பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள் வாழக்கூடிய இடம். கிராமத்தின் வாசலில் கிணறு போன்ற இடத்தில் மணி ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்துவிட்டால் அந்த மணி ஒலிக்கப்படுகிறது. இந்த மணியும் மணி சத்தமும் அக்கிராமத்திலுள்ள மக்களின் குலத்தொழிலைக் காப்பாற்றுவதற்கான ஒரு குறியீடாகவே கருதுகிறேன். அந்தக் கிராமத்தின் குலத்தொழிலே திருட்டுத்தான். அதைச் செய்யாவிட்டால் சாமி குற்றம் ஆகிவிடும் என நம்புகிறார்கள். ஆகையால் காவல்துறையின் வருகையை அறிவிப்பதற்குரிய ஒலியை அந்த மணி எழுப்புகிறது.
வழக்கமான பாலா படங்களில் ஆழப்புதைந்திருக்கும் குரூரங்கள் பரவலாக இல்லாமல் போனாலும், படம் முழுக்க மேட்டுக்குடிகளுக்கு அடித்தட்டு மக்களின் வேடங்களைப் போட்டிருப்பது ஆங்காங்கே அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக ஆர்யா விஷாலின் அப்பா ஷிரிகாந்த், அம்பிகா போன்றவர்கள். அம்பிகாவின்(விஷால்- அரவாணியின் அம்மா) குரல் கதைக்குள்ளிருந்து ஒலிக்காமல் கதைக்கு வெளியே சென்று அந்நியத்தன்மையை உண்டாக்கி படத்திற்குப் பலவீனத்தைச் சேர்க்கிறது.
கதை: ஒரு குக்கிராமத்தில் வாழக்கூடிய அடித்தட்டு மக்கள், அந்தக் கிராமத்தின் வீழ்ச்சியடைந்த ஜமீனுக்கு எப்படிக் காலம் முழுக்க விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதே. விஷால் தன்னை ஒரு மாபெரும் கலைஞனாகப் பாவித்துக்கொண்டு குலத்தொழிலான திருட்டை வெறுக்கும் ஒரு அரவாணியாக நடித்துள்ளார். ஆர்யா பிதாமகன் படத்தில் சூர்யா செய்த நகைச்சுவை கதைப்பாத்திரத்தைச் செய்ய முயன்று தோல்வியடைந்துள்ளார். பல இடங்களில் வசனமும் நகைச்சுவையும் சோர்வுடன் நீள்கிறது.
எவ்வளவு பெரிய சாகச கதைநாயகனாக இருந்தாலும் அவனுடைய பிம்பத்தின் மீதுள்ள அனைத்து பிரமிப்புகளையும் அகங்காரங்களையும் உடைத்து அவனை ஒரு நல்ல கலைஞனாக மாற்றும் ஒரு விசயத்தை மட்டும் பாலா தமிழில் செய்துகொண்டு வருவதை மறுக்க முடியாது. ஆனாலும் பாலாவின் மூலம் உருவான படைப்பாளியின் ஆழ்மனதில் தான் ஒரு ஆணாதிக்க சமூகத்தைச் சேர்ந்தவன் என்கிற உணர்வும் சேர்த்தே விதைக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது. உடலில் ஒரு பாகத்திற்கு முழுமையான கவனம் செலுத்தி, இன்னொரு பாகத்தை அரைகுறையாக வளர்த்துவிட்டிருப்பது போல விசாலுக்கும் ஆர்யாவிற்கும் பெரிய இடைவெளியை உருவாக்கியுள்ளார்.
இசை: படத்தின் ஒட்டு மொத்த உணர்விற்கும் சற்றும் தொடர்பில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. பாடல்களின் இசையில்கூட கிராமத்து சாயல் இல்லை. படத்தின் பெரிய வீழ்ச்சியை முன்னறிவிப்பு செய்வதே இசைத்தான் என நினைக்கிறேன். ஜமீந்தாராக நடித்திருக்கும் ஜெயபாலனின் கதைப்பாத்திரம் ஓரளவிற்கு திருப்தியளிக்கிறது.
அரவாணி
விசால் ஜமினுக்கு மிகுந்த விசுவாசமுடைய ஒரு அரவாணி. ஆனால் பாலா ஒரு அரவாணியைக்கூட முழுக்க அதன் கூர்மையுடன் படைத்துக்காட்டுவதில் கேள்வியையே ஏற்படுத்தியுள்ளார். அரவாணிகளுக்குள் பலவகை இருக்கிறார்கள், சிலர் வளர்ப்புமுறையிலும் சிலர் பிறப்பிலேயே என அந்த நிலையை அடைந்திருப்பார்கள். விஷால் அப்படி ஆனதின் எந்த நியாயமும் படத்தில் அக்கறையெடுத்துக்கொள்ளப்படவில்லை. ஒரு அரவாணியை சமூகத்தின்/அடித்தட்டு மக்களின் ஒரு அங்கமாகக் காட்ட முயலும் பாலாவின் அரசியல் என்ன?
கதைநாயகனை வித்தியாசமாகக் காட்ட முயலும் ஒரு விநோதமான முயற்சி மட்டும்தானா அல்லது அரவாணிகள் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் என்பதற்காக அவர்களின் மனநிலைகளைக் காட்ட பாலா எடுத்துக்கொண்ட களமா?
அரவாணிக்குள் ஒளிந்திருக்கும் ஒரு ஆணுக்குரிய திரட்சியைச் சாகடிக்காமல், அவரை ஒரு அரைகுறை படைப்பாகவே காட்டியிருப்பது போல தோன்றுகிறது. பெண் வேடமிட்டு தன்னை ஒரு கலைக்குள் கரைக்க முயலும் அவனுடைய ஆழ்மனம்தான் அவனை ஒரு அரவாணியாக்கியதா அல்லது சிறுவயது முதல் பரதம் பழகி அதில் ஆழ்ந்து போனதால் அவனுடைய இயல்பு அப்படியானதா? படம் அரவாணியின் அக உலகையும் புற உலகையும் ஆராயாமல் மேலோட்டமாக ஏதோ கதைநாயகனின் சாகசம் போல வேடம் போல மறைந்து செல்கிறது. விஷால் ஒரு பக்கம் அரவாணியின் ஒரு சில மனநிலைகளை அடைவது போல ஒரு சராசரி ஆணைப் போல பெண்ணைக் கவர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தும் காட்டுகிறான். அவனுடைய கதைப்பாத்திரம் கொள்ளும் இந்த முரண் ஏன்?
தனக்குள் ஒரு ஆழ்ந்த கலைஞன் இருப்பதையும் அவன் அங்கீகரிக்கப்படாமலே போவதன் வலியையும் சூர்யா வருகை தினத்தன்று மேடையில் தனது தனித்திறமைகளைச் செய்துகாட்டி விஷால் அடையும் கண்ணீர் விளிம்புநிலை மக்களின் கலைக்கான குரலாகத் தோன்றுகிறது. பரதநாட்டியத்தின் முக்கியமான உச்சங்களான முக நவரசங்கள் அனைத்தையும் மிகவும் அற்புதமாகத் தனது முகத்தில் விஷால் காட்டும் விதம் அசத்துகிறது.
ஆனால் அரவாணி என்றாலே அவருக்குள் மிகுந்த நெகிழ்வுத்தன்மையை உண்டாக்கி ஆண்களிடம் கும்மியடித்துக்காட்டி கேலியாக்க முயலும் எதையும் பாலா செய்யாதது திருப்தியை ஏற்படுத்துகிறது. விஷாலின் அரவாணி குணத்தைக் கதைக்குள் மேலோட்டமாக வெளி அலங்காரம் போல நுழைத்துள்ளார். ஆனால் வில்லன்களை அடித்து நொறுக்கி தன் எஜமானைக் கொன்றவனைப் பலி வாங்கி தன் ஆதங்கத்தை அடக்கும்போது சராசரி தமிழ் சினிமாவின் ரௌத்திரமே தெரிகிறது. பிதாமகனில் சூர்யாவை வில்லன்கள் சாகடித்த பிறகு விக்ரம் அடையும் ரௌத்திரம்தான் இந்தப் படத்திலும் விஷால் அடைவது. ஆக, பாலாவின் கதைநாயகன்களுக்குத் தன் ஆக்ரோசத்தையும் ஆண்மையையும் வெளிப்படுத்த கட்டாயம் ஒரு வில்லன் தேவை. தெய்வங்களின் சக்தியின் உக்கிரத்தைத் திரட்டிக்காட்ட எப்படி ஒரு தீயவனின்/சாத்தானின் கொலை முக்கியமானதோ அதே போலத்தான் பாலாவின் படங்கள் எதிரொலிக்கின்றன.
