Friday, October 28, 2011

ஆஸ்திரேலிய சினிமா: திருடப்பட்டத் தலைமுறை (Rabbit Proof Fence

1500 மைல்
நிலத்தை எரிக்கும் வெயிலை மிதித்தப்படி
ஊர் தேடி அலையும் பறவைகள் போல
வேலிகளைக் கடக்க முடியாத ஒரு பயணம்”

பிலிப் னோய்ஸ் 2002 ஆம் ஆண்டு இப்படத்தை இயக்கி வரலாற்றில் ஒளிந்திருந்த சில உண்மைகளை உலகிற்குக் கொடுத்தார். சமீபத்தில் பினாங்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போர் அருங்காட்சியகத்துக்குச் சென்றபோது, எப்படிப் பிரிட்டிஷாரால் மலாயாவைப் பிரிக்கும் எல்லையாகப் பயன்படுத்தப்பட்ட இடம், ஜப்பானிய காலக்கட்டத்தில் சிறையாகவும் வதை செய்யும் இடமாகவும் மாற்றப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அங்கிருக்கும் சுவர்களில் துப்பாக்கி குண்டுகளும் மரணித்தவர்களின் கதறல்களும் குருதி காய்ந்த வாடையும் எப்பொழுதும் பதிந்து கிடப்பது போன்ற சூழலை அதன் மௌனத்தை வைத்து உணர முடிந்தது. ஒவ்வொரு பிரதேசமும் இப்படியொரு வரலாற்றின் மரண ஓலத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. ஏதோ ஒரு பாசிச அரசு தனது சர்வாதிகாரத்தின் கொடூரத்தை மற்ற நிலப்பரப்பில் நிகழ்த்தி காட்டிய கதைகளை நாம் படித்துக்கொண்டே இருக்கிறோம். அது வரலாறாக இருந்து பின்னர் கதைகளாக மாறி கரைந்துவிடுகின்றன.

இப்படிப்பட்ட பல தேசங்களின் வரலாற்றின் கருப்பு பக்கங்கள் சிதையாமல் அதை ஆவணப்படுத்துவதில் அதிகமான அக்கறையையும் தீவிரத்தையும் காட்டுவது ஒரு சில சினிமாக்காரர்கள்தான். சினிமா கலைஞன் ஒரு தேசாந்திரியைப் போல அலைந்து திரிந்து தனது வெளியையும் அதன் உள்ளடுக்குகளையும் கண்டறிந்து அதைப் பொதுவிற்குக் கொண்டு வருபவன். ஒரு தேசத்தில் உறைந்து கிடக்கும் கதைகளையும், வரலாற்றையும், துயரங்களையும், கலாச்சாரத்தையும் அடையாளம்கண்டு அதை உலகிற்குக் கலை படைப்பாகத் தரக்கூடிய உன்னத வேலையைச் செய்பவனே சிறந்த சினிமாக்காரன் என நினைக்கிறேன். இப்படிப்பட்ட கலைஞனிடம் வந்து சேரும் எத்தனையோ நிலப்பரப்புகள் தன்னை கால தூசுகளிலிருந்து விடுவித்துக்கொண்டுள்ளன. பல ஆஸ்கார் விருதுகளை வென்ற ஸ்டீவன் இயக்கிய ‘Schindler’s List’, ‘Empirer of City’, Terry Goerge இயக்கிய ‘Hotel Rwanda’, Roberto Benigni இயக்கிய ‘Life is Beautiful’ எனப் பல படங்களை உதாரணங்கள் சொல்லலாம்.

ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் துயரம் மிகுந்த பகுதிகளை அம்பலப்படுத்தும் பணியை கலை நேர்த்தியுடன் செய்து காட்டியது ‘ரெப்பிட்ஸ்’ படத்தின் இயக்குனர் பிலிப். 18ஆவது வயதிலேயே குறும்படம் இயக்கத் துவங்கிய பிலிப், 1977ஆம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கினார். பிலிப் தன் அப்பாவின் போர்க்கதைகளைக் கேட்டு இரண்டாம் உலக போரின் மீது அதீதமான விருப்பமும் ஆர்வமும் கொண்டார். பயிற்சியின் மூலம் தான் அடைந்த கலை எழுச்சியைத் துணைக்கொண்டு ஆஸ்ட்ரோலியாவின் ஆழ்மனதைத் தேடி அலைந்து இறுதியாக அவர் வந்து சேர்ந்த இடம்தான் fence வேலிகளும் Moore River Native Settlement எனும் காப்பகமும்.

ஆஸ்திரேலியாவின் வேலிகள்தான் உலகிலேயே அதிகப் பரப்பளவும் நீளமும் கொண்டவை. இந்த வேலிகள் நாட்டுக்குள் இருக்கும் பற்பல பகுதிகளை மூன்றாகப் பிரித்து வைத்திருந்தன. இந்த வேலிகளைக் கடந்து பல்லாயிரம் தூரம் கடந்து போனால் மூர் நதியோரமாக இருக்கும் Moore River Native Settlement எனும் இடமும் அங்கிருந்து தப்பிக்கும் மூன்று சிறுமிகளின் பயணமும் கதையின் தீராத துயரமாக ஆஸ்ட்ரோலியா காடு, மலைமேடுகள், பாலைவனங்கள் என வழிகின்றன.

இது என்ன இடம்? ஏன் இவ்வளவு பெரிய வேலி? இந்த வேலிகள் ஏன் உருவாக்கப்பட்டன? யாரை யாரிடமிருந்து பிரித்து வைக்க இந்த வேலிகள் எழுப்பப்பட்டன? வேலியை எப்படிக் கடப்பது? மூர் நதியோரம் இருக்கும் அந்தக் காப்பகம் எதற்காக இயங்கிக் கொண்டிருக்கிறது? அங்கிருந்து தப்பிக்கும் அந்த மூன்று சிறுமிகள் யார்? அவர்கள் எங்குச் செல்கிறார்கள்? இதுதான் இப்படத்தின் மையம். இதை ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்வதன் மூலம் இப்படம் நமக்கு சொல்ல வரும் வரலாற்றை தெரிந்துகொள்ள முடியும்.

Rabbit Proof Fence (ஆஸ்ட்ரோலியாவின் முப்பெரும் வேலிகள்)

1901 முதல் 1907வரை கட்டி முடிக்கப்பட்ட இந்த வேலிகள், வன மிருகங்களும் முயல்களும் தனிநபர்/குழுசார் நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களையும் நிலங்களையும் சேதப்படுத்தாமலிருக்க அமைக்கப்பட்டதாகும். ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியையொட்டிய வனங்களிருந்து தப்பி வரும் மிருகங்கள் மேற்கு எல்லைகளின் நிலங்களின் வளங்களை அழித்தொழித்துவிடுவதால், அதனைத் தடுக்கவே இந்தப் பெரும் வேலிகள் கட்டப்பட்டன. மேற்கு ஆஸ்ட்ரோலியாவை ஒட்டி எழுப்பப்பட்ட இந்த வேலிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நாட்டை வடக்கிலிருந்து தெற்கை நோக்கி கடந்து செல்லும், மற்றொன்று மேற்கின் எல்லைவரை நீள்வது மேலும் மூன்றாவது கிழக்கிலிருந்து மேற்கின் மீதப் பகுதிகளைக் கடந்து செல்வது. இந்த மூன்று வேலிகளையும் கட்டி முடிக்க ஆஸ்ட்ரோலியா அரசாங்கம் 6 வருடங்களை எடுத்துக்கொண்டது.

1907ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த முப்பெரும் வேலியின் மொத்த நீளம் 3253 கிலோ மீட்டர் ஆகும். வரலாற்றில் அதிகமான மனித சக்திகளை உறிஞ்சி 3 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த வேலிகள் ஆஸ்ட்ரோலியா நாட்டை மூன்றாகப் பிரித்ததுடன் மட்டுமில்லாமல் வாழும் மனிதர்களை பற்பல எல்லைகளாகப் பிரித்து பலரைத் தனிமைப்படுத்தின. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்தை நோக்கிப் பயணப்பட ஒட்டகத்தையே வாகனமாகப் பயன்படுத்தினார்கள். மேலும் அது மிக நீளமான பயணமாகும். வேலிகள் தூரத்தை அளக்கும் கருவி போல காலம் முழுக்க நாடுகளின் வட்டாரங்களையும் கிராமங்களையும் எல்லை எல்லையாகப் பிரித்து தூரப்படுத்தியிருக்கின்றன. அதுவும் ஆஸ்ட்ரோலியாவின் மூன்று வேலிகளும் அதன் மீதிருக்கும் முட்களைவிட கூர்மையான கசப்புகளையும் இழப்புகளையும் நிகழ்த்தியிருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் இப்படம் காட்டும் அந்த மூன்று சிறுமிகளின் பயணம்.

1907 ஆம் ஆண்டு அந்த வேலிகள் தயாரானதும் வன அதிகாரியான அலேக்செண்டர் அதன் தலைமை பொறுப்பை ஏற்று 1922 வரை பணியாற்றினார். இரவு பகல் முழுவதும் எல்லைகளையும் வேலிகளையும் பாதுகாக்க பல அதிகாரிகள் வேலையில் அமர்த்தப்பட்டனர். வேலிகள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாகின. காலப்போக்கில் இந்த வேலிகளையொட்டி பல கதைகளும் புனைவுகளும் ஆய்வு கட்டுரைகளும் எழுதப்பட்டன. அதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது 1929 ஆம் ஆண்டில் Arthur Upfield அவர்களால் எழுதப்பட்ட புத்தகமாகும். பாலைவனத்தில் செத்த உடலை அகற்றும் விதத்தை எழுதி அவர் வெளியீட்டது வேலிகள் மனித நடவடிக்கைகளுக்கும் கலாச்சார செயல்பாடுகளுக்கும் எப்படிப் பெரும்தடையாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வழிவகுத்தது. செத்த ஓர் உடலைப் பாலைவனத்தில் அடக்கம் செய்ய அவர்கள் கடந்து செல்லும் தூரமும் இடையிடையில் வந்து போகும் பாலைவன புயல்களும், முள்பாதைகளும் என வேலிகள் உருவாக்கி வைத்திருக்கும் மனித நேயத்திற்கு எதிரான பயணத்தின் கொடூரத்தைக் காட்டுவதாக அந்தப் புத்தகங்களிலுள்ள கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தப் படத்தில் மூர் நதி காப்பகத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள் இரவு பகல் முழுவதும் வேலிகளையொட்டி தூரங்களைக் கடந்து செல்கிறார்கள். மிகப்பெரிய பரப்பளவில் கட்டப்பட்ட இந்த வேலிகள் பல காலம் அப்படியே வெயிலையும் வானத்தையும் வெறித்தப்படியே எத்தனை வன்முறைகளைத் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது என்பதைப் படம் நெடுக சிறுமிகளின் பயணத்தின் வழி உணர முடிகிறது. மேலும் இந்த வேலிகளை ஆஸ்ட்ரோலியாவில் அமைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட பல வெள்ளைக்கார வேலையாட்கள்தான் அரை ஜாதி குழந்தைகள் உருவாவதற்குக் காரணமாகக் கருதப்படுகிறார்கள். யார் இந்த அரை ஜாதி குழந்தைகள்?

திருடப்பட்ட தலைமுறை – Aboriginal குழந்தைகள் (அரை ஜாதி குழந்தைகள்)

ஆஸ்திரேலிய நாட்டின் மாநில அரசாங்கமும் தலைமை அரசும் சேர்ந்து அரை ஜாதி குழந்தைகளை அவர்களின் குடும்பங்களிலிருந்து பிரித்துத் தனியாக அடைத்து வைக்க வேண்டும் என முடிவெடுத்தன. அரை ஜாதி குழந்தைகள் இந்தத் தேசத்திலுள்ள அசலான கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சேதப்படுத்திவிடுவார்கள் எனவும், அவர்களின் வளர்ச்சியும் வாழ்வும் எதிர்காலத்தில் இங்குள்ள இன உருவாக்கங்களின் மீது கலங்கத்தை ஏற்படுத்திவிடும் எனவும் தீர்மானிக்கும் வகையில் பலவகையான மத சட்டங்கள் தேவாலாயங்களால் வரையறுக்கப்பட்டன. 1869 உருவாக்கப்பட்ட இந்தச் சட்டத்தின்பால் பல குழந்தைகள் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இது 1970 வரை அதீதமாக வளர்ந்தது.

காலனிய காலக்கட்டத்தில் ஆதிக்கக்காரர்களாலும் வேலிகளை அமைப்பதற்காக இங்கு வந்து சேர்ந்த வெள்ளைக்கார வேலையாட்களாலும் பாலியல் அத்துமீறல் நடத்தப்பட்டு அதற்குப் பலியான பழங்குடி பெண்களுக்கு பிறந்தவர்கள்தான் இந்தக் கலப்பின குழந்தைகள் என அடையாளப்படுத்தப்படுகிறது. இவர்கள் அடுத்தடுத்து தலைமுறைகளைக் கடந்து மலை அடிவாரங்களிலும் கிராமங்களிலும் வளர்ந்து வந்ந்தார்கள். அரை ஜாதி குழந்தைகளை அவர்களின் குடும்பத்திலிருந்து எப்பொழுது நினைத்தாலும் அபகரித்து கொண்டு செல்ல மீண்டும் சட்டம் தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் ஆஸ்திரேலியா முழுக்கப் பரவியிருக்கும் அரை ஜாதி குழந்தைகளைத் தேடி கண்டுபிடித்து கைது செய்து காப்பகத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அரசு ஏன் இந்த அரை ஜாதி குழந்தைகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து திருடுகிறது? இது ஒரு தலைமுறை திருட்டு என்றே கருத முடியும். இவர்களை சமூகத்திற்குள்ளோ அல்லது குடும்பத்திற்குள்ளோ வளர அனுமதிக்கப்பட்டால் இவர்களின் வழி அந்த அரை ஜாதி தலைமுறை மேலும் பெருகக்கூடும் எனப் பயப்படுகிறார்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவின் சமூக அமைப்பிற்குள் இன்னொரு சமூகமாக உருவாகிவிடுவதைத் தவிர்க்க நோவில் எனும் அரசு சார்புடைய அதிகாரியால் மூர் நதி காப்பகம் அரை ஜாதி குழந்தைகளை அடைத்து வெளி உலகத்திற்குத் தெரியாமல் பாதுகாக்க மையமாகச் செயல்படுகிறது. இது அரசால் திட்டமிடப்பட்டு செய்யும் திருட்டு.

அரசுக்குச் சற்றும் விருப்பமில்லாத ஒரு சமூகம் உருவாவதைத் தடுப்பதற்கு அவர்கள் இப்படியொரு காப்பகத்தை அமைத்து அதை ஒரு சிறார் பள்ளியைப் போல நடத்துவது ஒரு வகையான பாசிச அணுகுமுறையே. அவர்களுக்கு ஒரே நிறத்திலான மேலங்கியைக் கொடுத்து, ஒரே கொட்டகையில் அடைத்து, சாப்பிடும் முறை, பழகும் முறை, ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என அவர்களை அந்தத் தேசத்தின் மிச்சங்களாக மட்டும் பயிற்சியளிக்க விளைகிறார்கள். நோவில் அப்படிப்பட்ட குழந்தைகளைத் தேடி அலைந்து பிடித்து வருவதில் சர்வதிகாரியாகச் செயல்படுகிறான். அவர்களை தூய்மைப்படுத்த வேண்டும், அவர்களை வெள்ளையாக்க வேண்டும் அவர்களை நம்மைப் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதே அவனுடைய இலட்சியம். ஆனால் அவற்றை காட்டிலிருந்து குரங்குகளைப் பிடித்து வைத்துக் கூண்டில் அடைத்து கொடுமைப்படுத்துவது போல செய்வதுதான் அவனது இலட்சியத்திற்கும் செயல்பாட்டுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ஜிகாலோங் எல்லையை நோக்கி

மோலி அரை ஜாதி குழந்தை. அவளுடைய அப்பா fence வேலிகள் கட்டுமானத்திற்காக மேற்கு ஆஸ்ட்ரோலியாவின் எல்லையில் வேலைக்கு வந்தபோது அங்குள்ள பழங்குடி பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்தவள். ஜிகலோங் பழங்குடி மக்கள் எவ்வளவோ நாகரிகம் அடைந்து fence வேலிகள் அமைப்பின் மூலம் அங்கு வந்து சேர்ந்தவர்களினால் ஆங்கிலம் கற்றுக்கொண்டு இயல்பாக வேட்டையாடி வாழக்கூடியவர்கள். மோலிக்கு மிருகங்களை வேட்டையாடக்கூடிய ஆற்றலும் கால் பாதத்தின் சுவடுகளை வைத்து வேட்டையாடும் தந்திரமும் கைவரப்பெற்றவள். அவள் அம்மாவுடனும் தங்கைகளுடன் காடு மலை என மகிழ்ச்சியாகச் சுற்றி திரிகிறாள்.

அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதியும் சட்டமும் பெற்று மூர் நதி அரை ஜாதி குழந்தைகளின் காப்பகத்தை வைத்து நடத்தும் நோவல், மோலியையும் அவளின் சகோதரிகளையும் பிடித்து வருமாறு ஆணையிடுகிறான். அரை ஜாதி குழந்தைகளான மோலி, டைசி, கிரேசி மூவரையும் ஜிகலோங் கிராமத்திலிருந்து 1200 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் காப்பகத்திற்குப் பிடித்துச் செல்ல வாகனம் வருகிறது. எந்த முன்னறிவிப்புமின்றி அந்த மூன்று சிறுமிகளையும் அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து வாகனத்தில் வைத்து கொண்டு செல்லப்படுகிறார்கள். போகும் வழியில் இருமுறை வாகனங்கள் மாறுகிறார்கள். திரும்பவும் இரயிலில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டுப் பல மைல்கல் பயணம் செய்கிறார்கள்.

மூர் நதி காப்பகத்திற்கு ஒரு லாரியில் கொண்டு வரப்படும் மூவரும் அவ்விடத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அங்குள்ள மனிதர்கள் அவர்களுக்கு விநோதமாகத் தோன்றுகிறார்கள். காப்பகத்திலுள்ள மற்ற அரை ஜாதி குழந்தைகளைப் போலவே இவர்களும் நடத்தப்படுகிறார்கள். வீட்டைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும் நினைத்து மூவரும் ஏங்கித் தவிக்கிறார்கள். நாங்கள் ஏன் எங்கள் வீட்டைவிட்டு இங்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர்களின் மனம் துடிக்கிறது. எங்கள் அம்மாவுடன் எங்கள் கிராமத்தில் வாழ எங்களுக்கு ஏன் உரிமை இல்லை எனக் கேட்கிறது அவர்களின் கண்கள்.

யாரும் அவர்களைக் கவனிக்காத ஒரு நாளில் மூவரும் காப்பக்கத்திலிருந்து தப்பித்துக் காட்டுக்குள் ஓடுகிறார்கள். ‘எங்களுக்கு எங்கள் அம்மா வேண்டும்’ என்பதே அவர்களின் அடிமனதில் சத்தமாக ஒலிக்கிறது. அம்மாவை நோக்கி தன் சொந்த ஊரான ஜிகலோங்கைத் தேடி மூவரும் பயணப்படுவது படத்தின் அடுத்த முக்கியமான கட்டம். காப்பகத்தில் கொடுத்த வெளுத்த மேலங்கியுடன் காடு மலைகளைக் கடந்து ஆறுகளைக் கடந்து அவர்கள் ஓடுகிறார்கள். மூவரும் தப்பிவிட்டதை அறியும் நோவல் உடனேயே பழங்குடி மக்களைச் சேர்ந்த குதிரைக்காரன் ஒருவனை அவர்களைத் தேடி பிடித்து வர அனுப்புகிறான். கால் பாதங்களின் சுவடுகளை வைத்து ஒருவர் சென்ற வழியைத் துல்லியமாகக் கண்டறியக்கூடிய ஆற்றல் உடைய அந்தக் குதிரைக்காரன் மோலியும் சகோதரிகளும் சென்ற பாதையை நோக்கி அவனும் கிளம்புகிறான்.

மோலிக்கு கால் பாதம் வைத்து ஒன்றை அடையாளம் காணும் ஆற்றம் தெரிந்திருந்ததால் அவள் கற்களுக்கு மேல் நடப்பது, ஆற்றில் இறங்கி நடப்பது எனக் குதிரைக்காரனின் கவனத்தை இலாவகமாகத் திசை திருப்பி விட்டு தப்பிக்கிறாள். இடையிடையே சந்திக்கக்கூடிய மனிதர்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். அவளுக்கு தன் கிராமத்தை நோக்கி செல்ல வழி சொல்கிறார்கள். Fence வேலிகளை ஒட்டி நடந்து போனால் தங்கள் கிராமத்தைச் சென்று அடைந்துவிடலாம் என நம்புகிறார்கள். அதன்படியே வேலிகளின் ஓரமாக நடக்கத் துவங்குகிறார்கள்.

பாலைவன வெறுமையும் அதன் மீது தகித்து மிதக்கும் வெயிலையும் மிதித்து கடைசியைத் தோளில் சுமந்து கொண்டு மோலி தொடர்ந்து நடக்கிறாள். பல இரவுகள் கடந்து செல்கின்றன. அவர்கள் தப்பித்துச் சென்றதை நினைத்து நோவல் கடுமையான கோபத்திற்கும் தேடுதலுக்கும் ஆளாகின்றான். அவர்கள் கட்டாயம் வேலிகளை ஒட்டித்தான் நடந்து வருவார்கள் என அனுமானிக்கின்றான். அதன்படி அவர்களை அங்கு வைத்தே பிடிப்பதற்கு ஒரு சிலரை வேலிகளின் பல எல்லைகளில் முகாம் வைத்து தங்க வைக்கின்றான். கிரேசி மட்டும் தனியாகப் பிரிந்து இரயில் நிலையம் நோக்கி செல்ல முயற்சிக்கிறாள். அவளுக்குத் தொடர்ந்து நடப்பதில் விருப்பமில்லாமல் போகிறது. ஆகவே இரயில் பிடித்து தன் அம்மா ஜிகலோங்கிலிருந்து இடம் மாறி சென்றிருக்கும் ஊரான மிலாவிற்குச் செல்ல முடிவு செய்கிறாள். ஆனால் இது உண்மையில் நோவேலின் கட்டுக்கதை. அவர்களைத் திசை திருப்புவதற்காக மோலியின் அம்மா வேறு ஊருக்குச் சென்றுவிட்டதாக ஊர் முழுக்க வதந்தியைப் பரப்புகிறான். எப்படியாவது யாரோ ஒரு சில வழிப்போக்கர்களின் வழி தப்பி தங்கள் கிராமத்திற்கு ஓடிக்கொண்டிருக்கும் மோலிக்கு இந்த விசயம் கிடைக்கும் என அவன் திட்டமிடுகிறான்.

ஆனால் ஒரு வழிப்போக்கன் மூலம் கிடைக்கப்பெறும் அந்தத் தகவலை மோலி நம்ப மறுக்கிறாள். இருந்தபோதும் அவளால் கிரேசியைச் சமாதானப்படுத்த முடியவில்லை. நோவேல் வலையில் கிரேசி மட்டும் மீண்டும் சிக்கி காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறாள். மோலியின் அபாரமான திறமையால் பலரிடமிருந்து தப்பி 9 வாரங்கள் பயணித்துக் கடைசியாக ஜிகலோங் வந்து சேர்கிறாள். கதை அதன் பிறகு கதைச்சொல்லியின் குரலுக்கேற்ப விரிகிறது. படத்திற்குப் பின்னணியில் இக்கதையைச் சொல்லிக்கொண்டிருப்பது அதே கிராமத்தில் வயதாகி வாழ்ந்து வரும் மோலித்தான் எனத் தெரிகிறது. ஜிகலோங் வந்த பிறகு அவளுக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் பிறக்கிறது. ஒருநாள் மீண்டும் அவளும் அவளின் குழந்தைகளும் நோவேலால் காப்பகத்திற்குக் கடத்திச்செல்லப்பட்டதாகக் கூறுகிறாள். தனது 3 வயது மகளை மட்டும் காப்பாற்றமுடியாமல் அவளும் அவளின் இன்னொரு மகளும் மீண்டும் காப்பகத்திலிருந்து தப்பி ஜிகலோங் வந்து சேர்ந்ததாக அவள் சொல்லும்போது மனம் படபடக்கிறது. அரை ஜாதி குழந்தையான மோலிக்கு தன் கிராமத்தை நோக்கி வெயிலில் வெந்து பயணப்படுவதே வாழ்நாளின் முக்கியமான பகுதியாகிவிட்டதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

“என் மூத்த மகளுடன் நான் மீண்டும் தப்பி ஓடி வந்த பிறகு அங்குச் சிக்கிக்கொண்ட என் 3 வயது குழந்தையை நான் பார்க்கவே இல்லை” என அவள் சொல்லும்போது இவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்பதை உணர முடிகிறது. தன் அம்மாவுடன் தன் குடும்பத்துடன் தன் கிராமத்தில் வசிக்க உரிமை இல்லாத அரை ஜாதி குழந்தைகளின் வாழ்நாள் எப்படி நீண்ட பயணத்திலேயே கழிகிறது என்பதை மிகச்சிறந்த சித்திரமாக வரைந்துள்ளார் இயக்குனர். உலகின் எங்கோ ஒரு மூலையில் மலை அடிவாரத்திற்குக் கீழேயோ அல்லது மலை மேடுகளுக்கு மத்தியிலோ வாழும் பழங்குடி மக்கள் சுரண்டப்படும் கொடூரத்தின் ஒரு பகுதி மட்டுமே இது. மோலியைப் போல மனம் தூரத்தைக் கண்டு அஞ்சுகிறது. வேலியைப் பிடித்துக்கொண்டே தன் கிராமத்தை அடைந்துவிடலாம் என முடிவெடுக்கும் தருணத்தில் அரை ஜாதி குழந்தைகளுக்குள் இருக்கும் தன் ஊராருடன் தன் சந்ததியினருடன் வாழ வேண்டும் என்கிற வேட்கையை அடையாளம் காண முடிகிறது.

நோவேல் 1945ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகும்கூட ஆஸ்ட்ரோலியாவில் அரை ஜாதி பிள்ளைகளைப் பிடித்து அடைத்துப் பாதுகாக்கும் செயல் 1970வரை நீடித்திருக்கிறது. குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்ந்த குழந்தைகளின் துயரம் எக்காலத்திலும் மீட்கமுடியாதவையாகப் பாலைவனத்தில் தோன்றும் கானல்நீர் போல சட்டென தோன்றி மறைகிறது. கடைசிவரை தன் குழந்தைகளைப் பார்க்காத பழங்குடி தாய்மார்கள் மோலியைப் போல சில இடங்களில் இருக்கவே செய்கிறார்கள். இது வரலாற்றில் நடந்த உண்மை. ஒரு தலைமுறையைத் திருடிய இந்தக் குற்றம் எப்பொழுதும் மறக்க முடியாதவை. உலகின் பல விருதுகளை வென்ற இப்படம் 50க்கும் மேற்பட்ட விருதுகளுக்காகப் பரிந்துரையும் செய்யப்பட்டிருக்கின்றன.

உலகில் இதுவரை நடந்துமுடிந்த வேறெந்த மனித அத்துமீறல்களையெல்லாம்விட மிகவும் கொடூரமானதாக அரை ஜாதி குழந்தைகள் மீது நடத்தப்பட்ட அத்துமீறலைக் கருதுகிறேன். அவர்கள் இப்படிப் பிறக்க வேண்டும் எனக் கேட்டுப் பிறக்கவில்லை. அது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை. ஒரு தேசமும் சட்டமும் அவர்களை இரு பக்கங்களில் கூர்மையாகப் பின்தொடர்ந்து மோலி சந்தித்த வேலிகள் போலவும் முள் பாதைகள் போலவும் அவர்களைக் காயப்படுத்துகின்றன என்பதை இப்படத்தின் வழி தரிசிக்க முடிகிறது. வாழ்வை எங்கோ தொலைத்துவிட்டு நான்கு சுவருக்கு மத்தியில் வெளியுலகம் தெரியாமல் வளரும் அரை ஜாதி குழந்தைகள் நம் உலகம் கண்ட வரலாற்றின் மிகக் கொடூரமான ஆழ்மனம். 

கே. பாலமுருகன்
thanks: vallinam (oct issue)

3 comments:

webdesigner said...

மிகவும் அற்புதமான விமர்சனம், படத்தை பார்க்க ஆவலாக உள்ளது ....தொடர்து இதுபோன்ற நல்ல படங்களை தெரியபடுத்துங்கள்

webdesigner said...

மிகவும் அற்புதமான விமர்சனம், படத்தை பார்க்க ஆவலாக உள்ளது ....தொடர்து இதுபோன்ற நல்ல படங்களை தெரியபடுத்துங்கள்

Tamilvanan said...

//ஒரு தேசத்தில் உறைந்து கிடக்கும் கதைகளையும், வரலாற்றையும், துயரங்களையும், கலாச்சாரத்தையும் அடையாளம்கண்டு அதை உலகிற்குக் கலை படைப்பாகத் தரக்கூடிய உன்னத வேலையைச் செய்பவனே சிறந்த சினிமாக்காரன் என நினைக்கிறேன்//
உண்மை.
அந்த‌ சினிமாக்கார‌ர்க‌ளின் ப‌டைப்புக்களை எங்க‌ளுக்கு அறிமுக‌ப் ப‌டுத்தும் உன்ன‌த‌ வேலையை சிற‌ப்பாக‌ செய்யும் உங்க‌ளுக்கு ந‌ன்றி.