Tuesday, December 25, 2012

2012 ஆம் ஆண்டின் சினிமா பார்வை - 12012 ஆம் ஆண்டில் தமிழ் படங்களின் மீதான பொது அலசல் ஒன்று செய்யலாம் என நினைக்கிறேன். இன்றும் ஒரு சில நண்பர்கள் என் சினிமா  விமர்சனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நான் தமிழ் சினிமாவைக் குறை கூறுபவனோ அயல் சினிமாவைப் புகழ்ந்து பேசுபவனோ இல்லை. நான் சிறுவயது முதல் 'பயங்கர சினிமா பைத்தியம்'. தொலைக்காட்சி முன் படம் பார்த்துக் கொண்டேத்தான் உறங்குவேன். என் சினிமா விமர்சன நூலிலும் நயனம் பேட்டியிலும்கூட அதைப் பற்றிச் சொல்லியிருப்பேன். ஆகையால், சினிமா என் வாழ்நாள் இரசனை. அதை ஒரு கலையாகத் தரிசிப்பவன்.

அடுத்த ஆண்டு முதல் வல்லினத்தில் 'கலை சினிமாவின் மாற்றுத் தரிசனம்' எனும் சினிமா தொடரைத் தொடங்கியுள்ளேன். சினிமா ஒரு பக்கம் தொழில்ரீதியானதாகக் கருதப்பட்டாலும் இன்னொரு பக்கம் அதன் வெளிப்பாடு குறித்தும் அரசியல் குறித்தும் எப்பொழுதுமே விமர்சிக்க/விவாதிக்க வேண்டிய சூழல் உள்ளது. விமர்சனமும் விவாதமும் மட்டுமே சினிமாவை உயர்த்த முடியும்.
ஆனால், எத்தனை சினிமா இயக்குனர்கள், எழுத்தாளர்களின் அல்லது பார்வையாளர்களின் விமர்சனங்களைக் கவனிக்கிறார்கள் என்பதும் கேள்வியே. சமக்காலத்தின் நம்முடன் வாழும் சினிமா கலைஞனின் படைப்புக் குறித்தும் சமூகத்துடன் அவன் உரையாடிய சினிமா குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியதும் விமர்சிக்க வேண்டியதும் முக்கியமான பங்களிப்பு.

2012ஆம் ஆண்டு தமிழ் சினிமா துறையில் குறிப்பிடத்தக்க படங்களை வழங்கியவர்களாக இருவரை முதலில் பேசலாம்.

1. இயக்குனர் பாலாஜி சக்திவேல் - வழக்கு எண் 18/9
2. இயக்குனர் அன்பழகன் - சாட்டை

இவ்விரண்டு படமே கலைப்படம் என்கிற போர்வையில் பிழையான அரசியலை முன்னெடுக்க முயலவில்லை. அது எடுத்துக் கொண்ட கதைக்களத்தை நேர்மையாகவே காட்டியுள்ளது. இரண்டு படமுமே சமூகத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

சாட்டைத் தமிழ்நாட்டின் கல்வி முறையின் பலவீனங்களை அழுத்தமாகப் பேச முனைந்துள்ளது. அது எல்லாம் நாட்டின் கல்விமுறைக்கும் பொருந்தும்வகையில் தொனிக்கிறது. இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியாகூட இதுபோன்ற கல்வி முறையின் பலவீனத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா கிராமங்களிலுள்ள சிறுபான்மை மதப்பள்ளிகள், பெருநகர் ஆங்கிலப் பள்ளி வருகைக்குப் பிறகு அதிகமாகப் பாதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. சாட்டை படம் ஒரு சர்வதேச உணர்வைப் பார்வையாளனுக்கு அளிக்கின்றது.

director Balaji saktivel
வழக்கு எண் திரைப்படமும் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் எப்படி அதிகாரத்தால் சுரண்டப்படுகிறார்கள், அவர்களின் குரல்கள் எப்படி நசுக்கப்படுகின்றன எனப் பிசகலில்லாமல் பேசியப் படம். எந்தச் சினிமா ஜோடனையும் நாடகத்தனமும் இல்லாமல் அசலான எளிய மனிதர்களின் கோபத்தையே பாலாஜி சக்திவேல் நேர்மையாகக் காட்டியுள்ளார். ஒரு சராசரி மசாலா படத்திற்கும், பின்னணி இசைக்குக்கூட முக்கியத்துவம் அளிக்காமல் சுரண்டப்படும் கடைக்கோடி எளிய மனிதனின் வலியின் அந்தரங்க சப்தத்தை ஆழமாகச் சமூகமே கேட்கும்படி பதிவு செய்த இப்படத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை ஒரு பார்வையாளன் தீர்மானித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் மசாலா படங்கள் மட்டுமே வெற்றிப்பெற்று மேலும் மேலும் தரவிறக்கம் செய்யப்படும்.

பொதுவான அலசலில் இவ்வாண்டின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக வழக்கு எண் 18/9 இயக்கிய பாலாஜி சக்திவேலையும், சாட்டை படத்தை இயக்கிய அறிமுக இயக்குனரான அன்பழகன் அவர்களையும் அடையாளப்படுத்தலாம்.

director anbazhagan
உங்கள் பார்வையையும் விமர்சனத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். தமிழ் சினிமாவின் தரத்தையும் அரசியலையும் இதுபோன்ற விவாதங்கள்/விமர்சனங்கள் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு போகும். ஒரு சினிமாவின் பின்னணி அரசியல் தொடங்கி அதன் கதை நேர்மை, ஆய்வு என நம் விமர்சனத்தளம் விரிவாக்கம் அடைய வேண்டும். அப்பொழுதுதான் வெகுஜனத்தின் இரசனையை மாற்றியமைக்க முடியும். உலகமே வந்து குவியும் சந்தையாகச் சினிமா இருக்கையில், அதை நாம் விமர்சித்தே ஆக வேண்டும்.

இனி ஒவ்வொருநாளும் சினிமா குறித்து உரையாடலாம்.

தொடரும்
கே.பாலமுருகன்

1 comment:

M. Shanmugam said...

வித்தியாசமான பதிவு
தகவலுக்கு நன்றி


Cinema News