Monday, March 29, 2010

தமிழாசிரியர்களுக்கான வாசிப்புக் கருத்தரங்கம்

நேற்று (28.03.2010) காலையில் கோலா மூடா/யான் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மொழிப் பாடக்குழுவின் தலைவர்களுக்கு(தமிழாசிரியர்களுக்கு) வாசிப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வைக் கோலா மூடா/யான் மாவட்ட கல்வி இலாக்காவும் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கமும் இணைந்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. சுமார் 23 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.

முதல் அமர்வில் சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் கழகத்தின் விரிவுரையாளரும் தமிழ் பற்றாளருமான திரு.ப.தமிழ் மாறன் அவர்கள் வாசிப்பின் அணுகுமுறைகள் குறித்து உரையாற்றினார். தமிழ் மாறன் அவர்கள் இன்றும் இலக்கிய வாசிப்பிலும் விவாதத்திலும் ஆர்வத்துடன் இயங்கி வருபவர். எனக்கு பாரதியையும் புதுமைப்பித்தனையும் ஆரம்பக் காலக்கட்டத்தில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். மேலும் பல மாணவர்களுக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர். தனது அமர்வில் அதிகமாக இலக்கியம் குறித்தும் நவீன இலக்கிய வாசிப்புக் குறித்தும் மிகவும் வசீகரமாகப் பேசினார். மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளை அல்லது சூட்சமங்களை ஆசிரியர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அதைக் கொண்டுதான் அவர்களுக்கிடையே ஒரு தெறிப்பை ஏற்படுத்த முடியும் எனக் கூறினார். மேலும் தனது வாசிப்பு அனுபவங்களையும் அதன் மூலம் அவர் அடைந்த புரிதல்களையும் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இரண்டாவது அமர்வில் மூத்த இலக்கியவாதியும் முன்னாள் பேராசியருமான டாக்டர் ரெ.கார்த்திகேசு அவர்கள், “நாளிதழ் வாசிப்பை” பற்றி உரையாற்றினார். நாளிதழ்களிலிருந்து நாம் என்ன அறிவை அல்லது தகவல்களைப் பெற முடியும் என ஆசிரியர்களையும் இணைத்து அதை ஒரு பட்டறையைப் போல நடத்தினார். நாளிதழ் செய்திகளிருந்து நாம் பெறும் தகவலை அது புது விஷயமாக இருந்தால் அதுவே ஒரு அறிவாக நம்மை வந்தடையும் எனவும் நாளிதழ் செய்திகள் என்பதே நேற்றைய தொடர்ச்சித்தான் என்பதையும் விளக்கமாகக் கூறினார். தொடர்ந்து அரசியல் தொடர்பான செய்திகளை முன்வைத்து அதிலுள்ள பழைய தகவல்களையும் புதியதாகச் சேர்க்கப்படிருக்கும் தகவலையும் பிரித்தறிந்து எப்படி ஒரு நுகர்வாளன் பயன்பெற முடியும் என்பதையும் தெளிவாகக் கூறினார். ஏற்கனவே இவருக்கு பத்திரிக்கைத் துறையிலும் வானொலி துறையிலும் அனுபவம் இருந்ததால் அவரது அனுபவங்களின் வழியாக உரையாற்றினார்.

மூன்றாவது அமர்வில், மூத்த எழுத்தாளரும் முன்னாள் தலைமை ஆசிரியருமான திரு.கோ.புண்ணியவான் அவர்கள் “வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள 10 எளிய வழிமுறைகள்” எனும் தலைப்பில் மிகவும் நகைச்சுவையாகவும் எளிமையாகவும் உரையாற்றினார். எப்படி வாசிப்பை நமது அன்றாட நிகழ்வாக மாற்றுவது என விரிவாகப் பேசினார். மேலும் தனது வாழ்வில் எங்கெல்லாம் அவரது சந்தர்ப்பங்களும் பொழுதுகளும் அவருக்கு வாசிப்பை நெருக்கமாக்கியது எனக் கூறும் போது தன் குடும்பத்து பெண்கள் புடவைகள் வாங்கும்போது ஒரு முழு நாவலையே வாசித்து முடித்ததையும் குறிப்பிட்டு எல்லோரையும் சிரிக்க வைத்தார். அவரது அமர்வில் மேலும் சில எளிமையாக கவிதைகளையும் நகைச்சுவை துணுக்குகளையும் வாசிக்கச் செய்து ஆசிரியர்கள் மத்தியில் வாசிப்பின் தொடக்கம் முதலில் எளிமையிலிருந்தும் உங்களுக்குப் பிடித்த இடத்திலிருந்தும் தொடங்கினால் அது உங்களை மேலும் ஒரு வாசகனாக வளப்படுத்தும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Friday, March 26, 2010

கவிஞரும் இயக்குனருமான ராசி அழகப்பன் சுங்கைப்பட்டாணியில்-1

இரண்டுநாள் பயணத்தில் சுங்கைப்பட்டாணியிலும் குரூணிலும் ராசி அழகப்பன் அவர்கள் மாணவர்களுக்காகத் தன்முனைப்பு கருத்தருங்களில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தேன். முதலில் செவ்வாய்க்கிழமை சுங்கைப்பட்டாணியிலுள்ள சரஸ்வதி தமிப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக அதன் தலைமை ஆசிரியரான திரு.வீரையா அவர்களிடம் கேட்டிருந்தேன். உடனடியாக கவிஞர் அவர்கள் ஒரு மணி நேரம் பேசுவதற்கு அனுமதியளித்தார்.

மூன்றாம் ஆண்டு மாணவர்களிடத்தில் அப்படியென்ன தன்முனைப்பு போன்ற கனமான விஷயத்தைப் போதிக்க முடியும்? அல்லது அவர்கள் அமைதியாக அமர்ந்து கேட்கக்கூடியவர்களா? ஆனால் ராசி அழகப்பன் அவர்கள் தனது பேச்சின் எளிமையின் மூலமும் நகைச்சுவை உணர்வின் மூலமாகவும் அவர்களை வசப்படுத்தி கேட்க வைத்த விதம் அருமையாக அமைந்த்ருந்தது. அவர்களுக்குரிய மொழியில் அவர்களுக்குரிய உலகைப் பற்றி ஒரு அருகாமையில் அமர்ந்திருக்கும் நண்பனைப் போல வழங்கினார். பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் தன்முனைப்பு பற்றி பேச வரும் பலர், தன்னை அறிவாளியாகவும் மாணவர்களை அவர்களின் அறிவுரைகளைக் கேட்கும் வெறும் தலையாட்டி பொம்மைகளாகவும் உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆனால் தன்னை ஒரு எளிமைக்குரியவன் எனச் சொல்லி மாணவர்களை புத்திசாலியாகக் காட்டியவர் ராசி அழகப்பன்.

செவ்வாய்க்கிழமை மதியத்தில் கோலாலம்பூரிலிருந்து சுங்கைப்பட்டணிக்குப் பேருந்திலேயே பயணம் செய்து வந்து சேர்ந்தார். பட்டர்வெர்த் நடரத்தில் இறங்கியவர் அங்கிருந்து ஒரு பழைய பேருந்தில் ஏறி சுங்கைப்பட்டாணி பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்படியொரு பேருந்தில் ஏறி நானே 10 வருடத்திற்கு மேலாக இருக்கும். எல்லாம் நவீன மையமாகிவ்வப்பிறகும் அந்தப் பேருந்தை வெகு காலத்திற்குப் பிறகு மீண்டும் பார்த்தேன். அதுவும் ராசி அழகப்பனின் வருகையின்போது.