அடித்தட்டு கதைநாயகன்கள்
பாலாவின் படத்தில் இரண்டே வகையான அடித்தட்டு சமூகத்தின் கதைநாயகந்தான் தமிழ் சினிமா உலகம் கண்டடைந்துள்ளது. ஒன்று தனக்கு உண்டான புறக்கணிப்புகள், சுரண்டல், வறுமை என எதைப் பற்றியும் கவலை இல்லாத வெறும் நகைச்சுவையையும் கிண்டலையும் செய்துகொண்டு போதை பிடித்து அலைபவன். இரண்டாவதாக சராசரி மனிதர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு விநோதமாகவும் குரூரமாகவும் இயங்கக்கூடியவன். இதை இரண்டையும் கதைக்குள் சந்திக்க வைத்து கதையின் மையத்தைச் சரிப்படுத்தக்கூடிய எல்லாம்விதமான ஆணாதிக்க சிந்தனையும் பாலாவிடம் உள்ளது.
பாலாவின் படங்கள் ஆண்களின் திரட்சியையும், வன்மத்தையும், வெறுப்புகளையும் காட்டக்கூடியது. இந்த நிலப்பரப்பு சந்தித்த எல்லாம் சமூகமும் ஆணை வழிப்பட்டு ஆணைச் சார்ந்து உருவாகியது என்பதை மீண்டும் மீண்டும் தன் படத்தின் வழி சொல்லவே பாலா தன்னை ஒரு சினிமா கலைஞனாக உருவாக்கிக்கொண்டுள்ளார். ஆனால் பாலாவின் கவனமும் கூர்மையும் உலகப் பரப்பிற்கானது அல்ல, அவரிடம் மிகத் தீவிரமாக ஒரு சிறு வட்டத்திற்குள் வாழும் மனிதக் கூட்டத்தின் எதார்த்தங்களைக் காட்டக்கூடிய ஆற்றல் இருக்கிறது. குறிப்பாக அது இந்திய கிராமங்களின் எல்லைக்குள் சுருங்கி வாழும் விளிம்புநிலை மனிதர்களைச் சுற்றியே கழுகு போல வட்டமிடுகிறது. ஆனாலும் விளிம்புநிலை மக்கள் என்றாலே ஏதோ ஒரு கொடூரமான மரணத்திற்கு முன் சலனப்பட்டு அதைக் கண்டு பதறவும் கதறவும் பிறகு அதை நோக்கி ஆண்மையுடன் திரண்டு தன் எதிர்ப்பைக் காட்டக்கூடியவர்களாவும் அல்லது எதிலுமே ஒட்டாமல் நகைச்சுவை செய்துகொண்டு அலைவதாகவும் மட்டுமே காட்ட முயல்கிறார். இது மட்டுமா அடித்தட்டு மக்களின் வாழ்வு? அவர்களை நோக்கி தன் கலை தரிசனத்தை விரிக்கும் ஒரு கலைஞன் அடையக்கூடிய எல்லை இவ்வளவுதானா என்கிற கேள்வியே பாலாவின் மீது எனக்கு எழுகிறது.
ஒரு கிராமம் எத்துனைக் கொடூரமாக ஆண்டான் அடிமையாகவும் அல்லது ஜமிந்தார்களின் மீதான விசுவாசத்தின் வழியாக ஒடுக்கப்பட்டும் வருகிறது என்பதை இலக்கியப் பிரதியில் வாசித்து உணர்ந்திருக்கிறேன். நான் கூட முன்பு ஒரு மலாய்க்கார கம்பத்தில் வசிக்கும் போது “ கிராமத்தலைவர்” மீது அந்தக் கிராமம் கொண்டிருக்கும் விசுவாத்தையும் அதன் இன்னொரு பகுதியில் அடர்ந்து வளர்ந்திருக்கும் கொடூரத்தின் நிழலையும் நேரில் தரிசித்தவன். ஆனால் பாலா இப்படத்தில் வீழ்ச்சியடைந்து ஒரு ஜமீன் எப்படி அடித்தட்டு மக்களுடன் அன்பாகப் பழகுகிறது என்பதைக் காட்டியிருக்கிறார். வீழ்ச்சியடைவதன் மூலம்தான் அதிகாரமும் எளிய மக்களும் இணைவார்கள் என ஏதும் பரிந்துரை செய்கிறாரா? அடித்தட்டு மக்கள் ஒரு ஆண்டானின் வீழ்ச்சியை எப்படிச் சரிக்கட்டுகிறார்கள் எனும் சூட்சமத்தை அன்பு, அரவணைப்பு எனும் மாயையின் மூலம் கட்டியெழுப்பி அதை ஒரு படமாக்கும் முயர்சியா?
சீனாவின் மன்னாராட்சி ஒடுங்கி போன பிறகு அதன் கடைசி மாமன்னன் அருங்காட்சியகம் ஆகிவிட்ட தன்னுடைய அரண்மனைக்கு வந்து தன்னுடைய சிம்மாசனத்தைப் பார்த்து மிரள்வது போல “the last emperor of china” எனும் படத்தில் ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறேன். எம்.கே.குமார் வீழ்ச்சியடைந்து போன தன்னுடைய ஜமிந்தார் வாழ்வின் மீதான வெறுப்பையும் மனக்கசப்புகளையும் சோர்வையும் தலித்துகளுடன் இணைந்து கடக்க முயல்கிறார். இப்படியொரு வீழ்ச்சியை அரவணைத்துக்கொண்டு விசுவாசம் நிறைந்தவர்களாக கள்ளத்தொழில் செய்து கொண்டு வாழும் அந்த மக்கள் வாழும் நிலப்பரப்பின் நிதர்சனம் படத்தில் காட்டப்பட்டதா? அநேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
பாலாவின் ஆழ்மனதில் செயல்படும் ஒன்று, விளிம்புநிலை மனிதர்களுக்கான ஏதோ ஒரு நியாயத்தைச் சொல்ல முயன்று கொண்டிருக்கிறது. அது சில சமயம் படுத்தோல்வியடைந்து பாறையில் மோதி சரியும் சொற்களாகத் தமிழ் சினிமா உலகில் ஒட்டாமல் கரைந்துவிடுகிறது. அவரால் ஒரு ஆண்மைமிக்க கதைநாயகனையே உருவாக்க முடிகிறது. சூர்யாவுக்குள் இருந்த தாழ்வுமனப்பான்மை, விக்ரமிற்குள் இருந்த மென்மை, விஷாலுக்குள் இருந்த முரட்டுத்தனம் என அனைத்தையும் செதுக்கி அவனுக்கு ஒரு ஆண் என்கிற அங்கீகாரத்தைக் கொடுக்கக்கூடியவர். கமர்ஷல் சினிமா உருவாக்கி வைத்திருக்கும் மலிவான கதைநாயகத்துவத்தின் கொண்டாட்டங்களைச் சிதைத்து மீண்டும் இவர் ஒரு பாணியிலான கதைநாயகத்துவத்தையே செய்து காட்டுகிறார்.
கே.பாலமுருகன்
7 comments:
படத்தை பார்த்துவிட்டு இதற்கான கமெண்ட் போடுகிறேன் நண்பரே... உங்கள் விமர்சனம் என்னால் முழுமையாக அவதானிக்கமுடியவில்லை.
Pch....
Avar jayabalan alla , g n kumar
ஏங்க படத்த விமர்சனம் பண்ணி இருப்பிங்கன்னு உங்க ப்ளாக்கு வந்தா படத்த விட பாலாவ தான் ரொம்ப விமர்சனம் பண்ணி இருகிங்கங்க. விடுங்க சார், படத்த இன்னும் பார்க்கல , ஆனா பாலா படம் நிச்சயம் பார்க்கணும் :-)
விமர்சனம் நல்லாயிருக்கு.. இப்போதுதான் உங்கள் தளம் வந்தேன் எல்லாம் அழகு,, பின் தொடர்கிறேன்
விரசமான வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
விரசமான வசனங்களை தவிர்த்திருக்கலாம்!!!
Post a Comment