Friday, January 31, 2014

மலேசிய சீனத்திரை விமர்சனம்: The Journey

A Malaysian Chinese Director Chiu's 'The Journey' , wonderful performance. Came out with the tears.....its realy the journey of the past life with 'pokok pondan, Uncle si Lembu, Hot Balloon, shangai Hotel, SJKC San Beng Baling and Fatimah'.

The great day படத்தின் இயக்குனர் Chiu அவர்களின் இவ்வருடத்தின் சீனப்படம்தான் 'the journey'. இங்கிலாந்தில் படிக்கும் தன் மகள் அவளுடைய காதலான வெள்ளைக்காரர்(பெஞ்சி)-யை அழைத்துக் கொண்டு கேமரன் மலையில் வசிக்கும் தன் 

அப்பாவைக் காண சீனப்பெருநாளுக்கு முந்தைய நாள் வந்து சேர்கிறாள். கதை இங்கிருந்துதான் துவங்குகிறது.

சீனக் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத ஒருவரைத் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லாத வயதான அப்பா, வேறுவழியின்றி அந்த வெள்ளைக்காரருடன் தன் மகளின் திருமண விருந்து அழைப்பிதழை எடுத்துக் கொண்டு தன் பால்ய சிநேகிதர்களைத் தேடிச் செல்வதுதான் கதையின் மையம். சீனர்களின் மத நம்பிக்கைப்படி மாப்பிள்ளையுடன் விருந்து அழைப்பிதழைக் கொடுக்கச் செல்வது அவசியமாகும். அதன்படி பெஞ்சியும் அங்கிள் லீயும் மோட்டாரில் கேமரனிலிருந்து பாலிங் கெடாவரை பயணம் செய்கிறார்கள். பால்ய காலத்தில் பாலிங் தேசிய சீனப்பள்ளியில் தன்னுடன் படித்த வகுப்பு நண்பர்களைக் காணச் செல்வதாகப் படம் அழகியலுடன் நீள்கிறது.



தன் மூத்தப் பையன் தற்கொலை செய்து இறந்துவிட்டதால் மனம் பிறழ்ந்து சக்கர நாற்காலியிலேயே முதியோர் இல்லத்தில் வாழும் நண்பர், பக்கவாதத்தால் தன் மரணமுறும் நண்பர், குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் தோழி பாத்திமா என அங்கில் லீ தன் முந்தைய பள்ளிக்கால நண்பர்களின் வாழ்க்கைக்குள் மீண்டும் பயணிக்கிறார். இதுதான் வாழ்வின் தொடுதல் என உணர்கிறேன்.

அடுத்ததாக, படம் மிகவும் மேலோட்டமாக மத அரசியலைப் பேச முற்பட்டுள்ளது. சீனர்களின் மதப் பிடிமானங்களை முன்னே வைத்து நவீனமயமாக்குதலுக்கு அவர்களின் முன்னோர்களின் மனநிலையைத் தயார் செய்வதே படத்தின் இன்னொரு அரசியல். மதக் கலாச்சாரத்துடன் இருக்க நினைக்கும் அப்பாவைப் படம் ஒரு தாராளமயமாதலுக்குத் தயார் செய்கின்றது. ஏறக்குறைய உலகமயக்காக்குதலை ஒரு சராசரி மனிதனுக்குள் திணிக்க வேண்டுமென்றால் முதலில் அவனுடைய மத இறுக்கங்களைத் தளர்த்திட வேண்டும் என்பதே படத்தை முன்வைத்து நாம் உணரக்கூடியவை. ஆனால், மத இறுக்கங்களைத் தளர்த்திவிட்டு உலகமயமாக்குதலில் கரைவது என்பதும் விமர்சனத்திற்குரியவையே. அதனை ஓர் அன்பின் முன் வைத்துப் பேசாமல் விட்டுச்செல்வதும் ஆபத்தானதே. உலகமயமாக்குதலுக்கு முன் அன்பைப் பெரும் சக்தியாகப் பேச முற்பட்டு அதன் பின்னணியில் இருக்கும் அடையாள அரசியலைப் பேசாமல் படம் நீண்டு முடிவதே இதன் பலவீனம்.

ஒளிப்பதிவிலும் நடிப்பிலும் காட்சி அமைப்பிலும் சீனப்படங்கள் மலேசியாவில் முன்னணியில் இருப்பதற்கு இப்படம் உதாரணம். கேமரனன் மலையின் அழகையும் குளிர்ச்சியையும் மலைமேடுகளின் ஒழுங்கையும் துல்லிதமாகப் படமாக்கியுள்ளார்கள். சீனப்பெருநாளுக்கு முந்தைய பினாங்கின் கொண்டாட்டங்கள், இரவு வழிபாடுகள், மலையோரத்தில் வாழும் சீனர்களின் வாழ்க்கை, 60களின் பாலிங் கெடாவிலுள்ள சீனப்பள்ளி, எனப் படம் மலேசியத்தன்மைமிக்க வாழ்வியலைக் காட்சிப்படுத்தத் தவறவில்லை. வசனங்கள் படத்தை மேலும் வலுவாக்கின்றன.

"சக்கரத்தைப் போலத்தான் மனித வாழ்க்கையும் என்றாவது பம்சிட் ஆகிவிடும்"

"கோழி தலையைச் சாப்பிடுவது எங்களுக்குப் பந்தாங், நீ அதைச் சாப்பிட்டதனாலேத்தான் உனக்கு இவ்ள பிரச்சனை"

"உங்க வீட்டுலே நடக்கவிருக்கற கல்யாணத்தைவிட உங்களுக்கு உங்க நண்பனின் இறப்பு பெருசா தெரியலையா? பந்தாங் பந்தாங் எனச் சொல்லிட்டு இப்படி ஆயிட்டீங்க?"

ஒரு யதார்த்தமான படத்திற்குத் திரையரங்கில் இத்தனை பேர் கூடுவது அவர்கள் மலேசியப் படைப்பிற்குக் கொடுக்கும் ஆதரவைக் காட்டுகிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம். சீனப்பெருநாள் வாழ்த்துகள்.

- கே.பாலமுருகன்

No comments: