5ஆம் திகதி கோலாலம்பூரில் வல்லினம் ஏற்பாட்டில் 4ஆவது கலை இலக்கிய விழா 4 நூல்களின் வெளியீட்டுடன் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. வல்லினம் ஆசிரியர் ம.நவீன், யோகி, சிவா பெரியண்ணன் மேலும் பல நண்பர்களின் ஒத்துழைப்புடன் விழாவை முன்னெடுக்க முடிந்தது. 2மணியைப் போல விழா ம.நவீனின் வரவேற்புரையுடன் தொடங்கியது. வல்லினம் பதிப்பகத்திற்கும் மற்ற பதிப்பகத்திற்குமான வித்தியாசத்தை முன்வைத்து, மற்ற மலேசிய எழுத்தாளர்கள் அதிகாரத்தின் முன் கூனி குறுகி நின்று புத்தகம் போடும் அவலத்தை அழுத்தமாகச் சொன்னார். புத்தகம் எழுதும் எழுத்தாளர்களுக்கு ரோயல்டி வழங்குவதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுப் பேசினார். அரசியல்வாதிகளை நம்பி புத்தகம் போடும் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாவை எப்படி அரசியல்வாதிகள் தங்களின் பிரச்சார மேடையாகப் பாவித்துக்கொள்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
அடுத்ததாக வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பசுபதி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பள்ளியில் யாராலும் கவனிக்கப்படாத பின் தங்கிய மாணவர்களைக் கவனப்படுத்த வேண்டிய கட்டாயம் நம்மிடம் இருப்பதாகப் பேசினார். மேலும் கலை இலக்கிய விழா தொடர்ந்து வெற்றிப்பெற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து முதலாவது அமர்வில் யோகியின் “துடைக்கப்படாத இரத்தக் கரைகள்” பத்தி தொகுப்பு வெளியீடப்பட்டது. யோகியின் நூலை பூங்குழலி விமர்சித்துப் பேசினார். யோகியின் பத்திகளைப் பூங்குழலி விரிவாகவே விமர்சனம் செய்தார். அவருக்கும் யோகிக்குமான நட்பைச் சொன்ன இடம் மிக சுவார்ஷ்யமாக இருந்தது.
யோகி தன்னுடைய உரையில் அவருக்கு எழுத்துலகில் உற்சாகமும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். உலகில் பிறந்த நாங்கள் எல்லோரும் இலக்கியத்தினால் மட்டுமே ஒன்றிணைந்துள்ளோம் என வல்லினம் நண்பர்களைச் சுட்டிக்காட்டி பேசியது மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அடுத்ததாக என்னுடைய கட்டுரை தொகுப்பான “தீர்ந்துபோகாத வெண்கட்டிகள்” வெ:ளீயிடு கண்டது. பால்ய நண்பர் காளிதாஸ் அவர்களே என் நூலை விமர்சித்துப் பேசினார். அவருக்கு உலக சினிமாவுடன் ஆழமான பரிச்சயம் உண்டு. ஆகையால் அவருடைய விமர்சனம் தெளிவான சினிமா கோட்பாட்டை முன்வைத்து வழங்கப்பட்டது. நான் என்னுடைய உரையில் இலக்கியத்திற்கும் சினிமாவுக்குமான தொடர்பையும் எனக்கும் சினிமாவுக்கான தொடர்பையும் முன்வைத்துப் பேசினேன். நான் என் வாழ்நாளில் எதிர்க்கொண்ட சிறுவர்களுக்கும், நான் பார்த்த சிறுவர் சினிமாக்களுக்கும் எப்பொழுதும் தேசம் கடந்த ஓர் ஒற்றுமையை உணர முடிந்ததைக் கூறினேன்.
தொடர்ந்து ம.நவீன் அவர்களின் பத்திகளான, “கடக்க முடியாத காலம்” தொகுப்பு வெளியீடு கண்டது. இசை ஆய்வாளரும் எழுத்தாளருமான அகிலன் அவர்கள் நூலை விமர்சித்துப் பேசினார். இதுவரை நான் கேட்ட விமர்சனங்களிலேயே அகிலனுடையது மிக வித்தியாசமாகத் தெளிவாக அமைந்திருந்தது. அவர் கட்டுரை எழுதி வாசித்ததால் அதுவே நேர்த்தியான குறை நிறைகளை ஆராய்ந்த விமர்சனமாகவும் அமைந்திருந்தது. நவீன் பேசுகையில் அவருக்கு எது கலை எனும் தேடல் காலம் முழுக்கவும் இருந்ததைப் பற்றி கூறினார். அவர் வாழ்நாளில் சந்தித்த மனிதர்கள் தாங்கள் எது கலையென நம்பியிருந்தார்களோ ஏன் அந்தக் கலை அவர்களைச் சமரசம் செய்ய வைத்துத் தோல்வியடையச் செய்கிறது என்ற கேள்வியும் மனதைப் பாதிப்பதாகக் கூறினார். தொடர்ந்து சிவா பெரியண்ணனின் கவிதை நூலான, ‘என்னை நாயென்று கூப்பிடுங்கள்” வெளியீடு கண்டது. டாக்டர் சண்முக சிவா அந்த நூலை விமர்சனம் செய்து பேசினார். அதுவே ஓர் இலக்கிய உரையாகவும் அமைந்திருந்தது. சிவாவின் கவிதையை ஆய்வு மனதுடன் அதன் அரசியல் பின்னணியையும் மேற்கோள்காட்டி சண்முக சிவா அவர்கள் விமர்சனம் செய்திருந்தார். சிவா பேசுகையில் இலக்கியத்தின் தேவையைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினார். சிவாவின் உரை மாணவர்களை நோக்கியதாக இருந்தது.
நிகழ்ச்சியின் அடுத்த அங்கமாக நூலாசிரியர்களுக்கு ரோயல்டி பணம் வழங்கப்பட்டது. இது ஒரு முக்கியமான முயற்சி மேலும் எழுத்தாளர்களைக் கௌரவிப்பதுடன் அல்லாமல் அவர்களுக்கான முக்கியத்துவத்தையும் முன்னிறுத்துகிறது. இதை மேற்கொண்ட வல்லினம் பத்திப்பகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து குழந்தை போராளி எனும் நாவலைத் தமிழில் மொழிப்பெயர்த்த எழுத்தாளர் தேவதாஸ் அவர்கள் உரையாற்றினார். புலம் பெயர் இலக்கியத்தைப் பற்றி கூறிய தேவதாஸ் இலங்கைக்கு அப்பாற்பட்டு மலேசியா மிக முக்கியமான புலம் பெயர் இலக்கியத்தைக் கொண்டிருக்கும் நாடு எனக் குறிப்பிட்டார். தொடக்கக் காலத்தில் யாழ்பானத்திலிருந்து மலேசியாவில் வந்து வேலை செய்த படித்தப் பிரிவினர் இங்கு ஓர் அதிகார இடைத்தரகர்களாக நடந்துகொண்டமைக்கு சபையோர் முன் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது மனதை என்னமோ செய்தது.
அடுத்ததாக பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் இலக்கிய உரையாற்றினார். அவருடைய உரை மிகச் சிறப்பாகவும் இலக்கியப் பரப்பை ஆழமாக சென்றடையக்கூடிய வகையில் இருந்தது. அ.மார்க்ஸ் அவர்களின் அப்பா மலேசியா தொழிற்சங்கத் தலைவரும் போராட்டவாதியுமான கணபதியின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். சுங்கைப்பட்டாணிக்கு வந்திருந்தப்போது அவருடைய அப்பாவும் கணபதியும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை என்னிடம் காட்டியிருந்தார். தொடர்ந்து ஆதவண் தீட்சண்யா அவர்கள் உரையாற்றினார். இதுவரை இங்கு உரையாற்றப்பட்ட சில முக்கியமான விசயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படும் வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.
7மணியைப் போல முடிவுற்ற நிகழ்ச்சி இம்முறை பெரும் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. 130க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விடைப்பெற்றனர். விழா முடிந்து 4 மணி நேரம் நானும் நண்பர் மணிஜெகதீசும் ஒன்றாகக் கெடாவை நோக்கி காரில் பயணம் செய்தோம். விழாவை மீட்டுணரும் வகையில் எங்கள் உரையாடல் அப்பொழுதும் தொடர்ந்தது.
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment