Saturday, October 3, 2009

சிங்கப்பூரில் அநங்கம் இதழும் இலக்கிய வட்டமும்

இந்த வருடம் மார்ச் மாதத்தில் அநங்கம் இதழ் 3 சிங்கப்பூரில் அறிமுகம் செய்ய அங்குள்ள வாசகர் வட்டம் மூலம் வாய்ப்புக் கிடைத்திருந்தது. மலேசியாவிலிருந்து அநங்கம் இதழ் சார்பாக அதன் ஆசிரியர் குழுவிலிருந்து நான், கோ.புண்ணியவான், தேவராஜன் அவர்களும் சென்றிருந்தோம்.

நானும் மூத்த எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களும் கோலாலம்புரிலிருந்து இரயில் பயணத்தின் மூலம் சிங்கப்பூருக்குச் சென்றோம். அன்று இரவு முழுவதும் இரயில் பயணம் மிகவும் மௌனம் நிரம்பியதாக உறக்கத்திலும் திடீர் விழிப்புக்கு மத்தியிலும் கரைந்திருந்தது.

பாலுமணிமாறன் பாண்டித்துரை அவர்கள் எங்களுக்காக அறை தயார் செய்து வைத்திருந்தார்கள். தேவராஜன் ஜோகூரிலிருந்து பேருந்தின் வழியாக வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். இலக்கிய பேச்சு, சிற்றிதழ்கள் குறித்தான மாற்றங்கள் பற்றி தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தோம்.

(மலேசியாவிலிருந்து எழுத்தாளர்கள் சிவா பெரியண்ணன், நவீன் போன்றவர்களும் வந்து கலந்து கொண்டனர்)
அன்று முழுவதும் பல சிங்கப்பூர் எழுத்தாளர்களை வாசகர்களைச் சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்புக் கிட்டியிருந்தது. அநங்கம் இதழ் குறித்து பலர் தனது விமர்சனப் பார்வையை வெளிப்படுத்தினார்கள். என் சார்பாக அநங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைக் குறித்தும் படைப்புகள் குறித்தும் தெரிவித்துக் கொண்டதில் அநங்கத்திற்கு சரியான களம் சிங்கப்பூரில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

 சிங்கப்பூர் வாசகர்களுக்கும் சிங்கப்பூர் இலக்கியவாதிகளுக்கும், நண்பர்களுக்கும் இந்த வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிங்கப்பூர் நண்பர்களுடன் குறிப்பாக தமிழகத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கும் இலக்கிய ஆர்வமும் தீவிர ஈடுபாடும் கொண்ட எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட நட்பு ஆரோக்கியமான சூழல் என்றே கருதுகிறேன்.

பாண்டித்துரை, பாலுமணிமாறன், எம்.கே குமார், சின்னபாரதி, ஷனாவாஸ், பாண்டியன், பாலாஜி, கண்ணபிரான், டாக்டர் லட்சுமி, ஜெயந்தி சங்கர், சித்ரா ரமேஸ், ஜோதிபாரதி, மாதங்கி போன்றவர்களின் நட்பு மேலும் இலக்கிய சூழலுக்கான வலுவை ஏற்படுத்தியிருந்தது. இவர்களின் வட்டம் தீவிரமாக இலக்கிய சூழலில் ஈடுபட்டு பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டு தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டு வருவது வரவேற்க்கத்தக்கதாகும்.

இலக்கியம் - தொடர்பு - ஈடுபாடு போன்ற விடயங்களில் தீவிர பங்களிப்புள்ள எழுத்தாளர் வட்டமும் இலக்கிய எல்லையை வலுப்படுத்த மிக அவசியமானதே. இது இலக்கியத்திற்குள் நிகழும் அரசியல் என்கிற பார்வை விழுந்தாலும், எழுத்தாளர்களுக்கு மத்தியில் தொடர்பும், ஈடுபாடும், இயக்க செயல்பாடுகளும் அவசியமானதே.


மேலும் ஜெயந்தி சங்கர், பாண்டித்துரை, மாதங்கி, சித்ரா, எம்.கே.குமார் போன்றவர்கள் தொடர்ந்து அநங்கத்திற்கு படைப்புகள் அனுப்பி பங்கெடுத்துக் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. தொடரட்டும் அநங்கம் வட்டம்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா




அநங்கம்”


மலேசியதீவிர இலக்கிய இதழான “அநங்கம்” மூன்றாவது இதழ் மார்ச்-09 மாதத்தில் சிங்கப்பூர் ஆங் மோ கியோ பொது நூலகத்தில், வாசகர் வட்டம் ஏற்பாட்டில் நடைபெற்றது.


இயந்திரங்களுக்கு மத்தியில் சிக்கி பதட்டமான ஒரு நிலையில் இன்று நாங்கள் வந்திருந்தாலும், இங்குள்ள இலக்கியச் சூழல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது என்று பேசத்தொடங்கிய மலேசிய எழுத்தாளரும், அநங்கம் இதழுமான ஆசிரியர் கே.பாலமுருகன் நுகர்பொருள் சந்தையை கடந்து சிற்றிதழ்கள் வெற்றியடைய வேண்டிய முன்வைத்து “அநங்கம்” என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு அகராதியை புரட்டவேண்டியிருக்கிறது என்று வினவி, ஆகாயம் என்றபோது என் அரூபமான எண்ணப்பாடு சிதைவுக்குள் உட்பட்டது. சுதந்திரமான வெளியை சிற்றிதழ்கள் அடையவேண்டும். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் (எனக்கு இப்போதெல்லாம் வரலாற்றை புரட்டும் போது ஒரு வித பயம் ஏற்படுகிறது) கடாரம் மண் பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த மண்ணில் ஒரு சிற்றிதழ் வரவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும்தான் காரணம். இதழின் நோக்கம், சிற்றிதழ்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்று சொற்களை கோர்க்கும் முன் தெரிந்து விழுந்தன வார்த்தைகள் வெகுஜனப் பத்திரிக்கை தீவிரப்பத்திரிக்கையின் வேறுபாட்டை முன்வைத்து, வெகுஜனப் பத்திரிக்கையால் துண்டாப்பட்ட சிறுகதையை உள்ளடக்கி பேசிய மலேசிய மூத்த எழுத்தார் கோ.புண்ணியவான், வல்லினம் இதழ் பெண்ணியம், தலித்தியம் என சிற்றிதழ் தீவிரத்தை கோட்பாடு சார்ந்த இலக்கியங்களை முன்னிருத்துகிறது. பெண்ணியச் சிந்தனை வெளிவர இன்று அநங்கம், வல்லினம் இருக்கிறது என புதிய வெளி திறந்ததற்கான சாளரத்தை முன்நிறுத்தினார்.;


மூகமூடிகளை கலைந்து மகிழ்ச்சிக்குரிய பயணம் என்றுச் சொல்லி, மலேசிய கவிதை இதழமான “மௌனம்”-த்தின் நிலைப்பாடும் போக்கும் கவிதை குறித்த தீவிரம், அதற்கான புரிதல் களம் என்ற செய்திகளை எழுத்தாளரும் “மௌனம்” இதழின் ஆசிரியருமான ஜாசின் தேவராஜ் இறுக்கம் தளர்ந்து மிக சுருக்கமாக பேசினார்


அநங்கம் இதழுக்கு வலுவான தொடக்கமாக இருந்த சிறுகதைகளை சுட்டி வெளிவந்த மூன்று இதழ்களுக்கான சிறுகதைகளை சிங்கப்ப+ர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர் எழுதிய சிறுகதையையும் முன்வைத்து, அந்தந்த சிறுகதையின் பயணப் போக்கில் பயணப்பட சிங்கப்பூர் எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அநங்கம் பத்திகளை முன்வைத்து அவரது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

நிறைவான கலந்துரையாடலின் நிறைவற்ற தேகத்தோடு மறுநாள் விடிந்தது.



○ நன்றி
பாண்டித்துரை சிங்கப்பூர்

1 comment:

Unknown said...

மகிழ்ச்சியா இருக்கு பாலா தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...