Friday, January 16, 2009

“மணமகள் தேவை விளம்பரம்” சிறுகதை




“மணமகள் தேவை விளம்பரம்”

கே.பாலமுருகன்




பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்ததும் எல்லோரும் என்னை அடையாளம் கண்டுக் கொண்டார்கள். வாசலிலேயே அமர்ந்திருக்கும் கணபதி ஐயா விருட்டென திரும்பிக் கொண்டு நாளிதழை புரட்டத் தொடங்கினார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் டைப்பிஸ்ட் சுதாவும் அவ்வளவாக என்னைப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை.

“என்னா தம்பி வேணும்?”

“வெளம்பரம் கொடுக்கனும்?”

“எத்தனை பக்கத்துக்கு?”

“எத்தனைப் பக்கம் வரைக்கும் கொடுக்கலாம்?”

“கால் பக்கம், அரை பக்கம், முழு பக்கம், ஆனா ஒரே பக்கம்தான் லிமிட்டேட்”

“சரி அப்பனா ஒரு முழு பக்கம் கொடுத்தரலாம். எவ்ளெ?”

“100 வெள்ளி வரும் தம்பி. எதைப் பத்தி கொடுக்கப் போறிங்க?”

“மணமகள் தேவைனு”

“அதுக்கு யேன் முழுப் பக்கம்?”

“காசு தந்துடுறேன். . முழுப் பக்கமே போட்டுருங்கெ, இந்தாங்க வெளம்பரம் பத்தி எல்லாமே இருக்கு இதுலே”



மணமகள் தேவை

என் பெயர் அசோகன்.(பேசும்போது நடிகர் அசோகனைப் போல கை கால்களெல்லாம் அசைக்க மாட்டேன், கவலை வேண்டாம்). வயது 32. இன்னமும் திருமணம் ஆகவில்லை, முதல் திருமணம்கூட ஆகவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி. தொடர்ந்து முயன்று வருகிறேன். பக்கத்து வீட்டுக் கிழவி சொன்னாள், ”கடைசி காலத்துலே பேச்சு துணைக்காவது ஒரு துணை வேண்டும்” என்று, ஆதலால் பேச்சுத் துணைக்காகவும் நான் ஒரு மனைவியைத் தேடுகிறேன் என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிற்சாலையில் கண்கானிப்பாளராக 12 வருடங்கள் தேய்கிறேன். உயரமான தோற்றம், சுமாரான நிறம், கண்களுக்குக் கீழ் கருவலையங்கள் இருக்கும்(பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுக்கப் பல கட்டுரைகள் எழுதிய நேரங்களில் தூக்கம் கெட்டதால் இந்த அடையாளம்).

முகத்தில் இரண்டு இடங்களில் தடிப்பான பருக்கள் இருக்கும். பெரிய மீசையெல்லாம் இல்லை. மிகவும் எளிமையாகக் காட்சியளிப்பேன். அடிக்கடி காய்ச்சல் வரும். நான் வேலை செய்யும் தொழிற்சாலையில் அன்னிய நாட்டுத் தொழிலாளிகளுடன்தான் புழங்குகிறேன். அவர்களின் வாழ்க்கைமுறைக்கு எதிரான பின்னனி என்னுடைய கலாச்சாரம். ஆதலால் அடிக்கடி காய்ச்சல் வரும்.(எப்படி? ரொம்ப யோசிக்க வேண்டாம்)

மணமகள் எப்படி இருக்க வேண்டும்?

மணமகள் சுமாரான நிறத்தில் இருந்தாலும் கன்னத்தில் மச்சம் மட்டும் இருக்கக்கூடாது. இரவில் திடிரென்று விழித்து அவள் முகத்தைப் பார்க்க நேர்ந்தால் எனக்கு மீண்டும் காய்ச்சல் வந்துவிடும்.(பூச்சாண்டியைக் கண்டால் எனக்குப் பயம். பூச்சாண்டிகளுக்குக் கன்னத்தில் தடிப்பான மச்சம் இருக்கும் என்று என் பாட்டிக் கதை விட்டிருக்கிறாள்) அடுத்தப்படியாக மணமகளின் எடை 55 கிலோக்குக் குறைவாகவும் 48 கிலோவிற்குக் கூடுதலாகவும் இருக்க வேண்டும்.( நான் அவ்வப்போது என் மனைவியைத் தூக்கிக் கொண்டு கடற்கரையோரமாக நடக்க வேண்டும் என்று இலட்சியம் கொண்டவன். அப்படியே கடலில் தூக்கி வீசிவிடுவேன் என்று அச்சம் கொள்ள வேண்டாம்)

மணமகள் சினிமா பைத்தியமாக இருக்கக்கூடாது, அதிலும் சீரியல் பைத்தியமாக இருக்கவே கூடாது. பழி வாங்கும் எண்ணங்களையும் பழித் தீர்க்கும் வழிமுறைகளையும் கற்றுக் கொடுப்பதில் அதிகம் கவனம் செலுத்தப்படும் தமிழ் சீரியல்களை நான் என் வீட்டுக்குள் அனுமதிப்பதே கிடையாது.(வீட்டிற்கு வெளியே வேண்டுமென்றால் தொலைகாட்சியைப் பொறுத்தி சினிமா பார்ப்பதைப் பற்றி பிறகு ஆலோசிக்கலாம்)

நான் அவ்வப்போது அயல்நாட்டு கலைப்படங்களைச் சலிக்காமல் உறங்காமல் பார்த்துத் தொலைவேன். என்னுடன் சேர்ந்து கொண்டு அந்தப் படத்தை இரசித்துப் பார்க்க வேண்டும். கொஞ்சம்கூட கண் சிமிட்டாமல் கலைப்படங்களின் அபாரத்தில் கரைந்துவிட வேண்டும். அடுத்தப்படியாக இரவில் குரட்டைவிடும் மனைவியாக இருந்தால் சிறப்பு. என்னுடன் போட்டி போட ஒரு ஆள் கிடைத்தால் மகிழ்ச்சிக் கொள்வேன்.

மணமகள் திறந்த மனப்போக்கு உடையவளாக இருந்தால் நல்லது. நான் அடிக்கடி நகைச்சுவை கதைகள் சொல்வேன். சிரிப்பு வரவில்லையென்றாலும் பாசாங்குத்தனமாகச் சிரித்தாவது என்னைத் திருப்திப்படுத்த வேண்டும். என் மனம் மகிழ்ந்து, இன்னும் நிறைய கதைகள் சொல்லத் தொடங்கினால், ஓயாமல் சிரித்து கோமாளியாக வேண்டும். (விழுந்து சிரித்தாலும் அது எனக்கு அளிக்கும் கௌரவம்தான்)

மணமகள் எல்லாவிதமான ஆடைகளையும் அணியக்கூடியவளாக இருக்க வேண்டும். என்னால் கடைகளுக்குச் சென்று துணி தேர்வில் ஈடுபட முடியாது. மனம் அதில் இலயிக்காது என்பதால் மணமகள் துணி தேர்வில் தனது ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பப்படி ஆடை இராஜ்யம் நடத்திக் கொள்ளலாம்.



மணமகள் அடிக்கடி என்னிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அவள் அவளுடைய அம்மா வீட்டிற்குக் கிளம்பிப் போய்விடலாம். இரண்டு நாள் கழித்து தகவல் கொடுத்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். முக்கியமாகச் சொல்லவேண்டுமென்றால், மணமகள் காணவில்லையென்றால் ஊரைக் கூட்டி ஆரவாரம் செய்யும் குணம் எனக்கில்லை. கடைசியாக நான் மணமகளுக்குக் கொடுக்கும் சுதந்திரம், நான் கட்டுப்பாடிழந்து அவளை அடிக்க நேர்ந்தால், அவளும் தமது கட்டுப்பாட்டினை இழக்கும்போது என்னை அடிக்கலாம். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே கட்டுப்பாட்டை இழக்கப்போவதைப் பற்றித் தெரிவித்துவிட வேண்டும்.

(பின்குறிப்பு: இந்த மணமகளுக்கான விளம்பரம் அடுத்த மாதம் கடைசிவரை செயல்பாட்டில் இருக்கும். பிறகு கட்டுப்பாடுகள் மாற்றியமைக்கப்படும். முந்துவோருக்கு முதல் சலுகை. என்னைத் திருமணம் செய்து கொள்ளும் மணமகளுக்கு இலவசமாக ஒரு வீட்டை அவள் பெயரில் எழுதி வைப்பேன்.( ஆனால் அந்த வீடு கடனில் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பற்றிப் பிறகு விளக்கமாகத் தெரிவிக்கிறேன்) நன்றி. அவசரம். 8 வருடமாக முயற்சி செய்கிறேன். மணமக்கள்களே முந்துங்கள்.

2

மீண்டும் ஒரு புதிய விளம்பரத்துடன் உள்ளே நுழைந்ததில் பலருக்கு அதிருப்தி போல. பத்திரிக்கை ஆசிரியர் வெறுப்புடன் என்னைப் பார்த்தார். முகத்தில் சலிப்புத் தட்டியது. எப்படியும் இரண்டு வாரத்தில் வந்துவிடும். என் விளம்பரம் குறித்து பலமான எதிர்வினைகள் வந்து கொண்டே இருப்பதாகப் பலர் சலனப்பட்டுக் கொள்வதுண்டு. அதில் ஒன்றை எடுத்து அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் என்னிடம் காட்டினார்.


அன்புள்ள ஆசிரியருக்கு,

கடந்த வாரம் தங்களின் பத்திரிக்கையில் மணமகள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். யார் அந்தக் கோமாளி? இந்த மாதிரியான விளம்பரங்களை எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள்? காசுக்காகவா? வேண்டுமென்றால் அந்தப் பணத்தை நான் இலவசமாக உங்களின் பத்திரிக்கை முன்னேற்றத்திற்காக அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து பெண்களை இழிவுப்படுத்தும் இந்த மாதிரியான சில்லறைத்தனமான விளம்பரங்களைப் போடாதீர்கள். அந்த ஆளைச் சந்தித்தால், அவன் முகத்தில் பளார் என்று அறைய நான் காத்திருக்கிறேன் என்று தெரியப்படுத்துங்கள். அவனுக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் ஆகாது என்பதையும் என் சார்பாகச் சொல்லிவிடுங்கள்.

நன்றி-மணிமேகலை


“என்னா சொல்றீங்க இதுக்கு?”

“பாவம் சார் இந்தப் பொண்ணு! அதுக்கும் பல வருஷம் கல்யாணம் ஆகல போலே. . ஆர்வமா விளம்பரத்தெ பார்த்திருக்கும். . அதான். . விடுங்க சார். . பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்தாகூட தப்பா போச்சி சார். . காலம் காலமா ஒரே மாதிரியான வாழ்க்கையெ வாழ எனக்கு விருப்பம் இல்லெ சார். . இந்தாங்க புது விளம்பரம். . போட்டுருங்க சார்”

“மன்னிச்சிருங்க சார் .. போட முடியாது. வாசகர்களுக்கிட்டருந்து பயங்கரமான கடிதம்லாம் வருது. மன்னிச்சிருங்க”

“சரிங்க சார். . எனக்குக் கல்யாணமே ஆகாதுனு நாகரிகமா சாபம் விடுறிங்களா?”

“அப்படிலாம் இல்லெ. .”

“சரி சார்.. நான் வேற பத்திரிக்கைலே இந்த விளம்பரத்தெ கொடுத்துப் பாக்கறேன். . கண்டிப்பா என் கல்யாணத்துக்கு உங்களுக்கும் அந்த மணிமேகலைக்கும் பத்திரிக்கை கொடுப்பேன். . வரேன் சார்”


ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

No comments: