Wednesday, November 12, 2014

இது சுங்கைப்பட்டாணியின் கதைகள் : பன்றி பாலம்

இதற்கு முன் சுங்கை பட்டாணியில் அதாவது 2013 ஆம் ஆண்டு வரை வசித்தவர்களுக்கு நிச்சயம் பன்றி பாலம் எனச் சொன்னதும் தைப்பூசக் கோவிலுக்குப் பின்னால் இருந்த ஒற்றை பாலம் ஞாபகத்திற்கு வரும். இப்பொழுது அந்தப் பாலம் அங்கு இல்லை. இடித்துப் பெரிதாக்கி பெரிய சாலையை உருவாக்கிவிட்டார்கள். அப்பாதைப் பத்தானி ஜெயா/பெர்ஜாயா வசிப்பிடப் பகுதியையும் சுங்கை பட்டாணி நகரத்தையும் இணைக்கும்வகையில் கொஞ்சம் பரப்பரப்பாகவும் ஆகிவிட்டது.

பாலம் என்றால் எதோ போக்குவரத்துக்கு இக்கறையிலிருந்து அக்கறைக்குத் தாவ உதவும் ஒன்றாக மட்டும் இருந்துவிடுவதில்லை. பாலம் நம் வாழ்நாளில் நம் வாழ்க்கைக்குள் ஓர் இடத்தைக் கொண்டிருக்கிறது. பல நினைவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறது. ஒரு காலக்கட்டத்தை எப்பொழுதுமே நினைவுப்படுத்தக்கூடியவை.

என் அம்மா கடந்த 1990களில் அந்தப் பாலத்தில்தான் தனது மினி சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்குச் செல்வார். சீனர் வீட்டில் அம்மா வீட்டு வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. வெள்ளிக்கிழமை நானும் அம்மாவுடன் சென்று ஒத்தாசையாக இருப்பேன். அப்பொழுதெல்லாம் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் அம்மா என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்தப் பாலத்தைக் கடந்துதான் பொருள்கள் வாங்க சுங்கை பட்டாணிக்குச் செல்வார்.

ஈரம் சொட்டும் கைலியுடன் அம்மா சைக்கிளை மிதிக்க, என்னைச் சமாதானம் செய்யக் கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருளைக் கையில் கடவுளை ஏந்திக் கொண்டு வருவதைப் போல பயப்பக்தியுடன் பிடித்துக் கொண்டு நான் அமர்ந்திருக்க, இருவரும் அந்தப் பன்றி பாலத்தைக் கடப்போம். ஏதோ படகில் உல்லாசமாக ஆற்றைக் கடப்பதைப் போன்று பிரமையாக இருக்கும்.

பன்றி பாலம் உருவான கதை

சுங்கை பட்டாணி பொது பேருந்து நிருத்தம் பக்கமாக வந்தீர்கள் என்றால் ஒரு கறுப்பு ஆறு குறுக்காக ஓடுவதைப் பார்க்கலாம். குப்பைகள் மிதந்து செல்லும். ஒருவர்கூட அந்த ஆற்றை ஆயாசமாகப் பார்த்து இரசிக்கும் எந்தக் காட்சியையும் பார்க்க முடியாது. நம்முடைய அனைத்து அலட்சியங்களையும் ஒன்று சேர்த்தால் அது நிச்சயம் அந்தக் கறுப்பு ஆறாக இருக்கும்.

அந்த ஆற்றிற்கு மேலே குறுக்காக இரயில் தண்டவாளம் உண்டு. கரும்புகையுடன் இரயில் அவ்விடத்தைக் கடக்கும் காட்சியை அந்தக் கருப்பாறோடு சேர்த்துப் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும் மலேசியாவிலேயே காற்றுத்தூய்மைக்கேட்டில் சுங்கைப்பட்டாணி பட்டணம் இரண்டோ மூன்றாவது இடத்தையோ பெற்றிருக்கும் தகவல். அந்தக் கருப்பாறின் ஒரு பகுதியைக் கடக்கத்தான் 1900களின் ஆரம்பத்தில் அந்தப் பன்றி பாலம் கட்டப்பட்டது என ஒரு செய்தி உண்டு.


1930களில் அப்பாலம் இடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஜப்பான் இராணுவம் பிறகு அப்பாலத்தைச் சீரமைத்து வேறு மாதிரி கட்டியதாகவும் சொல்கிறார்கள். 1942களில் சுங்கை பட்டாணி பட்டணத்தின் பெரும்பான்மையான பகுதியை ஜப்பான் இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்தது. அவர்களுடைய சிகிச்சைக்கான மருந்துகள் போன்றவற்றை பதுக்கி வைத்த இடமாகச் சுங்கை பட்டாணி பட்டணம் இருந்திக்கிறது என சில முதியோர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களே அப்பன்றி பாலத்தை மீண்டும் சீரமைத்துக் கட்டினார்கள் என்று நம்பலாம்.

பிறகு 1960 வாக்கில் அப்பன்றி பாலம் மேலும் சீரமைத்துப் புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகான பாலத்தின் வரலாற்றில் அதிகப்படியாக மக்களின் பரப்பரப்பு மட்டுமே நீடித்திருந்தது.

பன்றி பாலம் எனப் பெயர் வந்த கதை

அப்பாலத்தின் அக்கறையோரம் அதாவது சுப்ரமண்ய ஆலயத்தின் பின்வாசலையொட்டிய பகுதியில் ஒரு சீனன் வெகுகாலமாக பன்றி கொட்டாய் வைத்திருந்தான். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக அவனால் ஆலயத்திற்குப் பல பிரச்சனைகள். ஒவ்வொருநாளும் பன்றிகளை அக்கொட்டாயிலேயே வைத்து அறுத்துப்போடும் சத்தம் ஆலயத்தின் நிர்வாகத்திற்கும் அங்கு வரும் முருகப் பக்தர்களுக்கும் பெரும் சிக்கலாக இருந்ததாகப் பலமுறை பத்திரிகைகளில் பிரசுரம் கண்டது.

பல ஆண்டுகளுக்கு அவ்விடம் யாருக்கு என்கிற வழக்குத் தகறாருகள் நீண்டப்படியே இருந்தன. இந்த நாட்டில் மட்டும்தான் சிறுபாண்மை இனத்தின் நம்பிக்கைகளுக்குப் பிரச்சனைகள் வந்தப்படியாகவே இருக்கின்றன. கோவில் தொடர்பான பிரச்சனைகள் காலத்திற்கும் இந்திய மக்களை உணர்ச்சிப்பூர்வமான மனநிலைக்கு மாற்றியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஒரு கட்டியெழுப்பப்பட்ட கொந்தளிப்பு அனைவரின் உள்ளங்களிலும் உறைந்து வருகின்றன

அப்படிப்பட்ட ஒரு கடுமையான போராட்டம் சுங்கை பட்டாணியில் பெரும் பரப்பரப்பையே உருவாக்கியிருந்தது. அடிக்கடி பத்திரிகைகளில் அவை தலைப்புச் செய்திகளாக வந்து கொண்டிருந்தன. அக்காலக்கட்டத்தில்தான் பன்றி ஒரு பிரச்சனையின் அடையாளமாக அனைவரின் பேச்சிலும் இடம்பெறத் தொடங்கின. எப்பொழுது என்று சரியாகக் கணிக்க முடியாத ஒரு நாளில் அந்தப் பன்றி கொட்டாயையொட்டி இருக்கும் அப்பாலத்திற்கும் பன்றி பாலம் எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்.

பன்றி பாலத்தின் தோற்றம்

ஒரு நேரத்தில் இரு மோட்டார்கள் மட்டுமே எதிரும் புதிருமாகப் போக முடியும். மிகச் சிறிய இடைவேளி கொண்ட பாலம் அது. கார்கள் எல்லாம் நுழையவே முடியாது. சைக்கிளோட்டிகளுக்கும் மோட்டாரோட்டிகளுக்கும் மட்டுமே அப்பாலம் கட்டப்பட்டிருந்தது. இடிக்காமல் மிகவும் இலாவகமாகக் கடக்க அனைவரும் காலப்போக்கில் தேர்ச்சிப்பெற்றிருந்தார்கள். சுங்கை பட்டாணி நகரத்திற்குக் குறுக்கு வழியில் செல்ல இப்பாலமே போக்குவரத்து. இல்லையென்றால் மேலும் 8 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும். ஆகையால், மோட்டாரோட்டிகள் இப்பாலத்தைக் கடக்கும்போது பொறுமையை அநியாயத்திற்குக் கடைப்பிடிக்கக் கற்றிருந்தார்கள்.

யாராவது எப்பொழுதுதாவது அப்படி நெருக்கமாகக் கடக்கும்போது சிரித்து வைப்பார்கள். ஒரு மோட்டாரும் இன்னொரு மோட்டாரும் சாமர்த்தியமாக இடிக்காமல் கடக்கும்போது புன்னகையால் நன்றியை வெளிப்படுத்திக்கொள்வார்கள். யாரிடமும் கோபம் இருக்காது. அவசரம் இருக்காது. சீனப்பாட்டிகள் அப்பாலத்தை அடிகடி பயன்படுத்துவார்கள். அவர்கள் சைக்கிளில் வருவதைப் பார்த்தால் நாம் பின் வாங்க வேண்டும். அவர்கள் ஒதுங்கி வழிவிடமாட்டார்கள். அந்தப் பாலத்தை அவர்கள்தான் கட்டியதைப் போன்று பயங்கரத் தோரணையுடன் காட்சியளிப்பார்கள்.

இரும்பாலும் தாராலும் சூழப்பட்ட அப்பாலம் பின்னாளில் மோட்டாரோட்டிகளின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறியது.

பன்றி பாலத்தின் இன்னபிற கதைகள்: தற்கொலை சம்பவம்

 என் காலத்தில் நடந்த சம்பவம் ஆகும். முதன்முறையாகப் பாலத்தையொட்டிய குடியிருப்புகளை அதிர வைத்த தற்கொலை சம்பவம். ஓர் அதிகாலையில் தன் மோட்டாரை அந்தப் பாலத்தின் நடுவில் நிற்க வைத்துவிட்டு அந்தச் சீன இளைஞர் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். 4 மணி நேரத்திற்குப் பிறகே அவருடைய உடலைக் கண்டறிந்தார்கள். அந்த மோட்டாரும் உடனே அங்கிருந்து அகற்றப்பட்டது.

அதன்பிறகு அந்தப் பன்றி பாலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேய் பாலம் என்றே அறியப்படிருக்கலாம் என நினைக்கிறேன். நான் எப்பொழுதுதாவது அந்தியில் நயனம் இதழ் வாங்குவதற்காக அப்பாலத்தில் தனியாகச் சைக்கிளில் போகும்போது மனம் பதறும். யாரோ பின் தொடரும் ஓர் அபத்தமான பயம் தோன்றி மறையும்.

மேலும். யாரோ சீனன் அங்கு நடமாடுவதாகவும் ஒரு பழைய சீனப்பாட்டின் சத்தம் அங்குக் கேட்கும் என்றும் அம்மா சொல்லிக் கேட்டதுண்டு. அந்தச் சீனரின் தற்கொலை சம்பவம் பிறகு அங்குப் பேசுப்பொருளாக மாறியது. பாலத்தின் மீது எப்பொழுதுமான ஓர் அச்சம் எல்லோர் மனத்திலும் குடியேறியது. இரவில் தனியாக யாரும் அந்தப் பாலத்தைக் கடப்பதில்லை.


கொடூர விபத்து

பிறகு 1990களின் ஆரம்பத்தில் இன்னொரு கடுமையான விபத்து அந்தப் பாலத்தில் நடந்தது. அந்தப் பாலத்தின் முச்சந்தியில் எப்பொழுதும் போலிஸ் மோட்டாரோட்டிகளைப் பரிசோதிப்பதுண்டு. பாலம் ஏறி அவை முடியும் இடத்தில் சட்டென தென்படும்படி போலிஸ் எப்பொழுதும் பரிசோதனை செய்ய நிற்பதுண்டு. யாரும் மீண்டும் திரும்பியோடி தப்பிக்க முடியாது. ஆகையால் பாலம் ஏறிவிட்டால் எதிரில் வரும் மோட்டாரோட்டிகளிடம் போலிஸ் இருக்கிறார்களா எனக் கண்களிலேயே விசாரிக்கும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு. அது அங்கு ஒரு வாடிக்கையான உடல்மொழி. அல்லது எதிரில் வரும் மோட்டார் தனது விளக்கைத் திறந்து அணைத்தால் அது போலிஸ் இருக்கிறார்கள் எனும் தகவலைத் தெரிவிக்கும் உத்தியாகும்.

அப்பாலத்தில் பயணம் செய்யும்போது மட்டும் அது அனைவரின் கடமையுணர்வாக இருந்தது. நான் பலமுறை மோட்டாரில் அப்பாலத்தைக் கடக்கும்போது போலிஸ் விசாரணைக்காக நிறுத்தியதுண்டு. அப்படியொரு சமயம் போலிஸின் பிடியிலிருந்து தப்பிக்க தொப்பியணியாமல் வந்த இரு இளைஞர்கள் மீண்டும் அப்பாலத்தில் கடும் வேகத்துடன் மோட்டாரில் போயிருக்கிறார்கள். எதிரில் வந்த சைக்கிளை மோதி அந்த மோட்டார் இரு பக்கமும் இருந்த கம்பிகளில் மோதி ஒருவன் அங்கேயே இறந்துவிட்டான், இன்னொருவன் ஆற்றில் விழுந்து இறந்தான். இரத்தம் தெறிக்க அவர்களின் மரணம் அப்பாலத்தில் கடுமையாக நிகழ்ந்தது. அதற்கு முன்பும் பல விபத்துகள் நடந்திருக்கலாம் என்பதையே அந்தச் சமபவம் ஞாபகப்படுத்தியது
.
என்னுடையநகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்நாவலில் இந்தப் பன்றி பாலத்தைப் பற்றி சில இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். நம் நகரங்களை நாம் வாழ்ந்த இடங்களை ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. அதன் பிறகு திடீரென ஒரு நாள் அந்தப் பன்றி கொட்டாய் காலி செய்யப்பட்டது. வழக்கு சுப்ரமண்ய ஆலயத்திற்கு ஆதரவாக இருந்து வெற்றிப்பெற்றது. பாலம் சுத்தம் செய்யப்பட்டது போல எல்லோரும் உணர்ந்தார்கள். ஒரு சிறிய இனத்தின் வெற்றியாக அது கொண்டாடப்பட்டது. இந்து கோவில்கள் மட்டுமே மலேசியாவில் அதிகப்படியான நிலப்பிரச்சனைகளுக்கு ஆளாகியிருந்தன. நான் அதைச் சமயம் சார்ந்து பார்க்கவில்லை; உரிமை சார்ந்து கவனிக்கின்றேன்.

2013ஆம் ஆண்டு அப்பாலம் மெல்ல மெல்ல இடிக்கப்பட்டு அங்கொரு பெரிய சாலை கட்டப்பட்டது. இப்பொழுது ஆற்றைக் கடந்து கார்களும் கனவுந்துகளும் சென்று கொண்டிருக்கின்றன. அதுவரை ஏதோ மறைந்து இருந்த சுப்ரமண்ய ஆலயம் காரில் வருவோர் போவோரின் பார்வையில் தெளிவாகத் தெரியத் துவங்கியது. காரிலிருந்து கொண்டே ஆலயத்தின் பூஜை செய்யப்படும் இடத்தைப் பார்க்கலாம். சிலர் காரில் இருந்துகொண்டே கிண்டலடிக்கவும் செய்தார்கள். ஏதோ பாதுகாப்பின்றி திடிரென்று முருகப்பெருமான் வாசலுக்கு வந்துவிட்டார் என நண்பரின் அம்மா சொல்லிப் புலம்பியதையும் கேட்டேன். பன்றி பாலத்தைத் தொலைத்ததும் இப்படியொரு உணர்வு எல்லோருக்கும் வரத்துவங்கியது.

நகரம் ஒவ்வொருமுறையும் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படுகிறது. அப்படி மீண்டும் கட்டப்படுகையில் நாம் ஒரு புராதமான அடையாளங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. சுங்கை பட்டாணி நகரத்தின் ஒரு புராதனமான நினைவாக அந்தப் பன்றி பாலம் அனைவரின் நினைவுகளிலும் இருக்கின்றது. இப்பொழுது அந்த ஆற்றை எந்தச் சிரமமும் இல்லாமல் கடக்க முடிகின்றது. யாரும் யாரும் முகம் பார்த்து சிரித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் இல்லை. சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல் இல்லை. கையசைப்பு இல்லை. புன்னகையும் இல்லை. இவையாவும் வளர்ச்சி எனக் கொள்வாயோ மனமே?

கே.பாலமுருகன்





No comments: