Wednesday, March 18, 2009

பா.சிவம்-ந.பச்சைபாலன் கவிதைகள் குறித்த விமர்சனம்

புரிதல்


புரிதல் களம் மௌனத்திற்கு வலுவைச் சேர்க்கும் என்றே நினைக்கிறேன். நவீன கவிதைகள் குறித்தான விவாதங்களையும் புரிதல்களையும் அவதானிப்புகளையும் முன்னெடுத்து செல்ல இந்தப் புரிதல் களம் எல்லாம் எழுத்தாளர்களுக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.


பிப்ரவரி மௌனம் இதழில் வெளியாகியுள்ள பெரும்பாலான கவிதைகள் நான் முன்பு குறிப்பிட்டத்தைப் போல சமக்காலத்து நவீன சமரசங்களையும் சிக்கல்களையும் போராட்டங்களையும் மனநிலைகளையும் பிரதிபலிப்பதாக மலர்ந்துள்ளன. அனைவருக்கும் பாராட்டுக்கள். பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதற்கான களங்களில் நவீன கவிதைகளும் சரியான தேர்வுதான்.


அந்த வகையில் பிப்ரவரி இதழில் வெளியாகியுள்ள பா.அ.சிவத்தின் கவிதையான “தோட்ட வீடு” பிந்தைய வாழ்வை மீட்டெடுக்கும் பணியை கவித்துவமான மனநிலையில் அல்லது சிதறுண்ட நிலையில் மேற்கொண்டுள்ளது என நினைக்கிறேன்.
“தோட்டத்திலுள்ள
பழைய வீட்டுக்குத்
திரும்ப வேண்டும்”
பா.அ.சிவம்


இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான எழுத்தாளர்கள் தமது தோட்டப்புற வாழ்வையும் நினைவுகளையும் நாவல், குறுநாவல், சிறுகதை போன்ற வடிவங்களில் மீட்டுணர அல்லது மீள் பரிசோதனை செய்யும் வகையில் பல நிஜ-கற்பனை புனைவுகளை/படைப்புகளை முயன்று வருகிறா¡ர்கள்/முயன்றுள்ளார்கள். ஒரு சிலரால் இந்த முயற்சி காலம் கடந்தவை, நகர் சார்ந்த வாழ்வின் போராட்டங்களுக்கு மத்தியில் பிந்தைய தோட்டப்புற வாழ்வைப் பேசுவது பின்தங்கிய / தேக்க நிலையை ஏற்படுத்திவிடும் என்றும் சாடுகிரார்கள்/ கருத்துரைக்கிறார்கள்.


பிந்தைய வாழ்க்கையிலிருந்து நம்மை நாமே மீட்டெடுப்பது என்பது ஒரு வரலாற்று பரிசோதனை என்றே கருதுகிறேன். “வீட்டுக்குத் திரும்புதல்” என்பது அவ்வளவு எளிதான வரிகள் அல்ல, அது வலிகள் நிரம்பியவை, பரப்பரப்பான சூழலில் தொலைந்து கரைந்து கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவின் அசலான வேண்டுகோள் அது. இன்று நகரத்தில் சிக்கி தம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் ஏக்கத்தையும் தோட்டம் குறித்த நினைவுகளையும் “வீடு திரும்ப வேண்டும் “ என்கிற வரியினூடே வலியினூடே மிகவும் எளிமையாகப் படைத்திருக்கிறார் கவிஞர் பா.அ.சிவம்.


“வீட்டை விடூ
வெளியேற முடியாமல்
உள்ளேயே
அடைந்து வாழ்ந்து
மக்கிப் போனதாய்
தந்தை தமக்கையின்
ஆகக் கடைசிச்
சொற்களைப்
பொறுக்குவதற்காக
திரும்பியே ஆக வேண்டும்”
-பா.அ.சிவம்-நாம் கடந்து வந்துவிட்ட பல ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பெரும் சூன்ய வெளியை நம் முன்னே கொண்டு வந்து சேர்க்கிறார் கவிஞர். அந்தப் பெரும்வெளி கடந்தகால ஒரு சமூகத்தின் உணர்வையும் பகிர்தல்களையும் வலியையும் நிரம்பக் கொண்டுள்ளதை “ஆகக் கடைசியான சொற்களை” என்ற வரியில் உணர்த்துகிறார். இந்த மனிதரின் மீட்டெடுப்பின் முயற்சி நம்மையும் நம் வீட்டிற்கு மிகவும் நெருக்கமாகிவிடுகிறது.


ந.பச்சைபாலன் அவர்களின் சுவடுகள் கவிதை கவனத்திற்குரியது. பெரும்பாலும் நவீன கவிதைகள் என்றாலே இரண்டு வகையைச் சேர்ந்ததாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் ( இன்னும் பல வகைகள் இருக்கக்கூடும்) முதலில் சமகாலப் பிரச்சனைகளை சுயநிலையிலோ அல்லது பிறழ்வு நிலையிலோ எதிர்க்கொள்வது அல்லது தமது இருப்பை கேள்விக்குள்ளாக்குவது /பரிசோதனை செய்வது இரண்டாவது சோதனை முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது அந்த வகையில் ந.பச்சைபாலன் அவர்களின் கவிதையான சுவடுகள் மனித இருப்பைப் பற்றி ஆராய்கிரது, கேள்விக்குள்ளாக்குகிறது.


“ஒரு கள்வனைப் போல்
எந்த அடையாளமும் வைக்காமல்
வீட்டைத் தூய்மையாகத் துடைத்து
விட்டு
கதவின் வழிவெளியேறுகிறோம்
நம்மில் பலர்”
-ந.பச்சைபாலன்


இந்த வரியினூடே நம் பல புரிதல்களுக்கு உட்படலாம். இதுவும்கூட கவிதையின் வெற்றிதான். இன்றைய நவீன மனிதனின் மூல பிரச்சனையே அடையாளமின்மைதான். தமக்கென்று எந்த அடையாளமும் இல்லாத பட்சத்தில் வாழ்க்கை வெறுமையாகிப் போகும் சுய ஒழிப்பு நிலைக்குள் தள்ளப்படுகிறான். அடையாளமின்மை என்பது மகா சூன்யத்திற்கான பாதை. வாழும் மனிதர்கள் தமது சுய அடையாளங்களைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது, அட்டவணை வாழ்வைத் தயார்ப்படுத்திக் கொண்டு மிகவும் சினேகிதமான முறையில் தமது அடையாளங்களைத் தெரிந்தே இழக்கும் நகர் சார்ந்த சுயநலங்களை ஆழமான குறியீடாக வெளிப்படுத்தியுள்ளார் என்றே நினைக்கிறேன்.


மற்ற எழுத்தாளர்களின் கவிதைகளும் அற்புதமான முறையிலேயே படைக்கப்பட்டுள்ளது. சீ.முத்துசாமி அவர்களின் கவிதை தனித்த அடையாளம் கொண்டவை, வழக்கம்போல வழக்கத்திற்கு மாறாகவும் புது புது களங்களுடன் எப்பொழுதுமான விருவிருப்புடன் சை.பீர் முகமது அவர்களின் கவிதைகள் இலக்கியம், சமூகம், தனிமனித இருப்பு என்று எளிய நகைச்சுவையுடன் வலம் வருகின்றன. தொடரட்டும் பரிசோதனை முயற்சிகள், வாழ்த்துக்கள் மணிக்கொடி மற்றும் ஏ.தேவராஜன்.
ஆக்கம்


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி(016-4806241)


No comments: