம்தான் கதைகள் எனும் புரிதல் ஏற்படும். ஆகவே கதை எனும் சிறுவர்களின் கனவு மெல்ல விலகி ஒரு நன்னெறி பிரதியாக மட்டும் நிறுவப்பட்டிருக்கும்.

அடுத்ததாக, சிறுவர் கதையில் வரக்கூடிய சிறார் கதைப்பாத்திரங்கள் பெரும்பாலும் பெரியவர்களால் அறிவுரைக்கப்படுபவர்களாவும், அல்லது கதையில் வைத்து சீர்ப்படுத்தக்கூடியவர்களாகவும் காட்டப்பட்டிருப்பார்கள். சிறுவர் கதைகளில் சிறுவர்கள்தான் முதண்மை கதைப்பாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இங்குப் பெரும்பாலான சிறுவர் கதைகளில் பெரியவர்கள்தான் கதைநாயகர்களாக வந்து சிறுவர்களைச் சீரமைக்கிறார்கள், சீர்ப்படுத்துகிறார்கள். ஆகவே இங்கும் கதை என்பது அறிவுரைக்கப்படும் இடமாகவும் சீர்ப்படுத்தும் பிரதியாகவும் சிறுவர்களிடமிருந்து விலகி நிற்கிறது.

இலக்கியப் பாடத்தையும் நன்னெறிப்பாடத்தையும் ஒன்றாக நடத்தக்கூடிய இயல்புதான் இங்கு நடைமுறையில் இருக்கின்றது. கதைகளில் நன்னெறிகளைப் போதிப்பதில் தவறில்லை, ஆனால் அதையே முதண்மையாக முன்வைத்து பூதாகரமாகக் காட்டி கதைக்குள்ளிருக்கும் நிதர்சனமான தன்மைகளைச் சாகடிக்கக்கூடாது. எனக்குத் தெரிந்த ஒரு கல்வி அதிகாரி அடிக்கடி இப்படியான ஒரு வார்த்தையைச் சொல்லிக் கொண்டே இருப்பார். “என் கட்சிக்காரனான சரவணன் என்கிற சிறுவனை எப்பொழுது ஜெயிக்க வைக்கப் போகிறீர்கள்? எப்பொழுது அவனைக் கதைநாயகனாகக் காட்டப்போகிறீர்கள்? எப்பொழுது அவன் அவனது கதையைக் கொண்டாடப் போகிறான்? எப்பொழுது அவன் அடர்த்தியான சமூக ஒழுக்கப் போதனைகளுக்கு அப்பாற்பட்ட கதைக்களத்தை நுகரப்போகிறான்?

மேலைநாட்டு சிறுவர் இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் வெறும் மாயங்களை வைத்தே உலகச் சாதனைகளை அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக harry potter நாவலை எழுதிய R.K.Rowling. இரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய ஒரு சுவருக்குள் இன்னொரு உலகம் இருப்பதைப் பற்றி இத்துனை மகத்துவமான கற்பனையை உலகமே வியக்கும் வகையில் படைத்துக் காட்டி, மேலும் அதில் இளையோர்களையும் சிறுவர்களையும் அவர்களின் சுயம் களையாமல் காட்டிப் படமாக எடுத்திருப்பதும் பாராட்டக்கூடிய முயற்சியாகும். மேலும் சிங்கப்பூரில் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாகப் பல சிறுவர் கதை நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

78 வயது நிரம்பிய வே.இராமசாமி(சிங்கப்பூர்) 55க்கும் மேற்பட்ட குழந்தைகள் நூலகளை எழுதி அவற்றுள் 25 புத்தகங்கள் தமிழ் மாணவர்களுக்கு துணைப்பாட நூலாக இருக்கின்றன. மேலும் சிங்கப்பூரில் ஆசிய குழந்தை நூல் விழா அவ்வப்போது நடத்தப்படுகிறது, மேலும் சிறுவர் இலக்கியம் குறித்தான இரண்டுநாள் பட்டறைகளும் நடத்தப்படுகிறது. மலேசியாவில் இன்னமும் ஆசிரியர்களின் கைகளில் ஈசாப் நீதி கதை நூல்களும், காகமும் நறியும் நன்னெறிக் கதை புத்தகங்களும்தான் இருக்கின்றன. உலக அளவில் சிறுவர்களுக்கான இலக்கியம் அடுத்தக்கட்டத்தை நோக்கி அவர்களின் கதைகளை அவர்களின் உணர்வுகளைச் சொல்லக்கூடிய களமாக மாறி வருகையில் மலேசியாவில் பல இடங்களில் இன்னமும் ஆமையும் முயலும் மட்டுமே நன்னெறிப் பிம்பங்களாகப் போதிக்கப்படுகின்றன. பரிதாபத்திற்குரிய நம் மாணவர்கள் அவர்களின் சுய உணர்வுகள் பற்றி தெர்ந்துகொள்ளாமல், அவர்களின் உலகத்தில் நடப்பதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் சமூகம் கொடுத்திருக்கும் ஆமை முயல் முகமூடிகளை அணிந்து கொண்டு ஏக்கமாக வகுப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

பாப்பா பாடல்களை எழுதி படைத்து வரும் முரசு நெடுமாறனின் பங்கு சிறுவர்களின் இலக்கியத்திற்கு மிக முக்கியமானதாகும். பாடல்களையாவது எங்கோ தமிழ்நாட்டில் இருந்து எழுதும் கவிஞர்கள் போடுவார்கள் என ஏங்கித் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலேயே முரசு நெடுமாறன் எழுதி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கான கதைகள்தான் எழுதப்படுவதில் மிகப்பெரிய தேக்கத்தை அடைந்திருக்கிறோம்.

“என் கட்சிக்காரனான சரவணனுக்கு எப்பொழுது அவனுக்குரிய கதை கிடைக்கும்?” சிறுவர் கதைகள் எழுதுவதற்கு முதலில் அந்த எழுத்தாளன் ஒரு சிறுவனின் மனநிலைக்குத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் சிறுவர்களின் உளவியல் கூறுகளை நன்கறிந்திருக்க வேண்டும். ஒரு சிறுவனை வெறும் நல்லவனாக மட்டும் காட்டும் மரபிலிருந்தும் வெறும் நன்னெறிகளைப் போதித்தால் போதும் என்கிற மரபிலிருந்தும் விடுப்பட வேண்டும். தற்போதைய சமூகத்தில் நிதர்சனத்தில் சிறுவர்களின் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் கதைகள் எழுதப்பட வேண்டும், அதே வேளையில் பொதுவான ஒழுக்க நெறிகளை மீறாத சிறுவர்களும், கற்பனை வளம் நிரம்பிய சிறுவர்களும் உருவாக்கப்படும் வகையிலும் புதிய கதைகள் எழுதப்பட வேண்டும். சிந்திப்போமாக.


நன்றி: கலந்துரையாடல் அங்கம்
கல்வி அதிகாரி
சக படைப்பாளர்கள்

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, June 25, 2010

சிறுகதை: உடைய மறுக்கும் அதிகாலை மரணமும் சில பேருந்துகளும்

1
இருளை அறுக்க இயலாத
ஒளியின் தோல்விகளென
திட்டுதிட்டாய் தூறுகின்றன
அதிகாலை.

கனவுகளின் மீதங்களாய்
துள்ளியெழுகின்றன
கடக்க முடியாத மரணங்களாய்.

வழக்கம்போல 6.30மணிக்கு எழுந்துவிட்டால் பிரச்சனை இருக்காது. ஆனால் ஒரு கெட்டியான இருள் விழிக்கும் சமயத்தில் எப்பொழுதும் கட்டிலுக்கடியில் அல்லது அருகாமையில் நகர மறுக்கும் பிடிவாதத்துடன் காத்திருக்கிறது.

கவிதைகள் போல மறுக்க முடியாத இருப்புடன், அதிகாலையைச் சந்திக்கிறேன். அநேகமாக அது மரணத்தைப் பற்றிய கவிதையாக இருக்கக்கூடும். எனக்குள் விரியும் காட்சிகளாக ஆல்பத்திலிருந்து விடுப்பட்ட அல்லது காணாமல் போன ஒரு பிம்பத்தின் உடைவுகள் போல எங்கோ ஒலிக்கிறது, சில சமயங்களில் சன்னமாக சில சமயங்களில் சமீபத்தில்.

அலாரம் வைத்துவிட்டுப் படுக்கும் நம்பிக்கையின்மை என்னிடம் இல்லை. அது சோம்பேறிகளுக்குத் தன்மீது இருக்கும் சந்தேகத்தின் குறியீடு. எப்பொழுதோ பால்யத்தில் நண்பன் ஒருவன் கற்றுக் கொடுத்த வழிமுறை இன்றும் நீங்காத கரங்கள் போல என்னைத் தட்டி எழுப்பிவிடுகிறது.

“நீ படுக்கும்போது, தலகாணிகிட்ட மூனு தடவே தட்டி தட்டி. . காலைலெ 6மணிக்கு எழுப்பிவிட்டுடு காலைலே 6மணிக்கு எழுப்பி விட்டுடுன்னு சொல்லிட்டு படுடா. . கண்டிப்பா சரியா ஏஞ்சிறுவ”

இந்த வழிமுறை பால்யத்தில் நிறைவேறவே இல்லை. என் தலையணை என்னைச் சுயமாக எழுப்பிவிடும் அதிசயம் நிகழும் முன்னே அம்மாவின் கரங்கள் தடதடவென மேலே விழும். “டே மணியாச்சி ஏஞ்சிரு. .குளிக்கனும்”

எனது ஒவ்வொரு அதிகாலையும் ஒரு பறவையின் முனகலைப் போல தொடங்கி காகத்தின் அரவம் போல விரியும். இன்று சுயமாக எழுந்து கொள்கிறேன். தனியாகக் கிளம்புகிறேன். யாருடனும் பேசுவதில்லை. அதிகாலை ஓர் அடர்த்தியான மௌனத்துடன் கணமிழந்து மிதந்து கொண்டிருந்துவிட்டு சடாரென்று கரைந்துவிடுகிறது.

அதிகாலையில் கேட்கும் அம்மாவின் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் குரலோ அல்லது அப்பாவின் அதிகாலை நடமாட்டங்களோ இல்லாத இல்லாமல் போன ஒரு வெறுமையான அதிகாலை பொழுதுகளில் வேறென்ன இருக்க முடியும்?

சனிக்கிழமைகளில் எப்பொழுதாவது வழக்கத்திற்காக எதிராக அதிகாலையில் விழித்துக் கொண்டால், அந்தக் கெட்டியான இருள் மேலும் நகர்ந்து நெருக்கத்தில் வந்திருக்கும். அது வெறும் உப்பிய இருளின் மாயையாகவும் இருக்கக்கூடும். அல்லது நினைவிலிருந்து நீங்க மறுக்கும் அதிகாலை என்பதன் நீள்பதிவாகவும் இருக்ககூடும். பொருட்படுத்துவதில்லை என்றாலும் அறையையும் அறையிலிருக்கக்கூடிய பொருள்களையும் சுருக்கி ஒரு புள்ளியாக்கி ஏதோ ஒரு மையத்தில் வட்டமிடுகிறது அதன் அடர்த்தியும் நெருக்கமும்.

“முருகா! இன்னிக்கு பஸ்ஸுகார அங்கிள் தூக்கி வெளிய எறிஞ்சிர மாட்டாரே?”

இருள் தனது முதல் சொல்லை அதன் பல வருட மௌனத்தினூடாக எல்லாம் இறுக்கங்களையும் ஊடறுத்து இன்று உரையாடத் துவங்கியது. அறை மெல்ல கரைந்து உடல் பற்றிய பிரக்ஞை களைகிறது. எனக்கு முன்பான அந்தக் கெட்டியான இருள் உடையும்போது சப்தமில்லாமல் அசைந்து கொண்டிருக்கும் ஏதோ ஒன்றை வெகு சமீபத்தில் அடைகிறேன்.

நீண்டதொரு சாலை எல்லைக்கோடுகளை கடந்து விரிந்து தாவர மேடு போல கிடக்கிறது. ஒவ்வொரு பேருந்தாக மேடுகளைக் கரைத்து மரணங்களைத் தூவுகின்றன. மரணம் ஒரு விதை போல நிலத்தின் அடிவேர்களாய் வளர்ந்து ஒரு இருளாக முளைக்கிறது. மீண்டும் ஒரு மஞ்சள் பேருந்து. அதற்குப் பிறகான சூன்யத்தில் சிறு கைகளும் இன்னும் சரியாக முளைக்காத கால்களுமாய் யார் யாரோ ஓடி வருகிறார்கள். மேடு இரைச்சல்மிக்க பிரதேசசமாக மாறுகிறது. சூன்யம் உடைய அங்குமிங்குமாக வீசப்படுகின்றன அதிகாலை என்கிற மௌனமும் மௌளனத்தைக் களைக்கும் ஒரு உரையாடலும்.

அதிகாலை உடையும் சாலை

அலாரத்தின் ஒலி காதுக்கு எட்டும்போது அப்பா முன்வாசல் கதவைத் திறந்துவிட்டு வெளியே நின்றிருப்பது தெரிந்தது. அனேகமாக சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்திருக்கக்கூடும். வீட்டின் நெருக்கமான பரப்பளவு மேலும் சுருங்கிப் போனது போல, கைக்கு அகப்படும் தொலைவில் எல்லாமும்.

கதவின் இடுக்கில் வெளி இருள் குளிர்ந்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. பின்கட்டு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்க நான் படுத்திருந்த அறையின் கதவு வெளியிலிருந்து கசிந்த அதிகாலை இருளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அப்பே பேருந்தில் ஏறும் நண்பர்கள் என்னைவிட 15 நிமிடத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க வேண்டும். அது வழக்கமாக நிகழும் ஒரு கட்டாயம். சரியாக 6.15க்கு கம்பத்தின் மேட்டுப் பாதையில் அப்பே பேருந்து வந்து நிற்கும். அதிகாலை இரைச்சலை ஏற்படுத்துவதற்காகவே ஒரு மிகப்பெரிய சீன மாணவர்களின் கூட்டம் அங்கு இருக்கிறது. 8.00 மணிக்கு தொழிற்சாலை வேலைக்குச் செல்பவர்களுக்கென்று தனியான
அலாரங்களோ கடிகாரங்களோ கிடையாது. அப்பே பேருந்து வந்தவுடன் உடையும் அதிகாலையின் அமைதி மட்டுமே அவர்களுக்கான விடியலின் முதல் புள்ளி. இரைச்சல்களும் வேகமாக ஓடும் கால்களின் சப்தங்களும் ஒரு கனவு தேசத்தின் சிதைவாக உறங்கிக் கொண்டிருப்பவர்களின் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட உலகத்திலிருந்து அவர்களை மீட்டுக் கொள்ளும்.

“ புடாக் புடாக். .”

பெட்டிக்கடை கிழவன் முன்வாசல் கதவை திறந்துவிட்டு அரக்க பறக்க ஓடும் மாணவர்களைப் பார்த்து சில சமயங்களில் கெட்ட வார்த்தையில் திட்டுவான். சில சமயங்களில் அவனுக்குள்ளாக அது ஒரு முனகலாக புதைந்துகொள்ளும். அப்பே பேருந்து வந்தவுடன் அந்தக் கிழவனும் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வெளியே வைத்துவிட்டு கிளம்புவதற்குத் தயாராகிவிடுவான். அவனுக்கு அப்பே பேருந்துதான் அலாரம்.

தண்ணிமலை பேருந்து மிக நீளமானது. எங்கள் கம்பத்தில் நுழைய போதுமான இடவசதி இல்லையென்பதால் தண்ணிமலை அண்ணன் அங்கிருந்து மாணவர்களை ஏற்ற மாட்டார். ஒருமுறை பேருந்து தவறவிட்டதால், அம்மா பிடரியில் ஓங்கி அடித்து பெரிய சாலைக்கு இழுத்துக் கொண்டு போய் தண்ணிமலை அண்ணன் பேருந்தில் ஏற்றிவிட்டார்.

“சனியன். . பஸ்ஸ உட்டுட்டான். . ஏத்திட்டுப் போய்ட்டு விட்டுறங்கணே. . 1 வெள்ளி தந்துடறன்”

என் முன் சட்டை பையில் ஒரு வெள்ளியைத் திணித்துவிட்டு மீண்டும் பிடரியில் விழுந்த இரண்டாவது அடியுடன் தண்ணிமலை பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அந்தப் பேருந்து சரியாக 7.05க்கு எங்கள் கம்பத்தைக் கடந்து போவது பலருக்கு வசதியாக இருந்தது. பேருந்தைத் தவற்விடுபவர்களுக்கென ஒரு சேவை தண்ணிமலை பேருந்தில் கிடைத்தது. ஆகையால் பேருந்து தவறவிட்டாலும் விடுமுறை என்கிற மிகப் பெரிய சுதந்திரம் எங்களின் அதிகாலை கனவு போல வெகு சீக்கிரத்திலேயே களைந்துவிடும்.

எதிர்வீட்டில் உள்ள மாணிக்கம் அண்னனின் மகன் செல்வா பாதி உறக்கத்தில் அழுதுகொண்டே வாசலுக்கு வருவது கேட்டது. இந்தக் கம்பத்தில் எல்லோரையும்விட முதலில் விழிப்பவன் செல்வா. அவனுக்குரிய அலாரம் சரியாக 5மணிக்கு கதறும். அப்பொழுது நான் இரவின் கைகளுக்குள் ஆழ்ந்துகிடந்த பிரக்ஞையின் முதல் தடுமாற்றங்களுடன் விழிக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் உடல்வாகுவுடன் படுத்திருப்பேன். எனக்குள்ளிருந்து பாதி மங்கிக் கிடக்கும் சோம்பல் நெளிய துவங்கும் கணத்தில் செல்வா அதிகாலை குளிரைத் தனது உடலில் சரியவிட்டிருப்பான்.

அவன் வீட்டில் சுடுத்தண்னீர் கிடையாது. காலையில் தொட்டியில் குவிந்து கிடக்கும் தண்ணீரை அள்ளி உடலில் ஊற்ற வேண்டும். அவன் கைகளில் அதிகாலை நடுங்கிக் கொண்டிருக்கும். மெதுவாக இரவு முழுக்க வெளியே பரவிய குளிரை தனது மேற்பரப்பில் சேமித்து வைத்திருக்கும் தொட்டித் தண்ணீரைச் செல்வா அள்ளும்போது, குளிருக்கு கைகளும் கால்களும் முளைத்திருக்கக்கூடும். அதன் தீண்டலில் அவன் அழுவதை என்னால் பல சமயங்களில் கேட்க முடிந்தும் அதற்கு பதில் கொடுக்க இயலாத, அடுத்து விழிக்க போகும் எனது துர்சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பேன்.

மாணிக்கம் அண்ணன் காலை சந்தையில் மீன் வியாபாரம் செய்பவர். காலையில் 6.10 போலவே வீட்டிலிருந்து கிளம்பி தஞ்சோங் டாவாய் ஆற்று முகத்துவாரத்திற்குச் சென்றாக வேண்டும். காலை 7 மணி போல அங்கு மீன்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சுங்கைப்பட்டாணி காலை சந்தைக்கு ஓட வேண்டும். அவர் வந்து சேர்வதற்குள் பாதி சீனர்கள் அவர்களின் மீன்களைப் பேரம் பேசியிருப்பார்கள். மாணிக்கம் அண்ணனுடன் செல்வாவும் எழுந்துகொண்டு போகும் வழியில் அவனைப் பள்ளியில் இறக்கிவிட்டுவிடுவார். பள்ளியின் உள்வாசலுக்கு அருகில் இருக்கும் நீண்ட நாற்காலியில் கண்களுக்கு அகப்படாத ஓர் இருளுக்குள் அமர்ந்துகொண்டு உடலில் மீதமாகத் தேங்கிக் கிடக்கும் உறக்கத்தில் தொலைந்து மீண்டும் மீள்வதே அவனது நாட்கள்.

“ம்மா குளுருதும்மா. . நான் குளிக்கல”

அதிகாலை எப்பொழுதும் வீடு முழுக்க தனது குளிர்ந்த உடலை பரவவிட்டிருக்கிறது. கண்னாம்பூச்சி விளையாடும் குழந்தைகள் போல எழுந்த பிறகு எதிர்க்கொள்ளும் அதிகாலையுடன் போராட வேண்டியிருக்கிறது, ஒளிந்து கொள்ளவும் நேர்கிறது.

“உன் காலெ தரதரன்னு இழுத்துக்கிட்டு போய் தொட்டியில போட்ட தெரியும்” இது அம்மா. அவர் எழுந்ததும் தலையை வாரிக் கட்டிக் கொண்டு காலை பசியாறை சமைத்துவிடுவார். அடுப்பின் இன்னொரு அடுக்கில் எனக்கான சுடுத்தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.

“டே ஏஞ்சி வாடா. . தண்ணீ கொதிச்சிருச்சி, வெழாவ போறன்”

அப்பா இன்னமும் அதிகாலையின் மௌனத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் மோட்டார் பட்டறையைச் சரியாக 6.30மணிக்குத் திறந்தாக வேண்டும். பட்டணத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் வேலைகளுக்குச் செல்லும் அதிகாலை மனிதர்களுக்கு அப்பா கண்டிப்பாகத் தேவைப்படுவார். பத்து டூவா பெரிய சாலையின் ஓரம் என்பது சாமர்த்தியான இருப்பு. காலையில் கல்லூரிகளுக்குச் செல்லும் பேராசியர்களின் கார் முதல் ஆசிரியர்களின் மோட்டார்வரை அவசரத்திற்கு பெட்ரோல் எண்ணை தேவையென்றால் உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு இயந்திரத்தின் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள்.

அப்பொழுதுதான் வானத்திலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கும் பகல். கடையின் வாசலில் லெண்டின் விளக்கை எரிய வைத்துவிட்டு அதிகாலை விலகுவதற்கு முன் உருவாகிக் கொண்டிருக்கும் சன நகர்வை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பார்.

“சுசி மணியாச்சி கெளம்புறேன்”

அப்பா கிளம்பும்போது நான் சிலுவாரை அணிந்துகொண்டு பாதி வெற்றுடலுடன் அறைக்குள் உறைந்து கிடந்தேன். மோட்டார் சத்தம் மெல்ல அகன்று தூரமாகும்வரை வெறுமனே நின்றிருந்தேன். தவுக்கே பேருந்தில் ஏறும் சீன மாணவர்கள் மௌனமாக என் அறையின் சன்னலைக் கடப்பது தெரிந்தது. அந்த தவுக்கே பேருந்தில் ஏறும் பல மாணவர்கள் பெண்கள்தான் என்பதால் எல்லோரும் காலையில் கிடைக்கக்கூடிய சிறு வெளிச்சத்திலேயே எதையாவது வாசிக்கத் துவங்கிவிடுவார்கள்.

10 நிமிடத்திலேயே முழுவதும் கிளம்பிவிட்டு புத்தகப்பையுடன் வெளியே வந்தேன். மணி சரியாக 6.40லிருந்து 6.45க்குள்தான் இருக்கும், மேட்டுப் பாதையில் மணியம் அண்ணன் பேருந்து வந்து நிற்கக்கூடிய நேரம். மேட்டுப் பாதையை அடைந்தவுடன் மிகப் பெரிய ஒரு ஹார்ணை அடித்துவிட்டு அதன் சத்தத்தின் அலைகள் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பலமான சத்தம்.

“சீக்கிரம் வாங்கடா! பாசாருக்குப் போற மாதிரி வருதுங்க பாரு. பிள்ளிங்களா பெத்துப் போட்டுருக்காங்க. . ஆங் ஆங் சீக்கிரம். . உடியாடா”

மணியம் அண்ணன் அவரது இருக்கையிலிருந்து எழுந்து தூரத்திலிருந்து வேகமாக பதற்றத்துடன் ஓடி வரும் எங்களைப் பார்த்துக் கத்தினார். எப்பொழுதும் இப்படித்தான் கத்துவார். இங்கிருந்து புறப்பட்டு சுங்கை ஈபோர் கம்பத்திலும் 4 மாணவர்களை ஏற்ற வேண்டும் என்பதால் அதிகாலையில் எல்லாம் அமைதிகளும் முதலில் மிகவும் வக்கிரமாக உடைவது மணியம் அண்ணன் பேருந்தில் வைத்துதான்.

“எவனாது எழுந்து தலையெ வெளிய நீட்டுனிங்கனா அறுத்துருவேன். . “

எல்லோரும் கால்கள் இரண்டையும் பெண் பிள்ளைகள் போல இறுக்கிக் கொண்டு அமர்ந்து கொண்டோம். வழக்கமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அன்று ஐயா பிள்ளை சாப்பிட்ட நாசி லெமாக் பொட்டலத்தின் தாளைக் கசக்கி வெளியே எறிந்துவிட்டிருந்தான்.

“டே. . உங்கப்பனா வந்து கூட்டறான் ரோட்டெ. சிவராமன் மவந்தானே நீ? வெளுத்துருவாண்டா உன்னெ. எங்கடா பஸ்ஸு காசு? 25 வெள்ளி கொடுக்க வக்கு இல்லெ. .”
மணியம் பேருந்தில் 25 வெள்ளியைச் சரியான நேரத்தில் கட்ட முடியாத பல வக்கில்லாதவர்கள் இருந்தார்கள். மாதத்தின் ஆரம்பத்திலேயே 25 ரிங்கிட் கொடுத்துவிட்டு நீல நிற பாஸ் புத்தகத்தில் மணியம் அண்னனின் கையெழுத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

“எல்லாம் கடன்காரனுங்களா வந்து சேந்துருக்கானுங்க!”

என் வீட்டு பின்புற வரிசையில் இருக்கும் காந்தராவ் பயத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு நாற்காலி தள்ளிதான் தனது முகத்தைக் காட்டாதவாறு பதுங்கிக் கொண்டிருந்தான்.

“யேண்டா?”

“பஸ்ஸு காசு எடுத்து வரலடா. .”

“நாளைக்குக் கட்டிக்கயேன்”

“உஷ்ஷ்ஷ். . “முருகா! இன்னிக்கு பஸ்ஸு கார அங்கிள் தூக்கி வெளிய எறிஞ்சிர மாட்டாரே?”

இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவனைப் பேருந்தின் படிக்கட்டுகளின் மீது வைத்தே திட்டினார் மாணிக்கம்.

“ரோசம் இருந்தா. . 2 மாச காசு இன்னும் தரலே. கொண்டாந்து கொடுக்க சொல்லு. நாளைக்கு எடுத்து வரலே பஸ்லேந்து தூக்கி வெளிய வீசிருவேன் உன்னெ. புரியுதா?”

அவனது முகத்தில் தெரிந்த அவமானத்தின் சாயல் அவ்வளவு உக்கிரமானவை இல்லையென்றாலும் அன்று முழுவதும் ஒரு முதிர்ச்சிக்குரிய அழுகையுடன் தனியாகத் திரிந்து கொண்டிருந்தான். இன்றும் அவனுக்கு பணம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு கணமும் மணியம் அண்ணனின் கடுமையான வார்த்தைகளுக்கும் அந்த வார்த்தைகள் அவனைத் தூக்கி வெளியே வீசப் போகும் தருணத்திற்கும் மத்தியில் ஒரு திடப்பொருள் போல இறுகியிருந்தான்.

அதிகாலை இன்னமும் பின் தொடர்ந்தது. பள்ளியில் இறங்கும்போதுதான் இலேசாக விடிந்திருக்கும். சிங் தாத்தா பள்ளியின் வாசல் கதவைத் தரதரவென தள்ளிக் கொண்டும் சாத்திக் கொண்டும் அதிகாலை இரைச்சலின் கடைசி வருகையென நகர்ந்து கொண்டிருப்பார்.

பள்ளியின் வளாகத்தில் பேருந்து நுழைந்ததும், திடலின் வெகு தொலைவான மௌனத்திலிருந்து சிறுக சிறுக விடைப்பெற்றுக் கொண்டிருந்த இருளைப் பார்க்க முடிந்தது. எல்லோரும் இறங்குவதற்கு வரிசைக்கட்டி நின்றோம். தவறுதலாக காந்தராவ் வரிசையின் முதல் இடத்தில் நின்றிருந்தான். பேருந்து நின்றதும் இறங்கி ஓடி விட வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவு அவனை அவசரப்படுத்தியிருக்கக்கூடும்.

“டே. . கடன்கார பையா. .ஒளிஞ்சிக்கிட்டு ஓடப் பாக்கறியா?”

மணியம் அண்ணன் பேசி முடிப்பதற்குள் பதற்றத்தின் உச்சத்தில் இடறிய காந்தராவ் தடுமாறி பேருந்திற்கு வெளியே விழும்போது, கடைசியாகப் பார்த்த அவனது முகமும் விழுவதற்கு முன்பான யாருக்கும் கேட்காதபடிக்கு தவறிய அவனது சொற்களும், நடக்கப் போகும் அசம்பாவிதத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தனது உடலை நகர்த்தி வெளிச்சத்திற்குச் சௌகரிகமான இடமளித்திருத்துக் கொண்டிருந்த அதிகாலையின் கரைதலில் தொலைந்துபோயின.

உடைய மறுக்கும் அதிகாலை

இன்றும் அதிகாலை வருகிறது. உடலைத் தீண்டும் பனி கூட்டம் யாருக்கும் தனது பிம்பத்தைக் காட்டாமல் கரைந்துவிடுகிறது. முன்வாசல் பக்கமாக வந்து நிற்கும் போது சுற்றிலும் விரிந்துகிடக்கும் இரும்பு காடுகளின் மீது படர்ந்து தோல்வியுற்று உடையாமல் காந்தராவின் மரணத்தைப் போல அல்லது ஓர் அதிகாலையில் மரணித்த அப்பாவின் நினைவுகள் போல ஒரு திடப்பொருளாக மாறிவிட்ட அதிகாலையைப் பரிதாபமாக மட்டுமே தரிசிக்க முடிகிறது.

அப்பே பேருந்தோ தவுக்கே பேருந்தோ மணியம் பேருந்தோ, இப்பொழுது எங்கே ஓடிக் கொண்டிருக்கும்?

நன்றி: மாத இதழ் உயிர் எழுத்து(மே) இந்தியா
              அநங்கம் காலாண்டிதழ் மலேசியா (டிசம்பர்)


ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Wednesday, June 23, 2010

அடுத்து வரப்போகும் பிரதிகள்

எனது வலைத்தலத்தில் விரைவில்(தாமதமும் ஆகலாம்) பிரசுரமாகப்போகும் பிரதிகள் பின்வருமாரு:

1. சுயத்தம்பட்டமும் பின்நவீனகோமாளி எம்.ஜி.சுரேஸும்
( எம்.ஜி அவர்களின் அறிவானது ஆங்கிலேய பின்நவீன ஆளுமைகளின் பிரதியின் மூலம் உருவாக்கப்பட்ட மிகப் பிழையான ஒரு பிதற்றல்)
(அவர் பின்நவீனம் என்கிற குறியீட்டில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு சாதாரண கலாச்சார அதிகாரி அல்லது ஒழுக்கவாதி)
(வெறும் பின்நவீன பிரதிகளைப் பாடமாகப் படித்து வளர்ந்த சிறுபிள்ளை எம்.ஜி க்கு இந்த அறம் என்ற வார்த்தை தெரிந்திருப்பதே பெரிய விஷயம் என்பதால் அவரை மன்னித்துவிடலாம்) . . . இன்னும் பல பக்கங்களுடன்.

2.மலேசிய திரைப்பட ஆளுமையான மறைந்த யஸ்மின் அமாட் அவர்களின் கடைசி சினிமாவின் திரைவிமர்சனம்

3. புலம் பெயர் அரசியலைக் கேலி செய்யும் குடியேறி எனும் அடையாளத்திற்குள் ஒளிந்து விளையாடும் சிங்கப்பூர் "புனைவர்" லஷ்மி

4. சிறுகதை: மூன்றாவது முறை கதவைத் தட்டும்பொழுது

காற்பந்து பருவம் எனக்கான நேரத்தைச் சுரண்டிக் கொள்வதால் மேற்கண்ட பிரதிகள் எப்பொழுது பிரசுரமாகும் என்கிற கேள்விகளுடன். . .

மேலும்: அநேகமாக இந்தத் தடவை அர்ஜெண்டினா அல்லது பிரசில் (காகா எனும் விளையாட்டாளரை இழந்துவிட்டதால்- சந்தேகம்தான்) அல்லது போர்த்துகல் இதில் ஏதாவது ஓர் அணி உலகக் காற்பந்து கோப்பையை வெல்ல வாய்ப்புண்டு என உங்களுடன் சேர்ந்து இந்த அனுமானிக்கும் வித்தையில் நானும் கலந்துகொள்கிறேன்.Goal Goal. . . .

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Saturday, June 19, 2010

திரைவிமர்சனம்: ராவணன்: காவிய மறுப்புனைவும் புனைவை மீறாத விவாதமும்

‘வியரிலல்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்,வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்’

பல சைவசமயத் தேவாரப் பாடல்களில் மட்டுமே இராவணனைப் பற்றிய உயர் மதிப்பீடுகளைக் காண இயலும். தென்னிந்தியர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய ஊடுருவல் ஆரியர்களின் ஆதிக்க விரிவாக்கமும் தென்னிந்தியர்களின்(திராவிடர்கள்) கலாச்சார வெளிகளை அபக்கரித்தலும், திராவிட நிலப்பின்புலங்களை அழித்தலும் என விமர்சிக்கப்படுகிறது. இன்றும் இராவணனை அரக்கனாகவும் அசுரனாகவும் பத்து தலை நிரம்பிய கொடியவனாகவும் சித்தரிக்கும் இராமயணக் காவியத்தை வடநாட்டு ஆரியர்கள் அந்தத் தென்னிந்திய நிலத்தையும் மக்களையும் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கும்; ஒடுக்கவும்; அடிமைப்படுத்தவும் புனைந்துள்ளார்கள் என்கிற சர்ச்சை நிலவுகிறது.

இராமயாணக் காவியத்தை முழுவதும் எந்தப் பக்கமும் சாராமல் அந்தப் பிரதியை அணுக நேர்ந்தால், அது முழுக்க ஆணாதிக்க சமூகத்தை வளப்பட செய்யும் அதிகார குரல்களை ஆங்காங்கே நிறுவப்பட்ட ஒரு பிரதியாகவும் பெண்களை மீட்பதும் பரிசோதிப்பதுமான கருவியாகப் பாவிக்கப்பட்டிருப்பதையும் தெரிந்துகொள்ளலாம். இந்தக் காவியத்தைப் படித்து வளர்ந்த பின்விளைவுகளை இன்றைய சமூக நடப்பிலும் பல விடயங்களில் மறுமதிப்பீட்டின் மூலம் உணர வாய்ப்புண்டு. இராமாயணத்தை ஒரு பக்தி குறீயீடாகவும் அழித்தல் கடவுளின் ஆன்மீக வருகையின் பதிவாகவும் அதை மிக நுணுக்கமாக வழிப்படுதலுக்குரிய கருவியாகத் தென்னிந்திய மக்களுக்கு வழங்கியவர்கள் ஆரியர்கள் எனும் சர்ச்சையும் தொடர்ந்து திராவிட உணர்வுடையவர்களால் முன்வைக்கப்படுகிறது.

இராவணன் அன்று:

இலங்கை மண்ணைச் செழிப்புமிக்க தேசமாகவும் வளமிக்க பூமியாகவும் வளர்தெடுத்த சிறந்த அரசன் எனவும் கலைகளில் சிறந்த தேர்ச்சியுடைய மன்னனாகவும், பக்தி மிகுந்த சிவப்பக்தனாகவும் முக்கியமான சில பதிவுகளில் இடம்பெற்றுள்ளன. மேலும் திராவிட விவாதங்களிலும் இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆனால் இராவணனை (தென்னிந்திய மண்ணின் அரசனை) ஒரு ஆன்மிக புனைவாக மட்டுமே இராமாயணத்திற்குள் நுழைத்து அவனுக்கு ஏற்பட்ட மரணத்தையும் நியாயப்படுத்தும் இடமானது ஆரியர்களின் மிக முக்கியமான திட்டம் என்றே சொல்லலாம். ஆகையால்தான் இராவணனை இதற்கு முன்பே மகா விஷ்ணுவின் அவதாரத்தால் கொல்லப்பட்டு இறந்துபோன இரன்ய கசிப்புவின் இன்னொரு அவதாரம் எனவும், இவன் முன்பே சனாதன முனிவர்களால் சபிக்கப்பட்டவன் என்றும் அந்தப் பிறவி கடனைத் தீர்க்கவே கொடியவர்களாக அவதாரங்கள் எடுத்து 7 முறை மகா விஷ்ணுவால் கொல்லப்பட்டு மீண்டும் வைக்குண்டம் அடைவான் எனவும் இன்னொரு புனைவு இராவணின் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவை யாவும் வரலாற்றில் இராவணன் குறித்து திணிக்கப்பட்ட கட்டமைப்புகளா? அல்லது புராணம் என்பதே வெறும் கட்டுக்கதைகளின் கோர்வையா? அல்லது பார்ப்பன வெறியைத் தென்னிந்தியாவில் பரப்புவதற்காகப் பக்தி எனும் அடையாளத்தின் மூலம் விரிவாக்கப்பட்ட புனைவு பிரதியா?

