Monday, October 27, 2014

Small Town stories : Poem collection 1

கவிதை: ஒரு சிறுநகர் கதையிலிருந்து 1

எனது பூட்டியிருந்த அறையில்
எப்பொழுதும் புதியதாக ஒன்று இருப்பதேயில்லை.
அசையாமல் கிடக்கும் கட்டிலும், 
வெளுத்த போர்வையும்
பொம்மைப்படங்கள் ஒட்டிய அலமாரியும்
ஒரு கால் ஆட்டம்கண்ட நாற்காலியும்
தலைத்தொங்கிய ஒரு மேஜை விளக்கும்
சுவரில் தொங்கும் அப்பாவின் புகைப்படமும்.

எனது பூட்டியிருக்கும் அறையை
நான் இரகசியமாகப் பார்த்ததேயில்லை.
எனது கட்டில் சட்டென ஒரு பெண்ணாகிவிடக்கூடும்
எனது மேஜை விளக்குக் கைகளாகிவிடக்கூடும்
என் நாற்காலி ஒரு வயது முதிர்ந்த ஆணாகிவிடக்கூடும்.

எனது பூட்டியிருக்கும் அறைக்கதவை
நான் தட்டுவதேயில்லை.
சடாரென எனக்கு நானே உள்ளிருந்து
கதவைத் திறக்க நேரலாம்.


எனது பூட்டியிருக்கும் அறையைப் பற்றி
நான் வெளியில் பேசுவதேயில்லை.
அவர்கள் யாரேனும்
என் அறையைத் திருடக்கூடும்.

.
அப்படியொரு எனது பூட்டிய அறைக்குள்ளிருந்து
ஒருநாள்
நான் கனவு காண்கிறேன்.

சலித்த வெயிலொன்றின்
கொஞ்சமான இருளுக்குள்
நான் என்னைக் கண்டேன்.

தடித்த நாக்கும் நீண்டம் கழுத்தும்
பெருத்த வயிறுமென
ஒரு பறவையாகியிருந்தேன்.

சிதறிப்போன என் வார்த்தைகளை
நானே கொத்தத் துவங்கினேன்.
வார்த்தைகள் நிரம்பிய என் உடல்
சட்டென ஒரு மேஜை விளக்காகிறது.

ஒருவன்
ஒரு சூடான தேநீருடன்
மதிய இரைச்சலுக்கு மத்தியில்
வெப்பத்துடன்
வெறுப்புடன்
ஆசைகளுடன்
காதலுடன்
சோர்வுடன்
என் கட்டிலைப் பார்த்தப்படி
அமர்ந்திருக்கிறான்.

அவன் எப்பொழுதோ என் அறையைப் பற்றிய
கவிதைக்குள் நுழைந்து
என் அறையை நோட்டமிட்டவன்.

இப்பொழுது என் பூட்டிய அறைக்குள்ளிருந்து
நானும் அவனும்.

- கே.பாலமுருகன்

No comments: