அன்று மதியம் எழுத்தாளர் தேவராஜனிடமிருந்து அழைப்பு வந்தது. பினாங்கு மாநிலத்திற்கு பணித்தொடர்பான சந்திப்புக்காக அவர், பச்சைபாலன், மூர்த்தி(மலேசியத் தேர்வு வாரிய அதிகாரி) அவர்களும் அங்கு வந்திருப்பதாகக் கூறினார். உடனே அவர்களைச் சந்தித்து உரையாடலாம் என முடிவெடுத்துவிட்டு, மாலையே பினாங்கிற்குக் கிளம்பினேன். மூர்த்தி எப்பொழுதும் ஒரு சமக்காலப் பிரச்சனையின் மீதான ஆழமான புரிதலையும் புதிய சிந்தனையையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிந்தனையாளர். அவருடன் செலவழிக்கப்படும் ஒவ்வொரு கணமும் படைப்பாளிகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் எனக்கு எப்பொழுதும் நம்பிக்கை உண்டு.
கடந்த வருடம் நண்பர் குணசீலன் அவர்களின் மூலமே மூர்த்தி அவர்களுடன் நட்பு ஏற்பட்டிருந்தது. தொலைப்பேசியின் வாயிலாக உரையாடும்போதே ஒருவித நம்பிக்கை உருவாகும் வகையில் மிகவும் உற்சாகமாகப் பேசினார். இந்த நாட்டில் எஸ்.பி.எம் மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுப்பதற்காகப் போராடியவர்களில் மூர்த்தி மிக முக்கியமானவர். தமிழ் இலக்கியம் சார்ந்த விழிப்புணர்வு அவரிடம் கூடுதலாகவே இருந்தது. தொடர்ந்து படைப்பாளர்களைச் சந்தித்து அவர்களின் சிந்தனைகளை முடுக்கிவிடுவதில் ஆர்வமாக இயங்கக்கூடியவர். கடந்தமுறை அவருடன் ஏற்பட்ட சந்திப்பு சிறுவர் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் கவனத்தையும் உருவாக்கியது. மலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை என்கிற கருத்தை அவருடனான சந்திப்பிற்குப் பிறகே என்னால் எழுத முடிந்தது. இங்கு சிறுவர்கள் பற்றிய கதையைப் பெரியவர்கள் வாசித்துத் துய்ப்பதற்காகவே படைக்கப்படுவதை எப்பொழுதும் பல உதாரணங்களுடன் சொல்லிக்கொண்டிருப்பார் நண்பர் மூர்த்தி.
சந்திப்பின் இறுதி நாளில், படைப்பாளி என்கிற முறையில் சிறுவர் இலக்கியத்தின் மீது கவனம் செலுத்தி அவர்களைக் கதைநாயகர்களாக அவர்களை வெற்றியாளர்களாகக் காட்டும் கதைகளை எழுதுங்கள் எனச் சொல்லி அனுப்பி வைத்தார். இன்றும் ஒரு நல்ல சிறுவர் கதை எழுதப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். சிறுவனின் மனநிலைக்குத் தாவி அவனுடைய கதையாக அதை எழுதுவதற்கு ஓர் ஆரோக்கியமான மனநோய் உண்டாக வேண்டி, காத்திருக்கிறேன்.
அடுத்ததாக பச்சைபாலன். எப்பொழுதும் நட்புடன் பழகக்கூடிய நல்ல நண்பர். வயது வித்தியாசம் இல்லாமல் அன்பாக நெருங்கிப் பழகுவதில் பச்சைபாலன் அனைவரையும் கவர்ந்தவர் என்றே சொல்லலாம். மலேசிய இலக்கியத்தின் அடுத்தக்கட்ட நகர்வின் மீது அவருக்கு எப்பொழுதும் ஒரு வியப்பும் ஆச்சர்யமும் இருக்கிறது. அதனூடே தன்னையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞையும் அவரிடம் காணப்படுகிறது. மலேசியாவில் ஒரு தரமான ஐக்கூ எழுதப்படுகிறதா என்பதில் எனக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகமுண்டு. மேலும் நம் நாட்டின் சூழலுக்கு இங்குள்ள வாழ்வைச் சொல்லிச் செல்ல ஐக்கூ போன்ற இலக்கிய வடிவம் தேவையா என்பதிலும் எனக்குக் கேள்விகள் உள்ளன. மலேசியாவில் ஒரு ஐக்கூ கவிஞனாவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருப்பவர்களாக பச்சைபாலனையும் தேவராஜனையும் அடையாளம் காட்டலாம். குறைந்தபட்சம் இருவரும் அதிகமான ஐக்கூ கவிதைகள் எழுதுவதில் தொடர்ந்து பல வருடங்களாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேவராஜன் சமக்காலத்தில் இலக்கியத்தில் அதிகம் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர். இதுவரை 600க்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதியிருப்பதையே என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. விசித்திரமான திறமைகளும் மலேசிய கவிதை இலக்கியத்தைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என ஆர்வமும் நிரம்பியவர். அதற்கேற்ப மௌனம் என்கிற கவிதை இதழையும் நடத்தி வருகிறார். ஓரளவிற்கேனும் கவிதை சார்ந்து ஒரு நல்ல உரையாடலை மௌனம் தொடக்கி வைத்திருக்கிறது. இது இன்னும் தீவிரமாக சமரசங்கள் இன்றி நகர்த்தப்பட வேண்டும் என்பதையே நானும் ம.நவீனும் தொடர்ந்து அவரிடம் சொல்லி வருகிறோம்.
அவர்களைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்த நேரம் கடந்து கொண்டிருந்தது. மைவியில் பயணிப்பது அத்துனை சௌகரியமாக இருப்பதில்லை. மூர்த்தி சொன்ன அந்த தஞ்சோங் பூங்கா பகுதியைத் தேடிக் கண்டறிய முடியாமல் திரும்ப திரும்ப பினாங்கு நகரம் என்னைத் தொடங்கிய இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது. பலமுறை பினாங்கிற்குச் சென்று வந்திருந்தாலும் அல்லது கொண்டாட்டங்களுக்காக ஒவ்வொருமுறையும் பலவகைகளில் நான் நண்பர்களுடன் அதிகாலை வரை சுற்றித் திரிந்திருந்தாலும், பினாங்கு மட்டும் புரிந்துகொள்வதற்குரிய அத்துனைச் சிக்கலையும் கொண்டிருக்கிறது. விசித்திரிமான பாதை அமைப்பும் ஒருவழிப் பாதை கொடுக்கும் மயக்கமும் அங்குப் பயணிப்பவனுக்கான சவால். இதையெல்லாம் கடந்து பினாங்கில் துல்லியமாக ஓர் இடத்தைக் கண்டறிவதென்றால் அது தற்செயலாகப் பற்பல முயற்சிகளுக்குப் பிறகு நடக்கக்கூடியதாகத்தான் அமைகிறது. நண்பரின் அக்காவைத் தொடர்புக் கொண்டு தஞ்சோங் பூங்காவிற்குச் செல்வதற்குப் பாதையைக் கேட்டேன். அன்றாடம் வேலைக்காகப் பினாங்கு சென்று வரும்( 6 வருடமாக) அவர் 4 முறைக்குப் பிறகே சரியான பாதையைச் சொல்ல முடிந்தது.
அரைமணி நேரம் வேட்டைக்குப் பிறகு தங்கும் விடுதிக்கு வெளியிலுள்ள பெரிய சாலையின் ஓரமாக டீ சட்டை அணிந்துகொண்டு இரு இளைஞர்கள் வெளியே நிற்பதைப் பார்த்தேன். இன்று மலேசியாவின் எழுத்துலகில் இன்னமும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தேவராஜனும் பச்சைபாலனும் எனக்காகக் காத்திருந்தார்கள். இருவரும் ஒரு காலத்து எழுத்தாளர்கள். கல்வித் துறையிலும் அடிக்கடி சந்திப்புக்கூட்டங்களில் சந்தித்துக் கொள்கிறார்கள். காரை ஓர் இடத்தில் போட்டுவிட்டு கீழே இறங்கியதும் பச்சைபாலன் வழக்கமான தன் புன்னகையுடன் வரவேற்றார்.
- தொடரும்
கே.பாலமுருகன்
6 comments:
நண்பரே...உங்களின் தளத்தில் follower gedget சேர்க்கலாமே...
சுவையான கட்டுரையின் தொடக்கம் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.
ரஹீம்: அந்த follower gadget ஏற்கனவே இருக்கிறது. ஆனால் என்னவோ தெரிவதில்லை. ஒவ்வொருமுறையும் திறக்கும்போது அது இருந்த இடம் காலியாக இருக்கிறது. முன்பு சேர்ந்த 99 நண்பர்களைத் தவிர அதன் பிறகு யாரும் சேரவில்லை. என்ன பிரச்சனையாக இருக்கும்? virus??
தேவராஜன்: இனிமேல்தான் அடுத்த தொடர். காத்திருங்கள். மேலும் வாசியுங்கள்.
சுவையான கட்டுரையின் தொடக்கம் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.
P.M.Murthy
நம்மைக் கடந்துபோகும் கணங்களைப் பதிவு செய்யும்
உங்களின் ஆர்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியது.
நாம் சந்தித்துப் பேசிய தருணங்கள் என்றுமே
நம் நினைவுப் பிடியிலிருந்து நழுவி விடாமல்
அவற்றைச் சாசுவதமாக்கும் முனைப்பு ஒவ்வொருவரும்
பின்பற்றுதலுக்குரியது.
நம் நாட்டின் சூழலுக்கு இங்குள்ள வாழ்வைச் சொல்லிச்
செல்ல ஹைக்கூ போன்ற இலக்கிய வடிவம் தேவையா
எனக் கேட்கிறீர்கள். இது குறித்துத் தனி கட்டுரையே
எழுதலாம்.
தேவை என்றே நான் நினைக்கிறேன். இயற்கைக்கு மீளல்,
எளிய உயிர்களுக்கு இரங்கல் என ஜப்பானிய ஹைக்கூவின் தன்மைகள்
இருந்தாலும் மலேசியாவில் எழுதப்படும் ஹக்கூக்கள் நம் வலியை,
வாழ்க்கையை, இடர்களைப் பதிவு செய்வதில் முனைப்பு காட்டியிருப்பதை
என்னால் சான்றுகளோடு நிறுவமுடியும்.
மரபுக் கவிதை, நவீன கவிதைபோல் ஹைக்கூவும் ஒரு வடிவம்தானே! வடிவம் கைவரப்பெற்றால் நம் சிந்தனைகளை அதற்குள் பதிவுசெய்வதில் தடையேது?
நீட்டி முழக்க இந்த வடிவத்தில் வாய்ப்பில்லை. அதிகமாகவே அடக்கி வாசிக்க
வேண்டியுள்ளது. அதனால்தான் பலர் ஹைக்கூ பக்கம் வருவதில்லை.
சான்றுக்கு இதோ சில ஹைக்கூக்கள்.
சாதி மாநாட்டு மலரில்
சிரித்தபடி
நம் தலைவர்கள்
உடைபட்ட தோட்ட லயன்
தனியாய் நிற்கிறது
எங்கள் தென்னை மரம்
தைப்பூச உண்டியல்
ஏக்கமாய்ப் பார்க்கும்
ஏழைச்சிறுமி
என் மாணவர்க்குக் காட்டினேன்
வண்ணப் படங்களில் வரிசையாய்
தமிழர் பிணங்கள்
பட்டணத்தில் மழை
எதிர்பார்த்து ஏமாந்தேன்
தவளைகளின் பாடல்
கவிதைக்கான தேவை இந்தச் சமூகத்தில் தீர்ந்துபோகாதவரை எந்த வடிவத்திலும் கருத்துகளை முன் வைக்கலாம். ஆற்றலுள்ள படைப்பு நிலைக்கும். மற்றவை இயற்கை மரணம் எய்தும்.
ஹைக்கூ பக்கம் மீண்டும் என் ஆர்வம் அரும்பும் போலிருக்கிறது. சிந்தனையைக் கிளறியதற்கு நன்றி பாலமுருகன்.
www.patchaibalan.blogspot.com
Post a Comment