Friday, December 14, 2012

சிறுகதை: மோப்பம்

நான் ரவிகுமார். கொஞ்சம் உயரமாக இருப்பேன். கண்கள் இரண்டும் குழிக்குள் பதுங்கியிருக்கும். வலிமையற்றவன் போல உடலை இயக்கத் தெரியாமல் சோர்ந்திருப்பேன். யாராவது அழைத்தால் நான் பார்க்கும்விதம் எரிச்சல் ஊட்டும்படி இருக்கும். பெரும்பாலும் அழைப்பவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. எனக்கு நடக்க மட்டுமே தெரியும். உடலின் மையம் கால் பாதத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டதைப் போல கால்களில் வெறும் அவசரம் மட்டுமே. எங்கிருந்து எங்கு நகர எத்தனை அடிகள் வைத்தால் போதும் என்ற அளவிற்கு துல்லியமாக நடப்பேன். அது கண் தெரியாதவர்களின் கணக்கு. சட்டென பொருள்கள் மறைந்து வெறும் சுவராகி போகும்போது இருளைத் தடவுவேன்.

வேலை முடிந்ததும் ஜாலான் அம்பாங் பாசார் பூரோ கோடியில் இருக்கும் அப்பே நாசி லெமாக் கடையில் 10 நிமிடம் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அறைக்கு உடனே சென்றுவிட வேண்டும். அதிகநேரம் நான் வெளியில் திரியும் தருணத்தை ஆபத்தாகவே உணர்கிறேன். ஒரு நிமிடத்திற்கு மேல் நான் உற்றுக்கவனிக்கும் எதன் மீதும் வெறுப்பு வந்துவிடுகிறது. உலகத்தையே வெறுத்துவிடும் அபாயம் எனக்கு அருகாமையிலே சுருண்டிருக்கும். விருவிருவென மாடியேறி அறைக்குள் புகுந்துவிடுவேன்.


அறைக்குச் செல்லும் மாடி இலேசான இருளில் பதுங்கியிருக்கும். வலது பக்கமாக வலைந்து மீண்டும் மேலேறும் படிக்கட்டுகளில் எப்பொழுதும் நாய் பீ வாடை வீசிக் கொண்டேயிருக்கும். பக்கத்து பிளாட்டிலிருந்து ஓடி வரும் நாய்களுக்கு இங்கு அதிகமான பாதுகாப்பு உண்டு. பகலில் இங்குள்ள சூன்யத்தைச் சுற்றி மேய்ந்துவிட்டு முடிந்தவரை பீயைக் கழிந்து தள்ளிவிட்டு மீண்டும் ஏ பிளாட்டுக்கு ஓடிவிடும். 

“கசம் பிடிச்ச நாய்ங்க செத்தொழிய மாட்டுதுங்க” 2ஆவது மாடி வெத்தலை பாட்டி வீட்டு வாசலில் நின்று கொண்டு சாபம் விடும். அந்தப் பாட்டிக்கு நான் போவதும் கடப்பதும் எதுவும் தெரியாது. அவருக்குத் தெரிந்தது நாய் வாசம். எப்படியும் அதனைச் சட்டென கண்டுப்பிடித்துவிடுவார். நாள் முழுக்கப் பிளாட்டுக்கு வந்துவிட்டுப் போகும் நாய்களைத் திட்டிக்கொண்டேயிருப்பார்.

கால்களை மெல்ல பாதுகாப்பாக அகற்றி தள்ளி வைத்து 4 ஆவது மாடிக்குச் சென்றேன். வெளியே குண்டு பள்ப் பகல் முழுவதும் எரிந்த களைப்பில் சோர்ந்திருந்தது. முன்வாசல் இரும்புக் கதவைத் திறக்கும்போது அது ஒருவகையான சத்தம் போடும். ஒருவேளை எனக்கு காது கேட்காமல் போனாலும் வாயால் அந்தச் சத்தத்தை எழுப்பிக் காட்டிவிடமுடியும். 

உள்ளே நுழைந்ததும் மாணிக்கவாசகத்தின் ஞாபகம் இத்துனை மணிநேரம் காத்திருந்ததைப் போல பாய்ந்து வருகிறது. அவன் இங்கிருந்த சமயங்களில் எனக்கு முன்னே வீட்டுக்கு வந்துவிடுவான். கதவைத் திறந்ததும் ஒன்று அறைக்கதவைத் திறந்து வைத்துவிட்டு கட்டிலில் படுத்திருப்பான். அல்லது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்குத் தனி வாசம் இருக்கிறது. பல நாள் மழையில் நனைந்த துணியை எடுத்து உதறினால் வரும் வாசம். எப்பொழுதும் அதுதான் அவனுடையது. அது அவனை விட்டு அகன்றதே இல்லை. 4 வருடம் அந்த வாசத்தைச் சுமந்து திரிகிறேன். இப்பொழுது அவன் இல்லை. ஆனால் வாசம் அப்படியே இருக்கிறது. அறைக்குள்ளிருந்து, குளியலறையிலிருந்து, வீட்டின் எல்லாம் மூலைகளிலிருந்தும் வீசுகிறது. துணி நாற்காலியில் மதியம் படுத்துறங்கி மீண்டும் எழுந்திருக்கையில் தலையனையில் ஒழுகியிருக்கும் எச்சில் வாசமும் அவனுடைய வாசமும் ஒரே மாதிரி ஒத்துப் போகின்றன. அப்பொழுதெல்லம் அவன் வீட்டில் இருப்பதைப் போலவே உணர்ந்திருக்கிறேன்.

மாணிக்கவாசகம் இங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வந்த சமயம் எனக்கு பயங்கரமான பணத்தட்டுபாடு. ‘ஹோம் ஸ்தேய் இருக்கா சார்?” என்ற கேள்வியுடன் வீட்டின் முன் வந்து நின்றான். அப்பொழுது பயங்கரமான மழைக்காலம். பிளாட் முழுக்க வெறிசோட்டியிருந்தது. தலையில் ஒரு பிளாஸ்டிக் பையைக் கட்டிக்கொண்டு கால்ச்சட்டையை முட்டிவரை மடித்திருந்தான். படியேறி வந்ததில் மூச்சிரைத்தது. என் பதிலுக்குக் காத்திருந்தவன், மீண்டும் முன்வாசல் கம்பியை ஆட்டி, “சார், ஹோம் ஸ்தேய்?” என முடித்தான்.

“பேரு?”

“மாணிக்கவாசகம் சார்”

“எங்க ஊரு? இங்க யேன்?”

“ஈப்போ சார். இங்க இரும்பு கேளாங்குக்கு வேலைக்கு வந்துட்டேன்”

“ஏன் இங்க?”

“பழைய போஸ் அங்குள்ளவன் சார். அவன் வரும்போது இங்க கூட்டியாந்துட்டான். ஒருவாரம் கேளாங்லே இடம் கொடுத்தாங்க. ஆனா கொசு கடி, மழை வந்தா ஒழுகுது. சரி வரலே சார். அதான் ஹோம் ஸ்தேய் தேடிக்கிட்டு இருக்கேன்”

“எவ்ள தருவெ?”

“சார் வழக்கமா 150தானே? சாப்பாடுலாம் நான் வெளில சாப்டுக்குவன் சார்”

“சில விசயம் நீ செய்ய முடியாது.. பரவாலையா?”

இலேசான சிரிப்புடன் தலை சம்மதிப்பதைப் போல அவசரமாக ஆட்டினான். அவனுக்கு என் மீதும் என் தொடர் கேள்விகளின் மீதும் நம்பிக்கை வந்துவிட்டிருந்தது. கால்சட்டையை அவசரமாகக் கீழே இறக்கிவிட்டு உள்ளே நுழைய அனுமதிக்க முடியுமா என்பது போல் பார்த்தான்.

“உன்னோடெ ஐ.சியெ காட்டு”

அடையாள அட்டையை கம்பின் இடுக்கில் நுழைத்தான். மணிக்கவாசகம் த/பெ தண்ணிமலை. இடம் ஈப்போ. அவன் சொன்னது அனைத்தும் சரியாக இருந்தது. உள்ளே அனுமதித்தேன். தலையிலிருந்து பையைக் கழற்றி வெளியே வைத்துவிட்டு குளிர் நடுக்கத்துடன் உள்ளே வந்தான். அசௌகரிகமாகக் காணப்பட்ட அவனுக்கு என்னுடைய துண்டை எடுத்து நீட்டினேன்.

“எப்பெ வரலாம் சார்?”

“சைன் போடனும்.. காசுலாம் கரட்டா கொடுத்துருவத்தானே?”

“சார் சம்பளம் போட்டோனே முதல்ல உங்க காசைத்தான் செட்டல் பண்ணுவேன்”

அவன் முகத்தில் அசட்டுத்தனமான அந்தச் சிரிப்பு அப்படியே இருந்தது. 3 வருடம் தனிமையில் கிடந்து ஒருவகை பைத்தியநிலைக்குக்கூட வந்துவிட்ட எனக்கு சட்டென ஓர் உலகமே ஜனத்திரளுடன் வீட்டுக்குள் நுழைந்து என்னை நெருக்கிக்கொண்டிருப்பதைப் போல இருந்தது. 

“முன்னாடி ரூம்ப சுத்தப்படுத்திட்டுச் சொல்றன்..நாளைக்குக்கூட வந்துடலாம்”

“சார் ரொம்ப நன்றி சார்.. தேடி தேடி காலு பழுத்துருச்சி” எனச் சொல்லிவிட்டு விடைப்பெற்ற அவன் முகத்தில் சிரிப்பு அப்படியே இருந்தது. ஒரு சிரிப்பைக் கொஞ்சம்கூட மாற்றாமல் அப்படியே தக்கவைத்திருப்பதைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இவன் வீட்டைப் பாதுகாப்பான் என நம்பவும் முடிந்தது. 

மறுநாள் ஒரு பெரிய துணி பையுடன் வீட்டிற்கு வந்துவிட்டான். காலியான அறையில் ஒரு பாய் மட்டும் வைத்திருந்தேன். துணி பையை மூலையில் வைத்துவிட்டு சுற்றிலும் பார்த்தான். சன்னலைத் திறந்து வெளியே தெரியும் காலியான வராந்தாவில் பார்வையை அலையவிட்டான். 

“ரொம்ப நல்லாருக்கு சார். நான் வேலைக்கு 7 மணிக்குலாம் ஏஞ்சி கெளம்பி 7.30 மணிக்குப் போய்டுவேன் சார்..... சாவி?”

“சாய்ங்காலம் புது சாவி செஞ்சி தரேன்”

அவன் என்னை அதன்பிறகு ரொம்பவும் கவனிக்கத் துவங்கினான். ஒரு நிழலைப் போல ஆனால் கொஞ்சம் தூரமாக என்னைக் கவனிப்பான். குளித்துவிட்டு வரும்போதும், சாப்பிடும் போதும், படுத்திருக்கும்போதும். வீடு முழுவதும் அவன் கண்கள். அவன் இல்லாதபோதும் அவன் வீட்டிலிருப்பதைப் போல உணர்ந்தேன். பல சமயங்களில் சந்தேகம் வழுத்து அவனைத் தேடுவேன். எங்கோ ஒளிந்திருக்கிறான் எனக் கோபப்பட்டுக் கத்துவேன். அசதியில் சாய்ந்த சமயம் முன் வாசல் கதவைத் திறந்து அப்பொழுதுதான் வருவான். ஆச்சர்யத்துடன் ஒரு வித்தைக்காரனை மிரண்டு பார்ப்பதாக இருக்கும் என் பார்வை. எங்களுக்கும் மிகச் சொற்பமான உரையாடலே. தொலைக்காட்சி பார்க்க அவன் வந்து உட்காரும் சமயம் ஏதாவது கேட்டு வைப்பான். என் அலட்சியம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் அவன் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவன் கவனத்தைத் திரட்டி கூர்மையாக்கி என்னை நோக்கி வீசுவதாக தோன்றும். என்றாவது கேட்டுவிடலாம் என நினைப்பேன். ஆனால் அவன் இருப்பு எனக்குத் தேவையானதாகவும் பட்டது.

மௌனம் ஒரு பரந்த இடைவெளி. அதற்குள் நுழைந்து சாக முடியும். அவன் என் மௌனத்தையும் நான் அவன் மௌனத்தையும் மாறி மாறி கவனித்துக்கொள்வோம். இருவருக்கும் ஏதோ ஒரு புரிந்துணர்வு. வாழ்வதற்கு ஒரு சிற்றிடம் போதும். அதற்குள் நம்மை மட்டும் நிரப்பிக்கொள்ளும் அறிவு போதுமானது. எனக்கொரு சிற்றிடமும் அவனுக்கொரு சிற்றிடமும் இருக்கவே செய்தன. அதற்குள் பாதுகாப்பாக இருந்தோம்.

அவன் வேலை முடிந்து வந்த ஒரு மழை நாள். வீட்டுக் கதவைத் திறந்து போட்டுவிட்டு வெகுநேரம் மழை சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சாப்பாத்தை வேகமாக உதறிவிட்டு இரும்பு கதவை படாரென அடித்துவிட்டு உள்ளே வந்தான். நான் கவனிப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் கதவை ஒழுங்குப்படுத்திவிட்டு அறைக்குள் நுழைந்தான். மழை நிற்கவில்லை. ஆதலால் வெளிச்சத்தங்களைச் சல்லடை செய்துவிட்டு காதுகளைக் கூர்மையாக்கினேன். அவன் அழுவது கேட்டது. சத்தம் போட்டே அழுது கொண்டிருந்தான். பல வருடங்களுக்குப் பிறகு நிஜத்தில் ஒருவன் அழுவதைக் கேட்கும்பொழுது உடல் என்னவோ செய்தது. உடனே அவனுடன் சேர்ந்து காரணமே இல்லாமல் அழ வேண்டும் எனத் தோன்றியது. அழுவது ஓர் ஈர்ப்பு சக்தி. முன்னாலிருப்பவனைச் சட்டென தன் வசப்படுத்தும் முயற்சி. 

கதவை இருமுறை தட்டினேன். அவனுக்கு அது ஆச்சர்யமாக இருந்திருக்கக்கூடும். மீண்டும் தட்டினேன். அழுகையை நிறுத்திவிட்டு கலங்கிய கண்களுடன் வெளியே வந்தான். அவன் கண்களை அப்படி நேர் எதிர்க்கொண்டு பார்ப்பது அதுவே முதல்முறை. கால்கள் நடுங்கின. பார்வையை அவனிடமிருந்து திருப்பி சுவரின் மீது பதித்தேன்.

“என்னா ஆச்சி?”

“அக்கா செத்துருச்சி சார்”

“கூட பொறந்தவங்களா?”

“ஆமாம். அந்த சீக்கு சார். ஏர்கனவே இருந்துச்சி. கொஞ்சம் கொஞ்சமா தின்னுருச்சி”

“கேன்சரா?”

“ம்....”

அவன் அழுகையை அதற்கு மேல் என்னால் தடுக்க முடியவில்லை. அழுதான். அன்று இரவு முழுக்க அழுது கொண்டே இருந்தான். வெறுமனே உட்கார்ந்து அவன் அழுகையைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு கணம் சோகத்தையும் மற்றொரு கணம் வெறுப்பையும் கோபத்தையும் கழிவிரக்கத்தையும் மாற்றி மாற்றி எனக்குள் பெருக்கெடுக்கச் செய்தன. எங்காவது வெளியே போய்விடலாம் எனத் தோன்றியது. ஒருவனுடைய சோகத்தில் எப்படிப் பங்கெடுப்பது? அவனுடன் இருந்தாலே போதும் என நினைத்தேன். ஆகையால், அவன் அழுகையை நிறுத்தும்வரை மௌனமாக அவனுடன் இருந்தேன். தூரத்தில். ஆனால் கவனித்துக்கொண்டிருந்தேன்.

பாயில் படுத்து அப்படியே உறங்கிப் போயிருந்தான். துக்கத்தில் இருப்பவர்களுக்குத் தூக்கம் வராது எனச் சொல்வார்கள். அருகில் சென்று அவன் வயிறு ஏறித் தணிவதைப் பார்த்தப் பிறகு மீண்டும் வெளியே வந்தேன். ஒரு பேரழுகையைத் தின்று தீர்த்துவிட்ட களைப்பில் வீடு அமைதியாக இருந்தது. மாணிக்கவாசம் முதன் முதலில் இங்கு வந்தபோது அவன் முகத்தில் அப்படியே இருந்த சிரிப்பை ஒருமுறை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும் என ஏன் எனக்குத் தோன்றியது?ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் நாற்காலிக்கு வரும்போது அவன் என் இடத்தில் அமர்ந்திருந்தான். சட்டென பயம் உடல் முழுவதிலும் அதிர்ந்து மறைந்தது. அவனுக்கு என்னுடைய உடல் சூடு தேவைப்பட்டிருக்குமா? அவன் ஒரு பூனையைப் போல அமர்ந்திருந்தான். மனித சூட்டைத் தேடி பூனை நாள் முழுக்க அலையுமாம்.

“தண்ணீ வேணுமா?”

தலையை மட்டும் ஆட்டினான். 

“நான் ஈப்போக்குப் போகனும் சார்”

“காலைலே பஸ் டேசன்லே விடட்டா?” பதிலுக்குக் காத்திருக்க முடியாதவனாக உடனே எழுந்து அறைக்குள் போய்ப் படுத்துக்கொண்டான். மீண்டும் அமைதி. அப்படியே அமர்ந்திருந்தேன். எத்தனை நேரம் துக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அவன் அறை இருண்டிருந்தது. பக்கவாட்டில் கவனித்தால் அறை காலியாக இருப்பதைப் போலவும் திரும்பி உற்றுக் கவனித்தால் மட்டுமே அவன் அங்குப் படுத்திருப்பதைப் போலவும் இருந்தது.

படாரென பாயை உதறிக்கொண்டு எழுந்து அமர்ந்துகொண்டான்.

“அக்காத்தான் என்னெ வளத்துச்சி சார்” எனச் சொல்லிவிட்டு மீண்டும் அழுதான். அவனை அப்படியே அடித்து வெளியே துரத்த வேண்டும் என நான் நினைத்த மறுகணம் எனக்கே வியப்பாக இருந்தது. துக்கத்தைப் பகிர்ந்துகொள்பவன் எப்படி இப்படியெல்லாம் நினைக்க முடியும்? அன்று இரவு அவனுக்குப் பதிலாக அவன் வழக்கமாகச் செய்யும் அனைத்தையும் நான் செய்து பார்த்தேன். பின்வாசல் கம்பியிலிருந்து பள்ளத்தைக் கவனிப்பது, சுவரில் ஒரு கையைப் பிடிக்கொடுத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்த்துக்கொண்டே நீர் பருகுவது, நாற்காலியில் சுருண்டு படுத்துக்கொள்வது எனத் தொடர்ந்து இதையே செய்து கொண்டிருந்தேன். அவன் இருப்பு பூனைகள் கால்களை உரசுவதைப் போலவே இருந்தது.

கம்பிகள் உருகி கீழே நீரைப் போல கொட்டுகின்றன. ஒரு சின்ன பையன் சைக்கிளில் உள்ளே நுழைகிறான். அவன் கால்களில் இரத்தம். பூச்செடியை உடைத்து பள்ளத்தை நோக்கி வீசுகிறான். மாணிக்கவாசகம் என் இரு கன்னங்களையும் பிடித்துக்கொண்டு, “சார் நீங்க இல்லாதப்பெ என் ரூம்புலே நான் மூத்திரம் பேஞ்சிருக்கென்” எனச் சொல்லிவிட்டு அவன் கால்ச்சட்டையை முட்டிவரை மடித்துவிட்டு உதறுகிறான். முகத்தில் நீர் சொட்டியது. சட்டென விழித்தேன். வியர்வை. நன்றாக விடிந்திருந்தது. அறையைப் பார்த்தேன். காலியாக இருந்தது. மாணிக்கவாசகம் படுத்த பாயும் அப்படியே இருந்தது. அவனே ஈப்போக்குச் சென்றிருப்பானோ என்ற ஒற்றை சந்தேகத்துடன் வேலைக்குச் சென்றுவிட்டேன். அவனைப் போய் தேடவில்லை. அப்படி ஏதும் எனக்குத் தோன்றவும் இல்லை.

அதன் பிறகு ஒரு மாதம் பல மாதங்களானது. மாணிக்கவாசகம் வரவே இல்லை. வீட்டுக் கதவைத் திறக்கும்போதெல்லாம் அவன் வாசம் அப்படியே இருக்கிறது. அவன் பாயைத் தூக்கி வீசிவிட்டேன். அவன் துணிகளையும் வீசிவிட்டேன். அவன் வாசம் உயிர்ப்பித்திருந்தது. அறை முழுவதும் மோப்பம் பிடித்தும் பார்த்தேன். அப்படி ஏதும் மூத்திரம் பெய்த வாடையும் வீசவில்லை. அவன் துணிகளிலெல்லாம் முகர்ந்து முகர்ந்து தேடினேன். அவனை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் என்னைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை மட்டும் உணர முடிந்தது.

சாயங்காலம் வீட்டுக்கு வெளியே வந்து படி இறங்கிக் கொண்டிருந்தேன். வெத்தலை பாட்டி வெளியே வந்து துடைப்பத்தால் எதையோ விரட்டிக் கொண்டிருந்தார்.

“சனியன் பிடிச்ச நாய்.. பேண்டு வைக்கறதுக்கு இடமா கிடைக்கலெ? நாத்தம் கொடலைப் புடுங்குது.”

- கே.பாலமுருகன்
நன்றி: வல்லினம் ஜூன் 2012

No comments: