Thursday, September 24, 2009

இன்றும் மனிதர்களைத் தேடி

பூட்டிக் கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன். பழைய வீடுகள் சொன்ன சேதியில் இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது. வண்ணத்துப்பூச்சிகளைப் பிசாசு என்று நினைத்து விரட்டிய ஆதிவாசிகள் முதல், மிருகங்களின் எலும்புகளை உப்பில் பதனிட்டு உலர்த்தியவாறு ஜிப்சிகளாகத் திரியும் குறத்திகள்வரை மனிதர்களைப் பார்க்கவே அலைகிறேன். பறவை, மனிதனின் கதையைச் சொல்லியவாறே நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறேன். –கோணங்கி

முதன் முதலில் 2008-ல் கோணங்கியின் நாவலைப் படிக்க நேர்ந்தது. “உப்புக் கரையும் சிறுத்தை”. சீ.முத்துசாமி என்னிடம் கொடுத்த முதல் புத்தகம். வாங்கி இரு வாரங்கள் புத்தகத்தைப் பிரிக்காமலே வைத்து அழகு பார்த்தேன். அந்த நாவலின் தலைப்பே ஒரு வசீகரமான தோற்றத்தை எனக்குள் எழுப்பியிருந்தது. அப்பொழுது நான் வார்த்தைகளை, சொற்களைத் தேடி அலைபவனின் மனோபாவத்துடன் இருந்ததால், “உப்பு கத்தியில் எப்படி சிறுத்தை மறையும்?” என்ற சந்தேகத்துடன் அந்தச் சொற்களை வெறுமனே கடக்க முயற்சித்தும் எங்கோ ஒர் இடத்தில் தேங்கி விடுவதால் அந்த நாவலைப் படிக்கவே முடியவில்லை.

ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த நாவலைத் திறந்து முதல் இரு பக்கங்கள் படிக்கத் துவங்கினேன். மூன்றாவது பக்கத்திற்குப் போகும்போது நாவலிலிருந்து வெகு சீக்கிரத்திலேயே வெளியே தூக்கி வீசப்பட்டிருந்ததை உணர முடிந்தது. மீண்டும் அந்த இரு பக்கங்களையும் வாசிக்க முயற்சி செய்தபோது கோணங்கியின் அந்த நாவல் வரிகளை ஓர் இருண்மையான உலகம் என்ற கற்பித்தத்திற்குள் வந்துவிட்டிருந்தேன். இரண்டாவது பக்கத்தைக் கடக்க முடியாமல் அப்படியே தேங்கிவிட்டேன். வாசிப்பு மேலும் வலுப்பட வேண்டும் என்று, கோணங்கியை ஒரு மூலையில் போட்டுவிட்டு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், வண்ணதாசன், ஜீ.நாகராஜன், ஜெயகாந்தன், என வாசிப்பை தீவிரப்படுத்தினேன். முதலில் படித்த புதுமைப்பித்தனின் “கயிற்றரவு” கதை எப்படி என்னை வாசிப்பிற்குள் இழுத்துவிட்டதோ அதே போலத்தான் கோனங்கியின் நாவலும் வாசிப்பின் பின்னால் என்னை அலையவிட்டது.

பல நாவல்களைப் படித்து முடித்த பிறகும் இன்றும் கோணங்கியின் அந்த, “உப்பு கத்தியில் மறையும் சிறுத்தை” நாவலை எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் கவிஞர் ஒருவரின் மூலம், கோணங்கியுடன் தொலைப்பேசியில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. மிகவும் எளிமையான சொற்களுடன் மென்மையான குரலில் கோணங்கி பேசினார். அவருடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட போது, நேரில் சந்திக்க நேர்ந்தால் அவரது நாவல் அனுபவங்களைச் சொல்வதாகக் கூறினார்.

மனிதர்களைத் தேடி அலைந்து நான் பெற்ற வாழ்பனுபவங்கள்தான் என் படைப்பும் என் இலக்கியமும் என்று இன்றும் ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு தெருவில், இலக்கற்று, பயணித்துக் கொண்டிருக்கிறார் கோணங்கி மனித வாழ்வின் அதிசயங்களைத் தேடி. வாழ்வு ஒரு சுருங்கலான வடிவத்திற்குள் சிக்கிக் கொண்டு, நீ நான் நினைப்பது போல வடிவமைத்துக் கொள்ளும் களிமண் அல்ல. அது நீருற்று, காட்டாறு, வாழ்வெனும் நதி ஓடிக் கொண்டேயிருக்கிறது.

கே.பாலமுருகன்

3 comments:

Unknown said...

அம்ருதா பதிப்பகம் வெளியிட்டுள்ள முத்துக்கள் பத்து என்ற புத்தகத்தில் கோணங்கியின் 10 சிறுகதைகளைப் படிக்க நேர்ந்தது. அதில் "மதினிமார்கள் கதை, உலர்ந்த காற்று" போன்ற சிறுகதைகளைப் படித்து இருக்கிறேன். அருமையாக இருந்தது. 10 கதைகளில் மூன்று கதைகளை என்னால் படிக்க இயலவில்லை.

அதைப் பற்றி எனது பதிவில் எழுதியுள்ளேன்.

http://online-tamil-books.blogspot.com/2009/07/blog-post_30.html

பாலா உங்களுடைய உடல் நிலை இப்பொழுது எப்படி இருக்கிறது? சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டீர்களா?

கே.பாலமுருகன் said...

கிருஷ்ணா, கோணங்கியின் சிறுகதைகள் படிக்க ஆவலாக இருக்கிறேன். அவருடைய ஒரு சிறுகதையாவது ஸ்கேன் செய்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்ப முடியுமா?
அந்தப் புத்தகம் இங்கு கிடைக்க வாய்ப்பில்லை.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா.

நலமாகத்தான் இருக்கிறேன்.

Unknown said...

நிச்சயமாக அனுப்புகிறேன் பாலா... இந்த மாத இறுதிக்குள் அனுப்புகிறேன்.