25 மார்ச் கோலாலம்பூரிலுள்ள தேசிய நூலகத்தில் என் நாவல்’ நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ வெளியீடு கண்டது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் 2007ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற இரு நாவல்களையும் புத்தகமாகப் பிரசுரித்து அதனைச் சமீபத்தில் தேசிய நூலகத்தின் ஆதரவுடன் கோலாலம்பூரில் வெளியீடு செய்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு புதிய துவக்கமாக நிகழ்ச்சி அரசின் ஆதரவுடன் நடந்தேறியது நல்ல முயற்சியாகும். நாவல் வெளியீட்டது மிகத் தாதமாக இருந்தாலும் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் திட்டமிட்டு முன்னெடுத்திருக்கிறார்கள்.
நாவல் வெளியீட்டு விழாவில் எனக்கு மாலையும் பொன்னாடையும் வேண்டாம் என மறுத்திருந்தேன். ஒரு படைப்பாளியின் உணர்வுக்கும் தேவைக்கும் மதிப்பளித்து அவர்கள் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கும் செயலாகும். மேடை கலாச்சாரம்/மேடை அலங்காரங்கள் குறித்து எனக்கிருக்கும் எதிர்வினை சார்ந்தே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். ஒரு படைப்பாளிக்கு எது தேவை எது தேவை இல்லை எனத் தீர்மானிக்கும் உரிமையும் சுதந்திரமும் அவனுக்கு இருக்கின்றன. ஆக படைப்பாளியாவது இந்தச் சமூகத்தில் உரிமையுடனும் சுதந்திரடனும் செயல்பட இந்தச் சமூகம் அனுமதிக்க வேண்டும்.
இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களை இந்த நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியுடன் இணைத்திருக்கிறார்கள். அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களான சுரேன், சத்திஸ்வரி, லோகேஸ்வரி மற்றும் சாந்தி அன்று வெளியீடு கண்ட நாவல்களைத் திறனாய்வு செய்து படைத்திருந்தார்கள். இலக்கியத்தை நோக்கி மாணவர்களை ஒரு பொது மேடையில் இணைப்பது என்பது பாராட்டத்தக்க செயல். அவர்கள் விமர்சனம் திறனாய்வு என்பதெல்லாவற்றையும் கல்விக்கூடங்களிலேயே செய்வதற்கும் இப்படிப் பொதுமக்களுக்கிடையே செய்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. கல்விக்கூடங்களில் செய்யும் எந்த இலக்கிய முயற்சியாக இருந்தாலும் அது பரீட்சைக்குப் பிறகு சுருங்கிக் காணாமல் போய்விடுகின்றன. ஆகையால்தான் இன்றும் பல்கலைக்கழக/கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்புக்குப் பிறகு மொழி/இலக்கியம் சார்ந்த விசயங்களிலிருந்து காணாமல் போய்விடுகின்றனர்.
ஆனால் மாணவர்களின் நாவல் திறனாய்வு மேலும் செம்மைப்பட வேண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்ப்பார்ப்பு. ஒரு கல்வியியல் விமர்சனத்துக்கு மட்டும் ஒரு பெரும்கதைப்பரப்பைத் தனக்குள் வைத்திருக்கும் நாவலை உட்படுத்திப் பார்ப்பதென்பது அந்த நாவலிலிருந்து சில மேலோட்டமான தகவல்களை மட்டுமே சேகரிக்க உதவும். நாவலின் வெளிதோற்ற அமைப்புகளை விரிவாகச் சொல்ல சொல்ல நாம் எப்படியோ நாவலின் மையத்திலிருந்து மேலும் வெளியே சென்று கொண்டிருப்போம். நாவலில் விவரிக்கப்பட்ட கதைப்பாத்திரத்தின் உணர்வுகளை அடைவது என்பது ஆழமான விமர்சனம் என்றால் நாவலில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்களின் பண்புநலன்களை விவரிப்பது மேலோட்டமான வழக்கமான விமர்சனமாகும். கதைக்களத்தைச் சொல்வதற்கும் கதைக்களத்தின் பின்னணியில் இயங்கிய வரலாற்றின் சிதைவுகளை, ஊடுருவல்களைச் சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன. நாவல் நிகழும் காலம், இடம், என அவற்றை நாவலுக்குள்ளிருந்து தகவல்களாகப் பெயர்த்தெடுத்து வழங்குவது மேலோட்டமான ஆய்வு, ஆனால் அந்த நாவல் இடம்பெற்ற காலத்தைத் தேடி அலைந்து அதனுடைய நிதர்சனத்தை அம்பலப்படுத்தி காட்டுவது மாற்று திறனாய்வாகும்.
இப்படி விமர்சனம்/திறனாய்வு சார்ந்து மாணவர்களின் சடங்கு பூர்வமான அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும். இடுப்பணி (aasignment) என்பதுக்கு வெளியே அந்த மனநிலையை உதறித்தள்ளிவிட்டு ஒரு படைப்பை மாணவர்கள் அணுக வேண்டும். மேலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘படித்ததில் பிடித்தது எனும் அங்கத்தில் தாங்கள் வாசித்த நூல்கள் பற்றி சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்கள். வாசிப்பை ஒரு பழக்கமாக அவர்களுக்குள் உருவாக்க வேண்டும். பழக்கம் என்பது சோதனை, மதிப்பீடு என்பதற்கு அப்பாற்பட்ட ஒரு விசயமாக வளர்க்கப்பட வேண்டும். நல்ல தொனியுடன் ஏற்ற இறக்கத்துடன் வாசிக்க வேண்டும் எனச் சொல்லி சொல்லி மாணவர்கள் ஒரு கதையை வாசிக்கும்போதும் கூட தொனி/உச்சரிப்பு மீது மட்டுமே கவனத்தைக் குவித்து வாசிப்பைக் கடந்து போகிறார்கள். வாசிப்பை அவர்களிடம் பறித்துவிடும் அதிகாரத் தொனி நம்மிடையேதான் இருக்கின்றது. ஆகையால் மிக அடிப்படையான வாசிப்பை ஒரு கற்றல் நடவடிக்கையாக முன்னெடுக்கும் அதே வேளையில் அதனை மனதிற்கு நெருக்கமான ஒன்றாகவும் கருத வாய்ப்பளிக்க வேண்டும்.
மேலும், தேசிய நூலகத்துடன் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்திருப்பது கவனிக்கத்தக்க ஒரு முயற்சியாகும். மலேசியாவில் இயங்கும் மலாய் இலக்கியவாதிகளுக்கு இன்று நூலைப் பிரசுரிப்பதும் அதனை விற்பனைக்குக் கொண்டு போவதும் ஒரு எளிமையான விசயமாகும். டேவான் பாஹாசா புஸ்தாக்கா போன்ற அமைப்பின் வழி இந்நாட்டின் மலாய் இலக்கியவாதிகள் பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளின் மூலம் படைப்பாளிகள் எந்தச் சிரமுமின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மலேசிய தமிழ் படைப்பாளின் நிலைமை மேலும் மோசமாகத்தான் ஆகிக்கொண்டிருக்கின்றன. இன்னமும் வங்கிகளின் முன் நின்று கொண்டு தங்களின் நூல்களைக் கூவி கூவி விற்பனை செய்யும் எழுத்தாளர்களை எப்பொழுதாவது பார்ப்பதுண்டு. எத்தனை அவலமான நிலைமை அது? படைப்பாளனின் வேலை படைப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். அவன் படைப்பதைத் தரம் அறிந்து செம்மைப்படுத்தி அதனை நூலாக்கி, சமூகத்தின் வாசிப்புக்குக்கொண்டு செல்லும் அமைப்புகள் நம்மிடையே இருக்க வேண்டும். அதுவே படைப்பாளனை வாழ வைக்கும். அவனைத் தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கப்படுத்தும்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தேசிய நூலகத்துடன் இணைந்திருப்பது புதிய நம்பிக்கையை அளிக்கிறது. இனி தமிழ் படைப்பாளிகளின் நூல்களை மாநிலம் முழுக்கக் கொண்டு செல்வதில் தேசிய நூலகம் உதவும் என நம்புவோம். அதனை நிறைவேற்றுவதற்கு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடுநிலைமையுடன் நேர்மையாகச் செயல்படும் என்ற எதிர்ப்பார்ப்புடன் மலேசியத் தமிழ் படைப்பாளிகள் இனி தைரியமாக மலேசியத்தன்மைமிக்க படைப்புகளைப் படைக்கலாம் என்று கருதுகிறேன்.
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment