கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து உலக சினிமாக்களையும் மலேசிய சினிமாக்களையும் பார்த்துக் கவனித்தும் வருகிறேன் என்பதைவிட இப்படங்களை விமர்சிப்பதற்கு வேறேதும் விஷேசமான தகுதிகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தை விமர்சிக்க திரைப்படத்தை இயக்கியவரால்தான் முடியும் என்றால் உலகில் அகிரா குரோசாவா தன் சக இயக்குனர்களின் திரைப்படங்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும் அல்லது வங் கார் வாய் தன் சக ஹங் காங் சினிமாக்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும். ஆனால் உலக அளவிலேயே அப்படி நடக்காதபோது, கலையை விமர்சிக்க அதன் தீவிரமான இரசிகனாக இருப்பதே சிறப்பு எனத் தோன்றுகிறது.
மலேசிய மலாய் சினிமா, சீன சினிமாவோடு தமிழ்ச்சினிமாவின் வருகையையும் அடைவையும் ஒப்பிட்டே பேச வேண்டியுள்ளது. ஒரு நிலத்தின் வெவ்வேறு படைப்பு வெளிப்பாடுகளை விமர்சனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. யஸ்மின் அமாட், அமீர் போன்றவர்கள் மலாய் சினிமாவின் ஆளுமைகளாக அறியப்பட்டதோடு அவர்களின் படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் கவனமும் பெற்றுள்ளன. யஸ்மின் அமாட் அவர்களின் திரைப்படமான செப்பேட் 2009ஆம் ஆண்டிலேயே உலகத் திரைப்பட விழாக்களில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது சினிமா அரசியல் ரீதியில் கட்டியெழுப்பப்பட்ட புனிதங்களை உடைத்து மீண்டும் அதையே இன்னொரு புனித செயல்பாடாக மாற்றுவதால் தீவிர விமர்சனத்திற்கும் உள்ளாகின்றது.
அதே போல சீன சினிமாக்களும் தொழில்நுட்ப ரீதியிலும் கதைத் தேர்வுகளிலும் பல மாற்றங்களை அடைந்துள்ளது என்றே சொல்லலாம். சமீபத்தில் வெளிவந்த ‘The journey’ திரைப்படம் மலேசிய சினிமா வசூலை முறியடித்திருக்கிறது. பொதுமக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்ததோடு வெற்றியும் அடைந்திருக்கிறது. சீனக் கலாச்சார வாழ்வைக் காட்டியிருப்பதோடு அதனை உடைத்து மீறி வெளிப்பட முடியும் என்ற சாத்தியத்தையும் படம் பேசுகிறது. யஸ்மின் அமாட் உருவாக்கி வைத்திருக்கும் கலைப்படம் என்கிற மாயையை இப்படம் தன்னுடைய நுண்ணரசியலால் மிஞ்சி நிற்கிறது என்றே சொல்ல முடிகிறது.
மூன்று வகையில் மலேசிய சினிமாவை புரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். முதலாவதாக அம்மொழியில் இதற்கு முன் வந்த திரைப்படங்களை அப்படம் அரசியல் ரீதியிலும் கதை ரீதியிலும் மிஞ்சுவது, அடுத்ததாக தமிழ்நாட்டு சாயலைக் கொண்டிருப்பது மற்றும் கலைப்படம் என்கிற மாயையில் சிக்கிக்கொண்டு வெளிப்படுவது. இந்த மூன்றும் மலேசிய சினிமாவை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவக்கூடும். முதலில் இந்த மூன்றைப் பற்றியும் தனித்தனியாகப் பேசலாம்.
அரசியல் / கதை
மலேசியாவின் நிலத்தையும் வாழ்வியலையும் கூர்மையாகப் பார்க்கும் ஒரு விமர்சனப் பார்வை எல்லாம் படைப்பாளிகளுக்கும் இருக்கின்றதா? மலேசிய வாழ்வின் ஆழத்தைக் கவனிக்கும் விமர்சன அணுகுமுறை இருக்கும் படைப்பாளிகளால்தான் மலேசியத்தனமிக்க படைப்பைக் கொடுக்க முடியும். மலேசியாவில் எடுக்கப்படும் ஒரு தமிழ்ச்சினிமாவில் தமிழ் வாழ்க்கையையும் தமிழர்களையும் மட்டும் காட்டுவது போலித்தனமானதுதான். நம் அன்றாட வாழ்வில் ஒரு மலாய்க்காரரோ ஒரு சீனரோ கட்டாயம் இடம் பெற்றிருப்பர். ஒரு பன்முக கலச்சார சூழலோடு பிணைந்திருக்கும் மலேசிய வாழ்வு இப்படியாகத்தான் அமைந்திருக்கிறது.