Sunday, August 2, 2009

யானைகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்- மிருகங்களின் மீதான மத அரசியல்

சற்றுமுன் சன் தொலைக்காட்சியில் “the tale of elephant” என்கிற நகைச்சுவை படம் ஒன்றை ஒளிப்பரப்பியிருந்தார்கள். தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அறையிலிருந்து கேட்கும்போது ஏதோ கீழ்த்தரமான நகைச்சுவை தமிழ் சினிமாவின் காட்சி ஓடிக் கொண்டிருப்பது போன்று தோன்றியது. கோயம்புத்தூர் வட்டார மொழியில் பலர் பேசிக் கொண்டும் திட்டிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் இருப்பது போன்ற ஒலிப்பதிவுகள்.

இதென்ன வட்டார வாழ்வை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் புது படமா என்று தொலைக்காட்சியை எட்டிப் பார்த்தபோது பயங்கர அதிர்ச்சி. (சன் தொலைக்காட்சி வந்தததிலிருந்து பல அதிர்ச்சிகள் நிகழ்ந்துகொண்டுத்தான் உள்ளன. இனி சன் தொலைக்காட்சி இல்லாமல் போனால் நம் வீட்டிலுள்ள பெரும்பாலான பெண்களெல்லாம் இடிந்து வீழ்ந்து உருகிவிடுவார்கள் என்பதும் வேறு விஷயம்). யானை கூட்டம் ஒன்று ஆப்பிரிக்கா வனத்தின் அடர்த்தியைக் கடந்து வெட்டவெளி பிரதேசத்தில் நடந்துகொண்டிருக்கும் காட்சி. ஆமாம், யானைகள் அனைத்தும் “கோயம்புத்தூர் மொழியின் அசல் தொனியிலும் சினிமாத்தன வசனங்களுடனும் கிண்டலடித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்துகொண்டிருக்கின்றன.

“டே. . என்றா அங்குட்டு போய் மாட்டிக்காதே மச்சான்”
“டே இவரு பிளிறி காட்டறாருடா. . பயமா இருக்கு”
“நாங்களெல்லாம் வந்தாலே அதிரும்லே”

பெரியார் ஏற்கனவே ஒருமுறை சொல்லியிருந்தார், “அவ்வளவு பெரிய விநாயகருக்கு இவ்வளவு சின்ன எலி வாகனமா? இது மிருகவதை” என்று. பக்தி காலத்திற்குப் பிறகு எந்த மிருகத்தையெல்லாம் நாம் தெய்வமாக்கியிருக்கிறோம் என்று பார்த்தால், உலகில் உள்ள எல்லாம் மிருகங்களும் நம் இந்து கடவுள்களின் அப்பாவி வாகனங்களாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிய முடியும். பல மிருகங்கள் கோவில்களில் ஒரு குறியீடாக நிறுவப்பட்டு சிலை வடிவங்களாக மதவாதிகளால் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவைகள் அங்கிருந்து நகர முடியாமல் இந்துத்துவ பின்னனியில் வேத புராணக் கதைகளின் கட்டமைப்பில் தெய்வங்களின் அடிமைகளென சிக்கிக் கொண்டு காலத்திற்கும் அதன் குறியீடுகளாக கிடக்கின்றன.

முருகனுக்கு மயில் வாகனம், விநாயகருக்கு எலி வாகனம், எமனுக்கு எருமைமாடு வாகனம், முனியாண்டி சாமிக்கு குதிரை வாகனம், அம்மனுக்கு புலி வாகனம், பெருமாள் படுத்துக் கொள்ள பாம்பு படுக்கை, நம் இந்து கடவுள்கள் இந்த மிருகங்களெல்லாம் இல்லையென்றால் அநேகமாக தடுமாறி கையறு நிலையில் இருக்க வேண்டி வரும் போல.

