நேற்று 12.09.2010(ஞாயிற்றுக்கிழமை) கோலாலம்பூரில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொள்ளும் இரு முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆகையால் முதல்நாள் இரவு சுங்கைப்பட்டாணியிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம். அதிகாலை 6மணிக்கெல்லாம் கோலாலம்பூர் சேர்ந்துவிட்டதால் மீண்டும் ஒரு பேருந்து எடுத்து புடு ராயா பக்கமாகச் சென்று அங்குக் குளித்துவிட்டுக் கிளம்புவதற்கு இடம் தேடினேன். 25 ரிங்கிட் கொடுத்து ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பதற்கும் குளிப்பதற்கும் இயன்றது. பச்சைபாலன் 9மணிப்போல அங்கு வந்து என்னை அழைத்துக் கொண்டார்.
சிறுகதை பட்டறை சரியாக 10மணி போல தொடங்கியது. ஜெயமோகன், பிரமானந்த சுவாமி, எழுத்தாளர் கோ.முனியாண்டி, கௌரி சர்வேசன், நயனம் ஆசிரியர் இராஜகுமாரன், பச்சைபாலன், கல்வி அதிகாரி மூர்த்தி, சேகரன், ஆறு.நாகப்பன், யுவராஜன், நவீன், மணிமொழி, தோழி, சந்துரு, சிவா பெரியண்ணன் போன்ற பல கோலாலம்பூரைச் சேர்ந்த படைப்பாளிகள் பட்டறையில் கலந்துகொண்டனர். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறுகதை பட்டறை சங்கத்தின் பனிமனையில் நடத்தப்பட்டது.
ஜெயமோகன் சிறுகதை பட்டறையில் குறிப்பிட்ட சில விசயங்கள் குறிப்புகளாக(ஞாபகத்தில் உள்ள) தரப்படுகிறது:
1. மூன்று நாள் பட்டறையில் தரவேண்டிய சிறுகதை பற்றிய வழிக்காட்டுதல்களை இங்கு ஒரே நாளில் மூன்று பிரிவுகளாகத் தரவேண்டியுள்ளது.
2. சிறுகதை என்பது சிறிய கதை அல்ல. சிறுகதை என்பது சொல்லப்படக்கூடாது, காட்டப்பட வேண்டும்.
3. சிறுகதை என்பது அதன் முடிவை நோக்கி படைக்கப்பட்டதாக அமைக்கப்பட வேண்டும். சிறுகதையின் முடிவு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும். வாசகர்கள் எதிர்ப்பார்த்திராத ஒரு முடிவை கதையின் முடிவில் புனைந்து, மீண்டும் சிறுகதை முடிவிலிருந்து தொடங்குவதாக அமைக்கப்பட வேண்டும்.
4. ஒரு சிறுகதையின் முடிவு திருப்பத்தைக் கொண்டிருக்காமல் அது ஒரு கவித்துவமான விவாதமாக அல்லது கவித்துவமான புள்ளியில் முடியலாம்.
5. முடிவிற்கு ஏற்புடைய வகையில் சிறுகதையின் உடல் அமைந்திருக்க வேண்டும். எ.கா, ஈட்டியின் கூர்முனைக்கு ஏற்ப உருவாக்கப்படும் ஈட்டியின் உடல் போல. சில சமயங்களில் அளவுக்கு அதிகமான விவரிப்புகள் கதையின் முடிவில் உருவாகும் தாக்கம்/பாதிப்பை வலுவிழக்கச் செய்துவிடும்.
6. சிறுகதைக்குள் ஒரு கதை ஒளித்து வைத்திருப்பது மேலும் சிறுகதையைக் கூர்மைப்படுத்தும். வாசகன் கதையின் முடிவில் அந்த ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு கதையைக் கண்டடையும்போது சிறுகதை இன்னொரு கதையை வாசகனுக்குள் உருவாக்கிவிட்டிருக்கும்.
7. தேவையில்லாத சொற்களைக் கதையிலிருந்து நீக்குவதன் மூலம் கதை சிறுகதையின் அளவீடுகளைத் தக்க வைத்துக்கொள்ளும். மேலும் தேவையில்லாத வாக்கியங்கள், சாதாரணமான வாக்கியங்கள், கதைக்கு அவசியமற்ற வாக்கியங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.
8. உரையாடல் ரொம்பவும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சாதரணமாக இருவர் உரையாடும் விதத்தைக் கதையில் அப்படியே பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உரையாடலைச் சிந்தித்து தேவையான அளவில் கச்சிதமாக அதன் முக்கியம் கருதி எழுத வேண்டும்.
