Saturday, April 2, 2011

பினாங்கு நகரின் மாலையில்-3 (கௌதம் மேனனின் ‘நடுநிசி நாய்களும்’ ஜெயகாந்தனும்)


நான், தேவராஜன், பச்சைப்பாலன், மூர்த்தி அவர்களும் உரையாடிக்கொண்டே அருமாகையிலுள்ள உணவகத்திற்குச் சென்றோம். எல்லோரும் உணவருந்தும்போது கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த “நடுநிசி நாய்கள்” படம் குறித்த உரையாடல் தொடங்கியது. சமீபத்தில் முகநூலில் அப்படம் குறித்து சிறிய விமர்சனம் செய்திருந்ததைப் படித்துவிட்டு எழுத்தாளர் பச்சைபாலன் தனியாகச் சென்று அப்படத்தைப் பார்த்து வந்தார். கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் படத்தை எந்தச் சலனமும் பதற்றமும் இல்லாமல் பார்க்கக்கூடிய ஒரு பார்வையாளன் இங்கு இல்லை என்பதுதான் பலவீனமே தவிர படமல்ல எனச் சொன்னேன். 15 ஆண்டுகளுக்கு முன் ஜெயகாந்தன் எழுதி தமிழில் அபாரமான சமூக ஒழுக்க நியதிகளுக்கு எதிரான பாய்ச்சலை ஏற்படுத்திய குறுநாவலான ரிஷி மூலத்தை இந்தப் படம் அடிக்கோடிட்டு ஞாபகப்படுத்துகிறது.

ஜெயகாந்தன் எழுதிய ரிஷி மூலம் என்ன கதை? தன் அம்மாவின் நிர்வாணத்தைப் பார்த்துவிட்ட பிறகு இறுக்கமான ஒழுக்கம் என்பதன் மீதான அசைக்க முடியாத கற்பிதங்களைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் எப்படி அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல தன்னைச் சிதைத்துக்கொள்கிறான் என்பதையே கதையாக வடிக்கப்பட்டிருக்கும். இறுதியில் வீட்டைவிட்டு ஓடிப்போய் தனக்குள் கரைந்து காணாமல் போகும் ஒரு வெறுமையான மனநிலையை அடைகிறான். அங்கே சுடுக்காட்டில் எரியும் ஒவ்வொரு பிணமும் நான் தான் என நினைத்து தன்னையும் தனக்குள் எரியும் காமத்தீயையும் குற்ற உணர்ச்சியையும் மெல்ல சாகடிக்கிறான்.

கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் அப்படியான ஒரு சமூக ஒழுக்கத்திற்கு எதிராகச் செயல்படும் உளவியல் பாதிப்பைப் பற்றிய ஒரு கதை அமைப்பு. சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு சிறுவனின் மன அமைப்பு எப்படிச் சிதைக்கப்பட்டு, பிறகு இந்தச் சமூகம் விதித்து வைத்திருக்கும் ஒழுக்க விதிகளை எப்படி உடைத்து வெளிப்படுகிறது என்பதைத்தான் கௌதம் துணிச்சலாக அம்பலப்படுத்தியுள்ளார். மனைவியுடன் திருப்தியடையாமல் பாலியல் தொழிலாளிகளிடம் செல்லும் ஒரு குடும்பத் தலைவனின் பாலியல் ஒழுக்க மீறல்களையே சங்கக் காலம் தொட்டு பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சமூகத்திடம் பாலியல் கொடுமைகளின் அடுத்த நிலையை அழுத்தமாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் கௌதமிற்கு இருந்துள்ளது. Incest எனச் சொல்லக்கூடிய குடும்பப் பாலியல் தொடர்பு முதல் group sex எனும் கூட்டுப் பாலியல் வரை இன்றைய நவீன சமூகம் அடைந்திருக்கும் எல்லையை முதன்முதலாகத் தமிழ் சினிமாவில் காட்டியிருக்கும் இயக்குனருக்குப் பாராட்டைத்தான் தெரிவிக்க வேண்டும்.

இயக்குனர் இப்படத்தின் வழி பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடும் முயற்சிகளை எந்த வகையிலுமே செய்யவில்லை. மாற்றாக சிறுவயதில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு மனம் எப்படிச் சிதையும், எப்படி சமூகத்திற்கு முன் செயல்படும் என்பதைத்தான் அவருடைய பாணியில் சொல்லியிருக்கிறார். கௌதம் இப்படத்தின் மையக்கருவைப் படமாக வழங்கியதில் இருக்கும் பாணியின் மீதுதான் நாம் விமர்சனத்தை வைக்க முடியுமே தவிர படத்தில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் பாலியல் தொடர்பான உண்மையிலிருந்து தப்பித்து ஓட நினைப்பது மிகவும் அபத்தம் நிறைந்தது.

அந்நியன் படத்தில் mental disorder எனும் மனநோயை வணிக நோக்குடன் மிகவும் மூன்றாம்தரமாகக் காட்டியிருந்ததை, கௌதம் இப்படத்தில் உளவியல்தன்மை கெடாமல் மிகவும் அற்புதமாகப் படைத்திருக்கிறார். மூர்த்தி உடனே படம் ஏன் பலரால் வெறுக்கப்பட்டது எனக் கேட்டார். பச்சைப்பாலனும் இதையேதான் முன்வைத்தார். வணிகத்தன்மைமிக்க படங்களுக்குத்தானே ஆதரவு அதிகமாக இருக்கிறது எனச் சொன்னார். படத்தில் அப்பா தன் மகனைப் பாலியல் கொடுமைக்குட்படுத்துவதையும் தன் வளர்ப்பு தாயான லட்சுமியை கதைநாயகன் புணர்வதும் தமிழர்களின் மன அமைப்புக்கும் கலாச்சாரப் புரிதலுக்கும் முரணான ஒன்று என்பதால் படத்திற்குரிய கவனத்துடன் அதைத் தரிசிக்கப் பெரிய தடை ஏற்பட்டுள்ளது என்றேன்.

அதெப்படி முடியும்? எனக் கேட்டுவிட்டு படக்கொட்டகையைவிட்டு ஓடுபவர்களைத்தான் பார்த்தேன். கௌதம் மக்களைச் சலனப்படுத்தியிருக்கிறார் என மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. உண்மையை அதன் தன்மையுடன் எதிர்க்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு அரிய பணியை நடுநிசி நாய்கள் படம் செய்துள்ளது. தமிழ் சமூகத்தில் எல்லாமும் புனிதமான முறையில் செயல்படுகிறது என்பதைக் குடும்ப அமைப்பே மீண்டும் மீண்டும் அறிவிப்பதாக ஊடகங்களும் இலக்கியங்களும் காட்டி வருகின்றன. தாய் தந்தையின் மகத்துவம், சகோதரர்களின் அன்பு, குடும்ப அமைப்பின் தலைவர், குடும்பப் போதனைகள், ஆன்மீகத்தின் வழி குடும்பம், சமயப் போதனையில் குடும்பத்தின் பங்கு என ஒட்டுமொத்த சமூகமே குடும்ப உறவுகளையும் அதன் மேன்மையை மட்டும் உபதேசிப்பதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. 

ஒரு சாமான்யனின் ஒழுக்க விதிகளை உற்பத்தி செய்து அவனைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வதற்காகக் குடும்ப அமைப்பும் அதன் நெறிகளும் அவசியம் என நிறுவப்பட்டிருப்பதை நாம் உணரலாம். கடுமையாக உழைக்கவும், உதவியாக இருக்கவும் விதிமுறைகளை மீறாதப்படிக்கும், ஆரோக்கியமான  ஒருவன்தான் இந்தச் சமூகத்திற்குத் தேவையானவன். ஆகையால் அப்படியொருவனைத் தயார்ப்படுத்தி தருவதில் அச்சமூகத்தில் செயல்படும் குடும்பத்தால் மட்டுமே முடியும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. ஆக தொடர்ந்து குடும்பத்தையும் குடும்ப அமைப்பையும் புனிதமான ஒன்றாகவே அரசும் சமூக இயக்கங்களும் காட்டி வருகின்றன.

ஆனால் கௌதம் நடுநிசி நாய்கள் படத்தின் வழி இந்த அரசும் சமூகமும் காட்டும் குடும்பத்தின் இன்னொரு பகுதியின் தரிசனத்தையும் காட்டிச் செல்கிறார். வெறும் புனிதத்தின் குறியீடாக சாதகமான ஒன்றாக மட்டும் கற்பிக்கப்பட்டிருந்த குடும்ப அமைப்பு கொடுக்கும் பயங்கரத்தின் ஒரு பகுதியை அதன் கூர்மையான உணர்வுகளுடன் தந்திருப்பது சாதகமான ஒன்றிலேயே பழகிவிட்ட சமூகத்திற்கு பெரும் கலாச்சார அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இப்படத்தைப் பார்த்துப் பதற்றம் கொள்ளும் ஒவ்வொருவரும் சமக்காலத்திய குடும்ப அமைப்பின் விளைவுகளையும் ஊடகங்கள் செய்தியாகக் காட்டும் குடும்ப உறவுகளுக்கிடையே உருவாகியிருக்கும் மனப் பிரச்சனைகளையும் பரவலான முறையில் அறிந்திருப்பது நல்லது. நாம் எம்மாதிரியான ஒரு காலக்கட்டத்தில் இருந்துகொண்டு ஒரு விசயத்தைப் பற்றி விவாதிக்கப்போகிறோம் என்கிற பிரக்ஞை ஒருவனுக்கு இருந்தாக வேண்டும். 1980களிலேயே கள்ள உறவுகளால் உருவாகும் குடும்பப் பிரச்சனைகள் உச்சத்தில் இருந்ததை இந்தச் சமூகத்தின் ஓர் அங்கமாக நாம்மால் புரிந்துகொள்ள முடியும். அந்தப் பிரச்சனையின் அடுத்தக்கட்டம் என்ன என்பதே நாம் கவனமாக அவதானிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படியொரு மன அமைப்பும் திறந்த மனப்பான்மையும் கல்லாச்சார பிடிக்குள்ளிருந்து அவ்வப்போது தன்னைத் தளர்த்திக்கொள்ளும் மிதவாதப்போக்கும் இருப்பதே இக்காலக்கட்டத்தின் சமூகத் தேவையாகக் கவனிக்கப்பட வேண்டும்.

நடுநிசி நாய் படத்தில் வரக்கூடிய வீராவின் உலகம் மிகவும் குரூரமானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவின் பாலியல் அத்துமீறல், மீனாட்சி அம்மாவின் நெருக்கமான அன்பு அவனை மெல்ல சிதைத்திருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டும் ஒரு கொடுமையை அனுபவித்தும் அதிலிருந்து மீள முயற்சிக்கும் ஓர் உயிர் எதிர்க்கொள்ளும் அன்பு என்பதை ஆறுதல் என்கிற ஒற்றைப் புரிதலுடன் மட்டுமே மதிப்பிட்டு வந்திருக்கிறோம். ஆனால் அப்படியொரு நெருக்கடிக்குள்ளிருந்து தப்பிக்க முயலும் உயிருக்கு வழங்கப்படும் அன்பு அவனை வன்முறையாளனாகவும் மாற்றக்கூடும் என்பதுதான் உளவியலின் நிதர்சனம். அந்த அன்பை அவனாதாக்கிக்கொள்ள அவனுக்குள் ஏற்படும் போராட்டம் அவனது உண்மையான மனநெருக்கடியிலிருந்து அவனைத் தற்காலிகமாக விடுவித்துவிடும். ஆக அந்த அன்பை நிரந்தரமாக்கிக்கொள்ள அவன் பல முரணான நடவடிக்கைகளில் எவ்வித நியாயத்தைப் பற்றியும் ஆழமான அக்கறை கொள்ளாமல் ஈடுபடுவான். ஆகையால் ஆரோக்கியமான ஒரு குடும்பச் சூழலிலும் கலாச்சார சூழலிலும் இருந்துகொண்டு பிறருக்குக் கிடைத்துள்ள வாழ்க்கை சூழலை நமது மொன்னையான நெறி போதனைகளின் காலாவதியாகிவிட்ட விவாதங்களுடன் புரிந்துகொள்ள முயற்சிப்பதே அபத்தம்தான்.

தொடக்கத்தில் பயங்கரமான பாலியல்-மனக் கொடுமைகளுக்கு ஆளான ஓர் உயிருக்கு வழங்கப்படும் அன்பும்கூட ஆபத்தாகவும் வன்முறையாகவும் மாறுவதற்கான உளவியல் சாத்தியங்கள் இருப்பதைப் பற்றியும் இப்படம் காட்டுகிறது. அன்பு என்பது எல்லாம் நேரங்களிலும் நமக்குச் சாதகமான விளைவுகளைத்தான் கொடுக்கும் என நம்புவதே காலாவதியாகிவிட்ட சிந்தனையாகும். அன்பின் அடுத்த நகர்ச்சி நாம் எதிர்ப்பார்த்திராத வன்மமாக உருமாறவும் வாய்ப்புண்டு. லட்சுமி அம்மாவைத் தனதாக்கிக் கொள்ளவும் அவருடைய அன்பைத் தக்கவைத்துக்கொள்ளவும் மிகவும் பாதிக்கப்பட்ட வீரா எடுத்துக்கொள்ளும் ஆயுதம் பாலியல். சிறுவயதிலேயே அப்பாவின் வற்புறுத்தலால் யார் யாருக்கோ வாய்ப்புணர்ச்சி செய்யும் வீராவின் மனம் மிகவும் கொடூரமாக அங்கேயே சிதைக்கப்படுகிறது. அதன் மீதான பயமும் பதற்றமும் அறுவறுப்பும் அவனுடைய மன கட்டமைப்பையே மாற்றி உருவாக்குகிறது. இப்படம் ஆங்கிலப் படமான சைக்கோ படத்தின் தழுவல் எனச் சொல்லப்படுகிறது. இருந்தபோதும் இந்திய குடும்ப அமைப்பின் புனிதங்களையும் இறுக்கமான ஒற்றைப் பார்வையும் கேள்விக்குட்படுத்திய சிறு முயற்சியை முன்னெடுத்துள்ளது.மேலும் இது ஒரு உண்மை கதை எனச் சொல்லப்பட்டிருப்பதும் படம் அமைக்கும் களம் நமக்கு நெருக்கமானது என்றே உணரமுடிகிறது.

அனைவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தோம். மீண்டும் மூர்த்தி தேவராஜனின் சமீபத்திய “குற்றம்” கதையைப் பற்றி பேசத் தொடங்கினார்.

தொடரும்
கே.பாலமுருகன்

1 comment:

AnGel said...

nammavargalil palar innum kalacaare 'maayai'le vaalnthu varugiraargal.. avargaludaiye ennangalai tagarkum vagaiyil ullathu inthe 'nadu nisi naaaigal'. pale unmaigal kalachaaram enum porvayil maraikapatu varugirathu. mige thelivaane vilakkam thanthullirgal. nandri