Thursday, March 31, 2011

அம்பு விடுதலும் வில் வித்தையும்- அன்பரசி சுப்ரமணியம் மலேசிய ஆளுமை


(Legend of archery-Ms.Anbarasi Subramaniam)

கடந்த 4 நாட்கள் அம்பு விடுதல் விளையாட்டிற்கான பயிற்றுனர் பயிற்சி பட்டறைக்குச் சென்றிருந்தேன்(archery coaching training). இந்த விளையாட்டைப் பற்றி தெரிந்துகொண்டு நம் இந்திய மாணவர்களைப் பயிற்றுவிக்கலாம் எனும் எண்ணம் உருவாகியபோதே இதுவரை அறிந்திராத இந்த விளையாட்டின் மீது விருப்பமும் ஆர்வமும் கூடியிருந்தது. பெரும்பாலும் இந்தியர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பதில்லை அல்லது ஓட்டப்பந்தயமும் காற்பந்தையும் தவிர வெவ்வேறு விளையாட்டுகளில் இந்திய இளைஞர்கள் பங்கெடுப்பதில்லை எனவும் ஒரு பரவலான விமர்சனம் உண்டு. குறிப்பாக விளையாட்டுத் துறையில் இந்தியப் பெண்களின் அடைவும் பங்களிப்பும் என்ன? என்பதையே ஆழமாகச் சிந்திக்கக்கூடிய கேள்வியாகும்.

மலேசிய அம்பு விடுதல் கழகத்தின் முதண்மை பயிற்றுனரான திரு.புவனேஸ்வரன் அவர்களைக் கடந்த வாரங்களில் சந்தித்தப்போது அவரும் இப்படியொரு விமர்சனத்தையுடையவராகவே இருந்தார். நம் இந்திய மாணவர்களுக்கு இந்த விளையாட்டில் நல்ல எதிர்காலம் உண்டு எனவும் இதை அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நாம்தான் நமது ஈடுப்பாட்டையும் அக்கறையையும் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மலேசியாவிலேயே அம்பு விடுதல் விளையாட்டிற்கான முதண்மை பயிற்றுனராக பல நாடுகளுக்குச் சென்று தன் திறமையையும் வழிக்காட்டுதலையும் வழங்கி வரும் திரு.புவனேஸ்வரன் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். அவரின் மூலமே எனக்கு அம்பு விடுதல் விளையாட்டும் மலேசியாவைப் பிரதிநிதித்து பல நாடுகளில் தன் ஆளுமையை வெளிப்படுத்திய அன்பரசி சுப்ரமணியம் எனும் விளையாட்டாளரின் அறிமுகமும் கிடைத்தது. பெண்கள் ஒரு வயதுடன் தன்னை விளையாட்டுக் களத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்தச் சமூகம் அவர்களை ஓரங்கட்டிவிடுகிறது. அதனையெல்லாம் மீறி அன்பரசி இன்று வெளிப்பட்டுள்ளார் என்பதே பெரும்சாதனையாகக் கருத வாய்ப்பளிக்கிறது.

குமாரி அன்பரசி சுப்ரமணியம் அம்பு விடுதல் விளையாட்டில் நம் நாட்டைப் பிரதிநிதித்து பல வெற்றிகளைக் குவித்தவர். கடந்த 4 நாட்களாகப் பயிற்சி பட்டறையில் எங்களுடன் மிகவும் நட்புடன் பழகினார். புகழ்பெற்ற ஒரு விளையாட்டாளருடன் பழகியது இதுவே முதல் அனுபவம். அவருக்கு அம்பு விளையாட்டில் அதீதமான பயிற்சியும் அபாரமான ஆளுமையும் இருப்பதை இந்த 4 நாட்களில் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த விளையாட்டைப் பற்றிய முழுமையான தகவல்களை அவ்வப்போது எங்களுடன் பகிர்ந்துகொண்டே இருந்தார், வில்லைப் பிடிப்பது முதல் குறிப்பார்ப்பதில் நம் உடலுக்கும் நம் சிந்தனைக்கும் மத்தியில் நுட்பமாக இருக்க வேண்டிய தொடர்பைப் பற்றிய கற்பிதம்வரை அவரின் தகவல் பரிமாற்றம் மேலும் இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரித்திருந்தது.

அன்பரசி சுப்ரமணியம் 1983 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் பிறந்து கிள்ளானில் வளர்ந்தவர். இடைநிலைப்பள்ளியான ராஜா மஹாதி கிள்ளான்(SMK RAJA MAHADI- KLANG) பள்ளியில் அம்பு விடும் விளையாட்டில் பயிற்சி பெறத் துவங்கினார். அம்பு விடுதல் விளையாட்டின் மலேசியக் குழுவில் 10 வருடங்கள் நாட்டைப் பிரதிநிதித்து விளையாடி, தங்கம், வெள்ளி எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு மலேசியக் குழுவிலிருந்து வெளியேறி இப்பொழுது பயிற்றுனராகப் பயிற்சிப் பெற்று நம் அடுத்த தலைமுறைக்கு இந்த விளையாட்டைச் சேர்ப்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டுள்ளார். 

அன்பரசி அடைந்த சாதனைகள் பின்வருமாறு:

1.   சுக்மா விளையாட்டு(SUKMA): 2000, 2002,2004 (தங்கம், வெள்ளி)
2.   சீ விளையாட்டு ( Sea games) : 2001, 2003, 2006, 2007, 2009( Gold and silver)
3.   ஆசியான் விளையாட்டு ( Asean Games): 2002, 2006
4.   காமன்வெல்த் விளையாட்டு(Commonwealth games) : 2010 ( 4th place)

அன்பரசியின் சாதனை இன்னும் நீளக்கூடிய ஆற்றலுடையது. தொடர்ந்து விளையாட்டின் மூலமே தன்னை வளர்த்துக்கொண்டவர். 2000 ஆண்டு தொடக்கம் இந்த விளையாட்டின் மூலம் தனது கல்வி தகுதியையும் அவர் மேம்படுத்திக் கொண்டது சிறந்த உதாரணமாகும். Kementerian Belia & Sukan ( விளையாட்டும் இளைஞர்களும் மேம்பாட்டு அமைச்சின்) மூலம் கல்வி கடனுதவிப் பெற்று தனது மேற்கல்வியை மலேசிய பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறார். விளையாட்டின் மூலம் நாம் பெறும் அடையாளமும் வெற்றியும் நம்மை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான அனைத்து சாத்தியங்களையும் அளிக்கும் என்பதற்கு அன்பரசி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அம்பு விடும் விளையாட்டுத் தளவாடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் அன்பரசி, மலேசியாவின் மிகச் சிறந்த பயிற்றுனராக வேண்டும் என்பதே அவருடைய உயர்ந்த இலட்சியமாகக் கொண்டிருக்கிறார். வில்லைப் பிடித்து அவர் உயர்த்தும்போது அவருடைய உடல் கொள்ளும் அசாத்தியமான அமைப்பும், அவருடைய கண்கள் இலக்கை நோக்கிக் குறிப்பார்க்கும்போது ஏற்படும் தீவிரமான கவனமும் அவருடைய ஆற்றலைத் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருந்தன.

அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்:

1.   இந்த விளையாட்டை எப்படி உணர்கிறீர்கள்?

அன்பரசி: இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது இந்த அம்பு விடும் விளையாட்டின்மீது திடீரெனத்தான் ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய உயரமும்கூட இந்த விளையாட்டிற்கு ஏற்புடைய ஒரு கூடுதல் பலமாக இருந்தது. தொடர்ந்து பயிற்சிப் பெறுவதன் மூலமும் எப்படியாவது இந்த விளையாட்டில் சாதித்துக்காட்ட வேண்டும் என்கிற தீவிர உழைப்பும் என்னைச் சாதனையாளராக்கியது. வில் வித்தை நம்முடைய பாரம்பரியமான தற்காப்புக் கலை. ஆகையால் இதில் ஓர் ஆர்வமும் விருப்பமும் தோன்றியதை முந்தைய தலைமுறையின் பதிவுகளாகக்கூட இருக்கலாம் என நம்புகிறேன்.

