Friday, July 27, 2012

வாலைப் பிடிப்பவர்களும் வாலாட்டிகளும்

கதை, கவிதை, கட்டுரைகள் என ஆயிரம் ஆயிரமாக எழுதித் தள்ளிய பிறகும் ஒரு தனிப்பட்ட எழுத்தாளனின் வாலைப் பிடித்துக்கொண்டு அவனைக் கொண்டாடித் திரிவதுதான் இலக்கியத்தின் மூலம் ஒருவன் ஆகக் கடைசியாகக் கற்றுக்கொள்ளும் பாடமா? அப்படியானால் வாலைப் பிடித்துக்கொண்டிருக்கும் அந்த இலக்கியவாதியின் நிலைப்பாடுத்தான் என்ன? ஒரு பிம்பத்தின் மீது மிகையான பற்று வைத்துக்கொண்டு அவனுக்காகச் சேவையாற்றுவது, பிரச்சாரம் செய்வது, அவனுக்காக விவாதிப்பது, எல்லாவற்றுக்கும் அவனை மட்டுமே பரிந்துரைப்பது என ஒரு தனி மனிதனின் அத்துனைச் சக்தியும் அறிவும் சுரண்டப்பட்டு எவனோ ஒருவனின் காலடியில் அடமானம் வைக்கப்படுகின்றன. இதைப் பலவேளைகளில் நான் உணர்ந்து அதிலிருந்து மீண்டிருக்கின்றேன்.


இந்தியா சென்று நான் விரும்பிய எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடிய போதெல்லாம் எனக்குள் இருந்த எல்லாவிதமான கொண்டாட்ட உணர்வுகளும் தகர்ந்துகொண்டேத்தான் இருந்தன. எல்லோரும் தனக்குக் கீழ் யாரையாவது அடிமையாக வைத்துக்கொள்ளவே தன் ஆற்றலையும் அறிவையும் அதிகாரமாகப் பாவிக்கிறார்கள். அது மிக நூதமான வலைப்பின்னல் ஆகும். தன்னைக் கொண்டாடும் விசுவாசமான பக்தர்களை நோக்கியே அவர்களின் முழுக்கவனமும் இருக்கின்றன. தன் புகழ்பாடி தனக்குத் துதி சொல்பவர்களைக் கூடவே வைத்துக்கொண்டு அவர்களையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு பெரும் திரளாகக் காட்டி தன்னுடைய அடையாளத்தை வலுவாக நிறுவ முயலும் எண்ணமே இன்று அதிகரித்து வருகின்றன. இலக்கியச் சூழலின் சாபமென இதைச் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

‘நீ எத்தனை நாவல்கள் படித்திருக்கிறாய்? நான் 20 நாவல்கள். நீ 12தானா? இதுக்கே இவ்வளவு பேச்சா” எனக் கேட்டுத் தன் இலக்கிய செயல்பாட்டைத் தீர்மானித்துக்கொள்பவர்கள் இருக்கும் ஒரு சூழலில்தான் இயங்க வேண்டியுள்ளது. ஓர் எழுத்தாளன் எழுதிய மொத்தப் படைப்புகளையும் படித்து முடிக்கும்வரை சமக்காலத்தில் அவன் செய்யும் எந்த அயோக்கியதனத்தையும் நோக்கி கேள்வி எழுப்பாமல் சுரணையற்று கிடக்க வேண்டும். அவன் 500 பக்கங்கள் நாவல் எழுதியிருந்தாலும் அதைப் படித்துவிட்டுத்தான் அவனை விமர்சிக்க வேண்டும் எனச் சொல்பவர்களின் அருகில் நீங்கள் அமர்ந்திருந்தால் எப்படி உணர்வீர்கள்? அந்த வன்முறைமிக்க விசுவாசியிடம் அதற்குமேல் உரையாட என்ன இருக்கிறது? உனக்கு இலக்கியம் இதைத்தான் கற்றுத்தருகிறது என்றால் நீ எந்தச் சூழ்நிலையிலும் ஓர் நேர்மையான இலக்கிய உணர்வை அடைந்ததில்லை எனத்தான் சொல்ல வேண்டும். கடைசிவரை உனக்குக் கொண்டாட யாரோ ஒரு புகழ்மிக்க எழுத்தாளனின் நிழல் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும்.

காலம் முழுதும் எந்த எழுத்தாளனும் தன் படைப்பைக் கண்டுக்கொள்ளாத போது, தமிழ்நாட்டிலிருந்து யாராவது ஒரு எழுத்தாளன் தன் படைப்பைப் புகழ்ந்ததற்காக அந்த எழுத்தாளனை எல்லாவகையிலும் முக்கிய ஆளுமையாகக் காட்டும் பாங்கு மலேசியாவில் இல்லாமல் இல்லை. பின்னர் அந்த எழுத்தாளனின் அரசியலே தன் அரசியல். எழுத்தாளனின் மதிப்பீடே தன் மதிப்பீடு. அவன் கொட்டும் குப்பைகளை நம் முக நூலில் அறிமுகம் செய்வதும்... அவ்வெழுத்தாளனுக்கு வேண்டாத எழுதாளர்களின் கிசு கிசுக்களை இன்னும் ஆரவரமாகப் பகிர்ந்துகொள்வதும் எனத்தானே இங்கு இன்னமும் இலக்கியச் செயல்பாடுகள் நகர்கின்றன. அதைவிடக் கொடுமை... தான் வாலைப் பிடித்துள்ள எழுத்தாளன் எழுதிய நூலைப் படிக்காதவன் எழுத்தாளனே இல்லை எனும் நம்பிக்கை வேறு வேரூன்றி உள்ளது.

'மௌனம்' இதழில் இனி எழுதக்கூடாது என நான் தீர்மானித்த சமயத்தில் அதன் ஆசிரியர் என்னைத் தொடர்புக்கொண்டு இனி 'மௌனம்' எந்தவொரு தனி மனிதரையும் கொண்டாடாது என உறுதியளித்தார். 'வல்லினத்தில்' தண்டிக்கப்படுபவர்களுக்குத் தொடர்ந்து ஆறுதல் அளிக்க, மௌனம் இதழ் என்ன பொது மருத்துவமனையா அல்லது அவசர சிகிச்சை பிரிவா? எதிர்வினை எழுத வைத்துத் தன் இதழைக் கவனப்படுத்த முயலும் மிகக் கேவலமான வியாபாரி ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு நடத்தும் இணைய இதழின் அடிப்படை தர்மமும் இதுவே. யாராவது ஒருவரின் நிழலுக்குக் கீழ் தஞ்சமடைந்து குளிர் காய்வது. இருவருக்கு மத்தியில் சண்டையைத் தூண்டிவிட்டு, அதனை மையப்படுத்தி அதுவொரு இலக்கிய சர்ச்சை என அடையாளப்படுத்துவது, தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்படும் எழுத்தாளருக்குச் சாதகமாக ஓர் எதிர்வினை எழுதச்சொல்லி பிறரிடம் கெஞ்சுவது என தன் இலக்கிய இதழை முன்னெடுப்பவர்களின் நிலைப்பாடுத்தான் என்ன? இலக்கியம் என்ற போர்வை அவர்களுக்குத் தேவை. முழுக்க நல்ல தொழில்முனைப்புத் திறன்மிக்க வியாபார ஆற்றலே இறுதியில் வெளிப்படுகின்றது. இவர்களெல்லாம் எத்தனை காலம் வாலைப்பிடித்தே இலக்கியத்தை முன்னெடுக்கப் போகிறார்கள்?

வைரமுத்துவை அழைத்து மோதிரம் போடுவதும் சேரனை அழைத்துப் பண முடிப்பைக் கொடுப்பதையும் இலக்கியத்தின் எந்தச் செயல்பாடாக வகைப்படுத்த முடியும்? எதைக் கவனப்படுத்த வேண்டுமெனத் தெரியாமல் தரமான இலக்கியத்தைப் படைக்கக் கொஞ்சம்கூட முயலாதவர்களுக்குக்கூட இங்கு விருதுகள் கிடைக்கின்றன. எவனுக்காவது எதையாவது கொடுத்தால் போதும். இத்துடன் ஆண்டு நடவடிக்கை முடிந்துவிட்டதாக எண்ணி பல இலக்கிய அமைப்புகள் பெரு மூச்சு விடுகின்றன. இலக்கியம் இவர்களைப் போன்றவர்களிடம் சிக்கி சிதைகிறது. ஒரே ஒருவரிடம் தன்னை அடிமையாக்கிக்கொண்டு அவர் இழுக்கும் இழுவைக்கெல்லாம் போவதும் வருவதுமாக இருந்து தன் விசுவாசத்தை வாலாட்டிக் காட்டும் அளவிற்கு நம்முடைய வாசிப்பனுபவம் இலக்கிய புரிந்துணர்வும் என்ன அத்தனை குறுகலானதா?

எத்தனை முறை கைவிடப்பட்டாலும் இவர்களின் கைகள் பிடித்திருக்கும் வாலிடமிருந்து விலகியதே இல்லை. அது ஒரு சொகுசையும் வசதியையும் தருகிறது என நம்பி காலம் முழுக்கத் தன் அறிவை ஒரு விசுவாச ஜந்துவாக மட்டுமே மாற்றி வைத்திருக்கிறார்கள். எதிர்க்கொள்வதும் அதனைக் கடந்து செல்வதுமே நம்மை வளர்க்கும். இலக்கியவெளியில் ஒரு படைப்பாளி தன் சகப் படைப்பாளிக்குச் செய்யும் நன்மை அவன் படைப்புகளை விமர்சிப்பது மட்டுமே. யாரும் யாரையும் கொண்டாடி மகிழ்வதும் மகிழ வைப்பதும் அநாவசியமான செயலாகும்.

 கே. பாலமுருகன்
Thanks : vallinam.com.my (July Issue)

1 comment:

Tamilvanan said...

எழுத்துக்களை வாசிக்கிறேன் எழுத்தாளனை அல்ல