9. சிறுகதைகளுக்குப் பக்க அளவில் வரையறை கொடுப்பது மிக மோசமான அபத்தம். ஆகையால் அதற்கு அளவு கிடையாது. வாசிப்பத்தில் ஏற்பட்ட சோம்பேறித்தனம்தான் கடுகு கதை, நொடி கதை என உருவாகிவிட்டது.
10. உலகின் பெரும்பாலான நல்ல சிறுகதைகள் “நான்” என்ற தன்னிலை கதைச் சொல்லலைத்தான் கையாண்டிருக்கின்றன. ஆகையால் கதைச் சொல்லியைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த “நான்” எந்தக் கதைப்பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதையும் யாரிடமிருந்து கதை சொல்லப்பட்டால் மேலும் வலுவான பாதிப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்தும் எனவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
11. ஒரு உதாரணக் கதையைச் சொல்லி, அந்தச் சிறுகதை எங்கிருந்து தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதையும், எந்த இடத்தில் முடிப்பது, யார் கதைச் சொல்லி போன்ற கேள்விகளை எழுப்பி சிறுகதை குறித்து மேலும் விரிவாகப் பேசினார்.
12. பின்நவீனத்துவம், நவீனத்துவம் என்கிற கதையெல்லாம் எழுதப்பட முடியாது, அப்படி அடையாளப்படுத்தி எழுதுவது கதையைச் செய்வதற்குச் சமமாகும். நல்ல சிறுகதைகள் மனிதர்களைப் பற்றிய கதையாகத்தான் இருக்கும். கோட்பாடுகள் அந்தக் கதையை வாசித்துப் புரிந்துகொள்வதற்கான மதிப்பீட்டுக் கருவிகள் மட்டுமே.
கலை இலக்கிய விழா-2
இடம்: கோலாலம்பூர் சோமா அரங்கம்
மாலை மணி 6.30க்குத் தொடங்கியது.
ஓராண்டு ஓடி முடிந்தது பெரிய இடைவேளியை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் கலை இலக்கிய விழாவிற்கு சுவாமி பிரமானந்தவுடன் சென்றிருந்தேன். அங்குள்ள நண்பர்களைப் பார்க்கும்போது நேற்றுதான் பார்த்து பேசிவிட்டு வந்ததைப் போல இருந்தது. சந்துரு, சிவா பெரியண்ணன், தோழி, யோகி, தினேசுவரி, வாணி ஜெயம், பச்சைபாலன், சிங்கை இளங்கோவன், ராஜகுமாரன், கோ.முனியாண்டி, டாக்டர் சண்முகசிவா, யுவராஜன், வல்லின ஆசிரியர் நவீன், அகிலன், தயாஜி, பொன் கோகிலம், மணிமொழி, கா.ஆறுமுகம், கல்வி அதிகாரிகள் மூர்த்தி, சேகரன், பெர்னாமா வினோத் குமார், சிதனா, மலாயாபல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் டாக்டர் குமரன், தமிழ்ப்பள்ளிகளின் தேசிய அமைப்பாளர் திரு.பாஸ்கரன் போன்ற பெரிய கூட்டம் விழாவிற்கு வருகையளித்திருந்தனர்.
அன்றுதான் இசை விமர்சகரும் கவிஞருமான நண்பர் அகிலனுடன் அறிமுகம் ஏற்பட்டது. நான் 2007-இல் அவருடைய கவிதைகளைக் காதல் இதழில் வாசித்திருந்தேன். அதன் பிறகு அகிலன் எந்த இதழிலும் எழுதாமல் போயிருந்ததால், அவரைப் பற்றிய நினைவு முற்றிலும் மறந்திந்திருந்தது. மீண்டும் அவர் வல்லினத்தில் எழுதத் தொடங்கியபோதுதான் வலைப்பூ மூலம் தொடர்பு ஏற்பட்டது. இன்செப்ஷன் படத்தின் இசை குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அநங்கம் இதழ் ஒன்றையும் பெற்றுக் கொண்டார். மிகவும் எளிமையாக நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர் நண்பர் அகிலன்.
கவிதாயினி தினேசுவரி கலை இலக்கிய விழாவின் அறிவிப்பாளராக நிகழ்வை நெறிப்படுத்தினார். வரவேற்புரையாற்றிய எழுத்தாளர் பச்சைபாலன் மலேசியாவில் இலக்கிய செயற்பாடுகளையும் வல்லினம் இதுவரை மலேசிய தற்கால இலக்கியத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைச் சொல்லி, வல்லினத்தை “மாற்று அணி” எனும் அடையாளத்துடன் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் அநங்கம் மௌனம் போன்ற இலக்கிய சிற்றிதழ்களின் பங்கையும் அடையாளப்படுத்தி பேசினார்.
தலைமை உரை ஆற்றிய வல்லின இதழின் ஆலோசகர் டாக்டர் சண்முக சிவா அவர்கள், எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய அறச்சீற்றத்தைப் பற்றி கூறினார். இளம் எழுத்தாளர்கள் துணிச்சலாக கருத்தையும் எதிர்வினையையும் முன்வைக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தொகுப்பாசிரியர் உரையில் நவீன் அவர்கள் வல்லினம் (மலேசியா – சிங்கப்பூர் 2010) இதழ் உருவான பின்னனியைக் குறிப்பிட்டார். தற்போதுள்ள கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தற்கால இலக்கியம் குறித்த பிரக்ஞையும் பரிச்சயமும் இல்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு மலேசிய சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் தொகுப்பை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவருக்குள் உருவாகியிருந்த எண்ணம்தான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார். சுங்கைப்பட்டாணி சுல்தான் அப்துல் அலிம், பினாங்கு துங்கு பைனுன், ராஜா மலேவார் போன்ற மேலும் சில ஆசிரியர் பயிற்றகத்திற்கும், மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம் போன்ற மேலும் சில கழகங்களுக்கும் இந்த வல்லினத்தின் தொகுப்பு நூல் இலவசமாகத் தரப்படவிருப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து ஜெயமோகனை எழுத்தாளர் யுவராஜன் அவர்கள் அறிமுகப்படுத்தி பேசினார். இதற்கு முன் கெடாவில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் ஜெயமோகன் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது. அதே போல ஒரு கல்லூரியில் ஜெயமோகனை ஒரு சினிமாக்காரர் என்கிற தோரணையில் ஒரு முக்கியமான நபர் பேசினார். ஜெயமோகனின் களம் சினிமா என்பது ஒரு மேலோட்டமான தட்டையான புரிதல் ஆகும். தவறான புரிதலாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் யுவராஜனும் சுவாமி பிரமானந்தாவும் மிகச் சுருக்கமான அதே சமயம் ஜெயமோகனின் படைப்புலகம் சார்ந்த அருமையான அறிமுகத்தை வழங்கினார்கள்.
தொடர்ந்து ஜெயமோகன் தமிழின் முக்கியமான நாவல் என்கிற தலைப்பில் உரையாடினார். பிரமிக்க வைத்த பிரமாண்டமான இலக்கிய உரை என இதைப் புரிந்துகொள்ளலாம். அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனை அவருடையது. ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய “போரும் அமைதியும்” என்கிற நாவலின் மூலம் அவருக்கு உருவான மனநிலையைப் பகிர்ந்து கொண்டார். அந்த நாவல் அவருக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தையும் தனிமையையும், வெறுமையையும் சுட்டிக்காட்டி ஒரு நாவல் படித்து முடித்தவுடன் காலத்தின் மிக நீண்ட தனிமையையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிக்கிவிட்டிருக்க வேண்டும் எனக்கூறினார். ஒரு நாவல் என்பது தரிசனம், காலத்தின் தரிசனமாக இருக்க வேண்டும், மேலும் பொது புத்தியைச் சார்ந்ததாகவும் அந்தப் பொது புத்தி என்கிற ஒட்டு மொத்த பார்வையில் நுண்ணிய பார்வையும் இருக்க வேண்டும் எனக்கூறினார். ஒரு கண்ணில் யானையையும் மறு கண்ணில் எறும்பையும் பார்க்கின்ற ஆற்றல் நாவலாசிரியர்களுக்கு இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் இந்த நிகழ்வில் நாவல்கள் குறித்து ஆற்றிய உரை ஜெயமோகன் வலைத்தலத்தில் இன்னும் சில நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதில் அவர் பேசியதின் முழுமையான பதிவும் இருக்கும். நாவல் வாசிப்பு என்பது ஒரு தவம் போல, முடிந்தவுடன் ஏற்படும் அமைதியும் வெறுமையும் தற்கொலை உணர்வுக்குக்கூட இட்டுச் செல்லும் என்கிறார் படைப்பாளர் ஜெயமோகன். அவரிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு பேருந்தில் வீடு திரும்பும்போது ஜெயமோகனுடன் கழிந்த எனது விடுமுறையில் எங்கோ ஒரு தனிமையும் வெறுமையும் அப்பிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
8 comments:
//அன்றுதான் இசை விமர்சகரும் கவிஞருமான நண்பர் அகிலனுடன் அறிமுகம் ஏற்பட்டது. நான் 2007-இல் அவருடைய கவிதைகளைக் காதல் இதழில் வாசித்திருந்தேன். அதன் பிறகு அகிலன் எந்த இதழிலும் எழுதாமல் போயிருந்ததால், அவரைப் பற்றிய நினைவு முற்றிலும் மறந்திந்திருந்தது. மீண்டும் அவர் வல்லினத்தில் எழுதத் தொடங்கியபோதுதான் வலைப்பூ மூலம் தொடர்பு ஏற்பட்டது. இன்செப்ஷன் படத்தின் இசை குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அநங்கம் இதழ் ஒன்றையும் பெற்றுக் கொண்டார். மிகவும் எளிமையாக நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர் நண்பர் அகிலன். //
நண்பர் அகிலன் நல்ல பண்பான மனிதரும் கூட .தன்னலம் கருதமால் தன்னைச் சார்ந்த இந்த சமுதாயத்திற்கு உதவும் மனபான்மைக் கொண்டவர். சில.தமிழ்ப் பள்ளி மாணவவர்களுக்கு கணினீ வகுப்புக்களை தன் சமுக சேவை மையம் வழி அவர்களும் கற்றுக் கொள்ள வழிக்காட்டியவர். நல்ல சிறந்த சமுக சிந்தனையாளர். அன்பாக பழகும் நண்பர் அவர். எனக்கும் அவரிடம் நல்ல அறிமுகம் உண்டு. Mcis Zurich யில் முகவர்களாக பனியாற்றிய அனுபவம் இருவருக்கும் உண்டு. அந்த நல்ல நண்பரின் உறவு என்றேன்றும் நீடிக்கட்டும் உங்களூக்கு
பல மலேசிய நண்பர்களை, குறிப்பாக டாக்டர் சண்முக சிவா, புகைப்படங்களில் காண முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.
இளங்கோவன், சண்முகசிவா உள்ளிட்ட எழுத்தாள நண்பர்களை புகைப்படத்தில் காண்பது சந்தொஷமாக இருக்கிறது. சிலரது படைப்புகளை வாசித்திருக்கக் கூடும் ஆனால் அடையாளம் தெரியவில்லை. புகைப்படத்திலிருப்பவர்களை பெயர்களோடு அறிமுகப் படுத்தினால் தேவலை. எழுத்தாளினிகளைக் காணவில்லையே.
மானஸாஜென்.
உங்கள் web page background dark ஆகவும் fonts White ஆகவும் இருப்பது கண்டேன். இது குறித்து எனது சிறு அபிப்பிராயம்.
விளம்பர பிதாமகர் டேவிட் ஓஜில்வி கூறுவாராம்: If this is comfortable for reading, all the news papers in the world would be adopting this!
அவர் கூறியதில் மிகுந்த அர்தம் உள்ளது என்று ஆமோதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நல்ல பகிர்வு..
அந்த வல்லினச்சிறப்பிதழ் இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளதா ?
@மனோகரன்
ஆமாம். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதில் மகிழ்ச்சிதான். மிக்க நன்றி.
@ காலாபிரியா
வணக்கம் கவிஞரே. உங்களின் பல கவிதைகளை வாசித்திருக்கிறேன். பதிவிற்கு மிக்க நன்றி.
@மானஜசென்
புகைப்படங்களுக்குக் கீழ் நான் பெயர்களைக் குறிப்பிடவில்லை.மன்னிக்காவும், அப்படிப் பெயர் இடுவது வலைப்பூவில் எப்படிச் செய்வதென தெரியவில்லை.அடுத்தமுறை அதைச் செய்கிறேன்
@செந்தில்
இப்பொழுது என் வலைத்தலத்தில் வர்ணம் சரியில்லை என்கிறீர்களா? அல்லது சரியாக இருக்கிறது என்கிறீர்களா? ஆமோதிக்கிறேன்
//வல்லினச்சிறப்பிதழ் இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளதா ?//
@சின்னபயல்
கண்டிப்பாக வாய்ப்பிருக்கும் விரைவில். அதன் ஆசிரியர் அது குறித்து ஏற்பாடுகள் செய்வார் என நம்புகிறேன். வல்லினம் வலைத்தலத்தில் விவரம் தரப்படலாம்.
Post a Comment