இதைத் தொடர்ந்து விவாதித்தால், வழக்கமாக நிகழ்ந்தும் நிகழ்ந்து சலித்துப் போன கடவுள் இருக்கிறாரா என்கிற சந்தேகத்தில் முடிந்துவிடும் எனும் எண்ணமும் தோன்றுகிறது. ஆனால் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த ஒரு தமிழன். வடநாட்டு பக்தி பிரதிகளில் இராவணன் கேலிக்குரிய 10 தலை அசுரனாகக் காட்டப்பட்டிருப்பதும் உண்மை. மேலும் இராமன் என்கிற கடவுளின் அவதாரத்தால் அவன் கொல்லப்படுவதுதான் தர்மம் எனவும் நியாயம் வலுவாகக் கற்பிக்கப்பட்டு நிறுவப்பட்டிருப்பதும் உண்மை.

மனிரத்னத்தின் ராவணன்:

சிதைக்கப்பட்ட தென்னிந்தியாவின் தொன்ம அடையாளத்தைத் தனது படத்தின் மூலம் மீட்க முயலும் ஒரு முயற்சியைத் செய்திருக்கிறார். வரலாற்றையும் புரானத்தையும் காவியத்தையும் மறுபுனைவு செய்து பார்ப்பதில் மனிரத்னத்திற்குத் தனித்த ஆளுமையும் அடையாளமும் தமிழ் சினிமாவில் இருக்கிறது. வரலாற்றை மீட்டுணர்ந்த படமாக இருவர் படத்தையும், காவியத்தை மறுபுனைவு செய்த தளபதி படத்தையும் குறிப்பிடலாம். அதே களத்துடன் பார்ப்பன பிரதிகளில் கொடியவான சித்தரிக்கப்படும் இலங்கை மண்ணைச் சேர்ந்த இராவணனை மீள்புனைவு செய்து அவனைத் தென்னிந்திய வரலாற்றின் முக்கியமான அடையாளமாகத் திராவிட மனங்களுக்குப் புது தெம்பை அளிப்பது போல மீட்டெடுத்திருக்கிறார் மனிரத்னம்.

காட்டுவாசிகளின் நாட்டாமையாகவும் அவர்களுக்கு நல்லது செய்யும் நாட்டாரியல் கதைநாயகனுக்குரிய அடையாளமாகவும் விக்ரம் வீராசாமியாகப் படைக்கப்பட்டுருக்கிறார். (நாயகன் படத்தின் கமலை மீண்டும் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு மட்டுமே எழுகிறது) வீராசாமியின் தங்கை பிரியாமணியின் திருமண நிகழ்வில் சலசலப்பை ஏற்படுத்துவதோடு, அவனைக் கழுத்திலும் சுட்டுவிடுகிறார்கள் காவல் படை(பிருத்திவிராஜ் தலைமையில்). மேலும் பிரியாமணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுக்க மாற்றி மாற்றி கற்பழித்துவிடுவதோடு அவளின் தற்கொலைக்கும் காரணமாகிவிடுகிறார்கள். காட்டுவாசிகளின் மீதான அதிகாரிகளின் ஒடுக்குமுறையைக் கண்டிக்கும் வகையில் பிருத்திவிராஜ் என்கிற உயர் அதிகாரியின்( புராணப்படி இவர்தான் இராமன்) மனைவியைக் கடத்துகிறான் ராவணன்.

வனத்தினுள் அவளைக் கடத்திச் செல்லும் ராவணனைப் பின்தொடர்ந்து விரட்டுகிறது காவல்படை. படம் முழுவதும் வளம் மிகுந்த அடர்ந்த வனத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த வனத்தில் (அசோக வனமாகவும் கற்பித்துக் கொள்ளலாம்) சீதையின் கதைப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் ராவனணனுக்கும் இடையில் நிகழும் உரையாடலும் உணர்ச்சி போராட்டமும் இராமாயணத்தில் புனையப்பட்ட ஒழுக்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக நிகழ்த்தப்படுகிறது. இராமாயணத்தில் இறுதிவரை மாசுப்படாத கதைப்பாத்திரமாகச் சீதை படைக்கப்பட்டிருப்பதைக் கொஞ்சமும் தனது திரைப்படத்தில் சிதைக்காமல், கடத்திச் செல்லும் விம்ரமின் சுண்டு விரல்கூட அவள் மீது படாதவாறு அமைத்து சமூகம் நம்பியிருக்கும் ஒழுக்கக் குறியீட்டைக் காப்பாற்றியுள்ளார் மணி.

ஆனால், ஐஸ்வர்யாவின் வீரத்தையும் தற்கொலை முயற்சியின் காட்சியையும் நேரில் கண்டு பதறும் ராவணனுக்கு அவள் மீதான உணர்வு மாறுப்படும் இராசயண தருணத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். ஓர் அதிகாரியின் மனைவி என்கிற பிம்பம் களைந்து அவளின் புற உலகத்தைச் சூன்யமாக்கிவிட்டு, அவளை தன் மனதைச் சலனப்படுத்திய ஒற்றைப் பிம்பமாக ராவணன் தரிசிக்க முயல்வதோடு தனக்குள் இருக்கும் வளர்க்கப்பட்டிருக்கும் ஒழுக்க அமைப்புடனும் போராடுகிறான். (சூர்ப்பநகைத் தாக்கப்பட்டதன் மூலம் கோபமுறும் இராவணன் இராமனைப் பழி வாங்குவதற்காகச் சீதையைக் கடத்தி வருவதோடு அவளின் அழகிலும் மயங்கிவிடுவதாகப் புராணம் சொல்கிறது) ஆனால் புராணத்தில் எவ்விடத்திலும் ஒழுக்க ரீதியில் இராவணன் தனக்குள் போராடுவதை அல்லது சீதையின் மீது ஏற்பட்ட உணர்வைத் தர்க்கம் செய்வது போன்ற கதைகள்/சந்தர்ப்பங்கள் இடம்பெறவில்லை. இப்படத்தில் மணிரத்னம் மாற்றான் மனைவியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பை உணர்வைத் தொடர்ந்து அகப்பிரச்சனையாக, அகப்போராட்டமாக அதைக் கடைசிவரை மீறாத படைப்பாகக் காட்டியிருக்கிறார். அதாவது குற்றம் இழைத்தவன் இராவணன் என்கிற பழி சுமத்தலுக்கு எதிராக மறுபுனைவின் மூலம் இராவணன் உண்மையில் நல்லவன் என்கிற செய்தியைச் சொல்ல முற்படுகிறார் என்பதாகப் படத்தைப் புரிந்துகொள்ளலாம்.

ஒளிப்பதிவும் கதைக்களமும் கலையும்

இப்படத்தில் ஒளிப்பதிவையும் கலையையும் தனித்துவமான பலமாகவும், படத்தின் கருவை மெய்ப்பிக்கும் யதார்த்தங்களை மீறாத உணர்வாகவும் அடையாளப்படுத்தலாம். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு இப்படத்தில் விருதுக்குரிய மதிப்பீடுகளையும் கடந்து ஒரு வனத்தின் வாழ்வை இதுவரை தமிழ் சினிமாவில் காணாத இயற்கையின் பரிணாமங்களை முன்வைக்கும் மிக முக்கியமான முயற்சியாக உணர முடிகிறது. இன்னமும் அந்தக் காட்டுவாசிகளின் வனத்தின் அடர்ந்த உலகத்திலிருந்து மீள முடியாத ஒரு நெருக்கமான புலனைக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அவரின் காட்சி பதிவுகள் பலரைப் பிரமிக்க வைக்காமல் போயிருக்கக்கூடும். எந்த இடத்திலும் தமிழ் சினிமாவில் இடம்பெறும் வழக்கமான காட்சி அமைப்புகளும் ஒளிப்பதிவும் அதிரடியும் இல்லாமல், ஏதோ ஒருவகையில் நம் புருவங்களை உயர்த்த செய்யும் அசாத்திய காட்சிகள் படம் முழுக்கப் பயணிக்கின்றன.

குறிப்பாக நதிக்கு நடுவில் பாதி உடைந்து நீளமாகப் படுத்திருக்கும் மகா விஷ்ணுவின் கருமையான சிலையும், அதன் மீது தெறித்து வீழும் நதியின் சாரலும், அந்தச் சிலைக்கு முன் நின்று தன்னை இன்னமும் காப்பாற்றி வைத்திருக்கும் இந்தக் கோபத்தை என்னிடமிருந்து பறித்துவிடாதே என மன்றாடும் ஐஸ்வர்யாவும், ஒரு சாரல் போல மனதைச் சலனிக்கச் செய்கிறார்கள். தொடர்ந்து ஐஸ்வர்யா மலை உச்சியிலிருந்து நீர்பாதாளத்தை நோக்கி குதிக்கும் காட்சி எந்தத் தொழில்நுட்ப ஒப்பனைகளும் நெருடலை ஏற்படுத்தாத வகையில் பதிவு செய்திருக்கிறார்கள். அவருடன் சேர்ந்து பார்வையாளர்களும் நீர்வீழ்ச்சியைப் போல பாதாளத்தில் குதிப்பது போன்ற அனுபவம் ஏற்படும். இது காமிராவின் அசைவும் நகர்வும் கையாளப்பட்டிருக்கும் விதத்தின் திறமையைக் குறிக்கிறது.

இப்படத்தில் பணியாற்றிய கலை குழு, வனத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் காட்டுவாசிகளின் குடியிருப்பு பகுதிகளை அதே போல உருவாக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். காட்டுவாசிகளின் நடவடிக்கைகளையும் வாழ்விடங்களையும் கலை ஆய்வின் மூலம் அறிந்துகொண்டு பதிவாக்கியதாகப் புரிந்துகொள்ள நேரிடும். மழை நேரத்தில் காட்டுவாசிகளின் இருப்பிடத்திற்குள் நுழையும் அதிகாரிகளின் கொடூரமான செயல்களை அதன் உக்கிரம் குறையாமல் அதிகாரத்தின் தொனிக்கு பிரேம் போட்டு காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குனர்.

பின்னனி இசையும் பாடல்களும் வழக்கமாக ரஹ்மான் அவர்களின் இசை தனித்துவத்தை மீண்டும் வழங்கியிருக்கிறது. குறிப்பாக பின்னனி இசை காட்சியுடன் இயந்து யதார்த்தத்தையும் காட்சியின் உணர்வையும் புரிந்துகொண்டு சம அளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பாடல் சீடியில் இடம்பெறாத ரஹ்மான் பாடிய படத்தின் இறுதி பாடல் படம் முடிந்தும் ஒருவித துன்பத்தின் கொண்டாட்ட உணர்வை உள்ளுக்குள் ஏற்படுத்துவது போல தோன்றுகிறது.

இரு தேசிய விருது பெற்ற நடிகர்களும் இடம் பெறும் ஒரு காட்சி ராவணன் படத்தில் தவிர்க்க முடியாத வலியைத் தருவதாக அமைந்திருக்கிறது. காவல் அதிகாரிகளால் பலமுறை கற்பழிக்கப்பட்ட பிரியாமணியும் விக்ரமும் பேசுவதாக இடம்பெறும் அக்காட்சியில், கொஞ்சம் நேரம் என்றாலும் இருவரும் மிகச்சிறப்பான அலட்டல் இல்லாத நிதர்சன உணர்வுகளையும் முகப்பாவனை மூலம் உணர்வை உந்தி வெளித்தள்ளும் விதத்தையும் செய்து காட்டி அசத்திவிட்டார்கள்.

படத்தில் புகுத்தப்பட்டிருக்கும் அரசியல்:

இருவர் படத்தின் மூலம் திராவிட அரசியல் கட்சிகளின் வளர்ச்சியையும் அந்தக் கட்சியின் மூலம் வளர்ந்த இரு முக்கியமான பிம்பத்தையும் காட்டி, இது வெறும் கற்பனை கதை என நழுவிய மணியின் அரசியல் பிரயோகம் இப்படத்திலும் இராவணுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுருக்கிறது. இப்படத்தில் ராவணன் ஐஸ்வர்யாவைக் கடத்துவதற்குப் பிரியாமணிக்கு நிகழ்ந்த கொடூரம்தான் காரணம் எனப் புரிந்துகொண்டு வெளிவருகையில், காட்டுவாசிகளின் மீது தொடுக்கப்படும் அதிகாரிகளின் அதிகார நடவடிக்கைகளையும் மேட்டுக்குடி மக்களுக்கு கீழ்தட்டு மக்களின் மீது இருக்கும் ஒடுக்கும் மனபான்மை குறித்தும் படத்தில் பேசப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் தவறுவதற்கும் வாய்ப்புண்டு. படம் பார்த்த சிலரிடம் படத்தைப் பற்றி கேட்டபோது இதைப் பற்றி யாரும் சிறிதளவும் குறிப்பிடவில்லை.

குறைகள்: நிறைய இடங்களில் நெருடலாகவும் சில இடங்களில் நகைச்சுவைகளாகவும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பழைய நடிகரான கார்த்திக்கை அனுமானாகக் காட்ட வேண்டும் என்கிற வெறியில் அவரைக் குரங்கு போல அங்குமிங்கும் தாவவிட்டு அவரின் மீதான மதிப்பைக் குறைக்கும்படி படைக்கப்பட்டிருப்பது நெருடலாக அமைந்திருக்கிறது. மேலும் ராவணன் கதைப்பாத்திரத்திற்குக் கொடுக்கப்பட்ட கவனமும் நேரமும் காட்டுவாசி மக்களின் வாழ்க்கைமுறையின் மீதும் அவர்களின் வன வாழ்வின் மீதும் காட்டி கதைக்களத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கலாம்.

மேலும் ராவணன் சில இடங்களில் காவல் அதிகாரிகள் தேடும் மக்களுக்கான நாட்டாமையாக மட்டுமே மிளிர்கிறார். சில இடங்களில் ஏற்கனவே பார்த்து சலித்துவிட்ட பிதாமகன் விக்ரம் போல தெரிகிறார். பிருத்திவிராஜ் கதையுடன் சற்றும் பொருந்தாமல் தள்ளி நின்றிருப்பதை உணர முடிகிறது. மீசை வழித்த அழகான வாலிபன் போல, காதல் படங்களின் கதைநாயகன் போல வலம் வருவதாகத் தோன்றுகிறது.

“நான் ஒடுக்கப்பட்ட கிராமத்தான்” எனும் வசனத்தை ராவணன் குறிப்பிடுவதைக் கொஞ்சம் வரலாற்றை நோக்கி பின்னுக்கு நகர்த்தினால், இலங்கை மண்ணைச் சேர்ந்த ராவணனையும் இன்றளவும் பாசிச அரசினால் கடுமையான ஒடுக்குதலுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளான கொலைநிலமாகக் கருதப்படும் இலங்கையும் தமிழர்களையும் நினைவுப்படுத்த முடிகிறது. இறுதி காட்சியில் ராவணன் காவல் அதிகாரி படைகளால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டு மலையின் உச்சியிலிருந்து சரிந்து விழும் காட்சி, வரலாற்றில் தமிழன் எப்பொழுதுமே ஒடுக்கப்படுவான் அல்லது கொல்லப்படுவான் என்கிற நிதர்சன வலியை உணர்த்தி மனம் முழுவதும் பரவி நேர்மையற்ற அரசியலையும் அதிகாரத்தையும் காட்டுகிறது. கணத்த மனதுடன் அந்த உண்மையைச் சுமந்து கொண்டு வெளியில் வரநேர்வதன் கையறுநிலையை வேறு எப்படிச் சொல்வது?

ராவணனைப் படைக்க விரும்பிய மணிரத்னம், அந்தப் பாத்திரத்தைக் காவிய பிம்பமான இராவணனை மீட்பதாக மறுபுனைவு செய்தும், ஆதி புனைவின் ஒழுக்கத்தை மீறாமல் மறுபுனைவையும் அதே போல படைத்து நியாயப்படுத்தியும் அது வெற்றிப் பெறாதது போன்ற விமர்சனத்தையே தருகிறது. ராவணன் வெறும் முயற்சி மட்டுமே.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா



Wednesday, June 16, 2010

கவிதை: சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்

எப்பொழுதும் போலவே
இன்றும்
கிழக்குக்கரையைப் பற்றிய
ஒரு கதை
அடித்துச் சென்றது
சுங்கை நதியில்.

அநேகமாக
கிழக்குக்கரையிலுள்ள
அஞ்சலைப் பாட்டி
இறந்திருக்கக்கூடும்
அல்லது இன்று
கூடுதலான
மலம் கழிக்கப்பட்டிருக்கும்.

மீண்டும்
மழைக்காலத்திற்குப் பிந்தைய
ஒரு அதிகாலையில்
அடர்ந்த கதைகளுடன்
முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது
யாருமற்ற தனிமையில்
சுங்கை நதி.

தவுசே சீனக் கிழவியின்
வீட்டின் மூன்றாவது
கால் இடறி
வீட்டை முழுங்கிய
ஒரு செய்தியை
எப்படிக் கதையாக
மாற்றக்கூடிய சாமர்த்தியம்
வாய்த்திருக்கும்
சுங்கை நதிக்கு?

அம்மோய் அக்காவின்
குடிக்கார கணவன்
எப்படி ஒரு கதைக்குள்
தவறி விழுந்து
இறந்திருக்கக்கூடும்?

வரிசையாக நின்று
சுங்கை எனும் கதைக்குள்
மூத்திரம் பெய்த சிறுவர்களில்
இருவர்
ஒரு மழைக்காலத்தில்
கதையிலிருந்து நீங்கிவிட்டதன்
சோகத்தை எப்படி
புனைந்திருக்கும்
சுங்கை நதி?

மீண்டும்
ஒரு அதிகாலை.
யாருக்கும் சொல்ல வேண்டாம்
என்கிற வெறுப்பில்
எல்லாம் கதைகளையும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
இரகசியமாய் நகர்கிறது
சுங்கை நதி.

வெளியே தெரிந்த
இறந்தவர்களின் கைகளில்
ஒட்டிக் கொண்டிருந்த
வறுமையும் கிழக்குக்கரையின்
சோகமும்
எப்படியும் வெளிப்பட்டன
மையமில்லாத வெறும் கதைகளாய்
அர்த்தமற்ற வெறும் நிகழ்வாய்
கதைப்பாத்திரங்களை இழந்த
வெறும் சூன்யமாய்.

சுங்கை நதி
எந்தச் சலனமுமின்றி
அடுத்த மழைக்காலம் வரும்வரை
தனக்குள்ளே பயணிக்கத் துவங்கியது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா.

Wednesday, June 9, 2010

சினிமா விமர்சனம்(ஸ்பானிஷ் திரை) : Cell 211 / குற்றம் என்கிற அறையின் மௌனம்

நம்மில் பலர் ஒரு சுற்றுப்பயணியாகக்கூட சிறைச்சாலைக்குச் சென்றிருக்க மாட்டோம். எனக்குத் தெரிந்தவர்களில் பலர், சிறைச்சாலையைத் தூரத்தில் இருந்து ஒரு பார்வையில் கடந்துவிட்டுப் போகக்கூடிய மனநிலையிலேயே இருக்கிறார்கள். சிறையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் முள்வேலியைப் போல சிறை குறித்து நமக்கிருக்கும் எண்ணமும் பார்வையும்கூட கரடுமுரடாகத்தான் இருக்கின்றன. என் வகுப்பு மாணவர்களிடம் சிறை என்றால் என்னவென்று கேட்டிருந்தேன். பின்வரும் பதில்கள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன.

1. குற்றவாளிகள் தண்டிக்கப்படும் இடம்
2. தங்களின் குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டனையை அனுபவிக்கும் இடம்
3. பாவம் செய்தவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடம்
4. சமூகத்திற்கு ஆபாத்தானவர்களை அடைத்து வைத்திருக்கும் இடம்
5. தவறு செய்தவர்களை அடைத்து வைத்து தண்டிக்கும் இடம்

மாணவர்கள் சுயமாக சிறையைப் பற்றிய இந்தப் புரிதல்களைப் பெற்றிருக்கவில்லை, அவர்களுக்கு வலிந்து கற்பிக்கப்பட்டிருக்கிறது. சிறையையும் குற்றவாளிகளையும் காட்டி பிள்ளைகளை மிரட்டி வளர்க்கும் பெற்றோர்களே இங்கு அதிகம். சிறை என்பதே அடைக்கப்பட்டு தண்டிக்கப்படும் கொடூரமான குறியீடாக எல்லோர் மனதிலும் மிக வலுவாகப் பதிக்கப்பட்டிருப்பதால், சிறையிலிருந்து வெளியேறும் ஒருவனை இன்னமும் குற்றவாளியாகவே பார்க்கும் மனநோய்க்குப் பலர் ஆளாகியிருக்கிறோம். அந்தக் கொடூரமான ஒரு குறியீட்டின் வலியையும் அதனிலிருந்து மீள முடியாத தவிப்பு மனநிலையையும் மிகச் சிறப்பாகச் சொல்லும் படம் தான் ஸ்பானிஷ் திரைப்படமான “சிறை எண் 211”.

சிறை எண் 211இல் இதற்கு முன்பு 4 கைதிகள் கொடூரமான முறையில் மரணித்திருக்கிறார்கள். படத்தின் முதல் காட்சியில் சிறை எண் 211-இல் உள்ள ஒரு குற்றவாளி கைகளை அறுத்துக் கொண்டு, தனது குருதியைச் சொட்டவிடுவது போன்ற அழுத்தமான சூழ்நிலை காட்டப்படுவதுடன் படம் துவங்குகிறது. குற்றவாளிகளின் உலகம் வலிகளாலும் இறுக்கமான மனநிலையினாலும் தவிர்க்க முடியாத புறக்கணிப்பின் கொடூரத்தாலும் கட்டப்பட்டவை என்கிற உண்மையைச் சொல்லும் வகையில் வித்தியாசமான புரட்சிக்கர வெளிப்பாடாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருண்ட வேரை நோக்கிய பதிவாக இப்படத்தைக் காணலாம்.

ஜூவான் என்கிற புதிய சிறை அதிகாரி தனது பணியைத் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பே அந்தச் சிறைக்கு வருகிறான். அவனுடன் சக அதிகாரிகளும் சிறை கைதிகளைப் பற்றியும் சிறை தொடர்பான அனுபவங்கள் சட்டத்திட்டங்கள் போன்றவற்றையும் பகிர்ந்துகொண்டே, மூவரும் சிறைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். அந்த நேரம் பார்த்து சிறையின் முதலை என அடையாளப்படுத்தக்கூடிய Malamadre எனும் பழைய கைதி ஒருவன் அதிகாரி ஒருவனைத் தாக்கிவிட்டு சிறையைத் தனது ஆக்கிரமிப்பிற்க்குள் கொண்டு வருகிறான். அதிகாரியிடமிருந்து பறிக்கப்பட்ட சாவியின் மூலம் எல்லாம் சிறைக்கதவுகளையும் திறந்துவிடுகிறான்.

திடீரென தலையில் காயப்படும் ஜூவானை சக அதிகாரிகள் காலியாக இருக்கும் சிறை எண் 211-க்குக் கொண்டு செல்கிறார்கள். அரை மயக்கத்தில் இருந்த அந்தப் புதிய அதிகாரியை அங்கேயே போட்டுவிட்டு வேறு வழியில்லாமல் இருவரும் தப்பித்துவிடுகிறார்கள். இப்பொழுது சிறை முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து குற்றவாளிகளின் ஆக்கிரமிப்பிற்குள் வருகிறது. ஜூவான் எனும் இந்தப் புதிய அதிகாரி மட்டும் உள்ளே சிக்கிக் கொள்கிறான். அவன் அந்தக் குற்றவாளிகளின் உலகத்தினுள் நுழையும் விதமும் அவர்களைப் புரிந்துகொள்ளும் விதமும் மிகவும் அபாரமான அரசியல் கற்பனை ஆகும்.

ஏற்கனவே ஒருமுறை அந்தச் சிறை இதே போல கைதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பல அதிகாரிகளும் பிணை கைதிகளும் கொல்லப்பட்டுருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணமானவன் இந்த மாலமட்ரே தான். குற்றவாளிகளுக்குள் அதிகாரத்திற்கு எதிராக வளர்ந்திருக்கும் ஒட்டுமொத்த வெறுப்பின் அடையாளம் அவன்தான். ஆகையால் ஏற்கனவே அந்தச் சிறையில் பதிந்துள்ள கசப்பான அனுபவமும் வரலாறும் அதிகாரிகளைப் பயமுறுத்துகின்றன. குற்றவாளிகளிடம் சிக்கிக் கொண்ட ஜூவானைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உரையாடல் அதிகாரிகளின் மத்தியில் சலனத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் அவர்கள் சிறை முழுவதும் பொறுத்தப்பட்டிருக்கும் காமிராவின் மூலம் உள்ளே நிகழும் சம்பவங்களை முதலில் கண்கானிப்பதாகத் தீர்மானித்துவிட்டு, இராணுவப்படையின் உதவியுடன் சிறையைச் சுற்றி பாதுகாப்பும் அமைக்கப்படுகிறது.

இந்தச் சிறையில் உள்ள கைதிகளுக்கு மத்தியில் ஓங்கி ஒலிக்கக்கூடிய வலிமையயன குரலாக மால்மட்ரே திகழ்கிறான். ஆகையால் எல்லாமும் அவனின் ஆணணப்படி நடத்தப்படுகிறது. 211-இல் சிக்கிக் கொண்ட ஜூவானை அவனிடம் கொண்டு செல்ல ஒரு வயதான கைதி முடிவு செய்கிறான். அந்தக் கைதி திரும்புவதற்குள் ஜூவான் அவனைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் அபாயத்தைப் புரிந்துகொண்டு உடனடியாக இந்தச் சூழலிருந்து தப்பிக்க முயல்கிறான். அவன் மிகத் தந்திரமாக தனது தப்பிக்க முடியாத இயலாமையை உணர்ந்துகொண்டு தான் ஒரு அதிகாரி என்கிற அடையாளங்களை மறைத்துவிடுகிறான். தான் ஒரு அதிகாரியாக அந்தச் சிறையில் சிக்கிக்கொண்டால் கொடூரமாகப் பழித் தீர்க்கப்படும் மேலும் கொல்லப்படுவான் என்பதை உணர்தே உடனடியாக அவனது அடையாள அட்டை, பணப்பை, காலணி எல்லாவற்றையும் அகற்றி மறைத்துவிடுகிறான்.

இந்தச் சிறைக்கு வந்ததும் முதலில் சக அதிகாரிகள் அவனுக்கு ஒரு குற்றவாளி எப்படியெல்லாம் அணுகப்படுவான் என்றும் குற்றவாளிகளின் மத்தியில் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கப்படுகிறான். குற்றவாளியின் முன் எப்பொழுதும் பயந்த சுபாவத்தைக் காட்டக்கூடாது. எப்பொழுதும் அவர்களைக் கண்கானித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனப் பல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதே போல ஒரு குற்றவாளி சிறைக்கு வந்ததும் அவன் ஆடையும் உள்ளாடையும் கழற்றப்படுவதோடு, அவனது ஆசன வாய் பரிசோதிக்கப்படும், அவனிடமிருக்கும் எல்லாம் உடமைகளும் பறிக்கப்படும் என்றெல்லாம் குற்றவாளியின் அடையாளம் விரிவாகச் சொல்லப்படுகிறது.

