Wednesday, September 7, 2011

சிறுகதை: கோழி தூக்கம்கடிகாரம் கைப்பட்டு கீழே சரிந்து விழுந்தபோதுதான் முடிவை மாற்றிக்கொண்டேன். நாளை விடுமுறை. வெகுநாட்களுக்குப் பிறகு சிறிதும் பயமில்லாமல் குற்ற உணர்ச்சி இல்லாமல் விடுமுறை எடுக்க மனம் ஒத்துழைத்துள்ளது. நாளைய ஒரு நாளை மட்டும் விட்டுக்கொடுக்கக்கூடாது எனச் சட்டென தோன்றியதில் ஆச்சர்யம். ஒரு கடிகாரம் கீழே விழுவதன் மூலம் என்னிடம் எதையோ சாதித்துவிடுகிறது. அல்லது அந்தச் சத்தம் என் மனதின் இறுக்கங்களைக் கலைத்துவிடுகிறதா?

சன்னல் துணியை இலேசாகத் அகற்றும்போது கீறல் போட்ட காலையின் முதல் வெளிச்சம் இத்துனைக் குளிர்ச்சியாக இருந்ததில்லை. மனம் படர்ந்தது.

மணியாச்சிட்டா, கெளம்பிலயா?” கடிகாரத்தின் அலாறத்தைவிட அம்மாவின் அழைப்பு மேலும் கூர்மையானது. அன்றாடம் ஒலிப்பதிலிருந்து தவறியதில்லை. சில சமயம் இம்சையாகக்கூட மாறிவிடும். இன்று அப்படியில்லை. அலட்டல் இல்லாமல் இன்று விடுமுறை என்றேன். அவருக்கு அதில் திகைப்பு வந்திருக்கக்கூடும். வழக்கமாக பதறியடித்துக்கொண்டு கிளம்பும்போது பொருள்கள் கீழே விழுவதும் குளியறை கதவு இடுப்பதுவதும் மட்டுமே கேட்டுப் பழகிய அவருக்கு என்னுடைய நிதானத்தை சுதாரித்துக்கொள்ள முடியவில்லை.

இன்னிக்கு என்ன லீவு?” அறைக்கதவை விட்டு அம்மா தூரமாகிவிட்டிருந்தார். பதிலேதும் சொல்லாமல் உறங்கத் துவங்கினேன். மனமும் உடலும் இலேசாகின. என்னை எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக்கொண்டது போல இருந்தது. கட்டிலும் அறையும் அறைக்குள் இருந்த பொருள்களும் மிதந்தன.

கைத்தொலைபேசி கதறும்வரை நான் அங்கு இல்லை. மீண்டும் கட்டிலுக்கு மேல் இருக்கும் விழிப்பு வந்தபோது 3 அழைப்புகள் கைத்தொலைப்பேசிக்கு வந்து ஓய்ந்திருந்ததைக் கண்டேன். எடுத்துப் பார்ப்பதற்குள் மீண்டும் அழைப்பு வந்தது. வேலை இடத்தின் அலுவலக எண். பதற்றத்துடன் காதில் வைத்தேன்.

லீவு எடுத்தா சொல்ல மாட்டீங்களா?” அப்படியொரு கேள்வி என்னை உலுக்கியது. எல்லாவற்றிலிமிருந்து விடுவித்துக் கொள்வதுதானே விடுமுறை? பல நாட்களுக்குப் பிறகு அதிக மனமகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட விடுமுறையை மன்னிப்பு கேட்பதன் மூலம் தொடங்கினேன்.

அப்பறம் தலைமை ஆசிரியர் பேசுறாங்களாம், ஏதோ முக்கியமான விசயமாம். சரியா? Anytime please be on call”

இன்றென்னவோ ஒரு கோழியைப் போலத்தான் இருந்தேன். எல்லாம் நேரமும் ஒன்றாகச் சுருங்கி ஒருமுறை உப்பி வெடித்தது போல இருந்தது. மீண்டும் சன்னல் துணியை அகற்றிப் பார்த்தேன். இந்த வெளிச்சம் எனக்கு மிகவும் பழக்கமானது. எப்பொழுதும் இந்த வெளிச்சம் உடலைத் தொடும்போது அலுவலகத்தில் வேலையாகவோ அல்லது தலைமை ஆசிரியர் அறையில் புத்திமதிக்கு ஆளாகியோ அல்லது கோப்பைத் திறந்து பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டோ அல்லது வகுப்பறையில் பேசிக்கொண்டோ இருப்பேன். ஒரு முழு நாளை பதற்றதுடன் தொடங்கி பலவீனமாக முடித்துக் கொள்ளும் சாபம்.

கைத்தொலைபேசியைத் தூரமாக வைத்தப்போது உடல் முழுவதும் ஏதோ அசௌகரிகம். கடிகாரம் விழுவதை விட ஒரு கைத்தொலைபேசியின் அலறல் பெரும் குற்ற உணர்ச்சியைத் தரும் என்றால், எது வல்லமை படைத்தது? நிச்சயம் கைத்தொலைபேசித்தான். இனி அறையிலிருக்கும் எந்தப் பொருளும் மிதப்பதற்குத் தயாரில்லை என்பது போல எல்லாம் என்னைப் பீதியுடன் கவனித்துக்கொண்டிருந்தன.

அம்மா சொல்லியிருக்கிறார். கோழி தூக்கம் தூங்குவதற்குத் தூங்காமலே இருக்கலாம் என. கோழியைப் போல இருந்தேன் அன்று முழுவதும். படப்பட என மண்னைக் கொத்தும் கோழியைப் போல.

குளித்துவிட்டு வந்தேன். நீரை சரளமாக ஒழுகவிடாதப்படிக்கு நடுக்கம். அறைக்குள் வந்ததும் கைத்தொலைப்பேசியைப் பார்த்தேன். எப்பொழுது வேண்டுமென்றாலும் அது அலறலாம். அந்தக் கறாரான குரல் மறுமுனையில் ஒலிக்கும்போது விடுமுறை செத்திருக்கக்கூடும்.

1
ஹலோ.. சார்.. அந்த மார்க்ஸ் எல்லாம் போட்டுடிங்களா? கடைசி தேதி நெருங்குது, சும்மா அலட்சியமா இருக்காதீங்க. இன்னிக்கு வந்திருந்திங்கனா, எல்லாத்தையும் வெவரமா சொல்லியிருப்பென். சரியா. உடனே போட்டுருங்க

காலை முழுமையடையவே இல்லை. அதற்குள் இரண்டாவது அழைப்பு. பகல் வீரியமடைந்து தன் கைகளால் என்னைச் சுருட்டியது. ஒரு மூலைக்குள் போய் ஒளிந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. கணினியை உடனே திறந்தேன். புள்ளிகளை எழுதி வைத்திருந்த தாளைக் காணவில்லை. அதைத் தேடி கண்டடைவதற்கு 40 நிமிடம். சுமார் 1 மணி நேரம் செலவாகியதும் வேலைகள் முடிந்துவிட்டன என நான் நினைத்தது சிறுப்பிள்ளைத்தனமானது எனத் தெரியும். வேலைகள் தன்னை அவ்வப்போது அபிவிருத்தி செய்து கொள்ளும். ஊரேனியம் போல தன்னை மூன்றாகப் பிளந்து பிறகு இலட்சங்களாக்கிக் கொள்கின்றன.

அம்மா வந்து கேட்டார். அவர் கேட்பது எங்கோ தூரமாக ஒலித்தது. எனக்கான மணித்துளிகளை எனக்கில்லாமல் வேறு யாருக்காகவோ நகர்த்துவது வன்முறையென தெரிந்தும் அதில் இலயித்திருக்க முடிவதில்லை.   

அம்மா மீண்டும் கேட்டார். கோழி இறைந்து கிடக்கும் அரிசுக்குத்தான் போராடும் என. மண்ணைக் கொத்தும் போது கோழிக்கு சிந்தனை இருக்காது. சில சமயம் வெறும் மண்ணை மட்டும் கொத்திவிட்டு ஏமாளியைப் போல தலையைத் தூக்கும். என்னுடைய விடுமுறை நாளன்று நானும் அப்படித்தான் அம்மா அழைத்ததும் தலையைத் தூக்கினேன்.

2

சார், அந்த மார்க்ஸ் போட்டிங்களே, அதுலே கடைசியா ரெண்டு பிள்ளைங்க சேர்க்கல. வகுப்பாசிரியர் நீங்கத்தான் செய்யனும். உடனே செஞ்சிருங்க. அவுங்க கடுப்புல இருக்காங்க

மீண்டும் கணினி முன். அழுது வடிந்தது பகல். உலர்ந்து கொட்டிய பொழுது. வெறுமை வேறெங்கும் இல்லை. எனக்குள் விரிந்து துளைத்தது. பல பல குரல்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒலிப்பது போல இருந்தது. உடலில் இலேசான நடுக்கம். எனக்கான நாள் பறிப்போவதை எப்படி வலிமையுடன் கவனிப்பது?

எங்கே எதைத் தட்டுவது எதை சரிப்படுத்துவது எனத் தெரியாமல் சொற்களும் கணினி திரையும் மங்கின. விரல்கள் ஒவ்வொன்றும் அசதியுற்றிருந்தன. புறக்கணிப்பைச் செலுத்துவதற்குக் கொஞ்சம் சாமர்த்தியம் வேண்டும். என்னால் அதைச் செய்ய முடியவில்லை. மனம் சட்டென குரல்களைப் பின்பற்றுகிறது.

கோழிக்கு எப்பொழுதும் தெரிவதில்லை அது கூண்டில் இருக்கிறதென. திடீரென உயரமாகப் பறக்க நினைத்து சுவர் கம்பிகளில் மோதி ஒரு சில இறகுகளைக் கீழே சிந்தும். அப்பா வளர்த்து மழைக்காலத்தில் பாம்பால் கொல்லப்பட்டு செத்தொழிந்துபோன கோழிகளைப் பற்றி ஞாபகமாக இருந்தது.

3

கைத்தொலைப்பேசி அலறுவதை நிறுத்தாத ஒரு பகலில் நான் அமர்ந்துகொண்டிருந்தேன். வெற்றுச் சுவரை வெறிப்பது ஒருவகை மனநோய். அது எப்பொழுது வேண்டுமென்றாலும் நம்முடைய விழிப்பு மனதை விழுங்கிக் கொள்ளக்கூடும். சட்டென நம்மை ஒரு புகைப்படமாக மாட்டிக்கொள்ளும்.

சார்.. பிள்ளைங்களோட ரிப்போர்ட் கார்ட் எங்க வச்சிங்க?”
சார் அலமாரி சாவி வச்சிட்டுப் போயிருக்கலாமே
சார்.. போன வாரம் அறிக்கை ரெடி ஆச்சா?”
சார்.. நாளைக்கு வரும்போது அந்தக் கூட்டக்குறிப்பு முடிச்சிட்டு எடுத்துட்டு வந்துருங்க
சார்.. பிள்ளைங்களோட மார்க்ஸ், பேண்ட் போடனும், புதுசா ஒரு திட்டம் வந்துருக்கு, இப்பெ கணினி பக்கமா இருக்கீங்க?”
சார்.. தலைமை ஆசிரியர் கோபமா இருக்காங்க.”
சார். . சார். . சார்.. சார்

4
சார்.. .நீங்க என்ன செய்யுங்க. உடனே கல்வி இலாக்காவுக்குப் போங்க. அதிகாரி  பாக்கனுமாம். நம்ப டீச்சர்ஸ் யாரும் போவ முடியாது போல, நீங்களே போய்ட்டு வந்துருங்ககடிகாரத்தைப் பார்த்தேன். பள்ளி நேரம் முடிந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தன.

கோழிக்கு சூடு பிடிக்காது. ரொம்ப நேரம் சூட்டில் இருந்தால் அது செத்துவிடும்.
கோப்பை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறும் போது மதியம் சுட்டது.

கே.பாலமுருகன்

6 comments:

கிராமத்து காக்கை said...

கதையும் அருமை படம் அதைவிட அருமை வாழ்த்துக்கள்

கே.பாலமுருகன் said...

mikka nandri nanbare

Jamuna Velayutham said...

அனுபம் எழுத்துக்களாய் மாறியதா..?
அல்லது உண்மை கற்பனையாய் ஆனதா...?
எப்படி இருந்தாலும் ஒரு ஆசானின் காலைப் பொழுதை கண் முன் நிழலாட வைத்த உங்களின் எழுத்துக்கு வாழ்த்துகள்.தொடரட்டும் உங்கள் பணி.

Jamuna Velayutham said...

அனுபம் எழுத்துக்களாய் மாறியதா..?
அல்லது உண்மை கற்பனையாய் ஆனதா...?
எப்படி இருந்தாலும் ஒரு ஆசானின் காலைப் பொழுதை கண் முன் நிழலாட வைத்த உங்களின் எழுத்துக்கு வாழ்த்துகள்.தொடரட்டும் உங்கள் பணி.

A N A N T H E N said...

//ஒரு முழு நாளை பதற்றதுடன் தொடங்கி பலவீனமாக முடித்துக் கொள்ளும் சாபம்// ;)

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்கும்போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html