மேலும் பெரும்பாலும் இந்தியர்கள் வித்தியாசமான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆகையால் என்னுடைய பங்கெடுப்பின் மூலம் இதனை மலேசியாவிற்கு உணர்த்த வேண்டும் என்றே கருதுகிறேன். ஒரு விளையாட்டு நம்மை எங்குக் கொண்டு செல்லும் என்பதை கண்கூடாகப் பார்த்தபோது இதிலேயே என்னை ஐக்கியமாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் தோன்றியது.

2.   மலேசியக் குழுவிலிருந்து ஏன் வெளியேறினீர்கள்?

ஒவ்வொரு விளையாட்டாளனும் தன் அடைவுநிலையை வைத்தே மதிப்பிடப்படுகிறான். அவனுடைய இருப்பு என்பது ஒரு காலக்கட்டம்வரை அவனை உச்சத்தில் வைத்திருக்கும். எனக்கும் இந்த 10 ஆண்டுகள் மலேசியக் குழுவில் ஒரு சாதனையாளராகப் பங்காற்ற வாய்ப்புக் கொடுத்திருந்தது. தொடர்ந்து என் திறமையின் அளவுகோல்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சர்வதேசக் களத்தை ஏற்படுத்திக்கொடுத்திருந்தது. ஆனால் அதே சமயம் தொடர்ந்து நம்மால் மலேசியக் குழுவில் நிலைத்திருப்பதில் சில அதிகாரப்பூர்மற்ற கட்டுபாடுகளின் பாதிப்பும் இருக்கின்றது. ஒரு சில விளையாட்டுகளில் சில வயது வரையறை இருக்கின்றது. அதற்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும்.

ஒரு சில சமயங்களில் நம்முடைய தொடர் அடைவுநிலைகள் தீவிரமாகக் கண்கானிக்கப்பட்டு வரும். சர்வதேச அளவிலான போட்டிகளில் நாம் அடையும் சரிவும் தோல்வியும்கூட நம் இருப்பைப் பலவீனப்படுத்தக்கூடிய நிலைகள் உண்டு. இது ஒரு விளையாட்டாளனின் வகுப்படாத எல்லை. எதுவரை தன்னை ஒரு விளையாட்டாளனாகவும் எதுவரை தன்னை அடுத்தக்கட்டத்திற்கு அடுத்த பரிணாமத்திற்கு மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெளிவாகத் தெரிந்திருந்தால் எதையுமே நாம் தோல்வி எனவோ எல்லது சரிவு எனவோ எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. ஆகையால் 2011 ஆம் ஆண்டில் ஜனவரியில் நான் மலேசியக் குழுவிலிருந்து வெளியேறுவதற்கு என்னை நானே மதிப்பிட்டுக் கொண்டதன் மூலம் பெற்ற ஒரு தீர்க்கமான முடிவே ஆகும்.

கடந்த வருடம் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியே அன்பரசி இறுதியாகப் பங்கெடுத்து நான்காம் நிலையைப் பெற்ற களமாகும். இனி அவர் சென்ற உச்சத்தை நோக்கி இந்திய மாணவர்களைக் கொண்டு செல்வேன் என உற்சாகமாகச் சொல்கிறார். வில்லும் அம்பும் அவரின் கூர்மையான கவனமும் பிரமிக்க வைக்கிறது. Anbarasi is more powerful legend of Malaysia in Archery.

கே.பாலமுருகன்- k.balamurugan
மலேசியா

2 comments:

Tamilvanan said...

விளையாட்டு க‌ள‌த்தில் இருந்து ஒரு விழிப்புண‌ர்வு க‌ட்டுரை.மேலும் ப‌ல‌ இளைய‌ இந்திய‌ மாண‌வ‌ மாண‌விக‌ள் துணிச்ச‌லாக‌ இந்த‌ விளையாட்டில் ப‌ங்கேற்க‌ உறுதுணையாக‌ இருக்கும்.வாழ்த்துக்க‌ள்.

AnGel said...

intha katurai palarukku valikaathuthalage amayum endru nambugiren. vaalthugal sir