எந்த ஆடம்பர சொகுசுகளையும் சற்றும் எதிர்பாராதவர் ராசி அழகப்பன் அவர்கள். முக்கியமாக இறுதிவரை எந்த நிகழ்விலும் பணத்தை எதிர்பார்க்காமல் உங்களுடனான சந்திப்பே போதுமானது என இருந்துவிட்டார். அவர் ஒரு பயணி அல்லது தேசாந்திரி ஆகையால்தான் சினிமா குறித்தும் இலக்கியம் குறித்தும் மிக ஆழமான விமர்சனங்களையும் புரிதலையும் கொண்டிருக்கிறார்.

-தொடரும்-

ஆக்கம்:கே.பாலமுருகன்
மலேசியா

Sunday, March 21, 2010

வண்ணத்துப்பூச்சியும் ஒரு காதல் கவிதையும்

“வண்ணத்துப்பூச்சி” என்கிற தமிழ்ப்படத்தின் இயக்குனரும் எழுத்தாளருமான ராசி அழகப்பன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார். வருகின்ற வெள்ளிக்கிழமைவரை மலேசியாவில் இருந்துவிட்டு பிறகு சென்னை திரும்பவிருக்கிறார். “வாழ்வியல் கலை” என்கிற தலைப்பில் வருகின்ற புதன்கிழமை கெடா சுங்கைப்பாட்டாணி வட்டாரத்திலும் குரூண் வட்டாரத்தின் 5 தமிழ்ப்பள்ளிகளின் ஆறாம் ஆண்டு மாணவர்களிடத்திலும் உரை நிகழ்த்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளேன்.

இடம்: ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி
நேரம்: மாலை மணி 2.00க்கு
திகதி: 24.03.2010(புதன்)

மேலும் கூலிம் தியான ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமையன்று மாலை 7.30க்கு மேல் அவருடன் ஓர் இலக்கிய சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அருகில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளலாம். திரைப்படம் குறித்த ஆழமான சிந்தனையும் மனித வாழ்வியல் குறித்த வினோதமான விமர்சனமும் பார்வையும் கொண்டவர் ராசி அழகப்பன் அவர்கள். மேலும் மாணவர்களிடத்தில் சிறப்பாகப் பேசக்கூடிய பேச்சாளரும்கூட. ஆகையால் அவரைச் சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவும். செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் அவர் கெடாவில் இருப்பார். பிறகு வியாழன்று மீண்டும் கோலாலம்பூருக்குச் சென்று அன்றைய தினத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் நடைப்பெறவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வண்ணத்துப்பூச்சி படத்திற்கு முன்பதாகவே ராசி அழக்கப்பனை எனது வலைப்பதிவின் மூலமும் இணையத்திலும் அறிந்திருந்தேன், பழக்கமும் உண்டு. வண்ணத்துப்பூச்சி திரைப்படத்தின் மீதான எனது விமர்சனத்தை முழுமையாகப் பதிவில் எழுத வாய்ப்புக் கிட்டாமல் போய்விட்டது, மேலும் அதை விமர்சிப்பதற்குரிய வலுவான பார்வையும் என்னிடம் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அந்தப் படத்தின் முதல் பாதியில் இடம்பெறும் பெற்றோர் கதைப்பாத்திரம் மிகுந்த பலவீனத்திற்குரிய படைப்பு என்றே அடையாளப்படுத்தத் தோன்றுகிறது. பெற்றோர்களின் கவனிப்பு இன்மையாலும் புறக்கணிப்பாலும் சிதைந்து போகும் அன்பைத் தேடி அலையும் ஒரு சிறுமியின் கதைத்தான் வண்ணத்துப்பூச்சி. ராசி அழகப்பனுக்கு குழந்தைகளின் உலகின் மீது அதீத அக்கறை இருப்பதை இப்படத்தில் காட்டியிருக்க முயல்கிறார். இந்த மாதம் “வண்ணத்துப்பூச்சி” திரைப்படம் அஸ்ட்ரோ தங்கத்திரையில் ஒளிப்பரப்படவிருப்பதால், பார்வையாளர்கள் அந்தத் திரைப்படத்தைப் பார்த்து விமர்சிக்கவும்.

ஒரு காதல் கவிதை

1
உனது
அத்துனை வியாக்கியானங்களும்
மறுப்புகளும் நிராகரிப்பும்
நிகழ்ந்துவிட்டப்பிறகு
அன்பால் நிரம்பியிருந்த
எனது முத்தம்
வெறும் இரு சதைப்பிண்டங்கள் குவிந்து
அளிக்கும் எச்சிலாக
மாறிவிட்டிருந்தது.

2
வண்ணத்துப்பூச்சிகளை மட்டும்
காரணம் காட்டி
எத்துனை வன்முறைகளை
நிகழ்த்திவிட்டாய் இந்தக் காதலில்?
ஒவ்வொருமுறையும் உதிர்ந்த
வர்ணங்களில் மிதிப்பட்ட
ஒரு அழகியலும்
திணிக்கப்பட்ட அன்பும்
தேங்கிக் கிடந்தன.

3
ஆயிரம் வார்த்தைகளை
திரட்டி புகுத்தி அடுக்கி
உரையாடினேன்.
வெறும் புன்னகையால்
எல்லாவற்றையும் கடந்து சென்ற
உனது முதிர்ச்சியை
என்னவென்பேன்?

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com

Saturday, March 20, 2010

அநங்கம் இலக்கிய இதழ் - ஏப்ரல் மாத வெளியீடு

விரைவில் ஏப்ரல் மாத வெளியீடாக அநங்கம் ஏழாவது இலக்கிய இதழ் வெளியீடப்படவிருக்கிறது. படைப்புகளை அனுப்ப விரும்பும் எழுத்தாளர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். 31ஆம் திகதி மார்ச் மாதத்திற்குள் அனுப்பி வைக்கவும்.

ஏப்ரல் மாத அநங்கத்தில் இதுவரை வெளியீடத் திட்டமிட்டுள்ள படைப்புகள் பின்வருமாறு:

சிறுகதைகள்:

1. உதிரம் உறைந்து போனது
   கங்காதுரை - தலைநகர்

2. நண்டு - கமலாதேவி சிங்கப்பூர்

3. மனுசன் - சித்ரா ரமேஸ்

கட்டுரை/பத்தி:

1. அது ஒரு பெரிய கதைப்பா- ஏ.தேவராஜன்

2. அநங்கம் இதழ் 6-இல் வெளிவந்த சிறுகதைகளின் வாசக எதிர்வினை
ப.மணிஜெகதீசன்

3. வரண்ட கதைக்களமும் மாதிரி இலக்கியமும் - கே.பாலமுருகன்

4. பாண்டித்துரை- சிங்கப்பூர்

சிறப்பு நேர்காணல்: எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் கதையை நேர்மையாகச் சொல்வதுதான் நல்ல சினிமா
சிங்கப்பூரில் செழியுடன் சந்திப்பு - கே.பாலமுருகன்

கேள்வி பதில்: இவர்களுடன் சில நிமிடங்கள்:
மா.சண்முகசிவா - சை.பீர்முகமது
மலேசிய இலக்கிய கலை எழுச்சியற்றவையா?- ஒரு விவாதம்

கவிதைகள்:

பா.அ.சிவம்
ரமேஸ்.டே
தினேசுவரி
வாணிஜெயம்
ந.பச்சைபாலன்
பிரமாஸ்திரன்
செல்வராஜ் ஜெகதீசன்

மேலும் சில படைப்புகளுடன் தீவிர இலக்கியத்திற்கான வலுவான பதிவை நோக்கி முன்னெடுக்கும் இலக்கிய இதழைப் பெற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளுங்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
ananggam@hotmail.com

Friday, March 19, 2010

சிறுகதை: நடுநிசியில் தொடரும் உரையாடல்

“எத்தனை நாளா மாமா. . . வீட்டுக்கு வர்றது இல்லெ?”

