Monday, February 7, 2011

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்-1 (ஒழுங்குகளின் ஆழத்தின் ஒளிந்துகிடக்கும் கதைகள் - தாய்லாந்து சினிமா : DORM)

“இது வீடு.
இது என் வீடு.
என் வீடு அழகாக இருக்கும்.
என் வீட்டைச் சுற்றி அழகான பூச்செடிகள் இருக்கும்.”

தன் வீட்டைப் பற்றி ஒரு சிறுவன் உருவாக்கும் முதல் வாக்கியம் இப்படிதான் பெரும்பாலும் அமைகின்றன. இங்கிருந்துதான் அவனுக்கும் அவன் வீட்டுக்குமான நெருக்கம் தொடர்கிறது. வீடு என்பதன் சொல்லுக்குள் இருக்கும் அனைத்து விளக்கங்களையும் தன் வீட்டைச் சார்ந்தே அவன் புரிந்துகொள்கிறான்.

என் வகுப்பில் ஒரு மாணவன் இருக்கிறான். இரண்டாம் ஆண்டு பயிலும் அவனுக்கு எப்பொழுதும் அவன் வீடு குறித்து பெரிய வியப்பும் விருப்பமும் இருக்கும்.

“ஏய் எங்க வீட்டுல பெரிய குருவி இருக்கு தெரியுமா?”

“சார் எங்க வீட்டுல ஒரு பெரிய அலமாரி இருக்கு”

தன் வீட்டைப் பற்றி அவனுக்குள் எப்பொழுதும் யாரும் கலைக்க முடியாத ஒரு கனவு மிதந்துகொண்டே இருக்கின்றது. யார் எதைச் சொன்னாலும் அவற்றையெல்லாம்விட கொஞ்சம் பெரியதாகக் கட்டாயம் அவன் வீட்டுக்குள் இருக்கும். “எங்க வீட்டுலெ இன்னும் பெரிசா இருக்கும் தெரியுமா” எனச் சொல்லிவிட்டு நம்முடைய அடுத்த கேள்விக்காக ஆச்சர்யத்துடன் பார்ப்பான். சிறுவர்கள் வாழும் வீடு இப்படி நிறைய குறிப்புகளுடன் மௌனித்திருக்கிறது.

எனக்குத் தெரிந்து ஒன்றாம் ஆண்டு மாணவன் முதலில் வரைய நினைப்பதே இரண்டே விசயங்கள்தான். ஒன்று குச்சி மனிதன். இரண்டாவது வீடு. நான் முதலில் வரைந்த ஓவியம் ஒரு பெரிய வீடும், அந்த வீட்டுக்குக் கீழ் ஒரு குச்சி மனிதனும்தான். ஆசிரியர் கேட்டபோது இது என் வீடு என்றும் அந்தக் குச்சி மனிதன் நான் தான் எனவும் சொல்லி சிரித்ததாக ஞாபகம் உண்டு. சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் பயிலும்போது ஒரு நாள் மாலையில் விளையாட்டு நடவடிக்கை முடிந்து வீட்டிற்குப் போகும் பேருந்தைத் தவறவிட்டேன். பள்ளி பிராயத்தில் பேருந்தைக்கூட தவறவிடாமல் என்ன அனுபவம் இருக்கிறது? பள்ளியைக் கொஞ்ச தூரம் கடந்ததும் வரும் தண்டவாளப் பாதையில் இறங்கி நடக்கத் துவங்கினேன். என் வீட்டிற்குப் போகும் வழியில் பல இடங்களில் தண்டவாளங்களையும் இரயில் கடந்து போவதையும் பார்த்திருப்பதால், அந்தத் தண்டவாளம் என்னை வீட்டிற்குக் கொண்டு போய் சேர்த்துவிடும் என நம்பினேன்.

மாலை வெயில் தலையை எரித்துக்கொண்டிருந்தது. தண்டவாளம் காட்டிய தூரம் என் வீடு எங்கோ தொலைந்து போய்விட்டதோ என்கிற அச்சத்தை உருவாக்கியது. சுங்கைப்பட்டாணி காவல் நிலையத்திற்கு அருகில் வரும்வரை வீடு தொலைந்துவிட்டதோ என்கிற நினைப்பில்தான் இருந்தேன். எனக்குப் பழக்கமான பட்டணத்தின் வாசலை வந்து சேர்ந்ததும் தொலைந்தது நான் என்கிற பிரக்ஞையும் இன்னும் சிறிது நேரத்தில் இருளத் துவங்கிவிடும் என்கிற பயமும் ஒன்றுசேர நடுக்கத்தைக் கொடுத்தது. அருகில் இருந்த தொலைப்பேசியின் மூலம் அக்காவிற்கு அழைப்புக் கொடுத்த பிறகே நிம்மதியடைந்தேன். முதல்தடவை இப்படி நடந்திருப்பதால் ஆர்.சீ. மோட்டாரில் பெரிய சத்தத்துடன் வந்து நின்ற அப்பாவிற்கும் பெரிய அதிர்ச்சிதான். வீட்டை அடைந்ததும் கால் வலி, நடுக்கம், பயம் என அனைத்தும் எப்படியோ காணாமல் போயிருக்கக் கூடும். எதுவும் நடக்காததைப் போல அறையின் சன்னலைத் திறந்து வெளியே பார்த்தேன்.

தாய்லாந்து படமான DORM-இல், வீட்டை விட்டு விடுதிக்கு அழைத்துக் கொண்டு போகும் முன் ஒரு கணம் தன் வீட்டை மையப்பாத்திரமான சாதரி பார்க்கிறான். கண்களில் மிகப்பெரிய வெறுமை எட்டிப் பார்க்கிறது. வீட்டைப் பற்றிய நினைப்புகள் அவனுக்குள் அழுத்தப்படுகிறது. படத்தின் பின்னணியில் சாதரியின் குரல் ஒலிக்கத் துவங்கும்போது, ‘இதுதான் நான் வீட்டை விட்டுப் போகும் முதல் நாள்; இன்றுதான் என் எல்லா சுதந்திரமும் பறிப்போகும் முதல்நாளும்கூட’ எனவும் சொல்கிறான். அவனுடைய மனப்பதிவுகளை இந்த இடத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.

காரில் வீட்டை விட்டு தூரம் செல்ல செல்ல அவன் மெல்ல உடைந்து அர்த்தமற்றுப் போவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வீட்டைவிட்டுத் தூரமாகப் போகும் சாதரிக்குள் வீட்டைத் தொலைத்துவிட்டு அதைத் தேடி நெருங்கி வந்த என்னை எங்கோ அடையாளம் காண்கிறேன்.

Songyos Sugmakana இயக்கிய இப்படம் 2006 ஆம் ஆண்டு தாய்லாந்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட பேசப்பட்ட படமாகும். இப்படத்தில் ஒழுங்குகளின் காட்சிகளாகக் காட்டப்படும் நீண்ட தண்ணீர் தொட்டியும், வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் ஒரே மாதிரியான கட்டில்களும், மையக்கதைப்பாத்திரத்தின் மீது படிந்து கிடக்கும் இளம்பச்சை வர்ணமும் அபாரமான முயற்சியாகும். தனது ஏக்கங்களையும் தனிமையையும் தன் முகப்பாவனைகளின் மூலம் அந்த சாதரி கதைப்பாத்திரம் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பதும் படத்திற்கு வலுவைச் சேர்த்துள்ளது.

வீடு குறித்த ஏக்கமும் பிரக்ஞையும் எப்பொழுது அடர்த்தியாக ஒருவனுக்குள் ஒலிக்கிறது என நினைக்கும்போது அதற்கான காரணங்களும் சம்பவங்களும் பற்பல திசையிலிருந்து கண் சிமிட்டுகின்றன. கல்லூரியில் படித்தக் காலக்கட்டத்தில் மூன்று மாதப் பயிற்சிக்காகக் கெடா மாநிலத்திலுள்ள புக்கிட் ஜெனூன் எனும் சிறிய தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பப்பட்டிருந்தேன். சுங்கைப்பட்டாணி நகரத்திலிருந்து சுமார் 1 மணி நேரம் காட்டுக்குள்ளும் மலாய்க்காரர்களின் பலவகையான குடியிருப்புப் பகுதிகளையும் கடந்து செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் நான்கிற்கும் மேலாக முழுநேரப்பள்ளிகள் இருந்தன. மலாய்க்கார மாணவர்கள் மட்டும் அந்த முழுநேரப்பள்ளிகளில் தங்கிப் படித்து வருகிறார்கள். முழுநேரப்பள்ளி எனும் கலாச்சாரம் மலாய்ப்பள்ளிகளில் மட்டுமே வழக்கமான ஒன்றாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. நான் கடந்து செல்லும் அந்தச் சாலைகள்தோறும் மிக வலுவான ஒரு கட்டொழுங்கும் பரவிக் கிடக்கும்.

வரிசையாக நின்று சாலையைக் கடப்பது முதல், சாலையில் அவர்களைக் கட்டுப்படுத்தி ஒழுங்குப்படுத்தும் சரியான நேரங்களில் ஒலிக்கும் விசில் சத்தமும், இரண்டே வாரங்களில் பார்த்துச் சலித்துப்போன காட்சியாக மாறின. அந்த விசில் சத்தத்திலும் வரிசையாக நின்று இன்னமும் முழுமையாக விடியாத வானத்தின் கீழாகத் கவிழ்ந்த முகத்துடன் சாலையைக் கடக்கும் அந்த ஒழுங்கிலும் அப்படியொன்றும் வித்தியாசம் இல்லாததைப் போலவே தோன்றும். அதீதமாகக் கண்களைக் கூசச்செய்யும் வர்ணங்களைப் போலவே பார்த்துத் தவிர்த்துவிடத் தூண்டும் காட்சிகள்.

பயிற்சிக்காலக்கட்டத்தில் நானும் எனது சக பயிற்சி ஆசிரியரும் சேர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியருடன் கலந்துரையாடி, அங்கேயும் முழுநேரப் பள்ளி என்கிற அமைப்பைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினோம். தலைமை ஆசிரியர் முழுநேரப்பள்ளி மட்டுமே மாணவர்களின் கட்டொழுங்கையும் நடத்தையையும் சீர்ப்படுத்தும் எனத் தீர்க்கமாக நம்பிக்கை கொண்டதின் விளைவாகவே எனக்கே நான் முரணாக இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சாதாரண சாலை அனுபவமாகக்கூட பார்க்க வேண்டாமென ஒதுக்கித் தள்ளியது இப்பொழுது மிக நெருக்கத்தில் அன்றாடக் காட்சிகளாக வளர்ந்து நின்றன.

அங்குள்ள மாணவர்கள் மொத்தம் 18 குடும்பங்களிலிருந்துதான் வருகிறார்கள். தமிழர்கள் அதிகமில்லாத சிறு மலாய்க்கார வட்டாரம் அது. ஆகையால் பெற்றோர்களின் ஆதரவை ஒன்று திரட்டுவதில் எப்பொழுதும் சிரமமே இருந்ததில்லை. தினமொரு புகாருடன் பக்கத்து வீட்டுற்குச் சென்று வருவது போல பெற்றோர்கள் வந்துவிட்டுப் போவார்கள். அன்றாடங்களின் புகார்கள் மீது ஒரு கட்டத்தில் எனக்கு வெறுப்பே அதிகமானது. பள்ளி முன்வாசலைத் தாண்டியதும் ஒரு மாணவன் முழுவதும் பள்ளியை மறந்துவிடுகிறான் எனும் குற்றச்சாட்டுகளும் ஓங்கி ஒலித்த காலத்தில்தான், முழுநேரப்பள்ளி அவசியம் எனவும் கருதப்பட்டது.

ஒரு வாரத்திலேயே எல்லா திட்டங்களையும் அமல்படுத்தினோம். அநேகமாக கெடா மாநிலத்திலேயே 5 மாத காலம் முழுநேரப்பள்ளியாக அந்தப் புக்கிட் ஜெனூன் பள்ளி மட்டுமே இயங்கி வந்தது என்றே சொல்லலாம். சாலைக்கு அந்தப் பக்கம் அடர்த்தியான காடு, எப்பொழுதும் சூன்யமாகக் கிடக்கும் சாலையெனும் சூழலுக்கு மத்தியில் ஏதோ ஒரு உற்சாகம் எங்களைத் தைரியமாக எல்லாவற்றையும் செய்வதற்கு நம்பிக்கையை அளித்திருந்தது.

மாணவர்கள் மொத்தம் 20 பேரும் 5 நாட்களுக்குப் பள்ளியிலேயே தங்கியாக வேண்டும். அவர்களுக்கான முழு அட்டவணையும் தயாரிக்கப்பட்டது. பள்ளி நேரம் முடிவடைந்ததும், அதற்குப் பிறகான அவர்களுக்குரிய நடவடிக்கைகள் நேர்த்தியாகக் கையாளப்பட்டன. அந்தத் தோட்டத்திலுள்ள சில முன்னால் மாணவர்களைப் பகுதிநேர வேலையாக மாணவர்களைக் கவனித்துக் கொள்ள அமர்த்தினோம்.

வாரத்திற்கு இருமுறை இரவில் நான் அங்குத் தங்கி ஆண் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற கடமை வழங்கப்பட்டது. இரவில் அவர்கள் தங்குவதற்கு முன்னாள் பள்ளிக்கட்டிடத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். பெற்றோர்களின் கூட்டான ஒத்துழைப்பில் ஓர் இரவு பாதுகாவலரும் வேலையில் அமர்த்தப்பட்டார். ஒவ்வொருநாளும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் இரவில் மாணவர்களுடன் தங்க வேண்டும் எனவும் சட்டம் இருந்தது. இரவில் மாணவர்களுடன் ஓர் மூலையில் படுத்திருந்தபோது அவர்கள் அன்றைய இரவைத் தன் வாழ்நாளின் மிக அதிசயமான இரவாகக் கருதி தொடர்ந்து சிரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும்தான் இருந்தார்கள். அவர்களிடம் பரிமாறிக்கொள்வதற்கு நிறைய கதைகள் இருந்தன.

கொஞ்சம் அதட்டியும் மிரட்டியும் பார்த்தேன். அவர்களின் சலனம் எங்கிருந்தோ தொடங்கி எங்கேயோ சென்று அடர்த்தியாகி தங்கியிருக்கும் இடத்தையே இரைச்சலாக்கிக் கொண்டிருந்தது. கைவிளக்கை எடுத்து அதன் வெளிச்சத்தை அவர்கள் மீது படரவிட்டேன். எல்லோரும் படுத்து உறங்குவது போன்று பாவனை செய்து கொண்டிருந்ததைப் பார்ப்பதற்கே அலாதியாக இருந்தது. குறிப்பாக முகத்தில் வெளிச்சம் பட்டதும் அவர்களின் வாய்க்குள் திணறிக் கொண்டிருக்கும் சிரிப்பைக் கட்டுப்படுத்தும் விதம் பெரிய போராட்டமாக இருந்தது. எனக்கான ஒரு பொய்யை அவர்கள் தம்கட்டி வெளிப்படுத்திக்கொண்டார்கள். உறக்கத்தைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வீட்டுக் குறிப்புகளைத் தன் பிரதான கதைப்பாத்திரமாக தங்களின் அந்தரங்கமான இரவிற்குள் கொண்டு வந்திருந்தார்கள்.

நான்கு நாட்களுக்குள் அவர்கள் தொடக்கத்தில் கொண்டிருந்த அனைத்து ஆரவாரங்களையும் மகிழ்ச்சியையையும் மெல்லத் தொலைக்கத் துவங்கியிருப்பதுதான முதலில் ஆச்சர்யமாக இருந்தது. வீட்டைப் பற்றிய ஞாபகங்கள் அடர்த்தியாகிவிட்ட மாணவர்கள் அழவும் செய்தார்கள். காலையில் எழுந்து குளிப்பது தொடக்கம், இரவில் படுக்கைக்குச் செல்வதுவரை ஓர் இராணுவப் பயிற்சி போல அவர்களின் மீது செலுத்தப்பட்ட ஒழுங்குகளின் மீது சலிப்புக்கொள்ள ஆரம்பித்தார்கள். சில மாணவர்கள் விதிமுறைகள் காட்டிய விளையாட்டில் காயம்பட்ட சோர்வடைந்த விளையாட்டாளரைப் போல தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கும் மனோபாவத்திற்கு ஆளாகினர். மேலும் சில மாணவர்கள் பின்பற்றாமையின் மூலம் தன் வெறுப்பை வெளிப்படுத்தினர். சீருடை முகாம்களும் அல்லது வேறு சில முகாம்களும் மூன்று நாள்களுக்கு மேல் தொடராத காரணத்தினாலேயே சில கட்டங்களில் வெற்றி அடைந்திருக்கின்றன. முகாம் சென்று வந்த குதூகலத்தையும் உற்சாகமாக மாணவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் அதுவே நீடிக்கத்துவங்கினால் அவர்களின் உடல்மொழியும் பாவனைகளும் நடத்தையும் முரணாக இயங்கத் துவங்கிவிடும் என்பதை நேரில் பார்த்தேன்.

இரண்டு வாரத்திற்கு மேல் ஆனதும் தொடர்ந்து அவர்களிடம் அங்கு நாங்கள் விதித்திருக்கும் விதிமுறைகளின் மீதும் ஒழுங்குகளின் மீதும் பின்பற்ற வேண்டும் என்கிற பயத்தால் உருவான ஒரு கட்டாய உணர்வைத்தான் அறிய முடிந்தது. பிறகெதற்கு இந்த முழுநேரப்பள்ளி? 5 நாட்களுக்குப் பிறகு அவர்கள் முதலில் உணர்ந்த அனைத்துவிதமான குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் எங்குத் தொலைத்திருப்பார்கள்? தொடர்ந்து அங்கு உருவாகியிருக்கும் சலிப்பையும் வெறுப்பையும் மறப்பதற்கு அவர்களுக்கு வேறொரு வகையான உலகமும் அதைப் பற்றிய கதைகளும் தேவைப்பட்டன. ஆகையால் யாரோ ஒரு மாணவர் ஒரு பேய்க்கதையைச் சொல்லத் தொடங்க அந்தப் பள்ளிக்கூடத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகக் கதை நெடுங்கதையாக வளரத் துவங்கியது. அந்தக் கதைக்குள் நிறைய கிளைக்கதைகளும் தன் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தன. ஒவ்வொரு கிளைக்கதைக்கும் ஏதாவது சில சம்பவங்களையும் மாணவர்கள் தயாரித்துக்கொண்டிருந்தனர். தினம் ஒரு பேய்க்கதையை உருவாக்கி அவர்களுக்குள் தொலைந்துபோன குதூகலத்தை மீட்டுக் கொண்டு வந்தனர். சலித்துப் போயிருந்த அந்த விடுதியை ஏதோ ஒரு மர்மத் தேசமாக மாற்றிவிடுவதன் மூலம் மாணவர்கள் தன்னை அந்த மர்மத்தைக் கண்டறியும் சிறப்பு நிபுணராகவும் பாவித்துக் கொண்டு வித்தியாசமான பாவனைகளுடன் இருக்கத் துவங்கினர்.

தாய்லாந்திலுள்ள ஓர் ஆண் மாணவர் விடுதியில் நிகழும் கதைத்தான் Dorm. சமீபத்தில் பார்த்த இந்தப் படம் மீண்டும் என்னை அந்தப் புக்கிட் ஜெனூன் அனுபவத்திற்குள்ளேயே இழுத்துக் கொண்டு போகிறது. முழுநேரப்பள்ளியில் சேர்ப்பதற்காக அவனை அவன் அப்பா கட்டாயப்படுத்தி அழைத்து வரும் காட்சியுடன் தொடங்கும் படம், தாய்லாந்தின் தெருக்கடைகளுக்கு மேலே குடியிருக்கும் மனிதர்களின் வாழ்வையும் தொட்டுவிட்டு செல்கிறது. 7-8 காட்சிகளில் அவர்களின் குடியிருப்பையும் அங்குத் தெருமுழுக்கப் பூசப்பட்டிருக்கும் ஒரு விநோதமான அமைதியையும் காட்டிவிட்டு, சாதரி என்கிற அந்த மாணவனைக் காரில் அழைத்துக் கொண்டு போவதோடு கதை நகர்கிறது.

சாதரி படித்துக் கொண்டிருக்கும் பள்ளிக்கூடத்தின் மீது அவனுடைய அப்பாவிற்கு அதிருப்தி ஏற்படுவதோடு அந்தப் பள்ளியின் நிர்வாகம் குறித்தும் தரம் குறித்தும் சந்தேகிக்கிறார். பரீட்சை சமயத்தில் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொலைக்காட்சியை அதிகமாகப் பார்க்கிறார்கள், விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் சோதனையில் நல்ல தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள் என்பதன் மீது அவனுடைய அப்பாவிற்கு அதிருப்தி ஏற்படுகிறது. ஆகையால் அவனை முழுநேரப்பள்ளியில் சேர்த்து அங்கேயே தங்கிப் படிக்க வைத்தால்தான் அவனுக்குள் ஒரு கட்டொழுங்கும் கல்வியின் மீதான ஆர்வமும் வரும் என்கிற நம்பிக்கையோடு அவனை அழைத்துக் கொண்டு போகிறார். வீட்டுடன் நெருக்கமான அனுபவத்தையும் பற்றையும் கொண்டுள்ள சாதரி அங்கிருந்து அனுப்பப்படுவதைப் பெரும் எதிர்ப்பாகக் கருதுகிறேன். அவனுடைய அப்பா தன் சுதந்திரத்தைப் பறித்து அவனை ஏதோ சிறைக்கு அனுப்புவதாகக் கடிந்து கொள்கிறான். தொடர்ந்து அவனை அங்குச் சேர்த்துவிட்டப் பிறகு அவனுடைய அப்பா தொலைப்பேசியில் அழைத்து அவனுடன் பேச விருப்பப்படுகிறார். அவனுக்கு மிக நெருக்கமான ஒன்றை அப்பா பறித்துவிட்டார் என்கிற வெறுப்பில், அவருடன் பேசுவதையே அவன் தவிர்த்துவிடுகிறான்.

வீட்டுடனும் அந்த வீட்டில் வழங்கப்படும் தனக்கே உரித்தான சில பொருள்களுடனும் ஒருவன் தன் சிறு பிராயம் முதல் கொள்ளும் உறவென்பது நட்டுவிட்டப் பிறகு செடி தன் முதல் வேரை மண்ணுக்குள் வைத்து வளர்த்து அதை வலுவாக்குவது போல. ‘என்னுடைய கட்டில், என்னுடைய அறை, என்னுடைய புத்தகங்கள், என்னுடைய பென்சில், என்னுடைய சுவர் ஓவியங்கள்’ என குழந்தைகள் தன்னை முழுவதும் புறம் சார்ந்து தனக்கு வழங்கப்படும் சில உரிமைகளின் வழி நான் என்கிற சுயப்பிரக்ஞையை வளர்த்துக்கொள்கிறார்கள். அதில் வீடு என்பது மிக முக்கியமான விசயம். வீட்டுக்குள் உறங்கும் சிறுவர்களின் மனதிற்குள் வீடு என்கிற நினைவு விழித்துக் கொண்டே இருக்கின்றன.

சாதரி அந்த ஆண் மாணவர்கள் விடுதிக்குள் தன்னை அந்நியமாகவே உணர்கிறான். அங்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் ஒழுங்குகளின் மீது தனது ஒட்டுமொத்த வியப்பையும் திரட்டி செலுத்துகிறான். காலையில் எழுந்திருக்கும் நேரம் முதல் எங்கு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதுவரை அவனுக்கான வரையறை கற்பிக்கப்படுகிறது. அவன் அவையனைத்திலும் தன் வீட்டின் மீதான ஏக்கத்தையே கண்டடைகிறான். சுற்றி உள்ள மாணவர்கள் முதலில் அந்த ஆண் விடுதியைப் பற்றி பல விந்தையான கதைகளைச் சொல்லத் துவங்குகிறார்கள்.

அங்குச் சொல்லப்படும் இந்தக் கதைகள் மிகவும் முக்கியமானவையாகும். வழக்கமாக இந்த மாதிரி குடும்பத்தை விட்டு தனியாகத் தங்கும் மாணவர்கள் மிகவும் கவனமாகவும் ஆர்வமாகவும் பேசிக்கொள்வது பேய் கதைகளைத்தான். பேய்கள் மீதான அவர்களின் ஈர்ப்பும் ஈடுபாடும் அதீதமாகவே இருக்கும். அந்தத் தருணங்களை இந்தப் படத்தில் கொஞ்சம் அதிகமாகவே பதிவு செய்ததற்குக் காரணம் இது ஒரு பேய்ப்படமும்கூட. ஆனால் நான் தொட நினைப்பது படத்தின் கதையில் ஒலிக்கும் பேய்க்கான பகுதியை அல்ல, சாதரி எனும் சிறுவன் தன் வீட்டைவிட்டு வந்த பின் அவன் எதிர்க்கொள்ளும் மனமாற்றம் தனிமைப்படுதல் குறித்தான புரிதல்கள் மட்டுமே.

அந்த விடுதியிலுள்ள சக மாணவர்கள் அவர்களுக்கே உரிய தொனியில் அந்த விடுதியின் மறுப்பக்கத்தைப் புனைந்து வைத்திருக்கிறார்கள். முன்பொருமுறை இந்த விடுதியில் பணியாற்றிய சமையல்காரிக்கு ஓர் அழகான மகள் இருந்தாள் என்றும் அவள் திடீரென விடுதிக்கு வெளியில் இருக்கும் மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்துவிட்டாள் என்றும் சொல்கிறார்கள். இங்குள்ள முன்னாள் மாணவர்கள் அவள் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சித்தார்கள் என்றும் அவள் இந்த விடுதியில்தான் பேயாக அலைகிறாள் என்றும் இரகசியமான தொனியில், ஒரு மஞ்சள் விளக்கை நடுவில் எரியவிட்டுக் கொண்டு சாதரியிடம் சொல்லி பயத்தை உண்டாக்குகிறார்கள். புதியதாக வரும் மாணவர்களிடம் சுவார்சயமாகப் பகிர்ந்துகொள்வதற்கு அவர்களிடம் மிஞ்சி இருக்கும் கதைகள் இவைகள்தான்.

மேலும் இரவில் ஓர் ஆண் உருவம் நடக்கும் சத்தமும் விடுதியில் அனைவரும் உறங்கிவிட்ட பிறகு கேட்கும் எனவும் தெரிவிக்கிறார்கள். முன்பொருமுறை விடுதிக்கு அருகிலுள்ள நீச்சல்குளத்தில் நீந்தும்போது இறந்து போன ஒரு சிறுவனின் உருவம்தான் அது என்றும் சொல்லி வைக்கிறார்கள். அந்த நீச்சல் குளத்தை அதன் பிறகு அடைத்தும்விடுகிறார்கள். மேலும் விடுதியின் மேலாளரான பெண் ஆசிரியை ஒரு நாள் அந்த நீச்சல் குளத்தில் எதையோ பார்த்துவிட்டு அலறி பயந்து போய் விடுகிறாள் என்றும் அதன் பிறகு உடைந்து போன ரேக்கோடரில் பழைய பாடலை ஒலிக்கவிட்டு, சொந்தமாக மேசையின் கீழ்க்கதவைத் திறந்து அதைப் பார்த்து அழுந்துகொண்டிருப்பார் எனவும் சொல்கிறார்கள்.

சாதரி ஒருமுறை அவளுடைய அறைக்குள் எட்டிப் பார்க்கிறான், சக மாணவர்கள் கூறியது போலவே அவள் பழைய ஒரு பாடலை ஒலிக்கவிட்டுக் கொண்டு மேசைக்கு அடியில் பார்த்து அழுது கொண்டிருக்கிறாள். ஆகவே சாதரி அந்த விடுதியில் பேய் இருப்பதையும் நம்பத் துவங்குகிறான்.

அங்குள்ள சக மாணவர்களிடம் அதிகம் பேசாமல் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் சாதரியிடம் நெருங்கி பேசுகிறான் வின்ச்சின் எனும் இன்னொரு மாணவன். சாதரியைப் பின் தொடரும் ஒரு நிழலைப் போல அவனைக் கவ்விக்கொள்கிறான். ஒரு சமயம் அந்த வின்ச்சின் அவனுக்கு மட்டுமே தெரியும் ஓர் உருவம் எனக் கண்டு கொள்கிறான். அதன் பிறகு அந்த வின்ச்சினைப் பற்றி அவனுடன் உரையாடித் தெரிந்து கொள்வதாக கதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இதற்கு முன் அந்த விடுதியில் பேய்க்கதைகளாகக் கூறப்பட்ட விசயங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன.

நீச்சல் குளத்தின் விழுந்து இறந்துவிடுவதாகக் கூறப்படும் அந்த மாணவன்தான் இந்த வின்ச்சின். வின்ச்சினின் அப்பா கைதாகி 25 வருடம் தண்டனை பெற்றுவிட்ட தகவலை அறிந்து கொண்ட பின்தான் நீச்சல் குலத்தில் விழுந்து வின்ச்சின் தர்கொலை செய்து கொண்டான் என அந்த விடுதியின் மேலாளரான ஆசிரியை நினைத்துக் கொண்டு குற்ற உணர்வு தாளாமல் தினமும் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். ஆனால் அன்றைய தினம் நீச்சல் குலத்தில் நடந்த இரகசியத்தையும் தான் மரணித்தது மிகவும் தற்செயலான ஒரு விபத்துதான் எனச் சொல்கிறான் வின்ச்சின். வின்ச்சினின் ஆத்மாவை மீட்பது மட்டுமல்லாமல் அந்த ஆசிரியையையும் அவளது குற்ற உணர்வையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறான் சாதரி.

கதை முழுக்க அவனுக்கு வித்தியாசமான ஓர் உலகில் இருப்பது போன்ற உணர்வு தேவைப்பட்டது. அவனிடம் பேய்க்கதைகள் சொன்ன சில நண்பர்களிடம் மட்டும் வின்ச்சனைப் பற்றி சொல்லி ஆச்சர்யமடைகிறான். இறுதியாக அவன் அப்பா விடுமுறைக்காக அவனை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வருகிறார். அத்தனை நாள் அவனுக்குள் சேகரிக்கப்பட்டிருந்த அப்பாவின் மீதான வெறுப்பு மெல்ல கரைந்து இயல்புக்கு அவன் திரும்புகிறான். அப்பாவிடம் சென்று இந்தப் பள்ளி எனக்குப் பிடித்திருப்பதாகக் கூறி அவரைக் கட்டியணைத்துக் கொள்கிறான். “மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை மாலை நான் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறேன்” என்பதாகப் படம் தொடங்கிய சாதரியின் அப்பாவின் காரிலேயே முடிவடைகிறது.

முழுநேரப்பள்ளியில் சாதரி தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் தருணத்தில் அவனிடம் சொல்லப்பட்ட விநோதமான பேய்க்கதைக்குள் அவன் நுழைந்துவிடுவதிலிருந்து அவனுக்கான இருப்பு அர்த்தமாகுவதைப் போல உணரத் துவங்குகிறான். அவன் நண்பனான வின்ச்சினையும் அந்த மேலாளரையும் காப்பாற்று வேண்டும் என்கிற கடமை உணர்வு அவனுக்குத் தொடர்ந்து அந்த முழுநேரப்பள்ளியின் வெறுமையையும் சலிப்பையும் கடப்பதற்கான சக்தியை அளிக்கிறது. வீட்டைப் பற்றிய கணமான அனைத்து நினைவுகளையும் சாதரி மெல்ல மறந்து அதிலிருந்து விடுப்பட்டு விடுதியில் சொல்லப்பட்ட பேய்க்கதைக்குள் தனது சுவாரிசயங்களைக் கண்டடைகிறான்.

சாதரி தன் சுதந்திரம் பறிப்போய்விட்டதாக உணர்ந்த மறுகணமே அந்தச் சுதந்திரத்தை எப்படி மீண்டும் மீட்டெடுப்பது எனச் சிந்திக்கத் துவங்கியிருப்பான். ஆனால் தனிமை அவனைத் தொடர்ந்து நெருக்குகிறது. அப்பாவின் செயல்மீது வெறுப்பும் கோபமும் கொள்கிறான். ஆனால் சக மாணவர்கள் சொல்லும் பேய்க்கதைகளின் வழி அவனது சுதந்திரத்தை மீட்டெடுக்கத் துடிக்கும் மனம் இறுக்கத்திலிருந்து மிக எளிமையாகத் தப்பித்து தனித்து இயங்கத் துவங்குகிறது.

வின்ச்சினைக் காப்பாற்றுவதும் அவனது பேயைச் சந்தித்த அனுபவமும் அவனுக்கு ஒரு சுதந்திரத்தைக் கொடுக்கிறது. தனக்கு மட்டும் தெரிந்த ஓர் உலகத்தின் கதைநாயகனாக அவன் விளங்குகிறான். ஆகையால் முழுநேரப்பள்ளியின் அட்டவனை சூழலை இயல்பாக அவனால் கடந்து போகமுடிகிறது.

பொதுவாக எல்லா குழந்தைகளுமே தங்களை சுற்றி கட்டமைக்கப்படும் எத்தகைய சூழலையும் மீறி தங்களுக்கெனெ மிக அந்தரங்கமான ஓர் உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் சுவாரசியமான விளையாட்டுகளையும் சவால்களையும் அவர்களே ஏற்படுத்துகிறார்கள். தங்களுக்கு உகந்த ஒரு வாழ்வினை மிக அந்தரங்கமாக ஏற்படுத்தி அதை தாங்களே கையால்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.அதன்மூலம் ஒவ்வொரு குழந்தையும் தனது உலகில் கதாநாயகர்களாக இருப்பதை நாம்தான் புரிந்துகொள்வதில்லை... உலகில் பலவற்றையும் புரிந்துகொள்ளாததை போல.

நன்றி: வல்லினம் ஜனவரி இணைய இதழ்
              
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

No comments: