நகரத்தில் எப்பொழுதும் ஆங்காங்கே பல தொடர் அல்லது தொடர்பற்ற நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்காததைப் போலத் தோன்றினாலும் நகரம் என்கிற மையம் அனைத்தையும் இணைத்து வைத்திருக்கின்றது. நகரத்தின் மீது நீங்காது சில கனவுகள் வெயில் போல எரிந்தபடியே பரபரப்பிற்கு மத்தியில் படிந்திருக்கின்றன. கட்டற்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளில் சிலவற்றைத் தொகுக்கும்போது சில மனிதர்களும் சில நிகழ்வுகளும் தற்செயலாகச் சிக்கிக் கொள்கின்றன.
நிதானமின்றி ஒருவர் மீது ஒருவர் அவசரத்தையும் வெறுப்பையும் தூக்கி வீசிக் கொண்டு பரபரத்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எங்காவது ஓர் இடத்தில் இதற்கெல்லாம் தொடர்பே இல்லாமல் ஒரு கிழவர் அமர்ந்திருக்கக்கூடும். அவர்தான் நகரம் இழந்துவிட்டிருக்கும் அமைதியின் கடைசித் தூதர்போல எல்லாவற்றையும் அசைபோட்டுக் கொண்டு உட்காந்திருப்பார். அவர் யார்? அவர் யாரை அல்லது எதை அப்படிக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற கேள்வி எழ வாய்ப்புண்டு.
இதுபோல ஒரு மதியத்தில் நான் அத்தகைய ஒரு கிழவரை நகரத்தில் சந்திக்க நேர்ந்தது. முன்பு ஒருமுறை இதே கிழவரைத்தான் சம்சு கடையிலிருந்து துரட்டப்படுவதையும் அவர் படியிலிருந்து இடறிச் சாலையில் விழுவதையும் பார்த்திருக்கிறேன். எல்லாரையும் போல அதைக் கணநேர வேடிக்கையாகக் கடந்து போய்விட்டேன். இன்று மீண்டும் அதைவிட மோசமான தோற்றத்துடன் ஆப்போய் காய்க்கறி கடையில் மூலையில் அமர்ந்திருக்கக் கண்டேன். பலநெடுங்காலத்தின் சோர்வு அவர் முகத்தில் ஒட்டியிருந்தது. உடலைச் சுத்தப்படுத்திக்கொள்ளாமல் குறைந்தது இரண்டு மாதம் அவர் இந்த நகரத்தில் சுற்றி அலைந்திருக்க வேண்டும்.
“தாத்தா வீட்டுக்குப் போலையா?” எனக் கேட்டு வைத்தேன். எப்பொழுதாவதுதான் எனக்கு இதுபோன்ற கேள்விகளைக் கேட்க வேண்டும் எனத் தோன்றும். மற்ற நேரங்களில் நான் நகரத்தில் இருக்கும்போது வாடிக்கையான வசனங்களைத் தவிர யாரிடமும் பேசுவது கிடையாது. அந்தக் கிழவருக்கு இந்தக் கேள்வி மிகப்பெரிய ஆன்மீக சொற்பொழிவு போல ஆகிவிட்டிருக்கும் போல. என்னைக் கடுமையாகப் பார்த்துவிட்டு, பிறகு உடனடியாக முகப்பாவனையை மாற்றிக் கொண்டு மிகவும் கவனமாக அடுத்த கேள்விக்காகக் காத்திருந்தார். நானும் ஒரு சாமியார் போல நிதானமாகச் சிரித்துவிட்டு, “வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க, நான் விட்டுட்டுப் போறேன்”. மனிதர்களைக் கொண்டு போய் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் இலக்கில் சேர்க்க வேண்டும் என்கிற கடமை உணர்வும் அவசரமும் தேவையும் சாமியார்களுக்குத்தானே அதிகமாக இருக்கிறது.
என்ன ஓர் ஆச்சர்யம்? அவருடைய முதல் சொல்லிலேயே என்னைச் சாமியாராக்கிவிட்டார். “சாமி. .ஒரு வெள்ளி கொடு. போதும்” என்றார் இலேசான புன்னகையுடன். இப்படியொரு தொனியில் பெயரில் நான் அழைக்கப்படுவது அதுதான் முதல்முறை, எந்தக் காவி உடையையும் அணியாமல், மந்திரங்கள் சொல்லிச் சிரமப்படாமல், குருவிடம் அடைக்கலம் பெற்று நம்பிக்கைகளை உருவாக்காமல், மிகவும் எளிமையாக நான் சாமியாராகி நின்றிருந்தேன். “சாமி. . ஒரு வெள்ளி கொடுத்தா போதும். சாப்படனும்” என மீண்டும் அவரது வேண்டுதலை ஞாபகப்படுத்தினார். அவர் ஐய்யப்பன் பக்தராக இருந்திருக்கக்கூடும் என நானே அனுமானித்துக்கொண்டேன். உடனே என்னால் அவர் கேட்கும் பணத்தை எடுத்துக் கொடுக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்வதில் நமக்குத் தேர்ச்சியும் கவனமும் இருக்க வேண்டும் இல்லையென்றால் அது பயனளிக்காமல் போய்விடும் என அம்மா அடிக்கடி சொல்வது என் பின்மண்டையில் தட்டி யாரோ நினைவுறுத்துவது போல இருக்கும்.
“நானே சாப்பாடு வாங்கித் தரட்டா தாத்தா? வாங்க” எனக் கூறிவிட்டு மோட்டாரின் பின் இருக்கையைப் பார்த்தேன். அவர் மீண்டும் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தார். நான் அவருக்கு ஒரு வெள்ளியைக் கொடுக்க மாட்டேன் என்கிற முடிவுக்கு வந்தவர் சட்டென, “பரவாலே சாமி. காலைலே முருகன் கண்ணெ குத்திட்டார்” எனச் சொல்லிவிட்டு நடக்கத் துவங்கினார். குற்ற உணர்ச்சி மேலோங்கியதை தடுக்க முடியாமல் பதற்றத்துக்குள்ளானேன். உடனே மோட்டாரைவிட்டு இறங்கி பெரிய சாலையைக் கடப்பதற்குள் அந்தக் கிழவர் காணாமல் போயிருந்தார். அவ்வளவு சீக்கிரம் இந்தப் பரப்பரப்பில் ஒரு மனிதன் காணாமல் போவதென்பது நிச்சயமாக அதிசயமான நிகழ்வு கிடையாதுதான்.
சற்று முன்பு சாமியாராக இருந்த நான் வெறும் ஆசாமியாகிவிட்ட ஓர் உணர்வுடன் அங்கிருந்து கிளம்பினேன். இதே நகரத்தில் ஒவ்வொரு பகுதிகளாக நான் பார்த்த சில கிழவர்கள் வரிசைகட்டிக் கொண்டு என் நினைவில் தோன்றியபடியே இருந்தார்கள். எத்தனை கிழவர்களுக்கு இந்த நகரம் தனிமையை வழங்கியிருக்கிறது என யோசித்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. பழைய பாடல்களைப் பாடிக்கொண்டு தனது முந்தைய துயரங்களையும் வாழ்வின் தோல்விகளையும் மறப்பதற்குத் தன்னை ஒரு கோமாளியைப் போலக் காட்டிக் கொள்ளும் கிழவர்கள் அநேகமான பலரைச் சந்தித்ததுண்டு.
கோவில் வாசலில் போவோர் வருவோரிடம் பழைய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டு பணம் பெறும் முயற்சியில் தன்னை நாள்முழுவதும் ஒரு நம்பிக்கையின் பிடியில் அர்ப்பணித்துவிட்டு நின்றிருக்கும் கிழவர் ஒருவரின் ஞாபகம் ஏற்பட்டது. “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” எனும் பாடலில் தொடங்கித் திடீரென மார்க்சியம் பேசும் அளவிற்கு எம்.ஜி.ஆரின் பழைய தத்துவப்பாடல்களையும் பாடிக்காட்டுவார். “உழைக்கும் கரங்களே உருவாக்கும் கரங்களே. . .” சில இடங்களில் தவறான பாடல் வரிகள் வந்து விழும். ஆனால் அதற்குப் பதிலாக அவர் சில வரிகளை வைத்திருப்பார். அந்த வரிகள் அந்தக் கிழவரின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். எத்தனை நிதர்சனம்?
மாலையில் கோவில் நடையைச் சாத்தும்போது அவருக்குச் சொற்பமான சில்லறைகளே கிடைத்திருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் நான் அதைப் பார்த்ததுண்டு. எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு அவர் நேராக சம்சு கடைக்கு முன் போய் நிற்பார். மிக விலை குறைவான மதுவை உடல் முழுக்கப் பரவவிட்டுத் தன் மனதின் ஏதோ ஒரு துயரத்தைச் செயலிழக்கச் செய்துவிட்டுச் சாலையில் கிடைக்கும் இடத்தில் தன்னுடைய அன்றைய நாளை முடித்துக் கொள்வார். அவருடைய ஒட்டு மொத்த தினசரியே இவ்வளவுதான்.நகரம் பரபரத்துக் கொண்டிருப்பதைப் பற்றியோ மனிதர்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் பற்றியோ அவருக்குக் கவலை இருந்ததில்லை. அவருக்கு வேண்டியது இந்த வாழ்வு அவருக்களித்த துயரத்தை மறப்பதற்குச் சில சில்லறைகள் மட்டுமே. யாரோ ஒரு சிலர் அவருக்கு உண்டாக்கிய இந்த நிலைக்காக யார் யாரோ பணம் கொடுத்துப் புண்ணியத்தைத் தேடிக்கொள்வதாகப் பட்டது. அதன் பிறகு நகரத்தின் தனிமையில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் கிழவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பயமாக இருக்கும். நமது எதிர்க்காலத்தின் தற்சமயக் குறியீடுகளாக அவர்கள் இருக்கக்கூடுமோ என நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டவர்களா அல்லது அவர்கள் நகரத்தைத் தன்னிடமிருந்து துண்டித்துவிட்டுத் தன் நினைவுகளைப் பழைய வாழ்வின் அடுக்குகளிலேயே நிலைக்கச் செய்துவிட்டு, நடந்துகொண்டிருக்கிறார்களா?
கே.பாலமுருகன்
மலேசியா
கே.பாலமுருகன்
மலேசியா
2 comments:
// நகரத்தின் தனிமையில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் கிழவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பயமாக இருக்கும். நமது எதிர்க்காலத்தின் தற்சமயக் குறியீடுகளாக அவர்கள் இருக்கக்கூடுமோ என நினைக்கத் தோன்றுகிறது.//
நிதர்சனமான உண்மை தான் அண்ணா. சமீபமாக தான் உங்களை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
//அவர்கள் நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டவர்களா அல்லது அவர்கள் நகரத்தைத் தன்னிடமிருந்து துண்டித்துவிட்டுத் தன் நினைவுகளைப் பழைய வாழ்வின் அடுக்குகளிலேயே நிலைக்கச் செய்துவிட்டு, நடந்துகொண்டிருக்கிறார்களா?//
நின்று நிதானித்து சிந்திக்க வைக்கின்ற கேள்வி.
Post a Comment