நவீன சிறுகதைகளின் உச்சம் எனக்கருதப்படும் தனிமனித உளக்குறிப்புகளின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் கொந்தளிப்புகளையும் உச்சங்களையும் தனது சிறுகதைகளில் கையாண்டு பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமி. இன்றும்கூட சீ.முத்துசாமியின் கதைகள் மீள்வாசிப்புக்கும் தீவிர வாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதா என்பதே பெரும் கேள்வியாக நம் இலக்கிய வாசிப்பு தடத்தில் தேங்கி நிற்கிறது. அப்படியொரு மனித மனங்களின் ஆழ்ந்த குறிப்புகளை தன் கதைக்குள் வாழ்வை எதிர்க்கொள்ளும் உளவியல் கட்டுமானங்களாக எழுப்பிய பிரதியை வாசிக்கவும் விமர்சிக்கவும் தவறினால் அது பெருத்த இழப்பாக ஆகிவிடும் என்பது உறுதி.
2007-இல் அவரை நான் சந்திக்கும்போதே பின்நவீனத்துவம் பற்றியும் இலக்கியத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் உரையாடினார். எனக்கு பின்நவீனத்துவம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தியதில் அவருக்கு முக்கியமான இடமுண்டு. மலேசியாவில் எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்த நாவலாகவும் மனித வாழ்வின் வரலாற்றை நவீனமுறையில் ஓர் இலக்கியப்பிரதியாக எழுதப்பட்ட முதல் நாவலாகவும் 2006-ல் வெளிவந்த சீ.முத்துசாமி எழுதிய ‘மண் புழுக்கள்’ நாவலை மட்டும்தான் குறிப்பிட முடிகிறது. இதற்கு முன் வெளிவந்த ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண வெயில்’ குறிப்பிடத்தக்க மலேசிய வாழ்வின் துயரங்களையும் அவர்கள் அனுபவித்த ஒடுக்குமுறைகளையும் ஒரு கதையாக எல்லாம் உணர்வுகளையும் வெளிப்படுத்திய பிரதியாகக் கருதலாம். ஆனால் சீ.முத்துசாமியின் நாவல் ஒரு தோட்டப்புற வாழ்வைப் பெரும் தரிசனமாக அவர்களின் மொழியிலேயே எழுதி, மனதிற்கு நெருக்கமான கதையாக மாறி பண்பாட்டு வேர்களாக வளர்கிறது.
எது சிதைந்த கலாச்சாரம் எது உயர்ந்த கலாச்சாரம் என்பதில் நமக்கிருக்கும் மதிப்பீட்டு பலவீனங்களை, அள்ளி இறைத்துவிட்டு எட்டி உதைத்துவிட்டு கம்பீரமாக நம்மை ஒரு கதைவெளிக்குள் இழுத்துக் கொண்டு போகும் துணிச்சல் மண் புழுக்கள் நாவலுக்குண்டு. நிதர்சனத்தின் எல்லாம் உடலையும் உரித்துப் போட்டுவிட்டு வரலாற்றின் முன் சிதைந்துபோன ஒரு கலாச்சாரத்தைக் கதையாக மாற்றி சொல்வதில் சீ.முத்துசாமி கடுமையாக முயன்ற ஒரு படைப்பாளி என்றே சொல்லலாம். வரலாற்றில் ஒடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட சிறுபான்மை மக்களின் வாழ்வு குறித்தும் அவர்களின் மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளாலும் கொடுமைகளாலும் அவர்கள் அடைந்த வாழ்க்கைமுறைமை குறித்தும் மிகவும் கரிசனமான எல்லையைக் கண்டைந்தது சீ.முத்துசாமியின் மண் புழுக்கள்.
மக்கள் ஓசையில் தொடராக வெளிவந்த அவரது நாவலின் மொழியை வாசித்தவர்கள், தமிழ் மொழியைச் சிதைத்து எழுதுவதாகக் குற்றம் சாட்டினார்கள். மொழியைக் கொச்சைப்படுத்திய விதத்தைச் சுட்டிக்காட்டி சினமடைந்து அவரது நாவலை விமர்சித்துத் தள்ளினார்கள். அடிமைத்தனங்களால் கலாச்சாரத்தையே இழந்து, அதிகமாகச் சுரண்டப்பட்டவர்களின் கதைக்குள் இவர்கள் அப்படியென்ன ஒழுக்கமான பிரச்சாரத்தனங்களையும் இலக்கண விழுமியங்களையும் எதிர்ப்பார்க்கக்கூடும்? இலக்கியம் என்பதை ஒரு பிரச்சாரப் பிரதியாகக் கருதுபவர்களின் மனம் இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற எல்லையில் நின்றுவிடுவது வருத்தமளிக்கிறது. குறைந்தபட்சம் இந்த நாவலை முறையான விமர்சனத்திற்கு உட்படுத்திருக்க வேண்டும். ஒரு கதைக்கான மொழியையும் வாக்கியங்களையும் சொற்களையும் தேர்ந்தெடுப்பதில் அந்தக் கதை நிகழும் களமும் யாரெல்லாம் அந்தக் கதைக்குள் இடம்பெறும் மனிதர்கள் என்பதும் மிக முக்கியமான ஒன்றென புரிந்துகொள்வது அவசியம்.
Literature licence/independent எனப்படும் படைப்பு சுதந்திரத்தின் மீதான தெளிவும் அக்கறையும் படைப்பிலக்கியத்தைப் புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் ஓர் இலக்கியப்பிரதிக்குள் நுழைந்ததும் முதலில் வாக்கிய அமைப்பில் ஏதாவது பிழை நிகழ்ந்துள்ளனவா அல்லது எழுத்துப்பிழைகள் எங்கெல்லாம் நிகழ்ந்துள்ளது எனவும் ஆராய்வதில் தன் முழு கவனத்தைச் செலுத்திவிடுகிறார்கள். ஆகையால் கடைசிவரை இலக்கிய வாசிப்பிற்கான முதிர்ச்சியையும் இலக்கியப்பிரதிக்குள் ஒளிந்திருக்கும் மீ மொழி குறித்த தேடலும் இல்லாமல் அற்றுப் போகின்றன.
சீ.முத்துசாமி நாவலில் வருபவர்கள் முன்பொரு காலத்தில் மலாயா வெள்ளையனின் ஆட்சிக்குக் கீழ் இருந்தபோது ஒரு சிறு தோட்டப்புற மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களாகத் தங்களின் கலாச்சாரத்தையே தொலைத்துவிட்டு வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்களே. அவர்களைப் பற்றிய வாழ்வை எப்படிப்பட்ட மீ மொழியிலும் சொல் தேர்வுடன்கூடிய ஆக்கக்கரமான மொழியிலும் சொல்ல வேண்டும் என்பது படைப்பாளனின் நேர்மையான சுதந்திரம் குறித்தது. சீ.முத்துசாமி மண் புழுக்களில் தேர்ந்தெடுத்த அந்த மக்களின் வட்டார மொழியானது நாவலின் கூடுதல் நம்பகத்தன்மையையும் பலத்தையும் மேலும் வலுப்படுத்துவதாகவே கருதலாம்.
இங்குப் பின்நவீனத்துவ இலக்கியம் படைக்கப்பட்டுள்ளதா என்கிற கேள்வியில் இரண்டு வகையான அபத்தம் உண்டு. ஒன்று பின்நவீனத்தும் என்பதை முன்வைத்து ஒரு படைப்பை உருவாக்க முடியும் என நம்புவது, மற்றொன்று பின்நவீனத்துவத்தில் இலக்கியம் படைக்கப்படிருக்க வேண்டும் என நினைப்பது. எந்தவொரு கோட்பாடும் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான துணைக்கருவிகள் மட்டுமே. அதையும் மீறி எழுத்தாளர் தன்னை அறியாமலேயே பின்நவீனத்துவ படைப்பை எழுதியுள்ளாரா எனக் கேட்டால், தைரியமாக “மண் புழுக்கள்” நாவலைச் சுட்டிக்காட்டலாம். மலேசியாவில் எழுதப்பட்ட பின்நவீனத்துவ நாவல் என்றே குறிப்பிடலாம்.
அதெப்படி அது பின்நவீனத்துவ நாவலாகக் கருதப்பட முடியும் எனக் கேட்கக்கூடும். முதலில் அந்த நாவலில் எந்த மையக் கதைப்பாத்திரமும் இல்லாதிருப்பது. கதையின் மையம் என்பது தோட்டப்புற வாழ்வாக இருப்பதால் அந்த மையம் மாறிக்கொண்டே நாவல் முழுக்க தன் நிலையான இருப்பை இரத்துசெய்துவிட்டு தன் புதிய இருப்பிடத்தைத் தேடிக் கொண்டு அலைகிறது. அடுத்ததாக முதலாளி வர்க்கத்தால் சமூகத்தில் பிளவுண்டு கிடக்கும் அறம் குறித்தும் நாவலில் தொடர்ந்து கேள்வியும் கேலியும் எழுப்பப்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் சிறுக சிறுக சிதைந்து வரும் கலாச்சாரத்தையும் அறத்தையும் நாவல் அவ்வப்போது மறுப்புனைவு செய்து கதைக்கு வெளியே கொண்டு வந்து நீட்டுகிறது. இது மண் புழுக்கள் நாவலில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபாரமான முயற்சிகள் என்றே சொல்லலாம். இன்னமும் இந்த நாவல் விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றே தீர்க்கமாக நம்புகிறேன்.
வல்லினம் முதல் இதழில் பிரசுரமான அவரது “வெளி” சிறுகதை மிக மிக முக்கியமான ஒரு கதையாகும். ஜெயமோகன் குறிப்பிட்டது போல உலகின் எந்த மூலையில் உள்ள வாசகனாலும் சீக்கிரம் அந்தக் கதைக்குள் நகர்ந்துகொண்டிருக்கும் ஆழ்மனத் தவிப்புகளை அடைந்துவிடக்கூடும். இந்தக் கதையின் வாக்கிய அமைப்பு மிக சவாலனது என்றே சொல்லலாம். ஒவ்வொரு வாக்கியங்களிலும் ஒரு சொல்லுக்கும் அடுத்து வரும் சொல்லுக்கும் மிக நீண்ட மன பரிணாமங்கள் சிக்கல்களாகப் புனையப்பட்டிருக்கும்.
கதையில் இடம்பெறும் அந்த மனிதனின் மனதின் அத்தனை குறிப்புகளையும் உடைத்துக்கொண்டு உள்ளே அடையக்கூடிய தேர்ந்த வாசிப்பும் பயிற்சியும் அவசியம் எனக் கருதுகிறேன். ஆரம்பநிலை வாசகன் கதையில் ஏதாவது ஒரு இடத்தில் காணாமல் போகக்கூடும் அல்லது உள்ளே நுழைந்த வேகத்திற்கு சீ.முத்துசாமியின் வாக்கியங்களில் எங்காவது கரைந்து வெளியே வீசப்படவும்கூடும். ஒரு வாக்கியத்தை எளிமையாக்காமல் அடுத்த வாக்கியத்திற்கு நுழைய முடியாதபடிக்கு கதையின் ஆன்மாவும் அவரது சொற்களும் பிணைந்திருக்கும். ஒரு மரணத்தை முன்வைத்து அந்தப் பிரிவை ஆழ்மனக் குறிப்புகளாக ஒரு உளவியல் விவாதமாகக் கதைக்குள் அவர் நகர்த்தியிருக்கும் முயற்சி என்பது இன்னமும் அதிகமாக உணரப்படாத நவீன இலக்கியப்பிரதியின் தன்மைகள் என்றே அடையாளப்படுத்தலாம்.
தற்போது இலக்கியம் படித்து வரும் எல்லாம் மாணவர்களும் அவசியம் சீ.முத்துசாமியின் கதைகளை வாசித்திருக்க வேண்டும். மலேசிய இலக்கியத்தின் நவீன பாய்ச்சலை மூத்த படைப்பாளி முத்துசாமியின் கதைகளிலிருந்தும் அவரது மொழிநடை அடைந்திருக்கும் கவித்துவமான அடைவுநிலைகளிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம். வெளி சிறுகதை என்பது ஒரு நல்ல வாசகனுக்கு மிகவும் சவால் நிறைந்த கதையாகும். அதன் மொழியை நுகர்வதற்கு ஒருமுறையும், அதன் கருவை அடைவதற்கு ஒருமுறையும், அதன் சிக்கலும் முரணும் அழகியலும் நிரம்பிய வாக்கிய அமைப்புகளை புரிந்துகொள்வதற்கு ஒருமுறையும் என பலமுறை மீள்வாசிப்பு செய்ய வேண்டிய முக்கியமான கதையாகும்.
கதை என்பது ஒரு தீவிரமான மனப்பயிற்சியை வாசகனுக்கு அளித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். குறைந்தது வாசகனின் மனதைச் சலனப்படுத்தும் அளவிற்காவது வாழ்வு குறித்த அகப்பார்வை அந்தக் கதைக்குள் இருக்க வேண்டும். சீ.மு-வின் ‘வெளி’ சிறுகதை சலனப்பட்ட ஒரு மனதின் வழியாக மிகக் கரடுமுரடான அனுபவத்திற்குள் நம்மை நுழைக்கிறது. அந்த வாசிப்பு தரும் அனுபவத்தின் மூலம் மையக்கதைப்பாத்திரம் அடையும் அத்துனைவிதமான சலனத்தையும் கொந்தளிப்பையும் அடைந்து அந்தக் கதைக்குள்ளிருந்து மீள முடியாத ஒரு நிரந்தர இருப்பைப் பெற வைப்பதே சிறந்த கதை என நினைக்கிறேன். அப்படியொரு நிரந்தரமான இருப்பை அடைந்த என் வாசக மனதின் பதிவுகள்தான் இவை. சீ.மு-வின் சிக்கிக்கொண்ட வாசகன் அதிலிருந்து மீள முடியாததை ஒரு தடையாக எண்ண முடியாது. அந்தக் கணத்தில் மீள முடியாத பரிதவிப்பு என்பது அந்தப் படைப்பின் மூலம் அந்த வாசகன் அடையும் அனுபவம் ஆகும். பிறகொரு நாளில் அடுத்த இலக்கியப்பிரதிக்குள் அவன் தாவிச் செல்லக்கூடும். இது வாசகன் எதிர்க்கொள்ளும் மனமுதிர்ச்சி சார்ந்தவை.
-தொடரும்-
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
No comments:
Post a Comment