Wednesday, November 6, 2013

'Highland tower ' திரை விமர்சனம் - புதையுண்டுபோன மரணங்கள்

'Highland tower ' திரை விமர்சனம் 


11 டிசம்பர் 1993, சரியாக மதியம் 1மணிக்கு, உலு கிள்ளானிலுள்ள 12 மாடி கொண்ட மூன்று அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்றான 'highland tower block 1' இடிந்து தரைமட்டமானது. மலேசிய வரலாற்றில் 48 உயிர்களைப் பறித்த அந்த மறக்க முடியாத சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மலாய்த் திரைப்படம் ' highland tower'. 20 வருடங்களாக மலேசிய மக்களின் நினைவுகளில் உறைந்து புதையுண்டுபோன ஒரு துர்சம்பவத்தை இப்படம் மீண்டும் பற்பல பீதியுடன் மீட்டுக் கொண்டு வருகிறது. ஒரு சினிமா என்பது மக்களின் மனசாட்சி என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். காலத்தால் மறக்கப்படும் சில உண்மைகளை மீண்டும் விசாரிப்பதோ அல்லது நினைவுக்குக் கொண்டு வருவதோ ஒரு நல்ல சினிமாவின் செயல்பாடுகளில் ஒன்று.


highland tower இடிந்து மக்கிப் போன ஒரு 12 மாடி கட்டிடத்துடன் இருளடைந்து ஆட்களே இல்லாத நிலையில் மற்ற இரு 12 மாடி கட்டிடங்களும் திகிலுடன் 20 வருடங்களாக அங்கேயே இருக்கின்றன. இடிந்த கட்டிடத்தின் அருகாமையில் இருந்த மற்ற இரு 12 மாடி கட்டிடங்களிலிருந்தும் அந்தத் துர்சம்பவத்திற்குப் பிறகு படிப்படியாக அனைவரும் வெளியேறிவிட்டனர். ஆளே இல்லாத அந்த 200 வீடுகள் கொண்ட 12 மாடி கட்டிடங்கள் 11 டிசம்பரின் கதறலையும் இரத்தப் பழியையும் நினைவுப்படுத்திக் கொண்டும் பற்பல திகில் சம்பவங்களை ஞாபகபப்டுத்திக் கொண்டும் இருக்கின்றன. அதனைக் கதைப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்ட பேய் படம்தான் highland tower. 1998களின் இறுதிவரை அந்த இடிந்த கட்டிடடத்தை வைத்துப் பல பேய் கதைகள் பேசப்பட்டு வந்தன. மலேசியா முழுவதும் பல வருடங்களுக்கு அந்தச் சம்பவம் ஓர் ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தன. கோலாலம்பூரில் இருக்கும் என் அக்காள் ஒருமுறை இதை வைத்தே ஒரு கதையைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் பக்கமாகச் செல்லும் வாடகைக் கார்களை  அடையாளம் தெரியாத நபர்கள் நிறுத்த முயன்றிருப்பதாகவும், சிலர் வாகனத்தைத் துரத்திக் கொண்டு சில தூரம்வரை வந்திருப்பதாகவும் வாடகைக் கார் ஓட்டுனர்களால் பல கதைகள் சொல்லப்பட்டன. இது அங்குச் சில காலம்வரை வாடிக்கையாக நிகழ்ந்துள்ளது. இந்தத் துர்சம்பவத்திலும்கூட ஓர் அதிசயமான நிகழ்வு நடந்திருக்கின்றது. அது இப்படத்தில் சொல்லப்படவில்லை. 'Nur Hamidah' என்கிற பெயரைப் பலரும் மறந்து போயிருக்கக்கூடும். தரைமட்டமாக இடிந்துபோன அக்கட்டிடத்தில் 48 உயிர்களும் பழியாகிப் போக 18 மாத குழந்தையும் அதன் தாயும் மட்டும் காப்பாற்றப்பட்டார்கள். இன்று அந்தக் குழந்தை பெரியவளாகியிருப்பாள் ஆனால் மறக்கப்பட்டுவிட்டாள்.


ஒரு செய்தித் தொகுப்பில் அந்தத் துர்சம்பவத்தின்போது இறந்தவர்களின் உயிர்களைட் தேடும் பணியில் ஈடுப்பட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் அளித்தப் பேட்டியை நினைவுக்கூர்கிறேன். 


'எல்லாம் உடல்களையும் எங்களால் மீட்க முடியவில்லை. முடிந்தவரை இறந்த உடல்களை மீட்கும்போது, எங்கிருந்தோ யார் யாரோ கதவைத் தட்டும் சத்தமும், கதறும் ஒலியும் கேட்டன. ஆனால் அந்த சத்தம் வரும் திசையைப் புதையுண்டுபோன அந்த மிகப்பெரிய கட்டிடத்திற்க்குள்ளிருந்து அடையாளம் காண்பது அப்பொழுது சாத்தியமற்றுப் போய்விட்டது. கனத்த மனத்துடன்தான் எங்களின் தேடும் பணியை முடித்துக் கொண்டோம்.'ஒவ்வொரு வருடமும் சில குடும்பங்கள் அந்தக் கட்டிடம் இடிந்த நினைவு நாளின் போது அங்கு வந்து அழுதுவிட்டுப் போவதாக ஒருமுறை 'ஸ்டார்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இருண்டு மண்ணோடு மக்கிப் போன அந்தக் கட்டிடமும் ஆட்கள் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட மற்ற இரு கட்டிடங்களும் கணமான நினைவுகளையும் மரணத்தின் சாட்சியங்களையும் சுமந்து கொண்டு இன்னமும் கோலாலம்பூர் ஹீல் வீயுவ் பகுதியில் இருந்து வருகின்றன. 


இந்தக் கட்டிடம் தொடர்பான வழக்கில் என்ன முடிவு கிடைத்தது எனத் தெரியவில்லை. ஆனால், மண் சரிவுத்தான் இந்தச் சம்பவத்திற்குக் காரணமென்றால் அத்துனை மேடான பகுதியில் மண் கெட்டித்தன்மை ஏன் அத்தனை உயரமான அடுக்குமாடிகள் கட்டப்படுவதற்கு முன் ஆராயப்படவில்லை. ஒருவேளை அன்று அக்க்கட்டிடத்தில் 100 வீடுகளிலும் சராசரி ஒருவர் இருந்திருந்தால் மரண எண்ணிக்கை என்ன ஆகியிருக்கும்? 


இப்படி அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும் ஆராயவும் சொல்லவும் பல விசயங்கள் இருக்க, இதையெல்லாம் விசாரிக்காமல் மக்கள் காலம் காலமாக நம்பி வந்த அந்த இடத்தில் உலாவும் பேய்கள் தொடர்பாகவும் கட்டுக்கதைகள் தொடர்பாகவும் இப்படம் சொல்லிச் செல்வதில் அதிருப்தித்தான். இருப்பினும் ஒரு சராசரியான பேய் படம் என்பதைவிட இப்படத்தில் கையாளப்பட்டிருக்கும் சில உத்திகள், ஒளிப்பதிவு உத்தி கவர்கின்றது. ஏற்கனவே 'REC' எனும் கொரியா படத்தில் கையாளப்பட்ட கேமரா உத்தியே இப்படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


உலு கிள்ளானில் இடிந்துபோன அந்த அடுக்குமாடிகள் உள்ள இடத்தைச் சுற்றியுள்ள மற்ற தனித்தனி வீடுகளில் உள்ளவர்கள் பலரும் தன் சொந்த வீடுகளைவிட்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இது ஏன்? படத்தைப் பார்க்கும்போது அதன் காரணம் விளங்கலாம்.


காலம் எதையுமே தன்னுடைய பதிவுகளிலிருந்து நீக்குவதே கிடையாது. 


- கே.பாலமுருகன்

No comments: