நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த கொசு சட்டென நுழைந்துவிடும். நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கக்கூடும். தைப்பிங் நாலு ரோடு பக்கம் எந்த மூலையிலாவது என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கழுத்துப்பட்டை ஒன்றை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு முன்சட்டையின் கீழ்ப்பகுதியில் பிதுங்கி நிற்கும் தொப்பையுடன் முகமும் தலையும் வியர்த்துக்கொட்ட முன் சொட்டையில் மிஞ்சியிருக்கும் கொஞ்சம் முடியும் ஒட்டிப் படிந்திருக்க உணவுக்கடைகளிலோ அல்லது ஓல்ட் டவுன் கோபி கடையிலோ சிலருடன் என்னைப் பார்த்திருக்கக்கூடும்.
நாளை எனக்கு ஒரு குறிப்பிட்ட நெட்வர்க்கில் அதிகம் சாதனை படைத்ததற்காக ‘டமைண்ட்’ விருது கிடைக்கவிருக்கிறது. அதனால் ஏன் நான் என் காருக்குள் நுழைந்துவிட்ட ஒரு கொசுவுடன் போராட வேண்டும் எனும் கேள்வி என் பின் மண்டையை ஓங்கி அடிக்கிறது. 5 வருடத்தில் என் இரண்டு கால்களும் ஒரு பம்பரமாகி சுழன்றதை அருகாமையில் இருந்து உணர்ந்திருக்கிறேன். டைமண்ட் விருது என்பது அத்துனைச் சாதாரணமானது அல்ல. எம்.எல்.எம் வியாபாரத்தில் ஆக உயர்ந்த நிலை. எனக்கொரு விலையுயர்ந்த கார் பரிசாகக் கிடைக்கும். அதை நான் மேடையில் ஏறி வாங்கும்போது என் முகத்தில் இன்னும் மேலே செல்ல வேண்டும் என்ற குரூரம் தெரியக்கூடும். ஆனால் இப்பொழுது இந்தக் கணம் என் காருக்குள் என் அனுமதியில்லாமல் நுழைந்த இந்தச் சிறிய கொசுவை நசுக்கிவிட வேண்டும். அதுவே மிகச்சிறந்த விருது என நினைக்கிறேன்.
“கொசு நாயெ…உன்ன பிடிச்சி தரையோட தரையா நசுக்கி..எச்சித் துப்பறேன் பாரு”
எங்காவது எப்பொழுதுதாவது நீங்கள் என்னைத் தற்செயலாகப் பார்த்திருக்கக்கூடும். சமிக்ஞை விளக்கில் நிற்ககூட பொறுமையில்லாமல் ஒரு கார் சட்டென பாய்ந்து செல்வதையோ, அல்லது சிறுவர்களோ முதியவர்களோ குறுக்கே போவதைக்கூட பொருட்படுத்தாமல் அவர்களுக்குத் திகிலைக் கொடுக்கும் வகையில் ஒரு கார் போவதையோ நீங்கள் பார்க்க நேர்ந்தால், அது வேறு யாரும் அல்ல. நான் தான். என் பெயர் குமாராசாமி. எல்லோரும் குமார் என்றுத்தான் அழைப்பார்கள். ஆனால் பெரும்பாலும் என்னை என் நண்பர்கள் சுற்றத்தார் எனப் பலர் ஒரு 24 மணி நேர ஏஜேண்ட் என்றுத்தான் கிண்டலாக அழைப்பார்கள். என்னிடம் எல்லாமும் இருந்து நான் தவித்து தாறுமாறாக அலைக்கழிக்கப்படுவது நேரத்திற்கு முன்னாடித்தான். என் கைவசம் இல்லாதது நேரம் மட்டுமே.
“நேரத்தை எவன் மிச்சப்படுத்தி அதைக் காசு சம்பாரிக்கப் பாவிக்கறனோ அவந்தான் கெட்டிக்காரன்” என அப்பா முன்பெல்லாம் அடிக்கடி சொல்வார். வீட்டில் நாள் முழுக்க அந்த வேதாந்தம்தான் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி அவர் சொல்லிக்கொண்டிருக்கும் பொதெல்லாம் வீட்டில் இருக்கும் கொசுக்களைப் பிடித்து சுவரில் வைத்து நசுக்கித் தேய்த்துக் கொண்டிருப்பார். அது அவருக்குப் பின்னாளில் ஒரு பழக்கமாகவே இருந்தது.
அவர் அறை முழுக்க இரத்த வாடையாக இருக்கும். சுவரெல்லாம் இரத்தக்கோடுகள். கொசுக்கள் நசுக்கப்பட்டு சுவரில் தேய்க்கப்பட்ட கோடுகள். அப்பா அங்கேதான் அமர்ந்திருப்பார். அவர் ஒரு தோல்வியடைந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர். பள்ளிக்கூடத்தைத் தவிர அவருக்கு வேறு எதுமே தெரிந்ததில்லை. ஒரு அரைப்பலகை வீட்டைத்தவிர அவருக்குச் சொத்து ஏதும் இல்லை. அம்மாவின் மரணத்திற்குப் பின் அப்பா வீட்டையும் மறந்துபோனார். வீட்டிற்கு வராமல் எங்காவது வெளியில் படுத்துக் கிடப்பார். போய் நாள் முழுவதும் தேடி அலைந்து கண்டுப்பிடித்து அழைத்து வருவோம். பணி ஓய்வுக்குப் பிறகு வீட்டில் இருக்கும் பிள்ளளகளிடமும் பேசுவதை நிறுத்திக்கொண்டார். அப்பா அவர் அறைக்குள் அடைப்பட்டே கிடந்தார். அவருக்கு வெளிச்சம் இல்லாத ஒரு சூழல் பிடித்திருந்தது. எப்பொழுது அறைக்கதவைத் திறந்து அவரிடம் பேச நினைத்தாலும் உடனே தயாராக வைத்திருந்ததைப் போல “போய் சம்பாரிக்கற வழியெ பாரு…” எனத் துரத்திவிடுவார். அவர் விரும்பிய இருளுக்குள் அவர் இருப்பதற்கு அடையாளமாகக் கொசுக்கள் அடித்து நசுக்கப்படும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டே இருக்கும். முதலில் அது அப்பாவை ஒரு பயங்கர வெறிப்பிடித்தவராகக் காட்டினாலும் நாளடைவில் அந்தச் சத்தம் வழக்கமானதாக மாறியது.
இப்பொழுது இந்தக் காருக்குள் இருக்கும் அந்த ஒரே ஒரு கொசுக்கூட என் வீட்டிலிருந்து காருக்குள் நுழைந்ததாக இருக்கலாம். அப்பாவிடமிருந்து தப்பித்து வந்ததாகவும் இருக்கக்கூடும். இன்னும் 20 நிமிடத்தில் நான் ஒரு வாடிக்கையாளரைச் சந்தித்தாக வேண்டும். வழக்கம்போல வாகன நெரிசலில் கொடுக்கும் எரிச்சலைவிட இந்தக் கொசு, ஒரு சிற்றுயிர் இங்கே உள்ளே இருந்துகொண்டு என்னைப் பயங்கரமாக இம்சிக்கிறது. அதன் ஓசை, காதுக்குள் சட்டென புகுந்துபோக நினைக்கும் முயற்சி, அதன் இருப்பு, எரிச்சலை அதிகரிக்கிறது.
எனக்கு குறைந்தது 4 கைகள் வேண்டும். இரண்டு மிகப்பெரிய பற்றாகுறையாக உள்ளன. என்னை நீங்கள் எங்கேயும் பார்த்திக்க வாய்ப்பே இல்லை என்று சொல்ல நினைத்தாலும் அது மகா பொய்யாக இருக்கக்கூடும். சொந்தமாக உணவுக்கடை வைத்திருக்கிறேன். காலையில் 6 மணிக்கே தைப்பிங் நகரத்தில் அது இயங்கத் துவங்கிவிடும். குமார் உணவகம். அங்கு அன்பான உரையாடலைத் தவிர வேறு எல்லாம் வசதியும் உண்டு. ஒரு வேலையாள் சாப்பிட வரும் ஒருவரிடம் ஒரு நிமிடம் பேச மட்டுமே அனுமதி. அதுவும் சாப்பிட ஆர்டர் எடுத்து முடிப்பதற்கான நேரம் அது. அதற்கு மேல் ஒரு வேலையாள் அதிக நேரம் ஒரு மேசையினருகே நிற்கக்கூடாது. குறிப்பாகச் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களிடம் முகம் கொடுத்துச் சிரிக்கக்கூடாது. நேரம் மிச்சப்பட வேண்டும். அதிக வேலையாள் இல்லாத ஓர் உணவகம் அது. காசை மிச்சப்படுத்துவது என்பது ஒரு சாமர்த்தியமான ஆன்மீகம்.
கடையைச் சாத்திவிட்டு உடனே என் எம்.எல்.எம் அலுவலகத்திற்குப் போயாக வேண்டும். குறைந்தது ஒரு வாரத்தில் இரண்டு பட்டறைகளை வழிநடத்த வேண்டும். புதியதாக ஏஜேண்டுகளாகச் சேரும் இளைஞர்களுக்கு நான் தான் வழிகாட்டி. என் அலுவலகத்தின் கிளையிலிருது பயிற்சிப் பெற்று இன்று சாதனை படைத்திருப்பவர்கள் ஏராளமானோர் என்றால் என் அலுவலகத்தின் ஆற்றலை நினைத்துப் பாருங்கள். அப்படிப்பட்ட என் காருக்குள் ஒரு சிறிய கொசு, சிரமமே இல்லாமல் கொஞ்சம் நசுக்கினாலும் செத்துப் போகும் எளிய பூச்சி, எப்படி நுழைய முடியும்? இன்றைக்குள் அதாவது நான் போய்ச்சேர்வதற்குள் இந்தக் கொசுவைக் கொன்றாக வேண்டும்.
“ஏஜேண்டுனா ஒரு மிஷின் மாதிரி இருக்கனும்.. கிளைண்டு கூப்டா பம்பரமா பறந்து போகணும், எவ்ள துக்கத்துலெ இருந்தாலும் கொஞ்சம்கூட முகம் காட்டக்கூடாது, பொய்யா சிரிக்கணும், ஆனால் சிரிச்சா போதும்” என நான் கூறும்போது அன்றைய இளைஞர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். அவர்களின் புருவங்களை வளைக்க வேண்டும் என்பதே என் பேச்சின் நோக்கம். எம்.எல்.எம் கூட்டு வியாபாரங்கள் தலைவிரித்து ஆடிய ஒரு காலக்கட்டத்தில் நான் தான் இங்கு கிங் மேக்கர். எனக்குக் கீழே 36 கிளைகளை உருவாக்கி ஒவ்வொரு இளைஞனையும் 24 மணி நேரமும் உழைக்க வைத்தேன். எம்.லெல்.எம் கூட்டு வியாபாரத்திற்குக் கணக்கே இல்லை. நாம் கைத்தொலைப்பேசிக்கு ரிலோர்ட் பண்ணுவதில்கூட ஒரு எம்.எல்.எம் வியாபார நிலை பரவியுள்ளது.
“உனக்குக் கீழே ஒரு பத்து பேரெ சேத்துவிடு. அவன் நாய் மாதிரி உழைப்பான். உழைக்கட்டும். நீ உக்காந்துட்டுத் தின்னலாம். அதான் எம்.எல்.எம் வியாபாரம்.. பிறகு ஒரு நாள் நமக்குக் கீழெ உள்ளவனுக்கு எந்த இலாபமும் இல்லாமல் போய்டும். நெட்வர்ட் செத்துப் போய்டும். அதான் எம்.எல்.எம் தந்திரம். அதுக்குப் பெறகு நீ அடுத்த நெட்வர் ஆரம்பிச்சி திரும்பியும் ஆசை வார்த்த காட்டி ஆள் சேர்க்கனும். இது செத்துட்டா மீண்டு புது ஆளுங்களோடெ வேற எடத்துலே முளைக்கனும். அதான் எம்.எல்.எம்.” எனச் சொல்லும் ஒரு சாமார்த்தியசாலியை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருக்கக்கூடும். என் பேச்சு இந்த நகரமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கையில் உங்களுக்கு மட்டும் எப்படிக் கேட்காமல் போயிருக்கும்? உங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை நான் மன்னித்துவிடுகிறேன். ஆனால், ஒரு சிற்றுயிரான இந்தக் கொசுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? எனக்கு சிறுவயதிலிருந்தே கொசுவைப் பிடிக்காது. எனக்கு மட்டுமல்ல யாருக்குமே கொசுவைப் பிடிக்காது. விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள் மட்டுமே வாழப்போகும் ஒரு கொசுவிற்கே இத்தனை துணிச்சல் என்றால் நான், எம்.எல்.எம் வியாபாரத்தின் சாதனையாளன், எனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்திருக்கும்?
இன்னும் சாலை இருக்க இருக்க நெருக்கடிக்குள்ளானது. ஒரு வாகனத்தை இன்னொரு வாகனம் முடிந்தால் இடித்துத் தள்ளிவிட்டுப் போய்விடலாம் என்பதைப் போன்று நெருக்கடி. ஒரு எம்.எல்.எம் வியாபாரிக்கு இதுபோன்ற சாலை நெருக்கடி பயங்கர உவாதை. என் பொறுமையைப் பரிசோதிக்க நான் எப்பொழுதுமே அனுமதியளிக்க மாட்டேன். கார்களின் தொடர்ச்சியான ஹார்ன் சத்தமும் காருக்குள் இருக்கும் கொசுவின் இரைச்சலும் 5 மணி வெயிலுக்கு என்னை இரண்டாகப் பிளந்தது. ஒரு வெறிப்பிடித்த மிருகமாக என்னை உணர்ந்தேன். அந்தக் கொசுவை இப்பொழுது நசுக்குவதற்குப் பதிலாக வாயில் போட்டுக் கடித்துத் தின்ன வேண்டும் எனத் தோன்றியது. வெறிக்கொண்டு தேடினேன். பார்வைக்குள் சிக்காமல் வேறு எங்கோ ஆனால் காருக்குள்ளே மறைந்து மறைந்து பறந்து கொண்டிருந்தது.
எம்.எல்.எம் வியாபாரம் நிறைய கிளைகள் கொண்டது. ஒரு பெரிய நெட்வர்க். குறைந்தது 300 – 400 பேர் அந்த நெட்வர்க்கில் கடுமையாக உழைத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு எம்.எல்.எம் வியாபாரத்தின் மிகச் சிறந்த நுணுக்கமே வசியப்பட பேசத் தெரிந்திருக்க வேண்டும். பேச்சு மட்டுமே மூலதனம். விற்பதற்கு அவன் சாமர்த்தியசாலியாக மட்டுமல்ல பேசத் தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும். ஆள் பிடித்துத் தரும் வேலைக்குச் சரியான தகுதிப்பெற்றவனிடம் மட்டுமே தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும். என் 5 வருடக் காலத்தில் நான் அப்படித்தான் ஆட்களைத் தேர்வு செய்தேன். முதலில் அவன் பலரிடமும் கலகலவென பேசக்கூடியனாக இருக்க வேண்டும். அடுத்தது அவனுடைய நட்பு வட்டம் பெரியதாக இருக்க வேண்டும். இது இரண்டு இருந்தாலே அவன் எம்.எல்.எம் வியாபாரத்திற்குத் தகுதியானவனாகின்றான்.
பெரியப்பா மகன்கள், மாமா மகன்கள் என அனைவரையும் சென்று காணத் துவங்கினேன். பெரும்பாலும் சொந்தக்காரர்களிடம் பேசக்கூட தயங்குபவன் நான். ஆனால் ஒரு எம்.எல்.எம் வியாபாரிக்கு மானம் சூடு சொரனையெல்லாம் கூடாவே கூடாது. தன் அனைத்துக் கொள்கைகளையும் விடத் தெரிந்த ஒரு எம்.எல்.எம் வியாபாரியினால் மட்டுமே வெற்றிப்பெற முடியும் என நம்பினேன். ஆகையால் யார் எவர் எனப் பார்க்காமல் அனைவரிடமும் பேசினேன். சிலர் கால அவகாசம் கேட்டார்கள். சிலர் உடனே சேர்ந்து உழைக்கத் துவங்கினார்கள். உழைக்கத் துவங்குபவர்களிடம் தொடர்ந்து ஆர்வமூட்டும் வகையில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர்களின் வெறி குறைந்துவிடக்கூடாது. அது கொஞ்சம் அடங்கினாலும் நெட்வர்க் பலவீனமாகிவிடும். நெட்வர்க்கில் இருக்கும் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். ஆட்களைச் சேர்க்க வேண்டும். அன்றாடம் யாரையாவது சந்தித்துப் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு பயங்கர இம்சையாக மாறத் தயாராக இருக்க வேண்டும். எவ்வளவு வெறுக்கப்பட்டாலும் அவமானப்படக்கூடாது.
என்னைக் கண்டதும் ஓடுபவர்களையும், என்னிடம் இருந்து மறைந்து கொள்பவர்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டது. பின்னாளில் அவர்களே எம்.எல்.எம் வியாபாரத்தில் பெரும்புள்ளிகளாகியிருக்கிறார்கள். ஆகவே நம்மிடமிருந்து ஓடுபவர்களையும் தப்பிக்க நினைப்பவர்களையும் நாம் என்றுமே விட்டுவிடக்கூடாது. அவர்கள்தான் நமக்கு எளிமையானவர்கள். இன்னொருவனைப் புதியதாகத் தேர்ந்தெடுத்து அவனை ஓட வைப்பதைவிட ஏற்கனவே நம்மிடமிருந்து ஓடிக்கொண்டிருப்பவன் மேலும் எளிமையானவன். அவந்தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
கொசு. சட்டென கண்ணில்கூட படாத ஒரு சிற்றுயிர். அதிகப்பட்சம் நம்மிடமிருந்து கொஞ்சமாய் இரத்தத்தை மட்டுமே எதிர்ப்பார்ப்பது. கொடிய நோய்களைக் கொண்டு வந்து சேர்ப்பவையும்கூட. கொசுவை அலட்சியப்படுத்துவது ஆபத்தானது. அப்பா அடிக்கடி சொல்வார். கொசுவை வாழவிடக்கூடாது என்று. நம் தூக்கத்தைக் கெடுக்கும். நம் நிம்மதியைக் கெடுக்கும். கொசுவை வாழவிட்டால் அது நம்மை வாழவிடாது என்பதே உண்மை. ஆகவே கொசுவைக் கொல்பவர்களே ஏராளம். ஒரு எம்.எல்.எம் வியாபாரியாக இருந்துகொண்டு ஒரு சிற்றுயிரான கொசுவைக் கொல்ல முடியவில்லை என்றால் அது எனக்குக் கேவலமான விசயம். காருக்குள் இப்பொழுது அந்தக் கொசு எங்கு இருக்கிறது என்கிற பிரக்ஞை என்னிடம் இல்லை, ஆனாலும் அக்கொசுவை என்னால் உணர முடிகிறது. அது எப்பொழுதும் இருப்பதைப் போல இருக்கின்றது. அதை என்னால் விரட்டவே முடியாத மமதையில் உள்ளே பறந்து கொண்டிருக்கிறது.
அப்பா பணி ஓய்வு முடிந்த காலத்தில் பித்துப் பிடித்ததைப் போல இருந்த காரணம் எனக்கு மட்டுமே நெருக்கமாகத் தெரிந்த உண்மை. அப்பா ஒரு பரப்பரப்பான தலைமை ஆசிரியர். அவர் பள்ளியை அவர் ஓர் இராணுவ பயிற்சி முகாமைப் போலத்தான் வைத்திருந்தார். ஒரு முரட்டுப் பெரிய வாத்தியார் என்று மட்டுமே அவரின் இறுதி காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பட்டம். அப்பாவிடம் ஒரு ரோத்தான் இருக்கும். அவரைவிட அதுதான் என்னிடம் அதிகம் பேசியிருக்கிறது. பலமுறை அதன் மீதான வெறுப்பில் மூத்திரம் பெய்திருக்கிறேன். அப்பாவிற்குத் தெரியாது. சிறு தவறுக்கெல்லாம் போட்டு அடித்துவிட்டு அறைக்குள் நுழைந்து கொசுவைக் கொல்ல ஆரம்பித்துவிடுவார். கை கால்களிலெல்லாம் இரத்தம் சுண்டியிருக்கும்.
“அடிச்சிக் கொல்லணும் நாயெ” என ஒவ்வொரு முறையும் எல்லாம் இடங்களிலும் அப்பா உபயோகிக்கும் வார்த்தை. அதைக் கேட்டதும் தொடை நடுங்கும். அவரை மீறிய ஓர் உலகை நான் கற்பனை செய்ததே இல்லை. அவர், அவருடைய இருண்ட அறை, ரோத்தான், கொசு இதைத்தவிர என் உலகில் வேறு எதுவுமே இருந்தது கிடையாது. கடைசியாக அவர் கொடுத்த உளைச்சல் தாளாமல் அவர் பள்ளியில் வேலை செய்த குமாரியம்மா ஆசிரியைத் தற்கொலை செய்து கொண்டதுதான் அப்பாவிற்குப் பலத்த அடி. அதன் பிறகு அப்பா பேசுவது குறைந்தது. ஒரு நடைப்பிணம் ஆனார். பணி ஓய்விற்குப் பிறகு குமாரியம்மா குமாரியம்மா என முனகத் தொடங்கியதும் நடந்தது. தற்செயலாக ஒருநாள் அவர் அறைக்குள் கண்ட கடிதம்தான் என் மண்டைக்குள் ஒரு கொத்து ஆணிகளை இறக்கியது போல இருந்தது.
அப்பா குமாரியம்மாளை தன் பெரிய வாத்தியார் அறைக்குள் இருக்கும் கொசுவை அடிக்கச் சொல்லி ஒவ்வொருநாளும் அவரைத் தொந்தரவு செய்திருக்கிறார். அப்படி அடிக்க அவர் படும்பாட்டையும் அவருடைய உடை விலகளையும் அப்பா ஆனந்தமாகக் கவனித்துள்ளார். இது பள்ளியில் யாருக்கும் தெரியாது. அப்பா. என் வாழ்நாளில் நான் பார்த்து மிரண்ட, நான் பார்த்து நடுங்கிய என் அப்பாவை அன்று வேறொன்றாகப் பார்த்தேன். அவர் அறைக்குள் இருக்கத் தடுமாறினேன். எங்கும் கொசு செத்த வாடை. மிரட்டலாக இருந்தது. ஒரு பெரிய இருளுக்குள் மிகப்பெரிய கொசு ஒன்று வாயைப் பிளந்துகொண்டு காத்திருப்பதைப் போன்ற பிரமை.
ஒரு எம்.எல்.என் வியாபாரி ஒரு சிற்றுயிரான கொசுவைக் கண்டு மிரள்வது அல்லது பயப்படுவதை உலகம் அறிந்தால் அவமானமாக இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியவில்லை. இன்னும் 15 நிமிடத்தில் ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்கவிருக்கு இந்தத் தருணத்தில் அல்லது நாளை டைமண்ட் விருது கிடைக்கவிருக்கும் இந்த முந்தைய நாளில் ஏன் அப்படிப்பட்ட ஒரு கொசு என் காருக்குள் நுழைய வேண்டும்? இரண்டு வருடத்திற்கு முன் அப்பா திடீரென தன் அறைக்குள் படுத்தப்படியே மாறடைப்பால் அகால மரணம் அடையும் முன் எனக்கு இப்படியெல்லாம் தோன்றியதில்லை. அவர் இருத்தலை நான் நினைத்ததே குறைந்துபோன காலம் அது. வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பேய் மாதிரி வெளியில் அலையத் துவங்கி அப்பா என்பவரையே மறந்திருந்தேன். ஒரு எம்.எல்.எம் வியாபாரி தன் அப்பாவையோ அம்மாவையோ மறப்பது புதியதல்ல.
அப்பா இல்லாமல்போன பிறகுத்தான் அவர் இருப்பு எனக்குள் உறைந்தது. சட்டென ஒரு நாள் முழுவதும் தூங்க முடியாமல் அவரை நினைத்தே அழுது கொண்டிருப்பேன். உறக்கம் பிடிக்காத இரவில் அவர் அறைக்குள் அந்த ரத்த வாடையை நுகர்ந்தபடி படித்திருப்பேன். சட்டென உடைந்து கதறி கதறி அழுவேன். அந்த இரத்த வாடைக்கு உடல் இருந்தது. மிக நீண்ட கூரிய மீசை. உயரமான கால்கள். நீண்ட மூக்கு. உடலெல்லாம் மயிர். ஒரு கனவின் விளிம்பிலிருந்து கால்களை உதறிக் கொண்டு தப்பிப்பதைப் போல அறைக்குள்ளிருந்து வெளியே ஓடிவருவேன்.
இன்று காரை எங்கு வைத்தேன்? எப்பொழுது காரை வெகுநேரம் திறந்து வைத்திருந்தேன் எனத் தெரியவில்லை. எவ்வளவு கவனமாக இருந்தாலும் ஒரு கொசுவை அனுமதித்திருக்கும் அளவிற்கு என் அலட்சியத்தின் மீது கடுமையான வெறுப்புக் கூடியது. அக்கொசு சப்தமிட்டுக்கொண்டே இருந்தது. சாதனைகள் பல படைத்திருக்கும் ஒரு முழுநேர எம்.எல்.எம் வியாபாரியின் காருக்குள் ஒரு கொசு நுழைவது மிகப்பெரிய குற்றம். எத்தனை பேரை விரட்டி விரட்டி இந்த நெட்வர்க்கிற்குள் இணைத்துப் பின் அவர்கள் உழைத்து நொடித்துப் போனதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெறித்தனமாக மேலே மேலே போய்க்கொண்டிருக்கும் என் வாழ்நாளில் ஒரு கொசு குறிக்கிடுவது அபத்தமாக இருந்தது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியவில்லை. கொசு எனக்குள்ளும் என் காருக்குள்ளும் பறந்து கொண்டிருந்தது. இப்பொழுது கார் ஓர் இருண்ட அறையாக மாறியது. எண்ணற்ற கொசுக்கள் நிரம்பிய ஓர் அறை. அனைத்தின் மூக்குகளும் மீசைகளும் நீண்டு வளர்ந்து தொங்கியிருந்தன. எல்லாம் தலை நசுக்கப்பட்டு இரத்தக் கறையுடன் திமிறிக் கொண்டிருந்தன. சட்டென அது களைந்து அப்பாவாக மாறியது. அப்பா நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் முகம் பெரிய பொத்தலாக இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன். ஆயிரம் கொசுக்களின் இரைச்சல். இரத்த வாடையிலிருந்து மீள முடியவில்லை.
“இரத்தம் குடிக்கிற பேய்ங்களா” என அப்பா கதறிக்கொண்டு என் மேல் பாய்கிறார். சாலை நெருக்கடி எனப் பாராமல் என் கார், கொசு நுழைந்த அந்தக் கார் தைப்பிங் நாலு ரோட்டின் முற்சந்திக்கு எதிராக உள்ள ஒரு விளக்குக் கம்பத்தை மோதும்போது நான் கவனித்தேன். ஒரு எம்.எல்.எம் வியாபாரி ஒரு சிற்றுயிர், நசுக்கினால் செத்துவிடும் கொசுவிடம் தோற்பது அத்துனைச் சாதரணமில்லை. நீங்கள் இனியும் என்னை எங்காவது பார்க்கக்கூடும்.
கே. பாலமுருகன்
No comments:
Post a Comment