Thursday, September 22, 2011

தேவதையுடன் நெடுந்தூரப்பயணம் (ஜப்பானிய சினிமா – Kikujiro)


"பள்ளி விடுமுறையில்
கோடையையும் மழையையும்
தின்று தீர்க்கும் தனிமையைத்தவிர
வேறொன்றும் இருப்பதில்லை."

 


பள்ளி விடுமுறையின் இரண்டாம் நாளில் வீட்டைவிட்டு தன் அம்மாவைத் தேடி செல்லும் மாசோவ் என்ற சிறுவனின் நெடுந்தூரப் பயணம்தான் படத்தின் மையக்கதை. பயணம் நெடுக ரம்மியான இசையும் அற்புதமான காட்சிகளும், வித்தியாசமான மனிதர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஜப்பானின் மேற்கு பகுதி முழுக்க சாலை பயணம் செய்தது போன்ற ஓர் உணர்வு மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஜப்பான், தொக்யோ சிறு நகரத்தில் வாழ்பவர்களைப் பற்றிய படங்கள் அதிகம் பார்க்கக் கிடைப்பதில்லை. அகிரா குரோசோவா ஜப்பானிய சமுராய்கள் பற்றியும், மலைவாழ் குடிகள் பற்றியையும், மலையையொட்டிய சிறு சிறு நகரங்கள் பற்றியும் தமது படைப்புகளில் காட்டியுள்ளார். வாழும் இடத்தைக் குறுகிய நேரம் காட்டியிருந்தாலும் இப்படத்தின் சிறுவன் மாசோவ் வாழக்கூடிய சிறு நகரம் அமைதியில் உறைந்து கிடப்பதையும் விடுமுறை காலத்தில் குழந்தைகளை இழந்து நிற்பதையும் காணமுடிகிறது.


1999 ஆண்டு வெளிவந்த இப்படம் ஜப்பானின் பற்பல பகுதியை மிகவும் அடர்த்தியுடன் காட்டிச் செல்கிறது. குறைந்த கதைப்பாத்திரங்கள், வசனங்கள் இல்லாத காட்சிகள், தமிழ் சூழலுக்கு அந்நியமான உடல்மொழி, ஜப்பானின் குடும்ப அமைப்புக்குள் நிரம்பிக் கிடக்கும் சிதறல்களின் ஒரு முகம் என படத்தைப் பற்றி நிறையவே சொல்லலாம். தமிழ் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் இப்படத்தின் 80 சதவிதம் அசலைப் பிரதியெடுத்து அதைத் தமிழில் ‘நந்தலாலா’ படமாகக் கொடுத்துள்ளார். ஆனால் தமிழில் அப்படம் உருவானதற்குக் காரணமாக இருந்த Kikujiro படக்குழுவுக்கு எந்த நன்றியையும் குறிப்பிடவில்லை. மிஷ்கின் உண்மையான படைப்பாளியாக இருந்திருந்தால், படத்திலேயே கிக்கிஜிரோ பாதிப்பைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். படைப்பில் அதைப் பற்றி தவிர்த்துவிட்ட அவர் படம் வெளிவந்த பிறகு எந்த மேடையில் அதைக் குறிப்பிட்டாலும் அவை அனைத்தும் சால்ஜாப்பு மட்டுமே. குறைந்தபட்சம் கிக்கிஜிரோ எப்படி ஜப்பானிய சமூகத்தோடு பல இடங்களில் பிணைந்திருக்கிறதோ அதே போல தமிழ் வாழ்க்கைக்கு ஏற்புடைய வகையில் அந்தக் கதையைப் படைத்திருக்கலாம். ஆனால் உடல்மொழி தொடங்கி மனிதர்கள்வரை எல்லோருமே அந்நியத்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

விடுமுறையில் தப்பித்துச் செல்வது – Sudden Vacation

இன்றும் பள்ளி விடுமுறையில் நகரத்தை விட்டு நீங்கிச் செல்லும் குழந்தைகள் / சிறுவர்களைப் பார்ப்பதுண்டு. எப்பொழுதோ திடீரென வந்து சட்டென காணாமல் போகும் தூரத்து தேசத்தின் குருவிகள் விநோதமானவை. குழந்தைகள் விடுமுறையில் தூரமாகச் சென்று வருவதை விரும்பக்கூடியவர்கள். அப்படிப் பல சிறுவர்கள்/ குழந்தைகள் விடுமுறை காலம் முழுக்க ஊர் சுற்றுவதைப் பார்த்திருக்கிறேன். தனது புத்தகப்பையை வீட்டின் அறைக்குள் ஒளித்துவிட்டு வருவது போல பள்ளியைப் பற்றிய ஞாபகங்களையும் அதற்குள் சுருட்டி மறைத்துவிட்டு வருகிறார்கள். வெகுநாட்கள் வீட்டின் ஜன்னலுக்கு மேல் கூடுக்கட்டி வாழ்ந்த சிட்டுக்குருவிகள் மழைக்காலங்களில் திடீரென காணமல் போவதைக் கவனித்திருக்கிறீர்களா?

நான் சீனக் கம்பத்தில் இருக்கும்போது, அந்தப் பகுதி ‘சுங்கைப்பட்டாணி ஆற்றிலிருந்து’ 20 அடி தூரமே இருந்ததால், எப்பொழுதும் குருவிகள் மேய்ந்துகொண்டிருக்கும் ஒரு பகுதியாக அது காணப்பட்டது. குறிப்பாகப் பெரிய பாலத்திற்குக் கீழ் இரு பக்கங்களிலும் குருவிகளின் பூங்காவைப் போல எப்பொழுதும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதில் சில குருவிகள் அருகாமையிலிருக்கும் பலகை வீடுகளுக்கு உஷ்ணம் தாளாமல் தேடி வருவதுண்டு. பலகை வீடுகளில் தேங்கியிருக்கும் குளிர்ச்சியைக் கொத்தி தின்பதற்காகவே அது போன்ற குருவிகள் வந்திருக்கக்கூடும்.

என் அறையின் ஜன்னலைச் சுற்றி கொசு வலை பின்னப்பட்டிருக்கும். அதனுள் சிறு ஓட்டையைப் போட்டு குருவிகள் நுழைந்தபடியே இருக்கும். காலையில் இலேசாகக் கேட்கும் குருவிகளின் ஒலி விடிய விடிய மிகுதியாகும். என் விடுமுறை காலத்தில் அழைக்காமலே வீடு தேடி வரும் கூட்டம் இந்தக் குருவிகள்தான். படுக்கையிலிருந்து எழுந்திருக்காமல் குருவிகள் கத்துவதையும் அந்த வலைக்குள் அங்கும் இங்கும் பறப்பதையும் பார்த்துக்கொண்டிருப்பேன். எனது பத்தாவது வயதில் ஓர் உக்கிரமான கோடை, காலைத் தீண்டுவது போல வந்திவிட்டுப் போகும் குருவிகளின் இருப்பு பிறகு திடீரென மறைந்துவிடும். விடுமுறை காலத்தின் எனது சோர்வான பொழுது அங்கிருந்துதான் தொடங்கும்.

Kikujiro படத்தில் வரக்கூடிய மாசோவ் மிகவும் தனிமையானவன். அவனுடைய அம்மா எப்பொழுதோ அவனை விட்டு வெளியூர் சென்றுவிட்டார். அவர் காணாமல் போய்விட்டதாகவே அவனுக்குச் சொல்லப்படுகிறது. வயதான பாட்டியுடன் அவர்களுக்குத் துணையாக இருக்கும் ஒரு வேலைக்காரியுடன் மாசோவ் டொக்யோ சிறு நகரத்தில் வசிக்கிறான். தனிமைக்குள் வாழ்ந்து பழகிய அவன் எப்பொழுதும் யாருடனும் வெளிப்படையாகப் பேச முடியாத ஒரு தடையைக் கொண்டிருக்கிறான். ஜப்பான் சமூக சூழலில் அல்லது குடும்பச் சூழலில் மனம் பாதிப்படைந்தவர்கள் அதிகமாகக் காணப்படுகிறார்கள். தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் ஒரு பழக்கம் அங்கு ஒரு நோயாகவே அடையாளம் காணப்படுகின்றது.

மாசோவ் அப்படிப்பட்ட ஒரு நோய்க்கு ஆளானவன் போல வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு அமைதியில் உறைந்து கிடக்கிறான். பொழுதுகளில் எதையோ தேடிக்கொண்டிருப்பதைப் போலவே காணப்படுகிறான். பள்ளி விடுமுறை தொடங்குவதாகப் படம் ஆரம்பமாகிறது. வீட்டிற்கு வந்ததும் வெறுமை வெக்கை போல எங்கும் படிந்து கிடப்பதைக் காட்டுகிறார்கள். உடையை மாற்றிக்கொண்டு மாசோவ் பள்ளியின் திடலுக்கு ஒரு பந்தைத் தூக்கிக் கொண்டு செல்கிறான். திடல் காலியாகிக் கிடக்கிறது. அங்கு வரும் பாதுகாவலர், விடுமுறை காலங்களில் யாரும் இங்கு விளையாட வரமாட்டார்கள் எனத் தெரிவித்துவிட்டு அவனை அங்கிருந்து போகச் சொல்கிறார். சற்றுமுன் வீட்டுக்குள் சிறிய அளவில் காட்டிய தனிமையை இப்பொழுது திடல் அளவிற்கு விரித்துக் காட்டுவதை இந்தக் காட்சியில் மேலும் வலுவாக உணர முடிகிறது.

வீட்டிற்கு அருகாமையிலுள்ள தனது இன்னொரு நண்பனைத் தேடிக் கொண்டு கிளம்புகிறான். அவனும் தன் குடும்பத்துடன் விடுமுறைக்கு வெளிமாநிலம் செல்வதாகத் தனிமை மேலும் அடர்த்தியாகிறது. அவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டு கையிலுள்ள பந்தைத் தரையில் தட்டுகிறான் மாசோவ். அதன் பிறகு சோர்வு அவனைச் சூழ்ந்துகொள்கிறது. வீட்டிற்குச் செல்லும் மாசோவ் சிறுவயதில் தன்னிடமிருந்து தொலைந்துபோன அம்மாவின் புகைப்படத்தையும் அவரது முகவரியையும் தற்செயலாகப் பார்த்துவிடுகிறான். இந்த விடுமுறைக்கு தன் அம்மாவைப் போய் சந்தித்துவிட்டு வருவதாகத் தீர்மானிக்கிறான். எந்தக் கவலையுமின்றி ஒரு பையை எடுத்து மாட்டிக்கொண்டு கொஞ்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். தனிமை குழந்தைகளைக் கொன்றுவிடும் அல்லது வீட்டிற்கு வெளியே துரத்திவிடும் என்பதை உணர்த்தும் அழகான காட்சி அது.

பெரிய தாத்தா- ஸ்காப்ரோ 2 தோட்டம்

என்னுடைய ஒன்பது வயது வரை பள்ளி விடுமுறை என்றால் அம்மா என்னை பெரிய தாத்தா வீட்டில் கொண்டு போய் விட்டுவிடுவார். ஸ்காப்ரோ 2 தோட்டம் அப்பொழுதெல்லாம் செம்பனை நடுவுக்கு ஆளாகியிருந்த காலக்கட்டம். ஆகையால் சியாம்- இந்தோனேசியாக்காரர்களை அங்கு அதிகமாகப் பார்க்கலாம். மேலும் மதியம் தொடங்கிவிட்டால் குழந்தைகளை/சிறுவர்களை வெளியே உலாவவும் விடமாட்டார்கள். குறிப்பாகப் பெரிய தாத்தா அதை ஒரு கடமையாகவே செய்து வந்தார். அவருடைய ஆதிக்கத்திற்கு ஆளாகி வீட்டிலேயே அடங்கிக்கிடக்கும் சிறுவர்கள் அங்கு ஏராளம். வெள்ளை முடி, தளர்ந்த தேகம், ஆனால் மிகவும் புத்திசாலி.

அப்பா வைத்திருந்த ஆர்.சி பழைய மோட்டரில் பெரிய தாத்தா வீட்டை நோக்கி புறப்பட்டால் சுங்கை பட்டாணியிலிருந்து அங்குப் போய் சேர்வதற்கு 20 நிமிடம்வரை ஆகும். மழைக்காலத்திலும்கூட முன்னுக்கு அமர வைத்து, மழை உடையைச் சுற்றி ஒளித்து வைத்துக்கொண்டு அப்பா போய் விட்டுவிடுவார். பள்ளி விடுமுறை எந்த அலட்டலும் இல்லாமல் பெரிய தாத்தாவின் பாதுகாப்பில் சோர்வுடன் முடிந்துவிடும். காலை முதல் இரவு 8 மணிவரை படிக்க வேண்டும். புத்தகத்தைத் திறந்ததும் சொற்களெல்லாம் பல்லிழித்துக்கொண்டிருக்கும். எனக்குக் கையெழுத்து சரியாக வராது. ஆகையால் நாள் முழுக்க சொற்களைப் பார்த்து எழுதுதல், சொல் மேலே சொல்லை எழுதுதல் என இந்தச் சொற்களுடன் என் விடுமுறை காலம் வழிந்துவிடும். இராணுவ வீரர்கள் போல சொற்கள் நேர்த்தியாக எனக்கு முன் விரிந்து கிடக்கும். அதனை ஒவ்வொன்றாகச் சுட்டுத் தள்ளிவிட்டாலும் பரவாயில்லை எனத் தோன்றும்.

பெரிய தாத்தா ஜன்னலோரமாக அமர்ந்துகொண்டு எப்பொழுதும் வீட்டுக்குக் காவல் இருப்பார். அவரும் எங்களுடன் அதிகம் பேசமாட்டார். நாங்களும் வீட்டில் சத்தம் போட்டுப் பேசக்கூடாது. அப்படிப் பேசிவிட்டால் அன்று முழுக்க எப்படிப் பண்புடன் அடக்கமாகப் பேசுவது என்ற வகுப்பெடுக்கத் தொடங்கிவிடுவார். அந்தக் காலத்தில் ஜப்பான் இராணுவத்திற்குப் பயந்து காட்டிலும் வீட்டிலும் ஒளிந்து வாழ்ந்தபோது, அவர்கள் அமைதியாகவும் உடல்மொழியாலும் பேசிப் பழகியதால்தான் பலமுறை உயிர் தப்பிக்க முடிந்ததாகவும் கூறி அதன் அவசியத்தை வலியுறுத்துவார். சுவரில் வெகுநேரம் அசையாமல் கிடக்கும் பல்லியைக் கவனித்துக்கொண்டிருக்கும் எனக்கு பெரிய தாத்தா சொல்வது அவ்வளவாகப் புரியாது.

அப்பாவின் ஆர்.சி மோட்டாரில் துவங்கும் என் பள்ளி விடுமுறை மீண்டும் அதிலேயே வீடு திரும்புவதுடன் முடிவடைந்துவிடும். வீடு திரும்பியவுடன் எப்பொழுது கண்களை மூடினாலும் தாத்தாவின் அடர்த்தியான வெள்ளை முடித்தான் ஞாபகத்திற்கு வரும். விடுமுறையில் பார்த்துச் சலித்துப் போன ஒன்று அது மட்டும்தான். விடுமுறைகள் ஏன் துயமிக்க செய்தியை மட்டும் கொண்டு வந்து சேர்க்கிறது?

மாசோவ் விடுமுறையில் என்ன செய்வதென்று தெரியாமல்தான் வெளியேறுகிறான். அவனைச் சுற்றி தன் கைகளை அகல விரித்திருக்கும் வெறுமை, அவனுக்கொரு வழியைக் காட்டுகிறது. வெறுமையின் பிடியிலிருந்து நழுவதற்காக கிகிஜிரோ எனும் இன்னொரு நபரின் உதவியுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறான். அவர்கள் இருவரும் கடந்து போகும் பாதைகளும் இடங்களும்தான் மாசோவ்வின் ஒட்டுமொத்த விடுமுறைகாலமும்.

யார் இந்த கிக்கிஜிரோ?

மூன்றுமுறை திருமணம் செய்து பிறகு மீண்டும் கணவனை விட்டு தனியாகக் கடை வைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்மணி ஒருவரின் நான்காவது கணவர்தான் கிக்கிஜிரோ. கிக்கிஜிரோவின் அம்மா மட்டும் எங்கோ ஒரு மனநலக் காப்பகத்தில் இருக்கிறார். அந்தப் பெண்மனிக்கு மாசோவ் மீது கொஞ்சம் அக்கறையும் அன்பும் இருக்கிறது. மேலும் அவர்கள் இருவரும் மாசோவ் வீட்டுக்கு அருகாமையில் உள்ளவர்கள். ஆகையால் தன் அம்மாவைத் தேடிக் கிளம்ப முற்படும் மாசோவின் துணைக்காகக் கிக்கிஜிரோவையும் உடன் அனுப்புகிறார். கிக்கிஜிரோ 40 வயதை நிரம்பிய மூளை வளர்ச்சி அதிகம் இல்லாத ஒரு முரட்டு நபராகவே காட்டப்படுகிறார். வழிநெடுக அவர் எல்லோரிடமும் கடுமையாக நடந்துகொள்கிறார். தான் செய்வதன் எந்தப் பின்விளைவைப் பற்றியும் அதிக அக்கறை கொள்ளாமல் வாழ்வை மேம்போக்காக வாழ்ந்து கழிக்கும் ஒரு வித்தியாசமான நபர் கிக்கிஜிரோ.

சிறுவன் மாசோவை அவன் அம்மாவுடன் சந்திக்க வைப்பதில் ஆர்வம் காட்டாத கிக்கிஜிரோ பந்தயத்தில் எல்லாம் பணத்தையும் செலவிடுகிறான். பிறகு மாசோவ் சொன்ன எண்ணை வைத்து பந்தயமிட்டு மீண்டும் பணத்தை மீட்கிறான். அப்பணத்தைக் கொண்டு ஆடம்பரமாகச் செலவிட்டு அங்கும் இங்கும் திரிகிறார்கள். பணம் செலவாகி முடிந்ததும் மீண்டும் கிக்கிஜிரோ சிறுவன் மாசோவ் மீது கோபம் கொள்கிறார். பிறரிடம் உதவி கேட்பதைக்கூட மிகுந்த அதிகாரத்துடன் கேட்பதும், அல்லது உலகில் உள்ள யாவரும் தனக்கு உதவுவதில் கடமைப்பட்டுள்ளவர்கள் போல சக மனிதர்களைக் கிக்கிஜிரோ பாவிப்பது விந்தையாகத் தோன்றுகிறது. தனக்கு உதவ மறுக்கும் லோரி ஒட்டுனரைக் கல்லால் அடிக்க முயல்வதும், பிறகு உதவாத அவனுடய லாரியின் கண்ணாடியை உடைத்துவிட்டு ஓடுவதும் என தன் வெறுப்பை மிக நியாயமானதாகக் கிக்கிஜிரோ மாற்றும் இடங்கள் அவர் மீது ஆச்சர்யத்தை வரவழைக்கிறது.

இவ்வுலகத்தின் எந்த இருண்ட பகுதியின் மீதும் விருப்பமில்லாத கிக்கிஜிரோ அதை அநாவசியமாகக் கடந்துவிடுகிறான். அவருக்கு அழுகை வருவதில்லை. தனக்கு நிகழும் எந்தக் கொடுமையை நினைத்தும் வருத்தமோ வருவதில்லை. மாற்றாக எல்லாவற்றின் மீதும் ஒரு கடுகு நேரக் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறார். தான் செய்த எந்தச் செயலின் மீது அதிக நேரம் பிரக்ஞையில்லாமல் சட்டென அதிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்கிறார். இது போன்ற மனிதர்கள் ஏன் இப்படிச் செயல்படுகிறார்கள்? இவர்கள் வெறும் மூளை வளர்ச்சி அதிகம் இல்லாத மனநோயாளிகளின் ஒரு வகையினர் என மட்டும் சொல்லிவிட முடியுமா?

மாசோவ் – கிக்கிஜிரோ சந்திக்கும் மனிதர்கள்

தன் அம்மாவைத் தேடி கிக்கிஜிரோவுடன் பயணத்தைத் தொடக்கும் சிறுவன் மாசோவ் வழியில் சந்திக்கும் மனிதர்கள் விசித்திரமானவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு சமூகத்தின் ஆழ்மனமாக வந்துவிட்டுப் போகிறார்கள். ஜப்பான் சமூகத்தின் ஆழ்மனம் எப்படிச் சிதைவுண்டு கிடக்கிறது என்பது தொடங்கி அது எப்படி அன்பின் வழி தன்னை மீட்டெடுத்து சக மனிதர்கள் மீது செலுத்துகிறது என்பதுவரை மாசோவ் சந்திக்கும் வழிப்பயணிகள் நிறுபிக்கிறார்கள். வந்து போகுபவர்கள் குறைவானவர்களாக இருப்பினும் ஒவ்வொருவரும் ஜப்பானின் பற்பல சமூகங்களை வந்து காட்டிவிட்டுப்போவதாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

1. கிக்கிஜிரோவின் மனைவி

சுயமாகக் கடை வைத்து உழைத்து வாழக்கூடியவள். ஆனால் நாம் நினைக்கும் குடும்ப அமைப்பிக்குள் வைத்து அவளை அடையாளப்படுத்து முடியாது. குடும்ப அமைப்பு என்பதை மிக உன்னதமான ஒன்றாகவும் கலாச்சார பாதுகாப்பை வழங்கும் நிறுவனமாகவும் பாவிக்கும் ஆசியாவின் பல நாடுகளின் நம்பிக்கைகளை அலட்சியமாக்கக்கூடியவர் கிக்கிஜிரோவின் மனைவி. தனக்கு வேண்டிய வாழ்வை எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அமைத்துக்கொண்டும் களைத்துக்கொண்டும் எந்த ஆணாதிக்க அதிகாரத்தின் கீழும் பெண்களுக்கான இறுக்கமான புனிதங்களைப் பூஜித்துக்கொண்டும் வாழமாட்டாதவள் போல படத்தில் சிறிது நேரம் மட்டுமே வந்து போகிறாள்.

அன்பு என்பது சமூகம் கட்டமைத்திருக்கும் அல்லது விதிமுறைப்படுத்தி வைத்திருக்கும் ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் நல்லவர்களால்தான் பாதுகாக்கப்படும் வழங்கப்படும் என்பதற்கில்லை. தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தனக்கு விருப்பமான வாழ்வைத் தேர்ந்தெடுத்து வாழக்கூடிய கிக்கிஜிரோ மனைவியைப் போல ஒரு சிலராலும் வழங்க முடியும் என்பதற்குப் படத்தின் ஆரம்பக்காட்சிகள் ஆதாரமாக இருக்கின்றன.

2. ஆண்களுக்கு வாய்ப்புணர்ச்சி செய்பவன்

எல்லாவற்றையும் இழந்துவிட்ட கிக்கிஜிரோ ஒரு மதுக்கடையில் அமர்ந்து இரவு முழுக்க மது அருந்துகிறான். சிறுவன் மாசோவ் கடைக்கு வெளியில் தனிமையில் நின்று கொண்டிருக்கிறான். ஆண்களுக்கு வாய்ப்புணர்ச்சி செய்து விடுவதில் விருப்பமுடைய ஒருவன் அங்கு வந்து மாசோவை அழைத்துக்கொண்டு அருகாமையிலுள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்று அவனை வற்புறுத்தல் செய்கிறான். இந்தப் பாத்திரப்படைப்பு அருவருக்கத்த வகையில் காட்டப்படாமல் தன் தேவைக்காக அந்தச் சிறுவனிடம் பரிதாபமாகக் கெஞ்சும் ஒரு மனிதரைத்தான் காட்டியிருக்கிறார்கள். (இந்தக் காட்சியை மிஷ்கின் அவர் படத்தில் எடுக்கவில்லை, தமிழ் நாட்டின் புனிதத்தைக் காக்க வேண்டும் அல்லவா?)

அப்படியென்ன இவனுக்கு அது தேவையாக இருக்கிறது எனும் ஒரு கேள்வியை நம்மால் முன்வைக்க முடியுமா? எல்லோருக்கும் தேவைகள் இருப்பதையும், அது சிலருக்கு மாறுபட்டிருப்பதையும், அந்த மாறுப்பட்டிருக்கும் தேவை நமக்கு விரோதமானவையாகும் நமக்குக் கற்பிக்கப்பட்ட ஒழுங்குக்கு முரணாக இருப்பதையும் நன்கு புரிந்துகொண்ட பிறகு இக்காட்சியை அணுக வேண்டியுள்ளது. அவன் வன்முறையாளன் கிடையாது. சிறுவனைக் காயப்படுத்தவும் இல்லை. அவனுடைய கால் சட்டையைப் பிடித்துக் கொண்டு அதை அவிழ்க்குமாறு கெஞ்சுகிறான். இது வன்மமான ஒரு விசயமா? அல்லது இது முற்றிலும் தண்டிக்கப்படவேண்டிய ஒரு குற்றமா? இவர்கள் அல்லது இது போன்ற ஓரின விருப்பங்கள் உருவாக்கப்படுகின்றனவா? எப்படிப்பட்ட உறவாக இருந்தாலும் அது இரு பாலரின் விருப்பப்படி நடப்பதுதான் சரி என உலகமெங்கும் கருதப்படுகிறது.

ஆனால் இப்படத்தில் வரும் அந்த நபர் தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள சிறுவனைக் கட்டாயப்படுத்துவதை வெறும் ஒழுக்கம் சார்ந்து பாராமல், கொஞ்சம் மனிதம் சார்ந்தும் பார்க்க முற்பட்டால், ஏன் இப்படியொரு சாரார் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள பிறரைப் பலியாக்குகிறார்கள் என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. இம்மாதிரியான விசயங்கள் சமூகத்தில் மட்டுமல்லாமல் குடும்பங்களிலும் மேலும் வக்கிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

சிறுவன் வற்புறுத்தப்படுவதைப் பார்க்கும் கிக்கிஜிரோ அந்த ஆசாமியைத் தாக்கிவிட்டு சிறுவனை அழைத்துக்கொண்டு போய்விடுகிறான்.

3. Juggling வித்தைக் காட்டுபவளும் அவளுடைய காதலனும்

கிக்கிஜிரோ ஏதாவது ஒரு காரில் ஏறி தங்களின் பயணத்தைத் தொடங்க வேண்டும் எனத் துடித்துக்கொண்டிருந்தமையால், மாசோவின் முகத்தில் சாயத்தைப் பூசி அவனை ஏழை சிறுவன் போல ஆக்கிவிட்டிருக்க முயற்சித்தார். வரும் போகும் காருக்கு முன் நின்று கெஞ்சுவதற்கு அவனுக்குப் பயிற்சி அளிக்கிறார். அதன்படி ஜக்லிங் வித்தையைச் செய்யக்கூடிய ஒரு பெண்ணும் அவளுடைய காதலனும் அவனையும் கிக்கிஜிரோவையும் ஏற்றிக்கொள்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் ஒரு பெரும்வெளியில் காரை நிறுத்திவிட்டு சிறுவன் மாசோவுடன் விளையாடுகிறார்கள். அவள் ஜக்லின் வித்தையைக் காட்டி சிறுவனை மகிழ்விக்கிறாள். பிறகு அவளுடைய காதலன் செய்யும் பொம்மை நனடத்தைக் கைத்தட்டி இரசிக்கிறான். அவனிடம் காசு கொடுத்து பொம்மையை இயக்கச் சொல்லி அவனை மகிழ்விக்கிறாள். அவளுடைய காதலின் உடல் அசைவு பிரமிக்கும் வகையில் அப்படியே இயந்திரப் பொம்மையைப் போன்றே ஒத்திருக்கின்றன. தங்களுடன் ஒரு வழிப்பயணியாக மட்டுமே வரும் சிறுவன் மாசோவை அவர்கள் இருவரும் மாறி மாறி மகிழ்விப்பது நாம் பேசத் தயங்கும் அன்பின் ஈரத்தைப் போல மனதில் பிசுபிசுக்கிறது. அவசரப் பயணத்தின்போது பற்பல சாலைகளையும், வழியில் நடந்து செல்பவர்களையும் எப்பொழுதும் நாம் கவனிப்பதில்லை. அங்கொரு வாழ்வு இருப்பதைப் பற்றி நாம் அக்கறையும் கொள்வதில்லை. ஜக்லிங் வித்தை செய்பவள், ஒரே நேரத்தில் மூன்று பந்தைக் கையாளும் வித்தையைக் காட்டி மட்டும் நம்மைப் பிரமிக்க வைக்கவில்லை என உணர முடிகிறது.

4. டொக்யோ கவிஞர்

அவர்கள் இருவரையும் ஏற்றிச் செல்ல வாகனங்கள் முன்வராததை நினைத்து வெறுப்படையும் கிக்கிஜிரோ, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மகிழுந்தின் சக்கரத்தைத் துளையிட்டு பழுதாக்க முற்படுகிறான். ஆனால் அந்த மகிழுந்தின் உரிமையாளரான தொக்யோ கவிஞர் அதனைப் பார்த்துவிடுகிறார். பிறகு இருவரையும் ஏற்றிக்கொண்டு டொயாஷி பாலம் வரை கொண்டு போய் சேர்க்கிறார். தன் நாவலை முழுமைப்படுத்துவதற்காகத்தான் அவர் பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனும் சொல்லும் இடம் மிக முக்கியமானது. ஒரு நாவலாசிரியன் கண்டிப்பாகப் பயணிக்க வேண்டும் என்பது இலக்கிய சூழலில் முன்வைக்கப்படுகிறது. அப்படியொரு தேடலை நோக்கித்தான் அந்தக் கவிஞர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

வெளியேறுதல் என்பது எல்லாம் நேரங்களிலும் அமங்கலமான ஒரு விசயம் மட்டும் கிடையாது. மாசோவ் தன் அம்மாவைத் தேடி வெளியேறியிருப்பதைப் போல அந்தக் கவிஞர் தன் படைப்பை முழுமையாக்க வெளியேறியுள்ளார். அடிப்படையில் எல்லாருக்குள்ளும் இருக்கும் தேடலுக்குப் பயிற்சியளிக்கும் ஒன்றாகத்தான் இப்படத்தில் பயணம் வந்து போகிறது. அவர்களைப் பாலத்தின் அடிவாரத்தில் இறக்கிவிட்டு அங்கிருந்து புறப்படும் அவரை, இருவரும் மீண்டும் ஒரு சோளக்காட்டில் தற்செயலாகச் சந்திப்பது சுவாரசயமான விசயமாகும். கிக்கிஜிரோவும் கவிஞரும் சோளத்தைத் திருடி, அதைச் சாலையோரத்தில் வைத்து விற்கிறார்கள். பிறகு அங்கேயே ஓர் இடத்தில் கூடாரமிட்டு தங்கிவிடுகிறார்கள்.

5. பெரிய மோட்டாரோட்டிகள்

அசலான கிக்கிஜிரோ படத்தில் காட்டப்படும் இவர்கள் நந்தலாலா படத்தில் காட்டப்படும் இரண்டு பெரிய மோட்டாரோட்டிகளைப் போல கோமாளிகள் அல்ல. தமிழ் வாழ்க்கைக்குச் சற்றும் தொடர்பில்லாத அந்நியமாகியிருக்கும் அந்தக் கதைப்பாத்திரங்கள் மிகுந்த வறட்சி மிக்கவையாகப் படைக்கப்பட்டிருக்கும். ஆனால் கிக்கிஜிரோவில் வரக்கூடிய அந்தப் பெரிய மோட்டாரோட்டிகள் இருவரும் மிகவும் இயல்பானவர்கள். சிறுவனை மகிழ்விப்பதிலும் அவனுக்காக நேரத்தைச் செலவிட்டு தியாகம் செய்வதிலும் தனித்துக் காட்டப்பட்டுள்ளார்கள். வழியில் சந்திக்கும் அவர்கள் எப்படிக் கதையுடன் நெருக்கமாகி வந்தார்கள் எனும் கேள்வியை நாம் அடையும் முன்பே அவர்கள் இருவரும் கதைக்குள் கலந்திருப்பார்கள்.

கிக்கிஜிரோ தன் அம்மாவைச் சந்திக்க மனநலக் காப்பகத்திற்குச் செல்ல அந்த மோட்டாரோட்டித்தான் அழைத்துப் போகிறான். அங்குக் கிக்கிஜிரோ யாருடன் பழகவிரும்பாமல் தனிமையில் உறைந்து கிடக்கும் தன் அம்மாவைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு எந்தச் சலனமும் இல்லாமல் திரும்பிவிடுகிறார். அவர் தன் அம்மாவைச் சந்திக்காததன் காரணத்தைக் கேட்கும் மோட்டாரோட்டியைக் கண்டபடி திட்டுகிறார் கிக்கிஜிரோ. அதனைப் பொருட்படுத்தாமல் அவரை அழைத்துக்கொண்டு கூடாரத்திற்குத்ன் திரும்பும் அந்த மோட்டாரோட்டி இன்னும் அழுத்தமாக மனதில் பதிகிறான்.

அடுத்ததாக இன்னொரு மோட்டாரோட்டி, சிறுவன் மாசோவை மகிழ்விக்க வேற்றுக்கிரகவாசி போல தன்னை வேடமிட்டுக்கொண்டு, காட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டு பல வித்தைகள் காட்டுகிறான். உல்லியாக இருக்கும் அவனுடைய தேகம் பல வேடங்களுக்குப் பொருந்தி வருகிறது. குமட்டிப் பழம் போல தன் தலையை வரைந்து சாயமிட்டு அமர்ந்துகொள்வதும், கோமணம் கட்டிக்கொண்டு அந்தரத்தில் மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குவதும் என அந்த மோட்டாரோட்டியின் இருப்பு படத்தில் அவனை ஒரு பயணியாக மட்டுமல்லாமல் அதையும் மீறிய ஓர் இடத்தில் வைத்து உணரச் செய்கிறது.

மௌனமும் தனிமையும்

மலேசியாவில் ஏன் தற்கொலை செய்து கொள்வதில் சீனர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா? தற்கொலை செய்து கொள்ளும் ஒருவன் அடையும் தனிமையும் மௌனமும் எத்துனை அடர்த்தியானவை என்பதைப் பற்றி நாம் பேசியிருக்கிறோமா?

ஒருவேளை கிக்கிஜிரோ தொடர்ந்து இந்தச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருந்தாலோ அல்லது காயப்படுத்தப்பட்டிருந்தாலோ அவரும் மனம் சிதைந்து தன்னை அழித்துக்கொண்டிருக்கக்கூடும். மாசோவின் மூலம் அவர் மேற்கொண்ட பயணம் அவரின் மனதின் ஏதோ ஒரு பகுதியை விழிக்கச் செய்திருக்கிறதே என்றே நினைக்கிறேன். அவர் சமூகத்தைவிட்டு விலகியே இருந்திருக்கிறார் என்பதை அந்தப் பயணத்தின் போது அவர் சமூக மனிதர்களுடன் பழகத்தெரியாமல் கடுமையாக நடந்துகொள்வதன் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

சமூகத்தின் மீது எந்தக் கோபமும் இல்லையென்றாலும், கிக்கிஜிரோ யாரைக் கண்டாலும் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார், கடுமையாகப் பேசி அவர்களைத் தாக்குகிறார். இப்படியொரு எதிர்வினையைச் சமூகத்தின் மீது காட்டக்கூடியவர் வெறும் கோபக்காரராக மட்டும்தான் இருக்க முடியுமா?

இந்தக் கதையில் மிக முக்கியமானவன் சிறுவன் மாசோவ். கதை முழுக்க அவன் அதிகம் பேசுவதில்லை. அதிகம் சிரிப்பதில்லை. அவனிடம் சொற்கள் வறண்டிருக்கின்றன. மகிழ்ச்சியை எங்கோ தொலைத்துவிட்டது போல காணப்படுகிறான். அவன் சந்தித்த வழிப்பயணிகள் ஒவ்வொரு கணமும் அவனுடைய மௌனத்தைக் களைத்தப்படியே இருக்கிறார்கள். ஒருவேளை அவனுடைய நெடுங்கால அந்த மௌனம் களைக்கப்படாமல் இருந்திருந்தாலும் , அவன் சமூகத்தின் முன் ஊமையாகியிருப்பான்.

அம்மாவின் வீட்டைத் தேடி அடையும் மாசோவ், அங்கு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகுகின்றான். அவர் வேறொருவருக்கு மனைவியாகவும் வெறொரு குழந்தைக்குத் தாயாகவும் இருக்கிறார். அதைக் கண்டு மிரளும் மாசோவ் பிறகு வருத்தத்துடன் அங்கிருந்து விடைப்பெறுகிறான். அவனுக்கு ஆறுதல் சொல்லும் கிக்கிஜிரோ அது உன் அம்மாவாக இருக்க முடியாது அவர் எங்கேயோ சென்றிருப்பார் எனச் சொல்கிறார். பிறகு அவர் அம்மா அவருடைய மகன் தன்னைத் தேடி வந்தால் அவனிடம் ஒரு தேவதை மணியைக் கொடுத்துவிடும்படி சொன்னதாக, (பெரிய மோட்டாரோட்டியிடமிருந்து பறித்த மணியை) சிறுவனிடம் கொடுக்கிறார்.மாசோவிற்கு சிரமமும் பிரச்சனையும் வரும்போதெல்லாம் அந்த மணியை வேகமாக ஆட்டினால் வானத்திலிருந்து ஒரு தேவதை வந்து அவனுக்கு உதவி செய்யும் எனக் கூறுகிறார். சிறுவனும் மணியை வேகமாக ஆட்டிவிட்டு வானத்தைப் பார்க்கிறார்கள். தேவதை வராததை எண்ணி மாசோவ் கவலையுற்றாலும் அம்மாவின் ஞாபகமாக அந்த மணியைப் பத்திரப்படுத்திக்கொள்கிறான்.

கடைசியில் இருவரும் இல்லம் திரும்புகின்றனர். விடைப்பெறுவதற்கு முன் சிறுவன் மாசோவ் கிக்கிஜிரோவுக்கு நன்றி சொல்கிறான். அவருடைய பெயர் என்ன என்பதையும் விசாரிக்கின்றான். அவர், “கிக்கிஜிரோ, கிக்கிஜிரோன்னு கத்தி சொல்லு” என்கிறார். சிறுவன் தன் வீட்டை நோக்கி ஓடுவதாகப் படம் பெரும் இசையுடன் நிறைவடைகிறது. மௌனத்தைக் களைப்பதற்கும் தனிமையை வெல்வதற்கும் இம்மாதிரியான பயணங்கள் விசித்திரமான தேவதையின் வரம் போல சில சமயம் வானத்திலிருந்து இறங்கி வருகிறது கிக்கிஜிரோவை போல.

கே.பாலமுருகன்
thanks to vallinam.com

4 comments:

aotspr said...

அருமையான விமர்சனம்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

கேரளாக்காரன் said...

One of the best review i ever read

கேரளாக்காரன் said...

Neraya world movies ezhuthunga with character description

AnGel said...

such a wndrful review.. keep it up! bst wshs 4u...