Wednesday, July 4, 2012

தினக்குரல் ஞாயிறு பதிப்பில் நேர்காணல்


“படைப்பிலக்கியத்தின் குரல் கூர்மையானது”

1.   உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள் பாலா?

பதில்: என்னுடைய இலக்கிய செயல்பாடு 15 வயதிருக்கும்போது நயனத்தில் பிரசுரமாகிய ஷோபியின் உண்மை கதையின் வாசகனாக இருக்கும்போதே தொடங்கிற்று எனத்தான் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை வந்ததும் நயனம் இதழ் வாங்குவதற்காகச் சைக்கிளில் நகரத்தை நோக்கி பயணிப்பேன். ஆனால் அப்பொழுது நான் ஒரு வாசகனாக மட்டுமே இருந்தாலும்கூட கதை மீதான ஆர்வம் மிகுதியாக இருந்தது. கதைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். புனைவு மீதான அழுத்தமான ஈடுபாடு எனக்குள் இருக்கும் ஓர் இலக்கியவாதியை மெல்ல வளர்த்திருக்கிறது. 2004ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு சிறுகதைகள் எழுதி வெற்றிப்பெற்று இலக்கிய வெளிக்குள் எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன். கல்லூரியில் நடைப்பெற்ற ‘இளவேனில்’ நூல் வெளியீட்டு விழாவில் என் முதல் சிறுகதைக்கான பரிசும் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. என்னுடைய தமிழ் விரிவுரையாளர் திரு.ப.தமிழ்மாறன் அவர்களே எனக்குள் இருக்கும் எழுத்தாற்றளுக்கு வலு சேர்த்தவர். எனக்குள் நான் கண்டடைந்த மாற்று மனம் நிஜ உலகிற்குள்ளிருந்து புனைவை நோக்கி அப்பொழுதிலிருந்தே செயல்படத் துவங்கியது.

2.   உங்களுடைய இலக்கியப் பயணத்திற்கு தங்களின் குடும்ப சூழல் உறுதுணையாக (இப்போதும் அப்போதும்) இருந்ததா?

குடும்ப அமைப்பு என்பது ஒருவனுக்குப் பாதுகாப்பானது என்றும் இந்தச் சமூகத்திற்குள்  ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஒருவன் கட்டாயம் குடும்ப அமைப்புக்குள்ளிருந்தே வரவேண்டும் என்றும் ஒரு விதி இருக்கிறது. பாதுகாப்பானது எனக் கருதப்படும் குடும்பமே ஒருவனுக்கு வாழ்க்கைக்கான போதனைகளைக் கற்றுக்கொடுக்கிறது, ஓர் உழைப்பாளியாக வளர்த்து நாட்டுக்கும் வீட்டுக்கும் சேவையாற்ற பயிற்சியளிக்கிறது, கொடுத்தல் வாங்கல் எனும் சமூக வியாபாரத்திற்கு அடிமையாக்குகிறது, வன்முறையைக் கற்றுக்கொடுக்கிறது(தன் அக்கா தங்கையை,சகோதரர்களைக் காயப்படுத்துவதிலிருந்தே ஒருவன் வன்முறையைக் கற்றுக்கொள்கிறான்) விதிமுறைகளை நோக்கிய மீறல்குணங்களை விதைக்கிறது, பக்குவப்படுத்துகிறது, ஒருவனின் சமூக அந்தஸ்த்தை நிர்ணயிக்கின்றது, ஒருவனை முழுமையாக வளர்ப்பதைப் போல ஒருவனை சிதைக்கவும் செய்கிறது. ஆக, இந்தச் சமூகத்தின் ஒரு தனி மனிதன் எப்படியிருப்பினும் குடும்ப அமைப்புக்குள்ளிருந்தே பலவகைகளில் வெளியேறுகிறான். என் இலக்கியவெளியை நான் முதலில் என் குடும்ப சூழலிலிருந்தே தொடங்குகின்றேன். என் அப்பாவைப் பற்றியும் என் அம்மாவையும் பற்றியும் எழுதியதிலிருந்தே என் புனைவுகள் வலுப்பெற்றன. இவர்களற்ற ஒரு கற்பனை வெளிக்குள் சடாரென்று என்னால் பாய்ச்சல் கொள்ள முடியவில்லை. அங்குலம் அங்குலமாக என் குடும்ப சூழல் எனக்குள் பரவியிருக்கிறது; ஜீவித்திருக்கிறது. தோட்டக்காடு, கம்போங் வாழ்க்கை, சீனக் கம்பத்தில் வாழ்ந்தது எனக் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் நான் சேமித்து வைத்திருந்த குடும்பம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மீட்டுணர்ந்து அவற்றை ஒரு புனைவாக மீளுருவாக்கம் செய்து என் இலக்கியவெளிக்குள் தொடர்ந்து தீவிரமாக இயங்கினேன். இன்றும் குடும்ப சூழல் எனக்கு பலவிதமான கற்பிதங்களை உருவாக்கிக்கொண்டேதான் நகர்ந்து கொண்டிருக்கின்றது. குடும்பம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே வழங்கியிருந்தால் ஒருவேளை நான் வரட்சி மிகுந்த ஓர் எழுத்தாளனாகச் சுருங்கி காணாமல் போயிருப்பேன். குடும்பம் அளித்த அனைத்து அனுபவங்களையும் சுமந்து கொண்டுத்தான் ஒரு படைப்பாளி சமூகத்தை நோக்கி வருகிறான். நானும் அப்படித்தான் வந்தேன்.

3.   மலேசிய மட்டுமல்ல தமிழ்நாடும் உங்களைத் திரும்பி பார்க்க வைக்கும் நல்ல எழுத்தாற்றல் உங்கள் விரல்களுக்கு இருப்பது குறித்து?

தமிழ்நாடு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழ் வாசகர்களிடமும் எழுத்தாளர்களிடம் என் எழுத்துப் போய்ச்சேரக் காரணமாக இருந்தது இணையம்தான். தமிழ்நாட்டைத் திரும்பி பார்க்க வைப்பதென்பது ஒரு பெரிய சாதனையெல்லாம் இல்லை என்றே நினைக்கிறேன். தமிழ்நாட்டையும் கடந்த தீவிரமான தரமான இலக்கியவெளி எப்பொழுதும் கூர்மையான படைப்பிலக்கியத்திற்கான குரலுடன் இணையவெளியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இலக்கிய மையத்தில் போய்ச்சேரும் யாவரின் படைப்பும் தனித்துவம் பெற்றிருந்தால் கட்டாயம் அடையாளங்காணப்பட்டு விமர்சிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் திண்ணை.காம், என்னுடைய வலைத்தலம்( http://bala-balamurugan.blogspot.com/) , கீற்று.காம், வார்ப்பு.காம் போன்ற இணைய இலக்கிய ஏடுகளில் எழுதியதன் மூலம் 2007களில் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு விமர்சிக்கவும்பட்டேன். என்னுடைய சிறுகதைகளை, ‘சிறுகதைகளில் அயல்நாட்டு வாழ்க்கை’ எனும் தலைப்பில் தஞ்சை தமிழ்ப்பல்கழகத்தைச் சேர்ந்த முதுகலை மாணவி ஒருவர் ஆய்வு செய்துள்ளார். தென் அமெரிக்காவில் வெளிவரும் தென்றல் தமிழ் இலக்கிய இதழுக்காக என்னை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் நேர்காணல் செய்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார். சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் என் கவிதைகளை நூலாக்கி ‘கடவுள் அலையும் நகரம்’ என்ற தலைப்பில் வெளியீட்டது. மலேசியாவிற்கு அப்பாற்பட்டு, சிங்கப்பூர் ‘நாம்’ இதழ், உயி எழுத்து, வார்த்தை, யுகமாயினி போன்ற இதழ்களிலும் என் படைப்புகள் பிரசுரம் கண்டுள்ளன. உலக இலக்கியத்தின் எல்லைக்குள் என் எழுத்து நுழைந்து கவனம் பெற்றதற்கான சான்றாக இவையனைத்தையும் நான் கருதுகிறேன். சோர்வேதுமின்றி தொடர்ந்து இலக்கியத்தில் இயங்கியதன் மூலமே என்னால் அந்த ஆற்றலையும் எல்லைகளையும் அடைய முடிந்தது.

 
4.   நவீன இலக்கியம் பற்றிய புரிதல் நம் நாட்டு படைப்பாளிகளிடம் உள்ளதா?

முதலில் நவீன இலக்கியம் என்றால் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். என் மாணவர்களிடம் நான் வழக்கமாகச் சொல்வது இதுதான், ‘பத்து வருடத்திற்கு முன்பு இருந்த பிரச்சனைகளும் இப்பொழுது இருக்கும் பிரச்சனைகளும் சமமாக இருக்கின்றனவா? பத்து வருடத்திற்கு முன்பு பார்க்கப்பட்ட ஒரு விசயம் இப்பொழுதும் அதே மாதிரித்தான் பார்க்கப்பட வேண்டுமா?” இதற்கான பதிலை நேர்மையான முறையில் அளிக்க முடிந்தால், நவீன இலக்கியம் என்றால் என்ன என்பதற்கான எளிமையான புரிதலை நம்மால் பெற முடியும். வாழ்க்கை என்றுமே காலாவதியாகாது ஆனால் வாழும் முறை காலத்திற்குக் காலம் மாறுப்பட்டே வருகின்றது. இது ஒரு சமூகம் அடையும் வீழ்ச்சியா அல்லது வளர்ச்சியா என்பதையும் சமக்காலத்து மதிப்பீட்டுணர்வுடனே அணுக வேண்டியுள்ளது. நவீன இலக்கியத்திற்கும் சமூக விஞ்ஞானத்திற்கும் எப்பொழுதுமே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தான் வாழும் சமூகம் பொருளாதாரம், கல்வி, அரசியல்,ஆன்மீகம், தத்துவம் போன்ற விசயங்களில் இப்பொழுது எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை ஆழமாக உணர்வதே சமூக விஞ்ஞானம். சமூக விஞ்ஞானம் தெரியாதவனால் காலத்திற்கேற்ற இலக்கியத்தைப் படைக்க முடியாது. தோட்டக்காடுகளில் தமிழர்கள் சந்தித்தப் பிரச்சனைகளுக்கான தீர்ப்புகளை மனதில் வைத்துக் கொண்டாடிக்கொண்டு பன்முகச் சூழலில் கம்பங்களிலும் மீள்குடியேற்றப் பகுதிகளிலும் வாழும் தமிழர்களுக்கான வாழ்க்கைக்குள் ஒரு அளவீடாக நுழைப்பது எப்படிச் சாத்தியமாகும்? மீள்குடியேற்றப் பகுதிகளில் ஒரு தமிழன் சந்தித்தச் சமூகப் பிரச்சனையைப் பற்றிய அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு, நவீன சமூகத்திற்குள் நகர் வாழ்வில் கரைந்துகொண்டிருக்கும் நவீன மனிதனின் பிரச்சனையை எப்படி எழுதிக் காட்டுவது? ஆக, சமக்காலத்து உணர்வில்லாத சமக்காலத்து சமூகத்தைப் புரிந்துகொள்ளாத காலாவதியான எழுத்துகள் இங்கு வந்தபடியேதான் இருக்கின்றன. 

நவீன இலக்கியம் என்றால் ஆபாசத்தைக் கொண்டாடுவது என மிகவும் மேலோட்டமாகப் புரிந்து கொண்டு அதனைப் புறந்தள்ள நினைப்பதும் ஒரு போதாமைத்தான். மேற்கத்திய இலக்கிய வகைகளைப் பார்த்தெல்லாம் நாம் நவீன இலக்கியம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் வாழ்ந்த வாழக்கையையும் வாழும் வாழ்க்கையையும் முழுமையாகப் பிரதிபலிப்பதே இலக்கியத்திற்கான மாற்றமாகும். வாழ்க்கை எப்பொழுதும் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்குத் தாவிக்கொண்டே இருக்கின்றது. அப்படித் தாவும்போது அது சந்திக்கும் மனிதர்களும், கலாச்சாரமும், வாழும் சூழலும், அரசியலும், கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. வாழ்வையும் அது எதிர்க்கொள்ளும் மாற்றங்களையும் நம்பகத்தன்மையோடு ஆய்வுத்தன்மையோடு கற்பனையாற்றலுடன் படைப்பதே நவீன இலக்கியம். தமிழ்நாட்டு போதனை/ நன்னெறி இலக்கியப் பிரதிகளை இன்னமும் கல்வி பாடத்திட்டத்தின் மூலம் தக்க வைத்துக்கொண்டு பூஜிக்கும் ஒரு கூட்டம் மேல்மட்டத்தில் இருக்க, அவர்கள் உருவாக்கி வெளியே தள்ளும் பலர் கால ஓட்டத்தில் இலக்கியத்தின் மீது ஆர்வமில்லாமல் போய்விடுவது ஒரு புறம் இருக்க, அதனையே பிடித்துத் தொங்கிக் கொண்டு சிந்தனை முதிர்ச்சியின்றி தன் இலக்கியப் புரிதலை வளர்த்துக்கொள்ளாமல் பின்தங்கியிருக்கும் எழுத்தாளர்களும் இருப்பதை நான் காட்டிக்கொடுக்கத்தான் வேண்டும்.

5.   ஒவ்வொரு படைப்பாளிகளும் சேகரித்து வைத்திருக்கும் அல்லது சேகரித்துக்கொண்டிருக்கும் கலைக்களஞ்சியமான இலக்கிய நூல்களை நாளைய தலைமுறை தொடர்ந்து பேணிக்காக்குமா? அப்படியான சூழல் எதிர்க்காலத்தில் நம் தலைமுறையினருக்கு உள்ளதா?

இளைஞர்கள் மத்தியில் இப்பொழுது ஒரு நல்ல மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. பரீட்சை, சோதனை என்பதுக்கு அப்பாற்பட்டு இலக்கியத்தில் ஒரு தனித்துவமான தேடலுடைய இளம் தலைமுறையினர் ஆங்காங்கே இருக்கவே செய்கிறார்கள். தமிழ் மொழி பட்டறையை வழிநடத்தச் செல்லும் இடங்களில் இலக்கியத்தின் மீது ஆர்வமுள்ள மாணவர்களை நேரடியாகச் சந்திக்க முடிகிறது. அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதே நம்முடைய தீவிர செயல்பாடா இருக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு சமூகமே அந்தச் சமூகத்தில் எழுதப்பட்ட நூல்களை ஆவணப்படுத்தும். சமீபத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழ் படைப்பாளிகளின் படைப்புகளுக்கும் தேசிய நூலகத்திற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி மலேசியத் தமிழ் படைப்புகளுக்கும் ஒரு முன்னேற்றத்தைத் தேடிக்கொடுத்திருக்கிறது. இனி வரும் காலங்களில் மலேசியாவிலுள்ள அனைத்து நூலகங்களுக்கும் தமிழ் நூல்கள் செல்வதற்கான வாய்ப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது. 2007ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோ வானவில்லும் இணைந்து நடத்தியப் போட்டியில் முதல் பரிசை வென்ற என் நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்களும்’ இரண்டாம் பரிசுப் பெற்ற திரு.சுப்ரமணியம் எழுதிய ‘பிரிவு நிரந்தரமில்லை’ நாவலும் பிரசுரிக்கப்பட்டு தேசிய நூலகத்தில் மக்கள் முன்னிலையில் வெளியீடு கண்டது. இதுவே சரித்திரத்தில் முதல்முறையாகத் தேசிய நூலகத்தில் நடக்கும் தமிழ் நூல் வெளியீடாகும். இது தொடருமாயின் அடுத்தத் தலைமுறையினருக்குத் தேசிய ரீதியில் அங்கீகாரமும் கவனமும் கிடைக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் நல்ல வாசகர்களையும் உருவாக்க முடியும்.

6.   கதை-கவிதை இவை இரண்டில் கே.பாலமுருகனை அடையாளம் காட்டியது எது?

நான் முதலில் எழுதியது கவிதையாக இருந்தாலும் என்னை அடையாளம் காட்டியது சிறுகதைகள்தான். பத்திரிகையில் பிரசுரமான என் முதல் சிறுகதையான ‘அப்பா வீடு’ இலக்கிய வெளியில் மிகுந்த கவனம் பெற்றது. அக்கதையின் வாயிலாகவே நவீன எழுத்தாளர் சீ.முத்துசாமி என்னைத் தேடிக் கண்டடைந்து இப்பொழுது தீவிரமாக இயங்கி வரும் வல்லினம் குழுவுடன் இணைப்பை ஏற்படுத்திவிட்டார். 2007 தொடக்கம் வல்லினத்தில் எழுதத் துவங்கினேன். அப்பொழுதெல்லாம் நான் அதிகமாகக் கவனம் செலுத்தியது சிறுகதையில் மட்டுமே. பற்பல வாழும்நிலைகளைக் கதைக்குள் தைரியமாகக் கொண்டு வந்தேன், பற்பல புதிய உத்திகளின் வழியே கதையை நகர்த்தினேன். என்னுடைய மாற்று முயற்சிகளை நிகழ்த்திப் பார்க்கும் களமாக இருந்தது சிறுகதைகள்தான்.

7.   இதுவரை பாலா பெற்ற இலக்கிய விருதுகள் யாவை? பரிசுப் பெற்ற புனைவுகள் எத்தனை?

கல்லூரி அளவில் சிறுகதை போட்டிகள் பல பரிசுகள் பெற்றுள்ளேன். 2007ஆம் ஆண்டு தமிழ்ப்பேரவை சிறுகதைப்போட்டியில் மாணவர் பிரிவில் என்னுடைய சிறுகதை “போத்தக்கார அண்ணன்” முதல் பரிசைப் பெற்றது. அதே ஆண்டில் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் சிறுகதை போட்டியில் ‘நடந்து கொண்டிருக்கிறார்கள்’ எனும் சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. கெடா மாநிலத்தில் நடந்த சிறுகதை போட்டியில் என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ முதல் பரிசைப் பெற்றது. அடுத்ததாக, 2008ஆம் ஆண்டில் என்னுடைய முதல் நாவலான “நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ மலேசியத் தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அதே ஆண்டில் தோட்டத்தொழிலாளர் சங்கம் நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் என்னுடைய நாவலான ‘உறவுகள் நகரும் காலம்’ மூன்றாவது பரிசைப் பெற்றது.

தொடர்ந்து, 2008ஆம் ஆண்டில் தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை போட்டியில் என்னுடைய, ‘பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்’ எனும் சிறுகதை முதல் பரிசையும், ‘உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்’ எனும் கதை ஆறுதல் பரிசையும் பெற்றன. 2009ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ‘கந்தர்வன் சிறுகதை போட்டியில்’ என்னுடைய சிறுகதையான ‘11மணி பேருந்து’ நான்காவது பரிசைப் பெற்று பிரபல தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்செல்வனின் விமர்சனத்தையும் பெற்றது. அதே ஆண்டில் ஆழி பதிப்பகம் நடத்திய சுஜாதா நினைவு புனைவு போட்டியில், ‘அறிவியல் புனைக்கதை’ பிரிவில் ஆசியா பசிபிக் பிரிவுக்கான சிறப்புப் பரிசை என்னுடைய அறிவியல் கதையான, ‘மனித நகர்வும் இரண்டாவது பிளவும்’ பெற்றது.

2009 ஆம் ஆண்டில் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம், கவிதை பிரிவில் எனக்கு, ‘சி.கமலநாதன்’ விருதை வழங்கியது. 2010ஆம் ஆண்டில் மலேசியத் தேசியப் பல்கலைகழகம் அதே கவிதைப் பிரிவில் ‘எம்.ஏ.இளஞ்செல்வன்’ சுழற்கிண்ணத்தை வழங்கிச் சிறப்பித்தது. பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய, ‘அலமாரி’ மற்றும் ‘அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருக்கிறது’ எனும் சிறுகதைகள் மாதாந்திர சிறுகதை தேர்வில் சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் நூல் வடிவம் பெற்றன. 2011ஆம் ஆண்டு ஜனவரியில் என்னுடைய முதல் நாவலான, ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசகர்கள்’ தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் ‘கரிகாற் சோழன்’ விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது. அதே நாவல் 2011ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநிலத்தின் ‘கலை கலாச்சாரத்திற்கான’ சிறப்பு விருதைத் தமிழ் நாவல் பிரிவில் பெற்றுத் தந்தது.

இரண்டு முறை கெடா மாநில மாவட்டக் கல்வி இலாகா எனக்கு, ‘ஆக்கக்கரமான ஆசிரியர்’ விருதும், ‘சிறந்த எழுத்துத்திறன்மிக்க ஆசிரியர்’ என்ற விருதையும் வழங்கியது. வருகின்ற திங்கள்கிழமை ( 25.06.2012) மீண்டும் மாவட்டக் கல்வி இலாகா, மாவட்ட அளவிலான ஆசிரியர் தினக்கொண்டாடத்தில் எனக்கு, ‘இலக்கியத் துறையில் ஆக்கக்கரமான ஆசிரியர்’ எனும் விருதை வழங்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். படைப்பிலக்கியம் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்த இடம், விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் அப்பாற்பட்ட இலக்கியத்தால் மட்டும் ஆன நேர்மையான களமாகும். தொடர்ந்து இயங்குவதைவிட வேறுவழியில்லை. நன்றி.

நேர்காணல் செய்தவர் தினக்குரல் ஞாயிறு ஆசிரியரும் எழுத்தாளருமான திரு.ராஜசோழன்.

thanks: thinakural sunday edition

No comments: