Tuesday, May 17, 2011

வானம்-திரைவிமர்சனம் - பின்காலனிய சமூகமும் நடுத்தர வர்க்க மாயையும்

கிரிஸ் இயக்கத்தில் தெலுங்கில் அதிகமான வரவேற்பைப் பெற்ற படத்தைத் தமிழில் “வானம்” என்கிற தலைப்பில் மறு ஆக்கம் செய்து கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இன்றைய சூழலில் தமிழில் வரக்கூடிய எத்தகைய சினிமாவாக இருந்தாலும் கதாநாயகன் கொண்டாட்டமும் கதாநாயகன் மையமும் படத்தில் இருக்கக்கூடிய கதையின் மீதான அத்தனை சாத்தியங்களையும் தகர்க்கக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றன. ஆனால் வானம் படத்தில் கதாநாயகத்துவம் கதைக்கு முன்பு தோல்வி அடைந்திருக்கிறது. இதுவே படத்தின் மீதான துல்லியமான கவனம். தமிழ் சினிமாவின் பெரும் சாபமே எந்த வகையான கதையாக இருந்தாலும் அது கதாநாயக பிம்பத்திடம் சரணடைந்து சுருங்கிப் போவதுதான். இயக்குனரின் பங்களிப்பையும் ஒரு படத்தின் மையத்தையும் அப்படியே விழுங்கி ஆக்கிரமிக்கக்கூடிய கொடுய நோய் கதாநாயகத்துவம்.

எம்.ஜி.ஆரில் தொடங்கும் கதாநாகயத்துவத்தின் வீரியமான அரசியல் இன்றைய விஷால் வரை பெரும் பிம்பமாக வளர்ந்திருக்கிறது. இதனை மீறும் நுட்பமான கதை அமைப்பு வானம் திரைப்படத்தில் உருவாக்கப்ப்ட்டிருக்கிறது. ஏற்கனவே இது போன்ற கதை தொழிட்நுட்பத்தில் தீவிரமான கவனத்தைச் செலுத்திய உலக சினிமாக்களைப் பார்த்து நுகர்ந்த அனுபவம் இருப்பதால் வானம் படத்தின் கதைச் சொல்லல்முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தமிழுக்கு இது புதிய முயற்சி.

கதை அமைப்பு

ஐந்து வகையான கதை, படம் முழுக்க வெவ்வேறான திசையில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் எந்த வகையிலுமே தொடர்பற்று தனித்தனி இலையில் ஓடிக்கொண்டிருப்பதுதான் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட ஐந்து முக்கியமான கதையோட்டம் படத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வைத்து சொல்லப்பட்டதே கிடையாது.

படத்தின் மூலம் நகர்த்தப்படும் கதை அமைப்பிற்கு ஒரு அழுத்தமான ஒழுங்கு இருந்தும் தமிழ் சினிமா இரசிகர்களுக்கு அது பிடிப்படாமல் படத்தின் அமைதியையும் சலனமின்மையையும் பார்த்து வெறுக்கும் நிலை இருக்கையில், அத்தகையதொரு எந்த மௌனமும் இல்லாமல் பரப்பரப்பான கதை களத்தில் வைத்து உலகத்தின் பல விதமான மனிதர்களையும் ஆங்காங்கே காட்டிச்செல்லும் விதம் படத்தின் முக்கியமான விசயமாகும். ஐந்து வகையான கதையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிட்டு பிட்டு காட்சிகளுக்குக் காட்சி சொல்லிக்கொண்டே செல்வது தொடர்பின்மையின் மயக்கத்தைக் கொடுக்க நேர்ந்தாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்த மாற்று அடுக்குகளில் மனம் சட்டென பிடிமானம் கொண்டுவிடுகிறது.

வானத்திற்குக் கீழ் வாழும் எல்லாம் மனிதர்களுக்கும் வாழ்வதற்கான அனைத்து நியாயங்களும் தேவையும் இருப்பதையும், மனிதாபிமானத்தினையும் பல இடங்களில் அடர்த்தியாக்கி மிகையாகாமல் சொல்லியிருக்கிறார்கள். மேலும் இந்த யுகத்தின் மிகப்பெரிய தேவையே பணம் என்றும் பணம் மனிதனை அவனுடைய இயல்பிற்கு எதிராக இயங்க வைக்கும் என்றும் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்க விசயம்.

1.    கதை 1 : பாப் இசையின் உடல்மொழி

கதையோட்டத்தின் முதல் இலை பரத். 5 நண்பர்கள் அடங்கிய ஒரு இசைக்குழுவின் கீத்தாரிஸ்ட். வானம்பாடி படத்தில் கீத்தாரிஸ்டாக நடித்து அருமையான படைப்பை வழங்கிய ஆனந்தபாபுவிற்குப் பிறகு ஒரு பின்நவீனமான கீத்தாரிஸ்டை இப்பொழுதுதான் பரத் மூலம் பார்க்க நேர்ந்தது. தமிழில் இசை கலைஞனை ஒரு பின்நவீனத்துவமான முறையில் காட்டியிருப்பது கதைக்கு வெளியே சென்று நம்மைப் பிரமிக்க வைக்கும் முயற்சி.

முதல் பாடலே மிகவும் இரசிக்க வைக்கும் இந்திய தத்துவத்தின் மீறல். ஆழ்மனதைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் நான் யார் என்கிற வரட்சிமிக்க தேடலையுமே உரையாடிக்கொண்டிருக்கும் இந்திய தத்துவத் தேடலை, ஒரு கலைஞனின் உச்சக் குரலில் வைத்து சிதறடித்திருப்பது இந்திய மண்ணின் ஊறிக்கிடக்கும் மரபைச் சற்று சலனப்படுத்தியே ஆகும் என நினைக்கிறேன். இந்த ‘நான் யார்’ பாடல் வரிகள் மிக நுட்பமாக நான் எனும் தேடலை உற்பத்தி செய்து அதனை அழித்து மீண்டும் உற்பத்திக்கும் விதம் பாராட்டத்தக்கவை.

எடுத்துக்காட்டாக: “கடவுளைக் கேட்கிறேன் குழம்புகிறேன் நான் யார் என? எனும் இடத்தில் ஒரு சராசரி மனிதன் தன் தேடலின் இறுதியில் அடையும் சோர்வைக் காட்டுகிறது. மேலும், “எனகென்று நண்பர்கள் யாருமில்லை என்று என்னை நானே நண்பனாய் நினைக்கிறேன், எனக்கென்று எதிரிகள் யாருமில்லை என எண்ணி என்னை நானே வெறுக்கிறேன்” எனும் வரி மிக முக்கியமானவை. தன்னால் உணர முடியாமல் போகும் ‘நான்’ மீது கிழக்கிந்திய தத்துவம் மிகவும் அடர்த்தியான குழப்பத்தை உருவாக்கி அவனை வேதம், ஞானம், சமயம், ஆன்மீக குரு என அலைகழித்துவிடுவதை எதிர்த்து தன்னால் அறிய முடியாமல் போகும் நான் மீது தானே வெவ்வேறு அர்த்தங்களை ஏற்படுத்தி அதனை உடைத்து மீண்டும் உற்பத்தி செய்து பார்க்கும் மாற்றுக் கடவுளின் குரலைப் போல ஒலிக்கின்றன பரத்தின் குரல். நான் யார் என்கிற கேள்விக்கு முன் இந்துத்துவமும் இந்திய ஞானமும் வைத்திருக்கும் ஒரே பதில் நான் இந்த உடலில்லை ஆத்மா என்பது மட்டுமே. அந்த வரட்சியை எதிர்த்து ஒரு கலைஞனின் குரல் தனக்கான பாதையை அலைவரிசையை இந்திய தத்துவப் பரப்பின் மீது உருவாக்க முயல்கிறது.

அடுத்ததாக பரத்தின் இசைக்குழு சென்னையை நோக்கி செய்யும் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் கலாச்சார பாதுகாவலர்கள் விமர்சனத்திற்குரிய விடயம். ஒரு ஆனும் பெண்ணும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் கணவன் மனைவியாக இருக்க வேண்டும் அல்லது அண்ணன் தங்கையாக இருக்க வேண்டும் என்ற கலாச்சார தர்க்கத்துடன் அந்தக் குழு பரத்தையும் அவரின் காதலியையும் மிரட்டுகிறது. அவர்களின் கோரிக்கையை மறுக்கும் பரத்தைத் தாக்கிவிட்டு காதலியைக் கடத்திச் செல்லவும் முயல்கிறது. சமூகத்தின் ஒழுக்கத்தை கலாச்சார ரீதியில் பாதுகாக்கிறோம் என்கிற அடையாளத்துடன் தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் ஒரு அதிகாரத்தையே அவர்கள் எளிய மனிதர்கள் மீது பிரயோகிக்கிறார்கள்.

அடுத்தடுத்த கதையின் அடுக்குகளில் ஒரு இலட்சியவாத கனவுடன் சென்னைக்கு வரும் அந்த இசைக்குழு எப்படி சமூகத்தின் மீதான அக்கறையாக மாறுவது என்பதுதான் அடுத்த பகுதியாகும்.

2.    கதை 2 : நெசவாளி சமூகத்தின் பின்காலனிய எழுச்சி

எப்பொழுதுமே காலனிய ஆட்சிக்குக் கீழ் இருந்த சமூகம் அதன் மீதான                  அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகச் சிந்திப்பதில்லை எனும் மொண்ணையான அனுபவத்தையே தமிழ் சினிமா காட்டி வருகிறது. எந்தக் கலைப்படமாக இருந்தாலும்கூட இன்னமும் அதைக் காட்சிப்படுத்தவும் உக்கிரப்படுத்தவும் ஒரு பால்ய காதலின் மீதான மீட்டுணர்தலும் அதனை நோக்கிய பரவசமும் தேவைப்படுகிறது. இதற்கு முன்பான ஒரு நூற்றாண்டு காதலைக் கொண்டாடியதைப் போல இப்பொழுதும் அதையே மீண்டும் மீண்டும் புனிதமாகக் காட்டும் பண்பையும் ஒழுங்கையும் மட்டுமே தமிழில் வெளிவரக்கூடிய கலை சினிமாக்களும் கடைப்பிடிக்கின்றன.

யதார்த்தமான சினிமா என்றாலும் இரத்தமும் சதையும் உண்மையான மனிதர்களும் கொண்ட சினிமா என்றாலும் கதையின் ஆழத்தில் ஒரு உன்னதமான காதல் கதை இருப்பதைத் தவிர்க்கமுடியாமல் கற்றது தமிழ் தொடங்கி பருத்திவீரன் வரை எல்லாம் முக்கியமான சினிமாவும் காதலையும் பால்ய காதலியையும் உச்சமாக ஒற்றைத்தன்மையிலேயே கொண்டாடி வைத்திருக்கின்றன.

வானம் படத்தில் வரக்கூடிய நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காலனிய ஆட்சிக்குப் பின் உருவாகும் பின்காலனிய சமூகத்தின் சேகாரம் என்றே சொல்லலாம். அவர்களின் பின்காலனிய சமூக உருவாக்கத்திற்கென ஒரு வரலாறு உண்டு. நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு முன் தமிழ் சினிமாவில் தன் வறுமையையும் பஞ்சத்தையும் துயரக் குரலோடு ஒப்பாரி வைப்பவர்களாகவும் மிகுந்த கனவு வாழ்க்கையில் தத்தளித்துக்கொண்டிருப்பவர்களாகவும்தான் வந்து சென்றுள்ளார்கள். வானம் படத்தில் வரக்கூடிய அந்தத் தாத்தாவும் சரண்யாவும் அவருடைய கெட்டிக்கார பையனும் நெசவாளி பின்காலனிய சமூகத்திலிருந்து வரக்கூடிய எழுச்சிமிக்கவர்களாக, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாவும் காட்டப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களின் வறுமை வாழ்க்கையின் துயரங்கள் மிகையான முறையில் ஒப்பாரி வைக்கப்படாமல், கதையின் கூரிய கவனத்தைச் சிதைக்காமல் மௌனமாக வந்துவிட்டுப் போகிறது. இதுவரை படிக்காத தன் தலைமுறையின் சாபத்தைத் தன் மகனையாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்பதன் மூலம் வீழ்த்திவிட நினைக்கிறார் ஒரு பின்காலனிய எழுச்சி மனோபாவம்கொண்ட சரண்யா. அதற்காக அவர்கள் மீண்டும் தன்னை இன்னொரு சுரண்டல்வாதிகளிடம் ஒப்படைத்துக்கொள்கிறார்கள். சிறுநீரகத்தை விற்பதற்காக சரண்யா சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். 80 ஆயிரம் ரூபாய்க்கு தீர்மானிக்கப்படும் தொகையில் பாதியை இடைத்தரகர்கள் அபக்கரித்துக்கொள்கிறார்கள். பின்காலினிய சமூகத்திற்குத் தொடர்ந்து வழங்கப்படும் தண்டனை என்பதே சுரண்டலும் ஏமாற்றமும்தான். இப்படம் முழுக்க சரண்யாவின் கிராமத்துக் குரல் நம்மை வன்மையாகப் பின் தொடர்ந்து இம்சிக்கிறது. மகனை வட்டிக்காரர்ர்களிடமிருந்து மீட்கும் போராட்ட உணர்வு அவர்களின் வெகுளித்தனத்தையும் மீறி அழுகையாக வெளிப்பட்டுப் பெரும் துயரத்தை நம் மீது அப்பிச்செல்கிறது.

3.    கதை 3: அனுஷ்கா: விளிம்பு நிலை மக்களின் மீதான அதிகார அமைப்பு

ஒரு தமிழ் சினிமா நடிகை தொடர்ந்து களத்தில் நிலைத்து நிற்க அவர் செய்ய வேண்டியது சில எளிமையான விசயங்கள் மட்டுமே எனச் சொல்லும்போதே எனக்குத் தயக்கமாக இருக்கிறது. தாராளவாதமும் உடல் அரசியலைத் தக்கவைத்துக்கொள்வதும் என ஒரு நடிகை தனது இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதன் மூலமே அவர் உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்படுவார். நாம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து காணாமல் போகும் நடிகைகளை மட்டுமே பார்த்து வருகிறோம். ஆனால் நடிகர்கள் முதிர்ந்த கிழவன் ஆனாலும் அவனின் முதுமையைப் பல கோடி செலவு செய்து மறைத்து அதனை நிறுபிப்பதற்காகக் காதல் பாடலில் ஒரு இளமையான நடிகையும் கொண்டு வரப்படுகிறார். கதாநாயகக் கொண்டாட்டத்திற்காக இன்றும் தமிழில் மிகவும் கொடூரமான ஆபாச அணுகுமுறைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. தனது கொண்டாட்டத்தையும் இருப்பையும் அடையாளத்தையும் வெகு விரைவில் அடுத்த பம்பாய் இறக்குமதியால் இழக்க நேரிடும் நடிகைகள் மிகவும் வன்மமாக ஓரங்கட்டபடுகிறார்கள்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அனுஷ்கா இந்தப் படத்தில் ஏற்றுக்கொண்டிருக்கும் கதைப்பாத்திரம் பாராட்டத்தக்கவையாகும். தனது உடல் கவர்ச்சியாலும் நவீனமான உடல் அரசியலாளும் தனக்கான இடத்தைத் தக்கவைத்திருந்த அனுஷ்கா வானம் படத்தில் துணிச்சலான ஒரு கதைப்பாத்திரத்தில் தரிசனம் கொடுத்துள்ளார். நகரத்தின் பாலியல் தொழில் என்பது ஒரு அதிகார அமைப்பால் சகல சுரண்டலும் ஆக்கிரமிப்பும் கொண்ட நிலையில் நடத்தப்படுவது. அந்த் அதிகார அமைப்பில் ஒவ்வொரு பாலியல் தொழிலாளியும் எப்படிச் சுரண்டப்படுகிறார் எப்படி ஒடுக்கப்படுகிறார் எப்படி விலைப் போகிறார் என்கிற உண்மையை அழுத்தமாக சொல்லும் பகுதிதான் அனுஷ்காவின் கதை அடுக்குகள்.

ராணி என்கிற தலைமை பெண்ணின் மூலம் நடத்தப்படும் அந்தப் பாலியல் தொழில் அமைப்பிலிருந்து தப்பி ஓடி தனியாக வியாபாரம் செய்து ஒரு தனி சக்தியாக வாழ விருப்பப்படும் கதைப்பாத்திரம்தான் அனுஷ்கா. அவருடன் ஒரு அரவாணியும் துணைக்கு வருகிறார். இருவரும் அந்த ராணியிடமிருந்து தப்பியோடி சென்னைக்குக் கிளம்புகிறார்கள். சென்னையில் இன்னொரு இடைத்தரகரால் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் எப்படி விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை வரையறுத்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறார்கள் என்பதையும் காண முடிகிறது.

சென்னையில் அவளைக் கைது செய்யும் காவல்துறை அதிகாரி, “கண்டவனுக்குப் பாய் விரிக்கும் நீ என்னைப் பற்றி பேசுகிறாயா?” எனச் சொல்லி தாக்கப்படுகிறாள். ஒரு விலை மாது மட்டும் அல்ல, அரசியல்வாதிகள் தொடங்கி அதிகாரிகள்வரை எல்லோரும் பணத்திற்கு விலைப் போகிறார்கள் என அழுத்தமாகச் சொல்லும் ஒரு குரல்தான் சரோஜா(அனுஷ்கா). சரோஜாவுடன் கடைசிவரை துணையாக இருக்கும் அரவாணி கதைப்பாத்திரம் படம் முழுக்க மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அரவாணிகளைக் கோமாளிகளாகவும் நகைச்சுவைக்குரிய கேலி செய்ய ஏதுவான பாத்திரமாகவும் ஓடவிட்டு கிண்டலடிக்கும் தமிழ் சினிமாவின் முகத்தை அழித்தொழிக்கும் விதமாக வானம் படத்தில் சரோஜாவுடன் வரும் கற்பூரம் கதைப்பாத்திரம் தனித்துவமாக அன்புமிக்கவராகக் காட்டப்பட்டிருக்கிறார். அரவாணிகள் அன்பும் கருணையும்மிக்கவர்கள் என்பதைப் போல சரோஜாவுக்குத் துணையாகக் கடைசிவரை கற்பூரம் வருகிறார். “குப்பென எரிந்து அனையும் வாழ்க்கை சார்” எனத் தன் பிறப்பையும் வாழ்வையும் காவல்துறை அதிகாரியிடம் சொல்லும்போது அதில் எந்தவிதமான ஏற்பாடும் மிகையுணர்ச்சியும் இல்லாத அசலான வலி நிரம்பிய குரலாக மட்டுமே கேட்கிறது.

4.    கதை 4- நடுத்தரவர்க்கத்து மாயை- கேபள் ராஜா

கேபள் ராஜாவாக படத்தில் வரும் சிம்புவின் கதை நகரத்தின் ஒதுக்குப்புறமான குப்பத்தில் நிகழ்கிறது. குப்பத்தின் வட்டாரத்திலுள்ள வீடுகளுக்குத் தொலைக்காட்சி கேபள் பூட்டும் நடுத்தரவர்க்கத்தின் கனவுகளோடு மாயையில் வாழும் ஒரு இளைஞனின் கதைத்தான் அது. நடுத்தரவர்க்கத்தின் வாழ்வென்பதே கனவுகளால் நிரம்பியது. அவர்களின் கட்டுமானம் என்பது எப்பொழுது வேண்டுமென்றாலும் சரிந்து காணாமல் போகக்கூடியது. மேல்தட்டு வாழ்க்கையைப் பார்த்து பார்த்து அதன் சரி பாதியையாவது அனுபவித்துவிட வேண்டும் என தன் வாழ்நாளையே அந்த இலட்சியத்திற்கு நிகராகக் கட்டமைத்துக்கொள்கிறார்கள்.

நடுத்தரவர்க்கத்தின் இலட்சியவாதம் என்பது மிக நீண்ட கற்பனையாகும். அவர்கள் ஒரு வாழ்வையும் அதனுள் அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் உருவாக்கி வாழ்நாள் முழுவதும் அதை நோக்கியே தனது அனைத்து சக்தியையும் திரட்டி போராடிக்கொண்டிருப்பார்கள். இம்மாதிரியான வாழ்வு உருவாக்கம் நகரத்தின் அடித்தட்டு நிலையிலும் நகரத்தின் பரப்பரப்பான முகத்திலும் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நகரத்தை விட்டு தனி தனி குழுக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் வசதி படைத்த மேல்தட்டு வர்க்கத்தின் இருப்பை நுகர்ந்து அதனைத் தன் இலட்சியவாதமாக ஏற்றுக்கொண்டு நடுத்தர வர்ர்க்கம் நகரத்தின் உழைப்பு மையமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

கடன் வாங்கிவிட்டு அதனைச் செலுத்த முடியாமல் தொடக்கக் காட்சியிலேயே வட்டி முதலைகள் கேபள் ராஜாவைத் துரத்துகிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சந்துகளில் புகுந்தும் மாடிகளில் ஏறியும் கேபள் ராஜா ஓடுகிறான். தப்பி ஓடும்போது அவன் பேசிக்கொள்ளும் வசனங்கள் வெறும் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிறகு பெரும்பாலான நடுத்தரவர்க்கத்து இளைஞர்களுக்கு இருப்பது போல மிகவும் அழகான வெள்ளைத் தோல் காதலி இவனுக்கும் இருக்கிறார். அவளுக்கு முன்பாகத் தன்னை ஒரு பெரிய பிம்பமாகக் காட்டிக்கொள்வதற்காக கேபள் ராஜா வழக்கமான பொய்களை எழுப்பி அவனைக் கட்டமைத்துக்கொள்கிறான். நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் மனகோட்டை என்பது தொட்டதும் படாரென வெடித்துவிடும் சவர்க்கார நுரையைப் போன்றது. அது போலத்தான் ராஜாவும் அவனது குப்பத்து வாழ்வின் பின்புலத்தை மறைத்துவிட்டு அவளுக்கு நிகரான ஒரு பணக்காரத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறான். குறிப்பாக பணக்கார வர்க்கத்தின் குறியீடாக காட்டப்படுவது ஆங்கில பேச்சு.

காதலிக்காகவும் தான் உருவாக்கி வைத்திருக்கும் மேல்தட்டு மாயைக்காகவும் எப்படி கேபள் ராஜா ஒரு வன்மமான கதைப்பாத்திரமாக மாறுகிறான் என்பதுதான் அவனுடைய இருப்பின் உச்சம். ஒவ்வொரு எளிமையான மனிதனும் இப்படித்தான் தன்னுடைய கனவுலகத்தை நிஜமாக்குவதற்காக வாழ்வில் பல சமரசங்களையும் வன்முறைகளையும் கடந்து போய்க்கொண்டே இருக்கிறான். அவனுடைய உழைப்பு மிக மோசமாகச் சுரண்டப்படுவதும் நடந்துகொண்டே இருக்கின்றன.

5.    கதை 5- மிதவாத இஸ்லாமிய மார்க்கமும் தீவிரவாதமும்

தன் மனைவி தம்பி என சிறு குடும்பமாக வாழும் சலீம் (பிரகாஷ்ராஜ்) ஒரு இந்து தேர் திருவிழாவில் வைத்து அவமானப்படுத்தப்படுகிறார். இந்துத்துவ ஆசாமிகளால் தாக்கப்பட்டு தன் மனவியின் கருவில் இருக்கும் இரு குழந்தைகளையும் இழக்கின்றான். இஸ்லாமியனாக இருக்கும் ஒரே காரணத்திற்காக சமூகத்தில் வாழும் எளிமையான மனிதர்கள் எப்படி மதத் தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறார்கள் என்பதைத்தான் இந்தக் கதைச் சொல்லிச் செல்கிறது.

வழக்கமாக தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வெறும் மதப் பயங்ரவாதிகளாக மட்டுமே காட்டி, தனது இந்துத்துவ சார்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்த சூழலில் இஸ்லாமியர்களுக்குள் மதத்தின் மீதான மிதவாத புரிதலும் பின்பற்றுதலும் உடைய எளிமையான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை சலீம் கதைப்பாத்திரம் உணர்த்துகிறது. சலீமின் தம்பி அமீர் தன் சமூகத்தின் மீது காட்டப்படும் வெறுப்பைக் கண்டு மனமுடைந்து தீவிரவாதக் கும்பலில் சேர்ந்து சென்னையில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. அவனைத் தேடி சலீம் சென்னைக்குக் கிளம்புகிறார். அங்குத் தீவிரவாதி என நம்பப்பட்டு சலீம் கைது செய்யப்படுகிறார். இந்து காவல் அதிகாரிகளால் தொடர்ந்து வதை செய்யவும் படுகிறார்.

இஸ்லாமிய மார்க்கத்தின் சகிப்புத்தன்மைகளையும் புனிதங்களையும் ஒரு இஸ்லாமியன் சக உயிர்களின் மீது அன்பு செலுத்தக்கூடியவன் எனத் தீர்க்கமாக உணர்த்தும் ஒரு கதைப்பாத்திரம் சலீம்.

கதையின் உச்சம்

கதையின் கடைசிக்கட்டத்தை நோக்கி அனைத்து கதை அடுக்குகளையும் மிக நேர்த்தியாக நகர்த்திக்கொண்டு வந்ததுதான் திரைக்கதை சாமர்த்தியம். எங்கேயும் மிகையான உறுத்தல்கள் இல்லாமல் இரசிக்கும்வகையில் பொது மருத்துவமனைக்கு ஐந்து கதை அடுக்குகளையும் ஒன்றாக இணைக்கிறார் இயக்குனர். கதையின் இறுதி காட்சிகளில் இஸ்லாமிய தீவிரவாத கும்பல் குண்டு வைத்து மருத்துவமனையைத் தகர்க்க முயல்வதையும் அவர்களைத் தடுத்து நிறுத்தி அனைவரையும் காப்பாற்றுவதைக் கேபள் ராஜாவும் பரத்தும் செய்கிறார்கள். அந்தச் சம்பவத்தில் கேபள் ராஜா மரணமடைகிறான். புகழ்பெற்ற கீத்தாரீஸ்ட் ஆக வேண்டும் என்ற கற்பனையுடன் வரும் பரத் தன் வலது கையை இழக்கிறான்.

கார் விபத்தில் சிக்கிக்கொண்ட ஒரு கற்பனிப் பெண்ணை அழைத்துக் கொண்டு வரும் பரத்தும், ஏழை நெசவாளியிடமிருந்து திருடிய பணத்தைத் திரும்பிக் கொடுக்க வரும் கேபள் ராஜாவும், தன் மகனின் கல்விக்காக தன் சிறுநீரகத்தை விற்றுவிட்டு வரும் சரண்யாவும், காலில் துப்பாக்கி சூடு பட்டு அங்கு வந்து சேரும் சலீமும், தனக்கு ஒரே துணையாக இருக்கும் கற்பூரத்தைக் காப்பாற்றுவதற்காக வரும் சரோஜாவும், சமூகத்தின் பல்வேறு நிலைகளில் வாழக்கூடியவர்களாக இருந்தாலும், அவர்களின் மனதைச் சக மனிதன் மீதான அன்பு மட்டுமே இயக்கிக்கொண்டிருக்கிறது எனக் காட்டி படத்தை ஒரு பின் காலனிய சமூகத்தின் எழுச்சி குரலாக ஓங்கி ஒலிக்கவிட்டு முடிக்கிறார் கிரிஸ்.

கடனைச் செலுத்திவிட்டு தன் பேரனை மீட்டுக்கொண்டு வரும் நெசவாளியும் அவரது பேரனும் வானத்திற்குக் கீழாக மகிழ்ச்சியுடன் நகர்ந்து செல்வதைக் காட்டுவதன் மூலம் இப்படம் சமூகத்தை நோக்கி ஒரு கவித்துவமான உபதேசத்தை முன்வைப்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன். படத்தின் பல இடங்களில் மசாலாத்தன்மை நிரம்பிய காட்சிகளும் ஆடலும் பாடலும் இருக்கவே செய்கின்றன. அதனையெல்லாம் மீறி இப்படத்தை ஏற்றுக்கொள்ளும் சாத்தியப்பாடுகளையும் வானம் வைத்திருப்பதுதான் படத்தின் வெற்றி.
  
ஆக்கம்: கே.பாலமுருகன்
 சுங்கைப்பட்டாணி, மலேசியா
 

1 comment:

விஜய்ஆனந்த் said...

அருமையான விமர்சனம் ..... நான் இந்த திரை படத்தை தெலுங்கில் மட்டுமே பார்த்தேன்.. நீங்கள் கூறியது அப்படியே உள்ளது . நன்றி