Thursday, May 14, 2009

பாரதிராஜா பேச்சு: மகாத்மாகாந்தி நாடு ஈழம்தான்

மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டென்றால் அது ஈழம்தான்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு
இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மை கருதிதான் கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம் என சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்ற திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பாரதிராஜா மேலும் பேசியதாவது:-

இதுவரை நான் அரசியல் மேடையில் பேசியது கிடையாது. வாழ்க்கையில் நான் பொய்பேசி பழகாதவன். அதனால்தான் நான் இந்த மேடையில் நின்றுகொண்டு இருக்கிறேன். அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. எனது இனத்துக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்பதால் நான் இங்கு வந்தேன்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். இது மத்திய அரசின் காதுகளுக்கு கேட்கவில்லை.

பிரபாகரன் சாதாரண மனிதன் அல்ல. அவன் உண்மையான தமிழன். மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டு என்றால் அது ஈழம்தான். இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

சோனியா என்ன பேசுகிறாரோ அதற்கு மன்மோகன் சிங் வாய் அசைப்பார். இலங்கை இராணுவத்தால் பிரபாகரனை தொடமுடியாது. அதனால் தான் அவரை சார்ந்தவர்களை இலட்சக்கணக்கில் இலங்கை இராணுவம் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் மாற்று உடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். உலகமே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சோனியா மட்டும் வாய் திறக்கவில்லை.

போரை நிறுத்தி விட்டு நீங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் உங்களை இரத்தின கம்பளம் போட்டு வரவேற்கிறோம். அதை செய்யாமல் நீங்கள் எப்போது வந்தாலும் எங்களின் எதிர்ப்பை காட்டியே தீருவோம்.

1962-ல் தமிழகத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அந்த எழுச்சி தற்போது இங்கு வரவேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு எங்கள் இதயத்தை கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் பேசியதாவது:-

நாங்கள் பல போராட்டங்கள் மூலம் எங்கள் ஆதரவை இலங்கை தமிழர்களுக்கு தெரிவித்துள்ளோம். இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 16 தொகுதிகளிலும் டெபாசிட் கிடைக்காது. காங்கிரஸ் சின்னமான கையில் ஆயுள் ரேகை இல்லாமல் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:-

தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொல்லத்தான் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம். நமது இராணுவத்தின் மீது நமக்கு வெறுப்புவர காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி தான். 21/2 இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

இலங்கை செய்திகள்

No comments: