Friday, June 7, 2013

2012ஆம் ஆண்டின் கவனம் பெற்ற நல்ல தமிழ் திரைப்படங்கள்2012 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் விமர்சகன் அல்லது பார்வையாளன் என்கிற முறையில் பலர் அந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களை வரிசைப்படுத்தினார்கள். அவர்களின் வரிசைப்படுத்தல்களுக்குப் பலவிதமான பின்புலம் இருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாம் படங்களையும் ஒரே விமர்சனப் பார்வையில் வைத்து மதிப்பிடுவது தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சாத்தியமில்லை. 

2012ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களைப் பல வகைகளில் பிரித்து விமர்சிக்க வேண்டும். விஜய் விருது விழாவிலும் கூட முக்கியமான படங்கள் ஏதும் விருதுகள் பெறாமல் போனதற்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன். மக்கள் இரசனையை முன்னிட்டுத்தான் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என கட்டாயம் நேர்ந்தால் கண்டிப்பாக விஜய் படமான 'துப்பாக்கி' படத்திற்குத்தான் அனைத்து ஓட்டுகளும் போய் சேரும். ஆனால், சமரசமே இல்லாத தீவிர விமர்சனப் போக்கில் தமிழ்ப்படங்களை அணுகினால் மட்டுமே சல்லடை செய்து மிக முக்கியமான கலையையும் சமூகப் பொறுப்புமிக்க படங்களையும் அடையாளம் கண்டு மக்களின் இரசனையைப் புதுப்பிப்பதோடு சினிமா இயக்குனர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்க இயலும். இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்கிற புத்திமதியாக விமர்சனம் ஒருபோதும் இருக்கக்கூடாது. காரணம் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அல்லது கலை மட்டும் அல்ல, அது ஒரு தொழிலும்கூட.

இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்துப் படங்களுமே 2012ஆம் ஆண்டில் வெளிவந்த தவிர்க்க முடியாத பாதிப்புகளைக் கொடுத்த படங்கள் ஆகும். ஆகையால், வழக்கு எண் 18/9, பீட்சா, சுந்தரப்பாண்டியன், ஆரோக்கணம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், அட்டக்கத்தி என அனைத்துமே வரிசைப்படுத்த முடியாதபடிக்கான நல்ல படங்கள். 

'வழக்கு எண் 18/9' என்ற படத்தில் கமர்சியல்த்தனங்களுக்கான சமரசமே இல்லாமல் சமூகப் பொறுப்புமிக்க நேர்மையுடன் அளிக்கப்பட்ட படமாகும். நகர்ப்புற மேல்தட்டு மக்கள் எப்படி விளிம்புநிலை மனிதர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்கிற நிதர்சனத்தைக் காட்டிய படம்.

மாறுப்பட்ட திரைக்கதை, கதைக்களம் என்கிற விசயத்திற்காக ' பீட்சா' முன்னிலை பெறுகின்றது. குறும்படம் வட்டத்திலிருந்து நல்ல ஆக்கங்களைப் படைத்த அனுபவத்தோடு திரைக்கு வந்த இளம் இயக்குனர் கார்த்திக் அடுத்த தலைமுறை இயக்குனர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார். வெறும் காதல், பேய் என ஆரம்பக்கால இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கும் கதையோடு சுருங்கிப் போய்விடாமல் மாற்று முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி அடைய முடியும் எனக் காட்டியிருக்கிறார். பேய்கள் என்பது வெறும் நம்பிக்கையா அல்லது தலைமுறை தலைமுறையாக ஆழ்மனத்திற்குள் கடத்தப்படும் ஒரு நடத்தையா என்கிற விசாரணையைப் படத்தின் வழி உணர்த்தியிருக்கிறார்கள்.

ஆரோக்கணம் - ஒரு பெண் இயக்குனர் தனது அடையாளத்தைப் பதிக்க முயன்ற ஒரு நல்ல திரைப்படம் இது. '3' படத்தில் நெகட்டிவ் தோரணையில் காட்டப்பட்ட bipolar மனநோயை, பாசிட்டிவ் தோரணையில் இயக்குனர் இப்படத்தில் காட்டியிருப்பதே சமக்காலத்தின் தேவையை உணர்த்தியது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - இதுவரை அடுத்தவரை இழிவுப்படுத்தி, அல்லது சுயவதை செய்து கொள்வதன் மூலம், இரட்டை அர்த்தமிக்க வார்த்தைகளின் மூலம் மட்டுமே நல்ல நகைச்சுவையைக் கொடுக்க முடியும் எனக் காட்டப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் வாழ்விற்குள்ளிருந்து யதார்த்தமான வகையில் நகைச்சுவையை முன்னெடுக்க முடியும் என எந்தக் கமர்சியல் சமரசமும் இன்றி இயக்கப்பட்ட படம் இது. மூன்றே இடங்கள்தான், வீடு, திடல், மருத்துவமனை, கல்யாண மண்டபம். மேலும் பலமுறை உச்சரிக்கப்படும் ஒரே வசனம், 'என்னாச்சி....'. ஆனால் இவையாவும் பார்வையாளனுக்குச் சலிப்பை ஏற்படுத்துவதில்லை. இதுவே படத்தின் வெற்றி.

சுந்தரபாண்டியன் : மதுரை என்கிற நிலப்பரப்பின் கதையை, மொழியை, மக்களை அசலாகக் காட்ட முயன்றதற்காக நல்ல படம் என்கிற கவனத்தைப் பெறுகின்றது. இதிலுள்ள சில கமர்சியத்தனங்களை நீக்க்விட்டால் இப்படம் ஒரு வட்டார மக்களின் படமாகக் கருதக்கூடும். இதில் வரும் ஒவ்வொரு முகமும் மதுரையை ஞாபகப்படுத்துகிறது.

அட்டக்கத்தி: அட்டக்கத்தியால் காயத்தை உண்டாக்க முடியாது.போலியாக வாழ்வதுதான் பலர் கண்ட நிதர்சனம். எந்தவித பம்மாத்தும் இல்லாமல், பிரமாண்டமான சித்தரிப்புகளும் இல்லாமல் இதுதான் வாழ்க்கையின் நிதர்சனப் பகுதி எனக் காட்டப்பட்டுள்ள படம் இது. நகர்மயமாக்கல் கிராமத்தில் வாழும் இளைஞர்களின் வாழ்க்கைக்குள் எத்தனைவிதமான போலித்தனங்களை உருவாக்கியுள்ளது என்பதற்கான சாட்சியாகிறது இப்படம்.

இவையனைத்து படத்தையும் எந்த ரீதியிலுமே வரிசைப்படுத்த இயலாது. அப்படி வரிசைப்படுத்தினால் அது போலியான பல சமரசங்களுக்கு ஆளான விமர்சனமாகத்தான் இருக்கும். ஆகவே, இந்தக் குறிப்பிட்ட படங்களை ' 2012ஆம் ஆண்டில் தனித்தனி காரணங்களுக்காகக் கவனம் பெற்ற படங்களாக' அடையாளப்படுத்த மட்டுமே முடிகின்றது. - 


கே.பாலமுருகன்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமாக இருந்த வகையில் குறிப்பிட்ட சில படங்கள் நன்றாக இருந்தன...

chola.nagarajan said...

நல்ல ஆய்வு, தொடர்க இப்பணி.