Wednesday, May 30, 2012

2010க்குப் பிறகு அறிமுகமான படைப்பாளர்கள் - வாசகர்கள்சமீபத்திய மலேசிய இலக்கியச் சூழலில் நம்பிக்கை தரும் படைப்பாளிகளாகவும் வாசகர்களாகவும் ஒரு சிலர் அடையாளம்காணப்பட்டே வருகிறார்கள். மரபார்ந்த சிந்தனை அமைப்புமுறையிலிருந்து மாறுப்பட்டு சிந்திக்க இளைஞர்களின் வருகை மிக அவசியமானது. இலக்கியம் சார்ந்து தன் இயங்குத்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்வதோடு அதனை எந்த அதிகார சக்தியிடமும் ஒப்படைக்காமல் தனித்துவமாக செயல்படுவதும் முக்கியமானவையாகும். அதனைப் பற்றியே தொடர்ந்து முன்வைக்கவும்படுகிறது.

கவிஞர் பொன்வாசுதேவன் மூலம் எனக்கு அறிமுகமானவர் நித்தியா வீரரகு. முகநூலில் என்னுடன் கவிதைகள் தொடர்பாக உரையாடத் துவங்கினார். அதன் பின் சிவா, நவீன் என அவருடைய அறிமுகம் விசாலமடைந்ததும் வல்லினத்தைக் கண்டடைந்தார். வல்லினத்தின் மூலம் தன் இலக்கிய வாசிப்பை மேலும் கூர்மைப்படுத்திக்கொண்டவர், வல்லினத்தில் இயக்கவூட்ட சினிமா தொடர்பான தொடரையும் எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் வல்லினம் நடத்திய சந்திப்பில் டாக்டர் சண்முகசிவா நித்தியாவின் மொழிவளத்தைப் பாராட்டியிருந்தார். நித்தியா மிக முக்கியமான கவிஞராக மீட்டெடுக்கப்படுவார் என்றே கருதுகிறேன்.


அடுத்ததாக, ராஜன் ரஞ்சனி. 2010ஆம் ஆண்டில் எனக்கு அறிமுகமானவர். அப்பொழுது ஒரு நல்ல வாசகராக இருந்தார். இரண்டுமுறை மலாயாப்பலகலைக்கழத்தில் அவரைச் சந்தித்து இலக்கியம் சார்ந்து உரையாடியிருக்கிறேன். அநங்கம் இதழுக்கு சிறுகதைகள் எழுதியதன் மூலம் ஒரு படைப்பிலக்கியவாதியாக அறிமுகம் பெற்றார். அநங்கம் இதழில் பிரசுரமான அவருடைய ‘புறா’ எனும் சிறுகதை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசும் வழங்கப்பட்டது. தற்பொழுது வல்லினத்தில் சிறுகதை விமர்சனங்கள் செய்து வருகிறார். அவருடைய மொழியிலும் நல்ல மாற்றங்கள் தெரிகின்றன.

அடுத்ததாக, முகநூலின் அறிமுகமானவர்தான் நோவா. சரவாக் மாநிலத்தில் ஆசிரியர் தொழில் செய்து வருகிறார். முகநூலில் நான் பிரசுரித்த கவிதைகள் கதைகள் மூலம் வாசகராக எனக்கு அறிமுகமாகித் தீவிரமாக விமர்சனம் செய்து வந்தார். அவருக்கும் நல்ல வாசிப்புத் தளத்தை வல்லினம் ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் மூலம் தன் வாசிப்பைப் புதுப்பித்துக் கொண்டு மேலும் தீவிரமாக விமர்சிக்கவும் உரையாடவும் தொடங்கினார். இப்பொழுது வல்லினத்தில் சரவாக் வாழ்க்கைமுறை, அங்குள்ள கலாச்சாரம், பழங்குடி மக்கள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். நல்ல ஆர்வமுள்ள வாசகர்.

மின்னல் வானொலியில் பணிப்புரியும் தயாஜியை 2008 காலக்கட்டத்திலேயே தெரியும். அப்பொழுது மக்கள் ஓசை பத்திரிகையில் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தேன். ஆகையால் தயாஜிக்கு என்னை நன்கு அறிமுகம். நேரில் சந்தித்துப் பேசும்பொழுதும் என் எழுத்தின் மீது அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அதன் பிறகு தயாஜியைத் தைப்பூசங்களில் புத்தக விற்பனையாளராக நல்ல பேச்சாற்றல் உள்ளவராக பலமுறை தூரத்திலிருந்து பார்த்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் தயாஜி ஒரு நல்ல படைப்பாளியாக வருவார் எனும் நம்பிக்கையெல்லாம் எனக்கு தோன்றவில்லை. என்னை மட்டுமே கொண்டாடித் திரியும் ஒரே மனநிலையில் மட்டுமே நான் இருந்த காலக்கட்டம் அது. ஆனால், தயாஜி கோலாலம்பூருக்கு வானொலியில் பணியாற்ற வந்த பிறகு வல்லினத்தைத் தீவிரமாகப் பின் தொடர ஆரம்பித்தார். என்னுடனும் நவீனுடனும் அதிகமாக உரையாடத் துவங்கினார். எங்களுடைய வல்லின கூட்டு முயற்சியில் அவரும் இணைந்து கொண்டு பங்களிப்பு செய்தார். இப்பொழுது வல்லினத்தில் ‘பயணிப்பவனின் பக்கங்கள்’ எனும் தலைப்பில் தொடர் எழுதி வருகிறார். ஒரு நம்பிக்கையளிக்கும் வாசகராகவும் தயாஜி சமீபத்தில் தேடலுடன் காணப்படுகிறார். 

அடுத்தத்தாக, பினாங்கிலுள்ள வாசகர் பாண்டியனைக் குறிப்பிட்டாக வேண்டும். இவ்வருடம்தான் பாண்டியன் அறிமுகமானார். ஏற்கனவே வாசிப்பு சார்ந்து தீவிரமான தேடல் உடையவர். அவருடன் உரையாடத் துவங்கிய சில நாட்களிலேயே அவர் தொடர்ந்து நல்ல வாசிப்பை முன்னெடுத்தவர் என அறிய முடிந்தது. முகநூலில் தொடர்ந்து எதிர்வினைகளின் மூலம் எங்களுடன் விவாதித்துள்ளார். இப்பொழுது என்னுடைய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலை வாசித்துவிட்டு விமர்சனம் எழுதியுள்ளார். விரைவில் அது பிரசுரம் ஆவதன் மூலம் பாண்டியன் நல்ல எழுத்தாளராகவும் அடையாளம்காணப்படுவார் என நம்புகின்றேன்.

தொடர்ந்து, முகநூலின் வழி அறிமுகமான மற்றொரு முக்கியமான வாசகர் ராஜ் சத்யா. கிள்ளானைச் சேர்ந்தவர் என மட்டுமே தெரியும். நவீன் முகநூலில் சிந்திக்கத்தக்க விமர்சனங்களைப் பதிப்பித்ததை வாசித்திருக்கிறேன். பிறகு, என்னுடன் ஏற்பட்ட தொடர்பின் வழி என் படைப்புகளுக்கும் விமர்சனங்களைப் பதிக்கத் தொடங்கினார். நல்ல சிந்தனையாளர் என்பதோடுமட்டுமல்லால் எல்லாம் விசயங்களிலும் அவருக்கு மாற்றுப் பார்வை இருக்கவே செய்தன. என்னுடைய ஒரு சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். மிக முக்கியமான மனிதர் என்றே சொல்ல வேண்டும். பரந்த பொது அறிவு உடையவர் என்றும் சொல்லலாம். ராஜ் சத்யா போன்ற வாசகர்கள் நம் இலக்கிய வெளிக்கு மிகவும் அவசியமானவர்.

அடுத்ததாக, கெடா மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கஸ்தூரி சுப்ரமணியம் என்பவரைக் குறிப்பிட்டாக வேண்டும். படிக்கும் காலத்தில் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அநங்கம் இதழ்களை என்னிடமிருந்து பெற்று அதைப் பயிற்சி ஆசிரியர்கள் சிலரிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். அநங்கம் சிறுகதை சிறப்பிதழில் அவருடைய முதல் சிறுகதை பிரசுரமானது. கொஞ்சம் வித்தியாசமான தலைப்பில் பரப்பரப்பாக நகரக்கூடிய கதையை எழுதி பலரின் கவனத்தைப் பெற்றவர். அப்பொழுதே அவருடைய கதை மேலும் வலுப்பெற வேண்டியதன் அவசியத்தைப் பகிர்ந்துள்ளேன். அதன் பிறகு அவருடைய சிறுகதை ஆர்வம் தீவிரமடைந்தது. சிறுகதை பட்டறைகளில் கலந்துகொண்டு பத்திரிகைகளில் கதை எழுதத் துவங்கினார். தற்சமயம் கஸ்தூரியை இலக்கியப் பரப்பில் அடையாளங்காண முடிவதில்லை. அவர் மீண்டும் எழுத வேண்டும் என்பதே என் ஆவல்.

அடுத்ததாக, ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்றபோது தேசிய அளவிலான சிறுகதை போட்டிகளில் பங்கெடுத்து அடையாளங்காணப்பட்ட தனலெட்சுமி பற்றி சொல்லியாக வேண்டும். விரிவுரையாளர் தமிழ்மாறன் அவர்கள் என்னைச் சந்தித்து ஒருமுறை தனலெட்சுமி நல்ல எழுத்தாளராக வளரக்கூடியவர், அவருடைய எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது எனக் கூறினார். திரு.தமிழ்மாறன் அவர்கள் எனக்குத் தெரிந்து இலக்கியப் பரிச்சியமுடைய முக்கியமான விரிவுரையாளர். மேலும் அவருக்கு வாசிப்பு சார்ந்த பரவலான அனுபவமும் உண்டு. அவர் ஒரு படைப்பாளியை முன்னிறுத்துகிறார் என்றால் நிச்சயம் அப்படைப்பாளிக்குள் இலக்கிய ஆற்றல் இருக்கிறது எனச் சொல்லலாம். அந்த அளவிற்கு மாணவர்களை வாசிக்க வைக்கவும் அவர்களின் சிந்தனையை மாற்றியமைக்கவும் அக்கறைக்காட்டக்கூடியவர். தனலெட்சுமி தொடர்ந்து இயங்கி வருகிறார். போட்டிகளில் மட்டும் எழுதாமல் தீவிர வாசகப்பரப்ப்பின் எல்லையை வந்தடையும் இதழ்களிலும் எழுதி அனுபவம் பெற வேண்டும் என்றே நினைக்கிறேன்.

அடுத்தத்தாக, வாசகர் அளவில் Tamilvanan, பிரேமலதா, ஜோதிவானி, பூமகள் போன்றவர்களைச் சொல்லலாம். இப்பொழுது இந்தியாவில் தமிழில் பி.எச்.டி செய்து கொண்டிருக்கும் முனிஸ்வரன், காமினி கணபதி போன்றவர்கள் நம்பிக்கையளிக்கும் வகையில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். இயக்கம் தொடர்ச்சியாக இருப்பதை வைத்தோ அல்லது அதிகமாகப் புத்தகங்கள் வாசிப்பதை வைத்தோ எதையும் தீர்மானித்துவிட முடியாது. அவர்கள் வழங்கும் படைப்பு, சமக்காலப் படைப்புகள் மீது வைக்கப்படும் கூர்மையான விமர்சனம், இலக்கியம் இயங்குவதன் பின்னணியிலுள்ள அரசியலைப் புரிந்துகொள்வது என ஒருவன் அடையும் மாற்றுச்சிந்தனையும் அதன்வழி அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் முக்கியமானவை.

கே.பாலமுருகன்

1 comment:

தயாஜி said...

மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி......