Wednesday, April 27, 2011

இந்திய சினிமா : குட்டி - கனவுகள் சிதையும் நகரம்


சுங்கைப்பட்டாணி முன்பொரு காலத்தில் சிட்டுக்குருவிகளின் நகரமாக இருந்தது. இரவில் எங்கிருந்தோ வந்து சேரும் சிட்டுக்குருவிகள் மின்சார கம்பிகளில் அமர்ந்துகொண்டு நகரம் முழுக்க இரச்சலை ஏற்படுத்தியிருக்கும். தொடக்கத்தில் அதிசயமாக இருந்த இந்த வருகை பிறகு நகரப் பரப்பரப்பின் ஓர் அங்கமாகி போனது. அம்மாவுடன் ஜெயபாலன் வாத்தியார் வீட்டுக்குப் போய்விட்டு வரும் வழியில் பழைய யூ.டி.சி பேருந்தில் அமர்ந்துகொண்டு சன்னல் வழியாக அடர்ந்து காணப்படும் சிட்டுக்குருவிகளின் உலகத்தைத் தரிசித்திருக்கிறேன். சதா சிட்டுக்குருவின் எச்சம் அங்கு நடமாடும் மக்களின் மீது விழுந்தபடியேதான் இருந்தது. அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப் பின்னர் அனைவரும் கற்றுக்கொண்டார்கள். நகரத்தின் அந்தப் பகுதியைக் கடக்கும் எல்லோர் தலைக்கு மேலும் ஒரு நாளிதழ் விரிக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டிருக்கும்.

பேருந்து பயணம் எனக்களித்த மிகப்பெரிய தரிசனமாக நகரத்தின் சிட்டுக்குருவிகளின் வருகையும் இருப்பும் மட்டுமே. சிட்டுக்குருவிகளைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்காத நாட்களில் நகரத்திற்குச் சென்று வருபவர்களை உன்னிப்பாகக் கவனிப்பேன். ஒருவேளை அவர்கள் சிட்டுக்குருவிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று வந்திருந்தால், கட்டாயம் அதன் அடையாளமாகச் சிட்டுக்குருவியின் எச்சம் எங்கேனும் ஒட்டிக்கிடக்கும். அப்பாவின் மோட்டார் முன்பக்க விளக்கில், தோள் பட்டையில், பாபுஜி அண்ணன் தலை கவசத்தில் எனச் சிட்டுக்குருவிகளின் எச்சத்தைப் பார்க்கும்போது பரவசம் பெருகி வழியும். “அய்யே சிட்டுக்குருவி பீ” என முகத்தைச் சுழித்துக்கொள்வது போல பாவனை செய்தாலும் மனம் முழுக்க சிட்டுக்குருவிகளின் இரைச்சலால் ஒலிக்கும். நான்காம் ஆண்டில் பயிலும்போது என் வகுப்பாசிரியர் சொல்லி நான் கேட்டதுண்டு. சிறுவர்கள் அனைவரும் பறவைகள் மாதிரி சுதந்திரமானவர்கள். அப்பொழுதெல்லாம் பறவைகளில் என்னைப் பார்த்து என்னில் பறவைகளைப் பார்த்தேன். திடலில் வேகமாக ஓடும்போது ஒருவேளை நான் பறந்துவிடக்கூடும் என நம்பி கைகளை விரித்துக் காட்டி உடலைத் தூக்க முயல்வேன். மாரியம்மா ஆசிரியர் முதுகில் பளார் என அறையும்வரை நான் பறவையாகத்தான் இருந்தேன்.

2001 ஆம் ஆண்டில் ஜானகி விஷ்வனாதன் இயக்கத்தில் வெளியான ‘குட்டி’ திரைப்படம் சிவசங்கரியின் கதையை மையமாகக் கொண்டு வெளியானதாகும். இப்படம் மீண்டும் மீண்டும் எனக்கு சிட்டுக்குருவிகளையும் அவைகள் யாவும் திடீரென இல்லாமல் போன ஒரு சூன்யத்தையும் ஞாபகப்படுத்துகிறது. இப்படத்தில் வரக்கூடிய சிறுமி குட்டி நகரத்திற்கு வந்து சேரும் ஒரு சிட்டுக்குருவியைப் போலவே காட்சியளிக்கிறாள். பெரும்பாலும் தமிழில் சிறுவர்/குழந்தைகள் சினிமா வருவது மிகக்குறைவுதான். அதுவும் இராமநாராயணன் படத்தில் மிருகங்களுடன் ஒரு கோமாளிகள் போல வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பார்த்து இரசிக்கும் அதிகப்பிரசங்கித்தனத்தைக் காட்டும் குழந்தைகள்வரைத்தான் தமிழ் சினிமா குழந்தைகளின் உலகத்தை எட்டியுள்ளது. அல்லது இரண்டையும்விட மிகவும் கொடூரமானது குழந்தைகளைக் கடவுளாக்கி உலக ஞானத்தையே பேச வைக்கும் சாமி படங்களின் வன்முறையைச் சொல்லலாம். எது குழந்தைத்தனம் எது அவர்களின் உளவியல் எனத் தெரியாத ஒரு முட்டாள்த்தனத்தின் வெளிப்பாடுகளே இது போன்ற படங்கள்.

இதையெல்லாம் மீறி குட்டி படம் தனித்துத் தெரியக்கூடிய இந்திய நிலப்பரப்பின் முக்கியமான குழந்தைகள் படம் என்றே சொல்லலாம். எந்த அலங்காரங்களும் சினிமாத்தனங்களும் இல்லாமல் ஏதோ நம் பக்கத்து வீட்டில் நிகழும் சாதாரண காட்சிகள் போல அபாரமான ஓர் அமைதியில் இறுகி நகர்கிறது. அதை உற்றுக் கவனிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவதற்கு அந்த அமைதியில் நாம் கரைந்தாக வேண்டும். வழக்கமாக நம் அருகாமையில் நிகழும் அற்புதங்களும் கொடூரங்களும் நமக்கு தெரியாமல் போக வாய்ப்புண்டு. ஒரு பொருளை தூரத்தில் வைக்கும்போதே அதன் மீது கவனம் வலுக்கும் என்பார்கள். குட்டி நமக்கு அருகில் வைக்கப்படுகிறாள். அவளுக்கு பொதுவின் பரிதாபத்தையும் கவனத்தையும் சேகரிக்கும் அக்கறை இல்லை. அவள் உண்மைக்கு மிக நெருக்கமாகப் படைக்கப்படுகிறாள். மேலோட்டமான மூன்றாம்தர நுகர்வின் மீது தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் பார்வையாளனுக்கும் அவளுக்கும் வெகுதூரம்.

மரபார்ந்த புரிதல்கள்

குட்டியின் கதைக்குள் செல்வதற்கு முன்பாக சினிமா சார்ந்த சில மரபார்ந்த புரிதல்களைப் பற்றி பேசியாக வேண்டும். தமிழில் குழந்தைகள் சினிமா உருவாக்கத்தின் நிலை என்ன? என்கிற கேள்வியை முன்வைக்கும்போது சர்வதேச குழந்தை/சிறுவர்கள் சினிமா உருவாக்கிய பாதிப்புகள் சட்டென ஞாபகத்திற்கு வருகின்றன. ஈரான் ஈராக் சினிமாக்கள் குழந்தைகளின் வாழ்வை அதன் யதார்த்தம் சிதையாமல் காட்சிப்படுத்தும் சினிமாப்படுத்தும் விதம் கவனிக்கத்தாகும். இன்றும் சர்வதேச அளவில் விருதுகளை வாங்கிக் குவிக்கும் குழந்தைகள் சினிமா ஈராக் ஈரான் இந்தோனேசியா சீனா போன்ற நாடுகளிலிருந்தே வருகின்றன. உலக அரங்கிற்கு தன் கலாச்சாரத்தைச் சார்ந்த குழந்தைகளின் உலகையும் வாழ்வையும் உன்னத கலைப்படைப்பின் வழி தரக்கூடிய ஆளுமை அங்குத்தான் இருக்கின்றது.