மௌனம். பொருள்களின் மீதான அசைவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

“ஏண்டா. . மாமா வர்றது இல்லெதானே?”

கீழேயுள்ள மேசையின் மேற்பரப்பு கண்ணாடியிலானது. ஆகையால் அதிலிருந்து எதை நகர்த்தினாலும் அதன் ஓசை பெருக்கக்கூடியது. சிறிது நேரத்திற்குப் பிறகு மேசையிலிருந்து ஒரு பேனாவை நகர்த்திப் பார்ப்பது போன்ற ஒலி எழும்பியது. சிவா எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தால் அப்படிச் செய்வான்.


“உன்னத்தாண்டா, கேக்கறேன். . மாமா யேன் வர்றது இல்லெ?”

“அதை யேன் கேக்கறெ. . உன் வேலையெ பாரு”

அவனது குரலில் திடீர் தடுமாற்றம் அல்லது கோபம் தெரிந்தது. எங்கள் வீட்டில் படிக்கட்டின் ஓரத்தில் ஓர் அறை இருக்கிறது. எதற்காக இந்த வீட்டின் அமைப்பு மட்டும் வித்தியாசமாக இருக்கிறது என நாங்கள் தீவிரமாகச் சிந்தித்தது கிடையாது. இருப்பதை வெறுமனே ஏற்றுக் கொள்வதில் இருக்கும் சோம்பேறித்தனம் மிகவும் விருப்பமானதாக அமைந்துவிட்டது. அந்த அறைக்காக மட்டுமே தனியாகப் பலகை படிக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும். இடை இடையே பெரிய சந்து. தவறுதலாக கால் இடறினாலும் முழு உடலும் அந்தச் சந்தில் விழுந்து கீழே சரிந்துவிடக்கூடும். எப்பொழுதும் என்னுடைய அறையில் இருந்துகொண்டுத்தான் சிவாவும் நானும் பேசிக் கொள்வோம். சிவாவின் அறை கீழ்மாடியில் வலது புறத்தின் மூலையில் அமைந்துள்ளது. பெரும்பாலான வேளைகளில் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு வானொலி கேட்டுக் கொண்டிருப்பது அவனது பழக்கம்.

“ஏண்டா. . இவ்ள கோவம்? சும்மா கேட்டாகூட ஏசுறே?”

படிக்கட்டு முடிவடையும் இடத்திற்கு மேலாக எரிந்துகொண்டிருந்த மஞ்சள் விளக்கு காற்றில் இலேசாக ஆடியது. ஒளி படிக்கட்டின் சரிவிலிருந்து விலகி தரைக்கு ஓடி மீண்டும் திரும்பும். சிவா கையை மேசையிலிருந்து எடுக்கவில்லை. மேலும் ஒரு பொருளை நகர்த்திப் பார்த்திருக்கக்கூடும். கீச்ச்ச்ச் என கண்ணாடி தரையிலிருந்து எழுந்த ஒலி பற்களைக் கூசியது. மணி 12க்கு மேல் ஆகியிருந்தது. வெளியில் இருளுடன் யார் யாரோ உரையாடிக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது. பக்கத்து வீட்டிலிருக்கும் சீனக் கிழவன் வெளிவரந்தாவில் நாற்காலியைப் போட்டு இருளில் அமர்ந்திருப்பான். அவனாகவே பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்படியே உறங்கிவிடுவான். அவனது பொழுதுகள் எப்பொழுதும் வரட்சிமிக்கவை. அவனைத் தவிர அவனது உலகில் வேறு யாரும் இருப்பதில்லை. எதிரில் இருப்பவர்களைத் தொலைத்துவிடுவதன் அலட்சியத்திலிருந்து அவனது நாட்களைத் துவங்கி, சுயமாக அவனுக்குள் நிகழும் உரையாடல் பற்றி அக்கறை இல்லாதவரை அர்த்தமற்ற இருப்பு வாடிக்கையாகத் தொடரும். சில சமயங்களில் அதுவும் இருளில் என் அறையின் சன்னலைத் திறந்து அவன் இருப்பதைப் பார்க்க நேரும்போது ஏதோ ஒருவகை அச்சமும் நடுக்கமும் பற்றிக் கொள்கின்றன.

“ஏண்டா சிவா. . இந்தக் கிழவனுக்கு என்ன வந்துச்சி? உனக்கு தெரியுமா?”

“அவனைப் பத்தி ஏன் இப்பெ? ஊருல உள்ளவனுங்க பத்தி கவலைப்பட்டுத்தான் நான் இப்டி இருக்கேன்”

சிவா வேறுவகையான தொனியைக் கொண்டிருந்தான். எப்பொழுதும் சிரிப்பூட்டும் வசனங்களும் சொற்களும் மட்டும்தான் அவனிடம் கைவசம் இருக்கும். இப்பொழுது ஆச்சர்யமாக விரக்தியும் பதற்றமும் கலந்த தொனியில் பேசுகிறான். கீழே இறங்கி அவனைப் பார்த்துவிட்டு வரலாம் எனத் தோன்றியது. ஆனாலும் இப்படி அறையில் மங்கிய வெளிச்சத்தில் சுவர்களில் நெளியும் வெறுமைக்கு நடுவே புத்தகம் படித்துக் கொண்டிருப்பதன் மூலம் எனக்குக் கிடைக்கும் ஆயாசத்தை இழக்க மனமில்லாததால் அப்படியே கிடந்தேன். கைகளிலும் கால்களிலும் சோர்வு படிந்திருந்தது.

“வீட்டுப் பக்கத்துலெ இருக்கும் ஒரு மனுசாளு பத்தி பேசாமெ என்னடா வாழ்க்கெ? சும்மா. . ஏன் இப்பெ கோபமா பேசறே?”

இந்த வீட்டின் அமைப்பு குறித்து எனக்குத் திடீர் சந்தேகமும் பிரமிப்பும் எழுந்தன. மேல்மாடி பெரியதாக உருவாக்க வேண்டும் என்று தொடங்கிய வேலைப்பாடுகள் வெற்றிப்பெறாததால் பாதியில் தேங்கிவிட்டதன் மிச்சம்தான் இந்த அறை எனத் தோன்றியது. கீழ்த்தரைக்கும் மேல்மாடிக்கும் 8 அடிவரைத்தான் இருக்கும். மேலிருந்து எங்கிருந்து பேசினாலும் சொற்கள் மிக நேர்த்தியாகத் தரை இறங்கி கீழுள்ள எல்லா இடங்களுக்கும் சென்றடைந்துவிடும். சிலசமயங்களில் எனக்குள்ளாக நான் முனகிக் கொள்ளும் சிலவார்த்தைகள்கூட கீழுள்ள சிவாவிற்குக் கேட்டுவிடுவதுண்டு. சொற்கள் என்ன ஆச்சர்யமாய் தன் மீதான இரகசியங்களைப் பகிங்கரமாகத் தெரிவிக்கன்றன.

“என்னடா சத்தமெ காணம்? எங்காவது போய்ட்டு வரலாமா? கடுப்பா இருக்கு”

“இல்ல வேணாம். .யேண்டா கமலன். . என்கூட உண்மையா பழகுறியா இல்லெ அவுஸ்மேட்னு வெறும் உறவா?”

அவனுக்கு எப்பொழுதும் பிறர் மீது நம்பிக்கை இருந்தது கிடையாது. தனது கேள்விகளின் மூலம் அவனை நெருங்க நினைக்கும் நமது பிம்பங்களை உடைத்து ஊனமாக்கிவிடுவான். வெறும் முனகலோடு அவனிடமிருந்து திரும்ப நேரிடும். அவனது வேலையிடத்தில்கூட நெருங்கிய நண்பர்கள் கிடையாது. எப்பொழுதும் அவர்களைப் பற்றி இரவு முழுக்க குறைப்பட்டுக் கொண்டே இருப்பான். சிலவேளைகளில் அவனது நாவு நீண்டு ஒரு பெரும் இரவாக மாறி எல்லோரையும் விழுங்கத் துவங்கிவிடும். அப்படி இன்னமும் அவனது பொழுதுகளிலிருந்து தொலையாமல் எதையோ கெட்டியாகப் பிடித்துத் தப்பித்துக் கொண்டது நான் மட்டுமே.

“உனக்கு எப்பவும் சந்தேகம்தானெ. உன் மேல முதல்ல உனக்கு ஏதாவது பிடிமானம் இருக்கா? சும்மா உளறாதெ. உன் மேல எனக்கு நட்பும் பாசமும் இருக்கு. பொய் இல்லெ. போதுமா?”

மீண்டும் மௌனத்திற்குத் திரும்பியிருந்தான். சிவா ஈப்போவில் ஏதோ ஒரு சீனக் குக்கிராமத்திகிருந்து வந்தவன். அவனது பின்புலத்தைப் பற்றி அவன் அவ்வளவாகக் கூறியது கிடையாது. கேட்கும்போதெல்லாம் அதனைக் கடப்பதற்கு ஏதாவது காரணம் வைத்திருந்தான். அவனிடம் மிகப் பாதுகாப்பாய் மிகவும் நெருக்கமாக இருப்பது அவனது யானை உண்டியல் மட்டுமே. பெரியதாக உப்பிக் கொண்டு எப்பொழுதும் அவனுடைய சில்லறைகளை உறிஞ்சி தனது வயிற்றில் சேமித்துக் கொள்ளும். “ஏண்டா உண்டியல்னு? கேட்டால், ஒருவேளை அவனது பணம் தீர்ந்து பற்றாகுறை ஏற்பட்டால் என்னிடம் கை ஏந்தும் நிலைமை வந்தால் அதைத் தவிர்ப்பதற்காக என வேடிக்கையாகச் சொல்வான்.

“டேய் சிவா. . உங்க மாமா என்ன குடிக்காரரா? கோவிச்சிக்காதெ. அன்னிக்கு சொன்ன அவருனாலெ வீட்டுலெ ஏதோ பிரச்சனைன்னு?”

“அப்படில்லாம் ஒன்னுமில்லெ. இப்பெ எல்லாம் சரியாச்சி”

“ம்ம்ம்ம். . நல்லது”

எனக்கும் சிவாவிற்கும் இருக்கும் மிக உன்னதமான இடைவேளியே இப்படி இருவரும் முகத்திற்கு முகம் சந்தித்துக் கொள்ளாமல் உரையாடிக் கொள்வதுதான். ஒருவேளை உறக்கம் தட்டி அவன் அறைக்குள் சென்றுவிட்டாலும் அல்லது நான் பேசிக் கொண்டே உறங்கிவிட்டாலும், மறுநாள் எப்பொழுது எந்த இடத்தில் எங்களது உரையாடல் துண்டிக்கப்பட்டிருக்கும் என அதிசயமாய் தோன்றும். யார் உதிர்த்த சொல் கடைசியாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்துவிட்டு சன்னல் வழியாகப் பறந்து போயிருக்கக்கூடும் என விந்தையாக இருக்கும்.

“நீ எப்பெ தூங்கனே” எனக் கேட்டால் இருவரிடமும் பதில் இருக்காது. தூரத்து உரையாடலில் எங்களுக்கு விருப்பம் இருந்ததற்குக் காரணமும் இதுவாகத்தான் இருக்கும். சடங்கு முறையிலான எந்த ஒத்திகையும் இல்லாமல் விருப்பத்திற்கு எப்பொழுதும் துண்டித்துக் கொள்ளவும் திடீரென எங்கிருந்தோ இணைத்துக் கொள்ளவும் இந்த உரையாடல் வசதியாக அமைந்துவிட்டிருந்தது.

“டே. . சிவா! தூங்கிட்டியா?”

“இல்லெ. . யேன்”

“ஒன்னுமில்ல. .”

உறக்கம் தட்டுவது போல இருந்தது. சோம்பலான உடலை மேலும் தளர்த்தி கையிலிருந்த புத்தகத்தை தலைமாட்டிலுள்ள மேசையில் வைத்தேன். 30 நிமிடத்திற்கு முன் இலேசாக நான் உறங்கியது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. அப்பொழுது முன்வாசல் கதவைச் சாத்திவிட்டு யாரோ ஏதோ பேசியவாறு வெளியேறியதும் நினைவில் இருந்தது.

“சிவா. . மொத வீட்டுக்கு யார் வந்தா?”

மௌனம். கைத்தொலைப்பேசி சத்தமில்லாமல் வெறும் ஒளியை மட்டும் காட்டி அலறியது.

“ஹலோ!”

“டே. . சிவா பேசறன். .எங்கயும் தலை வலி மாத்திரை கிடைக்கலடா. . அதான் பெரிய டவுனுக்கு வந்திருக்கென், எங்காவது 24 மணிநேர கடை இருக்கும், பாத்துட்டு வரேன், இன்னும் கொஞ்சம் லேட்டா ஆகும்டா மச்சான். நீ தூங்கறதுன்னா தூங்கு”

கைத்தொலைப்பேசியை வைத்ததும் கீழேயிருந்து மீண்டும் அதே குரல்.

“யாருடா போன்லெ?”

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா


Tuesday, March 16, 2010

திரை விமர்சனம்: கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் : பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)

சேசர் சார்லோன் என்கிற மாற்று மொழி இயக்குனரின் முயற்சியில் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த உருகுவே படம் “The Pope’s Toilet” ஆகும். பெரும்பாலும் உலக சினிமாக்களின் வரிசையில் நல்ல தரமான முறையில் கலை சார்ந்த வாழ்வை முன்வைப்பதில், இத்தாலிய சினிமா, ஈரானிய சினிமா மற்றும் பிரசில் சினிமா முக்கியத்துவம் நிரம்பியதாகும். ஆனால் இம்முறை ஓர் உருகுவே சினிமா தனது கலாச்சார வெளியின் அடையாளத்தை வலுவாக இந்தப் படத்தின் மூலம் பதித்திருக்கிறது என்றே கூறலாம்.

கடவுள் என்கிற சொல் ஒவ்வொரு மதத்திலும் அதிகாரத்துவம் நிரம்பியதாகவும் வலிமை மிகுந்ததாகவும் கருணை மிகுந்ததாகவும் கற்பிக்கப்பட்டிருப்பது யதார்த்தமான செயல்பாடாகும். கடவுளின் பிரதிநிதியாகப் போற்றப்படும் உலக கிறித்துவத்தின் மதக் குருவான இரண்டாம் பாப் ஆண்டவர் (பாவ்ல்) அவர்கள் உருகுவேயில் இருக்கும் மிலோ என்கிற நகருக்கு வருவதையொட்டி மிலோவிலுள்ள கீழ்த்தட்டு மக்கள் ஒரு கடவுளின் வருகைக்கு நிகராக அவரைப் பல நம்பிக்கைகளுடனும் எதிர்ப்பார்ப்புகளுடனும் வரவேற்பதற்காகத் தயாராகும் விதத்தைப் படத்தின் இறுதி காட்சிகளில் மிகவும் உன்னதமாகப் படமாக்கியிருக்கிரார் இயக்குனர். இது உண்மையில் உருகுவேயில் பாப் ஆண்டவரின் வருகையின்போது அந்த மிலோ என்கிற பிரசிலின் எல்லையையொட்டி இருக்கும் சிறுநகரில் 1988-இல் நிகழ்ந்த உண்மை சம்பத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மிலோ நகரத்தின் எளிமையான மக்கள் பாப் ஆண்டவர் வருகையின் மூலம் தமது நகரமே புனிதமடையப் போகிறது என்கிற புரிதலில், எல்லோரும் தனித்தனியாக அவரின் வருகை தினத்தன்று வியாபாரம் செய்து தங்களின் நிலைமையை உயர்த்திக் கொள்ள திட்டமிடுகிறார்கள். அதன்படி எல்லோரும் சிறுவியாபாரிகளாக முற்படுவது படத்தில் காட்டப்படும் அற்புதமான முயற்சிகள். ஒர் ஒடுக்கப்பட்ட சமூகம் மதம் சார்ந்து தன்னை எப்படி வழக்கத்திற்கு எதிராக வடிவமைத்து கொள்கிறது என்பதன் யதார்த்தம்தான் அத்தகையை காட்சிகள். ஆனால் பாப் ஆண்டவர் வருகை தினத்தில் மிலோ நகரத்தின் அனைத்து சிறுவியாபாரிகளும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றப்படுகிறார்கள். புறக்கணிப்பின் எல்லையில் மிகவும் மோசமாக நஷ்டம் அடையும் அவர்கள் பாப் ஆண்டவரையும் அவரின் வருகையையும் அந்தச் சமூகத்தின் துயரை மேலும் அடர்த்தியாக்கும் ஒரு விளைவாகவே பார்க்கிறார்கள்.

பேத்தோ (இப்படத்தின் மையக் கதைப்பாத்திரம்) தனது குடும்பத்தின் வறுமையைச் சரிக்கட்டுவதில் எப்பொழுதும் ஒரு போராட்டமான வாழ்வின் முன் தன்னை ஒப்படைக்கக்கூடியவன். பாப் ஆண்டவர் வருகையை முன்னிட்டு “பாப் ஆண்டவரின் கழிப்பறை” எனும் பெயரிட்ட ஒரு கழிப்பறையைத் தன் வீட்டின் அருகில் கட்டுவதற்குத் திட்டமிடுகிறான். அன்றைய தினத்தில் மிலோ நகருக்குள் வரும் பிரசியலியன்ஸ் தனது பாப் ஆண்டவரின் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள், அதன் மூலம் பணம் சம்பாதித்து முன்னேறிவிடலாம் என்கிற ஒரு மிலோ சமூகத்தின் ஏழையின் மாபெரும் கனவின் முன் அவன் அடையும் தோல்வி மிகவும் வலி நிரம்பியது. ஒடுக்கப்பட்டவர்களின் தோல்வி என்பது ஒரு வரம் போல அல்லது கடவுளைப் போல அவர்களின் வாழ்விற்குள் திணிக்கப்படுகிறது என்பதன் உண்மையை மிகவும் துணிச்சலாகப் பதியும் முக்கியமான கதைக்களம் இப்படம்.

இப்படத்தில் இன்னொரு ஆளுமை, பிரசில் நாட்டின் எல்லையில் இருக்கும் மிலோ நகர மக்களின் வாழ்க்கை முறையும் அன்றாட போராட்டமும் ஒரு கலையாகச் சொல்லப்படிருப்பதாகும். மிலோ நகரத்திலுள்ள செலவு கடைகளுக்கு குறைந்த விலையில் பொருள்களைப் பிரசில் நாட்டின் எல்லை பகுதியிலிருந்து திருட்டுத்தனமாகச் சைக்கிளில் கொண்டு வரும் பல குடும்பத் தலைவர்களுள் பேத்தோவும் ஒருவன். தினமும் மிலோ கடை வியாபரிகளின் வேண்டுகோளுக்கிணங்க பலர் சைக்கிளிலும் மோட்டாரிலும் பிரசிலுக்குச் சென்று பொருள்களைக் கடத்தி உள்ளே கொண்டு வந்து பிழைப்பு நடத்துவதை ஓர் அழகான சைக்கிள் பயணமாக இயக்குனர் காட்டியிருப்பது கலை அம்சம் மிகுந்த மதிப்பீடுகளாகும்.

படத்தின் தொடக்கக் காட்சியே பேத்தோ பிரசிலிலிருந்து பொருள்களைச் சைக்கிளில் வைத்துக் கொண்டு வேகமாக எல்லையைக்(பிரசில் – உருகுவே) கடப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். சிறுபான்மை மக்களின் போராட்டமான வாழ்வை இந்தக் கொடுமையான சைக்கிள் பயணத்தின் மூலம் ஒரு குறியீடாகப் பாவித்துக் காட்டியிருக்கிறார்கள். மிலோ நகரத்தைச் சேர்ந்த பல குடும்பத் தலைவர்கள் நெருக்கடியான வாழ்வின் முன், அறம் ஒழுக்கம் போன்ற சமூக மீறல்களையும் கடந்து போதை பொருள், மது பானங்கள் போன்றவற்றையும் கடத்த வேண்டிய சூழலில் நிர்பந்திக்கப்பட்டிருப்பதையும் கதையின் ஓட்டத்தில் புரிந்துகொள்ளலாம்.

ஒடுக்கப்பட்டவர்களின் மீதான அதிகாரக் கட்டமைப்பையும் இப்படத்தில் பல இடங்களில் இயக்குனர் காட்டியிருக்கிறார். குறிப்பாக பொருள்களை எல்லையிலிருந்து திருட்டுத்தனமாகக் கொண்டு வருபவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் எல்லை போலிஸ் அதிகாரி. அவனுக்கு வேண்டியதை அவர்களிடமிருந்து தனது அதிகாரத்தைக் காட்டி மிரட்டி பறித்துக் கொள்கிறான். வரலாற்றில் தொடங்கி இன்றும் நடைமுறையில் அதிகாரத்தின் இருப்பு எளிமையானவர்களை ஒடுக்குவதன் மூலமே வளமடைந்து வருவதையும், அவர்களைச் சுரண்டுவதன் மூலமே பிழைப்பு நடத்தி வருவதையும் இந்தப் படத்தில் ஒரு மாபெரும் துரத்தலுக்கு நடுவே உக்கிரமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த அதிகாரி எல்லையின் பரிசோதனை பகுதியின் கவனத்திலிருந்து தப்பித்து ஓடும் சைக்கிள்காரர்களை தனது காரில் துரத்துவதும், அவர்கள் அவனுக்கு மிரண்டு ஓடுவதையும் ஒரு நீளமான அகன்ற திறந்த புல்வெளியில் படமாக்கியிருப்பார்கள். அதிகாரமும் அதிராகத்திற்குக் கட்டுப்படுதலின் கொடுமையும் அந்தத் திறந்தவெளிப் போல எங்கும் பரவலாக வெளிப்படையாக எந்தப் பாதுகாப்புமின்றி நிகழக்கூடியவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பிரசில் எல்லையிலிருந்து மீண்டும் உருகுவேவிற்கு சைக்கிளில் பயணிப்பது என்பது வெகு சிரமமாக இருப்பதை உணரும் பேத்தோ ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிவிட எண்ணம் கொள்கிறான். அவர்களைப் போல எல்லையை வெகு இயல்பாகவும் வேகமாகவும் கடக்கும் மோட்டாரோட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவனது இலட்சியம் குறித்த எண்ணங்கள் உச்சத்தை அடைகின்றன. மோட்டாரோட்டிகள் வசதியும் வேகமும் இருப்பதால் சைக்கிளோட்டிகளைவிட அதிகமாகச் சம்பாரிக்கிறார்கள், அதனால் தானும் ஒரு மோட்டார் வாங்கி அதிகம் சம்பாரிக்க வேண்டும் நிறைய பயணங்கள் கிடைத்தால் மேலும் புகழுக்குரியவனாக வாழலாம் என்கிற ஆசையும் அவனை ஆக்கிரமிக்கிறது. மோட்டாரை வாங்குவதற்குரிய பணத்தைப் பெறுவதற்காக மேலும் கூடுதலான சைக்கிள் பயணங்களுக்காக ஒப்புக் கொள்கிறான் பேத்தோ.

அந்தச் சமயத்தில்தான் மிலோ நகருக்கு பாப் ஆண்டவர் வரவிருப்பதாகத் தகவல்கள் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. உலகம் முழுக்க உள்ள பொதுமக்களின் கவனம் இப்பொழுது உருகுவேயின் மிலோ நகரத்தின் மீது குவிக்கப்படுகிறது எனற எண்ணத்தில் பாப் ஆண்டவர் கழிப்பறைக் கட்டுவதற்கு முடிவெடுத்து அதற்காகத் தினம் அல்லல்படுகிறான் பேத்தோ. கடைசியில் அன்று பாப் ஆண்டவர் வரும் தினமும் நெருங்குகிறது. காலை 10 மணிக்கெல்லாம் கழிப்பறையை இயங்க வைக்க வேண்டும் என்கிற திட்டம். மக்கள் கூட்டம் திரள் திரளாக அதிகரிக்கத் துவங்குகிறது. ஆனால் பேத்தோ பெருநகரத்திலிருந்து கழிப்பறை தொட்டியை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறான். வழியில் அவனது சைக்கிளில் சங்கிலி அறுந்துவிடவே, அதைச் சரி செய்துவிட்டு மீண்டும் உற்சாகத்துடன் பயணிக்கிறான். பாப் ஆண்டவர் பொதுமக்களிடம் பேசுவது தொலைக்காட்சியில் நேரடியாகக் காட்டிக் கொண்டிருக்க, இயங்காமல் இருக்கும் கழிப்பறையின் அருகில் பேத்தோவின் மனைவியும் ஒரு மகளும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் அந்த அதிகாரி பேத்தோவின் சைக்கிளை வழிமறித்து அவனுக்கு மேலும் பிரச்சனையை எழுப்புகிறான். அவனுடைய சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு போய்விடுகிறான். பாப் ஆண்டவர் மேலும் பேசிக் கொண்டிருக்கிறார், பேத்தோ கழிவுத் தொட்டியைத் தூக்கிக் கொண்டு தன் இல்லத்தை நோக்கி வேகமாக ஓடத் துவங்குகிறான். இது ஒரு முரணான புனைவு என்றே சொல்லலாம். பாப் ஆண்டவரைப் பார்க்க வந்த கூட்டத்தின் நடுவே கழிவுத் தொட்டியை உயரமாகப் பிடித்து தூக்கிக் கொண்டு பேத்தோ ஓடி வருவதைத் தொலைக்காட்சியின் வழியாக அவனது மகளும் மனைவியும் பார்க்கும் காட்சி நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

பேத்தோ வந்தடைந்ததும் கழிப்பறையில் தொட்டியைப் பொறுத்திவிட்டு அதைத் திறந்து வைக்கிறார்கள். பிறகு பேத்தோ ஒவ்வொருவருவரிடமாகச் சென்று தனது “பாப் ஆண்டவரின் கழிப்பறையை” பயன்படுத்துங்கள் எனக் கெஞ்சுகிறான். எல்லோரும் கடந்து செல்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள். ஆகக் கடைசியில் பாப் ஆண்டவரும் பொதுமக்களும் அங்கிருந்து சென்றுவிட்ட பிறகு பேத்தோ சிரமப்பட்டு அவனது கனவுகளால் உருவாக்கிய கழிப்பறை அப்படியே கிடக்கிறது. இதுவரை அப்பாவிடமிருந்து எப்பொழுதும் முரண்பட்டே இருந்த அவளது மகள், அன்றைய போராட்டத்தின் மூலம் அப்பாவின் நிசமான இருப்பையும் உழைப்பையும் முழுமையாக உணர்ந்துவிடுவது அடித்தட்டு மக்களின் குடும்பங்களில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகளுக்கிடையான அன்பையும் புரிதலையும் காட்டுகிறது.

இந்தப் படத்தின் கழிவுத் தொட்டி கடைசி காட்சியில் ஒரு பகிங்கரமான குறியீடாகப் பாவிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அங்குக் கூடியிருக்கும் அனைவரும் மதத்தையும் மதப் போதனைகளையும் உயரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் பேத்தோ தனது அன்றாட வாழ்வின் நெருக்கடியிலிருந்து விடுதலை பெறும் இலட்சியத்துடன் ஒரு கழிவுத் தொட்டியை உயரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நாகரிகத்தைப் பற்றி கவலைப்படாமல் ஓடுகிறான். கழிவுத் தொட்டி என்பது ஒரு அசிங்கத்திற்குரிய பொருளாகப் பாவிக்கப்படுபது வழக்கமானது ஆனால் இந்தப் படத்தில் அதை ஒரு மனிதனின் உழைப்பின் முன் புனித பிம்பமாக மாற்றியிருப்பது கலை உணர்வு எத்துனை முரணுக்குள்ளும் ஒரு கலையைச் சென்றடையும் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Sunday, March 14, 2010

சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்

கரைந்து காணாமல்
போவதற்குரிய அத்துனை
சாத்தியங்களையும்
கற்றுக் கொண்டன
சொற்கள்.

உங்களின்
கவிதைகளிலிருந்தும்
கட்டுரைகளிலிருந்தும்
சிறுகதைகளிலிருந்தும்
நாவல்களிலிருந்தும்
எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்கள் காணாமல்
போகக்கூடும்.




நீங்கள் குறிப்பிடும்
கலை என்கிற மாபெரும்
ஆவணங்களிருந்து
உதிர்ந்த சொற்கள்
எல்லாவற்றையும் வெறும்
காகிதங்களாக மாற்றக்கூடும்.

உங்களின் கதைக்குள்
இருக்கும் கதைப்பாத்திரங்கள்
காகிதம் முழுக்க
நிரம்பியிருக்கும்
சொற்கூட்ட்ங்களை
விழுங்க முயற்சிக்கும்
தருணத்தில் தங்களின் படைப்புலகம்
சிதையத்துவங்கும்.

உங்கள் நாவலின்
எதிர் உருவாக்கங்களும்
முரண் பாத்திரப்படைப்புகளும்
இழந்த அறங்களை சொற்சிதைவிலிருந்து
மீண்டும் பெற்று
உங்களின் அறத்திற்கு எதிராக
எல்லாம் வன்முறைகளையும்
நிகழ்த்தக்கூடும்.

நீங்கள் புதைத்து வைத்திருக்கும்
கதையின் மையத்தைத் திருடும் சொற்கள்
அதைக் கதையின் தொடக்கத்தில்
புனைந்து
உங்கள் கதையின் வலிமையை
உடைக்கக்கூடும்.

உங்கள் கட்டுரைகளில்
வலிந்து புகுத்தப்படும்
தத்துவங்களும் வியாக்கியானங்களும்
தமது சொற்களை பகிர்ந்துகொண்ட பிறகு
அர்த்தமற்ற ஒரு வாக்கியமாக
தேங்கிவிடக்கூடும்.

எல்லாமும் நிகழ்ந்துவிட்டபிறகு
வெறும் மௌனமும் வெறுமையும்
மீந்திருக்கும் ஒரு பிரதியை
மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கக்கூடும்
சொற்கள்.

சொற்களின்றி
எதைப் புனைவதென்ற
விரக்தியில்
மாபெரும் மௌனம்
அடர்ந்திருக்கும்
உங்களுக்குள்ளும்
உங்களுக்கு வெளியேயும்
காட்சிகளை உதிர்த்த
வெறும் ஓவியமாக.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Saturday, March 13, 2010

மலேசிய- கடாரம் மாநிலத்தின் ஆர்வார்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடமும் பூமி பூசையும்

இதற்கு முன் பல வருடங்களாக குரூண் சைம் டேர்பியின்(sime derby) நிலத்தில் இயங்கி வந்த ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி அடுத்த வருடம் முதல் குரூணிலுள்ள கம்போங் பஞ்சாங் நிலப்பகுதியில் பில்லியன் செலவில் புதிய கட்டத்துடன் செயல்படவிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் இப்பள்ளி அரசாங்கத்தின் முழு உதவி பெற்ற பள்ளியாக அங்கீகரிக்கப்படுவதோடு மேலும் பாலர் பள்ளி வகுப்பும் பள்ளியின் கீழான அங்கமாகச் செயல்படும்.

பீடோங் பட்டணத்திலிருந்து 10 நிமிடத்திற்குள் இந்தப் புதிய பள்ளி இருக்கும் இடத்திற்கு வந்தடைந்துவிடுவதோடு குரூண் பட்டணத்தின் வரவேற்பறையாக இந்த இடம் என அடையாளப்படுத்தலாம். இன்று காலை மணி 10 முதல் 12.00 வரை புதிய பள்ளி கட்டப்படவிருக்கும் நிலத்தில் பூமி பூசை நடத்தப்பட்டது. குரூண் பொதுமக்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களும், பத்திரிக்கை நிறுபர்களும், ம.இ.கா கிளைத்தலைவர்களும், சமூக அமைப்பின் செயலவை உறுப்பினர்களும் வந்து கலந்து கொண்டனர்.

இந்த ஆர்வார்ட் புதிய பள்ளிக்கான கட்டடம் விவகாரம் பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையில் இருந்தது. கல்வி அமைச்சைச் சார்ந்தவர்கள், ம.இ.கா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் நடத்தப்பட்ட பல்வேறு கலந்துரையாடலின் விளைவாக இந்தத் திட்டம் இப்பொழுது வெற்றியை அடைந்துள்ளது என ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் திரு.மா.முனியாண்டி அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

இந்த மாதம் தொடங்கி எதிர்வரும் நவம்பர் மாதம்வரை கட்டுமான பணிகள் தொடரும் என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துக் கொண்டனர். அடுத்த வருடம் முதல் முழுமையான வசதிகளுடன் ஒரு தோட்டத்தமிழ்ப்பள்ளி திகழப்போவதை முன்வைத்து, ஆர்வார்ட் பள்ளிக்கான நிலத்தை வழங்கிய சைம் டேர்பி நிறுவனத்திற்கும், இந்த நிலப்பிரச்சனை குறித்து பலவகைகளில் உதவி கரங்கள் நீட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பள்ளியின் ஆசிரியர் என்ற வகையிலும் ஆர்வார்ட் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் என்கிற வகையிலும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, March 1, 2010

மலேசியக் குட்டிக் கதைகளும் கதைச் சுருக்கங்களும்

கடந்த வருடம் அநங்கம் ஆகஸ்ட் இதழில் பிரசுரமான எனது, “ மலேசிய இலக்கியப் போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்” என்கிற கட்டுரையை வாசித்துவிட்டு மலாயாப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு பேராசிரியர் சபாவதி அவர்கள் தொலைப்பேசியின் மூலம் அழைத்து கோபத்துடன் அந்தக் கட்டுரையில் நான் வைத்திருந்த எளிமையான சில கருத்துகளை மறுத்து விளக்கம் கொடுக்கத் துவங்கினார். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் இலக்கிய முயற்சிகளைக் கேலி செய்யாதீர்கள் எனவும் மலேசியத் தமிழ்ப்பத்திரிக்கைகள் இந்த நாட்டின் இலக்கிய முன்னேற்றத்திற்குப் பலவகைகளில் பங்காற்றியிருப்பதாகவும் அழுத்தமாகக் கூறினார். ஆனால் ஒரு நல்ல தரமான கதையை மலேசிய இலக்கியக் களத்தில் அறிமுகப்படுத்தவோ அல்லது பரிந்துரைக்கவோ அவருடைய திறனாய்வு தவறிவருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது எனது பார்வை.

பேராசிரியர் அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து என்னிடம் கருத்துகள் உண்டு. முக்கியமாக தங்களின் எந்தவொரு கருத்திற்கும் எல்லோரும் உடன்பட்டு செவி சாய்க்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது எந்தவொரு இயக்கம் அல்லது அமைப்பு குறித்து அல்லது அவர்களின் நடவடிக்கை குறித்து யாரும் எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்கக்கூடாது எனச் சொல்வதும் என்னைப் பொறுத்தவரையில் ஓர் அபத்தமான உள்முரண். கருத்து சுதந்திரத்தை அதன் நுனியிலே வேறறுக்க முயல்வது அல்லது தனது கல்வி சார்ந்த தகுதியின் அடிப்படையிலான சொல்லாடல்களின் மூலம் மறுப்புத் தெரிவிக்கும் பண்பைப் பின்பற்றி பலவீனத்தை ஏற்றுக் கொள்ளாமல் சாமர்த்தியமாக நழுவது ஆரோக்கியம் கிடையாது.

அன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகள் இலக்கியத்திற்காகவும் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்கவும் இலக்கிய களம் அமைத்துக் கொடுத்தது உண்மையான வரலாறு. அதை நான் மறுக்கவும் இல்லை. எடுத்துக்காட்டாக பவுன் பரிசுத் திட்டம், கதை வகுப்புகள், புதுக்கவிதை கருத்தரங்குகள். ஆனால் தற்போதைய சூழலில் இலக்கியம் சார்ந்த பத்திரிக்கைகளில் நிலைபாடுகளும் செயல்பாடுகளும் எப்படி இயங்குகிறது என்பதுதான் எனது கண்ணோட்டம். குறிப்பாகச் சொல்லப்போனால் மலேசிய இலக்கிய உலகில் சிறுகதை குறித்து தீவிரமான(மிதமாகவும்) விமர்சன மொழியைக் கொண்டவர் மூத்த எழுத்தாளர்களில் ரெ.கார்த்திகேசு அவர்களைச் சொல்லலாம். அடுத்ததாக? கதைச் சுருக்கங்களை வரிசைக்கிரமமாகத் தந்துவிட்டு அதை விமர்சனம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? குறைந்தது ஒரு கதையை வெறுமனே கொண்டாடுவதையும் பாராட்டுவதையும் நிறுத்திவிட்டு சம்பந்தபட்ட எழுத்தாளருக்கு இன்றைய சிறுகதை மொழி அடைந்திருக்கும் மாற்றுத் தலம் குறித்தும் கதைத் தேர்வில் கருத் தேர்வில் எழுத்தாளர் தவறவிட்டிருக்கும் கவனம், அல்லது இந்தக் கருவை வேறு எப்படியெல்லாம் புதிய மதிப்பீடுகளுடன் ஆக்கக்கரமான உத்திகளில் கையாண்டுள்ளார்கள் என்கிற விரிவான பார்வையாவது கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் பத்திரிக்கைகளில் விமர்சனம் என்கிற பெயரில் வெறும் கதைச் சுருக்கங்களை எழுதிவிட்டு (அதுவும் ஒரு கதைக்கு ஒரு பத்தி) நானும் ஒரு விமர்சகன் எனத் தப்பித்துக் கொள்கிறார்கள்.

மேலும் இப்பொழுதெல்லாம் “குட்டிக் கதைகள்” என்கிற வடிவமும் பரவலாகப் பத்திரிக்கைகளில் பிரசுரமாகின்றன. ஆனந்த விகடனின் வரும் ஒரு பக்கக் கதை இங்கேயும் மிகவும் நேர்மையாகப் பின்பற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது தெளிவாகுகிறது. சிறுகதை ஒரு பக்கங்களிளும் முடிவடையலாம் அல்லது 20 பக்கங்களைத் தாண்டியும் நீளலாம் என ஒரு சுதந்திரமான இறக்குமதி வரையறை சிறுகதைக்கு உண்டு. முதலில் ஒரு நல்ல சிறுகதை எப்படியிருக்கும் என்கிற அடையாளங்காணும் திறனையும் பரவலான வாசிப்பும் வளர்ச்சியடையாத சூழலில் இதில் சிறுகதைக்குப் பதிலாக அதன் மாற்று வடிவமாக சில சோம்பேறிகளுக்காக “குட்டிக் கதையும்” வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் “நறுக்குக் கதை” வந்துவிடவும் வாய்ப்புண்டு. அல்லது கடி ஜோக்குகளை, சின்ன கதை என்று மாற்றி பிரயோகிக்கும் அபாயமும் இருக்க வாய்ப்புண்டு.

விமர்சனங்கள் நிகழவில்லை என்பதற்கும் ஏன் விமர்சனங்கள் தீவிரமாக புதுப்பிக்கப்பட்ட பார்வையுடனும் கண்ணோட்டங்களுடனும் அக்கறை சார்ந்ததாக இல்லை எனக் கேட்பதற்குமிடையே உள்ள வித்தியாத்தை வெறும் முரணாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுமா அல்லது ஆயிரத்தில் இதுவும் ஒரு வெறும் குற்றச்சாட்டு எனப் புரிந்துகொள்ளப்படுமா என்பதே சந்தேகம்.

குறிப்பு: மலேசிய மலாயாப்பல்கலைக்கழகம் நடத்திய இந்தாண்டு பேரவைக் கதைகளில் என்ன நடந்தது? அதன் விமர்சனம் எப்படி இருந்தது குறித்து அடுத்த கட்டுரையில் பதிவாகும். மேலும் எழுத்தாளர் நா.கல்யாணி மணியம் கதையில் நிகழ்ந்திருக்கும் திருட்டுக் குறித்தும் பதிவாகும்)

(இனி எப்பொழுதும் பேரவைச் சிறுகதை போட்டியில் பங்கெடுக்கக்கூடாது என கடந்தாண்டே எடுக்கப்பட்ட முடிவினால் - இதில் தேசியப் பல்கலைக்கழகம் ஏற்படுத்திய சிறுகதை கவிதை போட்டி- 2009/10 மட்டும் விதிவிலக்காக ஆகிவிட்டது காரணம் மலேசிய இலக்கியப் போட்டிகளின் தரம் குறித்து எனக்கு ஏற்பட்ட சலிப்பையும் அதிருப்தியையும் பதிவு செய்யும் போது, தேசியப் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் போட்டிக்குக் கதையையும் கவிதைகளையும் அனுப்பி இரு மாதங்கள் ஆகியிருந்தன. அந்தக் குற்றத்திற்காக மேடையேறி அரசியல் "தலை"களிடமெல்லாம் கைக்குழுக்கும் மிகப்பெரிய தர்ம சங்கடம் இனி நிகழாது. இத்துடன் அதற்கெல்லாம் ஒரு முடிவு- தேசிய பல்கலைக்கழக ஏற்பாட்டுக் குழுவிடமிருந்து இந்தாண்டு பெற்ற பண முடிப்புகளில் பாதியை கெடா செமெலிங் அன்பு இல்லத்தில் நடத்தப்பட்ட போட்டி விளையாட்டிற்கும், மீதி பாதியைப் பள்ளியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தமிழ் மொழி வாரம் இலக்கியப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் வாங்கவும் செலவழித்துவிட்டதில் சிறு மகிழ்ச்சி. குறிப்பாக எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள் எழுதிய மாணவர்களுக்கான சீனமொழி சிறுகதை மொழிப்பெயர்ப்பு புத்தகமான “மீன்குளம்” சிலவற்றையும் அன்பாளிப்பாக அவர்களைச் சென்றடைந்ததில், இனி நமது பாரம்பரிய நீதி இலக்கிய கதைக்களத்திலிருந்து விடுபட்டு புதிய வாசிப்பனுபவத்தைப் பெறுவார்கள் என நம்புகிறேன்.)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா