Sunday, January 1, 2012

இந்தியப் பயணம்-5 –ஆதவன் தீட்சண்யாவுடன் மோட்டார் பயணம்


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் என்னைப் பேருந்து ஏற்றிவிடுவதற்காக செல்மா வெகுநேரம் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று மிகவும் அவரசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வரவேண்டிய சூழல். செல்மா குழந்தைகளிடம் அதிகம் பேசவும் முடியவில்லை. அதுவே மிகுந்த வருத்தமாக இருந்தது. ஒரு சகப் பயணியைப் போலவே என்னுடன் செல்மா இந்தியா பயணம் முழுக்கவும் அவ்வப்போது உடன் இருந்தார். சரியாக 10.45க்கு வரவேண்டிய பேருந்து மேலும் தாமதமாக்கியது. எங்களுடன் செல்மா காருக்கு டிரைவராக வந்த தோழர் ஒருவர் அங்கு இருந்ததால் செல்மாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தேன். தோழர் முன்பு கம்னியுஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறியவர். அவரிடம் வெறும் மௌனம் மட்டுமே இருந்தது. திண்டுக்கல் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்துக்கொண்டேன்.
 
இங்கிருந்து ஓசூருக்குச் செல்வதாகத் திட்டம். அண்ணன் ஆதவன் தீட்சண்யாவைச் சந்தித்தாக வேண்டும் எனப் பிடிவாதமாகவே இருந்தேன். 5ஆம் திகதி அவர் மதுரைக்கு வருவதாக இருந்தது. அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு உரையாற்ற ஆதவன் மதுரைக்கு வரும் அந்த 5ஆம் திகதி என் பயணத்திட்டத்தின்படி நான் பாண்டிச்சேரியில் இருக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே பயணத்தை ஓசூருக்கு மேற்கொள்ள முடிவு செய்திருந்தேன். ஆதவனைப் பார்க்க எத்துனைத் தூரம் வேண்டுமென்றாலும் பயணிக்க அப்போதைய மனம் தயாராக இருந்தது.


எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவை இரண்டு வருடமாகத்தான் பழக்கம். ஆனால் 2008ஆம் ஆண்டிலேயே அவருடைய சிறுகதைகளை வாசிக்கத் துவங்கியிருந்தேன். ஒருமுறை உயிர் எழுத்து இதழில் அவருடைய சிறுகதைகளைப் பாராட்டி பிரபஞ்சன் “ஒரு நூற்றாண்டின் சிறந்த கதை” எனும் கட்டுரையை எழுதியிருந்தார். ஆதவன் கதை மீதான பிரபஞ்சனின் விமர்சனம் அவருடைய கதைக்குள் அரசியல் பிரக்ஞையுடன் நுழைய வாய்ப்பைக் கொடுத்தது. சமக்கால கூர்மையான அரசியல் உணர்வுடன் தன் கதைகளின் வழி ஆதவன் முன்வைக்கும் மாற்றுப் புனைவுலகம் என்பது மேல்தட்டுவர்க்கத்தையும் அரசியல் போலிகளையும் பயங்கரமாக இம்சிக்கக்கூடியதாகும். அதன் விளைவாக வல்லினம் இதழுக்காக அவருடன் ஒரு சிறுகதை கலந்துரையாடலை நடத்திப் பிரசுரித்திருந்தேன். அது மலேசிய வாசகர்களுக்கு ஆதவனின் கதை உலகத்தை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்திருந்தது.

வழி நெடுக அவ்வளவாகத் தூக்கம் இல்லை. இடத்தைத் தவறவிட்டுவிடுவேன் என்கிற பயமே தொல்லையாக இருந்தது. என் சீட்டுக்கு முன் அமர்ந்திருந்த இரு வயதான தம்பதிகளை அவ்வப்போது ஓசூர் வந்துவிட்டதா எனக் கேட்டுக்கொண்டே வந்தேன். ஓசூர் வந்ததும் தெரிவிப்பதாகவும் அதுவரை அமைதியாக இருக்கும்படியும் அவர்கள் சொல்லும்வரை என் இம்சை நீடித்திருந்தது. விடியற்காலை 6மணியைப் போல ஓசூரை வந்தடைந்தேன். பேருந்தைவிட்டு இறங்கியதும் குளிர் உடலை நடுங்கச் செய்தது. ஓசூர் பங்களூருக்கு அருகில் இருப்பதால் குளிர் அதிகமாகவே பரவியிருந்தது. ஆதவன் 5மணிக்கெல்லாம் எழுந்து எனக்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

பொது தொலைப்பேசியின் வழியாக அவருக்கு அழைத்து சேர்ந்துவிட்டதைத் தெரிவித்தேன். அவர் என்னையும் நான் அவரையும் தேட 5 நிமிடத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டோம். ஒரு மணி நேரம் காத்திருந்த எந்தச் சிறு சலிப்பும் இல்லாமல் வழக்கமான அன்புடன் பயணத்தைப் பற்றி விசார்த்தார். மேம்பாலத்தைக் கடந்து இருவரும் அவர் இல்லத்தை நோக்கி நடந்தோம். இதற்கு முன் இந்தியாவில் எங்கெல்லாம் சென்றேன் எனச் சொல்லிக்கொண்டே ஆதவன் பணியாற்றும் பி.எஸ்.என்.எல் தொலைப்பேசி அலுவலகத்திற்கு முன் வந்துவிட்டிருந்தோம். அதையொட்டிய அடுக்குமாடியில்தான் ஆதவனின் வீடு. அங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் அதுவே குடியிருப்பு. வீட்டுக்குள் நுழைந்ததும் ஆதவனின் மனைவி, அவரின் மைத்துனன், ஆதவனின் மகள் தீட்சண்யாவும் இருந்தார்கள். எல்லோரும் மிகுந்த அன்புடனே பழகினார்கள். குறிப்பாக ஆதவனின் மைத்துனர் மிக இயல்பாக என்னுடன் உரையாடினார். மலேசிய அரசியல், கல்வி, இலக்கியம் என அவரிடமிருந்து நிறைய கேள்விகள் எழுந்தன. இந்தியா வந்து அதுதான் நான் மலேசிய பற்றி அதிகமாக விளக்கங்கள் கொடுத்தத் தருணமாக அமைந்திருந்தது.

பிறகு நானும் ஆதவனும், தீட்சண்யாவைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கக் கிளம்பினோம். அவருடைய மகள் அங்குத்தான் அருகாமையில் ஒரு பள்ளியில் படிக்கிறார். பொதுசாலைக்கு வந்து அவரைப் பேருந்தில் ஏற்றிவிடவேண்டும் எனக்கூறினார். ஏதோ ஒரு குறுக்குச் சந்தின் வழியாக மூவரும் நடக்கத் துவங்கினோம். விடிந்தும் குளிர் என்னைவிட்டு அகலவே இல்லை. அங்குள்ள சூழலும் கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. வண்ணநிலவன், வண்ணதாசன், கி.ராஜநாரயணன் போன்றவர்கள் தங்களின் கதைகளின் வழி வாழ்வின் துயரங்களையும் தடைகளையும் கடந்து போவதன் அழகியலையே முன்வைக்கிறார்கள் எனப் பேச்சுத் துவங்கியது. ஆதவன் அதற்கு எழுத்தாளர்களின் சாதியப் பின்புலம் அவர்கள் எங்கிருந்து எக்காலக்கட்டத்தில் எழுத வருகிறார்கள் என்பதாக மிக விரிவாக இருந்தது. எழுத்துலகமும் சாதியத்தால் கட்டமைக்கப்பட்டிருப்பதையும் உணர முடிந்தது. ஏன் அது போன்ற கதைச்சொல்லிகள் அல்லது இடைச்சாதியைச் சேர்ந்த கதைச்சொல்லிகள் அவர்களின் மிகவும் நடுத்தரமான பிரச்சனைகளையும் அவர்களுக்கு உருவான வறுமையையும் முன்வைத்து அதைக் கடந்து போவதன் அல்லது அதை ஏற்றுக்கொள்வதன் அரசியலை ஒட்டுமொத்த நிலப்பரப்புக்கான விடுதலையாக முன்வைத்தார்கள் என்பதாகப் பேச்சு மேலும் தொடர்ந்தது.

தலித்துகள் குறித்த பிரக்ஞை இடைச்சாதியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் முக்கியம் பெற்றதே இல்லை. அவர்களுடைய வாழ்க்கையின் வழி எல்லாவற்றையும் கடப்பதற்கும் கடத்துவதற்கும் வாசகர்களைப் பழக்கப்படுத்துகிறார்கள். அந்த வாழ்வின் மையப்புலம்பல்களாக அவர்களின் சமூகமே நிலைத்துவிட, அது மிதவாத போதனைகளை கதையுலகம் முழுக்கவும் பரப்பியிருக்கின்றன. அதில் வந்து சேரும் ஒரு வாசகனாகவே எனக்குள் ஏன் எனக்கு நேர்ந்த துயரங்களை, அதற்குள் இயங்கும் ஒடுக்குமுறைகள், அரசியல் சூழ்ச்சிகள், அதற்குள் இருக்கும் மதவாதம், சாதியம் என எதையுமே ஆராயாமல் அதனைக் கடந்துபோகும் பக்குவம் தேவையாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. துயங்கரங்களையும் அடக்குமுறைகளையும் கண்டு, அதன் மீது எந்தக் கேள்வியும் எழுப்பாமல் இவையனைத்தும் கர்மா என்றும் அல்லது மனதைப் பக்குவப்படுத்தும் விசயங்கள் என்றும் வெறுமனே இருந்துவிட முடியாது என்றே தோன்றியது.

பிறகு இருவரும் அவர் வேலை செய்யும் அலுவலுகம் சென்றோம். அங்குக் கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு காய்க்கறிகள் வாங்க ஓசூர் சந்தைக்கு அழைத்துச் சென்றார். பழைய ஓசூர் இருந்த நடைப்பாதையின் வாயிலாக இருவரும் நடந்துகொண்டிருந்தோம். ஆட்களின் நடமாட்டம் கூடியிருந்தது. காய்க்கறிகளை வாங்கிவிட்டு அங்குள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். அவருடன் இருக்கும் அந்தத் தருணங்கள் மகிழ்ச்சியாகவே கடந்து சென்றது. ஓசூரின் நகரத்தைச் சுற்றி காட்ட ஆதவன் என்னை மோட்டாரில் ஏற்றிக்கொண்டார். அங்கிருந்து கிளம்பி முதலில் மலைக்கோவிலுக்குச் சென்றோம். பெரிய பெரிய பாறைகள், சுற்றுப்பாதை என அந்த மலைக்கோவில் எனக்கு விநோதமான ஒரு குளிர்ச்சியில் உறைந்ததிருந்தது.

கோவிலுக்குள் படம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நான் அதையெல்லாம் பொருட்படுத்தபவன் இல்லை. ஆகையால் கோவிலின் முக்கியமான பகுதிகளைப் படம் பிடித்தேன். கோவில் முழுக்கவும் தூண்கள். இத்தனை தூண்களைக் கொண்டிருக்கும் கோவிலை இதுவே முதல்முறையாகப் பார்க்கிறேன். இருவரும் பேசியிருந்துவிட்டு மீண்டும் மலையிலிருந்து கீழே இறங்கி ஆதவனின் நண்பர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் ஓசூரில் வியாபாரம் செய்பவர்கள். ஓசூர் கடைத்தெருக்கள் பரப்பரப்பாக இருந்தது. ஆனால் மற்ற இடங்களைவிட ஓசூர் சுத்தமாக இருந்தது. அசுத்தம் எனக்கொரு பிரச்சனை இல்லைத்தான். இந்தச் சுத்த வேறுபாட்டினை ஒரு பொதுப்பார்வையாகக் குறிப்பிட்டேன். மீண்டும் ஆதவன் வீட்டுக்குச் சென்றதும் எனக்கு பிரியாணி பறிமாறப்பட்டது. சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஆதவனின் அலுவலுகம் சென்றோம். 

பிறகு இரவில் புதுவிசை ஆசிரியர் குழுவிலுள்ள நண்பர் சம்பூ வந்திருந்தார். மூவரும் ஆதவனின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஆதவன் புதுவிசை இதழ்களில் சிலவற்றை எனக்குக் கொடுத்தார். ஏறக்குறைய 30 இதழ்கள் இருக்கும். மலேசியாவில் புதுவிசை கிடைக்காது. முன்பு சிங்கப்பூர் நண்பர்களின் வழி ஒரு சில இதழ்களை வாசித்திருக்கிறேன். பறை இதழ் பற்றியும் வல்லினம் பற்றியும் எல்லாரும் உரையாடிக்கொண்டிருந்தோம். ஓர் ஆசிரியனாக என்னுடைய மலேசிய கல்வி சூழலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இரவில் மீண்டும் பேருந்து ஏறி தஞ்சாவூர் செல்ல வேண்டும். ஆகையால் இரவு உணவுக்குப் பிறகு ஆதவன் குடும்பாத்தாரிடம் விடைப்பெற்றுக்கொண்டேன். தீட்சண்யா மிகவும் நல்ல மாணவி. அப்பாவுடன் அவர் அன்பாக இருப்பதும், எல்லோரிடமும் சுட்டியாகப் பேசுவதும் எனக்குப் பிடித்திருந்தது. அவரிடம் அவர் பள்ளியைப் பற்றி ஏற்கனவே விசாரித்திருந்தேன். அவர்களிடமிருந்து விடைப்பெறும் முன் தீட்சண்யாவிடம் நன்றாகப் படிக்கும்படி சொல்லிவிட்டுப் படியிறங்கினேன். மனம் பாரமாக இருந்தது.

திருச்சி செல்லும் விரைவு பேருந்துக்காக இருவரும் தேடி அலைந்தோம். எல்லாம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்திருந்தன. மீண்டும் பொது பேருந்து நிலையத்துக்கு விரைந்தோம். சேலம் செல்லும் அரசு பேருந்தில் ஆதவன் என்னை ஏற்றிவிட்டார். இந்தியா பயணம் முழுவதும் இப்படிப் பலர் என்னை வழியனுப்பி வைத்தார்கள். ஆதவன் அண்ணனிடம் ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டதைப் போலவே தோன்றியது. அதற்குள் அரசு பேருந்து நிலையத்தைவிட்டு வெளியேறி மேம்பாலத்துக்குக் கீழ் செல்லத் துவங்கியது. பேருந்தின் கதுவுக்கு ஓரமாக அமர்ந்திருந்தேன். சட்டென ‘பாலமுருகன்’ என்ற குரல். திரும்பிப் பார்க்கும் தருணமும் ஆதவன் சாலையில் என் பார்வையிலிருந்து மறையும் தருணமும் சட்டென நிகழ்ந்து மறைந்தது. அவர் கையசைத்ததாக ஞாபகம். அவர் குரலைச் சேமித்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது கொடுத்த அன்பு மனதில் நிரம்பியிருந்தது.

-தொடரும்-
கே.பாலமுருகன்

1 comment:

kashyapan said...

வண்ண தாசன், வன்னநிலவன்,கி.ரா ஆகியொர் என் மனதில் பதிந்த எழுத்தாளர்கள்.தலித்துகள் பற்றி அவர்கள் எழுதுவதை ஆதவன் குறிப்பிட்டுள்ளது முக்கியமானது.மிகவும் தீர்க்கமான பார்வை. இப்படி பகுப்பாய்வதுதான் ஆதவனின் பலம் . பலவீனமும் கூட ---காஸ்யபன்