“எமன் உயிரைப் பறிக்க எருமைமாட்டின் மீது வருகிறார்” இவர் செய்யும் தொழிலுக்கு எருமை மாட்டையும் உடந்தையாக்குகிறார். எருமைமாட்டில் வந்தால் கோரமாக அச்சுறுத்தலாக இருக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் ஒரு “தெர்ரர்” போல தெரிய வேண்டும் என்பதற்காக இருக்கலாம். கிரெக்க நாகரிகத்தில் காளை சண்டை ஒரு மாவிரனுக்குறிய உயிர் பிரக்ஞையைத் துறந்த ஒருவனுக்கான வீர விளையாட்டு என்று தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதே விளையாட்டு, “ஜல்லிக்கட்டு காளையென” இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்து சந்தைக்குள் நுழைந்தது. சரி இது ஒரு மிருகவதை என்று எடுத்துக் கொண்டாலும், அவர்கள் காளையை வீரத்திற்கான கடைசி குறியீடாகப் பாவித்து அதனை அடக்குபவன் மாவீரன் என்று வரையறுத்தார்கள். ஆனால் நம்ப எமலோகம் மன்னன் எமதர்மன், வேத காலத்தின் மிகப் பயங்கரமான புனைவு, உலக மாவீரராகத்தான் இருக்க முடியும் போல.

“மொத்த குதிரைகளும் நம்ப முனியாண்டி சாமி எப்பொழுது குத்தகைக்கு எடுத்தார்” என்பதைச் சற்றுக் கூர்ந்து கவனித்து அவதானிக்க வேண்டும்” ஒருவேளை அந்தக் காலத்து ஜமிந்தார்களும் பணக்காரர்களும் காவல்காரர்களும் குதிரை சவாரியை ஒரு பொழுது போக்காக பின்பற்றியிருந்திருக்கலாம். அல்லது அவர்களின் காவல் தொழிலுக்கு அதைப் பயன்படுத்தியிருக்கலாம். அதே வழக்கமாக ஆகி, காவல் காப்பவர்கள் எல்லாம் குதிரையில்தான் வருவார்கள் என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம். (தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்) கதாநாயகன் குதிரையில் வந்து கதாநாயகியைக் காதலிப்பது, காப்பாற்றுவது, கவர்வது போல.

அலெக்செண்டர் போர்க்களத்தில் வென்ற நாடுகளைவிட, இழந்த போர்வீரர்களைவிட, அவரின் படையில் மரணித்த குதிரைகள்தான் அதிகம் என்று ஒரு கட்டுரையில் படித்தேன். பாவத்திற்குரிய மிருகம் குதிரை. அதன் வேகமே அதற்கு பலவீனம்.

“குதிரை சத்தம் கேட்டால், சிலருக்குப் போர் ஞாபகம் வரலாம், அல்லது சிலருக்கு பந்தையம் ஞாபகத்திற்கு வரலாம், அல்லது சிலருக்கு பயண சவாரி ஞாபகத்திற்கு வரலாம் அல்லது சிலருக்கு, ஐய்யனார் குதிரைலே சவாரி செய்து காவல் காத்துக்கிட்டு இருக்காரு என்கிற ஞாபகம் வரலாம். ஆனால் எல்லாம் இடங்களிலும் குதிரை பரிதாபத்திற்குரிய பொருளாகவேப் பாவிக்கப்பட்டுள்ளது. நமது அதிர்ஸ்ட்டத்தை நிர்ணயம் செய்ய குதிரைகள் ஓடி தேய்கின்றன. சிறுதெய்வ கோட்பாடுகள் குதிரையை ஒரு காவல் தெய்வத்தின் அடிமையாக ஆக்கிவிட்டிருந்தது. எங்காவது சுற்றுத்தளங்களுக்குச் செல்ல நேரும்போது ஒரு குதிரைக்காரன் குதிரையின் வாயில் கயிரைக் கட்டி அதனை தனது கட்டுபாட்டிற்குள்ளே வைத்திருந்து வியாபாரம் செய்வதைப் பார்க்கக்கூடும் (சவாரி). மிருகங்களின் வாயை இப்படித்தான் கட்டிப்போட்டே நமது மதத்தையும், வயிறையும் நிரப்பிக் கொண்டோம்.

அடுத்ததாக யானை. பாரதி இறப்பதற்கு யானை ஒரு காரணம் என்று சிறுவயதில் தெரிந்தபோது அதன் மீது கொஞ்சம் கோபம் இருந்தது. ஆனால் தைப்பிங் மிருகக்காட்சி சாலையில் அதன் மகா கம்பீரமான உருவத்தைப் பார்த்தபோது நான் பயந்து தோல்வியை ஒப்புக் கொண்டேன். பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்குச் சென்றபோது ஒரு சங்கிலியில் பிணைக்கப்பட்டு ஒரு வட்டத்திற்குள்ளே நகர்ந்துகொண்டு தனது கம்பீரத்தை இழந்த பல யானைகளை அங்கு பார்க்க முடிந்தது. சிறுவயதில் ஒரு பெரிய கம்பீரமான மிருகமாக தெரிந்த யானையை மீண்டும் பார்க்கும்போது அதன் தனிமையையும் அதை ஒரு பயங்கரமான ஆபத்தான மிருகம் என்பதன் புரிதலில் சிறைப்படுத்தி வைத்திருக்கும் அடக்குமுறையையும் அவதானிக்க முடிந்தது. யானை காட்டில் இருந்தால் அது நிதர்சனம் அதே நகருக்குள் புகுந்தால் மதம். நகருக்குள் யானைகள் கொண்டு வரப்படுவதன் காரணமே இரண்டுத்தான். ஒன்று மதம் மற்றொன்று வியாபாரம்.

நம்ப தமிழ் சினிமாவில் இயக்குனர் இராமநாராயனின் மீதுதான் முதலில் மிருகவதை சட்டத்திற்குக் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பாம்பு முதல் யானைவரை எல்லாம் மிருகங்களையும் வைத்து ஒரு இந்துத்துவா சினிமாவைக் கொடுத்து மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தார். அம்மனுக்குப் பாலிபிஷேகம் செய்யும் யானைகளைக் காட்டியது தமிழ் சினிமாதான். இதைவிட பெரிய அபத்தம் வேறெங்கிலும் நடந்திருக்காது. அதையும் கடந்து போய் யானைக்குச் சட்டை சிலுவார் தைத்து அதற்கு அணிவித்து சாலையில் உலா வர வைத்து சிரிப்புக் காட்டி பணம் பண்ணிய தமிழ் சினிமா இந்துத்துவா ஆசாமிகளை எப்படிக் கண்டிப்பது? மதம் நிறுவப்பட்ட பின் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ஒரு புனைவாக அதற்குள் கொண்டு வந்து திணிக்கப்பட்டன.

இந்த இரண்டையும் முன் வைத்து யானையை ஒரு கேலி பொருளாக மாற்றும்போது அது உக்கிரம் கொள்வதை மதம் பிடித்தல் என்று சொல்லித் தொலைகிறார்கள். மனிதர்களின் நெருக்கமும் அவர்களின் தொல்லைகளின் மொத்த எதிர்ப்புணர்வுதான் யானையின் மதம். இதற்கு சில அறிவியல்/உயிரியல் காரணங்களும் இருக்கக்கூடும். இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு மாலைப் போட்டுக் கொண்டும் வருபவர் போவோர்களுக்கு பழங்களையும் பூவையும் கொடுத்து பணம் பண்ண பழக்கப்பட்டிருக்கும் பல கோவில் யானைகளைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் படித்தத்துண்டு. “யானையை விநாயகர் என்று சொல்லும் இந்து சமூகம்தான் அதைக் கோவில் வாசலில் பிச்சையெடுக்கவும் பழக்கப்படுத்திருக்கிறது” அப்படியொரு இருண்ட நாகரிகத்தின் வாசலிலிருந்துதான் தவழ்ந்து முட்டிப் போட்டு நடந்து வந்திருக்கிறோம்.

இப்பொழுது யானைகள் சினிமாத்தன நகைச்சுவைகளை பேசும் அளவிற்கு அதன் வாழ்க்கைக்குள் புகுந்து அதைக் காட்சி பொருளாக்கி “டப்பிங்” என்கிற பெயரில் சுரண்டி தள்ளுகிறார்கள். இவர்கள் டப்பிங் செய்து பிழைக்க யானைகளின் வாழ்வும் அதன் சரித்திரத்தின் களம்தான் கிடைத்ததா? “national geography” தவிர மற்றவர் எவரும் மிருகங்களின் வாழ்வையும் உலகத்தையும் ஆய்வு நோக்கோடும் பதிவிட வேண்டும் என்கிற அக்கறையுடன் அணுகினார்களா என்று தெரியவில்லை.

நமக்குத் தெரிந்ததெல்லாம் இராமன் என்கிற காப்பிய கதாநாயகனுக்கு கல் எடுத்து கொடுத்து இலங்கைக்கு பாலம் அமைத்த தெய்வ குரங்குகள்தான் அல்லது இராமரின் சிறந்த பக்தரான அனுமானுக்கு வால் இருப்பதாலும் வானர படைகளிலிருந்து வந்ததாலும், எல்லாம் குரங்குகளும் அனுமான் போலவே தெய்வத்தன்மை கொண்டது என்றுதான் புரிந்து வைத்துள்ளோம். ஆனால் பத்துமலை கோவில்களிலும் தண்ணீர்மலை கோவிகளிலும் ஒரு வாழைப்பழத்திற்காக ஏங்கி தவிக்கும், நம்மை இந்து பக்தர்கள் என்று பார்க்கத் தெரியாத, உங்களிடமிருந்து உணவை மட்டுமே எதிர்ப்பார்க்கும் இந்த இயற்கையின் ஒர் உயிரினமான குரங்குகள்தான் அதிகமாக அங்கு இருக்கின்றன.

என்றாவது ஒருநாள் மிருகங்களெல்லாம் அழிந்துவிட நேர்ந்தால் அன்று அனாதையாக நிற்கப் போவது இந்து கடவுள்கள்தான் போல. இது மதம் மிருகங்களின் மீது நிறுவிய அரசியல்.

ஆக்கம்
கே.பாலமுருகன்

6 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல பதிவு பாலமுருகன்.

முனியாண்டி ஒரு சிறு தெய்வம். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் காவலனாக, தலைவனாக அவர் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். குதிரை மீதேறி மக்களைக் காத்த தலைவன் இறந்த பின் தெய்வமாகி விடுகிறான். பெரும்பாலான வீரம் செறிந்த சிறு தெய்வங்களின் வரலாறு இப்படித்தான் இருக்கிறது. முனியாண்டியும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். உயிருடன் இருக்கையில் உடனிருந்த குதிரை, இறந்து தெய்வமான பிறகும் கூடவே வந்திருக்க வேண்டும்.

மேலும், மனிதர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறே கடவுள்களை நிர்மாணித்திருக்கிறார்கள். தம்மோடு உடனுறையும் மிருங்கங்களைக் கடவுள்களுக்கும் துணையாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

-ப்ரியமுடன்
சேரல்

கே.பாலமுருகன் said...

வணக்கம் சேரல். விளக்கத்திற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக.

IKrishs said...

Nunukkamana alasal..But "Dubbing" mattera comedy ave yeduthakalame..Apparam Miravadhiyai porutha varai "nalla neram" padathula "puratchiya" panni yanaigali padithi iruppargal..Krish

Tamilvanan said...

//யானை காட்டில் இருந்தால் அது நிதர்சனம் அதே நகருக்குள் புகுந்தால் மதம்.//
இன்றைய நாகரீக நவீன நடைமுறை வாழ்க்கையை உணராதாவர்களுக்கும் மதம் பிடிக்க வாய்ப்பு உள்ளதோ?

கே.பாலமுருகன் said...

//இன்றைய நாகரீக நவீன நடைமுறை வாழ்க்கையை உணராதாவர்களுக்கும் மதம் பிடிக்க வாய்ப்பு உள்ளதோ?//

நடக்கலாம் தமிழ்வாணன். இப்பொழுதே நடந்து கொண்டுத்தானே இருக்கிறது.
நவீன வாழ்வின் எல்லாம் வசதிகளும் வேண்டும், குளுகுளு அறையில் அமர்ந்துகொண்டு நவீனத்தைப் புறமுதுகில் குத்தும் அப்பாவிகள். விடுங்கள்.

கே.பாலமுருகன் said...

மிருகங்கள் மீது மதம் சுமத்திய அடையாளங்களும் வன்முறைகளையும் சொன்னால், சாமிவதையா என்று எகுறுகிறார்கள். என்ன சொல்வது. .