ஆனால் இன்று தமிழில் எடுக்கப்படும் குழந்தைகள் சினிமா எப்படி மதிப்பிடப்படுகிறது? இன்னமும் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தை தமிழில் வெளிவந்த ஆகச்சிறந்த குழந்தை/சிறுவர்கள் படம் என விமர்சிக்கும் கேவலமான நிலை இங்கு நிலவுகிறது. அத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது பாண்டிராஜ் இயக்கி வெளிவந்து பல விருதுகள் பெற்ற பசங்க திரைப்படமும் அதே நிலையில் வைத்துக் கொண்டாடப்படுவதும் வருத்தத்திற்குரியதே ஆகும். பெரியவர்கள் பார்த்து மகிழ்வதற்கும் மீண்டும் மீண்டும் பெரியவர்களின் நியாயங்களையும் இரசனைகளையும் நிறுவிக் காட்டுவதற்கும் சிறுவர்களை வைத்து எடுக்கப்படும் படங்களைத்தான் நாம் குழந்தைகள்/சிறுவர்கள் படம் என அடையாளப்படுத்துகிறோம். பசங்க திரைப்படம் ஒரு அருமையான குடும்பப் படம் என்பதை மட்டுமே என்னால் ஒப்புக்கொள்ள முடிகிறது, மற்றப்படி அது ஒரு சில இடங்களில் சிறுவர்களின் உளவியலை மேலோட்டமாகப் பேசிச் செல்கிறதே தவிர அது தரமான ஒரு குழந்தைகள் சினிமா கிடையாது.

குழந்தைகள் கடவுளாக்கப்பட்டு வேதத்தையும் தத்துவத்தையும் பேசித் திரியும் காட்சிகளை தமிழ் சாமிப்படங்களில் பார்க்கும்போது அநேகமாக குழந்தைகளை இப்படி மிருக வைதை செய்யும் சினிமா வேறெங்கிலும் இருக்காது எனவே நினைக்கத் தோன்றுகிறது. யானைக்குச் சட்டை மாட்டி அதை அம்மனின் அடிமையாக்கிப் பார்த்து அதை ஒரு இரசனையாகவும் திணிக்கும் இராமநாராயணன் போன்ற தரமற்ற இயக்குனர்களின் மூலம் குழந்தைகளும் இப்படித்தான் சிதைக்கப்படுகிறார்கள் எனத் தாராளமாகச் சொல்ல முடியும். தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்காகவே எடுக்கப்படும் சினிமா எதுவென்ற கேள்வி எழும்போதெல்லாம் கையில் வேலுடனும் சூலத்துடனும் முருகனாகவும் விநாயகராகவும் காட்டப்பட்டு சிறுவர்களை வைத்து வித்தைக்காட்டும் சினிமாக்களை விமர்சனத்திற்குள் கொண்டு வரும் கிறுக்குத்தனமான அபாயமும் தொலைவில் இல்லை எனத் தோன்றும்.

குட்டியின் தரிசனம்

குட்டி ஒரு கிராமத்துச் சிறுமி. கிராமத்துச் சிறுமிகள் என்றாலே எப்பொழுதும் சக மனிதர்களையும் தனக்கு முன் நிகழும் மாற்றங்களையும் விநோதமான மனநிலையில் பார்க்கக்கூடியவர்களாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். சத்ய ஜித்ரேயின் பதேர் பஞ்சாலியில் வரும் துர்கா தன் கிராமத்திற்கு வரும் பலூன் விற்பவனையும் மிட்டாய் விற்பவனையும் அதிசயித்துப் பார்க்கிறாள். அவனைப் பின் தொடர்ந்து ஓடும்போது தன் கைக்கு எட்டாத ஒன்றின் மீது அவள் கொள்ளும் ஆர்வத்தின் வழி அதைக் கடக்க அவள் செய்யும் போராட்டமே தெரிகிறது. இப்படத்தில் வரும் குட்டியும் தனக்குக் கிடைக்காததை நோக்கி முதலில் பரிதாபத்தைக் காட்டி சட்டென அதை ஒரு சிரிப்புடன் கடந்துவிடுகிறாள். ஏழ்மை சிறுவர்களுக்கு போலியான ஒரு முதிர்ச்சியைக் கற்றுக்கொடுத்துவிடுவதற்கு குட்டியும் துர்க்காவும் ஓர் உதாரணமாகும்.

குட்டி இந்தப் படம் முழுக்க தன் முகப்பாவனைகளின் காட்ட முயல்வதே இந்திய குடும்ப அமைப்பு சிறுவயதிலேயே ஒரு சிறுமிக்குக் கொடுத்துவிடும் சுமையையும் முதிர்ச்சியையும்தான். தனது வயதிற்கு ஏற்ற எந்தவித உணர்வுகளையும் கொண்டாட்டங்களையும் வெளிப்படுத்த முடியாமல் தன் வீடு என்கிற வட்டத்திற்குள்ளே தன்னைச் சுருக்கிக் கொள்ளும் நிலையைத்தான் குட்டி அடைகிறாள். அப்பா இருக்கும்வரை எல்லாம்விதமான உரிமையும் சுதந்திரமும் நம்பிக்கைகளும் அவளுக்கு இருக்கின்றன. தனக்கு பிடித்த ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றும் அளவிற்கு குட்டியின் அப்பாவின் இருப்பு வலிமை பெறுகிறது. ஆனால் அவள் தனிமைப்படும்போது அவளுக்கான வெளி கேள்விக்குள்ளாகுகின்றது. துள்ளித்திரிந்த குழந்தைப்பருவத்திலிருந்து துண்டிக்கப்பட்டு இந்தச் சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் நியாயங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் முன் தர்க்கம் செய்யப்படுகிறாள். பிறகு குடும்பச் சுமையைப் பகிர்வதற்குரிய பொறுப்பு அளிக்கப்படுகிறது.

குடும்பப் பொறுப்பைச் சுமப்பதற்கான வயதும் பக்குவமும் இல்லாத குட்டியிடம் சந்தர்ப்பவாத மனிதர்கள் அதற்குரிய வயது மீறலையும் தற்காலிக பக்குவத்தையும் திணித்து நகரத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். திடீரென தனக்கு ஆறாவது விரல் முளைத்துவிட்டதைப் போலவும் தலைக்கு வெளியே இன்னொரு தலை முளைத்துவிட்டதைப் போலவும் நகரத்தில் இருக்கும் அனைத்தையும் திகைப்புடனும் பிரம்மிப்புடனும் பார்க்கிறாள். லிப்ட் ஏறும்போதும் தன் தலைக்கு மேல் நீளமாக வளர்ந்திருக்கும் அடுக்குமாடி வீடுகளைப் பார்க்கும்போது குட்டி காட்டும் முகப்பாவனை ஒட்டுமொத்த கிராமத்தின் பின்னடைவுகளையே பிரதிபலிக்கிறது. நகர வளர்ச்சிக்கும் கிராமத்திற்கும் இடையில் இருக்கும் நூற்றாண்டு வித்தியாசங்களின் குறியீடாகத் தொடர்ந்து குட்டி காட்டப்படுகிறாள். அவளின் மூலம் இன்னமும் வளராத ஒரு கிராமமே நகரத்தைப் பார்த்து வியப்புக்கொள்கின்றது.

அப்பாவின் மரணத்திற்குப் பிறகு கிராமத்தில் பிழைக்க வழியில்லாமல் உறவினர்கள் மூலம் வீட்டு வேலைக்காக நகரத்திற்கு வரும் குட்டியிடம் ஒரு மஞ்சள் பை மட்டுமே இருக்கிறது. இந்திய நிலப்பரப்பில் பொருளாதார ஊனமும் சிதைந்த குடும்பக் கட்டமைப்புகளும் அவளுக்கு அளிக்கும் முதிர்ச்சியென்பது மிகவும் கொடூரமானதாகும். 5 வயதிலேயே தலை பெருத்து, உடல் பெரிதாகி முதுகு வலைந்து முதுமையடையும் ஒரு அபாரமான நோயைப்போல குடும்ப வறுமையால் தியாகம் செய்யவும் ஏழ்மையைப் புரிந்துகொள்ளவும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் இந்த முதிர்ச்சி உருவாக்கம் இயற்கைக்கு எதிரானவை. குட்டி ஏதோ பெரிய பெண் போன்ற போலியான தோற்றத்துடன் தன் குழந்தைத்தனங்களை எல்லாம் உள்ளேயே அடக்கிக் கொன்றுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

 பின்னர் நகரத்திற்கு வந்து அவள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் மீதி கதை. குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஆவணப்படத்தின் தொனியுடன் ஒலிக்கும் நல்ல கதை. கடைசியில் அந்தக் குட்டிக்கு என்ன நிகழ்கிறது என்பதோடு கதை மனதில் ஒரு சூன்யத்தை அழுத்தமாக அப்பிவிட்டு நிறைவடைகிறது. குட்டியின் அடுத்தக்கட்டத்தை மனம் மிகவும் நெகிழ்வுடன் ஊகிக்கத் துவங்குவதே படம் முடிந்தவுடன் மனதில் தொடங்கவேண்டும் என்பதை நினைவுறுத்துகிறது.

முதலாளி வர்க்கத்தின் அதிகாரத்தொனி

குட்டி நகரத்திற்கு அடுக்குமாடியிலிருக்கும் ஒரு குடும்பத்திற்கு வீட்டு வேலைக்காகவும் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காகவும் வந்து சேர்ந்து அந்தக் குடும்பத்தோடு இணைந்து இருக்கவும் முயல்கிறாள். அந்தக் குடும்பத்திலுள்ள உறவுகளைத் தனக்குள் சேமித்து அன்பு செய்யவும் முற்படுகிறாள். ஆனால் அக்குடும்பத்தின் முதியவர் அவளை ஒரு வேலைக்காரியாக மட்டுமே நடத்துவதற்கு அதிகார சக்தியாக செயல்படுகிறார். குட்டியின் மீதான எல்லாம்விதமான சுரண்டலையும் நிகழ்த்தி நம்மைக் கொதிப்படைய செய்யும் அந்தப் பாட்டி ஆணாதிக்க சமூகத்தின் எச்சமாகக் காட்டப்பட்டிருக்கிறார். படம் முழுக்க அதிகாரத்தொனியுடன் குட்டியை அந்தக் குடும்பத்திடமிருந்து கிடைக்கக்கூடிய எல்லாம் கவனங்களிலிருந்தும் தகர்த்து தன் ஆக்கிரமிப்பிற்குள் வைத்து ஆள்கிறாள். அதிகாரம் எப்படி ஒரு சாமான்ய குடும்ப முதியவர்களைத் தீவிரமாகச் செயல்பட வைக்கும் என்பதற்கு இந்தப் பாட்டி கதைப்பாத்திரம் எடுத்துக்காட்டாகும்.

ஒரு குடும்பத்தில் முதியவர்களிடம் இருக்கக்கூடிய அதிகாரத் தொனி என்பது மிகவும் ஆபத்தானது. அது திடீரென முளைத்து வளர்ந்த ஒன்றல்ல. முந்தைய தலைமுறையிலிருந்து சிறுக சிறுக கட்டியெழுப்பப்பட்ட மையம். அதன் மீது அவர்கள் அடுத்த தலைமுறையிடம் உருவாக்கும் நம்பிக்கை என்பதும் மிகவும் உறுதியானவை. அதனால்தான் இன்றும் சில குடும்பங்களில் முதியவர்களின் அதிகாரம் உயிர்ப்புடன் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக நிலைத்திருக்கிறது. அதுவும் தாத்தாவை விட பாட்டியிடம் இருக்கும் குடும்பத்தின் மீதான அதிகாரம்தான் அபாரமானது. கொஞ்சமும் தகர்க்க முடியாதவை. ஆணாதிக்க சமூகத்தின் வழி உருவாக்கப்படும் மன அமைப்பை அப்படியே குரூரமாக அடுத்த தலைமுறையிடம் வழங்குவதில் பெண் முதியவர்கள் காட்டும் தீவிரமானது வியக்கவைக்கும் தன்மையுடையது.

என் பாட்டிக்குத் தோட்டத்தில் இருக்கும்போதே ஒரு சமயம் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் போயிருந்தன. நாள் முழுக்க வீட்டிற்கு வெளியில் கிடக்கும் பெரிய வாங்கில் உட்காந்துகொண்டு தன் சொற்களால் குடும்ப அதிகாரத்தைச் செயல்படுத்துபவராக இருப்பார். தாத்தாவிடமிருந்த கடுமையான அதிகாரத்தை எப்படி எந்த நேரத்தில் பாட்டி தன் வசமாக்கிக்கொண்டார் என்பதில் எனக்கு எப்பொழுதும் ஆச்சர்யம் இருந்திருக்கிறது. சொல்லப்போனால் தாத்தாவின் ஆணாதிக்க பரிசோதனைகளை அனுபவித்து தன் உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் இழந்து பலமுறை தற்கொலைக்கு முயன்றவர்தான் பாட்டி. எல்லாம் கசப்புகளையும் கடப்பதற்கும் பிறகு அதை வெற்றிக்கொள்வதற்கும் ஒரு அசாத்தியமான தைரியமும் வெறியும் இருந்திருக்க வேண்டும்.

பாட்டி தான் அனுபவித்த அதிகாரக்கொடுமைகளை தாத்தாவிடம் மீண்டும் செலுத்தத் துவங்கிய காலம் பயங்கரமானது என்றே சொல்ல வேண்டும். பாட்டியின் மீட்கப்பட்ட அதிகாரத்தின் முன் ஒரு சொல் கூட உதிர்க்க முடியாமல் போகும் தருணங்களில் தாத்தா வீட்டின் பின்பக்கக் கொள்ளையில் இருக்கும் பாராகுவாட்டையே பார்த்துக்கொண்டிருப்பார். எனக்கும் அம்மாவிற்கும் பயம் அதிகரிக்கும். தாத்தா தான் உருவாக்கிய ஆணாதிக்கத்தின் முன் தோல்வியடைந்துவிடுவார் என அம்மாவும் கவலைப்பட்டதுண்டு. ஆணாதிக்கம் என்றும் தோற்கடிக்கப்படக்கூடாது என்கிற குடும்பப் பெண்களின் அதீதமான நம்பிக்கையே அவர்களையும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குரிய ஒரு எல்லையை நோக்கி நகர்த்துகிறது. அதிகாரத்தை அடைவதற்காக அவர்களை மிகவும் போலித்தனமான முகங்களை மாட்டிக்கொண்டு நாடகமாட வைக்கிறது, சுயமான குரலை ஒளிவைத்துக்கொண்டு இதற்கு முன் உச்சத்தில் ஒலித்த குடும்ப ஆணின் குரலைப் பிரதியெடுத்து உபயோகிக்கிறது.

குட்டி திரைப்படத்தில் வரக்கூடிய அந்தப் பாட்டியின் செயல்கள் நம்மைக் கோபமடையவும் உக்கிரம் கொள்ளவும் செய்கின்றன. மெல்ல மெல்ல குட்டியுடைய உலகை வரையறுக்கவும் அவளுக்கான எல்லையைத் தீர்மானிக்கவும் தன்னை ஒரு முதலாளியாக ஆக்கிக்கொள்ளும் பாட்டி, ஒரு நாயைவிட மிகவும் மோசமாகக் குட்டியை நடத்துகிறாள். ஒருவன் எப்படி அங்கீகாரமற்ற முதலாளியாகத் தன்னை ஆக்கிக்கொள்கிறான் என்பதன் அத்துனைக் கொடூரமான அரசியலும் இந்தப் பாட்டியின் கதைப்பாத்திரம் வழி அம்பலப்படுத்தப்படுகிறது. முதலில் அதிகாரத்தை உபயோகித்துப் பார்ப்பது, பிறகு அதனை உறுதி செய்ய உரிமைகளை மெல்ல அபகரித்துப் பார்ப்பது, அடுத்ததாகச் சுரண்டி பார்த்து எதிர்வினையின் பலவீனத்தை அளப்பது, எதிர்வினை இல்லாதபோது அதிகாரத்தைச் செலுத்தியவன் நிரந்திர முதலாளி ஆகின்றான். குட்டியின் மீது தன் அதிகாரத்தைக் காட்டிய பாட்டி இப்படித்தான் முதலாளியாகி குட்டியை விரட்டியும் அடிக்க முயல்கிறாள்.

ஒடுக்குமுறைகளைத் தாங்க முடியாத குட்டி தினம் தினம் தன் துயரத்தை யாரிடமாவது சொல்லிவிடலாமா என ஏங்கித் தவிக்கும் காட்சிகள் மனதை நெருடும். அடுக்குமாடிக்குக் கீழே கடை வைத்திருக்கும் விவேக் மட்டும் குட்டியின் துயரத்தைப் பகிர்ந்துகொள்பவராக வருகிறார். ஆனால் குட்டியின் ஏழ்மைக்கு முன் எல்லோருமே கையறுநிலையில்தான் இருக்கிறார்கள். இறுதியில் நகரம் அவளுக்கொரு விடுதலையை வைத்திருந்தது. குழந்தையைக் கடத்தி பம்பாயில் பாலியல் தொழிலுக்காக விற்கும் கும்பலுக்குக் குட்டி பலியாகிறாள். எங்குப் போகிறோம் என்பதைக்கூட தெரியாமல் இரயிலில் ஏறி அப்பாவியாய் வெளிக்காட்சியை இரசிக்கும் குட்டி ஒரு பெண் சிறுமியாக இருப்பதால் அவளுக்கொரு விலை இருந்தது. தனக்கு இந்த அதிகார சமூகம் கொடுத்திருக்கும் விலையைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் அந்தப் பாட்டியிடமிருந்து விடுதலையடைந்துவிட்டோம் என்கிற மகிழ்ச்சியில் அமர்ந்திருக்கும் குட்டியைச் சுமந்துகொண்டு இரயில் செல்கிறது. ஒவ்வொருநாளும் பம்பாயில் பாலியல் தொழிலுக்காக நிறைய சிறுமிகள் கடத்தப்பட்டு விற்கப்படுகிறார்கள் என்ற செய்தி திரையில் தோன்ற குட்டியின் அடுத்தக்கட்ட வாழ்வின் கொடுரமான பக்கம் நம் மனதில் திறக்கப்படுகிறது.

தமிழில் வெளியான முக்கியமான குழந்தைகள் படமாக ‘குட்டி’ திரைப்படத்தைச் சொல்லலாம். குட்டியாக நடித்த சுவேதா என்ற அந்தச் சிறுமிக்கு 2002இல் தேசிய விருது கிடைத்தது. மேலும் லெய்ரா சர்வதேச திரைப்பட விழாவில் குட்டி திரைப்படம் சிறப்பு விருதைப் பெற்றுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும், சிறந்த இயக்குனராகவும் சில்வர் லோட்டஸ் விருதளிப்ப் விழாவில் வென்றுள்ளது.

குட்டியின் மனோபாவத்திலேயே படத்தின் பல காட்சிகள் விவரிக்கப்படுகின்றன. அவள் சேமித்து வைத்திருந்த ஓர் உலகம் படத்தின் இறுதி காட்சியில் நழுவி உடைப்படுகிறது. அவளுடன் சேர்ந்து நமக்குள் எங்கோ ஒளிந்துகிடந்த குழந்தைத்தனங்களும் நழுவி வெளியே வந்து விழுகின்றன பேரிரைச்சலுடன். முன்பொரு சமயம் சிட்டுக்குருவிகள் இல்லாமல் திடீர் சூன்யத்தை அடைந்த நகரத்தில் சிட்டுக்குருவி இருப்பது போலவும் அதன் எச்சம் தலையில் விழுந்துவிடக்கூடும் எனவும் மனிதர்களைக் கொஞ்ச நாட்களுக்குச் சுய கற்பனைக்கு ஆளாக்கி வைத்திருந்த பழக்க நோயைப் போலவே துரத்துகிறது குட்டியைப் பற்றி நினைவுகள்.

கே.பாலமுருகன்
thanks to vallinamm april issue.




1 comment:

EDUCATION AND ME.... said...

இறுதியில் சில கண்ணீர் துளிகளுடன்... அந்த படத்தை அப்போதே மறந்து விட்டேன்.... நின்று உங்கள் வரிகளில் மீண்டும் படத்தைப் பார்த்து விட்டேன்...... விமர்சனம் நன்று ஐயா