அதற்குத் தகுந்த மாதிரி புதிய அதிகாரியாக நாளை பணியைத் தொடரவிருக்கும் ஜூவான், தன்னை 211 சிறைக்கு புதியதாக வந்திருக்கும் குற்றவாளியாக அடையாளப்படுத்திக் கொள்கிறான். ஜூலியசை அங்கிருந்து கடத்தி மால்மட்ரேவிடம் கொண்டு வருகிறார்கள். மால்மட்ரே ஒரு குற்றவாளி எப்படியெல்லாம் இதுவரை சிறையில் அவமானப்படுத்தப்பட்டுருக்கிறானோ அதையே ஜூவான் மீதும் பயன்படுத்தி அவனைப் பரிசோதித்துப் பார்க்கிறான். ஜூலியசின் ஆடைகள் அகற்றப்பட்டு அவனை நிர்வானமாக்கி, சுற்றியுள்ளவர்களிடம் அவனது ஆண் குறியைக் காட்டச் சொல்லி அதனைக் கிண்டலடிக்கிறார்கள். இந்தக் காட்சித்தான் குற்றவாளியின் உலகத்தில் நிகழும் மிகவும் வன்மையான செயல். ஒவ்வொரு குற்றவாளியும் பாலியல் ரீதியில் சிறைக்குள் அவமானப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தவும் படுகிறார்கள்.

குற்றவாளிகளின் மீதான இந்தப் பாலியல் கேலியும் அவமானப்படுத்துதலும் எங்கிருந்து தொடங்குகிறது எனப் பார்த்தால், சிறை அதிகாரிகளிடமிருந்து பிறகு தலைமை குற்றவாளியின் குழுவிடம் தாவுகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றவாளியும் தன்னைப் போலவே இன்னொருவன் அவமானப்படுவதைக் காணும்போது அவர்களுக்குள் வளர்ந்து அடர்ந்திருக்கும் வன்முறையும் பரிதவிப்பும் காயமும் மெல்ல தணிவது போல கற்பித்துக் கொள்ளும் அளவிற்கு அத்தகையதொரு மனநிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஜூவான் ஒரு அப்பாவி கொலையாளியாக அவர்களுக்கு மத்தியில் ஏற்றுக் கொள்ளப்படுகிறான்.

ஒரு அதிகாரி குற்றவாளியாகி, குற்றவாளிகள் நடத்தப்படுவதைப் போல எல்லாம் அநியாயங்களையும் போராட்டங்களையும் சந்தித்து அவர்களுள் ஒருவனாக அவர்களின் மனநிலைகள், வலிகள், இருண்ட வாழ்வின் பதிவின்மைகள், சூன்யம் எல்லாவற்றையும் அடைவதாக இப்படத்தில் காட்டப்படுகிறது. மேலும் அதிகாரத்திற்கு எதிராக வதைக்கப்பட்டு, ஒரு முழு குற்றவாளியாகவே மாறிவிடும் குற்றவாளியின் மௌனம் நிரம்பிய நிதர்சன அறையை பார்வையாளர்கள் முன்னிலைக்குக் கொண்டும் வரப்படுகிறது. சமூகத்தில் எல்லா வசதிகளுடனும் பணத்தின் மூலம் பெறப்படும் நல்ல பெயருடனும் ஒழுக்கத்தைச் சுயமாக உற்பத்தி செய்துகொண்டு மேல்தட்டு மனோபாவத்தில் வாழும் அதிகார சக்திகளுக்குச் சீர்த்திருத்தம் எனும் பெயரில் சமூகத்தின் எச்சங்கள் தேங்கிக்கிடப்பதாகச் சொல்லப்படும் சிறையில் குற்றவாளிகளுக்கு நடக்கும் அகக் கொடுமைகள் பற்றியும் உடல் துன்புறுத்தல் பற்றியும் என்ன தெரியப் போகிறது? என்கிற கேள்விக்குப் பளார் எனும் அறையும் படம்தான் “சிறை எண் 211”.

சிறை 211-இன் சுவரில் ஏற்கனவே இறந்துபோன குற்றவாளிகளின் கிறுக்கல்களும், அவர்கள் எப்படி மரணித்தார்கள் என்ற குறிப்புகளும் காணப்படும். ஒருவன் தலையில் ஏற்ப்பட்ட புற்றுநோயால் கதறி கதறி தலை பிளந்தும், இன்னொருவன் அறையிலிருக்கும் சன்னல் கம்பியில் தூக்குப் போட்டுக் கொண்டும் இறந்திருப்பார்கள். இந்தச் சிறையின் 211 அறைக்குள் நிகழ்ந்த குற்றவாளிகளின் மரணம் அதிகாரத்தின் அலட்சியத்தையும் குற்றவாளிகளின் அகத்தை முறையாகச் சீர்ப்படுத்தாத கொடூரத்தையும் காட்டுகிறது. அவர்கள் ஒரு மிருகத்தைப் போல நடத்தப்படுவதன் விளைவையும் சிறை எண் 211 பிரதிபலிக்கிறது.

ஸ்பானிஷ் பிரதேசத்தின் இப்படமானது நிறைய விருதுகளையும் பாராட்டுகளையும் உலக அளவில் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் மைய கதைப்பாத்திரமாகவும் குற்றவாளியாகவும் நடித்திருக்கும் மால்மட்ரே எனும் பெயரில் வரும் லுய்ஸ் தோஷர் ஸ்பானிஷ் மொழி சினிமா உலகத்தின் மிக முக்கியமான நடிகராவவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மொழியில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் லுய்ஸ் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் அந்த நாட்டின் பல முக்கியமான தொடர்களிலும் நடித்து இரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். இந்த சிறை எண் 211 படத்தில் இவரின் பாத்திரப்படைப்பு வெகுஜன இரசிகர்களையும் கவர்ந்துவிடும் அளவிற்கு ஆளுமை நிறைந்திருப்பதாக இருக்கிறது. அலட்டலும் மிகை உணர்ச்சி வெளிப்பாடுகளுமற்ற நிதானமான உடல் மொழியாலும் குற்றவாளிகளின் கரார் தன்மை நிரம்பிய குரலிலும் உண்மையான அடையாளமாக படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

4 படத்திற்கும் மேல் இயக்கி அனுபமுடைய Daniel Monzón இப்படத்தையும் இயக்கியுள்ளார். பலவகையான காரணத்தால் உள்ளுக்குள் திடீரென அடரும் ஒருவகை வெறுப்புணர்ச்சியாலும், கோபத்தாலும் குற்றங்களைச் செய்துவிட்டு சிறைக்கு வருபவர்களின் மீது மேலும் மேலும் சித்ரவதைகளும் துன்புறுத்தல்களும் திணிக்கப்பட்டு, அவர்களுக்குள் உருவான வன்முறை உணர்வை வலுப்படுத்தி, அவர்களை மீண்டும் ஒரு குற்றவாளியாகவே வெளியே அனுப்பும் சிறையின் கண்டிக்கத்தக்க செயல்பாடுகளை எதிர்க்கும் முரண் பிம்பமாக இப்படம் 2009-இல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை குற்றவாளியின் அறைக்குள் அனுப்பி கடைசிவரை காப்பாற்ற முடியாமல் போன சிறை நிர்வாகத்தின் கையறுநிலையை தந்திரமான சிக்கலான களத்தில் வைத்து மிக வலுவான திரைக்கதையின் மூலம் படைத்திருப்பது பாராட்டத்தக்க உதாரணம்.

ஜூவானை கடைசிவரை குற்றவாளிகளின் உலகத்திலிருந்து சிறை அதிகாரிகளால் காப்பாற்றவே முடியவில்லை. மால்மட்ரேவின் நம்பிக்கைக்குரியவனாக ஆவதற்கும் “உயிருடன் இருக்கவும்” அங்குச் சிக்கிக் கொண்ட அதிகாரியான ஜூவான் பிணை கைதி ஒருவனின் காதை அறுக்க நிர்பந்திக்கப்படுகிறான். மேலும் தன் கற்பினி மனைவியான எமிலாவைக் கலவரத்திலிருந்து காப்பாற்றத் தவறிய அதிகாரியும் மேலும் அவளைக் கலவரத்தில் தாக்கிவிட்டு, அங்கேயே விட்டுச் சென்ற மேலதிகாரியுமான ஒருவன் சிறைக்குள் சிக்கிக் கொள்கிறான். அதிகாரத்தின் நேர்மையற்ற செயலைக் கண்டு துடிக்கும் ஜூவான் அந்த மேலதிகாரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுகிறான். படத்தின் இந்தப் புள்ளி விரியும் இடம் மிக முக்கியமானது. அதவாது ஓர் அதிகாரி உண்மையான குற்றவாளியாக மாறுகிறான். அதற்குக் காரணம் யார்?

டாக்டர் சண்முகசிவா அவர்களின் ஒரு வரியை மலேசிய செம்பருத்தி இதழில் வாசிக்க நேர்ந்ததும் இப்படத்தின் மையக்கருவுடன் அதை ஒப்பீட்டுப் பார்க்க முடிந்தது.

“சமூகம் குற்றங்களை உற்பத்தி செய்கிறது, குற்றவாளிகள் அதைச் செய்து முடிக்கிறார்கள்”

முன்பு ஒருமுறை இங்குள்ள சிறையைக் கண்காட்சிக்காகப் பொதுமக்களுக்குத் திறந்துவிட்டடர்கள். அப்பொழுது தூக்குத் தண்டனை கைதிகளின் அறைகளைப் பார்க்க நேர்ந்தது. அங்கு என்னால் விவரிக்க முடியாது ஒரு துக்கமும் மௌனமும் நிரம்பியிருந்தது. சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு தூக்குத் தண்டனை கைதியின் வரியுடன் இந்த விமர்சனத்தை முடிக்கின்றேன்.

“ நாளிக்கு எனக்கு தூக்கு. அம்மா என்ன மன்னிச்சிறு”

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
http://bala-balamurugan.blogspot.com/