Monday, May 9, 2011

சிவா பெரியண்ணனின் வாடகை வீடு- தூக்கில் தொங்கிய அறை

கடந்த வாரம் பெத்தாலிங் ஜெயாவிலுள்ள சிவா பெரியண்ணனின் வாடகை வீட்டுக்குப் போயிருந்தேன். சிவாவின் மேல்மாடி அறைக்குள் நுழையும்போதே சட்டென அதன் இருளும் சோர்வும் சிங்கப்பூர் பாலாஜி சொன்ன ஆத்மாநாம் தற்கொலை சட்டென ஞாபகத்திற்கு வந்தது. பாலாஜியின் வீட்டிற்கு மேல்மாடியில்தான் கவிஞர் ஆத்மாநாம் வசித்திருக்கிறார். யாருடனும் பேசாமல் எப்பொழுதும் மௌனமாக வந்து இருக்குமிடம் தெரியாமல் அவ்வப்போது கரையும் நிசப்தமான வெளி ஆத்மாநாமுடையது என அவர் சொன்னார். ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்ட பிறகு பாலாஜி அவர் தூக்குப் போட்டுக்கொண்ட அறையில் படுத்திருந்ததாகவும் கூறினார்.
வெகுகாலத்திற்குப் பிறகு தன் வீட்டின் மேல்மாடியில் தங்கி இறந்துபோனவர் ஆத்மாநாம் தான் எனத் தெரிந்து கொண்ட மறுகணமே பாலாஜி எனக்கு அழைப்புக் கொடுத்து இதைப் பகிர்ந்துகொண்டார். ஆத்மாநாமைக் கவிதைகளின் வழியே 2008 ஆம் ஆண்டில் அறிந்து வைத்திருந்த எனக்கு இந்தத் தகவல் மனதிற்கு நெருக்கமான ஒரு சூன்யத்தை அளித்திருந்தது. நமக்கு நெருக்கமானவர்களின் திடீரென அடையும் உச்சமான அனுபவம் நம்மையும் சேர்த்து சலனப்படுத்தும் என்பதை அப்பொழுது உணர வாய்ப்பிருந்தது.

சிவாக்கு ஒரு தனி அறை இருந்தது. அறை முழுக்க ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் புத்தகங்கள். இந்த மேல்மாடியில் இருக்கும் வாழ்நாள் முழுவதும் சிவா ஒரு புத்தகம் போல ஒரு மூலையில் அடுக்கப்பட்டிருப்பவர் போல மௌனத்திருந்தார். அவருடைய மௌனம் அறை சுவர்களில் படிந்திருந்தது. சிவாவை 2007 முதல் தான் எனக்குப் பழக்கம். சிங்கப்பூரில் வெளியீடு கண்ட என் கவிதை தொகுப்பு நிகழ்விற்கு வந்திருந்தபோது மேலும் நெருக்கம் கூடியிருந்தது. ஒரே அறையில் இரவு முழுவதும் பேசிக் கழித்த பொழுதுகள் சிவாவுடன் தாராளமாக உரையாட வாய்ப்பளித்திருந்தது.

அன்று இரவு சிவாவின் மேல் மாடியில்தான் படுத்திருந்தேன். இத்துனை மாதங்களாக வல்லினம் இணைய இதழ் இந்தத் தனிமையான அறைக்குள்ளிருந்துதான் தயாராகி வருவதை நேரடியாகப் பார்க்க முடிந்தது. நான் அங்குப் போயிருந்த அன்றைய இரவும் சிவா புகைப்பிடித்துக்கொண்டே வல்லினம் அகப்பக்க வேலையில்தான் இருந்தார்.அவருடன் அந்த வீட்டில் தங்கியிருந்த நண்பர் மிகவும் நகைச்சுவயாகப் பேசிப் பழகக்கூடியவராக இருந்தார். நான் தங்குவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த இன்னொரு அறையில் முன்பொருவர் தூக்குப் போட்டு இறந்துவிட்டதாகச் சொல்லி என்னைப் பயமுறுத்திக்கொண்டே இருந்தார். அறைக்குத் தாமதமாகச் சென்றால் தற்கொலை செய்து கொண்டவர் கோபப்படுவார் என்பது தொடங்கி, படுக்கும்போது அவர் கால்கள் மேலே தொங்குவதைப் பார்க்க நேர்ந்தால் கண்களை மூடிக்கொள்ளுங்கள் எனும் எச்சரிக்கை வரை அவருடைய ஆலோசனை தொடர்ந்தது.

அதிகாலை 'வானம்' படம் பார்த்துவிட்டு வந்து அறையில் படுத்ததும் தூக்கமே பிடிக்கவில்லை. வெளியில் சிவாவின் அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கு வெகுநேரத்திற்குப் பிறகு சட்டென செத்துப் போனது. எனக்கு எப்பொழுதாவது இந்த மாதிரி புது இடங்களில் படுக்க நேர்ந்தால் தூக்கம் வராமல் போகும் பழக்கம் உண்டு. சிரமப்பட்டு உறங்க நான் செய்த முயற்சி சரியாகக் காலை மணி 7.00க்கு வெற்றிப்பெற்றிருந்தது. சிவா என்னை 7.45க்கு எழுப்பினார். காலையிலேயே கிளம்பி முத்தம்மாள் பழனிசாமியை ரவாங்கில் சந்திப்பதாகத் திட்டம். தயாஜியை ஏற்றிக்கொண்ட்டு நவீன் இருக்கும் பத்துமலைக்குப் புறப்பட்டுச் சென்றோம்.காலை உணவுக்குப் பிறகு நவீன் வந்து சேர்ந்தார்.

இரவில் தூக்கமில்லாமல் வெறுமனே கழித்த நெடிய இரவைவிட சிவாவின் வீட்டில் பார்க்குமிடமெல்லாம் அப்பிக்கிடந்த வெறுமைத்தான் பயங்கரமாகத் தென்பட்டது.

கே.பாலமுருகன்

4 comments:

Unknown said...

எப்போது கண் விழித்தாலும் தலைக்குமேலே இரண்டு கால்கள் தொங்ககூடிய சாத்தியம் இருந்த அரையில் வெறுமை நிரம்பியிருப்பதில் அசாத்தியமான நிஜம் இருப்பதாகத்தான் படுகிறது..

gnani said...

புனைவுக்காக கவிஞர் ஆத்மாநாமை வெளிநாட்டு மாடியறையில் தூக்கில் தொஙவிட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒரு சிலர் அதை உண்மையென்று மயங்கக் கூடும் என்பதால் இந்தத் தகவல். கவிஞர் ஆத்மாநாம் பெங்களூரில் வழக்கமாக அமர்ந்திருக்கும் ஒரு கிணற்றடி உண்டு. அந்தக் கிணற்றில் அவர் சடலமாகக் கிடந்தார். மனப் பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சோர்வான ஒரு நொடியில் தற்கொலை செய்திருக்கலாம் என்று பல நண்பர்கள் கருதுகிறார்கள். ஆத்மாநாமோடு பழ்கும் வாய்ப்பு பெற்றிருந்த எனக்கு அவர் மனப் பிறழ்வு நிலையிலும் கூட தற்கொலை செய்யக் கூடியவராக தோன்றுவதில்லை. அது ஒரு நொடிப்பொழுதின் விபத்தாகக் கூட இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். அன்புடன் ஞாநி சென்னை

கே.பாலமுருகன் said...

ஞாநி@ எனக்கு ஒரு தகவலாகத்தான் ஆத்மாநாமைப் பற்றி தொடக்கத்தில் வந்து சேர்ந்தது. அவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என. எனக்கு அழைப்பேசியில் அழைத்து ஆத்மாநாம் முன்பு தங்கியிருந்த மேல்மாடி அறைக்குக் கீழ் தங்கியிருந்ததாகவும் அவர் அங்குத்தான் தூக்கிலிட்டுக் கொண்டார் எனவும் நண்பர் பாலாஜி சொல்லியிருந்தார். அதனால் எப்பொழுதும் ஆத்மாநாமைப் பற்றிய நினைவுகள் அப்படியாகவே எனக்குள் தேங்கியிருந்தன. மேலும் அவரின் கவிதையின் மீது ஆழ்ந்த வாசிப்பும் மிகுந்த நேசமும் உடைய எனக்கு அவர் மரணிக்கவில்லை என்றே தோன்றும். அவர் இன்று இல்லாதததும் வருத்தமளிக்க்கக்கூடியவையே. பகிர்விற்கு மிக்க நன்றி

கே.பாலமுருகன் said...

@ஆதாமாநாம் தூக்கிலிட்டுக்கொண்டதாக எனக்குள் சேகரிக்கப்பட்டிருந்த தகவலுக்கும் நான் சிவாவின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவரைப் பற்றி திடீரென ஞாபகத்திற்கு வந்ததற்கும் அழுத்தமான தொடர்புகள் கிடையாது. அது சட்டென தோன்றிய ஒரு உணர்வு மட்டுமே.

மற்றப்படி வெளிநாட்டு அறையில் அவரைத் தூக்கிலிட வேண்டும் என்பதற்காக என் புனைவு மனதை நான் செலவிடக் கிடையாது.