Tuesday, August 9, 2011

நேர்காணல்: “முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்” - மஹாத்மன்

நேர்காணல் / நிழல்படம்: கே.பாலமுருகன்

மஹாத்மன் சிறுகதைகள்' எனும் சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான வாசக கவனத்தைப் பெற்றவர் எழுத்தாளர் மஹாத்மன். சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு எழுத்துப்பிரதிகளைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் இவர் ஒரு நிலைத்தன்மையற்ற வாழ்வினைக் கொண்டிருக்கிறார். அதையே அவர் படைப்பின் மைய சக்தியாகவும் உருமாற்றுகிறார். தன்னைப் பல நேரங்களில் 'பரதேசி' என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் இவரின் இடமும் இருப்பும் சூட்சுமமானது. ஆனாலும் எல்லாவகை வாழ்வியல் சிக்கல்களோடும் அவர் தன்னை இலக்கியத்தில் பிணைத்தே வருகிறார். 'வல்லினம்' இதழின் நேர்காணலுக்காகச் சுங்கைப்பட்டாணி வந்த அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். சில இடை கேள்விகள் தொலைபேசிவழி கேட்டுப்பெற்றது. நேர்காணலை எழுதி முடித்தப்பின் வாசித்தபோது ஒரு வெறுமை இருந்தது. அது அவ்வப்போது மஹாத்மன் ஏற்படுத்தும் வெறுமையா என்று புரியவில்லை.
கேள்வி: எப்பொழுது எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவானது? உங்கள் எழுத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

மஹாத்மன்: தைப்பிங் சிறையில் இருக்கும்போது இடைவிடாமல் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாயின. சக கைதிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்குக் கடிதங்கள் எழுதினேன். சிறுகதை தொகுப்பிற்கு பிறகு கூடுமானால் இவ்வாண்டில் ஒரு கவிதை தொகுப்பும் அடுத்தாண்டு ஒரு நாவலும் வெளியிட உத்தேசம். அந்த எழுத்துப் பணிகளில் முழு மூச்சாய் என்னை ஈடுப்படுத்திக்கொண்டு வருகிறேன்.

கேள்வி: நீங்கள் உங்களை ஏன் தொடர்ந்து ‘பரதேசி’ என அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்?

மஹாத்மன்: ஒரு காலக்கட்டத்தில் முற்றிலுமாய் பரதேசியாய் அலைந்து திரிந்தேன். படைத்தவன் மீதான என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை வெளிப்படுத்துவதற்காகச் செயல்படுத்தியதுதான் பரதேசி திரிதல். படைத்தவனிடமிருந்து பேரற்புதம், பேராச்சரியம், பேரதிசயம் ஒன்றும் நிகழ்த்தப்படாததால் என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை எழுத்தில் வெளிப்படுத்தி வருகிறேன்.

கேள்வி: ஆரம்பக்காலத்தில் தாங்கள் மஹாத்மன் மற்றும் நண்பர்கள் எனும் பெயரில் எழுதி வந்தீர்கள். யார் அந்த நண்பர்கள்? புனை பெயரின் அவசியம் என்னவாக இருந்தது?


மஹாத்மன்: என் 16 ஆவது வயதில் வானம்பாடிக்குக் கவிதை அனுப்புவதற்காகப் புனை பெயரைத் தேடினேன். உண்மை பெயரான பை. மகேந்திரா என்று எழுத எனக்கு இஷ்டமில்லை. வித்தியாசமானதாகவும் தனித்தன்மை இருப்பதற்காகவும் பெயரை யோசித்துக்கொண்டிருக்கும்போது 16 வயது வரை என்னை அதிகம் பாதித்தது யார் என்ற கேள்விக்கு மஹாத்மா காந்திதான் கிடைத்தார். ஆரம்பப்பள்ளி சீருடையில் வரிசையாக நின்று, இலவசமாய் சினிமா பார்த்தது, அப்போதுதான். அந்த ஆங்கில சினிமா பசைப்போல மனதில் ஒட்டிக்கொண்டது. பணம் சேமித்து நானாகத் தேடிச்சென்று வாங்கிய புத்தகம் மஹாத்மா காந்தியினுடையது.

ஆரம்பகாலத்தில் டி.ஆர் மஹாத்மன் என்றுதான் எழுதி வந்தேன். நெருங்கிய இலக்கியத் தோழி ஒருவர் ‘டி.ஆர் வேண்டாமே’ என்று சொன்னதும் நீக்கிவிட்டேன். புக்கிட் பிந்தாங்கில் பாதுகாவலனாக வேலை செய்யும்போது ஒவ்வொரு ஞாயிறுகளிலும் பத்திரிகை விநியோகம் செய்த திரு.முரளிதரனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வார மாத சிற்றிதழ்களுடன் தமிழ், ஆங்கில நாவல்களும் வந்து சேரும். கம்பெனி கார் ஓட்டுனர் திரு.இராஜங்கம்தான் “இங்க ஒரு தமிழ் எழுத்தாளன் இருக்கிறான்...” என்று கம்பெனிக்குள் செய்தியைப் பரப்பிவிட்டவர். அவர் மூலமாக ‘நண்பர்கள்’ முதலில் எட்டிப் பார்த்தார்கள் பிறகு ஒட்டிக்கொண்டார்கள். ஒவ்வொரு சனிதோறும் இலக்கிய அரட்டை ஆரம்பமானது. புத்தகங்கள் கைமாறின. விவாதப் பொருளைத் தேர்வு செய்து விவாதித்து கருத்துகளைச் சொல்லி, ‘எழுதிப் போடு’ என்றார்கள். அவரவர் கருத்துகளைச் சொன்னதால் அவரவர் பெயர்களையும் எழுதுவது நியாயமாகப்பட்டது. பிறகு, ஞாயிறு ஏடுகளுக்கும் தென்றல், நயனம், இதயம் இதழ்களுக்கும் எழுதி அனுப்பினேன். போகப் போக, ஆங்கில இலக்கியத்தை ஒப்பிட்டு தமிழ் இலக்கியம் விவாதிக்கப்பட்டது. விவாதம் சூடானபோது பொசுங்கி சாம்பலானது. மன இறுக்கம் அதிகமானபோது அவ்விடம் விட்டு அகன்றேன்.

கேள்வி: நண்பர்கள் எனும் புனைப்பெயரில் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் நீங்கள் தீவிரமான இலக்கிய வாசிப்பிலும் கலந்துரையாடல்களிலும், தீவிர இலக்கிய அறிமுகம் உடையராகவும் இருந்திருக்கிறீர்கள். அதே காலக்கட்டத்தில் தினசரி பத்திரிக்கைகளில் ஜனரஞ்சக கதைகள் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். வாசிப்பும் எழுத்தும் இப்படி முரண்பட்டுப் போனதற்கு என்ன காரணம்?

மஹாத்மன்: என்னோடு இலக்கிய விவாதம் பண்ணிய தோழர் தோழிகளின் ஆலோசனை அது. ஜெயகாந்தனை முன்மாதிரியாகச் சொல்லி உசுபேற்றிவிட்டார்கள். ஆனால் என் கவிதை படைப்புகளுக்குச் சம்பந்தமே இல்லாமல் நடிகைகளின் பின்புறத்தைக் காட்டி வெளியிட்டார்கள். அவ்வளவுதான். ஆத்திரம் பொங்கியது.

கேள்வி: பத்தி, கவிதை, சிறுகதை எனப் பல வடிவங்களில் எழுதி வரும் நீங்கள், உங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்? சிறுகதையாளராகவா? பத்தியாளராகவா அல்லது கவிஞராகவா?

மஹாத்மன்: சிறுகதை, கவிதை, பத்தி, நாவல்களில் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறேன்.

கேள்வி: உங்களுடைய இலக்கிய வளர்ச்சியில் மலேசியாவில் உருவாகி வந்த இலக்கிய சிற்றிதழ்களின் பங்களிப்புகள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.

மஹாத்மன்: காதல், அநங்கம் (பறை), மௌனம் போன்ற இதழ்களில் என் படைப்புகள் வெளிவந்து என் இலக்கிய படைப்பு தாகத்தைத் தீர்த்துக்கொள்ள முடிந்தது. சிறுகதை தொகுப்பு வெளிவந்த காரணமே காதலும் வல்லினமும்தான். இனி வெளிவரப்போகும் கவிதை தொகுப்பிற்கு அநங்கமும் மௌனமும் காரணம்தான். இந்த இதழ்களின் மூலமாக அறிமுகமான சீ. முத்துசாமி மற்றும் இளங்கோவன் அவர்களும் என்னை நாவல் எழுதும்படி தூண்டினார்கள்.

கேள்வி: உங்கள் பார்வையில் இலக்கியம் என்பது என்ன?

மஹாத்மன்: புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. இலக்கியம் என்பதற்கு மாற்றுக் கருத்துகள் பல உள்ளனவா என்ன? ஆனால், இலக்கியத்தைப் படைப்பவனுக்கும் படைப்புக்கும் உள்ள தொடர்பு, நோக்கம் குறித்தான வெளிப்பாடுகள் இன்று உலக இலக்கிய அரங்கில் பேசப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் மாய யதார்த்த இலக்கியமும் இன்னொரு பக்கம் சமூகவியல் கலகக் குரல் இலக்கியமும் வெற்றிப்பெற்று வருகின்றன. மாய யதார்த்தம் வசூல் ரீதியில் பணம் குவிக்கின்றன. சமூகவியல் கலகக் குரலாக போர்க்குரலாக எழும்பி புரட்சி செய்கின்றது. இந்த மாதிரியான கலக எழுத்துகளுக்கு வெற்றி நிச்சயம் கிடையாது. பண வசூல் – அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. கைதும் சிறையும் நாடுக்கடத்தலும் கிடைக்கப்பெறலாம். இந்த நாட்டில் என்றால், விசாரணையே இல்லாத ISA சிறையிருப்பும் கிடைக்கலாம். குறைந்தபட்சம், இண்டர்லோக் நாவல் எரித்து சாம்பலாக்கப்பட்டதைப் போன்றும் நடக்கலாம். உண்மை வெளிப்பட்டதும் கலங்கடிக்கும். கலங்கடிக்கும் உண்மையாக இலக்கிய படைப்பு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

கேள்வி : மாய யதார்த்தம் வசூல் ரீதியில் பணத்தைக் குவிக்கின்றன என எப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் பார்வையில் மாய யதார்த்தம் என்றால் என்ன?

மஹாத்மன் : மாய யதார்த்தம் பற்றி நான் அப்படிச் சொன்னது உலக இலக்கியத்தை முன்வைத்து எனக்குள் உருவான சிந்தனையையே. மேற்கத்திய இலக்கியங்கள் ஆங்கில மொழியில் நேரடியாகவும் மொழிப்பெயர்ப்பிலும் சக்கைப் போடு போடுகின்றன. மாய யதார்த்தம் என்பது உலக இலக்கியத்தில் கண்டடையப்பட்டு பிறகு இலக்கிய சந்தையைக் கவர்ந்த ஓர் இலக்கிய வடிவம் என்றே கருதுகிறேன். மேலும் மாய யதார்த்தம் இலக்கியத்தில் இருக்கின்ற கூறுகளில் ஒன்று. எழுத்து சித்து விளையாட்டில் இது ஓர் அபாரமான கவர்ந்திழுக்கும் விந்தை ஆகும். உங்கள் முகத்தைக் கீறிவிட்டுச் சென்றதை முதலில் நீங்கள் அறியமாட்டீர்கள், அதன் எரிச்சலை உணர்ந்த பிறகே காயம் அடைந்தது தெரிய வரும். மாய யதார்த்தம் நிகழ்த்தக்கூடிய இலக்கிய பாதிப்பு என்பதும் அப்படிப்பட்டதுதான். ஆனாலும் மாய யதார்த்த எழுத்தில் கவர்ச்சி இருக்கின்றதே தவிர என் படைப்புகள் மாய யதார்த்தமாய் வராது என்றும் சொல்வதற்கில்லை.

கேள்வி : இன்னும் நீங்கள் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. உங்கள் பார்வையில் மாய யதார்த்தத்தைத் தக்க உதாரணங்களோடு விளக்குங்கள்?

மஹாத்மன்: ஒரு வாழ்க்கையையோ, வாழ்க்கையின் ஒரு பகுதியையோ காட்ட ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவது. அது தத்துவப் பார்வையாகவோ, வரலாறாகவோ, அரசியலாகவோ கூட இருக்கலாம்.

கேள்வி : ஒரு படைப்பாளனிடம் இருக்க வேண்டிய படைப்புக்கான நேர்மை என்ன? அதை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா?

மஹாத்மன்: இந்தக் கேள்வி என்னைக் கலங்கடிக்கிறது. பதில் சொல்வதற்குத் தயக்கமாகவும் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு நகர்விலும் தோல்வியும் விரக்தியும் தவிர மனமகிழ்ச்சி இல்லை. என்னைப் படைத்தவன் விதித்த கட்டுபாடும் ஒழுங்கும் என்னிடம் இல்லை. நேருக்குமாறாகத்தான் வாழ்ந்து வருகிறேன். இப்படி வாழும் படைப்பாளனிடம் பொது நேர்மையை நீங்கள் காண முடியாது.

கேள்வி: இப்பொழுது உங்கள் எழுத்து முழுவதும் சிற்றிதழ் சார்ந்து உள்ளது. இந்த முடிவிற்கு என்ன காரணம்?

மஹாத்மன் : என் தீவிர வாசிப்பிற்கும் தேடலுக்கும் போதுமான அளவு சிற்றிதழ்களில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இணைய அகப்பக்கங்கள் வேறு நிறைய உள்ளன. தீவிரத்தன்மைக்கு இதுதான் உகந்தது.

கேள்வி : சிற்றிதழ்கள் தனி மனிதர்களை முன்னெடுப்பது குறித்து உங்கள் விமர்சனம் என்ன?

மஹாத்மன்: சிற்றிதழ்கள், தமிழ் இலக்கியத்தில் பங்காற்றிய தனிமனிதனை முன்னெடுத்துச் செல்வதில் எனக்கு எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதில் சமரசமும் மூடி மறைத்தலும் துதி பாடுதலும் பாசாங்குத்தனமும் பழி தீர்த்தலும் உண்மை இன்மையும் அரைக்குறைத்தனமும் இருப்பது தெரிய வரும்போதுதான் சகித்துக்கொள்ள முடிவதில்லை.

கேள்வி : மௌனம் நிகழ்வில் உங்கள் கவிதைக்கு பரிசு கிடைத்ததை அறிகிறேன். நவீன கவிதைகளில் உங்களின் ஈடுபாடு எப்படி உள்ளது?

மஹாத்மன்: மௌனத்தின் விழாவில் என் கவிதை ஒன்றுக்கு பரிசு கிடைத்ததை எண்ணி முதலில் ஆச்சரியப்பட்டேன். அது வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது என்பது எம்.ஜி. சுரேஷின் கருத்து. அவரின் தேர்வு, அவரின் புரிதலுக்குள் அடங்கியது. முன்பு ஒரு பத்தியில் நான் இப்படி எழுதியிருந்தேன்: ‘என் கவிதைகள் பரிசுக்கு ஏற்றவை அல்ல’. நவீனக் கவிதைகளின் மீதுள்ள ஈடுபாட்டால்தான் இப்பொழுது அதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். எனது சில நவீனக் கவிதைகளைத் தொகுத்து புத்தமாகக் கொண்டு வரவுள்ளேன். அதன் பிறகு நவீனக் கவிதையின் மீது உருவான என் ஈடுபாட்டை அறிந்துகொள்ள முடியும்.

கேள்வி : சை.பீர்முகமது, ஒரு நேர்காணலில் நவீன கவிதைகள் கவிதையைச் சாகடித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?

மஹாத்மன் : சை.பீர் அப்படிச் சொன்னது தவறு. அவரின் நவீன கவிதைகளுக்குரிய குறுகிய பார்வைதான் அவர் வாயின் வார்த்தைகள் நிரூபிக்கின்றன. பாவம் அவர்... அவர் கடந்து வர வேண்டிய தூரம் 737 கிலோ மீட்டர் அல்ல, 777,737 கிலோ மீட்டர் தூரம் என்பதைக் ‘காலச்சுவடு’ அவருக்குச் சொல்லாமல் விட்டது எப்படி?

கேள்வி : 2009 ஆம் ஆண்டில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் கொடுத்த விருதை நீங்கள் வாங்க மறுத்துவிட்டதாக அறிகிறேன். என்ன காரணம்? அவர்களின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

மஹாத்மன் :மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருந்ததே கிடையாது. வளரும் எழுத்தாளர் பட்டியலின் கீழ் அவ்விருது எனக்கு வழங்கப்படவிருந்தது. எந்தவொரு இயக்கத்தைச் சார்ந்தும் நான் இருக்க விரும்பவில்லை. எழுத்தாளர்களுக்கு விருது என்பது ஓர் ஊக்குவிப்பு என்பதையும் நான் மறுக்கவில்லை. விருதை மறுப்பதற்கான காரணத்தைக்கூட திரு.பெ. இராஜெந்திரனிடம் நான் கூறவில்லை. அவர் கேட்டும் கூட. என் எதிர்கால படைப்புகளினால் அவ்விருதுக்குக் ‘களங்கம்’ ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற தூரநோக்கு சிந்தனையால் மறுதலித்தேன். என்னைவிட பல அறிவுஜீவிகள் அச்சங்கத்தின் நாற்காலிகளில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வீற்றிருக்கிறார்கள். பல புத்தகங்களை வெளியிட்ட பெரும் ஜாம்பவான்கள் இருக்க, தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்கள் வரை பாலம் போட்டு சங்கம் தன் கொடியை சிறகடித்து பறக்க விட்டிருக்க, அவர்களின் ‘முகம் காட்டும்’ ‘பெயர் போடும்’ ‘புகழ் தேடும்’ செயற்பாடுகளைக் குறித்து நான் நினைக்க என்ன இருக்கிறது?

கேள்வி: ஆனால் இது போன்ற எழுத்தாளர் சங்கங்கள் தொடர்ந்து படைப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையைக் கொடுத்து வருகிறது. இவையாவும் படைப்பை வளர்ப்பதாக நினைக்கிறீர்களா? அல்லது வெறும் படைப்பாளனை மட்டும் திருப்திப்படுத்துகிறதா?

மஹாத்மன்: படைப்புகளை வளர்க்கவில்லை. தொகையைக் கொடுத்துவிட்டு அனுப்பிவிடுகிறது. அதன் தொடர்ச்சியான இலக்கிய முன்னெடுப்புகள் அங்கு நிகழவில்லை. மலேசியாவிலுள்ள மலாய் இலக்கியத்தை வளர்ப்பதற்கான, அதனைச் சர்வதேச அளவில் அடையாளப்படுத்தக்கூடிய அமைப்புகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக Dewan Bahasa dan Pustaka (DBP) அமைப்பைக் குறிப்பிடலாம். அவை மலாய் இலக்கியவாதிகளின் புத்தகங்களைப் பிரசுரிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை முன்னெடுக்கும் எல்லாம் முயற்சிகளையும் செய்து வருகின்றது. ஆனால் தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் அது போன்ற ஒரு அமைப்பாக மாறும் எந்தப் போராட்டத்தையும் ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்கவில்லை. சமீபத்தில் இது பற்றி மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ. இராஜெந்திரனிடம் கேட்டபோது, “அந்த மலாய் அமைப்போடு மோதி ஒரு தமிழ் எழுத்தாளன் தனது இலக்கியத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டால், நான் என் காதை அறுத்துக்கொள்கிறேன்” என அலட்சியமான பதிலையே கூறினார்.

ஒரே மலேசியா உயர்த்திப் பிடிக்கப்படும் இந்தக் காலக்கட்டத்தில் மலேசியாவில் எழுதப்படும் தமிழ் இலக்கியத்திற்கான அரசாங்க அங்கீகாரத்தைப் பெறுவதில் தன்னை மலேசிய தமிழ் இலக்கியத்தின் மையமாகச் சொல்லிக் கொள்பவர்கள் முயன்று பார்க்க வேண்டும் அல்லவா? Dewan Bahasa dan Pustaka அமைப்பில் தமிழ் – சீன இலக்கியத்தையும் ஒரு அங்கமாக நுழைக்க அரசாங்கத்திடம் மோதி பார்க்கும் வல்லமையை முதலில் இது போன்ற இலக்கிய அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழ் நாட்டில் மலேசிய இலக்கியத்திற்கான பீடத்தையும் பாலத்தையும் போடுகிறோம் எனக் கூப்பாடுப் போடுவதை நிறுத்திவிட்டு முதலில் இதை முறையாகச் செய்ய முன்வர வேண்டும்.

கேள்வி : உங்கள் சிறுகதைகள் குறித்து ஆரோக்கியமான விமர்சனங்கள் வந்துள்ளதா?

மஹாத்மன் : புத்தகத்தைப் படித்ததும் சிங்கப்பூர் மேடை நாடக ஆசிரியர் இளங்கோவன் அவர்களின் விமர்சனம் கிடைத்தது. புத்தகத்திற்கு மஹாத்மனின் சிறுகதைகள் என்ற தலைப்பே சரியாக இருக்கும் என்றார். ஆமோதித்தேன். நயனம் ஆசிரியர் இராஜகுமாரன் தொலைபேசி வாயிலாக 45 நிமிடத்திற்கும் குறையாமல் விமர்சித்தார். தொலைக்காட்சி தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரான்சிஸ் சில்வன் அவர்களும் கூட தொலைபேசி வாயிலாக 45 நிமிடங்களுக்கு விமர்சனம் செய்தார். நேரில் விமர்சித்தவர்கள் கோ.முனியாண்டி, சீ.முத்துசாமி அவர்களும். அகப்பக்கத்திலும் நயனத்திலும் விமர்சித்தவர் கே. பாலமுருகன். திரு. இளங்கோவனின் கருத்துகளை மனதில் பதித்துள்ளேன்.

இவர்கள் எல்லோரையும் விட இரண்டு பல்கலைக்கழக மாணவர்களும் அம்மையார் ஒருவரும் சொன்ன கருத்துகள்தான் என்னால் மறக்கவே முடியவில்லை. நகைச்சுவையென எனக்கு நானே சிரித்துக்கொள்வேன், சில சமயங்களில்.

அ. “சார்! எப்போ நான் தூங்கனும்னு நினைக்கிறனோ அப்போதெல்லாம் உங்க புத்தகத்தை திறந்து ஏதாவது ஒரு பக்கத்தைப் படிச்சாலே போதும், தூங்கிடுவேன் சார். . . “

ஆ. “உங்க புத்தகத்துலே ‘ஓ லாவே’ மற்றும் ‘கடவுள் கொல்லப் பார்த்தார்’ இந்த இரண்டும்தான் புரிஞ்சது. மத்ததெல்லாம் புரியல. கவிதையைத்தான் புரியாத்தனமா எழுதுறீங்க. சிறுகதையுமா? என்ன சார் இது அநியாயம்???”

இ. ‘இப்படிப்பட்ட கதைகளை யாருதான் படிப்பார் தம்பி சொல்லுங்க. . . பெண்களுக்கு வேண்டிய பக்கா சமையல் குறிப்போ, அழகு குறிப்போ மாதிரி பக்காவா எழுதுங்க. பிழைக்கத் தெரிஞ்சிக்குங்க. . .வரட்டா. . .”

கேள்வி : விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எதிர்க்கொள்கிறீர்கள்?

மஹாத்மன் : ஆரம்பத்தில் இதழில் வெளிவந்து நேரில் விமர்சிக்கப்பட்டபோது நண்பரிடம் ஆத்திரப்பட்டுப் பேசினேன். அது தவறோ என்று இப்போது நினைக்கிறேன். சுந்தர ராமசாமியைப் போல மௌனமாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஆனால் நான் அவரல்லவே. கொஞ்சம் தெளிவடைந்த பிறகு விமர்சிக்கப்படுவதிலிருந்து தேவையானதை, நியாயமானதை, தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதை ஏற்றிருக்கிறேன்.

கேள்வி: உங்கள் முதல் தொகுப்பு ‘சிறுகதை’ என்பதனாலும், அதிகமான சிறுகதையின் வழியாகவே நீங்கள் வாசிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதாலும், மலேசிய தமிழ் இலக்கியத்தில் உங்களை ஒரு வாசகன் “சிறுகதை எழுத்தாளராகவே’ அடையாளம் காண வாய்ப்புகள் அதிகம். ஆக, உங்களின் சிறுகதை தொடக்கம் எப்படியிருந்தது? எப்படி சிறுகதைக்குள் நுழைந்தீர்கள்?

மஹாத்மன்: கைரேகை மேகங்கள், சடாமுனியும் நானும் எனும் சிறுகதைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி என்னை நானே பரிசோதித்துக்கொண்டேன். அதனைச் சிதைத்து வெளியிட்டதால் உடனே நிறுத்திக்கொண்டேன். பிறகு பா.அ.சிவம் கவிதை புத்தக வெளியீட்டு விழாவில் ம.நவீன், யுவராஜன், சிவா பெரியண்ணன், சந்துரு, சிவம் போன்றவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. ம.நவீன் என்னைச் சிறுகதை எழுதும்படி தூண்டினார். அவ்வப்போது அழைத்து விசாரித்தார். ஒவ்வொன்றுக்கும் நேரடியாகத் தனது விமர்சனத்தை முன்வைத்தார். அவ்வாறு எழுதப்பட்ட சிறுகதைகள் வல்லினம் பதிப்பகம் மூலம் 'மஹாத்மன் சிறுகதைகள்' எனத் தொகுக்கப்பட்டு 2009-ல் வெளியீடு கண்டது.

கேள்வி : உங்கள் சிறுகதை தொகுப்பு வாசகர்கள் மத்தியில் எவ்வாறான விளைவுகளை உண்டாக்கியது?

மஹாத்மன் : விளைவுகள் என்றால் கதையில் விவரிக்கப்பட்ட அனுபவங்களைப் பற்றி விசாரிக்கிறார்கள். மதம் – சிறை – பரதேசி கோலம் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். இதில் முக்கியமாக இடம் பெற்றது மதம். சில தேவலாய போதகர்கள் “தயவு செய்து உங்கள் புத்தகத்தைத் தேவாலயத்திற்கு வருபவர்களிடம் விற்கவோ கொடுக்கவோ முயற்சி செய்யாதீர்கள்” என்று பணிவோடு கேட்டுக்கொண்டனர். “இந்தப் புத்தகத்தை வாங்காதீர்கள். ஆண்டவர் மீதுள்ள விசுவாசத்தை இழந்துவிடுவீர்கள்” என்று ஒரு தேவாலயத்தில் அறிவிக்கப்பட்ட செய்தி என் காதில் வந்து எட்டியது.

கேள்வி : தேவாலயம் உங்களின் சிறுகதை தொகுப்பின் மீது எழுப்பியுள்ளதாகச் சொல்லப்படும் விமர்சனம், புறக்கணிப்பு குறித்து உங்களின் பார்வை என்ன?

மஹாத்மன் : தோல்வி அடைந்தவனின் கதையான இந்தப் புத்தகத்தைத் தேவாலயங்கள் நிராகரிக்கும் என்று முன்பே அறிந்திருந்தேன். நேரடியாகப் போய் அந்த உண்மையை அனுபவித்தேன். எது எப்படியிருந்தாலும் எழுத்தாளன் என்ற ரீதியில் என் தோல்விகளை கசப்பான உண்மைகளை எழுத்தில் கொண்டு வருவதில் பெரும் திருப்தி உணர்வை அடைகிறேன்.

கேள்வி : ஆனால் தேவாலயங்கள் அந்தச் சிறுகதை மீது கொண்டுள்ள விமர்சனம், தேவனின் மீதான விசுவாசமின்மையைப் பேசுகிறது என்பதாகும். தேவாலயத்திற்கும் உங்களின் நிலைப்பாட்டிற்கும் என்ன முரண்?

மஹாத்மன் : ஒவ்வொரு தேவாலயமும் அல்லது ஒவ்வொரு மதபோதகரும் ஒரே விவிலியத்தை வைத்துக்கொண்டு தங்களுக்குப் புரிந்தபடி, போதிக்கப்பட்டப்படி, தங்களுக்கு ஏற்ற வியாக்கியானப்படி முன்பும் இன்றும் நாளையும் பின்பற்றுவார்கள். இவர்களுக்குள் எத்தனை வெவ்வேறான புரிதல்கள். ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இல்லை. ஆனால் எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். விவிலியத்தின் மீது என் புரிதலும் சில இடங்களில் இவர்களிடமிருந்து வேறுபடுகிறது. என் புரிதலின் படி என் வியாக்கியானப்படி என்னைப் படைத்தவனை நான் தேடுகிறேன். எரிச்சல் ஏற்படும்போது அவனை ஏசுகிறேன், திட்டுகிறேன், விழுந்து அழுகிறேன், புலம்பித் தள்ளுகிறேன். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குறைந்தபட்சம் ஒரு காலக்கட்டத்தில் கடவுளைத் தேடுகிறார்கள். தோல்வி அடைந்ததை ஒருபோதும் பதிவு செய்யாமல், மாய்மாலமாய் “தேடினேன் கிடைத்தது” என்ற ரீதியில் சொல்லியும் எழுதியும் பாடியும் இருக்கிறார்கள். இந்த மாய வலையில் விழுந்து வெளி வராதோர் கோடான கோடி பேர்.

கேள்வி : மதமும் கடவுளும் அதிகார அமைப்புகளாகப் பார்க்கப்படும் இன்றைய சூழலில், கடவுளைத் தேடும் நகரவாசியான உங்களின் அரசியல் என்ன?

மஹாத்மன் : அந்த அதிகார அமைப்பில்தான் முன்பொரு காலக்கட்டத்தில் என்னை ஒன்றி திளைக்க வைத்திருந்தேன். இப்பொழுதும் இனி எப்பொழுதும் ‘கடவுள் இல்லை’ என்ற அரசியல் என்னிடம் இருக்காது. ஆனால் என் உயிர் என் உடலில் இருக்கும்வரை கடவுளை நான் விடுவதாக இல்லை. இது என்ன அரசியலோ... இன்னமும் புரிப்படவில்லை எனக்கு. எனக்கு புரிய வரும்போது சொல்கிறேன்.

கேள்வி : ‘கடவுள் கொல்ல பார்த்தார்’ எனும் கதையில் கடைசியில் ஒரு காட்டுவாசி பெண் உங்களைத் தூக்கிச் செல்வதாக முடித்திருப்பீர்கள். அவர்களைப் போன்றவர்களுடன் பழகியதுண்டா?

மஹாத்மன் : பழகினேன். அவர்கள் பூர்வக்குடியினர். அவர்களின் மொழி கொஞ்சம் பிரச்சனை கொடுத்தது. மலாய் மொழி கொஞ்சம் பேருக்குத்தான் தெரிந்தது. பழகிய கால அளவு தெரியவில்லை. கனவு போல இருக்கிறது. ஒவ்வொரு காலையிலும் வெறும் வயிற்றில் இரவிலும் பச்சிலைகளாலும் தளிர் வேர்களாலும் செய்யப்பட்ட கசாயத்தைக் குடிக்க வைத்தார்கள். மகா கசப்பு. அந்தச் செடி, இருப்பிடம் சுற்றி ஒரு வித வாசத்தைப் பரப்பியது. பாம்புகள் அண்டாதாம். நேரமும் காலமும் வாய்த்தால் அவர்களைக் குறித்து எழுதுவேன். அதற்கு நான் மீண்டும் ஒருமுறை அங்குச் செல்ல வேண்டும். தங்க வேண்டும்.

கேள்வி : உங்கள் சிறுகதைகள் உங்கள் வாழ்வின் நேரடியான அனுபவங்களா?

மஹாத்மன் : ஒவ்வொரு கதையிலும் என் நேரடியான அனுபவங்கள் கால் பகுதி, அரை பகுதி, முக்கால் பகுதியென இருக்கின்றன. முழுக்க முழுக்க என் அனுபவங்கள் என்றால்:

அ. பரதேசி நடையும் அந்த அலறலும்

ஆ. என்ன நடந்ததென்றால்

இ. ஓ லாவே!

ஈ. மூன்றாவது அற்புதம்

உ. மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்(கடைசி சுருளின் கதை)

கேள்வி : ஒரு நல்ல படைப்புக்கு அனுபவமும் புனைவும் முக்கியம். நீங்கள் புனைவு சார்ந்து உங்கள் எழுத்தைப் படைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மஹாத்மன் : ஏதாவது ஒன்றை நான் எழுதும்போது என் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் நடந்த அல்லது பார்த்த அனுபவமும் கலந்துவிடுகிறது. மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள் என்ற கதை ஆரம்பத்திலும் முடிவிலும் புனைவு சார்ந்த ஆனால் (பைபிள்) வேத அடிப்படையில் எழுதினேன். முற்றிலும் அது புனைவு. ஒரு வாகனத்தில் இரண்டு தேவத்தூதர்கள் வானத்தினூடே அழைத்துச் சென்றனர் என்ற ஆரம்பப் பகுதியைப் புரிந்துகொள்ள விவிலியத்தின் பழைய ஏற்பாடுப் பகுதியையும் (வானத்திலிருந்து இறங்கிவந்த அக்கினிமயமான குதிரைகள் அடங்கிய வண்டியில் எலியா தீர்க்கத்தரிசி வானத்திற்கு ஏறிச் செல்லுதல்) புதிய ஏற்பாட்டுப் பகுதியான யூதா நிருபத்தில் ஒரு தீர்க்கத்தரிசியின் செத்த உடலுக்காக இரு தேவ தூதர்கள் சாத்தானோடு போர் புரிதலையும் படித்திருக்க வேண்டும்.

கதையின் கடைசி பாகமான ‘காலமில்லா காலம்’ எனும் பகுதியைப் புரிந்துகொள்ள விவிலியத்தின் கடைசி நிருபம்/புத்தகமான ‘வெளிப்படுத்தின விசேஷம்’ படித்திருக்க வேண்டும். இதன் ஒவ்வொரு அதிகாரத்திலும் / பகுதியிலும் மறைபொருள்கள் புதைப்பொருள்களாய் கொட்டிக் கிடக்கின்றபடியால் சாதாரண வாசிப்பிற்கும் சரியான வியாக்கியான போதிப்புமின்றி அர்த்தம் புரிபடாது. (வெளிப்படுத்தின விசேஷம் 6ஆம் அதிகாரம் 10ஆம் வசனம்). சுருக்கமாக, விவிலியத்திலிருந்து ஒரு துளி எடுத்து என் பாணியில் கொஞ்சம் கலவை, கொஞ்சம் சேர்க்கையாகப் படைத்திருக்கிறேன்.

கேள்வி: விவியலியத்தைப் பற்றி புனைவு கலந்து இலக்கியமாக்கும் உங்கள் முயற்சியை, கிறிஸ்துவப் பின்னணி இல்லாத வாசகர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?

மஹாத்மன்: பொதுவான கிறிஸ்துவ பின்னணி இருக்கும் வாசகர்களுக்கே புரியாதபோது இவர்கள் எம்மாத்திரம்? எழுதுவதற்கு முன் ‘இது இவர்களுக்குப் புரியுமா?’ என்ற சிந்தனையை முன்வைத்து நான் எழுதுவதில்லை. எனக்கு நேரிட்டதை - நான் சம்பந்தபட்ட சம்பவங்களை எந்தவொரு தயக்கமின்றியும் ஒளிவுமறைவின்றியும் எழுத முயற்சிக்கின்றேன். ‘ஒளிவுமறைவு’ குறித்து இன்னும் எனக்கு திருப்தியின்மையே உண்டு.

கேள்வி: உங்களை இலக்கியத்தில் செயல்படும் கிறிஸ்துவ மதப்போதகர் எனப் புரிந்துகொள்ளும் நிலை இருப்பதாக நினைக்கிறீர்களா?

மஹாத்மன்: அடிப்படையில் அந்தத் தகுதி எனக்கு கிடையாது. வேதப் பிரசங்கியாக ஒரு காலத்தில் செயல்பட்டதுண்டு. நான் கொண்டிருந்த புரிதல்களும் வியாக்கியானங்களும் இன்னொரு காலச்சூழலில் மாற்றம் கண்டன. அந்தப் புதிய புரிதல் மாற்றங்களை என் கவிதைகளிலோ, சிறுகதைகளிலோ கொண்டு வந்ததில்லை. என் படைப்புகளில் பிரசங்க வாடை வரக்கூடாது என்றெண்ணித்தான் அந்தச் சுய அனுபவங்களை நாவலாக்காமல் சிறுகதையாக்கினேன்.

கேள்வி : கடவுள் என்பதன் மீது நீங்கள் வைக்கும் விமர்சனம் என்ன? தொடர்ந்து உங்களின் கதைகளில் கடவுள் கேள்விக்குட்படுத்தப்படுகிறாரே?

மஹாத்மன் : கதைகளில் மட்டுமல்ல, கவிதைகளிலும் முடிந்தவரை கடவுளை விமர்சிக்கிறேன். சிறுவயது தொடங்கி நான் ஒரு பக்திமான். மதம் சார்ந்த புத்தகங்களையே தேடித்தேடி வாசித்து சிலாகித்தவன். இந்து மதப்பற்று, பிறகு கிறிஸ்த்துவ மதப் பற்றானது. இதிலும்கூட பல பிரிவுகள் இருந்தாலும் வேதமே எனக்கு முதன்மையானது, முக்கியமானது. அப்படியிருந்த என் வாழ்வில் அசம்பாவிதங்களையும் அநியாயங்களையும் துரோகங்களையும் தொடர் தோல்விகளையும் விரக்தியையும் அலங்கோலத்தையும் அனுபவிக்கும் பொருட்டு கடவுள் கண்டும் காணாதவாறு இருந்தது அவர் மேல் வெறுப்பை உண்டாக்கியது. கலைத்துப் போடும் அளவிற்கு ஆத்திரம் பொங்கியது.

இவ்வளவு வெறுப்பு இருந்தும் கடவுளை மறுதலிக்க முடியவில்லை. குரங்கின் பரிணாம வளர்ச்சிதான் மனிதகுலம் என்ற போதனையை அடியோடு நான் மறுக்கிறவன். நேரம் வாய்த்தால் டார்வின் தியோரியை உடைத்துக் காட்டுவேன். கடவுளை நம்பும் அதே வேளையில் அவரை விமர்சிக்கும் என் போக்கு, முட்டாள்தனமாகத் தெரியலாம். தெரியட்டும். அதனால் எனக்கொன்றும் வெட்கமில்லை. அவர் என்னைத் தடுக்கும் வரை விமர்சித்துக்கொண்டே இருப்பேன்.

கேள்வி : டார்வின் தியரியைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அதை உடைக்க முயல்வேன் எனச் சொல்வதன் மூலம் நீங்கள் கொண்டுள்ள முரண் என்ன? உலகின் பல தியரிகள் உடைப்பட்டு பொய்க்கப்பட்டு, வேறொன்றாக மாறுகிறதே?

மஹாத்மன் : மனித குலம் பரிணாம வளர்ச்சியில் வந்தது, குரங்கின் இனத்திலிருந்து மனிதனாக வந்திருக்கிறோம் நாம் என்பதாக இருப்பதை தியரியின் அடிப்படை கொண்டே உடைக்கவிருக்கிறேன். சிலர், மதம் மற்றும் இயற்கை அடிப்படை கொண்டு அரைகுறையாக, ஒப்புக்காக, மேலோட்டமாக உடைத்திருக்கின்றார்கள். (இஸ்லாமிய – கிறிஸ்துவ அறிஞர்கள் இதைச் செய்ததுண்டு).

எல்லா தியரிகளும் உடைப்பட்டு வருகிறது என்றும் சொல்வதற்கில்லை. ஏதோ ஒன்று உடைப்பட்டு பொய்க்கிறது. மற்றவை மறு ரூபம் கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றன.

கேள்வி : இந்தச் சமூகத்தின் இன்றைய மனநிலை எப்படி இயங்குவதாக நினைக்கிறீர்கள்? சமூகத்தில் உங்களின் இருப்பு எப்படி உள்ளது?

மஹாத்மன் : போராட்டத்திற்கு உசிப்பிட வேண்டும். கையைப் பிடித்து இழுக்க வேண்டும். ஆனால், போராட்டத்தில் மாட்டிக்கொண்டால் அவனவன் பொறுப்பு. போராட்டவாதியாகத் தங்களைக் காட்டிக்கொள்ள கூட்டத்தை இடித்து விலக்கி முன்நிற்க முயற்சிக்கிறார்கள். கொள்ளையடிக்கப்பட்டதிலிருந்து பங்கு கேட்டுப் போராட்டம். கொள்ளை அடிப்பதற்குப் போராட்டம். நித்தமும் உன்னிப்பாகக் கவனித்து ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் அதை வைத்து பக்கம் பக்கமாக எழுதி சமூகநல மெய் போராட்டவாதி நானே எனத் தம்பட்டம் அடிக்கும் நிலையில்தான் புதிதாக முளைத்தெழுந்த ‘போராட்டம்’ வணிகத்துக்குள்ளாகுகிறது. வணிகம் நடப்பதைப் போலத்தான் இதுவும் நடக்கிறது அமோக வரவேற்பிலும் ஆதரவிலும். நாம் உண்மை நிலை அறிய நாட்களைக் கடத்த வேண்டி இருக்கிறது என்பதால் யாரையும் தொந்தரவு பண்ணாமல் தனியனாய் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை யாரிடமும் கடன் இல்லாதவனாக முயற்சித்துக்கொண்டு வருகிறேன். இன்றுவரை அதிலும் தோல்விதான்.

கேள்வி : எழுத்து வியாபாரம் என எதையெல்லாம் சமக்காலத்தில் உங்களால் அடையாளப்படுத்த முடியும்?

மஹாத்மன் : தான் எழுதிய எழுத்தை விற்பதற்காக, பொது வாசகர்களை அதிகரித்துக்கொள்வதற்காக, புத்தகம் போட்டு ஆயிரக்கணக்கில் – இலட்ச கணக்கில் சம்பாதித்துக் கொள்வதற்காக, அரசாங்க அங்கீகாரம் கிடைப்பதற்காக, பரிசும் பணமும் கிடைப்பதற்காக, பட்டம் பதவிகளை அடைவதற்காக, அம்மையாரிடமும் அய்யாக்களிடமும் கையேந்தியும் கைக்கட்டியும் நிற்பதை என் சமக்காலத்தில் காண்கிறேன். பதவியில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளிடம் சிறப்பு வருகை புரிய சிறப்பு காட்டோடு காணச் சென்று, தங்கள் மேடையை (மனசாட்சியை) ஏறி மிதிக்க அனுமதிப்பதைக் காண்கிறேன். மாலை அணிவிப்பதும் மரியாதை தெரிவிப்பதும் சால்வைகளைப் போர்த்துவதும் ஒன்றே ஒன்றுக்காகத்தான். பணக்குவியல். அப்படிச் சம்பாதித்ததில் யார் முதலிடம், இரண்டாமிடம் என்ற பதிவு இங்கே உள்ளது. அந்தப் பதிவை உடைத்தெறிய போட்டா போட்டியும் தொடர்கிறது. உன்னுடைய சொந்த பணமா? இல்லையே... நீ கொள்ளையடித்ததில் கொஞ்சம் கொடு. உன் சகாக்களையும் உன் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் உடன்பிறப்புகளையும் கொடுக்க சொல்லி ஒரு பெரிய ரவுண்டு வருகிறார்கள். திருப்தியடையாமல் வேறு வழி ஏதாவது கண்ணுக்குப் புலப்படுகிறதா என ஆர்ப்பரிக்கிறார்கள். இதை நாம் கேள்வி கேட்டுவிடக்கூடாது. அப்படிக் கேட்டால் இப்படிப் பதில் வரும்: “உனக்குக் கிடைக்கவில்லை, அதான் பொறுமுகிறாய்”. இந்த விசயத்தில் நானும் கொஞ்சம் சறுக்க நேரிட்டது. இதை மறுப்பதற்கும் மறைப்பதற்கும் இல்லை.

கேள்வி : முந்தையக் கேள்வியில் உங்களுக்குச் சிறை அனுபவம் உண்டெனக் கூறினீர்கள்? அதைப் பற்றி பதிவுகளில் எழுதியுள்ளீர்களா?

மஹாத்மன் : தைப்பிங் ரிமாண்ட் சிறை அனுபவம், புடு சிறை, சுங்கை பூலோ ரிமாண்ட் சிறை, காஜாங் சிறை அனுபவங்கள் உண்டு. தைப்பிங் சிறை அனுபவத்தையே நாவலாக இப்போது எழுதி வருகிறேன். காஜாங் சிறையில் தூக்குத் தண்டனை கைதிகளுக்குச் சேவை செய்த அனுபவத்தை எழுதி மலாயா பல்கலைக்கழக பேரவை கதைப் போட்டிக்கு அனுப்பினேன். ஆறுதல் பரிசு கிடைத்தது. எழுத்துப் பிழைகளோடு புத்தமாக வெளியீடு செய்தார்கள். அத்தோடு இனி எழுதி அனுப்பக்கூடாது என்று முடிவு செய்தேன். புடு சிறை அனுபவத்தை இன்னொரு நாவலாக எழுத வேண்டும். காலமும் சோம்பேறித்தனமும் கைக்கொடுக்குமோ என்று தெரியவில்லை.

கேள்வி : அநங்கம் இதழில் பிரசுரமாகியிருந்த உங்களின் ‘சிரிப்பு’ சிறுகதையில் நீங்கள் முன்வைக்கும் மாற்றுக் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன?

மஹாத்மன் : ஆதி கிறிஸ்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் கத்தோலிக்கர்களிலிருந்து இன்று ஏ.ஓ.ஜி என்ற அமைப்பைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் வரை நம்பி வரும் திரித்துவத்தை (ஒரே கடவுள், மூன்று தனித்தனி ஆள்களாய் செயல்படுகிறார்; அந்த மூன்று ஆட்களும் ஒரே கடவுள்தான்) உடைத்துப் பார்த்தேன். உண்மையில் இந்தக் கொள்கையை, தியரியை நக்கலும் நையாண்டியும் செய்திருக்கிறேன். ‘திரித்துவத்தை விளக்க இயலாது. அது ஒரு குழப்பமயமானது’ என்றும் ‘கேள்வி கேட்கலாகாது’ என்றும் சொல்லிக்கொண்டும் பிரசங்கித்துக் கொண்டும் வருகிறார்கள். வேத வார்த்தைகளை தங்கள் புத்திக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு வியாக்கியானப்படுத்திக்கொள்கிறார்கள். இவர்களின் முதுகுப்புறத்திற்குப் பின்னால் உண்மை சிரித்துக்கொண்டிருக்கிறது.

கேள்வி : ஒரு படைப்பாளியாக இந்தச் சமூகத்தில் நீங்கள் வெற்றி அடைந்தீர்களா?

மஹாத்மன் : ஒரு கலகக் குரலாகத்தான் முதல் தொகுப்பில் வெளிப்பட்டேன். வெற்றியோ தோல்வியோ பொருட்டில்லை. ஒரு படைப்பாளியாக என் பணியைச் செய்து வருவேன். எதிர்வரும் என் கவிதை தொகுப்பும் நாவலும் சமூகத்தின் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கலாம். அருவருக்கச் செய்யலாம். தீயிட்டுக் கொளுத்தி, என்னைச் சபிக்கலாம். சிபாரிசு செய்து I.S.A – வில் போட்டாலும் போடுவார்கள். அதற்குள் அந்தச் சட்டம் நீக்கப்பட்டால் தண்டனை வாங்கித் தரலாம். தீண்டாமை என் புத்தகங்களுக்கு நேரிடலாம். அப்பட்டமான உண்மை நிகழ்வுகளுக்கு நேரிடுபவைதான் இவையாவும். ஆனால், ஏதோ ஒரு மூலையில் – ஒரு சிறு குழுவினர்- அந்தப் படைப்புகளைக் கொண்டாடுவார்கள் என்கிறது என் மனம். அந்த வெற்றியே எனக்குப் போதும்.

thanks : vallinam july issue

நேர்காணல் / நிழல்படம்: கே.பாலமுருகன்

No comments: