Wednesday, June 3, 2009

கோணங்கியின் நாவலும் ஆளுமை கிறுக்கெடுத்தவர்களும்


கோணங்கியின் நாவலைக் கையில் வைத்துக் கொண்டு பெரிய மேதாவிகள் போல பிரசங்கம் செய்பவர்கள் உண்டு. இந்த நாவலைப் புரிந்து கொள்ள முடியலையா? இது எளிதான பின்நவீனத்துவம்,நவீனத்துவம், கட்டற்ற மொழி அமைப்பு என்று மிகப்பெரிய இலக்கிய ஜாம்பவன்கள் போல போலி முகத்துடன் ஆளுமை சார்ந்த மோகத்திற்காக அலைபவர்கள் உண்டு. (கோணங்கி நாவல் என்று மட்டும் இல்லை, இன்னும் சில நாவல்கள்/பிரதிகளும்தன்)

நவீனத்துவ மாயையில் சிக்கிக் கொண்டவர்கள்தான் அப்படித் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்..

*புரியவில்லை என்றால் புரியவில்லை என்று சொல்வதற்கு தயங்கி, இன்று பலர் தனது வாசிப்பாளுமையின் உச்சமாக கோணங்கியை அளவுகோளாக வைத்துக் கொண்டு கபட நாடகமாடுகின்றனர்.

*எளிமையான மொழி, சுமாரான கமர்ஷயல் மொழி, கட்டற்ற மொழி,நோக்கமில்லாத அமைப்பை இழந்த மொழி,தரமான மொழி, என்று இலக்கியத்திற்குப் பலவகையான மொழி பயன்பாடு உள்ளன. சிலர் வரித்துக் கொண்டு செயற்கையாக தேர்வுசெய்கிறார்கள்,சிலரின் ஆளுமை அவர்களின் மொழியை அவர்களே உருவாக்கிக் கொள்ளும்படி செய்துவிடுகின்றது. அது செயற்கை அல்ல. மிக பொருத்தமான அவர்களின் அகஉலகம் சார்ந்த யதார்த்தம்.

* எல்லாம் மொழி அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக ஒரு வகைக்குள் சேர்த்துவிடமுடியாது.சில இலக்கியவாதிகளின் படைப்புகள் தொடக்கத்திலேயே தனக்கான தனித்துவமான மொழியைக் கண்டறிந்து கொள்கின்றது. அதை அடைய முடியாத வாசகர்களுக்கோ சரி,எழுத்தாளனுக்கோ சரி எந்தப் பாதிப்பும் இல்லை. அது சுயம் சார்ந்த தேர்வு.

* இதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, தன் மாய ஆளுமையை முன் வைத்து பிறருக்கு இலக்கிய புத்தி சொல்வதும், பிறரின் வாசிப்பை மலிவுப்படுத்தி பேசுவதுமாக சில நாட்டாமைகள் இருக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகளில் வரிக்கு வரிக்கு ரஷ்ய எழுத்தாளர்களின் நாவலின் தலைப்பும், கோணங்கியின் நாவல் தலைப்புகளும், நமக்குப் புரியாத ஏதோ ஒரு மொழியில் மிகவும் மாய யதார்த்தமாகப் பேசி புலம்புவார்கள். அல்லது எளிமையான மொழியிலேயே பேசி, 'இவர்களை' நீங்கல் வாசிக்கவில்லையென்றால் உங்கள் இலக்கியம் வளரவே வளராது என்று பிரச்சாரம் செய்து உங்களைத் தட்டிவிட முனைவார்கள்.

*அதுவும் இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் பிறரை திட்டிக் கொண்டும், ஒப்பிட்டு தரம் தாழ்த்தி பேசிக் கொண்டும், கேலி கிண்டல் அடித்துக் கொண்டும் சுய இன்பம் அடைந்து கொள்வார்கள். இந்த குனத்தை -சமரசமற்ற சிறந்த ஆளுமை- என்று அடையாளப்படுத்தவும் செய்வார்கள். தங்களுக்குத் தெரிந்த எழுத்தாளரின் பெயரைச் சொல்லி, அவரை வாசித்தால்தான் முடியும் போல என்று மேற்கொள்கள் எல்லாம் காட்டிக் கொண்டு தனது வாசிப்பு களத்தை அம்பலப்படுத்தி மார் தாட்டிக் கொள்வார்கள்.

இவர்களையெல்லாம் கண்டு பல இளம் வாசகர்கள், ஆரம்ப நிலை வாசகர்கள் பயப்பட தேவையே இல்லை. உங்களின் வழியில் நீங்கள் செல்லுங்கள். நல்ல இலக்கிய வாசிப்பை சில நல்ல மூத்த இலக்கியவாதிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் முயலுங்கள். பிறர் வாசிக்காததை நாம் வாசிக்கவில்லையே என்கிற எண்ணம் அவசியமில்லை. தரமான புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன. அதைக் கண்டடையுங்கள், வாசியுங்கள். யாருடனும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எழுத்துலகில் யாரும் உரிமையாளர்கள் கிடையாது.

(உரிமையாளர்கள் போல நாடகம் ஆடத் தெரிந்தவர்கள் பலர் உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மெல்ல வளரும் நமது இயல்புக்கு புறம்பாக உடனே வளர்ந்துவிடு, இல்லையென்றால் நீ கோழை என்று தீர்ப்பு வழங்கவும் பலர் இருக்கிறார்கள்- அவர்களைக் கண்டு தயக்கம் வேண்டாம். கமர்ஷியல் புகழையும் இலக்கிய தொடர்புகளும் பத்திரிக்கை பலமும் கொண்ட பலர் அப்படியொரு பிம்பத்தை வரித்துக் கொண்டு தன்னுடைய கூட்டத்துடன் பேசி அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்றுமே அவர்கள் இலக்கிய/எழுத்துலகின் உரிமையாளர்கள் ஆகிவிட முடியாது.

ஆகையால் கோணங்கி, ஜெயமோகனின் விஷ்னு புரானம் போன்ற தடிப்பான நாவல்களுடன் பெரிய இலக்கிய புலி போல பேசுபவர்களைக் கண்டு முதலில் பயப்பட வேண்டாம். அவர்கள் நம்மைப் போல மிக சாதாரணமானவர்கள்தான். வாசிக்கக் கிடைத்தவர்கள் வாசிக்கட்டும், அதற்காக வாய்ப்பில்லாதவர்களைப் பார்த்து கேலி கிண்டல் அடிப்பதைவிட இருப்பதைக் கொடுத்து அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்த முனையலாம்.)

கே.பாலமுருகன்

3 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

//'இவர்களை' நீங்கல் வாசிக்கவில்லையென்றால் உங்கள் இலக்கியம் வளரவே வளராது என்று பிரச்சாரம் செய்து உங்களைத் தட்டிவிட முனைவார்கள்.//

இந்தக் கட்டுரையை பீருவுக்கும் சாருவுக்கும் அனுப்பி வைக்க பரிந்துரை செய்கிறேன் :))

ரா.கிரிதரன் said...

கே.பாலமுருகன் - வார்த்தை ,திண்ணை இதழிலிருந்து உங்கள் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

முதலில்,ஜெயமோகன் போன்ற ஆளுமைகளின் படைப்புகளை பற்றிப் பேசுவது `பிரசங்கம்` ஆகாது.

//புரியவில்லை என்றால் புரியவில்லை என்று சொல்வதற்கு தயங்கி, இன்று பலர் தனது வாசிப்பாளுமையின் உச்சமாக கோணங்கியை அளவுகோளாக வைத்துக் கொண்டு கபட நாடகமாடுகின்றனர்//

புரியவில்லை என்றால் ஏன் என்றுதான் கேட்கவேண்டுமே தவிர, அதை எழுத்தாளனின் குறையாக பாவிப்பது தவறு. அகவயமான அனுபவத்தை வைத்தே ஒரு படைப்பு வாசிக்கபடுகிறது. individuality மற்றும் தனிப்பட்ட வெறுப்புகள் படைப்பின் தராசில் ஏறவே வேண்டியதில்லை.

//வரிக்கு வரிக்கு ரஷ்ய எழுத்தாளர்களின் நாவலின் தலைப்பும், கோணங்கியின் நாவல் தலைப்புகளும், நமக்குப் புரியாத ஏதோ ஒரு மொழியில் மிகவும் மாய யதார்த்தமாகப் பேசி புலம்புவார்கள். அல்லது எளிமையான மொழியிலேயே //

நல்ல படைப்புகள் எந்த மொழியில் வந்து நமக்கு புரியவில்லை என்றால் ஏன் குழம்பவேண்டும்? அவற்றைப் படித்துவிட்டு, எழுத்தாளர் ஏன் இதை ஏன் குறிப்பிடுகிறார் என வினவலாம்.

//ஜெயமோகனின் விஷ்னு புரானம் போன்ற தடிப்பான நாவல்களுடன் பெரிய இலக்கிய புலி போல பேசுபவர்களைக் கண்டு முதலில் பயப்பட வேண்டாம்//

செவ்வியல் படைப்பில் விஷ்ணுபுரம் ஊன்றிப் பல்லாண்டாகிறது. இதை எந்த விதத்திலும் தடிப்பான நாவல்கள் எனச் சேர்க்க முடியாது. அதேசமயம் இரு வாசகருக்கு ஒரே போன்ற படிப்பனுபவம் இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பது தவறு. அதன் மேல் விமர்சனங்களை சரியான படி வைத்து ஏன் நிராகரிக்கிறேன் எனச் சொன்னால் அது சாத்வீகமான விமர்சனமாகும்.

என் புத்தக விமர்சனங்களை அந்த தராசிலேயே கணக்கிடுகின்றேன்.

கே.பாலமுருகன் said...

ரா.கிரிதரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்களின் கதைகளை நானும் திண்ணையில் வாசித்துள்ளேன்.

நான் இந்தக் கட்டுரையை எழுதிய சூழலும் காரணமும் மனநிலையும் வேறு. இருந்தபோதும் உங்கள் கருத்துகளும் உங்கள் தரப்பில் ஒலிப்பதால் மிக்க நன்றி.

ஆளுமைகளின் படைப்புகளைப் பேசுவது பிரசங்கம் கிடையாதுதான், ஆனால் அந்த ஆளுமைகளைக் காட்டி பயமுறுத்துவது என்னை பொறுத்தமட்டில் தவறுதான்.
எடுத்துக்காட்டாக: "ஜெயமோகன் எழுதாததையா நீ எழுதிற போற? மேல்நாட்டு எழுத்தாளர்கள் எல்லாத்தையும் எழுதிட்டாங்க, இப்ப என்னாத்தெ எழுதி சாதிக்கப் போறிங்க?" இது போன்ற கேள்விகள் கேட்பவர்காள் இருப்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் அவர்களைப் போன்றவர்களைச் சந்திக்காததால் உங்கள் கருத்து அப்படியிருக்கக்கூடும்.

//மற்ற சில கருத்துகளை இன்னும் விரீவாக பிறகு பகிர்ந்து கொள்லலாம்.//

பாலமுருகன்