நாம் குழந்தைகளிடம் விளையாட கொடுப்பது ஒரு குட்டி வன்முறையின் துவக்கத்தையே. விளையாட்டுத் துப்பாக்கி, விளையாட்டு ஆயுதங்கள், விளையாட்டு இராணுவப்படை என அரசுக்கு உகந்த சாதகமான ஒரு போர் மனநிலையே குழந்தைகளிடம் விதைக்கப்படுகிறது.
5 வயதில் விளையாட்டுத் துப்பாக்கியை நம் வீட்டுப் பிள்ளை எடுத்துச் சுடும்போது கைத்தட்டுக்கிறோம். அதே பையன் தனது 20ஆவது வயதில் துப்பாக்கியை எடுக்கும்போது நடுங்குகின்றோம். மிகப்பெரிய உடல் வதையை நகைச்சுவையாகக் காட்டக்கூடிய 'Tom and Jerry' கார்ட்டூனைத்தான் பார்த்துப் பார்த்து நம் வீட்டுக் குழந்தைகள் வளர்கிறார்கள். டோம் நாயிடமும் பிறரிடமும் சிக்கி உடல் சிதையும் காட்சிகளையே நம் குழந்தைகள் தீவிரமாக இரசிக்கத் துவங்குகிறார்கள். அவர்களின் இரசனை மிகவும் விளையாட்டாக வன்முறையை நோக்கியே வளர்க்கப்படுகின்றது.
அமெரிக்கன் நகைச்சுவை வீடியோக்களைப் பார்த்து நாம் சிரித்துக் கைத்தட்டுவது மிகவும் வாடிக்கையான ஒன்று. ஆனால், அந்த அமெரிக்கன் funniest videos என்பது முற்றிலும் ஒரு நபர் அடையும் விபத்து அல்லது காயத்தையே சார்ந்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் கீழே விழுவதையும், நாற்காலியிலிருந்து தடுமாறி விழுவதையும்தான் நகைச்சுவையாகக் காட்டுகிறார்கள். நாமும் பிறரின் வேதனைகளை இரசிக்கத் துவங்குகிறோம். அல்லது சாமர்த்தியமாக சக மனிதனின் துன்பத்தைக் கண்டு சிரிக்கும் நுகர்விற்கு ஆளாக்கப்படுகிறோம். குழந்தைகளாக இருக்கும்போது அந்த நுகர்விற்குள் வைத்தே வளர்க்கப்படுவதே இந்தப் பழக்கத்தின் நியாயம்.
அடித்து நசுக்கப்படுவதும், சுட்டுச் சிதைக்கப்படுவதும், தலை நசுவங்குவதும், தீயிட்டுக் கொழுத்தப்படுவதும், குண்டு வைத்துத் தகர்க்கப்படுவதும், நிஜத்தில் இல்லாமல் ஒரு கார்ட்டூனில் காட்டப்படுவதை அரசும், சமூகமும் அனுமதித்தே வந்துள்ளது. சிறுவர் பருவத்தை எய்தும் ஒரு பையன் இன்னொரு பையனை அடித்துக் காயப்படுத்துவதை ஒரு குற்றச்செயல் எனச் சொல்லும் சமூகம், பள்ளிக்கூடம், நிர்வாகங்கள், காலம் முழுக்க அந்தப் பையனின் உலகிற்குள் அனுமதித்து வைத்திருந்தவைகள் யாவை?
சிறுவர்களின் உலகை மீள்வாசிப்பு செய்ய வேண்டிய நிலையிலே அனைவரும் இருக்கிறோம். வெறுமனே அவர்களின் உலகை நாம் கடந்துபோய்விட முடியாது. ஒரு சமூக குற்றங்கள் அதுவாகத் திடீரென முளைத்துவிடாது. அது உரமிட்டு கொஞ்சம் கொஞ்சமாகவே வளர்க்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். குழந்தைத்தனங்களைக் கொன்றுவிட்டே நாம் குழந்தைகளை வளர்க்கத் துவங்கிறோம்.
- கே.பாலமுருகன்
No comments:
Post a Comment