Monday, January 31, 2011

ஸ்பானிஷ் சினிமா விமர்சனம்: ஒரு தீ மூட்டியும் ஒரு சவப்பெட்டியும் உயிருடன் புதைக்கப்படுதலும்

(நன்றி: தீராநதி: ஜனவரி மாத இதழ்)
ஒரு தீ மூட்டி, ஒரு கைவிளக்கு, ஒரு கைத்தொலைபேசி, ஒரு கத்தி மட்டும் கொடுக்கப்பட்டு 6 அடியிலுள்ள பாலைவன மண்ணுக்கு அடியில் சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 90 நிமிடங்கள் எந்த இடத்தில் யாரால் புதைக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரியாமல் குறுகலான ஓர் இடத்தில் வெளி உலகமே தெரியாமல் அடைக்கப்பட்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

Rodrigo cortes இயக்கத்தில் வெளியான “உயிருடன் புதைத்தல்” எனும் ஸ்பானிஷ் சினிமா திரைப்பட உலகத்திற்கே பெரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி ஒரு மனதை உலுக்கும் பயங்கரத்தைப் படம் முழுக்கக் காட்டி அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்திய சினிமாவை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். பெரும்வெளியில் நிகழும் எந்தவகையான குரூரமாகவும் இக்கட்டான சூழலாக இருந்தாலும் அதன் காத்திரம் அத்தனை அழுத்தமாக நமக்குள் பாயாது, பெரும்வெளியின் மற்ற மற்ற விசயங்கள் நம் கவனத்தை ஆங்காங்கே பிடுங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் நம் கவனம் மேலும் மேலும் ஒரே இடத்திற்குள்ளே காத்திரமாக அழுத்தப்படுகிறது. எங்கேயும் தப்பித்து ஓடாமல் நம் பார்வை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து அடைக்கப்படுகிறது.

மேலும் படம் முழுவதையும் தொடர்ந்து எந்தச் சலனமும் மனக்கொந்தளிப்பும் இல்லாமல் திடமாகப் பார்ப்பதென்பது தனிநபரின் மன அமைப்பைப் பொருத்ததே. சில கட்டங்களுக்குப் பிறகு எங்கோ ஒரு சவப்பெட்டிக்குள் சிக்கிகொண்ட சூழலை நிதர்சனமாக நம்மால் உணரப்படவும் வாய்ப்புண்டு. அப்படி உணரப்படுகையில் அந்தச் சவப்பெட்டிக்குள் கதைநாயகனுக்குப் பதிலாகத் தவிப்பு மனநிலையின் உச்சத்தில் நீங்கள் திணறிக்கொண்டிருப்பீர்கள். இதுதான் இந்த ஸ்பானிஷ் திரைப்படம் கொடுக்கும் பயங்கரமான அனுபவம்.

சவப்பெட்டிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கும் மையக்கதைப்பாத்திரம் மட்டுமே படத்தில் நடித்திருக்கிறார். படம் 5 நிமிடம் இருளில் காட்சிகளின்றி வெறும் ஓசையை மட்டும் குறிப்புகளாக் காட்டியவாறு தொடங்குகிறது. யாரோ ஒருவர் கரகரத்தப்படியே இருமிக் கொண்டிருக்கிறார். அவருடைய கைவிரல்கள் எதையோ தேடி சுரண்டும் ஓசையும் தொடர்ந்து 5 நிமிடங்களுக்குக் கேட்கும். இதுவே இறுக்கத்தை உண்டாக்கும் முதல்நிலை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு தீ முட்டி கொளுத்தப்பட்டதும் அங்கு பாவ்ல் படுத்துக்கிடக்கிறான். தீம்மூட்டியிலிருந்து சட்டென கிளம்பிய ஒளி சுற்றிலும் பரவி அவன் எங்கு கிடக்கிறான் என்பதைத் தேடுகிறது. கொஞ்ச நேரத்திலேயே பாவ்லும் நாமும் அவன் ஒரு சவப்பெட்டியில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறான் என்பதை உணரமுடிகிறது.

ஈராக் தீவிரவாதி கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட பிறகு மயக்கமுறும் பாவ்ல், இப்பொழுது இந்தச் சவப்பெட்டிக்குள்ளிருந்துதான் விழித்தெழுகிறான். அந்தச் சவப்பெட்டியின் தோற்றம் மிகவும் மிரட்டலான அமைப்பைக் கொண்டிருப்பதோடு கடுமையான பயத்தையும் அளிக்கும் வகையில் இருக்கும். அவனுடைய கால் விரல்களைக் கடந்து மேலும் 10செ.மீட்டர் நீளமும், அவன் கைகளை உயர்த்தினால் மணிக்கட்டு இடமும் வலமும் உள்ள பக்கவாட்டுப் பலகையை மோதும் அளவிற்கான உயரமும் கொண்ட அந்தச் சவப்பெட்டியில் அவன் சிக்கிக் கொண்டு அடையும் பரித்தவிப்பும் பதற்றமும் சீக்கிரமே பார்வையாளனுக்குள் படர்ந்து சென்று அவனையும் சலனமடைய செய்கிறது. இருளும் மங்கிய மஞ்சள் ஒளியும், கைத்தொலைப்பேசியிலிருந்து வெளிப்படும் நீல வர்ணமும் என படத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் ஒளி அனைத்தும் அந்தச் சவப்பெட்டிக்குள் பாவ்ல் பயன்படுத்தும் கருவிகளிலிருந்தே வருகிறது.

முதலில் ஒரு தீ மூட்டியைக் கண்டடைந்து அதைப் படம் முழுக்கச் சவப்பெட்டிக்குள் அடர்ந்து கிடக்கும் இருளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்துகிறான். அதன் பிறகு கைவிளக்கு அவனுக்குக் கிடைக்கிறது. அதனைப் பலம் கொண்டு தட்டி உதறினால்தான் ஒளியைக் கக்குகிறது. வசதியே இல்லாத சவப்பெட்டிக்குள் இடம் பற்றாக்குறை அவனுக்குத் தொடர்ந்து சிரமத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவனுடன் சேர்ந்து நாமும் சவப்பெட்டிக்குள் சிக்குண்ட நம் உடலைச் சரிப்படுத்திக் கொண்டே இருப்போம். படம் முடிவடையும்வரை தீராத ஒரு அசௌளகரிகமான சூழலில் ஆழ்ந்திருக்க வாய்ப்புண்டு.

இந்தப் படத்தில் மேலும் கூடுதலான இறுக்கம் என்னவென்றால், படம் தொடங்கி கடைசிவரை நாம் பாவ்ல் சிக்குண்டு கிடக்கும் அந்தச் சவப்பெட்டியிலிருந்து வெளியேறாமல் அங்கேயே அவனுடனே நம்மை முடித்துக் கொள்வோம் என்கிற வித்தியாசமான அனுபவம்தான். எப்படியும் படத்தின் கேமரா அந்தச் சவப்பெட்டிக்குள்ளிருந்து மீண்டு வெளியே நகர்ந்து போகாதா என்கிற எதிர்ப்பார்ப்பு, கடைசிவரை நிறைவேறாமல் மணல் மூடி இருளின் பிடியில் கரைந்து முடிகிறது.

பாவ்ல் என்கிற அமெரிக்க பிரஜை, ஈராக்கில் பார வண்டி ஓட்டுனராகப் பணிப்புரிந்து வருகிறான். ஒரு தீவிரவாதி கும்பலால் அமெரிக்க இராணுவ வீரன் எனச் சந்தேகிக்கப்பட்டு, தாக்கப்படுகிறான். பிறகு அவனை அங்குள்ள பாலைவனத்தில் ஆறு அடியில் குழி தோண்டி ஒரு சவப்பெட்டிக்குள் அடைத்து உயிருடன் புதைத்துவிடுகிறார்கள். அவன் அங்கிருந்து கொண்டு 90 நிமிடம் வரை மட்டுமே சுவாசிக்க முடியும். ஆகையால் அவனை வைத்து அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பணம் கேட்டுப் பெறுவதற்கான திட்டத்தை நடத்துவதற்குச் சவப்பெட்டியில் கிடக்கும் பாவ்லுக்கு 9 மணிவரையே அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்கேற்ப அவன் வெளி உலகத்துடன் குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புக்கொள்ள ஒரு கைத்தொலைபேசியும் சவப்பெட்டிக்குள் வைக்கப்படுகிறது.

கைப்பேசியைக் கொண்டு அவன் அவனுடைய வேலை தொடர்புள்ள மேலாதிகரிக்கும், குற்றப்புலன் விசாரனை அலுவலகத்திற்கும் அவன் மனைவிக்கும் நண்பர்களுக்குமென தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கிறான். அவர்களின் குரல்கள் மட்டும் கைப்பேசியின் வழியாகச் சவப்பெட்டிக்குள் ஒலிக்கிறது. அவர்களுடன் அவன் பலத்தரப்பட்ட மனநிலையில் விவாதிக்கிறான், திட்டுகிறான், மனஇறுக்கத்தை வெளியேற்றுகிறான், துன்பப்படுகிறான், சோர்வடைகிறான் என இவையனைத்தையும் குரலின் ஒலிகளிலே சில சமயங்களில் காட்டுவது படத்தின் மையத்தை மேலும் அடர்த்தியாக்குகிறது. தொலைப்பேசியில் ஒலிக்கும் யாருடைய குரலின் வழியாவது அந்தச் சவப்பெட்டி கொடுக்கும் பயத்திலிருந்து நீங்கி தப்பித்துக்கொள்ளலாம் எனக்கூட எனக்குத் தோன்றியது. முற்றிலும் வெளிஉலகம் குறித்த அனைத்துவிதமான பிரக்ஞையிலிருந்தும் துண்டிக்கப்பட்டு மண்ணுக்குள் கிடக்கும் மனிதனும் சவப்பெட்டியும் நமக்கான சராசரி மனோபாவத்தைத் தகர்த்து எடுத்துவிட்டு, அதனுடைய பயங்கரமான ஒரு களத்திற்குள் இறக்கி வேடிக்கை பார்க்கிறது படம்.

இந்தப் படம் வெறும் சவப்பெட்டிக்குள் 90 நிமிடங்கள் நிகழும் ஒற்றைக்காட்சிதன்மையுடைய தொகுப்பாக மட்டுமே பார்க்க முடியாது. ஒட்டுமொத்த ஈராக் நிலப்பரப்பில் பாதுகாப்பில்லாத அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்வையும் காட்டி, 11 செப்டம்பருக்குப் பிறகு ஈராக்கில் அதிவேகமாக வளர்ந்த தீவிரவாத இயக்கங்களின் அமெரிக்க எதிர்ப்புணர்வையும் படம் ஆழ்ந்து தொடுகிறது. ஒரு பார வண்டி ஓட்டுனரான பாவ்ல் சந்தேகத்தின் பெயரில் அமெரிக்க இராணுவப்படையைச் சேர்ந்தவன் எனக் கருதப்பட்டு தாக்கப்படுகிறான். தாக்கப்பட்டு அங்குள்ள தீவிரவாத கும்பல்களால் பிடிப்படும் அமெரிக்க இராணுவர்களின் தலையை அவர்கள் அறுத்து அதை வீடியோ படம் எடுத்து அனுப்புவது வழக்கமான பயங்கரவாத வன்முறை செயலாகும். ஆனால் இப்படம் மேலும் ஈராக்கில் நிகழும் இன்னொரு கொடூரத்தைக் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது. பிடிக்கப்பட்ட பாவ்ல் ஒரு சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பாலைவனத்தில் உயிருடன் புதைக்கப்படுகிறான். ஒரு கொலையைவிட, இப்படி உயிருடன் புதைப்பது மனதைப் பாதிக்கக்கூடிய வன்மையான செயலாகும். 

அந்த வன்மையான தண்டனையை முன்வைத்துதான் படம் நீள்கிறது. ஆகையால் படத்தின் பின்னணியில் பயங்கரவாத செயலும் அதைக் கொண்டு உருவாகி வளர்ந்திருக்கும் தீவிரவாத இயக்கங்களின் அரசியலையும் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு வெறுமனே உருவாக்கப்பட்ட திகில் படமா எனக் கேட்கக்கூடும். ஆனால் முற்றிலும் மறுக்க வேண்டிய ஒரு மாற்றுப் பார்வையை தனக்குள் வைத்துக்கொண்டு தீவிரவாதத்தையும் எதிர்ப்பு அரசியலையும் வித்தியாசமான முறையில் துணிச்சலாகக் கையாண்டிருக்கும் மிக முக்கியமான படமாகவே இதைக் கருதுகிறேன்.

இப்படத்தின் இயக்குனரான ரோட்ரிகோ தனது 16ஆவது வயதிலேயே முதல் குறும்படத்தின்(Super 8) மூலம் உலகிற்கு அறிமுகமானவர். மேலும் பல விருதுகளைப் பெற்று ஸ்பானிஷ் திரைஉலகத்தில் தனித்த சினிமா அடையாளத்தை ஏற்படுத்தியவரும்கூட.

மேலும் பாவ்ல் எதிர்நோக்கும் தொலைப்பேசி உரையாடல்களில் அமெரிக்க அரசாங்கம் அவனைப் புறக்கணிப்பது குறித்தும் அவன் மீதான அக்கறையின்மையைப் பல கட்டங்களில் ஒரு சில அதிகாரிகளின் வழியாகக் காட்டுவதன் மூலமும், அரசின் அலட்சியத்தையும் படம் வெளிப்படுத்துகிறது. ஒரு சாதரண தனிமனிதனின் உயிர் எந்தவகையிலும் முக்கியமில்லை என்பதன் உண்மையை இங்கு நம்மால் உணர முடியும்.

இறுதியில் அரசாங்கப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் அக்கறையினாலேயே அவனைக் காப்பாற்றக்கூடிய குழு ஒன்று அங்கு வந்து சேர்வதாகத் தொலைப்பேசியின் வழியாக அவனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அந்த உரையாடலில் நமக்கும் ஒருவித நம்பிக்கையும் தப்பிக்கப்போகும் உணர்வும் வெளிப்படும். “உன்னை நெருங்கிவிட்டோம், நீ இருக்கும் இடம் கண்டுப்பிடித்தாகிவிட்டது, இன்னும் கொஞ்ச நேரம் சில வினாடிகள் மட்டும் பொருத்துக் கொள்” என அந்த அதிகாரி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, சவப்பெட்டிக்குள் சிறுக சிறுக மணலும் நிரம்பிக் கொண்டிருக்கும். மெல்ல இருள் பரவ, தொலைப்பேசியில் சவப்பெட்டி ஒன்று தூக்கப்படுவது போன்ற ஓசையும் கேட்கும். ஆனால் பாவ்ல் இருக்கக்கூடிய அந்தச் சவப்பெட்டியில் சிறு அசைவும் தென்படாது. சிறிது நேரத்திற்குப் பிறகு பாவ்லின் சவப்பெட்டி முழுவதும் மணல் நிரப்பப்பட்டு, நம் காட்சிக்குள்ளிருந்து விலகுகிறது. இருள் மூடிய திரைக்குப் பின்னணியில் அந்த அதிகாரியின் குரல் ஒலிக்கிறது,“மன்னித்துவிடு பாவ்ல். இது வேறு ஒரு சவப்பெட்டி” என்பதோடு படம் முடிகிறது.

பாவ்ல் மட்டுமல்ல, இதற்கு முன்பு இப்படி நிறைய பேர் உயிருடன் புதைக்கப்பட்டுச் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. பாவ்லுடன் நம்முடைய மனநிலையும் செத்துவிட்ட ஒரு சூன்யத்தைத் தழுவும்போது, “இப்படிப்பட்ட படமா?” என இறுக்கத்துடன் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடையக்கூடும். தொடர்ந்து 3 நாட்களுக்கு அந்த ஸ்பானிஷ் படம் கொடுத்த அனுபவத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை.


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா



2 comments:

தயாஜி said...

படம் பார்த்த உணர்வு என்பதைவிட படத்துடன் பயணித்த உணர்வினை ஏற்படுத்துகின்றது உங்கள் எழுத்து.....
வாழ்த்துகள் அண்ணா...

Senthil said...

s ! a great movie!

tamil directors searching for stories!!

they shd watch this and hang themselves..



senthil
doha